கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1500; தேதி 20 டிசம்பர், 2014.
இந்தியாவின் இரண்டு பழைய மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் ஆகும். இந்த இரண்டு மொழிகளும் சிவனிடமிருந்து தோன்றியவை என்றும் ஒன்றுக்கு பாணிணியையும் மற்றொன்றுக்குக்கு அகத்தியனையும் இலக்கணம் எழுத சிவ பெருமானே பணித்தான் என்றும் ஆன்றோர் கூறுவர். இதை எல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும் கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் இரு மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளன.
எனது நாற்பது ஆண்டுக்கால மொழி ஆய்வில் கண்ட சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.
இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.
சில சொற்கள் தமிழில் இருந்து வந்ததோ என்றும் சில சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்ததோ என்றும் எண்ண வைக்கும். தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எப்படி உருவாயிற்று என்று பார்த்தால் கூட, வரலாறு, புவியியல், பிறமொழிப் படையெடுப்பாளர் ஆகியவற்றால் எல்லாம் எப்படி மொழிகள் உருவாகின்றன என்பது விளங்கும்
ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.
பெரிய ஆதாரம்
இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.
‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.
இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
கீதையும் குறளும்
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171
மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை
திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508
மொத்தம் உள்ள குறள்கள் 1330
ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.
குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.
மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.
டூத் + பவுடர் என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைத் தருகிறேன்.