New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ...


Guru

Status: Offline
Posts: 24603
Date:
THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ...
Permalink  
 




OK+%28Small%29.jpg


இது இப்போது வாசித்து முடித்த புத்தகம்.

பெயரைக்  கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல். வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி, கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன்.
வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை' என்று தெளிவாகப் போட்டிருந்தது.(அந்தப் பக்கத்தை இணையத்தில் காண்பிக்காததும் ஒரு வியாபார தந்திரம் போலும்!)

கதைதான். மேம்போக்காக வாசித்தால் மிக எளிய ஒரு கதை தான்.

பைபிளில் வரும் நிகழ்வுகளை 'உல்ட்டா' செய்துள்ளார். JESUS CHRIST என்றிருக்கும் ஒருவரை JESUS & CHRIST என்று இருவராக, இரட்டைப் பிள்ளைகளாக ஆக்கியுள்ளார்.மரியாளுக்கு தேவதூதன் இளைஞனாக வந்து கடவுளின் விருப்பத்தைச் சொல்கிறார். அவள் குழந்தைகளைப் பெறுகிறாள். பெத்லேகம், தேவதூதர்கள் ஆட்டிடையர்களிடம் நல்ல சேதி சொல்வது, ஹெராது அரசனின் ஆணை ... எல்லாம் நடைபெறுகிறது. 

ஜீசஸ் நல்ல சூட்டிகையான பையன்; கிறிஸ்து சிறிது அடங்கிய, சோர்வான பையனாக வளர்கிறான். இளம் வயதிலேயே ஜீசஸ் பல அதிசயங்கள் செய்கிறார். சாய வேலையில் இருக்கும் ஒருவரின் ஆலையில் எல்லா துணிகளையும் கருப்பு சாயத்தில் முக்கிவிட்டு, அதன் பின் அவர் விரும்பும் வண்ணங்களில் அந்த துணிகளை மாற்றித் தருகிறார்(பக். 23). ஓய்வு நாளில் குருவி பொம்மைகள் செய்து விளையாடிக்கொண்டிருக்கிறார். அது தவறு என்று கடிந்து கொள்ள குருமார்கள் விரைந்து வரும்போது அந்தக் குருவி பொம்மைகளைப் பார்த்து ஜீசஸ் கை தட்ட, அத்தனை குருவிகளும் வானத்தில் பறந்து செல்கின்றன. தண்டிக்க வந்தவர்களிடம் கிறிஸ்து தன்மையாகப் பேசி ஜீசஸைக் காப்பாற்றுகிறார் (24). 


குழந்தைகளின் பனிரெண்டாவது வயதில் ஜெருசலேமிற்கு அவர்கள் குடும்பம் செல்கிறது. ஜீசஸ் காணாமல் போக, எல்லோரும் தேடிச்செல்கிறார்கள். கோவில் பக்கம் நிறைய கூட்டம். அங்குதான் ஜீசஸ் இருக்க வேண்டுமெனக் கூறி அங்கே செல்கிறார்கள்.  ஜீசஸ் தன் பெயரைக் களிமண்ணால் அந்தக் கோவிலின் சுவர்களின் மேல் எழுதி வைத்ததைக் கண்டு குருமார்கள் கோவித்து ஜீசஸை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி ஜீசஸைக் காப்பாற்றுகிறான்.(29)


யோவான் மூலம் இருவருக்கும் திருக்குளிப்பு (baptism) யோர்தான் நதியில் நடக்கிறது. ஜீசஸுக்குத் திருக்குளிப்பு நடக்கும்போது அவர் தலைமேல் புறாஒன்று பறந்து செல்வதைப் பார்த்த கிறிஸ்துவிற்கு அப்புறா மோட்சத்திலிருந்து பேசினால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவன் தன் அன்னையிடம் புறாவைப் பற்றி சொல்லி, அப்போது கடவுளின் ஏவுதலால்  அந்தப் புறா என்னிடம் பேசியது என்றார். (36-37)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஜீசஸ் நாற்பது நாட்கள் தனியே ஒரு காட்டுக்குள் கடவுளை நோக்கி ஜெபம் செய்கிறார்.கிறிஸ்து அவரைப் பார்க்க காட்டுக்குள் சென்று பைபிளில் சைத்தான் எப்படி ஜீசஸை ஆசை காட்டியது போல், சோதிக்க நினைத்தது போல்,  'பசித்தால் கல்லை எடுத்து உணவாக்கி சாப்பிடு' என்று கேட்டுக் கொள்கிறார். இதுபோன்ற நிறைய அதிசயங்களை - miracles - செய்து காட்டினால்தான் நீ பேசுவதும் மக்களின் மனத்தில் ஆழமாகப் பதியும் என்று கிறிஸ்து ஜீசஸிடம் போதிக்கிறார். மக்களைக் கவர கடவுள் கையாளும் வழிதான் அது. அப்படி நம்பிக்கை வந்து விட்டால் அவர்கள் எல்லோரும் ஒரே சபையாகி ஆழ்ந்த  நம்பிக்கைகளோடு இருக்க முடியும். ஊழியம் செய்பவர்கள் இருண்ட உலகின் பாகங்களுக்கு உன் வார்த்தைகளைச் சொல்லி அங்குள்ள மக்களை கடவுளின் குடும்பத்திற்குக் கொண்டு வர முடியும். (41)

OK1+%28Small%29.jpg

ஜீசஸ் மக்களிடம் தன் போதனையை ஆரம்பிக்கிறார். பேய்களை விரட்டுகிறார்; உடல் நலமுற்றவர்களை குணமாக்குகிறார் என்றெல்லாம் எங்கும் அவரது பெயர் பரவுகிறது. அவருடைய பேச்சுகள் மக்கள் மனதில் புரட்சிகரமான எண்ணங்களை உருவாக்குகிறது என்பதைக் கண்ட கிறிஸ்துவிற்கு மிக்க மகிழ்ச்சி. (51-55)

இந்த நேரத்தில் ஒரு புது மனிதர் கிறிஸ்துவிடம் வருகிறார். ஜீசஸைப் போல் உனது பெயரும் எல்லோராலும் நினைக்கப் பட வேண்டும் என்கிறார். ஆனால் அவர் யாரென்பது கிறிஸ்துவிற்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அவரிடம் கேட்டாலும் அதற்கு ஏதும் பதில் கிடைக்கவில்லை. (57)

கானாவூரில் தண்ணீரை ரசமாக (wine) மாற்றிய கதையும் வருகிறது. ஜீசஸ் தலைமை சமையல்காரரிடம் பேசுகிறார்; பின் ரசம் வருகிறது. ஒரு சாரார் 'ஆஹா! எப்படி தண்ணீரை ரசமாக மாற்றினார்' என்கிறார்கள். இன்னொரு சாரார் 'ஆஹா! சமையல்காரர் பதுக்கிய ரசத்தை வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்து விட்டார்' என்கின்றனர். அடுத்து ஒரு தொழுநோயாளியைச் சுகமாக ஆக்குகிறார். (61, 63) மலைப்பிரசங்கமும் நடக்கிறது. (69) எல்லாவற்றையும் கிறிஸ்து முழுமையாக எழுதி வைக்கிறார். இருந்தாலும், தான் இல்லாத போது ஜீசஸ் சொல்வதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள, கிறிஸ்து, ஜீசஸின் சீடர்களில் ஒருவரை ஒற்றனாக்கிக் கொள்கிறார் (informant). (91)

கிறிஸ்துவிற்கும் அவரைத் தூண்டிக்கொண்டிருக்கும் மர்ம மனிதருக்கும் நடுவில் ஒரு நீண்ட உரையாடல் நடக்கிறது. ஜீசஸின் அரசு இந்த உலகிற்கு வந்துவிடும் என்கிறார் அந்த மர்ம மனிதர். ஆனாலும் அப்படி வருவதற்கு கிறிஸ்துவின் உதவி மிகவும் தேவை என்கிறார். மேலும், அப்படி ஒரு அரசு வருமாயின் அது நிறைய மக்களைக் கொண்டதாகவும், யூதர்கள் மட்டுமின்றி வேற்று மக்களும் இருக்குமாறு அமைய வேண்டும். அவர்கள் எல்லோரும் புத்திசாலித்தனமாக ஆளும் திறம் வாய்ந்த சில தலைவர்களின் கீழ் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அத்தகைய ஒரு திருச்சபை (church) கட்டாயம் அமைய வேண்டும்'. (145). மேலும் அந்த மனிதர் 'பல பேர் வாழ ஒருவர் ஏன் தன் உயிரைக் கொடுக்ககூடாது' என்று கேட்கிறார். (146)  



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


நான் எனது பழைய பதிவில் மத்.10: 34,35 பற்றிய ஒரு விவாதம் வைத்திருந்தேன். அந்த விவாதத்தை இந்த நூலிலும் கண்டேன். (164). விவிலியத்தில் கேள்வி கேட்கக் கூடிய பகுதிதான் ...

ஜீசஸ் பரிசேயர்களுக்குச் சினம் வரும் வகையில் நடந்து கொள்கிறார். கோவிலில் வியாபாரம் செய்பவர்களை விரட்டி அடிக்கிறார். கிறிஸ்துவும் ஒற்றனும் சந்திக்கிறார்கள்.  ஜீசஸும் மற்ற சீடர்களும் ஏதேனும் ஆபத்து வரலாமென்று எதிர்பார்த்திருப்பதை அவர்  கிறிஸ்துவிடம் கூறுகிறார்.  அடுத்து அந்த மர்ம மனிதனும் கிறிஸ்துவும் சந்திக்கிறார்கள். கிறிஸ்து அந்த மர்ம மனிதன் யாரென்று தெரிந்து கொள்ள முயல்கிறார். நம்பிக்கையோடு இரு என்பது தான் பதிலாக இருக்கிறதேயொழிய வேறு சரியான பதில் கிறிஸ்துவுக்குக் கிடைக்கவில்லை. அவரென்ன ஒரு வான தூதரா? (angel?) இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்து அந்த மனிதனிடம் தான் தன் உயிரைக்கூட ஜீசஸுக்காகக் கொடுப்பேன் என்னும் போது, பதிலாக, "நீ சாக வேண்டியதில்லை; ஆனால் நீ ஜீசஸை அவர் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்க வேண்டும். அவர்தான் சாக வேண்டும்" என்கிறார். ஜீசஸ் வேண்டாம்; நானே சாகிறேன் என்ற கிறிஸ்துவின் பதிலை அந்த மனிதர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து விவாதிக்கும் போது, அந்த மனிதர், "புதுமைகள் (miracles) இல்லாமல் போனாலோ, திருச்சபை (church) என்று ஒன்றில்லாமல் போனாலோ,  அவரது வார்த்தைகள் இல்லாமல் போனாலோ அவர் இந்த உலகிற்கு வந்ததற்கே பொருளில்லாமல் மண்ணில் ஊற்றிய நீர்போல் பயனின்று போய்விடும்". இதையெல்லாம் கூறி கிறிஸ்துவை முழுவதுமாக தன் விருப்பத்திற்கு மாற்றி விடுகிறார்.  அதுவே ஒரு திருச்சபையை நிறுவுவதற்குத் தேவையானது என்று கூறி, இதற்கு எப்போது உடன்படுகிறாயோ அப்போது என்னை காலிபாஸின் வீட்டில் வந்து பார் என்று கூறிவிட்டு அந்த வானதூதர் சென்றுவிடுகிறார். 

மனம் நொந்த கிறிஸ்து பெத்திஸ்டாவில் உள்ள ஒரு குளத்திற்குச் செல்கிறார். அங்குள்ள மூன்று பிச்சைக்காரர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் இன்று நாம் பேசும் முதலாளித்துவம், சமூகம், exploitation போன்ற அனைத்தும் அவர்கள் பேச்சில் வெளிப்படுகிறது. மிகவும் ஆழமான விவாதங்கள் அவை. (177)


கிறிஸ்து அந்த மர்ம மனிதனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கரியபாஸின் வீட்டிற்குச் செல்கிறார். கரியபாஸ் ஜீசஸைக் காட்டிக் கொடுப்பதற்காகக் கொடுக்கும் பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்.(189)  



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஜெத்சமேனி தோட்டத்தில் ஜீசஸ் தன் சீடர்களோடு சென்று அங்கே தனியாக "கடவுளிடம்" பேசுகிறார் - அவருக்கு கடவுளிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கவேயில்லை. அவர், "நான் பேசுவது எதையும் நீர் கேட்கவில்லை.  என் வாழ்நாள் முழுவதும் நான் உம்மோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனக்கு மெளனமே பதிலாகக் கிடைத்துள்ளது. கடவுளே, நீ எங்கே இருக்கிறாய்? அதோ வானத்தில் தெரியும் அந்த நட்சத்திரங்களுக்கு நடுவே நீ இருக்கிறாயா? அங்கே உட்கார்ந்து கொண்டு மற்றொரு புதிய உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறாயா?  நீ படைத்த இந்த உலகம் உனக்கு சலித்து விட்டதா?  என்னைத் தத்தளிக்க விட்டுவிட்டு நீ எங்கோ போய் விட்டாய்."

தொடர்ந்து ஜீசஸ் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை. "திருச்சங்கீதத்தில் (Psalms) "முட்டாள் தன் இதயத்துக்குள் சொல்லிக்கொள்கிறான் - கடவுள் இல்லையென்று." இந்த முட்டாளை எனக்குப் பிடிக்கிறது. ... எங்களையெல்லாம் ஏனிப்படி நடத்துகிறாய்? நல்ல தண்ணீரைப் படைத்து விட்டு அதனோடு களிமண்ணையும் சேர்த்து அதனை தன் குழந்தைகளுக்கு கடவுள் கொடுப்பானா?

எந்த பதிலும் இல்லை. எங்கும் மெளனம். 

ஒரு முட்டாள் கடவுளை நோக்கி செபம் செய்து ஏதும் பதிலில்லை என்றால் அவன் இந்த மெளனத்திற்குக் காரணம் கடவுள் இல்லையென்றுதான் நினைப்பான். 

நான் பேசுவதை நீ கேட்டுக் கொண்டிருந்தால், ஒன்றை கேட்டுக் கொள். உன் பெயரால் ஆரம்பிக்கப்படும் எந்த மதமும் ஏழ்மையானதாக, எந்த ஆளுமையும் இல்லாமல் சாதாரணமானதாக இருக்க வேண்டும். அன்பைத் தவிர வேறு எந்த வித ஆளுமையும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கென்று சொத்து, சட்ட திட்டங்கள் என்று ஏதுமிருக்கக் கூடாது. யாரையும் தண்டிக்கக் கூடாது; மன்னிக்க மட்டுமே செய்ய வேண்டும். ஆல மரமாய் தழைத்து பலருக்கும் தங்குமிடமாக இருக்க வேண்டும்.(201)

... ஜீசஸ் தன் செபத்தை முடித்துக் கொள்கிறார். இனி சொல்ல என்ன இருக்கிறது?

இப்பகுதியை வாசிக்கும்போது எனது 'அன்னை தெரஸா - Come Be My Light  என்ற நூலைப்பற்றிய என் இடுகையில் வரும் ஒரு பகுதியைமிகவும் ஒத்து வருகிறது. அதனை இங்கு அடைப்புக் குறிக்குள் கொடுக்கிறேன்:


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

(என்னைச் சுற்றிலும் இருள் ...

எனதருமை ஆண்டவனே, என்னை ஏன் கைவிட்டு விட்டீர்? நான் உமது அன்பின் குழந்தை ... ஆனால் இப்போது மிகவும் வெறுக்கத்தக்கவளானேன் ... வேண்டாமென நீர் தூக்கி எறிந்தவள் ... விரும்பப்படாதவள் ... நான் அழைக்கிறேன் ... ஏங்குகிறேன் ... விரும்புகிறேன் … ஆனால் எனக்கோ யாரிடமிருந்தும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை ... யார் மீது நான் சாய்வது?.... யாருமில்லை ...… தன்னந்தனியே நிற்கிறேன். வெருட்டும் இருட்டு .... நான் மட்டும் தனியே ... தேவையற்றவளாக, கைவிடப்பட்டவளாக. தனிமைப் படுத்தப்பட்ட என் இதயத்தின் முழு தாகமும் அன்பிற்காக ஏங்கி நிற்கிறது. என் நம்பிக்கைகள் எல்லாம் என்னாயிற்று? இதயத்தின் ஆழத்திலும் கூட எல்லாமே இருள் சூழ்ந்த வெற்றிடமாக ... என் கடவுளே ... பொறுக்க முடியாத வேதனை. இந்த வலி எங்கும் எப்போதும் ... எனது தெய்வ நம்பிக்கைகளை நான் இழந்து விட்டேன் ... மனத்தில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளாக்கி வெளியில் கொட்ட முடியாதவளாக இருக்கிறேன் ... மனத்தில் சூழும் எண்ணங்கள் எனக்கு சொல்ல முடியாத வேதனையைத் தருகின்றன. எத்தனை எத்தனை பதிலில்லா கேள்விகள் என் மனத்துக்குள் ... அவைகளை வெளியில் சொல்லவும் வழியில்லை ... கேட்டால் அவைகள் எல்லாமே தேவதூஷணமாகவே இருக்கும் ... கடவுள் என்று ஒன்றிருந்தால் ... தயவு செய்து என்னை மன்னித்து விடு, … இறுதியில் ஏசுவோடு எல்லாமே நல்லவிதமாக, மோட்சத்தில் முடியும் என்று நம்புகிறேன் … என் நினைவுகளை மோட்சத்தை நோக்கி நான் எழுப்பினால் முழுமையான எதிர்நிலைக்கருத்துக்கள் என்னை நோக்கி பாய்கின்றன; என் ஆத்மாவைக் காயப்படுத்துகின்றன ... அன்பு ... இந்த வார்த்தை ... எனக்குள் எதையும் கொண்டு வரவில்லை ... கடவுள் என் மேல் அன்பு கொண்டுள்ளார் என்று சொல்கிறார்கள் ... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் இருட்டும், வெற்றிடமும் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி என மனதிற்குள் வேறு எதுவும் என்னைத் தொட அனுமதிப்பதைல்லை.(187)
 )


ஜீசஸ் கிறிஸ்துவால் அடையாளப்படுத்தப் பட்டு ரோமர்களால் கைது செய்யப்பட்டு, பிலாத்துவின் முன்னால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பிறகு ஒரு குகையில்  துணி சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறார். குகை ஒரு பெரிய கல்லால் மூடப்படுகிறது. சீடர்கள் யாரும் கல்லறை முன் இல்லை. (222) 

கிறிஸ்து தன் அறையில் அமர்ந்து கொண்டு செபமும் அழுகையோடும் இருக்கிறார். இருளும் மாலையில் அவர் ஜீசஸின் கல்லறை அருகே சென்று ஒரு இருண்ட இடத்தில் அமர்கிறார். அப்போது அவர் அருகில் அந்த மர்ம மனிதனும் வந்து அமர்கிறார். அவர் கிறிஸ்துவிடம், 'உனக்குக் கஷ்டமாகத் தானிருக்கும் ஆயினும் நாம் நமது கடமையின் முதல் பாகத்தை முடித்து விட்டோம்.' என்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கிறிஸ்து அவரிடம், 'ஆபிரஹாம் தன் மகனைப் பலிகொடுக்க நினைத்த போது கடவுள் அப்பலியைத் தடுத்து நிறுத்தியது போலவே இப்போதும் நடந்துவிடும் என்றல்லவா நினைத்தேன். ஏனப்படி நடக்காது ஜீசஸ் இறந்து போனார்?' என்று கேட்கிறார். ஜீசஸ் உயிரோடு எழுந்திருப்பார் என்கிறார் அந்த மனிதர். எப்போது என்று கிறிஸ்து கேட்கிறார். உண்மையும் வரலாறும் வேறு வேறு என்கிறார் அவர். இதில்தான் உனது பங்களிப்பு இருக்கிறது. நீயே ஜீசஸின் மறுபக்கம். நீயில்லாவிட்டால் ஜீசஸின் இறப்பு எத்தனையோ இறப்புகளில் இதுவும் ஒன்று என்று சாதாரணமாகிவிடும். ஆனால் உன் பங்களிப்பால் உண்மை என்னும் ஒளி, வரலாற்றின் இருண்ட பக்கங்களின் மேல் விழும். ஜீசஸும் கிறிஸ்துவும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய அதிசயம் தோன்றும். பல மேன்மையான காரியங்கள் இதிலிருந்து உற்பத்தியாகும்.


அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கல்லறையின் அருகே சில நடமாட்டம். குகையைத் திறந்து சிலர் ஜீசஸின் உடலை வெளியே எடுத்து வந்து தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

கிறிஸ்து, 'அவர்கள் என்ன செய்கிறார்கள்?"' 

"கடவுளின் வேலையைச் செய்கிறார்கள்."
"அது ஜீசஸின் உடல் அல்லவா?"
"ம்ம்..ம்.."
அவர் உயிர்த்தெழுந்ததாக நம்ப வைக்க இந்த ஏற்பாடா?"
 
"அவர் உயிர்த்தெழுந்து விட்டார்."

"இது தவறு; ஏமாற்றுகிறீர்கள்." கிறிஸ்து கீழே விழுந்து அழுகிறார். 

"அழு ... உனக்கு அது ஆறுதலைத் தரும்."



மீண்டும் அந்த மனிதர், "உனக்கு நான் இப்போது பரிசுத்த ஆவியைப் பற்றிக் கூற வேண்டும். உயிர்த்த ஜீசஸ் எல்லோரிடமும்  இருக்க முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியால் அது முடியும்."

"அப்படிப்பட்ட ஆற்றல் உள்ள பரிசுத்த ஆவி இருக்கும்போது எனக்கென்ன வேலை?"


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தேவ தூதர் கிறிஸ்துவிடம் மேலும் விளக்கங்கள் கொடுக்கிறார். அதனால் கிறிஸ்து, "எனக்குப் பிடிக்கவில்லை; இருந்தும் ஜீசஸுக்காக இதைச் செய்கிறேன்' என்கிறார்.


அதன்பின் பீட்டர், ஜான், ஜேம்ஸ் என்ற சீடர்களுக்கு மரிய மக்தலேனா மூலம் ஜீசசின்  குகை திறந்திருப்பதும், ஜீசஸின் உடல் காணாமல் பபோயிருப்பதுவும், கிறிஸ்துவைப் பார்த்து அவரே ஜீசஸ் என்று முதலில் மக்தலேனாவும், பின் அவரது சீடர்களும் முடிவு செய்துகொள்கிறார்கள். சிலுவையில் அவருக்கு ஏற்பட்ட காயங்களின் வடுக்களைப் பார்க்க நினைத்த சீடரை மற்றவர்கள் தடுத்து விடுகிறார்கள். 


கிறிஸ்து அந்த இடத்தை விட்டே அகன்று போய், வேறொரு ஊரில் மார்த்தா என்ற பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரைப் பார்க்க திடீரென்று தேவதூதர் வந்து விடுகிறார். கிறிஸ்துவோடு இருந்து உணவருந்தி விடை பெறுகிறார். மார்த்தா ஏன் அவர் பெயரைக்கூட கேட்கவில்லை என்று கிறிஸ்துவிடம் கேட்கிறார்.


திருச்சபைக்கு ஏற்றதாக இருப்பதற்காகவே நான் அவருக்கு உடந்தையாக இருந்தேன். திருச்சபையும் இந்த நம்பிக்கைகளை ஏற்று நடந்தால் நல்லதே. ஆனால் திருச்சபை தனது அதிகாரத்தால் ஜீசஸின் கதையை தன் போக்கிற்கு மாற்றிவிடலாம். ... ஆனாலும்இந்தக் கதை இல்லாவிட்டால் திருச்சபை தான் ஏது? திருச்சபை இல்லாவிட்டால் ஏது ஜீசஸ்?

DSC_0007+%28Small%29.JPG


கதை முடிந்தது ......
.......   இன்னும் 'என் பார்வை' தொடரும் 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 




OK+%28Small%29.jpg





Philip Pullman அதிகமாக குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியவர்.நடுவிலே இப்படி ஒரு நூல்.
அவர் கடவுள் மறுப்பாளர். Allegory என்ற முறையில் இந்நூலை எழுதியிருக்கிறார். சொல்லப்படும் கதை, உள்ளடக்கி அவர் சொல்லும் செய்திகளுக்கான வெளியாடைதான்.

இன்று நாம் அறியும் கிறிஸ்து ஒருவரல்ல. குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர். வரலாற்றுக் கிறிஸ்து யூதர்களின் வரலாற்று நூல்களில் இருந்து நமக்குத்தெரியவருபவர். ஆன்மீகக் கிறிஸ்து கிறிஸ்துவின் சொற்கள் வழியாக கடந்த இருபது நூற்றாண்டுகளில் மாபெரும் மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிக்கொண்ட ஓர் ஆளுமை. மதக் கிறிஸ்து கிறித்தவ திருச்சபையாலும் மதவாதிகளாலும் முன்வைக்கப்படுபவர். -- ஜெய மோகன்.

வரலாற்று வழியே ஒருமனிதனை நாம் எப்படியெல்லாம் 'படைக்கிறோம்' என்று ஜெயமோகனின் எழுத்தில் தெரிகிறது. இக்கதையும் இதே கருத்தைத்தான் கூறுகிறது.

கிறிஸ்து தன் உடன் பிறப்பை மிகவும் நேசிப்பதாகக் கதை செல்கிறது. பல இடையூறுகளிலிருந்து ஜீசஸை கிறிஸ்து காப்பாற்றுகிறார்.  அதற்கு பழைய ஏற்பாட்டின் கதைகள் அவருக்கு உதவுகின்றன.

அதில் அவர் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் மாற்றுகிறார். சான்றாக, திருக்குளிப்பின் போது மேலே பறந்து போன புறா தன்னிடம் பேசியதாக தன் தாயிடம்  பொய்யாகக் கூறுகிறார். விவிலியத்தில் ஜீசஸிடம் சாத்தான் தன் 'வேலை"யைக் காட்டியது போல் இங்கே கிறிஸ்து ஜீசஸை சோதிக்கிறார். அதோடு அந்த சோதனைகளின் வெற்றியே அவரை பலருக்கும் தெரியப்படுத்தும். அதுவே புதிய சபை ஒன்று உருவாக உதவும் என்கிறார். விவிலியத்தில் உள்ள சாத்தானின் வேலையாகக்  கருதப்படும் ஒன்றை இப்படி மாற்றிக் காண்பிக்கிறார்.

கதையின் நடுவில் ஒரு "மர்ம மனிதன்" வருகிறார். கிறிஸ்துவுக்கு அது தேவதூதனாகத் தெரிகிறது. வாசிக்கும் நமக்கு அப்படி தோன்றுவதில்லை. ஒரு வில்லனாகத்தான் தெரிகிறது.

ஜீசஸ் ஜெத்ஸமேனியில் "கடவுளிடம் பேசுவது" நூலில் ஒரு முக்கிய கட்டம். கதாசிரியரின் கடவுளைப் பற்றிய கருத்து என்ன என்பதைத் தெளிவாகக் காண்பிக்கும் கட்டம் அது. அதே போலவே "திருச்சபைக்கு ஏற்றதாக இருப்பதற்காகவே நான் அவருக்கு உடந்தையாக இருந்தேன். ....ஆனால் திருச்சபை தனது அதிகாரத்தால் ஜீசஸின் கதையை தன் போக்கிற்கு மாற்றிவிடலாம்."" என்ற கிறிஸ்துவின் கடைசி வாக்கியம் கிறிஸ்துவ மதத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவாகக் காட்டுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இக்கதை ஆங்கிலத்தில் ALLEGORY என்று சொல்வார்களே  அந்த பாணியில் அமைந்துள்ளது. சொல்லும் கதை ஒன்றாக இருப்பினும் சொல்ல வந்தவைகள் மறைபொருளாக சொல்லப்படும் கதையின் ஊடே ஒளிந்துள்ளன. ஜீசஸ் நல்லவைகளைச் சொல்லும் ஒருவர். அவர் சொன்னவைகளை மட்டும் வைத்துக் கொண்டால் அது யார்சொல்லியதாக இருந்தாலும் அவை நல்லவை; பயனுள்ளவை என்பது தெளிவு. அதை ஜீசஸ் சொல்லியதாக வைத்து, அதனை மேலும் மெருகூட்டி ஜீசஸை ஒரு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ தூக்கி வைத்து ஒரு புதிய மதத்தையே தோற்றுவித்து விடுகிறார்கள்.

ஜீசஸ் தன் முதல் புதுமையாக கானாவூரில் நீரை ரசமாக மாற்றிய கதையில் கதாசிரியர் ஒரு சின்ன மாற்றம் செய்கிறார். என்றோ நடந்த ஒன்று; அதனை எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதே அதற்குரிய சிறப்புத் தன்மை அல்லது சாதாரணத் தன்மை தெரிகிறது. கடவுள் தன்மை ஏற்றஇப்படி சில 'நகாசு வேலை' செய்தாலே போதுமே ... யாரை வேண்டுமானாலும் ஒரு சித்தராகவோ, கடவுளின் மகனாகவோ, நபியாகவோ, புத்தராகவோ மாற்றி விடலாம் என்பதையே இந்த கானாவூர் கதை,  தலைக்கு மேல் பறந்த, பேசிய புறா நினைவுறுத்துகின்றன.எனக்குத் தெரிந்த வரையில் இந்த தேவ தூதர்களில் பலர் மிக மிகச் சாதாரண மனிதர்களே. ஆனால் வலிய அவர்கள் மேல் ஏதேதோ தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார்கள்.


முந்திய பதிவில் பக்கம் 145-ல் அந்த மர்ம மனிதன் / தேவ தூதன்  ஜீசஸின் அரசு இந்த உலகிற்கு வந்துவிடும் அப்படி ஒரு அரசு வருமாயின் அது நிறைய மக்களைக் கொண்டதாகவும், யூதர்கள் மட்டுமின்றி வேற்று மக்களும் இருக்குமாறு அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் ஜீசஸைத் தொடர்ந்து செல்லுமாறு கிறிஸ்துவைப் பணிக்கிறார். ஒரு திருச்சபை (church) கட்டாயம் அமைய வேண்டும்' என்ற முனைப்போடுதான் திட்டமிடுகிறார்.

இந்த திட்டங்கள் எல்லாமே இன்று நாம் முக்கிய மதங்களாக நினைக்கும் எல்லா மதங்களுக்கும் ஒரு பொதுவான நிலைப்பாடாகவே இருந்து வருகிறது. ஏசு, முகமது,  ராமகிருஷ்ணர், அரவிந்தர்,  பால் ரிச்சர்ட் என்ற அன்னை-அரவிந்தர் போன்ற மனிதர்கள் சொன்னவைகளை மேலும் 'நகாசு' வேலை செய்து, அவர்களுக்கும் கடவுளுக்கும் 'நேரடி தொடர்பு' இருந்ததாகச் சொல்லப்பட்டு இந்த மனிதர்களுக்கு ஒரு சிறப்பிடம் கொடுக்க்ப் படுகிறது. இவர்களைப் பற்றிய வாசிப்பில் அனேகமாக எதுவும் என் அறிவைத் தொடுவதாக ஏதும் காணேன்.

இதில் உள்ள ஒவ்வொருவரின் கதையும் கொஞ்சம் ...



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஏசுவின் கதை  இதில் கொஞ்சம் சிறப்பாக அமைந்தது என்று நினக்கிறேன். அவரது மரணம் மட்டுமல்லாமல், மூன்றாம் நாள் 'உயிர்த்தெழுந்தது' குறித்தவைகள் அவரை ஒரு கடவுள் மனிதனாக அல்லது கடவுளாகவே சித்தரித்துள்ளன. ஏனையோர் மனிதக் கடவுளாக இருக்க, இவர் அதையும் மீறி ஒரு கடவுளாகவே ஆக்கப்பட்டுள்ளார். ஏசு உயிர்த்தெழுந்ததை இந்த நூல் ஒரு முக்கிய கேள்வியாக்கி விடுகிறது. டாவின்ஸி கோட் ஒரு புனைவு. ஆனாலும் இப்புனைவு Jesus Papers, Holy Blood and Holy Grain போன்ற சில ஆய்வு நூல்களில் ஒரு முக்கிய கேள்வியாக நிற்கும் செயலைத்தான் ஒரு கேள்வியாக வைத்திருக்கிறது.


முகமது - முன்பே என் பதிவில் சொன்னதுதான்: //எந்த விதத்தில் முகமது நம் வாழ்க்கையில் நாம் நித்தம் நித்தம் காணும் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவராக இருந்ததாக வரலாறு கூறுகிறது?//
நம்பிக்கை என்பதைவிட அவரை எப்படி ஒரு தேவதூதராக அதுவும் கடைசித் தூதுவராக நம்புகிறீர்கள்? அவரே ஹீரா மலையில் ஜிப்ரேல் வந்து சொன்னதாகச் சொன்னதைத் தவிர வேறு என்ன சான்று?  அவருக்கே முதன் முதலில் உன்னிடம் வந்து சொன்னது கடவுள் / ஜிப்ரேல் என்று அவரது மனைவிதான் confirmation  கொடுக்கிறார்கள்; அவருக்கே தெரியாததை அவரது மனைவி மட்டும் எப்படி அவ்வாறு திடமாக நம்பினார்கள்? எத்தனையோ பேர் நான் கடவுளைப்பார்த்து பேசிக்கிட்டே இருக்கிறேன் என்பார்கள். கிறித்துவ மத போதகர்களில் பலர் ஏசுவோடு உட்கார்ந்து breakfast முடிச்சிட்டு வர்ரேன் அப்டிம்பாங்க... அதையெல்லாம் எப்படி சீரியஸா எடுத்துக்கிறது. கவுஜ மாதிரி நான்கூட ஒண்ணு எழுதினேன். வாசிச்சி பாருங்களேன் ..இதுக்கெல்லாம் ஏதாவது ஒரு நிரூபணம் வேண்டாமா? ஒருவர், அவர் யாராக இருந்தாலும், சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா?

ராமகிருஷ்ணர்: இவரைப் பற்றி வாசித்த போதும் mental seizure போன்ற விஷயங்கள்  பேசப்பட்டன. ஒவ்வொரு மதமாக மாறி மாறி test செய்தார் என்கிறார்கள்.  இவரது வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லும் அடங்கா பசி போன்ற பல விஷயங்கள் எவ்வித உயர் விஷயங்களை எனக்குச் சொல்லவில்லை.

அரவிந்தர் & அன்னை: விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு மனதுக்குள் 'புதுச்சேரிக்குப் போய்விடு' என்ற குரல் எழுந்ததாகச் சொல்வது ஏனென்ன்று தெரியவில்லை. அது ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வராத ஒரு safe place .. அவ்வளவே.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இப்படியே செல்கின்றன பலரைப் பற்றியவை. இவர்களெல்லோரும் பல நல்ல விஷயங்களைச் சொல்லியுள்ளார்கள்.  இல்லையென்று கூறவில்லை. ஆனால் நல்ல பல விஷயங்களைக் கூறினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை அத்துணை பெரிய பீடங்களில் ஏற்றி வைக்க வேண்டுமா? எல்லோருமே கடவுளோடு தொடர்பு கொண்டதுபோல் சொல்வதானால் நான் எந்தக் கடவுளை நம்புவது? எந்த கடவுள் சொல்வது சரியென்று போவது? முகமதுவைத் தவிர மற்றையோரை கடவுளாக வழிபடுவதும் எந்த அளவு சரி?   

அவர்கள் சொல்லும் 'வசனங்கள்' தேவ வார்த்தைகளாக மறுபிறவி எடுக்கின்றன. அந்த வார்த்தைகளை அச்சாணியாகக் கொண்டு புதிய 'மதங்கள்' தோன்றுகின்றன. 

அடுத்து இன்னொரு குரூப். இவர்கள் தங்களை ஒரு 'தேவ தூதர்களாக'க் காண்பிக்கிறார்கள். ஆனால் படிப்படியாக தங்களையே ஒரு 'தேவனாக' உயர்த்திக் கொள்கிறார்கள். சாய்பாபா, மேல்மருவத்தூர், அம்ரிதா, கல்கி, ப்ரேமானந்தா போன்றோர் தங்கள் வாழ்நாளிலேயே  கடவுள் என்ற நிலைக்கு தங்களையே உயர்த்திக் கொள்கிறார்கள். முதலில் சொன்னவர்களை பின் வந்தவர்கள் கடவுளாக்கி விட்டார்கள். ஆனால் பின்னால் வந்த இந்த குரூப்  கொஞ்சம் அவசரக்காரர்கள்  -- தங்களையே  கடவுளாக்கிக் கொண்டு விட்டார்கள்; புத்திசாலிகள்!

கடவுளுக்கு எதற்கு மதம்? நாம் அவரை துதி செய்ய வேண்டும்; தொழ வேண்டும் என்ற ஆவல் எல்லாம் கடந்த எந்த கடவுளுக்கு தேவை? கிறித்துவத்தில் மனிதனை ஏன் கடவுள் படைத்தார் என்று சின்னப்பிள்ளைப் பருவத்தில்  சொல்லிக் கொடுப்பார்கள். மனிதன் கடவுளை அறிந்து அவரை சேவித்து வணங்கி, அவர் படைத்த சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமாம். இதே கருத்துதான் மூன்று ஆபிரஹாமிய மதங்களின் கருத்து. 

யோசித்துப் பார்த்தால் இந்தக் கோட்பாடு வேடிக்கையாகத் தெரியவில்லை? கடவுளே மனிதர்களைப் படைக்கிறாராம்; அவர்கள் மீது மிக இரக்கம் கொண்டவராம்; ஆனாலும் ஏனோ சுவர்க்கத்தோடு நரகத்தையும் படைக்கிறாராம்.' இரக்கம் மிகுந்த அவர்' இறுதியில் நமக்கான சம்பாவனையைக் கொடுக்கிறாராம். அன்பானவர் ஏன் நரகத்தைப் படைத்தார்; (என் போன்ற) பலரை நரகத்திற்கு  அனுப்பும்படியான நிலைக்கு யார் காரணம்? 'எல்லாம் வல்ல கடவுள்'தானே காரணம். "ஆட்டுவித்தான்; ஆடுகிறேன்!" (குரான் 9:51)

கொஞ்ச வருஷம் இங்கே இருந்து செஞ்ச தப்புக்கு நித்திய தண்டனையாக நரகமோ  நித்திய பரிசாக சுவர்க்கமோ கிடைக்குமாம். இதில் இஸ்லாமிய மதத்தின் சுவனப் பரிசுகள் கொஞ்சம் கோரமான அல்லது விகாரமானவைதான். ஆனால் எந்த ஆண்மகனுக்கும் மிகவும் பிடிப்பதுதான்!


மனுஷங்களே எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் தூக்குத் தண்டனை கூடாது. அது தப்பு அப்டின்னு சொல்றாங்க. ஆனால் 'இரக்கம் மிகுந்த ஆண்டவன்' தூக்குத் தண்டனையை விட மோசமான நித்திய தண்டனைக் கொடுக்கிறார். இது என்ன logic அப்டின்னு தெரியலை! இப்படி perpetual jannah / heaven   /  jahannam - hell கொடுக்கிற கடவுள் நியாயமானவரா? எனக்கு அப்படித் தெரியவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கண்விழித்துப் பார்ப்பவர்களுக்கும் அப்படிதானிருக்க வேண்டும்.

இந்நூலில் எனக்கு இரு  விஷயங்கள்  பிடித்தன.  ஒன்று விவிலியத்தில் சொன்ன சில விஷயங்களை நாம் மறு பரிசீலனை செய்ய உதவுகிறது. அடுத்து எப்படி வரலாற்றில் மதங்கள்உருவாகின்றன என்பதை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார். சிலர் நல்லது சிலவைகளைச் சொல்லிப் போக பின்னால் வந்தவர்கள் அந்த நல்ல விஷயங்களைத் தொகுத்து, அதனைச் செய்தவர் 'அப்படியாக்கும் ...இப்படியாக்கும் ..' போன்று சில கதைகளை  ஜோடித்து அந்த மனிதரை தெய்வமாக்கி, புதிய மதத்தினைத் தோற்றுவித்து, அந்த மதத்தினையும் இப்புத்தகத்தில் கடைசி இரு வரிகளில் ஏசு சொல்வது போல் புதிய திருச்சபையை உருவாக்கி விடுகிறார்கள்.  "திருச்சபை தனது அதிகாரத்தால் ஜீசஸின் கதையை தன் போக்கிற்கு மாற்றிவிடலாம். ... ஆனாலும் இந்தக் கதை இல்லாவிட்டால் திருச்சபை தான் ஏது?" 


இந்நூலில் மூன்று முக்கிய இடங்கள் மிகவும் பிடித்தன. 
1.  பெத்திஸ்டாவில் உள்ள ஒரு குளத்தில் மூன்று பிச்சைக்காரர்களிடம் நடக்கும் உரையாடல். முந்திய பதிவில் சொன்னது போல் இந்த உரையாடல் மனித சமூகம், தனி மனித மனம் இவற்றையெல்லாம் அலசும் அழகான ஒரு பகுதி.

2. ஏசு ஜெத்சமேனியில் 'கடவுளோடு' நடத்தும் பதில் இல்லா உரையாடல். இதனை வாசிக்கும்போது அன்னை தெரஸாவின் கடிதங்கள் அடங்கிய COME BE MY LIGHT  என்ற நூலில் கடவுளை நோக்கி அன்னை செய்யும் ஜெபங்கள், பதிலில்லா அந்த ஜெபங்களால் அவர்களுக்கு வரும் நம்பிக்கையின்மை -இவை எல்லாமே ஏசு கடவுளை நோக்கி நடத்திய ஜெபத்தினை ஒத்திருக்கும். (இரு நூல்களையும் அடுத்தடுத்து வாசிப்பதால் ஏற்பட்ட ஒரு நல்ல பலன்!)

3. இந்நூல் விவிலியத்தைப் புரட்டி எழுதியதாகத் தோன்றினாலும் உள்ளடக்கம் அன்பை மட்டும் முக்கியப் படுத்துகிறது. ஒரு நல்ல மதம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. (எந்த மதமும் ஏழ்மையானதாக, எந்த ஆளுமையும் இல்லாமல் சாதாரணமானதாக இருக்க வேண்டும். அன்பைத் தவிர வேறு எந்த வித ஆளுமையும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கென்று சொத்து, சட்ட திட்டங்கள் என்று ஏதுமிருக்கக் கூடாது. யாரையும் தண்டிக்கக் கூடாது; மன்னிக்க மட்டுமே செய்ய வேண்டும். ஆல மரமாய் தழைத்து பலருக்கும் தங்குமிடமாக இருக்க வேண்டும்)


இப்படி ஒரு மதம் இல்லையே :(



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


*

OK+%28Small%29.jpg





முதலில் இப்படியும் சில எண்ணங்கள் .....


***  SATANIC VERSES நாவலை உலகத்தில் முதன் முதலாக தடை செய்தது நமது அரசு என்று வாசித்தேன். அதுவும் இஸ்லாமியரின் எதிர்ப்புக்கு முன்பே அவ்வாறு நம் அரசு செய்ததாக அறிந்து உள்ளமெல்லாம் புளகாங்கிதமடைந்தேன். மைனாரிட்டி மக்கள் மீதுதான் நம் அரசுக்கு என்னே ஒரு 'இது' !

ஆனால் இப்படிப்பட்ட அரசு ஏன் இந்த நூலை இன்னும் விட்டு வச்சிருக்குன்னு தெரியவில்லை. இந்த நூலை இங்கு, இந்தியாவில்தான் வாங்கினேன். எப்படி இந்த நூல் எளிதாக எல்லோருக்கும் கிடைக்கும்படி விற்பனையில் உள்ளது.மைனாரிட்டி மேல் ஒரு அனுசரணையும் கிடையாதா?!

***  டாவின்ஸி கோட் படம் வந்ததும் சில கிறித்துவர்கள் உடனே கூக்குரல் எழுப்பினார்கள். நம் நாட்டில் சில இடங்களில் இந்த படம் தடை செய்யப்பட்டது. மீண்டும் மைனாரிட்டி மேல் கரிசனைதான்.

***  இந்த நூலை எதிர்த்து நம் ஊர் கிறித்துவ மக்கள் ஏன் இன்னும் 'சத்தம்' போடவில்லை?

***  அட, கிறித்துவர்கள்தான் சத்தம் போடவில்லை. இஸ்லாமியர் நம்பிக்கையின்படி ஈசா ஒரு நபிதானே. அவர்களும் இன்னும் சத்தம் போடவேயில்லைன்னும் ஒரு ஆச்சரியம். 
--------------------------



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஏற்கெனவே இறை  நம்பிக்கைகளோடு இருந்த அந்த காலத்திலேயே Irving Wallace என்பவர் எழுதிய Seven Minutes என்றொரு புதினத்தை வாசித்தேன். அந்த புதினத்தில் பழைய ஏற்பாட்டை மிகவும் தாக்கி எழுதிய பகுதிகள் நிறைய உண்டு. Old testament is a sort of porno என்ற விவாதம் இருக்கும். கதையாக அதை வாசித்தேன்; வாசித்து முடித்ததும் எந்த வித மனப்பாதிப்பும் இன்றி அடுத்த நூலைக் கையில் எடுத்தேன்.  என் இறை நம்பிக்கைக்கு அந்த நூல் எந்தவித மாற்றத்தையோ, இழுக்கையோ தரவில்லை. என் கடவுள் இதையெல்லாம் விட பெரியவர் என்ற எண்ணமே என் மனத்தில் இருந்திருக்குமென நினைக்கிறேன். என் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு; உனக்கில்லையென்றால் அது உன் "தலைவிதி". எனக்கு அதில் எந்த வித அவமானமோ, அங்கலாய்ப்போ இல்லை என்ற எண்ணம்தான் இருந்திருக்கும். எண்ணத்தில் இருக்கும் தீவிரவாதங்கள் பல சமயங்களில் தங்கள் மதங்களுக்கு இழுக்கைத்தான் தேடித் தருகின்றன என்றுதான்  எண்ணியிருப்பேன்....

------------------------------


இந்த நூல் வெளியிட்டதும்  சில எதிர்ப்புகளும் ஆசிரியருக்கு எதிராக வந்ததாம். ஆனால் ஒன்றும் பெரிய அளவில் இல்லை. உலகெங்கும் எந்த போராட்டமும் வரவில்லை. பத்வா எதுவும் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை கிறித்துவர்களுக்கு தங்கள் நம்பிக்கைகளுக்கு இந்த நூலின் தலைப்பும் அடக்கமும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையோ என்னவோ. அதோடு தங்கள் கடவுள் இதுபோன்ற நூல்களால் தரம் இறங்கிப் போக மாட்டார்கள் என்ற நினைப்பால் இதை பெரிது படுத்தாமல் புறந்தள்ளியிருக்கலாம்.  வேறு மத நூல்களுக்கு எதிராகப் போர்க்கொடிகள் தூக்குதல் போலல்லாது, இந்த நூலுக்கு எதிர்வினைகள் இல்லாதது  பழைய ஒரு கிறித்துவனாக எனக்குப் பெருமையே. என் நம்பிக்கை என்னைச் சார்ந்தது; நீ சொல்வதெல்லாம் என்னைப் புண்படுத்தாது; என் கடவுளின் பெருமையை உன்னால் சிதைக்க முடியாது என்ற அந்த கொள்கை எனக்குச் சிறப்பாகத் தோன்றுகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard