டிசம்பர் 1945-ம் ஆண்டில் எகிப்தின் ஜபால் அல்-டாரிஃப் (Jabal al-Tarf) என்ற மலைப்பகுக்திகளின் அருகில் உள்ள நஜ் ஹமாதி (Naj Hammadi) என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள இடத்தில் நிலத்தைத் தோண்டும்போது முகமது அலி என்பவருக்குப் பழைய எழுத்துப் பிரதிகள் சில கிடைத்தன. 13 ஓலைப் பிரதிகள் தோல்களால் ஒருங்கே கட்டப்பட்டு, ஒரு மண் பாத்திரத்திற்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார். அதன் மதிப்புகளை அறியாது முகமது தன்வீட்டு அடுப்பங்கரையில் இதனை வைத்துள்ளார். அவரது தாயார் சமையலுக்கு அடுப்பெரிக்க இதிலிருந்து சில ஓலைகளையும் எடுத்துள்ளார். பின்னர், முகமதுவும் அவரது சகோதரர்களும் தங்கள் எதிரி ஒருவரைப் பழி வாங்குவதில் ஈடுபட்டு, காவல் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது தங்கள் பகுதியிலிருந்த மத குரு - al-Qmmus Basiliyus Abd al-Masih என்பவரிடம் அந்தப் பிரதிகளைக் கொடுத்து வைத்துள்ளார். அதில் இருந்த ஒரு பிரதியைக் கண்ட வரலாற்று ஆசிரியர் ஒருவர் - Raghib - அதன் முக்கியத்துவதைக் கண்டறிய கெய்ரோவில் உள்ள தன் நண்பருக்கு அதை அனுப்பியுள்ளார்.(XIII)
அப்பிரதியைக் கறுப்புச் சந்தையில் விற்க முயற்சித்த போது எகிப்திய அரசின் கவனத்திற்கு இப்பிரதியைப் பற்றிய செய்து எட்டியுள்ளது. விற்கப்பட்ட அந்த ஒரு பிரதியோடு, மொத்தம் இருந்த 13 பிரதிகளில் மீதியிருந்த பத்தரை பதிவுகளையும் அரசு கைப்பற்றியது. கைப்பற்றியவைகளை கெய்ரோவின் அருங்காட்சியகத்தில் வைத்துப் பத்திரப்படுத்தியது. ஆனால் 13வது பிரதியும் அது அடக்கியிருந்த 5 அபூர்வமான கையெழுத்துத் தொகுப்புகளும் அமெரிக்காவிற்குக் கடத்தப் பட்டன. அங்கிருந்து நெதர்லேண்டில் உள்ள Utrecht என்ற ஊரிலுள்ள க்யுஸ்பெல் - Giles Quispel - என்ற மத வரலாற்றுப் பேராசிரியரிடம் வந்து சேர்ந்தது. கிடைத்த பகுதி அரைகுறையானது என்பதையும், சில பக்கங்கள் காணாமலிருக்கின்றன என்று தெரிந்ததும் பேராசிரியர் 1955ம் ஆண்டு கெய்ரோவிற்கு வந்தார்; நேரடியாக அருங்காட்சியகம் சென்று, அங்குப் பாதுகாப்பிலிருக்கும் பிரதிகளின் சில படங்களைப் பெற்று அறைக்குத் திரும்பியவர் தன் தேடலை ஆரம்பித்தார். முதலிரு வரிகளைப் படித்ததுமே க்யுஸ்பெல் மிகவும் பிரமிப்படைந்தார். ஏனெனில் அந்த வரிகள்:
‘இவைகளெல்லாம் ஏசுவின் ரகசிய வார்த்தைகள்;
உயிரோடு இருக்கும்போது அவர் பேசியவைகள்;
இவைகளை இங்கே தொகுத்தது
ஏசுவின் இரட்டைப் பிறவியும்
அவரது சகோதரனுமான
ஜூடாஸ் தாம்ஸ்.’
1890-ல் கிரேக்க மொழியிலுள்ள தாமஸின் புதிய ஏற்பாட்டில் க்யுஸ்பெல்லின் பிரான்ஸ் நண்பர் H.C. Puech இதே போன்ற வாசகங்களை பழம் பிரதிகளிலிருந்து முன்பே கண்டுபிடித்திருந்தார். ஏசுவிற்கு இரட்டைச் சகோதரர் இருந்தாரா? மற்ற புதிய ஏற்பாடுகள் போலன்றி இது மட்டும் ஏன் ‘ரகசிய’ ஏற்பாடாக இருக்கிறது? ஹமாதில் கண்டுபிடிக்கப்பட்ட 52 தொகுப்பிலிருந்து இது ஒரு தொகுப்பு. இதே போல் பிலிப்பின் ஏற்பாடு ஒன்றும் வேறு விவிலியங்களில் சொல்லாததும் சொல்லப்பட்டிருக்கிறது: மரிய மக்தலேனாவை ஏசு மிகவும் விரும்பியதாகவும், அவர்களிருவரும்தங்கள் அன்பை சீடர்கள் முன்னால் வெளிக்காண்பித்ததாகவும் காணப்படுகிறது. (XV)
அந்த 52 தொகுதிகளில், தாமஸ் விவிலியம், பிலிப் விவிலியம் என்பது போக இன்னும் மீதி இருந்த பல விவிலியங்கள்: Gospel of Truth, Gospel to Egyptians, Secret book of James, Apocalypse of Paul, Letter of Peter to Philip, Apocalypse of Peter இவைகள் எல்லாமே கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தன. இவைகளில் ஒரு தொகுதியின் சிறு பகுதிதான் - தாமஸின் விவிலியம் - 50 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நூல்கள் எல்லாமே கி.பி. 350 - 400 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. ஆனால் இதற்கு மறுப்பும் உண்டு. Prof.Helmut Koester of Harvard University - தாமஸின் விவிலியம் கி.பி.50-100-ல் எழுதப்பட்டிருக்கலாம்; அதனால் அவை மற்ற விவிலியங்களுக்கு முன்பே எழுதப்பட்டிருக்கலாம்என்கிறார். (XVI)
ஹமாதி தொகுப்புகளில் உள்ள தொகுதிகளில் மனித இனத்தின் ஆரம்பம் ஆதியாகமத்தில் சொன்னதுபோலின்றி வேறு வகையாகச் சொல்லப்பட்டுள்ளது. Testimony of Truth-ல் ஈடன் தோட்டம் பாம்பின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. (XVII)
ஏனிந்த தொகுதிகள் இப்படிப் பதுக்கப்பட்டன? ஏன் 2000 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் மறைந்துள்ளன? ஆரம்ப காலங்களில் புதிய கிறித்துவ்ர்களிடையே பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த அடிப்ப்டைக் கிறித்துவர்களுக்கு மற்ற கிறித்துவர்கள் மீதும் அவர்கள் நம்பிக்கைகள் மீதும் முரண்பாடு இருந்து வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, இரேனியஸ் -Irenaeus, Bishop of Lyons - 180-ம் ஆண்டு ஐந்து தொகுதிகளாக 'The Destruction and Overthrow of Falsely So-called Knowledge' என்ற நூலை எழுதியுள்ளார். கான்ஸ்டான்டின் கிறித்துவத்திற்கு வந்த பின், கிறித்துவர்களின் கை ஓங்கியது. ஒதுக்கப்பட்ட நூல்களை வைத்திருப்பதே குற்றம் என்றானது. அப்போது இந்த நூல்கள் பதுக்கப்பட்டிருக்க வேண்டும். (XVIII)
ஆனால் இது போன்ற நூல்களை வைத்திருந்தவர்கள் தங்களை heretics -நம்பிக்கையற்றவர்கள் - என்று நினைக்கவில்லை. அவர்களும் கிறித்துவ பாணியில், கிறித்துவ நம்பிக்கையுடன் தான் எழுதி வந்தார்கள். இத்தைகைய கிறித்துவர்கள் gnostics என்றழைக்கப்பட்டனர். கிரேக்க மொழியில் gnosis என்றால் knowledge என்று பொருள்படும். (XIX)
இந்த நூல்கள் மற்ற நமக்குத் தெரிந்த விவிலியங்களோடு ஒன்றுபட்டும்,மாறுபட்டும் இருந்தன. பழைய யூதர்களும் கிறித்துவர்களும் மனிதனும் கடவுளும் வேறுபட்டவர்கள்; தனித்தனிக் கூறுகள் என்று சொல்வதுண்டு. ஆனால் gnostic கிறித்துவர்கள் தன்னையறிதலே கடவுளை அறிதல் என்றும் (self knowledge is knowledge of God), மனிதனும் தெய்வீகமும் ஒன்றுதான் (self and divine are identical) என்று சொல்வதுண்டு. இரண்டாவதாக, ஏசு மனிதர்களை உய்விக்க அல்ல, மாறாக வழி நடத்தவே வந்தார். மூன்றாவதாக, ஏசு தாமஸிடம் தாங்களிருவரும் ஒரே பொதுப்புள்ளியிலிருந்து வந்தவர்கள் என்கிறார். இத்தகைய ஏசுவின் படிப்பினைகள் கீழ்த்திசை நாட்டின் தத்துவங்களோடு ஒத்துப் போன அளவு மேற்கத்திய தத்துவங்களோடு ஒத்துப் போகவில்லை.
ஏசுவின் இந்தக் கருத்துக்கள் புத்தரின் கருத்துக்களோடு ஒத்து வருகின்றன. இந்து மதத் தத்துவங்களின் தாக்கமும், புத்தத்தின் தாக்கமும் gnosticகிறித்துவத்தில் இருப்பதுபோலுள்ளது. gnostic கிறித்துவம் மிகுந்திருந்த 80-200 ஆண்டுகளில் கிரேக்க, ரோமானிய நாடுகளோடு இந்தியாவிற்குத் தொடர்பு இருந்துள்ளது. அலெக்ஸாண்டிரியாவில் புத்த மதப் பரப்பல் அப்போதே நடந்து வந்துள்ளது. Hippolytus என்ற கிரேக்க மொழி பேசும் ரோமானியன் 225-ம் ஆண்டில் இந்திய பிராமணர்களைப் பற்றிப் பேசுகிறார். கடவுளை ஒளியாகப் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவிற்கு வந்ததாகக் கருத்தப்படும் தாமஸ் என்ற சீடரை நினைவு படுத்தும் முகமாகவே இந்தப் பெயர் -Gospel of Thomas - என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாமோ? (XXI)
மேலும் தொடரும் ஆராய்ச்சிகளால் தான் மேற்சொன்னவைகள் உறுதிப்படுத்த முடியும்.
கிறித்துவத்தில் பல வகைப் பிரிவினைகள் இருந்தே வந்துள்ளன. தற்போது கத்தோலிக்கர், பிரிவினைக்காரர்கள், பழமைக் கிறித்துவர்கள் (Orthodox)-,மூவருமே கொள்கையளவில் மூன்று விஷயங்களில் ஒன்று படுகிறார்கள்.விவிலியக் கட்டளைகள், சீடர்களின் நடவ்டிக்கைகள் (apostolic creed), சமயக் கட்டுப்பாடுகள் (institutional structure) - இந்த மூன்றையும் ஒழுங்குக் கோட்பாடுகளாக வைத்துள்ளார்கள். ஆனால் இந்த மூன்று கோட்பாடுகளும் இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே வந்துள்ளன என்பது பிஷப் இரேனியஸ் போன்றவர்களின் எழுத்திலிருந்து தெரிகிறது. இதனாலேயே பிஷப் இரேனியஸ் ஒரே ஒரு கிறித்துவம் மட்டுமே இருக்க முடியும்;மற்றவையெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். அந்த ஒரே கிறித்துவம் வழியாக மட்டுமே ஆன்மா உய்வடையும் என்றார். இதை மாற்றி நினைப்பவர்கள் எல்லோருமே heretic கிறித்துவர்கள் - பொய்க் கிறித்துவர்கள் - என்றார். கிறித்துவம் என்றாலே அது ’கத்தோலிக்கம்’ மட்டுமே என்றார். கான்ஸ்டாண்டினுக்குப் பிறகு இத்தகைய hereticகிறித்துவர்கள் தண்டனைக்குரியவர்களானார்கள்.
gnostic கிறித்துவம் முதலிலேயே இருந்திருந்தாலும் 19-நூற்றாண்டிற்குப் பிறகே அவை பற்றிய நூல்கள் வெளி வந்துள்ளன. 1769-ல் முதல் நூல் எகிப்திலிருந்து James Bruce என்ற ஸ்காட்லாந்துக்காரரின் மூலம் வெளி வந்தது. அதுவும் 1892-ல் அச்சிடப்பட்டது. இது ஏசுவிற்கும் அவரது சீடர்களுக்கும் நடுவில் நடந்த உரையாடல்களைக் கொண்டுள்ளது. (இங்கு சீடர்கள் என்பது இரு பாலினரையும் குறிக்கும்.) 1896-ல் எகிப்தின் வரலாற்றறிஞர் Gospel of Mary (Magdalane) என்ற நூலையும், இன்னும் வேறு மூன்று நூல்களையும் வெளிக் கொண்டு வந்தார். அந்த மூன்றில் ஒன்று –Apocryphon (Secret Book) of John.
Dead Sea Scrollsஹமாதி பிரதிகளுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட்து. அந்த செய்தி உலகெங்கும் உடனே பரவியது. ஆனால் ஹமாதி பிரதிகள் அதுபோல் உடனே பரவி விடவில்லை. Gnositcism-ல் விற்பன்னரான Prof. Hans Jonasஅரசியல், சட்ட ஒழுங்குகள் போன்றவைகளும், விற்பன்னர்களுக்கு நடுவில் எழுந்த போட்டி பூசல்களுமே இதற்கான காரணங்களாக இருந்தன என்கிறார். .(XXIV)
பல தடைகள் தாண்டி 1952-ல் இக்கையெழுத்துப் பிரதிகள் எகிப்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதற்குப் பிறகும் ஆராய்ச்சிகள் தொடங்க முடியாத தடைகளும் இருந்தன. அதன் பின் UNESCO-வின் தலையீட்டால் பல வல்லுனர்களின் ஆராய்ச்சிக்குள் இவை வந்தன.
1972-ல் இப்பிரதிகளின் முதல் வெளியீடு வெளிவந்தது. (pp XXVII)
ஹமாதிப் பிரதிகள் மூலம் Gnosticism கிறித்துவத்திற்கும் முந்தியது என்றும், கிரேக்க தத்துவம், வானவியல், புராணங்கள், இவைகளோடு இந்திய மூலங்களிலிருந்தும் கருத்துக்கள் பெற்றன என்று நிரூபிக்க முயன்றார்கள். ஆனால் Adolf von Harnack என்ற ஜெர்மானிய வரலாற்றாசிரியர் கிறித்துவத்தின்மறுப்புகளே Gnosticism-ஆக மாறியது என்றார். கிறித்துவ த்த்துவங்களை கிரேக்க த்த்துவங்களோடு இணைந்து முதல் கிறித்துவ மதயியல் தோன்றியது. ஆனால் இதனால் கிறித்துவத்தின் பல வழிகாட்டல்கள் திசை திருப்ப்ப்பட்டன. (XXIX) இக்கருத்தினை ஆங்கில அறிவியலாளர் Arthur Darby Nock ஒத்துக் கொண்டார்.
ஆனால் வேறு பல மதவியலாளர்கள் இக்கருத்தினை ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் Gnosticismதனியொரு மதமாக இயங்கி வந்துள்ளது என்றார்கள். Wilhelm Bousserஎன்ற புதிய ஏற்பாட்டின் வல்லுனர் Gnosticism கிறித்துவ மத்த்திற்கு முந்தியது என்றார்.
சிலர் Gnosticismஈரானியமத்த்திலிருந்து தோன்றி,ஜோராஸ்ட்ரியன்(Zorastrianism) மத்த்தின் தாக்கத்தோடு வளர்ந்த்து என்றனர். யூத மதத்திலிருந்தே Gnosticismதோன்றியது என்பாரும் உண்டு.(XXX)
ஹமாதி பிரதிகள் 52-யும் ஆய்ந்த பின் கிறித்துவத்தின் துவக்க வரலாறு மேலோட்டமாகவே புரிகிறது.
ஏன் சில புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன? ஏன் சில புத்தகங்கள் மறுக்கப்பட்டன? மறுக்கப்பட்டவை ஏன் தேவையற்றவை, ஒதுக்கப்பட வேண்டியவை என்று கருதப்பட்டன? – இது போன்ற கேள்விகளுக்கான சில பதில்கள் ஹமாதிப் பிரதிகளிடமிருந்து கிடைக்கின்றன. (XXXV)
ஏசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதுவே - orthodox Christians - பழமைக் கிறித்துவத்தின் மிக முக்கியமான, அடிப்படையான நம்பிக்கை. (3)
கி.பி. 190 வருடத்து அறிஞர் டெரூலியன் (Terrullian) இதைப் பற்றிச் சொல்லும் போது, ‘இது மிகவும் முட்டாள் தனமானது; ஆனாலும் இதை நம்பியேயாக வேண்டும்' என்கிறார்.
ஆனால் heretics என்றழைக்கப்படுவோர் இதனை நம்புவதில்லை. இதைப்பற்றிச் சொல்லப்படுவதையெல்லாம் அப்படியே எழுத்துக்கு எழுத்து நம்ப வேண்டியதில்லை என்பர். Gnostic Christians இந்நிகழ்வை பல்வேறு விதமாக உருவகப்படுத்துவார்கள். இதை ஊனோடும் உயிரோடும் தொடர்புபடுத்தாது, ஆன்மாவோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் டெரூலியன் இந்த நம்பிக்கையில்லாதவர்கள் கிறித்துவர்களாக இருக்க முடியாது; அவர்கள் எல்லோருமே பதிதர்கள் என்கிறார்.(5)
லூக, மார்க் இருவரும் ஏசு வேறு உருவத்தில் தங்களிடம் வந்ததாகச் சொல்கிறார்கள். ஜானின் கூற்றும் இவ்வாறேயுள்ளது. மரி மக்தலேனா கல்லறையின் முன் ஒரு தோட்டக்காரர் இருப்பதாகத்தான் முதலில் நினைக்கிறார். பால் ஏசுவின் குரலை கேட்டது இருவேறு விதமாகக் கூறப்படுகிறது. பால், ஏசுவின் மீள் உயிர்ப்பு ஒரு மர்மம் ( a mystery) என்கிறார்.
புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களுக்கு உரியதாக இருந்தும், ஏன் பழமைக் கிறித்துவர்கள் (Orthodox Christians) அவைகளை ஒரு புறம் தள்ளி, ஏசு மீண்டும் உயிர்ப்பித்தார் என்பதை மட்டும் வலியுறுத்துவது ஏன்? இக்கேள்விக்கு என்னால் முழுமையாகப் பதில் சொல்ல முடியாது. இருப்பினும் இது நிச்சயம் அரசியல் காரணங்களால் மட்டுமே என்று சொல்ல முடியும். பீட்டர் போன்றவர்கள் கிறித்துவத் தலைமைக்கு உரிமை கோர வழி வகுக்கும் அரசியல் காரணத்திற்காகவே இந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். (6)
இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவத் தலைமை இன்றுவரை நீடிப்பதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். Gnostic Christians இந்த நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதால் அவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதற்கான வழிகள் அடைபடுகின்றன. அவர்கள் பழமைக் கிறித்துவர்களோடு (Orthodox Christians) போட்டியிட்டாலும், அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் - heretics - என்றே கருதப்படுகின்றனர்.
அரசியலும் மதமும் இணைந்தே முதலிலிருந்து செயல்பட்டு வந்துள்ளன. வெவ்வேறு விதமான கிறித்துவம் கிளைத்திருந்திருக்கின்றன. ஒருகுழு மற்றொரு குழுவைத் தாக்கி வந்துள்ளன. (7)
மரிய மக்தலேனா உயிர்த்தெழுந்த ஏசுவை முதலில் பார்த்தார். இருப்பினும் பீட்டரே முதலில் பார்த்ததாகத்தான் இன்றுவரை பழமைக் கிறித்துவர்களும், சில பிரிவினைச் சபைகளும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஏனெனில் பீட்டர் முதல் பிஷப் (போப்) ஆவதற்கான அடிப்படையே ஏசுவை முதலில் அவர் பார்த்தார் என்பதே ஒரு காரணமாகப் போயிற்று. இரண்டாம் நூற்றாண்டில் ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ் முதலில் ஏசுவைப் பார்த்தார் ( மரிய மக்தலேனா அல்ல.) என்று சொல்லப்பட்டது. (8)
கார்ல் ஹோல் - "Karl Holl - என்ற ஜெர்மானிய அறிஞர் உயிர்த்த ஏசுவைப் பார்த்தவர்கள் பட்டியலே மத ஆளுமைக்குக் காரணமாயிற்று என்கிறார். இந்தக் காரணம் இந்த 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும் சொல்கிறார். பழமைக் கிறித்துவர்கள் இதில் மிகவும் தொடர்ந்த ஒரு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். இன்றைய போப் தான் ஏசுவை முதலில் பார்த்த பீட்டரின் வாரிசு என்ற உரிமையோடு உள்ளார். (10)
ஆனால் Gnostic Christians இந்த நம்பிக்கையில்லாமல் இருப்பதோடன்றி, இந்த நம்பிக்கையை ‘முட்டாள்களின் நம்பிக்கை’ -faith of the fools - என்கிறார்கள். ஏசு உயிர்த்தார் என்பதை ஆன்மிகப் பார்வையில் பார்க்க வேண்டும். அதை உடல் தொடர்பாக நினைக்கக் கூடாது.
நாக் ஹம்மாதி கண்டுபிடிப்புக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட Gospel of Mary என்ற gnostic பிரதிகளில் ஏசுவின் உயிர்ப்பு கனவில் அல்லது வலிப்பின் பிரம்மையில் - visions received in dreams or in ecstatic trance - கிடைத்தவைகளே என்று சொல்லப்பட்டுள்ளது. (11)
நாக் ஹம்மாதி பிரதிகளில் ஒன்றான பிலிப்பின் விவிலியம் ஏசுவின் உயிர்ப்பை நம்பும் கிறித்துவர்களைக் கேலி செய்கிறது. (12)
பழமைக் கிறித்துவர்களின் ஒரு பெருந்தலைவர் ஐரீனியஸ் - Irenaeus - நான்கு விவிலியங்களும் அந்தந்த ஏசுவின் சீடர்களால் எழுதப்பட்டது என்று நம்புகிறார். ஆனால் மாத்யூ, மார்க். லூக், ஜான் இவர்களைப்பற்றிய வரலாறு ஏதும் நமக்குத் தெரியாது. (17)
gnostic பிரதிகளின் ஆசிரியர்கள் பன்னிரண்டு சீடர்களைத் தாண்டியுள்ள மற்றவர்களையே அதிகமாகக் குறிப்பிடுவார்கள். அவர்கள் - பால், மேரி மக்தலேன், ஜேம்ஸ். இவர்கள் பீட்டரையும் சேர்த்த அந்தப் பன்னிருவருக்கும் gnosis கிடைத்ததாகக் கருதுவதில்லை.
Gospel of Mary சீடராகக் கூட கருதப்படாத மேரி மக்தலேனாவிற்கே கடவுளின் காட்சி கிடைத்ததாகவும், பீட்டரை விட இவருக்கே அதிக ஞானம் கிடைத்ததாகவும் கூறுவர். Dialogue of Savior நூலில் இவருக்கே முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. மற்ற சீடர்களை விடவும் இவரே மிக மேம்பட்டவர் என்றும் கூறுகிறது. இவர் ‘எல்லாம் தெரிந்தவர்’ என்று - " woman who knew the All" அழைக்கிறது. (22)
Gnostic கருத்துக்களில் ‘ஆன்மா’ ஒரு மனித உடலில் தங்கியிருப்பதாகக் கருதப்படுவதுண்டு. உடல் ஒரு கருவியாக இயங்குகிறது. இந்தக் கருத்துக்கள் கிரேக்க தத்துவ வழக்கங்களுக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதப்படுவதுண்டு. அதோடு, இந்து, புத்த வழக்கங்களுக்கும் மிக அருகாமையில் இருப்பதாகக் கருதுவதுண்டு. (27)