உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறைபாட்டிற்கு காரணம்
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.
விந்தணு வீழ்ச்சி
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைக்கு எதிரான நிலை
தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்