கடந்த 2006ம் ஆண்டு, சிவசங்கரன் வசமிருந்த ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் தலைமையிலான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனை தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.அனந்த கிருஷ்ணனுடன், சிவசங்கரன் பேச்சு நடத்திய போது, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள, ஏர்செல் நிறுவனத்திற்கான லைசென்ஸ்களை பெறுவது மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவது போன்ற விவகாரங்களை எல்லாம் தாங்களே பார்த்துக் கொள்வதாக, சிவசங்கரனிடம் அனந்த கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், மலேசியாவைச் சேர்ந்த தங்கள் நிறுவனம் இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்புதலையும், மத்திய அரசிடம் தாங்களே பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக, அனந்த கிருஷ்ணன் சார்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரால்ப் மார்சல், 2005ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி, சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஒப்புதலை பெறுவது எங்கள் பொறுப்பு. அதே நேரத்தில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து ஏர்செல் நிறுவனம் பெற முடியாத லைசென்ஸ்களை பெறுவது, இரு நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பு' என்று கூறியுள்ளார்.
இந்த இ - மெயில் அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் ஷாந்திகிராம், ஏர்செல் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிலும், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் லைசென்ஸ் விண்ணப்பங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறுவது மேக்சிஸ் மற்றும் ஏர்செல் நிறுவனத்தின் கூட்டுப் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ - மெயிலின் நகல், ரால்ப் மார்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்க, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிதான் நிதியுதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கும் போது, நிலுவையில் உள்ள லைசென்ஸ்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெற, தாங்களும் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த ஒரு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்காது.ஆனால், மேக்சிஸ் நிறுவனம் இந்த விஷயத்தில், சிவசங்கரனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதிலிருந்தே, தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது என, நிபுணர்கள் கூறுகின்றனர்."நிலுவையில் உள்ள லைசென்ஸ்களை தாங்களே பெற்றுக் கொள்வதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுக் கொள்வதாகவும், முதலீட்டிற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்வதாகவும் பொறுப்பேற்று, ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கியது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை, இதுவரை நான் பார்த்ததில்லை.
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் தான் இது நடந்துள்ளது' என, பிரபல சட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேக்சிஸ் நிறுவனம் இப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னரே, 2006ம் ஆண்டு மார்ச் மாதம், ஏர்செல் நிறுவனம் சிவசங்கரனிடமிருந்து 4,813 கோடி ரூபாய்க்கு, மேக்சிஸ் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம், "மேக்சிஸ்'க்கு கைமாறிய ஏழு மாதத்தில், அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் இருந்த லைசென்ஸ்களை எல்லாம் பெற்றுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை, அன்னிய முதலீட்டு அபிவிருத்தி வாரியத்திடமிருந்து இரண்டு மாதங்களுக்குள் பெற்றுள்ளது.
ஆனால், சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, விண்ணப்பித்து 20 மாதங்களுக்கும் மேலாக, அந்த நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு சேவை துவக்க லைசென்ஸ்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிவசங்கரன், அனந்த கிருஷ்ணன், பிரகலாத் சாந்திகிராம் இடையே நடந்த இ - மெயில்கள் தொடர்பாக, பத்திரிகை நிறுவனம் ஒன்று தயாநிதியிடமும் மற்றவர்களிடமும் கருத்து கேட்ட போது, அவர்கள் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி கதை என்ன?* சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனம், ஏழு வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவையை துவக்க அனுமதி கேட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்த போதும், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார் தயாநிதி* பின்னர் தான், ஏர்செல் நிறுவனம், தயாநிதியின் நண்பரான, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, தயாநிதி தன்னை கட்டாயப்படுத்தினார் என, சிவசங்கரன் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்தார்.* மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ, தயாநிதி குடும்பத்தின் சன் டைரக்ட் "டிவி'யின், 20 சதவீத பங்குகளை மிக அதிக விலையான 675 கோடி ரூபாய்க்கு வாங்க, நான்கு மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.* மேக்சிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் வந்த பின்னரே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையை தயாநிதி கொண்டு வந்தார்.* ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரனிடமிருந்து மேக்சிஸ் வாங்கியதும், அதற்கு நிறுவனத்திற்குத் தேவையான லைசென்ஸ்களை எல்லாம் தயாநிதி வழங்கினார். தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே இவற்றை வழங்கினார்.* சிவசங்கரனிடமிருந்து ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்காமல் இருப்பதற்காக கொண்டு வந்த விதிமுறைகளை எல்லாம் தயாநிதி ரத்து செய்தார்.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தயாநிதி நிர்பந்தம் செய்தார் என, கடந்த ஜூலை 6ம் தேதி, சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.* ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் வசம் வந்த பின், அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவும், லைசென்ஸ்கள் வழங்கவும், சட்ட விரோதமாக தயாநிதி சலுகை காட்டினார் என்றும், சி.பி.ஐ., குற்றம் சுமத்தியது. தங்கள் குடும்ப நிறுவன சன் டைரக்ட் "டிவி'யில் மேக்சிஸ் நிறுவனம் கணிசமான அளவில் முதலீடு செய்யவே இதைச் செய்தார் என்றும் கூறியது.