என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
முதன் முறையாக நாடாளுமன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் தயாநிதி மாறன். இப்போது 2-ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்!
''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை.
ஆ.ராசா என்ன செய்தார்? ஒரு டெலிகாம் சர்க் கிளில், எத்தனை மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உரிமங்களைக் கொடுக்கலாம் என்கிற முறையைக் கொண்டுவந்தார். இந்த முறை தொலைத் தொடர்புத் துறை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறி 2005 டிசம்பர் மாதமே தயாநிதி மாறன் அனுமதி கொடுத்து உள்ளார். ஆக, மாறன்தான் விதிமுறைகளை மீறி முதலில் செயல்பட்டவர்.
இத்தகைய அனுமதிக்கு, தொலைத் தொடர்பு கமிஷனின் அனுமதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(டிராய்) ஆலோசனை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இவற்றில் ஒன்றைக்கூட பெறாமல் தயாநிதி மாறன் உரிமங்களைக் கொடுத்தார். குறைந்தபட்சம் இதை டிராய் சிபாரிசின் அடிப்படையிலாவது செயல்படுத்தியிருக்க வேண்டும். டிராயின் சிபாரிசு 2007-ல்தான் வந்தது. அப்படியானால் மாறன் முன்கூட்டியே எப்படிச் செய்தார்?
பல ஆபரேட்டர்களை அனுமதிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டியையாவது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தினார்களா? இல்லை என்பதே என் வாதம். பால்வா போன்ற - தொலைத் தொடர்புத் துறைக்கே சம்பந்தம் இல்லாத - ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை இந்தத் துறைக்குள் கொண்டுவந்தது எப்படி?'' என்று கேள்விகளை வரிசையாக அடுக்கிய அருண்ஷோரி, மேலும் பல விஷயங்களையும் எடுத்து வைக்கிறார்.
இதனால், டிராய் சேர்மன் பிரதீப் பைஜாலுக்கும் மாறனுக்கும் மோதல் நடந்தது. பைஜால் இந்த சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாறன் மறுத்தார். காரணம், ஒருங்கிணைந்த அணுகுமுறைச் சேவையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவையிலும் ஈடுபடலாம் என்று இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக மாறன் இந்த சிபாரிசை முடக்கத் திட்டமிட்டார்.
மூன்று விதங்களில் தயாநிதி மாறன் பதவிக் காலத்தில் தவறுகள் நடந்து இருக்கின்றன. ஒன்று, டிராய் சிபாரிசு இல்லாமல் ஏராளமான தொலைபேசி ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கியது. இரண்டா வது, ஏர்செல் டிஷ்நெட் பங்குகளை அப்போலோ நிறுவனத்தையும் துணையாக்கி மாற்றியது. மூன்றாவது, 2003-ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்கள் வழங்குவது குறித்து டிராய் கொடுத்த சிபாரிசை முடக்கியது. இதனை எல்லாம் முறையாக விசாரித்தால், உண்மைகள் வெளிவரும். இந்த வகையில் சி.பி.ஐ-யின் அடுத்த டார்கெட் மாறன்தான்!'' என்றார் அருண்ஷோரி.
இப்போது சி.பி.ஐ. முன்பு வாக்குமூலம் கொடுத்து, பழைய யுத்தத்தைப் புதுப்பித்து இருக்கிறார் சிவசங்கரன். ஒரு பக்கம் சி.பி.ஐ-யே சிவசங்கரனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தகவல்களைக் கறப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், தமிழக அரசியல் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கவும், அதையொட்டியே சி.பி.ஐ-க்கு சிவசங்கரன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எப்படியோ சி.பி.ஐ-யின் புதிய அலுவலகத்தின் ஒன்பதாவது மாடிவரை சிவசங்கரன் படியேறிவிட்டார். ஆரம்பத்தில் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியேயும்... பின்னர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை அவர் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ. 2007 முதல் 2010 வரையிலான விஷயங்களை மட்டும் உள்ளடக்கி விசாரணையை முடித்து மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப் போகிறது. அடுத்தக் கட்டமாக 2001 முதல் 2007 வரையிலான விசாரணையைத் தொடங்க வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், தயாநிதி மாறன் விவகாரம்தான் முன்னிலையில் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
இந்த சாட்சிகளோடு, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. சேகரிக்கும் எனத் தெரிகிறது. ஏர்செல் பங்குகளை வாங்கிய 'மேக்ஸிஸ்' அனந்த கிருஷ்ணனின் மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 'சன் டைரக்ட்'டில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டுக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் அனுமதியைப் பெறாமல் முடிவு எடுக்காது.
இதன்படி, மத்திய அரசின் எஃப்.ஐ.பி.பி. பிரிவுக்கு மனு வந்து, 2007 மார்ச் 2 மற்றும் 19-ம் தேதிகளில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக, சன் டைரக்ட்டில் ஆஸ்ட்ரோ முதலீடு செய்ததை 2007 ஜூலை ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மாறன் 2007 மே மாதம்வரை பதவி வகித்தார்.
''தொலைத் தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்த கிருஷ்ணனின் 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பிரபல அப்போலோ குழுமத்தின் பிரதாப் ரெட்டி குடும்பத்தினர் பெற்று உள்ளனர். இவர்கள் டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனத்தின் பேரில் அந்த 26 சதவிகிதப் பங்குகளைப் பெற்று உள்ளனர். இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட்ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அனந்த கிருஷ்ணனுக்காக மறைமுகமாக இந்தப் பங்குகள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் இதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஊழல் விவகாரங்களில் சிக்கி காங்கிரஸ் அரசாங்கத்தின் பெயர் கெட்டு வருவதைத் தொடர்ந்து ஒரு தடுப்பணை போடுவதற்கு பிரதமர் முயற்சித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், 'அனைத்து அமைச்சர்களும் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடத்தை விதிகள் ஏற்கெனவே இருப்பவைதான். என்றாலும், இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமையைக் காட்டுகிறது!
- சரோஜ் கண்பத்
நன்றி : ஜூனியர்விகடன்-19-06-2011