பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில்
“இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி”
என்ற தொடர் மிகவும் அழகானது. தமிழக வரலாற்றில் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகம், சமயம், கலாசாரம் ஆகிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளிலும் கவிந்திருந்த இருளை சம்பந்தர் அகற்றினார் என்ற முக்கியமான வரலாற்றுச் செய்தியை உள்ளடக்கியதாக இந்தப் புராணக் குறிப்பு உள்ளது.
களப்பிரர் காலம்:
தமிழகப் பண்பாட்டு வரலாறு சங்ககாலத்துடன் தொடங்குகிறது. தமிழ்ச் சங்கங்கள் இலக்கியத்தையும், கலைகளையும் வளர்த்த மதுரை மாநகரே இதன் மையமாக விளங்கியது எனலாம். இதன் பின்னர் ”இருண்ட காலம்” என்று பொதுவாகக் கருதப் படும் களப்பிரர் காலம் நான்கைந்து நூற்றாண்டுகள் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து பக்திப் பெருவெள்ளம் இந்த மண்ணிலே பாய்ந்தோடி, சைவ வைணவ சமயங்கள் செழித்து, பெரும் ஆலயங்களும், பேரரசுகளும் உருவாகும் காலகட்டம்.
இதில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று முந்தைய சமூக, அரசியல் வரலாற்றாசிரியார்கள் கூறியதற்கு இக்காலம் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கும் தெளிவான சான்றுகள் இல்லை என்று அவர்கள் கருதியது காரணம். ஆனால் இலக்கிய வரலாற்றை எழுதிய தமிழறிஞர்கள் வேதநெறியும், சைவசமயமும் மறையும் நிலையிலிருந்து, தமிழ் நூல்கள் உத்வேகத்துடன் எழாத காலமாதலால், இருண்ட காலம் என்று பெயரிட்டார்கள்.
பின்னர் களப்பிரர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப் பட்டன, அந்தக் காலகட்டத்தைப் பற்றி ஓரளவு நன்றாகவே நாம் இப்போது புரிந்து கொள்ள முடியும். களப்பிரர்கள் தமிழகத்திற்கு வெளியேயிருந்து இங்கே வந்தவர்கள். அவர்களது மூல இருப்பிடம் கர்நாடகத்தின் தற்போதைய மைசூர் பகுதியாக (சிரவணபெளகொளா) இருக்கலாம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து. 3ம் நூற்றாண்டு தொடங்கி 6-7ஆம் நூற்றாண்டுகள் வரை தொண்டை மண்டலம், சேர, சோழ, பாண்டிய நாடுகள் இவற்றை அவர்கள் கைப்பற்றி ஆண்டனர். அரசு அதிகாரம் மட்டுமின்றி தமிழகத்தின் சமயம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களிலும் இதன் தாக்கம் பெருமளவில் இருந்தது. சமணம், பௌத்தம் இரண்டும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவின.
களப்பிரர் காலத்தின் தொடக்கத்தில், இந்தத் தாக்கம் மிக ஆக்கபூர்வமாகவே இருந்த்து. திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற உன்னத இலக்கியங்கள் படைக்கப் பட்டன. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், அருகர் பள்ளியும், தவத்தோர் உறைவிடமும், கொற்றவைக் கோட்டமும்” அருகருகே அமைந்து அனைத்து சமயங்களும் பெருமளவில் மோதல்கள் ஏதுமின்றி, மிக்க தோழமையுடன் ஒன்றோடொன்று உறவாடி வாழ்ந்த காட்சியை சிலப்பதிகாரம் காட்டுகிறது. சமணரான இளங்கோ “நாராயணா என்னா நாவென்ன நாவே” என்று எந்த மனத்தடையும் இன்றி உள்ளம் உருகப் பாடிய சூழல் அது.
ஒரு கட்டத்தில் சமணம் அரசு மதம் என்ற அளவில் பல பகுதிகளில் நிலை பெற்றது. மகேந்திர வர்ம பல்லவன், கூன்பாண்டியன் போன்ற மன்னர்கள் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் அது நிலைநாட்ட முயன்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுச் சமணம், வேதநெறி, பௌத்தம் இரண்டையுமே பின்னுக்குத் தள்ளியிருந்தது. மிக இறுக்கமான தன்மையதாகி, ஒரு வெறித்தனமான போக்கைக் கொண்டதாகவும் ஆகி விட்டிருந்தது. காலத்தால் மூத்த திருக்குறள் தவிர்த்து பெரும்பாலான மற்றைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இக்காலத்தில் எழுந்தவை.
சம்பந்தரது காலமான 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டில் அப்பர் பெருமானின் பெரும்பணியால் வேதநெறியும், சைவ சமயமும் புத்துயிர் பெறத் தொடங்கியிருந்தன. சோழ நாடு குறுநில மன்னர்களால் ஆளப் பட்டு வந்தாலும், கலாசார ரீதியாக உயிர்த் துடிப்புடன் விளங்கியது. ஆனால் சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில், தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்ச்சியே அற்றுப் போகும் நிலை இருந்தது. சைவ நூல்கள் “பரசமய இருள்” என்று இந்த நிலையைத் தான் குறிப்பிடுகின்றன. அக்காலத்திய இலக்கியங்களில் இந்த சமூகத் தேக்கம் நேரடியாகவும், குறியீட்டுத் தன்மையுடனும் சொல்லப் படுகிறது. இதனை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இலக்கியம்:
இறையனார் களவியல் உரை என்ற தமிழின் முக்கியமான உரைநூல் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உரையின் தோற்றம் குறித்து இதில் வரும் ஒரு கதை முக்கியமானது. “ஒருகால் பாண்டி நாட்டைக் கடும் பஞ்சம் சூழ்ந்தது. மக்கள் உணவின்றித் தவித்தனர். புலவர்களையும், அறிஞர்களையும் போற்றிக் காக்கும் பாண்டிய மன்னன் அவர்களிடம் “புலவர்களே, இந்தப் பஞ்சகாலத்தில்,உங்களைப் புரக்கும் நிலையில் நான் இல்லை. அதனால் நீங்கள் வேறு இடங்களுக்குச் சென்று விடுங்கள். பஞ்சம் அகன்றதும் உங்களைத் திரும்ப அழைத்துக் கொள்கிறேன்” என்று வேண்டினான். பன்னிரண்டாண்டுகள் இந்தக் கொடும் பஞ்சம் நீடித்தது. பின்னர் வான்மழை பொழிந்து பஞ்சம் அகன்றது. அப்போது பாண்டிய மன்னன் தமிழகமெங்கும் தன் ஏவலர்களை அனுப்பி புலவர்களையும், நூல்வல்லாரையும் அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். எழுத்து, சொல், யாப்பு ஆகிய மூன்று துறைகளிலும் (தொல்காப்பியத்தில் இவை மூன்றும் ஒவ்வொரு அதிகாரங்கள்) வல்லவர்கள் கிடைத்து விட்டனர். ஆனால் ”பொருள்” நூல்வல்ல யாருமே கிடைக்கவில்லை. எழுத்து, சொல், யாப்பு முதலிய மொழியின் அனைத்துக் கருவிகளும் இருப்பதே பொருளை விளக்கும் பொருட்டுத் தானே, அந்தப் பொருள் பற்றிய ஞானமே அழிந்து விடுமோ? என்று மன்னன் துயருற்றான்,
அப்போது ஆலவாய் அண்ணலாகிய சிவபெருமானே பொருளதிகாரத்தை விளக்கும் 60 சூத்திரங்களை அருளி, அவற்றை மன்னனின் பீடத்திற்கடியில் மறைத்து வைத்தார். அந்த ஏடுகளைக் கண்டு அளப்பற்ற மகிழ்ச்சியுற்ற மன்னன், இவற்றிற்குப் பொருள் சொல்வாரைத் தேடுக என்று ஆணையிட இறைவனே உருத்திரசன்மன் (ருத்ர சர்மன்) என்னும் புலவனாய்த் தோன்றி, அந்தச் சூத்திரங்களை விளக்கவும் செய்தான். பொருள் ஆழ்ந்தது, அதனினும் மையமானது காதல் நெறியைப் பேசும் அகப்பொருள், அந்த அகப்பொருளிலும் சாரமானது களவியல் என்பதால் களவியல் உரையாக அது மலர்ந்த்து.
கல்லாடம் (3.10-16) இதனை மிக அழகாகக் கூறும் –
“உலகியல் நிறுத்தும் பொருள் மரபொடுங்க
மாறனும், புலவரும் மயங்குறு காலை
முந்துறும் பெருமான் முளைத்தருள் வாக்கால்
’அன்பின் ஐந்திணை’ என்று அறுபது சூத்திரம்
கடலமுதெடுத்துக் கரையில் வைத்தது போல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத்
தெளிதரக் கொடுத்த தென் தமிழ்க் கடவுள்”
இந்தக் கதையில் முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ”பொருள்” என்று இங்கே குறிப்பிடப் படுபவை வாழ்வியல் நெறிகள், சமூக மதிப்பீடுகள் ஆகியவையே. சங்க காலத் தமிழகம் காதல், வீரம், வேதவேள்விகள், சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வ வழிபாடுகள், இயற்கை வழிபாடு, இசை நடனம் முதலான கலைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தனது மையக் கொள்கைகளாகக் கொண்டது. களப்பிர சமணர்கள் தங்கள் மதக் கொள்கைகளுடன் இவை ஒத்துப் போகாதமையால் இந்த வாழ்வியல் நெறிகளையும், அவற்றைக் கூறும் நூல்களையும் அழித்தனர். அவை இறைவன் அருளால் புத்துயிர் பெற்றன என்பதைத் தான் குறியீட்டுத் தன்மையுடன் இந்தக் கதை விளக்குகிறது.
பதிற்றுப் பத்து, பரிபாடல் போன்ற சங்க நூல்கள் நமக்கு முழுமையாக்க் கிடைக்காமல், சில பகுதிகள் விடுபட்டுப் போயிருப்பதற்கும் இதுவே காரணம். இந்த மீட்சிக்குப் பிறகு எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்று தொகுப்புகள் உருவான போது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் இதில் ஒவ்வொரு நூலுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடலை எழுதி இணைத்தார் என்பர். இந்த வாழ்த்துப் பாடல்களில் அருகரும், புத்தரும் இடம்பெறவில்லை, அவை சிவன், திருமால் ஆகிய தெய்வங்களையே போற்றின என்பது குறிப்பிடத் தக்கது. திருஞான சம்பந்தப் பெருமான், பாண்டி நாட்டில் சமணத்தை வென்று சைவத்தை நிலைநிறுத்தியதற்குப் பின்னர் தான் இந்த மீட்சி ஒரு புதிய உத்வேகத்துடன் நிகழ்ந்தது.
மொழி:
மதுரையில் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழி வழக்கு தொலைந்து அயல் வழக்கே மிகுந்திருந்தது என்று சைவப் புராணங்கள் கூறுவதும் உண்மையான வரலாற்றுக் குறிப்பாகவே இருக்கக் கூடும். பிற்காலச் சமணர் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் சிலவற்றையும், காப்பியங்களையும் யாத்தனர் ஆயினும் தமிழை உயர்ஞானம் பகர்வதற்கு ஏற்ற மொழியாக அவர்கள் கருதவில்லை. அதனால் தான் சமண சமயத்தின் மையத் தத்துவ நூல்கள் தமிழில் எழுதப் படவே இல்லை, அவை “பாகதம்” எனப் பட்ட பிராகிருத மொழியிலேயே கற்கப் பட்டன. (ஒப்பீட்டில் பௌத்தம் தனது தத்துவ வாதத் தரப்பைத் தமிழில் மணிமேகலையில் மிகத் தெளிவாக முன்வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது).
தமிழ் மட்டுமல்ல, வேதநெறியின் மொழியான சம்ஸ்கிருதமும் சமணர்களால் ஒதுக்கப் பட்டது. “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என்றும்,
“ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
பாகதத்தொடு இடித்துரைத்த”
என்றும் தெளிவாகவே சம்பந்தர் இதனைக் கூறுகிறார். சம்பந்தர் தமது ஒவ்வொரு பதிகத்திலும் “தமிழ் விரகன்”, “தமிழ் முனிவன்” தமிழ்ஞானசம்பந்தன் என்று வெளிப்படையாக்க் கூறிக் கொள்வது, தமிழை இழிவாகக் கருதிய சமணர்களுக்கு சவால் விடும் போக்கில் இருக்கிறது என்றே கூறலாம்.
இசை:
வரலாற்றில், நாகரீகத்தில் மேலோங்கிச் செல்லும் சமூகங்கள் எல்லாம் நுண்கலைகளைப் போற்றி வளர்ப்பதைக் காணமுடியும். சங்ககாலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்தனர். பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்.
ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையின் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மிக அதிகமாக பிற்காலச் சமணம் வலியுறுத்தத் தொடங்கியது. இசை என்கிற கலை மேன்மையான விஷயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாக, மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விஷயமாகவே சமண இறையியலில் கூறப் பட்டது. அதனால் களப்பிரர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை ”இழிசினர்”என்ற கீழ்ச்சாதியினருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.
காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்து ஏறக்குறைய அழிந்தே போகும் தறுவாயிலிருந்தார்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ”பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ் இசைப்பவர்கள் இல்லையே” என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம் - “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னா” என்று புலம்புகிறது. இஸ்லாமியக் கொடுங்கோலன் ஔரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான். இசையின் மரணம் (“Death of Music”) என்று வரலாற்று ஆசிரியர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போதும் இசை வன்முறைக் கோட்பாடுகள் மூலம் தடை செய்யப் பட்டது. இது போன்று வன்முறையும், கொடுங்கோன்மையும், வெறுப்பும் இல்லாத போதும், கருத்தளவிலும், நடைமுறையிலும் களப்பிரர்கள் தமிழிசையை அழித்த செயலை இதற்கு ஈடாகவே கருத இடமிருக்கிறது.
சைவ சமயப் புராணச் செய்திகள் இந்த நிலையிலிருந்து இசை மீண்டெழுந்ததை உறுதி செய்கின்றன.
குழந்தை சம்பந்தர் கையைத் தட்டித் தாளம் போடும்போது அவர் கை நோகும் என்று மனமிரங்கி, அன்னை பார்வதி தங்கத்தால் செய்த “பொற்றாளத்தை” அருளினாள் என்கிறது பெரியபுராணம். அழிந்துகொண்டிருந்த தாளம் பற்றிய இசை ஞானம் இறையருளால் காப்பாற்றப் படுகிறது என்ற வரலாற்றுச் செய்தி இது.
இதே போன்று, திருநீலகண்ட யாழ்ப் பாணர் புராணத்தில், மறைந்து போய்விட்ட யாழிசையை சிவனருளால் தன் குடும்பம் காப்பாற்றி வருவதாக அவர் கூறுகிறார். யாழிசையைக் கேட்க ஆளில்லையே என்று வருந்தி அலைகையில் அவர் சம்பந்தரைச் சந்திக்கின்றார். பின்னர் அவர்கள் இருவரது இறுதிக் காலம் வரை அவர்கள் இணைந்தே தமிழகம் முழுவதும் உள்ள தலங்களுக்குப் பயணிக்கிறார்கள்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரைக் கோயிலுக்குள் சென்று சுருதி மீட்டும்போது தரையின் ஈரப் பதத்தால் சுருதி கலைகையில், இறைவனே தோன்றி அவர் அமரவும், யாழை வைக்கவும் பொற்பலகை இடுமாறு ஆணையிடுகிறான். வேறொரு தலத்தில் புற வாயிலாக வந்து கோயிலுக்குள் வழிபட்டு வந்த யாழ்ப்பாணரை, நேர்வழியாக சம்பந்தர் அழைத்துச் செல்கிறார். திருநீலநக்கர் என்ற வேதியரது இல்லத்திலே சென்று சம்பந்தர் தனது அடியார் குழாத்துடன் தங்குகிறார். அப்போது இழிகுலத்தவராகக் கருதப் பட்டு வந்த யாழ்ப்பாணருக்கு தனது யாகசாலையின் பக்கலிலே இடம்கொடுத்துத் தங்கவைக்கிறார் அந்த வேதியர். அப்போது எரிந்து கொண்டிருக்கும் யாகத்தீயும், அந்தச் செயலை ஆமோதிப்பது போல வலப்புறமாக சுழித்து சுடர்விட்டு எரிகிறதாம்!
இந்தப் புராணச் செய்திகள் அனைத்தும் பாணர்கள் தாங்கள் இழந்த சமூக அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதையே சுட்டுகின்றன. “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க” சம்பந்தர் திருஅவதாரம் செய்தார் என்று பின்னாளில் சேக்கிழார் பாடுகிறார். ஆனால் சம்பந்தருக்கு சிலகாலம் கழித்து வந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள், அவர் இசையையும், தமிழையும் வளர்த்தவர் என்றே பாடுகிறார். ”நல்லிசை ஞானசம்பந்தனும்” என்றும் “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்” என்றும்
“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக்கிரங்கும்
தன்மையாளனை”
என்றும் சுந்தரர் தேவாரம் சுட்டுகிறது.
இப்படி மீண்டெழத் தொடங்கிய தமிழிசை மறுபடியும் செழித்து வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் பிடித்தன என்றே சொல்லவேண்டும். “திருமுறை கண்ட புராணம்” இன்னொரு செய்தியைச் சொல்லுகிறது. இராஜராஜ சோழ மன்னன் காலத்தில் (11-ஆம் நூற்றாண்டு) நம்பியாண்டார் நம்பிகள் தில்லையில் தேவாரப் பாடல்களின் சுவடிகளைக் கண்டெடுத்தபோது அவற்றைப் பாடும் பண்முறைகளை வரையறை செய்ய விரும்பினார். அப்போது தேவாரப் பாடல்களின் பண்முறைகள் அறிந்தவர்கள் இருக்கிறார்களா என்று நாடெங்கும் வலைவீசித் தேடியபோது ஒருவரும் அகப்படவில்லை. பாணர்கள் வேறுவேறு தொழில்களுக்குச் சென்று விட்டனர். மன்னன் மனம் வருந்தி இறைவனை வேண்ட, பண்முறை அறிந்த பாடினி என்ற இளம்பெண் எருக்காத்தம்புலியூர் என்ற தொண்டைநாட்டுச் சிற்றூரில் கிடைத்தாள். இவள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாழ்ந்த அதே ஊரில், அவர் மரபில் வந்தவள். இவள் வந்து தேவாரப் பாடல்களை அவற்றுக்கு உரிய பண்களுடன் பாடினாள். அவையே பின்னர் தேவாரப் பண்முறைகளாக வகுக்கப் பட்டன. இசை, நடன மரபுகள் இதுபோன்று மங்கிவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே பின்னர் வந்த சோழமன்னர்கள் இந்தக் கலைகளைப் பாதுகாப்பதற்காக ஏராளமான நிவந்தங்களை வழங்கினார்கள்.
பெண்டிர் நிலை:
வேத நெறி தழைத்த காலத்தில் பெண்கள் கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கினர். இந்துமதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்களில் மிகப் பழமையானது ரிக்வேதம். ரிக்வேத மந்திரங்களை மெய்யுணர்வில் கண்டறிந்த ரிஷிகளை “மந்திர திரஷ்டா” என்று அழைப்பர், இந்துமதத்தின் ஆதிகுருநாதர்கள் இவர்களே. இறைவாக்கினரான இவர்களில் 26 பேர் பெண் ரிஷிகள். உபநிஷதங்களிலும் கார்கி, மைத்ரேயி என்று பிரம்மவாதினி என்றழைக்கப் படும் ஞானப் பெண்களைக் காண்கிறோம்.
சங்க்காலத் தமிழ் இலக்கியத்திலும் ஔவையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், நச்செள்ளையார், காக்கை பாடினியார் என்று 30க்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப் படுகின்றனர். ஔவை போன்று மன்னர்களுக்கே அறிவுரை கூறும் அளவுக்கு அவர்கள் நிலை இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த நானூறு ஆண்டுகளில் பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட களப்பிரர் கால இலக்கியங்களில் பெண்புலவர் ஒருவர் கூட இல்லை. பெண்களின் நிலையும் இவ்விலக்கியங்களில் அவ்வளவு சிறப்பாகக் குறிப்பிடவில்லை.
இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் சமண சமயம் பெண் பிறவியைக் கீழானதாகக் கருதியதே. சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் போன்று விதிவிலக்காக இருந்த சமணப் பெண் துறவியரும் பிற்காலத்தில் இல்லாது போனார்கள். பெண்கள் மோட்சத்திற்கு அதிகாரிகள் அல்லர் என்ற கருத்து மேருமந்தரபுராணம், அருங்கலச்செப்பு, சூளாமணி, சீவகசிந்தாமணி போன்ற சமண நூல்களில் மிகத் தெளிவாகவே குறிப்பிடப் படுகிறது. நல்வினைப் பயனாக அவர்கள் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து அப்போது தான் மோட்சத்திற்குத் தகுதியுள்ளவர்களாவார்கள்.
இந்த சமயக் கோட்பாட்டின் தாக்கத்தால், நடைமுறையில் பெண்கல்வியும், சமூகத்தில் பெண்களுக்கு இருந்த உயர் இடமும் வீழ்ந்தது என்றே கூறலாம்.
சம்பந்தரது வரலாற்றில் வரும் சில அற்புதச் செயல்களைப் பார்க்கலாம். திருப்பாச்சிலாச்சிரமம் என்ற ஊரில் கொல்லி மழவன் என்ற வணிகனின் மகள் ”முயலகன்” என்ற வலிப்பு நோய் வந்து இறந்து விடுகிறாள். அங்கு வரும் சம்பந்தர் “மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே” என்று இறைவனைப் பாடி அந்தப் பெண்மகவை உயிர்ப்பிக்கிறார். திருமருகல் என்ற திருத்தலத்தில், ஒரு வணிகப் பெண், தன் காதலன் பாம்பு கடித்து இறந்ததால் துயருற்று அழுகிறாள். தன் தந்தை வாக்குப் படி மணம் செய்து தராமல் வணிகரை ஏமாற்றியதால், வீட்டைத் துறந்து வணிகரின் வாழ்க்கைத் துணையாக வேண்டி அவருடன் புறப்பட்டு வந்த சுதந்திர உணர்வு கொண்ட பெண் இவள். அவ்வழியாக வரும் சம்பந்தர் இந்தப் பெண்மீது கருணை கொண்டு இறைவனைப் போற்றிப் பாட, வணிகர் உயிர் மீண்டு வருகிறார்.
“சடையா எனுமால், சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருமா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே”
என்று ”பெண் வருந்துவதை நீ பார்த்திருப்பாயோ” என்று இறைவனிடம் மன்றாடுகிறார் சம்பந்தர்.
பின்னர் திருமயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த பூம்பாவை என்னும் இளம்பெண்ணை, அவள் சாம்பல் இட்ட குடத்திலிருந்து உயிர்ப்பிக்கும் அற்புத்தையும் நிகழ்த்துகிறார். ஒவ்வொரு மாதத்தின் திருவிழாக்களையும் கூறி, இவற்றைக் காணாமல் “போதியோ பூம்பாவாய்” என்று அழைக்கும் இந்த அழகிய பதிகம், வாழ்க்கையின் இன்பங்களைத் துய்க்காமல் இந்தப் பெண் மறைந்து விட்டாளே என்ற ஆற்றாமையையும் உள்ளடக்கியது.
பாண்டி நாடு சென்ற சம்பந்தர், மங்கையர்க்கரசியாரை சந்திக்கிறார். அந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திடப் போகும் பெண் அவள் என்பதை அறிந்து கொள்கிறார். இறைவனையும், அடியார்களையும் வாழ்த்திப் பாடிய தம் தமிழால்,
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவ”
என்று அரசியைப் பலவாறு சிறப்பித்துக் கூறுகின்றார்.
இந்தப் புராண வரலாறுகள் எல்லாம் பெண் மகவை உயிர்ப்பிப்பதாகவும், பெண்ணின் துயர் தீர்ப்பதாகவும், பெண்ணரசியைப் போற்றுவதாகவும் இருப்பது குறிப்படத்தக்கது. சைவ சமய எழுச்சியில், பெண்மை தான் இழந்த உன்னதத்தை ஓரளவு திரும்பப் பெற்றது என்ற வரலாற்றுச் செய்தியையே இவை கூறுகின்றன.