பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின்தொகையாகவே உள்ளது//
இதில் என்ன சொல்ல வர்றீங்க. கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தை போதித்து, அதன் அடிப்படையிலேயேததன் இயங்குகிறதுண்ணா? அது அதிக பட்ச claimணு தோணுது.

1. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்ணை அடிமையாக்கி ஆள்வது. ஆனால் பெண்ணுக்கு சில உரிமைகள் மறுக்கப்படுவது கொடிய பெண்ணடிமைத்தனம் என முடியுமா?

2. அந்த வரியில் கத்தோலிக்கம் பெண்ணடிமைத் தனத்தின் மேலேயே கட்டி எழுப்பப்பட்ட ஒரு நிறுவனம் போல ஒரு தோற்றம் இருக்குத் (”தொகையாகவே”). பெண்ணுக்கு சம உரிமைகள் வழங்காத நிறுவனமாக மேற்கில் கத்தோலிக்கம் இருக்கிறது எனச் சொல்லலாம் ஆனால் பெண்ணடிமைக் கருத்துக்களின் தொகையயகவே (தொகுப்பாகவே?) இருக்குதா?

இதை எழுதியதால் நான் தீவிர கத்தோலிக்கன் என எண்ணிவிட வேண்டாம் :) Far from it.

[இந்தப்பதிலை போடுவதற்கு முன்னதாக ஒரு சிறு குறிப்பு. ஏதாவது அரைவேக்காட்டு பத்திரிகைக்காரர் இதை எடுத்து ‘கத்தோலிக்கர்களை இழிவுபடுத்துகிறாரா ஜெயமோகன்?’ என்று செய்தி வெளியிடலாமென்ற அச்சத்தால். இந்த இணையதளமே  இக்கேள்வியைக் கேட்டிருக்கும் சிறில் அலெக்ஸால் என் பொருட்டு நடத்தப்படுவதுதான்]

அன்புள்ள சிறில்,

ஒரு மதத்தின் கட்டுமானம் மூன்று அடிப்படைகளினால் ஆனது.

1. அதன் படிமக் கட்டுமானம் . அதாவது அதன் அடிப்படை மன உருவகங்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் மற்றும் குறியீடுகள்

2. அதன் தத்துவ தளம். அந்த படிமக் கட்டுமானத்தைக் கொண்டு பிரபஞ்ச இயக்கத்தை தர்க்க ரீதியாக விளக்கும் முயற்சி இது

3. அதன் நடைமுறை. இது வழிபாட்டு முறை மற்றும் அன்றாட வாழ்க்கைமுறை என இரு தளம் கொண்டது.  அம்மதம் அன்றாட நிகழ்வாக இந்த இருதளங்கள் வழியாகவே இயங்குகிறது.

இவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகவே நமக்குத் தெரிகின்றன என்றாலும் பிரிக்க முடியாதவை அல்ல. இவை வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவையாக இருக்கலாம். இவற்றின் வளர்ச்சிப்போக்கும் தனித்தனியானதே. ஒரு மதத்தின் படிம கட்டுமானம் அது முளைத்த நிலத்தின் தொன்மையான வாழ்க்கைமுறையில் வேர்கொண்டிருக்கும்.

மதத்தில் வரும் வளர்ச்சிப்போக்குகளை கடைசியில் இருந்து எதிர்த்திசையில் பார்க்க வேண்டும். மதத்தின் வழிபாட்டு முறை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக கேரள ஆலயங்கள் எல்லாமே தாந்த்ரீக வழிபாட்டு முறை கொண்டவை. அவையெல்லாம் இந்த இருபத்தைந்து வருடங்களில் மெல்ல மெல்ல அர்ச்சனை வழிபாடு நோக்கி நகர்ந்திருப்பதைக் காண்கிறேன். இங்குள்ள நட்டார் சிறுதெய்வங்கள் அனைத்துமே ஆகம வழிபாட்டுக்குள் வந்த படியே உள்ளன. கத்தோலிக்க மதத்தை எடுத்துக் கொண்டால் பெந்தேகொஸ்தே சபையின் போட்டியை எதிர்கொள்ள அவர்களும் ‘கரிஸ்மாட்டிக் செண்டர்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி உபவாசஜெபம், எழுப்புதல் கூட்டம் போன்ற முறைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அதேபோல வாழ்க்கைநெறிகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன

இன்னும் மெதுவான மாற்றம் தத்துவத்தில் நிகழ்கிறது. இப்போது நம் மதங்களில் நிகழ்வது பொதுமையாக்கும் போக்கு. சைவ,வணைவ மதங்கள் இணைந்து ஒரே மதத்தில் உள்ள கூறுகளாக ஆகின்றன. அதேபோல கிறித்தவ சபைகளில் ஒரு பொது இறையியலுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஆனால் அடிப்படையான படிம தளத்தில் மிக மெல்ல நூற்றாண்டுகளாகத்தான் மாற்றம் நிகழ முடியும். பல்வேறுவகை படிமங்களின் உரையாடலுக்கு வாய்ப்புள்ள இந்துமதங்களில் இந்த மாற்றம் ஒப்புநோக்க மேலும் எளிதானது. இறுக்கமான கட்டுமானம் கொண்ட தீர்க்கதரிசி மதங்களில் அது மிக மிக அரிதாகவே நிகழ முடியும்.

*

ஒரு மதத்தின் இயல்பை அடிப்படைப் படிமங்களை வைத்து மதிப்பிடுவதே சிறந்ததாகும். கத்தோலிக்க மதம் பெண்ணடிமைத்தனம் மீது கட்டப்பட்டது என்ற என் கருத்து அப்படி உருவாக்கப்பட்டது. கிறித்தவ மதத்தின் அடிப்படைப் படிமங்களில் மிக முக்கியமானவை இரண்டு பெண்ணின் இரண்டாமிடத்தை வலுவாக நிறுவுகின்றன. ஒன்று ஆதாமின் விலா எலும்பில் இருந்து பெண் உருவானாள் என்பது. இரண்டு ஆதிபாவத்திற்கு பெண்ணின் சபலம் காரணமாக அமைந்தது என்பது.

இந்த அடிப்படைப் படிமத்தை எப்படி மதம் கடந்து செல்ல முடியும்? ஒன்று அதற்கு மாற்றாக  பெண்சமத்துவத் தன்மை கொண்ட வேறு ஒரு அடிப்படைப் படிமம் முன்வைக்கப்படலாம். ஆனால் கிறித்தவ மதத்தில் அது சாத்தியமே அல்ல. இரண்டாம் வழி அந்த அடிப்படைப் படிமத்துக்கு வேறு வகையான விளக்கம் அளிக்கப்படலாம். அடிப்படைகளில் அழுத்தமான பிடிவாதம் கொண்ட கத்தோலிக்க மதம் அதை எளிதில் அனுமதிக்கப்போவதில்லை.கருக்கலைப்பு உரிமை, சொத்துரிமை போன்றவை நடைமுறை சார்ந்தவை. அவற்றை மாற்றுவதனால் மதத்தின் அடிப்படை மாறுபடுவதில்லை.

பொதுவாக பண்டைய மதங்கள் அனைத்துமே பெண்ணடிமைத்தன்மை கொண்டவையே. அதில் உச்சம் என சமண மதத்தையே சொல்ல வேண்டும். அதில் பெண்ணுக்கு வீடுபேறு அடையும் வாய்ப்பு கூட இல்லை. ஆனால் ஒரு மதத்தின் அடிப்படைப் படிமம் பெண்ணடிமைத்தனம் சாராததாக இருக்கும்பட்சத்தில், அதை மறு விளக்கமளிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அது மறுபிறப்பு எடுத்து காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை அடையலாம். அதற்கு கத்தோலிக்க மதத்தில் என்ன வாய்ப்பு என யோசிக்கலாம்.