வெளி நாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் ஆரம்பிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித் திருக்கிறது. வெளி நாட்டு நிறுவனங்களை சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவில் அனுமதிக்கலாம் என அறிவித்த மத்திய அரசை எதிர்த்து நடந்த போராட்டத் தால், மத்திய அரசின் கூட்டணியில் உள்ள தி.மு.க., திரிணாமூல் காங்கிரசு போன்றவர்களின் எதிர்ப்பால் மத்திய அரசு அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் இதே அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெளி நாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் ஆரம்பிக்கலாம் எனும் மத்திய அரசின் அனுமதியை எதிர்த்தும் போராட் டங்கள் நடத்தவேண்டும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார் . இதற்காகவும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச் சனைக்காகவும் மதுரையில் 17.12.2011 அன்று ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று அறிவித் திருக்கின்றார்.
தாராளமயம் பெற்றெடுத்த மற்றொரு குழந்தைதான் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் 1990 களில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற முழக்கத்தோடு நரசிம்மராவ் புதிய பொரு ளாதாரக் கொள்கையை அறிவித்தார். ஏதோ மிகப்பெரிய புரட்சி நடப்பதைப் போலவும் , இந்திய நாட்டில் வறுமையும் ஏழ்மையும் காணாமல் போய்விடும் என்றும், கேட்டவுடன் எல்லோர்க்கும் கேட்கும் பொருள் எல்லாம் கிடைக்கும் எனவும் அன்று கூறப்பட்டது . வருடங்கள் 20 ஓடின, வந்ததா வசந்தம் ஏழைகளின் வாழ்வில்? வளம் பெருகியதா என்றால், இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்பதுதானே இன்றைய பதில் .
பி.பி.சி.நிறுவனம் 9-12-11 அன்று தெரிவிக்கும் செய்தியைப் பாருங்கள் இந்தியாவில் மக்களின் வருமானத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் இரு மடங்காகி யுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.
இந்த விடயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.
நாட்டின் மிகவும் அதிகமான வருமானத்தைப் பெறும் முதல் 10 வீதத்தினர், மிகவும் குறைவான வருமானத்தைப் பெறும் 10 வீதத்தினரை விட 12 மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்றும் 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 6 மடங்காக மாத்திரமே இருந்தது என்றும் பொரு ளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கூறியுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வறிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. அதாவது 121 கோடி இந்திய மக்களில் 42 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாய்க்கும் குறைவான வருமானத்திலேயே வாழ் கிறார்கள். பிரேசில், இந்தோனேசியா மற்றும் சில குறியீடுகளின் அடிப்படையில், அர்ஜண் டீனா ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களில், இந்த வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக, இந்த அறிக்கை கூறுகிறது." ஏற்றத்தாழ்வு அதிகமாகி இருக்கிறது, ஏழைகள் அதிகமாகி இருக்கின்றார்கள், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், இதுதான் தாராளமயம், தனியார் மயத்தின் விளைவு இந்தியாவில். இந்த தாராளமயத்தின் ஒரு பகுதியாக 1995-லே அறிமுகப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் வெளி நாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது என்பதாகும். இத்திட்டத்தினை ஆதரிப் பது கொள்ளிக் கட்டையை எடுத்து நமது தலையில் நாமே சொரிந்து கொள்வதற்கு ஒப்பானதாகும்.
பல்கலைக் கழகங்களும் இடஒதுக்கீடும் அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இன்னும் முழுமையாக வரவில்லை . உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மேல் சாதிக் காரர்களால்தான் பெரும்பாலும் நிரப்பப்படுகின்றன. மாணவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ளே செல்வது இப்போதுதான் மிகக் குறைந்த சதவீத அளவில் நடக்கிறது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் வந்தால் நம் நாட்டு சட்டப்படி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரும்பாடு பட்டு வாங்கித் தந்த சமூக நீதி உயர்கல்வி நிறுவனங்களில் குழி தோண்டிப் புதைக்கப்படும் . சமச்சீர் கல்வியை வேண்டாம் என்று சொல்பவர்கள் , வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் வரவேண்டும் என்று சொல்லக்கூடும் , ஏனெனில் தாங்கள் கடவுளின் முகத்திலிருந்து நேரடியாக வந்தவர்கள் என நினைப்பவர்கள் அவர்கள். சமூக நீதித் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் முழுமூச்சுடன் இந்த வெளி நாட்டுப் பல்கலைக் கழகம் என்னும் ஒட்டகத்தின் கழுத்து உள்ளே நுழைவதை ஏற்கக்கூடாது .
நோக்கம் என்ன ?
வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவுக் குள் வரவேண்டும் எனத் துடிப்பதன் நோக்கம் என்ன ? இங்கிருக்கும் மாணவர்களுக்கு சேவை புரிந்தே ஆவேன் எனும் பிடிவாதமா ? இல்லையே - வியாபார நோக்கம்தானே . நாம் சொன்னால் கூட ஏதாவது சொல்வார்கள் . நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன் சொன்னாரே - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கட்ராமன் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வேதியியலில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்நிலையில் லண்டனிலுள்ள இந்திய பத்திரிகை யாளர்கள் சங்கம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: கேம்பிரிட்ஜ் போன்ற தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை அமைப்ப தில்லை. ஆனால் வேறு சில பல்கலைக் கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பது வியாபார நோக்கத்தில்தான். 31-03-2010 பத்திரிக்கைகளில் வந்த செய்தி. வெளி நாட்டில் வசிக்கும், வெளி நாட்டு பல்கலைக் கழகங்களை நன்றாக அறிந்த அறிஞரின் கூற்று இது. மீன் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு பார்த்து வலையை வீசுவது போல, உலகிலேயே இந்தியாவில்தான் மாணவர்கள் மிக அதிகமாக இருக்கின்றார்கள் .அந்த மாணவர்களிடமிருந்து கொள்ளை லாபம் அடிக்க லாம் என்பதுதானே வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களின் நோக்கம்.
சில்லறை வர்த்தகத்தில் வந்து கொள்ளை லாபம் அடிப்பது என்பதுபோலத்தானே , கல்வி நிறுவனங்கள் மூலமாக கொள்ளை லாபம் அடிப்பது என்பது. இதனை தடுக்க மாணவர்கள் முன்வர வேண்டும் . ஈரோட்டில் மாணவர்கள் 8.12.11 அன்று போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள், நாடு முழுவதும் மாணவர்களும் பொது மக்களும் அரசியல் அமைப்புகளும் வீதியில் இறங்கிப்போராடவேண்டும்.
கல்வித்தரம் உயருமா ?
வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வந்தால் கல்வித்தரம் உயருமா ? எனும் கேள்வியை தமிழர் தலைவர் அவர்கள் தனது 9.12.11 அறிக்கையில் கேட்டுள்ளார் அதுமட்டுமல்ல அது போலித்தனமான, உண்மைக்கு மாறான வாதம் என்பதனையும் சுட்டிக் காட்டி விளக்கம் அளித்துள்ளார். வெள்ளைக்காரன் வந்து சொல்லிக் கொடுத்தால் எல்லாம் புரிந்து விடும் என்பது கற்பனையே தவிர எதார்த்தம் அல்ல. இங்கிருக்கும் மனிதர்களை, மனிதர்களின் சூழலை , மனிதர்களின் தேவையை புரிந்து கொள்ளாமல் சொல்லிக் கொடுப்பது என்பது எதிர் கலாச்சார விளைவுகளையே ஏற்படுத்தும்.உறுதியாக சொல்லலாம், கல்வித்தரம் உயராது, அதற்கு மாற்றாக வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் நிகழ்வதுபோல துப்பாக்கியால் சக மாணவர்கள் , ஆசிரியர்கள் வெறிபிடித்த மாணவர்களால் சுடப் படலாம். கலாச்சார சீரழிவுகள் நிகழலாம்.கல்வித்தரம் உயராது, கல்விக்கட்டணம் கட்டாயமாக உயரும் . மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் 50 பல்கலைக் கழகங்களில் சில கூட புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் இல்லை. யேல் போன்ற புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் இங்கு வர விரும்பவும் இல்லை . யாருக்காவோ, எதற்காகவோ அனுமதி அளிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களாக அவை இருக்கலாம்
எந்த நாட்டுச் சட்டம் ?
வெளி நாட்டு பல்கலைக் கழகங்களை முறைப் படுத்த எந்த விதமான சட்ட திட்டங்களும் நம் நாட்டில் கிடையாது . அப்படியே ஏற்படுத்தப்பட்டாலும் அவைகள் கட்டுப்பட வேண்டும் என அவசியம் கிடையாது.நாம் சொல்லவில்லை மத்திய அமைச்சரே சொல்கின்றார் பாருங்கள் . டில்லி: இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் அரசிடம் இல்லை என்று மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்து மத்திய மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி, இந்தி யாவில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை வரைமுறைப் படுத்துவதற்கான சட்டம் என்று எதுவுமில்லாத நிலையில், அந்த வெளிநாட்டுப் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அரசிடம் இல்லை." என்று அமைச்சர் கூறினார். 08-12-11 பத்திரிக்கை செய்தி. மாணவர்களை எப்படி அனுமதிப்பது, எவ்வளவு கட்டணம், மாணவர்களை சேர்ப்பதற்கு தகுதி என்ன என்பதை யெல்லாம் வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களே முடிவு செய்யும் என்கின்றனர். இது சரியா? நாட்டில் முறையான அமைப்புக்கள் இருக்கும்போதே போலிச் சான்றிதழ்கள் நடமாடுகின்றன. வெளி நாட்டு பல்கலைக் கழகம் என்ற பெயரில் எவரும் சான்றிதழ்கள் கொடுக்கும் நிலையும் , அதனை சரிபார்ப்பதென்றால் எப்படி சரி பார்ப்பது என்னும் குழப்பமும் வராதா?
திவாலாகும் வங்கிகள்
அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரிய பெரிய வங்கிகள் என்பவையெல்லாம் திவாலாகும் கதையினை செய்தித்தாள்களில் பார்க்கின்றோம். பங்கு வர்த்தகம் எப்படி ஒரு நிலையில்லாத தன்மையில் போகின்றது என்பதனைப் படிக்கின்றோம். சூதாட்டத்தில் சிலர் பல இலட்சங்களை இழப்பதுபோல் பங்கு ஊக வர்த்தகத்திலும் சிலர் பல இலட்சங்களை இழப்பதைப் பார்க்கின்றோம். அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை சந்திக்கும் இந்த வேளையில் அவர்களை அழைத்து எங்கள் நாட்டில் பல்கலைக்கழகம் தொடங்கு என்று அழைப்பது தேவைதானா? நியாயம்தானா? ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்னும் புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் எப்படியெல்லாம் இந்தோனேசியாவை, பனாமாவை மற்றும் பல நாடுகளை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துப்போகி றோம் என்னும் ஆசைகாட்டி சீரழித்தோம் என்பதை தன் வாக்குமூலமாக அளித்திருப்பாரே ! இவர்கள் படித்ததில்லையா ? படிக்கவில்லையெனில் படிக்கச் சொல்ல வேண்டும். அப்போதுதான் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்னும் பெயரில் நாடும் , மாணவர்களும் , பொருளாதாரமும் சீரழிக்கப்படும் என்பதனை உணர்வார்கள் .
அன்னியச் செலவாணி குறையுமா ?
வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்கள் வெறும் கல்வியை மட்டும் மனதில் வைத்துச் செல்வ தில்லை. வெளி நாட்டுச் சூழல், வெளி நாட்டில் படித்துக்கொண்டே வேலை பார்த்து பணம் சம்பாதிக் கும் நோக்கம் போன்றவற்றிற்காக செல்கின்றனர். சிலர் அப்பா, தாத்தா சேர்த்து வைத்திருக்கும் சொத்தை என்ன செய்வதென்று தெரியாமல் செலவழிக்கவும் வெளி நாட்டுக்கு படிக்கச் செல்கின்றனர். இவர்கள் எல்லாம் இந்தியாவில் வெளி நாட்டுப் பல்கலைக் கழகம் வந்தாலும் வெளி நாட்டில்தான் சென்று படிப்பர்.எனவே அன்னிய செலவாணி குறையாது.
பல்கலைக் கழகத் தரப்பட்டியல்
உலகில் உள்ள பல்கலைக் கழகங்களை தர வரிசைப் படுத்தி 500 பல்கலைக் கழகங்களைப் பட்டி யலிட்டுள்ளனர். அதில் இரண்டுதான் இந்தியாவில் உள்ளது, எனவே தரத்தை உயர்த்த வெளி நாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிக்கிறோம் என்று சொல்கின்றனர். இவ்வளவு தூரம் வளர்ந்த ஜப்பான் பல்கலைக் கழகங்கள் நான்குதான் இப்பட்டியலில் வருகின்றன. சீனா பல்கலைக் கழகங்கள் இப்பட்டியலில் 18 இருக்கின்றன என்று சொல்கின்றனர். சீனாவைப் போல இங்கும் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றுதானே பார்க்க வேண்டும் , அதனை விடுத்து வெளி நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி என்பது சரியாகுமா? என் வீட்டில் இருக்கும் பையன் நோஞ்சானாக இருக்கிறான், எதிர்த்த வீட்டு பையன் வளமாக இருக்கிறான் என்றால், வளமாக இருப்பதற்கு அந்தப்பையன் வீட்டில் என்ன கொடுக்கிறார்கள் என்பதனைப் பார்த்து , என் வீட்டுப் பையனுக்கும் கொடுப்பதுதானே சரியாக இருக்கும், அதனை விடுத்து விட்டு எதிர்வீட்டுப் பையனை என்வீட்டில் வைத்துக் கொள்கிறேன் என்பது எப்படி சரியாக இருக்கும் ?
அரசின் மோசமான திட்டம்
தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்று சொல்லி இருக்கும் வேலை வாய்ப்புக்களை கெடுத்து நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கும் மோசமான மத்திய அரசின் மோசமான திட்டங்களில் ஒன்றுதான் வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி என்பதாகும். இதனை முழுமூச்சில் எதிர்த்து தடுக்கவேண்டும். உயர் கல்வி என்பது இப்போது 12 சதவீதம்தான் இருக்கிறது, அதனை 30 சதவீதமாக்க வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி என்பது கண்துடைப்பு வாதமாகும் . பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்காக சாதாரண வீட்டுப் பிள்ளைகளின் உயர்கல்வியை காவு கொடுக்கும் திட்டம் இத்திட்டமாகும். இதனை எந்த விலை கொடுத்தும் தடுக்க வேண்டும். வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகம் போல மக்கள் பல்கலைக் கழகமாக பல்வேறு பல்கலைக் கழகங்களை உருவாக்குதல் மூலமாக உயர் கல்வி 30 சதவீதம் என்பது சாத்தியமாகும் . சாதாரண வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் படித்து உயர் கல்வியும் ,உயர் நிலையும் பெறுவது சாத்தியமாகும்.