New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வில்லாதிவில்லன் -பாலா ஜெயராமன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வில்லாதிவில்லன் -பாலா ஜெயராமன்
Permalink  
 


டிராகுலா

ஒரு வில்லன் இல்லாமல் எந்தச் சரித்திரமும் முழுமையடைவதில்லை. முற்றிலும் பிழை என நாம் கருதும் ஒரு மனநிலையை மனிதர்களுள் சிலர் எப்படி அடைகிறார்கள்? எம்மாதிரியான சந்தர்ப்ப சூழல்கள் ஒருவனை அப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளுகின்றன? காலம்தோறும் உருவாகி வந்திருக்கும் வில்லன்களை வரிசைப்படுத்தி, ஆராய்கிறது இந்தத் தொடர்.

வெளிறிய உருவம், ரத்தம் வடியும் கூரிய பற்கள், வழித்துச் சீவிய தலைமுடி, நீண்ட கருப்புக் கோட்டு. பார்த்தாலே பயங்கரம். ஆ, டிராகுலா!

பிராம் ஸ்டோக்கருக்கு முன்பே பல காட்டேரிக் கதைகள் வந்துவிட்டிருந்தாலும், காட்டேரிக்கு “டிராகுலா” என்ற பெயரை வைத்த புண்ணியம் இவரையே சாரும். [1897ல் முதல் முதலில்.] இத்தனைக்கும் ஸ்டோக்கர் தம் நாவலை எழுத ஆரம்பித்தபோது டிராகுலா என்ற பெயரை வைக்கும் எண்ணமே கிடையாது. தனது கதாபாத்திரத்துக்கு “வாம்பிர்” என்று  சப்பபையாகத்தான் பெயரிட்டிருந்தார். ஆனால் பாதிக்கதை எழுதிக் கொண்டிருக்கும்போதே அவர் வில்லியம் வில்கின்சன் என்பவர் 1820ல் வலாக்கிய மல்டோவிய நாடுகளைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் படித்தார். அப்புத்தகம்தான் அவரை தனது வில்லனின் பெயரை “டிராகுலா” என்று மாற்றத்  தூண்டியது. ரத்தம் குடிக்கும் காட்டேரிக்கு ஒரு நிஜ மனிதனின் பெயர் வைக்குமளவுக்கு அந்த ”சரித்தர நாயகனைப்” பற்றிய குறிப்புகள்  அவரைக் கவர்ந்திருந்தன. யாரந்த  ஆள்?

சரித்திரம் வில்லனாகச் சுட்டிக்காட்டும் வலாக்கிய மன்னர் மூன்றாம் விளாட் வீட்டுக்குப் போய்ப்பார்ப்போம்.

விளாட் தெபேஷ் - பதினாறாம் நூற்றாண்டு ஓவியம்

கிழக்கு ஐரோப்பா கொஞ்சம் ஏடாகூடாமான இடந்தான். மேற்கு ஐரோப்பாவிலும், தெற்கு ஐரோப்பாவிலும் பல புதிய நாகரிகங்களும் பேரரசுகளும் தோன்றி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தபோது கிழக்கில் மட்டும் ஏதும் உருப்படியாக நடக்கவில்லை. நாடோடி சமூகங்களின் உறைவிடமாக அது இருந்ததும், ஆசியாவிலிருந்து  அடிக்கடி நிகழும் படையெடுப்புகளும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு சவலைப் பிள்ளையாகவே தேக்கி வைத்துவிட்டன.  இங்கே உருவாகி, தழைத்த நாடோடி சமூகங்கள், ஒன்று மேற்கிலுள்ள மேம்பட்ட நாகரிகங்களைத் தாக்கி அழித்துள்ளன; அல்லது கிழக்கிலிருந்து படையெடுப்பவர்களிடம் நன்றாக அடிவாங்கியுள்ளன.  இருண்ட யுகம் என்றழைக்கப்படும் ஐரோப்பிய இடைக்காலம் வரை இவர்களது கதை இவ்வாறே இருந்துள்ளது.  மூன்றாம் விளாட் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டிலும் இதுவே நிலைமை.

அப்போது ஓட்டோமானியப் பேரரசு வளர்ந்து வந்த காலம். சிலுவைப் போர்கள் ஒய்ந்து, பைசாண்டியப் பேரரசு சோர்ந்து போயிருந்த சமயத்தில் இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் முனைப்புடன் உருவானதுதான் ஒட்டோமான் சுல்தானகம். 1299ல் துருக்கியில் உருவான இந்தப் பேரரசு பதினைந்தாம் நூற்றாண்டில் மாபெரும் சக்தியாக வளர்ந்து விட்டது. மத்திய கிழக்காசியாவின் வல்லரசாக மாறியபின் மற்ற கண்டங்களை நோக்கி ஒட்டோமான் சுல்தான்களின் பார்வை திரும்பியது.  கிழக்கு ஐரோப்பா மீது ஒட்டோமான் படையெடுப்புகள் தொடங்கின. 1453ல் சுல்தான் இரண்டாம் முஹமது பைசாந்தியப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டாண்டிநோபிளைக் (தற்கால இஸ்தான்புல்) கைப்பற்றி பைசாந்தியத்துக்கு ஒரு முடிவு கட்டினார். அதன் பின்னர் கிழக்கு ஐரோப்பியப்  பிரதேசங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கினார்.  அவரது இலக்குகளில் ஒன்றுதான் வலாக்கியா.

பல நூறு ஆண்டுகளாக ஹங்கேரி நாட்டிற்குட்பட்ட சிற்றரசாக இருந்த வலாக்கியா, பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்ல ஒட்டோமான்  பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. தற்கால ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பகுதிகள்தான் அக்காலத்தில் வலாக்கியா என்றழைக்கப்பட்டன. அக்காலத்தில் இந்நாடு அண்டைய வல்லரசுகளிடையே மாட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருந்தது. வடக்கிலும் மேற்கிலும் ஹங்கேரிய அரசும், வட கிழக்கில் போலந்து அரசும், தெற்கில் ஒட்டோமான் பேரரசும் இதை நெருக்கி வந்தன. இவர்களுக்குள் நிகழ்ந்த பலப்பரீட்சையில் அவ்வப்போது கட்சி மாறிப் பல கூட்டணிகளில் தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி நிறைய நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.  கி.பி 1415ல் ஒட்டாமான் பேரரசின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.  அந்நியர் ஆதிக்கச் சிக்கல் போதாதென்று அவ்வப்போது உள்நாட்டுப் போர்கள்வேறு மூண்டுகொண்டிருந்தன. இந்த நிலையில் மூன்றாம் விளாடின் தந்தை இரண்டாம் விளாடின் கட்டுப்பாட்டில் வந்தது. இவர்தான் முதன் முதலில் “டிராகுல்”  என்ற பட்டத்தைத் தன் பெயருக்குப் பின் சேர்த்துக் கொண்டவர்.

“டிராகுல்” என்றால் ரொமேனிய மொழியில் “டிராகன்” என்று பொருள். ஒரு சாதாரண பிரபுத்துவப் பட்டமாகவே இரண்டாம் விளாட் இதனை ஏற்றுக் கொண்டார்.  இரண்டாம் விளாட் வலாக்கியாவின் சிற்றரசராக முடிசூடுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே 1431ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.  அரச குல வழக்கப்படி இளவரசருக்கும் தந்தையின் பெயரான விளாட் என்னும் பெயரையே வைத்தனர். விளாட் தெபேஷ் என்றும் அச்சிறுவன் அழைக்கப்பட்டான். அப்பா இரண்டாம் விளாட் என்ற பெயருடன் வலாக்கியாவின் குறுநில மன்னரான பின்னால் தேபேஷ் மூன்றாம் விளாட் ஆகி விட்டான்.

ஓட்டோமானிய ஆளுமைக்கு உட்பட்டு கப்பம் கட்டி வந்த இரண்டாம் விளாடுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள்.  நாட்டுக்குள்ளேயே அவருக்குப் போட்டியாகப் பல கோஷ்டிகள் இருந்தன.  முடிசூடி ஆறே ஆண்டுகளில் உள்நாட்டுச் சதி காரணமாக அவர் தன் அரியணையை இழக்க நேரிட்டது.  மீண்டும் அரசராவதற்காகத் தமது ஒட்டோமான் எஜமானர்களின் காலில் விழுந்தார் இரண்டாம் விளாட். அவர்களது உதவியைப் பெறுவதற்காக அவர் தனது இரு மகன்களையும் பணயக் கைதிகளாக இஸ்தான்புல்லுக்கு அனுப்பி வைத்தார். மூன்றாம் விளாடும் அவன் தம்பி ராதுவும் சுல்தானின் அரண்மனையில் அவரது கண்டிப்பான மேற்பார்வையில் வளரத் தொடங்கினார்கள்.  ஒட்டோமான் அரண்மனை வாழ்க்கை இரு சகோதரர்களிடம் நேரெதிரான விளைவுகளை உண்டு பண்ணியது.  ஒட்டோமான் வாத்தியார்களின் கண்டிப்பும் தண்டனைகளும் சிறுவன் விளாடின் மனத்தில் ஒட்டோமான் பேரரசின் மீது அழியாத வெறுப்பை உருவாக்கி விட்டன.  ஒரு சிற்றரசனின் மகன்தானே என்று அவனை ஒட்டோமான் அதிகாரிகள் கேவலமாகப் பார்த்தனர். விளாட் பட்ட அவமானங்களும் கேலிச் சிரிப்புகளும் அவனுக்கு மேலும் வெறியூட்டின. வளார்ந்து பெரியவனானதும் ஒட்டோமான் பேரரசை வேரோடு அழிப்பேன் என்று கங்கணம் கட்டிவிட்டான் விளாட். [அவன் தம்பி ராதுவோ ஒட்டோமானிய அடக்குமுறைகளுக்கு அடிபணிந்துவிட்டான். இஸ்லாமிய மதத்தைத் தழுவி சுல்தான் இரண்டாம் மெகமதின் பணியாளாக மாறிவிட்டான். “அழகிய” ராது என்று  புனைபெயரிடப்பட்ட இவன், பிற்காலத்தில் தன் அண்ணனுக்கு எதிராகவே ஒட்டோமானிய துருப்புகளின் தளபதியாகப் போர் புரியும் நிலை ஏற்பட்டது.]

ஒட்டோமானிய ஆதரவுடன் மீண்டும் வல்லாகியாவின் அரசரான இரண்டாம் விளாடின் ஆட்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. அவருடைய போயர் பிரபு விரோதிகள் அவரைப் படுகொலை செய்துவிட்டனர். இதனால் 1447 ல் பதினாறு வயதில்  விளாட் தெபேஷ் வலாக்கியாவின் மன்னனாக வேண்டிய நிலை ஏற்பட்டது.  பதின்ம வயது மன்னனை யாரும் மதிக்கத் தயாராக இல்லை. போயர்கள் ஹங்கேரி அரசனின் உதவியுடன் வலாக்கியாவைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விளாட் நாட்டை விட்டு ஓட வேண்டியதாயிற்று. நாடிழந்து பக்கத்து நாடுகளில் உதவி கேட்டு நாடோடியாக பல ஆண்டுகளாகச் சுற்றி திரிந்த விளாடுக்கு ஒட்டோமானிய சுல்தானகத்தின் மீது இன்னும் வெறி அதிகமானது. எப்படியாவது அவர்களைப் பழிவாங்கத் துடித்த அவன், தன் விரோதிகளின் ஆதரவாளரான ஹங்கேரி அரசரிடம் போய்த் தஞ்சம் புகுந்தான்.  அக்காலத்தில் ஹங்கேரிதான் ஒட்டொமானியப் பேரரசின் முதல் எதிரி நாடு.

ஹங்கேரி அரசருக்கு விளாடைப் பார்த்து ஒரே வியப்பு. என்னடா இவனது தகப்பன் ஒட்டோமான்களின் அடியளாக இருந்தான்,  இவனோ அவர்களை அழித்தே தீருவேன் என்று வெறி கொண்டு அலைகிறானே என்று. ஆனால் விளாடிடம் வெறும் பழி வாங்கும் வெறி மட்டுமல்ல, ஒட்டோமானிய அரசு, படை, உத்திகள், நோக்கங்கள் எனப் பல விஷயங்களைப் பற்றிய அபார அறிவும் இருந்தது. இதனால் ஹங்கேரி மன்னருக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது. அவனைத் தன் உதவியாளனாக வைத்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த விளாட், கி.பி. 1456ல் படைதிரட்டி தன் நாட்டின் மீது படையெடுத்தான். ஹங்கேரி மன்னரின் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த அரசனை வென்று தானே வலாக்கியாவின் மன்னன் என்று பறைசாற்றினான்.  வலாக்கியா அப்போது உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையிலிருந்து. நாட்டை சீர்திருத்தி நிலைமையை சரிசெய்வதற்காக விளாட் தனது நீண்ட நாள் கனவான ஒட்டோமானியப் பேரரசை அழிப்பதை சற்றே தள்ளிப் போட நேர்ந்தது.

கழுவேற்றுமிடத்தில் உண்ணும் விளாட்

ஆனால் வலாக்கியாவில் நிலைமையைச் சரி செய்ய விளாடுக்குக் கொஞ்ச வருடங்களே ஆகின.  தன் தந்தையையும் சகோதரனையும் கொன்ற போயர்களை அறவே ஒழிப்பேன் என்று சபதம் செய்திருந்த விளாட், ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றத் தொடங்கினான்.  போயர்கள் அனைவரும் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டனர். அவர்களுள் வயதானவர்களைக் கழுவிலேற்ற உத்தரவிட்டான். வயது குறைந்தவர்களை உடனே கொல்லவில்லை. அவர்களை அடிமைகளாக்கி, தனது போயினேரி கோட்டையைச் செப்பனிடச் செய்தான்.  செல்வச் செழிப்பில் வளர்ந்த அவர்கள்   மாடுகளைப் போல உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். வேலைப்பளுவைத் தாங்க முடியாமல் பலர் கோட்டை வேலை நடந்து கொண்டிருக்கும் போதே பசியாலும் அயர்ச்சியாலும் மாண்டனர். கோட்டை வேலை முடிந்த பின்னர் மிஞ்சியவர்களையும் கழுவிலேற்றி அவர்கள் துடிதுடித்துச் சாவதை சாவகாசமாகப் பார்த்து ரசித்தான் விளாட்.

கழுவேற்றம் என்றால் சாதாரண தண்டனையல்ல. ஒரு மரக்கட்டையை ஒரு முனையில் நன்றாகக் கூர் தீட்டி நிலத்தில் புதைத்து வைத்திருப்பர்.  தண்டனை விதிக்கப்பட்டவரைத் தூக்கி அவரது ஆசனவாய் வழியாக அந்த மரக்கட்டையில் சொருகி விடுவார்கள். வலியால் அவர் துடிக்கத் துடிக்கக் கட்டை இன்னும் உள்ளே செல்லும். மெதுவான, கொடுமையான மரணம் அது.  போயர் பிரபுக்களும் அவர்களது குடும்பங்களும் கழுவில் சிக்கித் துடித்துக் கொண்டிருக்க, நிதானமாக அருகில் ஒரு மேசை நாற்காலி போட்டு அமர்ந்து, ரசித்துச் சாப்பிடுவதுதான் விளாடின் அன்றாடப் பழக்கம்.  பத்தாண்டுகளுக்குள் மொத்த போயர் கூட்டமே ஒன்றன் பின் ஒருவராக கழுவிலேறிப் பரலோகம் போய்விட்டது. மக்கள் அனைவரும் விளாடை ”தி இம்பேலர்” (கழுவேற்றுபவன்) என்று பயத்துடன் அழைக்கத் தொடங்கினர்.  இப்படி நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் விளாடினால் கொல்லப்பட்டிருக்ககூடும் என்று வரலாற்றாளார்கள் கணித்துள்ளார்கள்.

உள்நாட்டு விரோதிகளை ஒழித்து, நிர்வாகத்தை சீர்திருத்தி, படைகளைப் பலப்படுத்தியபின் விளாடின் பார்வை மீண்டும் ஒட்டோமான் பேரரசை நோக்கித் திரும்பியது.  வலாக்கியாவில் தன் கை ஓங்கியதும் விளாட் செய்த முதல் வேலை – ஒட்டோமான்களுக்குக் கொடுத்து வந்த கப்பத்தை நிறுத்தியது. எரிச்சலடைந்த  சுல்தான் மெகமது முதலில் ஆள் அனுப்பி மிரட்டிப் பார்த்தான்.  ஆனால் விளாடுக்குப் பணிந்து போகும் எண்ணம் அறவே இல்லை. என்ன ஆனாலும் சரி; குண்டுமணியளவு வெள்ளி கூட கப்பம் கட்ட மாட்டேன் என்று மறுத்து விட்டான்.  கப்பத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், ஒட்டோமானியர்களை எப்படித் தாக்குவது என்றும் யோசிக்கத் தொடங்கினான். அப்போது பார்த்து போப் இரண்டம் பையஸ் ஒட்டோமானியர்களுக்கு எதிராகப் புதிய சிலுவைப் போரை அறிவித்தார். உற்சாகத்துடன் அதற்கான வேலைகளில் இறங்கினான் விளாட்.. 1459ல் மெகமதின் தூதர்கள் மீண்டும் விளாடை மிரட்டினர். 10,000 டூகட் தங்கமும் (சுமார் முப்பது டன்) படையில் பணிபுரிய ஆட்களும் வேண்டுமென வற்புறுத்தினர். கோபம் கொண்ட விளாட் அவர்களைக் கொன்று விட்டான்.  மெகமது விளாடைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். சமாதானத்துக்கு அழைப்பது போல அழைத்து திடீரென்று தாக்கி விளாடின் கதையை முடித்துவிடுங்கள் என்று தன் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான்.  ஆனால் விளாடுக்கு எப்படியோ விஷயம் தெரிந்துவிட்டது.  ஒட்டோமானிய தூதர்களையும் வீரர்களையும் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்கி சிறைபிடித்து விட்டான்.

பிறகென்ன? விளாடின் உள்நாட்டு விரோதிகளுக்கு நேர்ந்த கதியே அவர்களுக்கும் நேர்ந்தது. அவர்களைக் கழுவேற்றியது போதாது என நினைத்து, சுல்தான் மெகமதுக்கு மறக்க முடியாத பாடமொன்றைக் கற்பிக்க முடிவு செய்தான் விளாட்..

கி.பி 1461ல் ஒட்டோமானிய பேரரசின் மீது படையெடுத்தான் விளாட். செர்பியாவுக்கும் கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைச் சூறையாடின, விளாடின் படைகள். சிக்கிய எதிரி வீரர்களையும் அதிகாரிகளையும் வழக்கம்போலக் கழுவில் சொருகி விட்டான் விளாட். கிட்டத்தட்ட 24,000 பேருக்கு இந்தக் கழுமோட்சம் கிடைத்தது. இச்செய்தி இஸ்தான்புல்லை அடைந்ததும் ஒட்டோமானிய அதிகார வர்க்கமே ஆட்டம் கண்டது. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமென்று சுல்தான் மெகமெது முடிவெடுத்தான். பெரும்படையொன்றைத் திரட்டி வலாக்கியா நோக்கி முன்னேறினான். விளாடை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு வந்த அந்தப் படைக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காமல் செய்ய வலாக்கிய பிரதேசங்களை நாசம் செய்தனர் விளாடின் படையினர். வயல்கள் கொளுத்தப்பட்டன, பயிர்கள் எரிக்கப்பட்டன, தோப்புகள் வெட்டப்பட்டன, குளங்களிலும், கிணறுகளிலும் விஷம் கலக்கப்பட்டது. வலாக்கியாவின் பூமியே ஒட்டோமானியப் படைக்கு நஞ்சாகும் வண்ணம் ஏற்பாடு செய்தான் விளாட்.

வெற்றி எளிதில் கிடைக்கும் என்ற நினைப்பில் வந்த சுல்தானுக்கு திகில் கூடியது. நேரடியாக மோதாமல், கொரில்லாத் தாக்குதல் நடத்திய விளாடின் படைகளை விரட்டியே சுல்தானின் படைகள் களைத்துப் போயின. சுல்தானின் படைமுகாமையே விளாடும் அவனது வீரர்களும் தாக்கி மெகமதைக் படுகொலை செய்ய முயன்றனர். அதிர்ஷ்டவசமாக சுல்தான் அத்தாக்குதலில் இருந்து தப்பினான்.  விளாடின் படையினைப் பிடிக்க முடியாவிட்டாலும் அவனது தலைநகரையாவது கைப்பற்றலாம் என்று சுல்தான் முடிவு செய்தான். டார்கோவிஸ்டே நகரை நெருங்கிய ஒட்டோமானிய படைகளின் கண்களில் ஒரு கொடூரக் காட்சி பட்டது.

தலைநகர் டார்கோவிஸ்டேவின் கோட்டைக் கதவுகள் திறந்திருந்தன. மனித நடமாட்டமே எங்கும் இல்லை. அமானுஷ்ய அமைதியினூடே மெதுவாக நகரினுள் முன்னேறிய படைகள் அக்கோரக் காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றன.  நகரினுள் கழுமரங்களாலான ஒரு காடு உருவாக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான கழுமரங்கள் வ்ரிசையாக நடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கழுமரத்தின் உச்சியிலும் ஒர் ஒட்டோமானிய உடல் சொருகப்பட்டிருந்தது. தன்னிடம் பிடிபட்ட ஒட்டோமானிய வீரர்கள், அதிகாரிகள், அப்பாவி மக்கள் அனைவரையும் கழுவிலேற்றிவிட்டுப் போயிருந்தான் விளாட். “என்னை எதிர்ப்பவர்களின் கதி இதுவே” என்று சொல்லாமல் சொல்லியிருந்தான் விளாட்.

நீண்ட போரினால் சோர்ந்து போயிருந்த சுல்தானின் படைகளுக்கு இக்காட்சி ஒரு பேரிடியாக இருந்தது. சுல்தான் மெகமதுவால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படிப்பட்ட கொடூரனை எதிர் கொள்ளும் திராணியில்லாமல் போனது அவனுக்கு. படையின் பொறுப்பை தன் தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தலை நகருக்கே திரும்பி ஓடிவிட்டான்.

என்னதான் கொடூர உத்திகளைப் பயன்படுத்தினாலும், இறுதியில் ஒட்டோமானியப் பேரரசின் பலமும், விளாட்டின் சொந்த நண்பர்கள் சிலர் செய்த சதியும் சேர்ந்து விளாட்டுக்குத் தோல்வியையே தந்தன..  போர்க்களத்தில் போரிடும் போது மடிந்த அவனது தலையை வெட்டி தேனில் பதப்படுத்தி இஸ்தான்புல்லுக்கு அனுப்பி வைத்தனர் ஒட்டோமானிய தளபதிகள். விளாடின் தலையைப் பார்த்த பின்னர்தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது மெகமதுக்கு. விளாட் இறந்து விட்டான் என்பதைத் தமது குடிமக்கள் நம்ப வேண்டுமென்பதற்காக விளாடின் தலையைப் பொது இடத்தில் பார்வைக்கு வைக்க உத்தரவிட்டான்.

கொடூரமானவன்தான். வில்லன் தான். ஆனாலும் நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. அதன் உச்சக்கட்டம்தான் ரத்தக்காட்டேரிக் கதைகளில் அவன் பெயர் இணைக்கப்பட்டது! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் விளாடின் கதையால் பிரமிப்படைந்த பிராம் ஸ்டோக்கர், தனது நாவலின் காட்டேரிக்கு  “டிராகுலா” என்று பெயர் வைத்தது இதன் தொடர்ச்சியே!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யோசஃப் மெங்காலா

2. மரண தூதன்

இரண்டாம் உலகப்போர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் வில்லன் ஹிட்லர். ஆனால் அக்காலத்தில் அவர் மட்டுமா வில்லன்? சின்னதும் பெரிதுமாக பல தரங்களில் வில்லன்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். அதுவும் குறிப்பாக நாசி ஜெர்மனி போன்ற ஒரு கொடிய பேரரசில் வில்லன்களுக்குப் பஞ்சமே இல்லை.

அந்த நாட்டின் அடிப்படையே அப்படி – வெறுப்பையும் வெறியையும் மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசம் அது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனி நேச நாடுகளிடம் தோல்வியடைந்தது. கையெழுத்தான அமைதி ஒப்பந்ததில் நேச நாடுகள் பல கடுமையான நிபந்தனைகளை ஜெர்மனிக்கு விதித்திருந்தன. இதனால் அவமானத்தில் கூனிக்குறுகிப் போயிருந்த ஜெர்மானிய மக்களுக்கு இழந்த புகழை மீண்டும் பெறலாம் என்று ஆசைகாட்டி பதவிக்கு வந்தார் ஹிட்லர். அவரது நாசி பார்ட்டிக்கு இருந்த மூலக்கொள்கை – யூத வெறுப்பு. முதல் உலகப்போரில் நமது படைகள் தோற்கவில்லை, யூத செல்வந்தர்கள் செய்த துரோகத்தால்தான் பின்வாங்க நேர்ந்தது என்று கதை கட்டிவிட்டார்.

அது மட்டுமல்ல, நாட்டின் கஷ்டங்கள் அனைத்துக்கும் யூதர்களே காரணமென்று தூபம் போட்டார். பொருளாதார நெருக்கடியா – அது யூத சதி, பணவீக்கமா அதுவும் யூத தந்திரம், குழாயில் தண்ணீர் வரவில்லையா அதுவும் யூதத் தொழிலாளர்கள் வேண்டுமென்றே செய்தது என்று யூதர்களின் மீது வெறுப்பை உமிழ்ந்தார். 1933ல் ஆட்சிக்கு வந்தவுடன் யூதர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார். அவர்களது உடைமைகளைப் பறித்து, வியாபாரத்தைக் கெடுத்து, கைதிமுகாம்களில் அடைத்தார். அத்துடன் நாசிக்களின் வெறி அடங்கவில்லை. உலகில் யூதர்களே இல்லாமல் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தனர். யூதப் பிரச்னைக்கு இறுதித் தீர்ப்பாக அனைவரையும் கூண்டோடு கொன்று குவிப்பதற்குப் பக்காவாக திட்டம் தீட்டினர். யூதர்களோடு சேர்த்து உயிருடன் இருக்கத் தகுதியில்லாதவர்கள், நாசிப்பேரரசின் விரோதிகள் என்று கருதப்பட்டவர்கள் எல்லோரையும் சேர்த்து தீர்த்துக் கட்டுவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டன. முதலில் கைதிகள் முகாம்களில் அவர்களை அடைக்க வேண்டும், அடிமைத் தொழிலாளர்களாக மாற்றி முடிந்தவரை கசக்கிப் பிழிய வேண்டும், இனி அவர்களால் உபயோகம் எதுவுமில்லை என்று தெரிந்தபின் கொன்றுவிட வேண்டும். இதுதான் நாசிகளின் இறுதித் தீர்ப்பு.

யூதர்களைத் தவிர கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், அரசியல் விரோதிகள், ஜிப்சி நாடோடிகள் என பல லட்சக்கணக்கானோர் இப்படிக் கைதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்தக் கைதிகள் முகாம்களை நிர்வாகம் செய்வது, அடிமைத் தொழிலாளிகளிடம் வேலை வாங்குவது போன்ற பொறுப்புகள் நாசிக்களின் எஸ். எஸ். என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. நாசிகளிலேயே அதிக வெறி பிடித்தவர்கள் சேரும் அமைப்புதான் எஸ். எஸ். என்னும் அமைப்பு. ஹிட்லரின் கூட்டாளி ஹெய்ன்ரிக் ஹிம்லரின் தலைமையில் அது ஒரு தனி அதிகாரமையமாகச் செயல்பட்டது. கைதிகளைத் தங்கவைக்க கைதிகள் முகாம்கள், அவர்களைத் தீர்த்துக்கட்ட வதை முகாம்கள் என இருவகை முகாம்களை நடத்தியது எஸ். எஸ். இந்த முகாம்களில் மனிதத்துக்கு எதிராக நடந்த கொடுமைகளை இன்று நினைத்துப் பார்த்தாலும் குலை நடுங்கும். இந்த முகாம்களில் கைதிகளையும், காவலர்களையும் தவிர டாக்டர்களும் இருந்தார்கள். கைதிகளுக்கு வைத்தியம் பார்க்க அல்ல. (சாகப் போகிறவர்களுக்கு வைத்தியம் வேறு ஒரு கேடா என்பது நாசிக்களின் கருத்து!) கைதிகளை வைத்துப் பரிசோதனை செய்து பார்க்க. மருத்துவ கோட்டுகளில் வலம் வந்த அந்த மனித மிருகங்களில் மிகவும் பிரபலமானவர்தான் மரண தூதன் என்றழைக்கப்பட்ட டாக்டர் யோசஃப் மெங்காலா.

மெங்காலா 1911ல் ஒரு சாதாரண ஜெர்மானியக் குடும்பத்தில் ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் பிறந்தான். படிப்பில் கெட்டிக்காரனான மெங்காலா 1935இல் தன் 24வது வயதில் மியூனிக் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றான். அப்போதுதான் ஜெர்மனியின்மீது நாசிக்களின் பிடி மெல்ல இறுகத் தொடங்கியிருந்தது. நாசிக்கட்சி ஒன்றைத் தவிர மற்ற கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒருவர் வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால் கண்டிப்பாக நாசிக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். அதன்படி மெங்காலாவும் நாசிக்கட்சியின் உறுப்பினரானான். படித்துமுடித்த கையோடு ஃபிராங்க்ஃபர்ட் நகரின் புகழ்பெற்ற மரபியல் ஆய்வாளரான டாக்டர் ஓட்மார் வெர்ஷூர் என்பவரிடம் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தான். வெர்ஷூர் இரட்டைக் குழந்தைகள் சம்பந்தமான மரபியல் ஆராய்ச்சி செய்து வந்தார். அங்குதான் இரட்டையர் ஆராய்ச்சி மீது ஒரு இனந்தெரியாத மோகம் அவனுக்கு ஏற்பட்டது. வெர்ஷூரிடம் பயிற்சி எடுக்க வந்த பிற மரபியல் ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு அவனது இந்த மோகத்தை மேலும் வளர்த்து விட்டது. ஆராய்ச்சியில் தேர்ந்து 1938ல் மருத்துவ டாக்டராகி விட்டான் மெங்காலா.

நாசிக்கட்சியில் உறுப்பினரானது போததென்று எஸ். எஸ் சிலும் உறுப்பினராக விண்ணப்பித்தான் மெங்காலா. எஸ். எஸ் சில் சேருவதற்கு ஒருவர் கலப்பற்ற ஆரிய ஜெர்மன் இனத்தவராக இருக்க வேண்டும். யூத, ஸ்லாவிக் இரத்தம் கலந்திருக்கின்றதா என்று விண்ணப்பிப்பவர்களின் முன்னோர்கள் சரித்தரத்தை துருவிப் பார்த்த பின்னரே உறுப்பினராக விடுவர். மெங்காலா சுத்தமான (!) ஆரியன் என்று நிரூபணம் ஆனதும் எஸ். எஸ் சில் அனுமதிக்கப்பட்டான். கலப்பற்ற தூய ஆரிய ராஜ்யம் ஒன்றை உருவாக்குவது நாசிக்கட்சியின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று. இந்தப் பேரினவாத நோக்கம் மெங்காலாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனை அடைவதெப்படி என ஆராயத் தொடங்கினான். 1939ல் இரண்டாம் உலகப் போர் மூண்டதால் அவனது ஆராய்ச்சி தடைபட்டது. எஸ். எஸ் படைப்பிரிவில் சேர்ந்து கிழக்குப் போர்முனையில் சோவியத் யூனியனுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பெரும் போரில் பங்கேற்க அனுப்பப்பட்டான். போரில் திறமையுடன் செயல்பட்டதற்காக முதலாம் நிலை இரும்புச் சிலுவை பதக்கமும் வென்றான். ஆனால் போர்க்களத்தில் காயமடைந்ததால் படைப்பிரிவிலிருந்து ஓய்வு கொடுத்து விட்டார்கள். ஜெர்மனிக்குத் திரும்பி மரபியல் தொடர்பான தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தான் மெங்காலா.

1943ல் மீண்டும் நாசிப் பேரரசுக்கு சேவை செய்யும் வாய்ப்பு மெங்காலாவுக்குக் கிட்டியது. யூதர்களையும் பிற ஆரியரல்லாத இனத்தவரையும் கூண்டோடு ஒழிக்க உருவாககப்பட்டிருந்த வதை முகாம்களில் ஒன்றான பெர்கனோவில் ஒரு டாக்டர் பதவி காலியானது. இன்று நாசிக்களின் கொடுமைகளுக்குச் சாட்சியாக அருங்காட்சியமாக மாறியுள்ள ஆசுவிட்ஸ் முகாம்களில் ஜிப்சிகளைக் கொல்வதற்காக்க் கட்டப்பட்டதுதான் பெர்கனோ. அங்கு ஒரு மருத்தவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்தப்பதவி மெங்காலாவுக்கு வழங்கப்பட்டது. தன் இனவெறி மரபியல் கொள்கைகளைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ந்த அவன் உடனே பெர்கனோக்கு புறப்பட்டான். நாசி முகாம்களில் இருவகைகள் இருந்தன – ஒன்று சாதாரணக் கைதிகள் முகாம்கள். இங்கு அனுப்பப்படும் கைதிகள் அடிமைத் தொழிலாளிகளாகக் கசக்கிப் பிழியப்படுவார்கள். ஆனால் அவர்களாகச் செத்தால்தான் உண்டு, வேண்டுமென்று கொல்லப்படமாட்டார்கள். ஆனால் பெர்கனோ போன்ற வதை முகாம்கள் நாசிகளுக்குப் பிடிக்காத இனக்குழுக்களை அழித்தொழிப்பதற்கென்றே கட்டப்பட்டவை. யூதர்களையும், ஜிப்சிகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றால் செலவு அதிகமாகுமென்று விஷ வாயு அறைகளைக் கட்டி அதில் அவர்களை அடைத்து சாகடிப்பது நாசிக்களின் பழக்கம். ஆனால் கைதிகளை உடனே அவர்கள் கொன்று விடமாட்டார்கள். வயதானவர்கள், வேலை செய்யமுடியாத அளவு நலிவடைந்தவர்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றவர்களை மட்டும் உடனக்குடன் பரலோகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். எஞ்சியவர்களை மருத்தவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். பெர்கனோவில் மெங்காலாவுக்கு ஒரே கொண்டாட்டம்தான். பல வருடங்களாய் இரட்டையர்களைப் பற்றிய தன் கோட்பாடுகளைப் பரிசோதித்துப் பார்க்க வசதியாக ஓர் இடம் கிடைத்து விட்டதென மகிழ்ந்தான் அவன். மருத்துவமனையின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்ட மெங்காலா அங்குக் கழித்த இரண்டு வருடங்களில் செய்த செயல்கள் அவனுக்கு மரண தூதன் என்று பெயர் வாங்கிக் கொடுத்தன.

 

ஆஸ்விச் முகாமில் மரணமடைந்தவர்கள்
ஆஸ்விச் முகாமில் மரணமடைந்தவர்கள்

 

புதிதாகக் கைது செய்யப்பட்டு பெர்கனோக்கு அனுப்பப்படுபவர்களில் யாரை உடனே கொல்வது, யாரை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மெங்காலாவுக்குத்தான் இருந்தது. குழந்தைகளைக்கூட தயங்காமல் விஷ வாயு அறைகளில் அடைத்துக் கொல்வது அவனது வழக்கமானது. பெர்கனோ முகாமில் குழந்தைகள் சிறையில் ஐந்து அடி உயரத்துக்கு சுவரில் ஒரு கோடு வரையப்பட்டிருக்கும். அதற்கு அருகில் சிறுவர் சிறுமியர் நிற்க வைக்கப்பட்டு அளக்கப்படுவர். அதைவிட உயரமாக இருப்பவர்கள் உடனே விஷ வாயு அறைகளுக்கு அனுப்பப்படுவர். ஆனால் அப்படி அனுப்பப்பட்டவர்களைவிட உயிர் பிழைத்தவர்களின் நிலை இன்னும் மோசமானது. மெங்காலாவின் பரிசோதனைக் கூடத்தில் அவர்களுக்கு மிகக் கொடூரமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதுவும் இரட்டையர் என்றால் மெங்காலாவுக்குக் குஷி கிளம்பிவிடும். இரட்டையர்களில் ஒருவர் கண்ணை நோண்டியெடுத்து இன்னொருவருக்குப் பொருத்துவது, சாய ஊசிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண்களை நிறம் மாறச் செய்வது, கை கால்களை வெட்டி எடுப்பது என்று இன்னும் சொல்ல முடியாத கொடூரங்களையெல்லாம் செய்து மகிழ்ந்தான் மெங்காலா. அறுவை சிகிச்சை செய்யும்போது கைதிகளுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், அவர்களைத் துடிக்க துடிக்க அறுப்பது அவனது வாடிக்கை. வெறிபிடித்த மிருகங்கள் நிறைந்த நாசி மருத்துவர் கும்பலிலேயே மெங்காலாவை மற்றவர்கள் பயம் கலந்த வியப்புடன்தான் பார்த்தார்கள். மற்றவர்களும் கைதிகளை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்கள்தான். சிலர் ஆரிய ஜெர்மானியர்களைவிட மற்ற இனக்குழுக்கள் கீழ்த்தரமானவை என்று நிரூபிப்பதற்காக ஆராய்ச்சிகள் செய்தனர். வேறு சிலரோ ஜெர்மானியப் படைவீரர்களுக்கு மருந்துகளையும், புதிய சிகிச்சை முறைகளையும் கண்டுபிடிப்பதற்காகச் செய்தனர். ஆனால் தங்கள் மன மகிழ்ச்சிக்காக்க் கைதிகளைக் கொடுமைப்படுத்திய கொடூரர்கள் மெங்காலாவைப் போல ஒரு சிலரே.

பெர்கனோவிலிருந்த இரண்டாண்டுகளில் சுமார் மூவாயிரம் இரட்டையர்களின் மீது மெங்காலா தனது கொடூர பரிசோதனைகளைச் செய்திருக்கக் கூடுமென்று வரலாற்றாளர்கள் கணித்துள்ளனர். அவனது கையால் மாண்டவர்கள் பலர், மலடாக்கப்பட்டவர்கள் பலர். வேறு சிலரோ கை காலிழந்து தப்பித்தனர். அவன் செய்த அட்டூழியங்களை அவனது மேலதிகாரிகளோ, உடன் வேலை பார்த்தவர்களோ தட்டிக் கேட்கவில்லை. மனிதாபிமானத்தில் கேட்கவில்லையென்றால் கூட பரவாயில்லை, நாசிகளுக்கேது மனிதாபிமானமென்று விட்டுவிடலாம். நாட்டுக்கு உதவும் பரிசோதனைகளைச் செய்யாமல் என்ன நீ சைக்கோத்தனமாகச் செய்கிறாய் என்றுகூட யாரும் அவனைக் கேட்கவில்லை. 1945ல் போரில் ஜெர்மனியின் தோல்வி உறுதி என்பது அனைவருக்கும் தெளிவாக விளங்கிய பின்னரும் மெங்காலா தன் கைங்கரியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தான். ஆசுவிட்ஸ்-பெர்கனோ முகாம் எதிரிகள் கைவசம் வீழும் நிலையில் எஸ். எஸ். அந்த முகாமை விட்டு விட்டு வேறு முகாம்களுக்கு மாறியது. மெங்காலாவும் தப்பி ஓடிவிட்டான். போர் முடிந்து ஜெர்மனி சரணடைந்தபின், போர்க்குற்றவாளிகளில் மெங்காலாவின் பெயரும் சேர்ந்து கொண்டது. நாசிப் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க நியமிக்கப்பட்ட நியூரம்பர்க் தீர்ப்பாயத்திலும் மெங்காலாவின் செயல்கள் விசாரிக்கப்பட்டன. ஆனால் அவனது மனைவியும் குடும்பத்தாரும் மெங்காலா இறந்துவிட்டதாகச் சாதித்ததால், நியூரம்பர்க் தீர்ப்பாயம் அவன்மீது அதிகாரப்பூர்வமாக எந்த வழக்கையும் போடவில்லை. செத்துப் போனவன் மீது தங்கள் நேரத்தை செலவிடவேண்டாமென விட்டுவிட்டார்கள். ஆனால் மெங்காலா சாகவில்லை. நான்கு வருடங்கள் வேறுபெயர்களில் ஜெர்மனியில் பதுங்கித் திரிந்தான். முன்னாள் நாசிக்கள் அப்போது ஜெர்மனியிலிருந்து தென்னமெரிக்காவுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக அர்ஜெண்டைனா, தப்பிவரும் நாசிக்களுக்கு புகலிடம் தந்து கொண்டிருந்தது. 1950களில் மெங்காலாவும் தன் முன்னாள் சகாக்களின் உதவியுடன் அர்ஜெண்டைனாவுக்குப் பறந்துவிட்டான்.

தென்னமெரிக்காவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினான் மெங்காலா. தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டான். மருத்துவத் தொழிலையும் மீண்டும் பார்க்கத் தொடங்கினான். அர்ஜெண்டைனாவில் கருக்கலைப்பு சட்ட விரோதமாக இருந்த காலம் அது. இதனால் திருட்டுத்தனமாகக் கருக்கலைப்புச் செய்யும் மருத்துவர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. மெங்காலாவும் இத்தொழிலில் ஈடுபட்டான். ஆனால் அவனது கடந்த காலம், அவனை விடவில்லை. நாசிக்களால் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களில் எஞ்சியோர் தங்களுக்கென இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கி இருந்தனர். அந்நாட்டின் உளவுத்துறையான மொசாத் முன்னாள் நாசிக்களை வேட்டையாடவென்று தனித்துறை ஒன்றை உருவாக்கி இருந்தது. தென்னமெரிக்காவில் மாறுவேஷ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த முன்னாள் நாசிக்களை அவர்கள் குறிவைக்கத் தொடங்கினர். யூதர்களைக் கொல்வதில் முக்கியப் பங்கு வகித்த அடால்ஃப் எயிக்மான் என்ற நாசிப் பெரும்புள்ளியை 1960-ல் அர்ஜெண்டைனாவில் கைப்பற்றி இஸ்ரேலுக்குக் கடத்தியது மொசாத். இஸ்ரேலில் அவனுக்கு மரண்தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான். தனது சகா எயிக்மானுக்கு நடந்த கதி தனக்கும் நடக்கக்கூடும் என்று சுதாரித்த மெங்காலா இரவோடு இரவாக பராகுவே நாட்டுக்குத் தப்பி விட்டான். மயிரிழையில் அவனைத் தப்பவிட்டது மொசாத். வொல்ஃப்காங்க் ஜெரார்டு என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு தன் எஞ்சிய காலங்களைப் பராகுவேயில் கழித்தான். மொசாதுக்கு அவனது இருப்பிடம் தெரிய வந்தாலும், அரசியல் காரணங்களுக்காக அவனை விட்டுவிட்டது. 1979ல் கிழ வயதில் இயற்கையான மரணமே மெங்காலாவுக்கு ஏற்பட்டது.

மெங்காலா மறைந்தாலும் அவனைப் பற்றிய வதந்திகளும் கதைகளும் அவ்வப்போது கிளம்பிய வண்ணம் இருந்தன. இரட்டையர் ஆராய்ச்சியைக் கொண்டு ஒரு புதிய சூப்பர்மேன் இனத்தை அவன் தென்னாப்பிரிக்காவில் உருவாக்கிக் கொண்டிருப்பதாகப் புரளிகள் உண்டாகிக்கொண்டிருந்தன. அவனது மரணத்துக்கு நெடுநாட்களுக்குப் பின்பே இவை மெல்ல மெல்ல அடங்கின. நாசிக்களின் மிருகவெறிக்கும் மனித குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்த குற்றங்களுக்கும் இன்றுவரை சாட்சியமாக உள்ளது இந்த மரண தூதனின் வாழ்க்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்தியாவின் நீரோ

லிட்டன் பிரபு

லிட்டன் பிரபு

ஒருவர் வில்லனாக ஏதாவது செய்யவேண்டுமென்பது அவசியமில்லை. ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டே லட்சக்கணக்கோரின் சாவுக்குக் காரணமான வில்லன்களும் சரித்தரத்தில் உண்டு. ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்தியாவிலும் ஒரு நீரோ இருந்தார்.  கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் துடித்தபோது நீரோவைப் போலவே செத்தால் சாகட்டும் என்று அலட்சியமாக இருந்த ஒரு ஆட்சியாளர். 1870களில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லிட்டன் பிரபு.

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தை பிரிட்டிஷ்காரர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். கலகத்துக்கு முன்னால், இந்தியாவைக் கிழக்கிந்தியக் கம்பனி தான் நிர்வகித்து வந்தது. கலகத்தை அடக்கிய பின் இந்தியா கம்பனியின் பிடியிலிருந்து மாறி பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி கட்டுபாட்டில் வந்தது.  ஆட்சியில் இந்தியர்களுக்குச் சிறிதும் பங்கு கிடையாது. பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராயும் ஆளுனர்களும் இந்தியாவையும் அதன் மாகாணங்களையும் ஆண்டு வந்தனர்.  அப்படி வைஸ்ராயாக 1876ல் நியமிக்கப்பட்டவர் தான் ராபர்ட் பூல்வர்-லிட்டன்.

ஆங்கில பிரபு குடும்பத்தில் பிறந்த லிட்டனின் தந்தையும் தாயும் பிரபலமான நாவலாசிரியர்கள்.  லிட்டனின் சிறு வயதிலேயே அவரது பெற்றோர்களுக்குள் சண்டை வந்து பிரிந்து விட்டனர்.  அவரது அப்பா எட்வர்ட் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகவும்,  அரசாங்கத்தில் பல உயரிய பதவிகளிலும் பணியாற்றினார்.  லிட்டனும் வளர்ந்து பெரியவனானதும்,  அரசாங்கப் பணியில் சேர்ந்து பல நாட்டு தூதரகங்களில் பணியாற்றினார்.  பெற்றோரைப் போலவே எழுத்தாளராக வேண்டுமென ஆசையும் இருந்தது.  ஆனால் திறமை கிடையாது. ஓவன் மெரிடித் என்ற பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.  அவரது நாலாந்தரக் கவிதைகளை அறுவையென்று விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினாலும், அவை விக்டோரியா மகாராணிக்குப் பிடித்துப் போயின.  அரசிக்குப் பிடித்த கவிஞரென்பதால் அரசுப் பணியில் கிடுகிடுவென்று உயர்ந்தார் லிட்டன்.

மேட்ரிட், பாரிஸ், லிஸ்பன் என பல நகரங்களில் பிரிட்டிஷ் தூதரகங்களில் பணி புரிந்த லிட்டனுக்கு 1876ல் அடித்தது ஜாக்பாட். அவ்வாண்டு இந்திய வைஸ்ராய் பதவி காலியானது. அதை நிரப்ப ஒரு அதிகம் அறிவில்லாத ஆமாஞ்சாமி போடக்கூடிய ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டிஸ்ரேலிக்கு, விக்டோரியாவின் அபிமான கவிஞர் லிட்டனின் நினைவு வந்தது. லிட்டனின் அதிர்ஷ்டமும் இந்தியாவின் துரதிர்ஷ்டமும் அப்போது ஆரம்பித்தது.

அவர் வந்து சேர்ந்த காலம் இந்தியாவுக்குக் கெட்ட காலம்.  முந்திய வருடம் (1875) தென்கிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதால் வானம் பார்த்த விவசாயிகள் நெருக்கடியில் இருந்தார்கள்.  அந்த வருடமும் பருவமழை தவறியது.  சென்னை மாகாணத்தில் தகிக்கும் வெயிலில் நீரின்றி பயிர்கள் வாடின. விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து நின்றன.  சென்னை ஆளுனர் பக்கிங்காம் பிரபுவும் அவரது உதவியாளர்களும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தனர்.  அரசு பெரிய அளவில் உதவாவிட்டால் அடுத்த ஆண்டு பெரும் பஞ்சம் ஏற்படும் என்று லிட்டனுக்கு கடிதம் எழுதினர்.  பஞ்சத்தை எதிர்கொள்ள இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து தானிய ஏற்றுமதியைத் தடை செய்து அரசே தானியத்தை வாங்கி மக்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்ய அனுமதி கோரினர்.

ஆனால் லிட்டனோ, ஒரு பொருளாதார லிபர்டேரியன் – சந்தைப் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.   ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் (Wealth of Nations) தான் அவருக்கு பைபிள். எந்தவொரு நிலைமையும் சந்தை பார்த்துக் கொள்ளும், அரசு தலையிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.  பக்கிங்காம் போன்றவர்களின் எச்சரிக்கையைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டார்.

1876ம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் தென்னிந்தியப் பிரஜைகள் பட்டினியால் பல்லாயிரக்கணக்கில் மாளத் தொடங்கியபோது லிட்டன் லட்சக்கணக்கில் செலவழித்து டெல்லியில் ஒரு பெரும் தர்பாரை நடத்திக் கொண்டிருந்தார்.   லிட்டனுக்கு இந்த தர்பார் ஒரு கெளரவப் பிரச்னை.  வைஸ்ராயானவுடன் ஏதாவது செய்து விக்டோரியாவை அசத்த இந்த தர்பாருக்கு ஏற்பாடு செய்திருந்தார். 68,000  இந்திய அரசர்களும், குறுநில மன்னர்களும், ஜமீந்தார்களும் டெல்லியில் ஒரு வார காலம் கூடி விருந்துண்டு இரண்டாம் விக்டோரியாவுக்கு பயபக்தியுடன் தலை வணங்கி தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

அப்படி அவர்கள் உல்லாசமாக இருந்த ஒரு வார காலத்தில் மட்டும் தென்னிந்தியாவில் ஒரு லட்சம் பேர் பட்டினியால் இறந்தனர்.

அப்படியென்ன பெரிய பஞ்சம் என்று கேட்கிறீர்களா?. தாது வருடப் பஞ்சம் என்று நாட்டார் பாடல்களிலும்,  உள்ளூர் இலக்கியங்களிலும் (1876, இந்து பஞ்சாங்கப்படி தாது வருடம்) அறியப்படும் இந்தப் பஞ்சத்தைப் போல கடுமையான பஞ்சத்தைத் தமிழகம் அதுவரை கண்டதில்லை.  முன்பு பஞ்சம் என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி பரவாது.  தானியங்களின் விலை ஒவ்வொரு பகுதியில் கிடைத்த விளைச்சலைப் பொறுத்தே அமைந்தது. மேலும் ஓரிடத்தில் விளையும் தானியம் பெரும்பாலும் அதன் சுற்று வட்டாரங்களில் மட்டுமே விற்கப்பட்டது.  பிரிட்டிஷ்காரர்கள் ரயில்களையும், தபால் தந்தியையும் அறிமுகப்படுத்தியபின் இந்த நிலை மாறியது.  ரயில்களின் மூலம் தானியத்தை எளிதாக தொலை தூரத்துக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. தானிய விலைகளில் ஊக வணிகம் தொடங்கியது.  ஒரு பகுதியில் நடக்கும் விஷயங்கள் தந்தி மூலம் விரைவில் அனைத்து இடங்களுக்கும் தெரிய வந்தன.  இதனால் நன்மை விளைவதற்குப் பதில் பெருந்தீங்கு உண்டானது.

தென்னிந்தியாவில் பஞ்சம் என்று கேள்விப்பட்டவுடன் தானிய விலை இந்தியாவெங்கும் உயரத் தொடங்கியது.  வியாபாரிகள் கிடைத்த தானியத்தையெல்லாம் பதுக்கத் தொடங்கினர்.  கட்டுப்பாடற்ற ஊக வணிகர்கள் வேண்டுமென்றே தானியத்தின் விலையை உயர்த்தினர்.  அடுத்த வருடம் விளைச்சல் சுத்தமாக இருக்காதென்பது அவர்களுக்குத் தெரியும்,  பதுக்கிய தானியத்தை அடுத்த வருடம் கொள்ளை லாபத்துக்கு விற்கலாம் என்ற பேராசை அவர்களை இப்படிச் செய்ய வைத்தது.  மாதங்கள் செல்லச் செல்ல நிலை மோசமானது.  சாப்பிட ஒன்றும் கிடைக்காமல், விவசாயிகள் பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் போகத் தொடங்கினர்.  உணவின்றி நலிந்திருந்த அவர்களது தேகங்களால் பயணத்தின் அலுப்பைத் தாங்க முடியவில்லை. வழியிலேயே பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர்.  மக்களின் அவலநிலையை அக்காலத்தில் மலை மருந்தன் என்ற புலவர் தனது பஞ்சக் கும்மியில் இப்படி பதிவு செய்துள்ளார்:

வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை
விற்கவும் கையில் இல்லாமல் கடன்
கேட்ட இடத்தில் கிடைக்காமல் சிலர்
கெஞ்சி இரக்கிறார் பாருங்கடி

எறும்பு வலைகளை வெட்டி அதனில்
இருக்கும் தானியம் தான் எடுத்து
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி

குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் பணம்
கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்
இடிக்குப் பயந்த பாம்புகள் போலே
ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி

பஞ்சத்தில் அடிபட்டவர்கள்

மக்கள் லட்சக்கணக்கில் மடியத் தொடங்கியதும் மாகாண அரசாங்கங்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பக்கிங்காமின் கைகளைத்தான் லிட்டன் கட்டிவிட்டாரே. தானியத்தின் விலையைக் குறைக்க அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மக்களை உயிரோடு வைத்திருப்பது அரசின் கடமையல்ல. இன்று பஞ்ச காலத்தில் நாம் அவர்களுக்கு சோறு போட்டால் அவர்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகி விடும். பஞ்சம் முடிந்த பின்னரும் சோறு போடச் சொல்லிக் கேட்பார்கள். அதனால் நீர் பேசாமல் இருமென்று பக்கிங்காமுக்குக் கண்டிப்பாகச் சொல்லி விட்டார் லிட்டன்.

ஆனால் சென்னை மாகாணத் துரைகளால் கண்முன்னே பல லட்சம் பேர் சாவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை. என்ன தான் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களது மனசாட்சிகள் உறுத்தின. பக்கிங்காம் தாமாகவே நிவாரணப் பணிகளைச் சென்னை மாகாணத்தில் தொடங்கினார்.  நலிந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பதில் உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார் (சென்னையின் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இப்படித்தான் கட்டப்பட்டது). இந்த செய்தியைக் கேட்டவுடன் லிட்டனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. நான் சும்மாயிரு என்று சொல்கிறேன், இவன் பாட்டுக்கு நிவாரணப் பணி செய்து கொண்டிருக்கிறான். அரசாங்கப் பணத்தை எடுத்து பசித்தவர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறான் என்று குதித்தார்

பக்கிங்காமின் கைகளைக் கட்ட சர் ரிச்சர்ட் டெம்பிளை தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் லிட்டன்.  1873-74ல் பிகாரில் நிகழ்ந்த பஞ்சத்தில் அரசாங்கப் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து உயிர்களைக் காத்ததற்காக உயரதிகாரிகளிடம் செமையாக வாங்கிக் கட்டிகொண்ட அனுபவம் டெம்பிளுக்கு இருந்தது. இம்முறை அந்தத் தப்பைச் செய்யாமல் எப்படியாவது பஞ்ச நிவாரண செலவுகளைக் குறைக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டு அவர் சென்னைக்குக் கிளம்பினார்.  பஞ்சக் குழு ஆணையாளர்( famine commissioner) என்ற அதிகாரமும் அவருக்கு இருந்தது.  சென்னை வந்தவுடன் முதல் வேலையாக பஞ்ச நிவாரணத்தில் அதிரடியாக கெடுபிடிகள் செய்யத் தொடங்கினார்.  ஒரு நாளுக்கு ஒரு ஆளுக்கு 1627 கலோரி உணவு கொடுத்தால் போதுமென்று அறிவித்தார்.

இவ்வளவு குறைவான நிவாரணம் கூட இலவசம் கிடையாது. நிவாரணம் வேண்டுமென்றால் நாள் முழுவதும் உழைக்க வேண்டும். சரியான உணவின்றி மக்களால் நடக்கக் கூட முடியாது. பின் எப்படி வேலை செய்வார்கள்? சுருண்டு விழ ஆரம்பித்தனர்.  டெம்பிளின் கண்களுக்கு அவர்கள் வேண்டுமென்றே வேலையைப் புறக்கணிப்பதாகத் தோன்றியது.  நிவாரண விதிமுறைகளை மேலும் கடுமைப் படுத்தினார்.  சென்னை மாகாணமெங்கும் பிணக்காடாக மாறியது.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுள் நல்ல மனது படைத்தவர்களால் பின்னர் விதிகள் தளர்த்தப்பட்டு நிவாரணம் ஓரளவு உயர்த்தப்பட்டது.

1877 ல் லட்சக்கணக்கில் பட்டினிச்சாவுகள் நடந்தன. டெம்பிளின் நிவாரணத் திட்டம் மக்கள் சாகும் விகிதம் உயருவதை ஓரளவு தான் தடுத்தது.  இதுவரை கண்டிராத அளவு உயிர்ச்சேதம் இருந்ததால் இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சிப்பாய் புரட்சிக்குப் பின் சற்று அடங்கியிருந்த ஆங்கில எதிர்ப்புணர்வு மீண்டும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  இந்திய பத்திரிகைகள் பஞ்சத்தின் அவலத்தை உலகிற்கு அம்பலப்படுத்தின.  பிரிட்டிஷ் மனிதாபிமானிகளும் பஞ்சத்தின் கடுமையைத் தணிக்க ஏதாவது செய்யுங்கள் என்று வற்புறுத்தத் தொடங்கினர்.  பிரிட்டிஷ் மேலிடத்திலிருந்து என்ன நடக்கிறதென்று லிட்டனை விசாரித்தனர்.

அதுவரை சிம்லாவில் ஜாலியாக விடுப்பில் இருந்த லிட்டன் எரிச்சலுடன் நிலைமையை நேரடியாகத் தெரிந்து கொள்ள தலைநகர் கல்கத்தாவுக்குக் (1911ல் தான் டெல்லி இந்தியாவின் தலைநகராகியது) கிளம்பினார்.  கல்கத்தாவில் 1877  பருவ மழையும் தவறி விட்டதென்று கேள்விப்பட்டார்.  மக்களைப் பற்றிய கவலையை விட, ஐயோ இன்னொரு வருஷம் நிவாரணத்துக்கு செலவு செய்ய வேண்டுமேயென்ற கவலை அவருக்கு.  பக்கிங்காமைக் கட்டுப்படுத்த டெம்பிளை நம்பி இனி பிரயோஜனமில்லையென்று அவரே சென்னைக்குக் கிளம்பி வந்தார்.

சென்னையின் வேலை முகாம்களில் சுருண்டு கிடந்த மனித எலும்புக்கூடுகள் அவர் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கவில்லை, மாறாக எரிச்சலையே கிளப்பின. இந்த பக்கிங்காம் ஏதோ தன் பண்ணையில் எருமை மாடுகளை வளர்ப்பதைப் போலல்லவா சோம்பேறி மக்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறான். இதை உடனே நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். கிடைத்த கொஞ்ச நஞ்ச நிவாரணமும் நின்று போனதால் தென்னாடெங்கும் கலவரங்கள் மூண்டன.

அந்த வருட இறுதியில் மழை பெய்திராவிட்டால் நாட்டில் என்ன நடந்திருக்குமென்று சொல்ல முடியாது.  1878 ஆம் ஆண்டு வரை பஞ்சமும் நோயும் மக்களை வதைத்த வண்ணமிருந்தன.  லிட்டனின் அலட்சியப் போக்குக்கு தென்னிந்தியா கொடுத்த விலை ஒரு கோடி உயிர்கள். சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையே அப்போது மூன்று கோடி தான்.

இவ்வளவு உயிர்ச்சேதமிருந்தும் ஏன் லிட்டன் இப்படி நடந்து கொண்டார்? அவரது கொள்கைப் பிடிப்பு ஒரு காரணம்.  அவர் கொண்டிருந்த லேசே ஃபேர் (laissez-faire)  பொருளாதாரக் கொள்கைகளின் படி சந்தைதான் முதன்மையானது, அதில் அரசின் தலையீடு கூடவே கூடாது.   பஞ்சம் வருவதும் மக்கள் சாவதும் சகஜம் தான், மக்கள் தொகை இப்படியாவது குறையட்டுமென்ற அலட்சியமும் லிட்டனுக்கு இருந்தது.  இந்திய மக்களுக்காக பிரிட்டன் ஒரு பைசா செலவு செய்யக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தார் லிட்டன். ஆனால் அதே சமயம் பஞ்ச நிவாரணத்துக்காகச் சேர்க்கப்பட்ட நிதியை ஆஃப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிறுவுவதற்காக தண்ணீராகச் செலவு செய்தார்.   பஞ்ச காலத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அவரது அரசியல் வாழ்க்கையைக் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை.

ஆனால் எந்த ஆஃப்கானிஸ்தான் போருக்காக, பஞ்சப் பணத்தை செலவு செய்தாரோ அந்த போரில் ஏற்பட்ட தோல்வியே 1880ல் அவரது பதவிக்கு உலை வைத்தது.  1876-78 க்குப் பின்னர் இந்தியாவில் பல கடுமையான பஞ்சங்கள் வந்துள்ளன.  ஆனால் 1876 பஞ்சமும் லிட்டனின் நடத்தையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அலட்சியத்தியத்தையும், சந்தை பொருளாதாரத்தின் கொடிய முகத்தையும் இன்றுவரை உலகிற்கு பறை சாற்றுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வர்க்கப் போராளி

பால் பாட்

பால் பாட்

நரகத்துக்குப் போகும் பாதை நல்லெண்ணங்களால் உருவாக்கப்படுகிறது (The road to hell is paved with good intentions) என்பார்கள். நல்லெண்ண முயற்சிகள் நரகத்துக்குக் கொண்டுபோகுமோ இல்லையோ அதிகார வெறியும், அரைவேக்காட்டுச் சித்தாந்தங்களும், வறட்டுக் கொள்கைப்பிடிப்பும் ஆட்சியாளர்களிடம் இருந்தால் அவர்கள் ஆளும் நாடே நரகம் ஆகிவிடும் என்பது உறுதி. 1970-களில் கிமேர் ரூஜ் இயக்கம் ஆட்சி புரிந்த கம்போடியா நாட்டின் கதியும் இதுவே.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் தென்கிழக்காசியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஜப்பானின் ஆக்கிரமிப்பும், பின் அதிலிருந்து கிடைத்த விடுதலையும் ஐரோப்பியக் காலனி ஆதிக்கத்தில் நூற்றாண்டுகளாகச் சிக்கியிருந்த நாடுகளுக்கு வெளி உலகத்தைப் புரியவைத்தன. கம்யூனிசம், ஜனநாயகம் போன்ற புதிய கவர்ச்சியான சித்தாந்தங்கள் இப்பிரதேச மக்களுக்கு அறிமுகமாயின. கம்போடியா நாட்டிலும் இதே நிலைதான். 1863 முதல் பிரான்சின் காலனியாக இருந்த கம்போடியா 1941-45-ல் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1945-ல் ஜப்பானியர்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் பிரான்சின் கட்டுப்பாட்டில் வந்தாலும் சுதந்தரம் வேண்டும் என்ற குரல்கள் கம்போடியாவில் வலுக்கத் தொடங்கின. 1953-ல் பிரான்சு கம்போடியாவுக்குச் சுதந்தரம் அளித்துவிட்டு விலகிக்கொண்டது.

விடுதலை கிடைத்தவுடன் கம்போடியாவில் நிலையான அரசு அமையவில்லை. முடியாட்சியும் ஜனநாயகமும் கலந்த ஒரு விதமான constitutional monarchy ஆட்சிமுறை அமலுக்கு வந்தாலும் ஆட்சியைக் கைப்பற்ற பல கோஷ்டிகள் போட்டியிட்டன. அவற்றுள் ஒன்று கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி. பின்னாளில் பால் பாட் என்ற பெயரில் பிரபலமடைந்த சலோத் சார், தன் அரசியல் வாழ்க்கையைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டனாகவே தொடங்கினான்.

சலோத் சார் ஏழையோ, விவசாயியோ கிடையாது. அவன் ஒரு வசதியான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். கம்போடியாவின் சிறந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்தான் கல்வி கற்றான். 1949-ல் பாரிசுக்குப் போய் எலக்ட்ரானிக்ஸ் படிப்பதற்கு அவனுக்கு உதவித் தொகையும் கிடைத்தது. பாரிசுக்குப் போன சார், படிப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதில் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினான். ஐரோப்பிய கம்யூனிஸ்ட் அமைப்புகளில் சேர்ந்து பல நாடுகளுக்குச் சென்றான். கட்சியில் கவனம் செலுத்தியதால், படிப்பில் தேறமுடியவில்லை. மூன்றாண்டுகள் தொடர்ந்து தேர்வுகளில் தோல்வி அடைந்ததால், கிடைத்துவந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு கம்போடியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டான்.

1954-ல் சார் கம்போடியா திரும்பியபோது அவனது நாட்டில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அரசர் நோரதாம் சிஹானக் தலைமையில் கம்போடியா சுதந்தரம் அடைந்திருந்தது. ஆனால் முன்னர் பிரான்சின் ஆட்சியின்கீழ் இருந்தபோது கம்போடியாவின் பகுதியாக இருந்த வியட்நாமைப் பிரித்தபின்னரே கம்போடியாவுக்கு விடுதலை வழங்கியிருந்தனர் பிரெஞ்சுக்காரர்கள். வியட்நாமில் ஹோ சி மின் தலைமையில் வியட் மின் கம்யூனிச இயக்கம் பிரெஞ்சு காலனி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி வந்தது. சார் கம்போடியா திரும்பப்போகிறான் என்பதை அறிந்த பிரெஞ்சு கம்யூனிஸ்டுகள் கம்போடியாவின் எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கலாம் என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்யும்படி அவனிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி கம்போடிய இடதுசாரி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் சார்.

சுதந்தர கம்போடியாவில் பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே அப்போது பலப்பரீட்சை நடந்துகொண்டிருந்தது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளும் தங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய கட்சிகளை ஆதரித்துவந்தன. இதேபோல கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெரும்பாலானோர் வியட்நாம் கம்யூனிஸ்டுகளின் சொல்படி நடந்து வந்தனர். இத்தகைய குழப்பமான சூழ்நிலையை மன்னர் சிஹானக் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். சிஹானக்கை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், வியட்நாம் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கோஷ்டிப் பூசலை ஊதிவிட்டு தனது நிலையை பலப்படுத்திக்கொண்டார். கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தன்னை எதிர்த்த கம்யூனிஸ்ட் தலைவர்களை ஒழித்துக்கட்டினார்.

1960 வரை கம்யூனிஸ்டுகளின் கோஷ்டிப் பூசல் நீடித்தது. சலோத் சார் அப்போது சிஹானக்கைக் கடுமையாக எதிர்த்த கோஷ்டியில் இருந்தான். அவனது கோஷ்டியின் பல தலைவர்களை அரசு கைது செய்ததால், வெகு சீக்கிரம் இயக்கத்தில் வளர்ந்து உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவனாகி விட்டான். இந்தக் காலகட்டத்தில்தான் தலைமறைவாக இருந்த அவன், பால் பாட் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினான்.

1960-ல் மீதம் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கோஷ்டிகள் விழித்துக்கொண்டு ஒன்றிணைந்தன. ஒருங்கிணைந்த கம்யூன்ஸ்ட் கட்சியின் மூன்றாவது முக்கியமான தலைவனாக ஆனான் பால் பாட். 1962-ல் சிஹானக் அரசு கம்யூன்ஸ்ட் தலைவர் சமொவுத்தைக் கைது செய்து சிறையில் அடைத்ததால், பால் பாட்டுக்கு ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்தது.

கட்சி முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன் ஆயுதப் புரட்சிமூலம் கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடங்கினான் பால் பாட். கம்போடியாவின் கிராமப்புறங்களில் சிஹானக் அரசை எதிர்த்துத் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியது கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி. கிராமப்புறங்களில் பெரும் ஆதரவு கிடைத்தாலும் நகர்ப்புற மக்கள் கம்யூனிஸ்டுகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஏற்கெனவே நகரவாசிகள் கம்யூனிசச் சமூகத்துக்கு ஒத்துவராத வர்க்கம் என்று நம்பிக்கை கொண்டிருந்த பால் பாட்டுக்கு அவர்களின் அசிரத்தை கோபத்தை உண்டாக்கியது.

அடுத்த பல ஆண்டுகளுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிஹானக் அரசும் தீவிர பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆனால் இந்தச் சண்டையில் யாருக்கும் தெளிவான வெற்றி கிட்டவில்லை. சர்வதேச அளவில் ஆதரவில்லாத கம்யூனிஸ்டுகளால் சிஹானக் அரசை ஒன்றும் செய்யமுடியவில்லை. அதே சமயம், விவசாயிகளிடம் ஓரளவு ஆதரவு பெற்றிருந்ததால் அவர்களை சிஹானக்கால் வேரோடு அழிக்க முடியவில்லை. அண்டை நாடான தெற்கு வியட்நாமில் அமெரிக்காவுக்கும் கம்யூனிஸ்ட் வடக்கு வியட்நாமுக்கும் போர் முற்றியிருந்த காலம் அது. அங்கே சண்டையிட்டுக்கொண்டிருந்த இரு தரப்புகளுக்கும் சிஹானக்கின் தயவு தேவையாக இருந்ததால், இருவருமே பால் பாட்டின் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க மறுத்துவிட்டனர்.

1960-களின் இறுதியில் நிலை மெல்ல மாறியது. அமெரிக்கர்கள், வியட்நாமிய கம்யூனிஸ்டுகள், உள்ளூர் வலதுசாரிக் கட்சிகள் என அனைவரையும் ஒரே நேரத்தில் சமாளித்து வந்த சிஹானக், சற்றே சறுக்கினார். 1970-ல் அவர் பெய்ஜிங் சென்றிருந்தபோது அவரது வலதுசாரி அரசாங்கம் அவரை நாட்டுத் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது. வேறு வழியில்லாமல், சிஹானக் பால் பாட்டின் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவாளரானார். புதிய அரசாங்கத்தைப் பிடிக்காத வடக்கு வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்வேறு கம்போடியாமீது தாக்குதல் நடத்தி குட்டையைக் குழப்பினார்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் கம்போடியாவில் உள்நாட்டுப் போராலும், நிலையற்ற அரசு அமையாததாலும் பெரும் குழப்பம் நிலவியது.

இந்த சூழலைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டான் பால் பாட். கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் பெருகத் தொடங்கியது. முன்பு பால் பாட்டை ஒதுக்கித் தள்ளிய சீனாவும் வடக்கு வியட்நாமும் அவனுக்கு நிதி உதவியும் ஆயுத உதவியும் அளிக்கத் தொடங்கின. கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் கம்போடியாவின் பெரும்பான்மையான பகுதிகள் பால் பாட்டின் கட்டுப்பாட்டில் வந்தன. 1975-ல் அரசாங்கம் சரணடைந்து, முழு நாடும் கம்யூனிஸ்டுகள் வசமானது. கம்போடியாவின் கெட்ட காலமும் ஆரம்பமானது.

பதவிக்கு வந்தவுடன் பால் பாட் முதல் வேலையாக தனது எதிரிகள் பட்டியலில் இருந்த அனைவரையும் கைது செய்தான். அவனது கிட்டத்தட்ட இருபது வருட புரட்சி வாழ்க்கையில் அந்தப் பட்டியலில் நிறையப் பேர் சேர்ந்திருந்தார்கள். அனைவரையும் மேலே அனுப்பி, தன் ஆட்சியை நிலைநாட்டிக்கொண்டான் பால் பாட். ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று ஆனபின், கம்போடிய சமுதாயத்தைத் தனக்குப் பிடித்த மாதிரி மாற்றும் முயற்சிகளில் இறங்கினான். பால் பாட்டின் கம்யூனிசம், மா சே துங்கின் கம்யூனிசத்தைப்போல கிராமப்புற கம்யூனிசம். அதன் கோட்பாடுகளின்படி ஆதர்ச சமூகத்துக்கு நகரங்களோ, படித்தவர்களோ, பணமோ தேவையில்லை. உழவர்கள் மட்டும் போதும்.

அத்தகைய சமூகத்தை வலுக்கட்டாயமாக கம்போடியாவில் உருவாக்கத் தொடங்கினான் பால் பாட். தலைநகர் நாம் பென், பால் பாட்டின் கட்டுப்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இந்த முயற்சி தொடங்கிவிட்டது. கிமேர் ரூஜின் கட்டுப்பாட்டில் வந்த நகரங்கள் காலி செய்யப்பட்டு மக்கள் அனைவரும் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். முதலில் விவசாயம்; அப்புறம்தான் மற்றதெல்லாம் என்று தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும்வரை வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்தது.

விவசாயத்தில் கவனம் செலுத்துவது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா. விவசாயத்துக்கு முன்னுரிமை தருவது நல்லதுதான், ஆனால் அதைத் தவிர வேறு எதுவுமே கூடாது என்றால், நாடு எப்படி உருப்படும்? ஆலைகள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் ஒழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன், கிமேர் சமுதாயத்தில் பணம்கூட ஒழிக்கப்பட்டு, பண்ட மாற்றுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதங்கள் தடை செய்யப்பட்டு கிறிஸ்தவப் பாதிரியார்களும் புத்தத் துறவிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். நிலங்கள் மட்டுமல்லாமல் எல்லாச் சொத்துகளும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. மக்கள் யாரும் எந்தப் பொருளுக்கும் தனியுரிமை கொண்டாடக்கூடாது. எல்லாம் பொதுச் சொத்து. குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தாய்மார்களால் வயல்களில் வேலை செய்ய முடியாது என்று கைக்குழந்தைகள்கூட அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு அனாதை ஆசிரமங்களில் வளர்க்கப்பட்டன.

ஒரு தேசத்தை இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தலைகீழாகப் புரட்டிப்போட்டால் எவ்வளவு சேதம் விளையும் என்பதைப் பற்றி பால் பாட்டின் கம்யூனிஸ்டுகளுக்குக் கவலை கிடையாது. அவர்களது கவனம் எல்லாம் ஒரு விவசாய சொர்க்கபுரியை எந்த விலை கொடுத்தாவது உருவாக்கிவிடவேண்டும். மருத்துவர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள் எல்லாம் அவர்களின் புதிய கிராமப்புறச் சொர்க்கத்துக்குத் தேவையில்லை. புதிய மக்கள் (New people) என்று இளக்காரமாகப் பெயரிடப்பட்ட இவர்கள், வேலை முகாம்களில் அடைக்கப்பட்டு விளை நிலங்களில் வேலை செய்யும் அடிமைகள் ஆக்கப்பட்டனர். கடுமையான உடலுழைப்பை அனுபவித்திராத அவர்களுள் பெரும்பாலானோர் வேலைப்பளுவைத் தாங்க முடியாமல் மடிந்தனர். இந்தக் கூட்டு விவசாய நிலங்களை (cooperative farms) சரிவர நிர்வாகம் செய்யமுடியாமல் போனதால் விளைச்சலும் பெருகவில்லை.

பால் பாட்டால் கொல்லப்பட்ட சிலரது மண்டையோடுகள்

பால் பாட்டின் அரசு ஒன்றும் விவசாயிகளால் ஆன அரசு இல்லை. அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் புதிய மக்களே. பால் பாட்கூட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் படித்தவன்தான். ஒரு நாள்கூட நிலத்தில் இறங்கி அவன் உழுதது கிடையாது. விவசாயத்துக்கு என்ன தேவை என்பதும் அவனுக்குத் தெரியாது. வெறும் வறட்டுக் கொள்கைப்பிடிப்பு மட்டுமே அவனிடம் இருந்தது. அவனது சகாக்களில் பெரும்பாலானோரும் அவனைப் போலவே நடைமுறை அனுபவம் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட அரைவேக்காட்டு அரசாங்கம் யதார்த்தத்துக்குத் துளியும் சம்பந்தம் இல்லாமல் ஒரு விவசாயக் கனவுலகைப் படைக்க முயற்சி செய்ததின் விலை இருபது லட்சம் உயிர்கள்.

நகரங்களைக் காலி செய்து அனைவரும் கிராமப்புறங்களுக்குப் போய்விட்டதால், கம்போடிய சமூகம் வேலை செய்யாமல் நின்றுபோனது. எல்லோரும் விவசாயிகள் ஆகிவிட்டதால், நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர்கள் இல்லை, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க விஞ்ஞானிகள் இல்லை, அடுத்த தலைமுறைக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை, சாலைகளை உருவாக்கப் பொறியாளர்களும் இல்லை. அண்டை நாடுகளிடம் பிச்சை எடுக்கலாம் என்றால் அதற்கு அவசியமான வங்கி வசதிகளோ பொருளியலாளர்களோ இல்லை. கூட்டு முயற்சி வயல்களில் கம்யூனிசக் கோட்பாடுகளுக்கு ஏற்ப விவசாயம் நடந்ததால் விளைச்சலும் இல்லை. மக்கள் லட்சக்கணக்கில் மடியத் தொடங்கினர். எந்த விளைநிலங்களைக் கொண்டு புதியதொரு உலகைப் படைக்க பால் பாட் முயன்றானோ அவை கொலை நிலங்களாக மாறின.

என்ன பிரச்சனை வந்தாலும் உழைக்கும் வர்க்கம் அதை எதிர்கொண்டு தீர்வு காணும் என்ற கோட்பாடு நடைமுறையில் சாத்தியமாகவில்லை. கிடைக்கும் கொஞ்சம் உணவை உண்டு நாளெல்லாம் எலும்பு தேய உழைப்பவர்களுக்கு, புதிய விவசாய நுட்பங்களையும் உரங்களையும் பற்றி ஆராய எப்படி முடியும்? விவசாயம் நொடித்துப்போனது. பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடின. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பால் பாட் அரசாங்கம் தங்கள் கொள்கைகளை எதிர்த்தவர்களை எல்லாம் கொன்று குவித்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள்கூட இது மடத்தனம் என்று சொன்னவர்கள் அழித்து ஒழிக்கப்பட்டார்கள். தப்பித்தவறிப் பிழைத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

ஒரு வகையில் பால்பாட்டின் கிறுக்குத்தனமே கிமேர் ரூஜ் அரசுக்கு முடிவு கட்டியது. தன் நாட்டில் மட்டும் இப்படி ஒரு அபூர்வ சமூகத்தை உருவாக்கினால் போதாது, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கம்போடியர்கள் ஆண்ட பரந்த பேரரசைப்போல இப்போது ஒன்றை உருவாக்கி அதையும் ‘விவசாய சொர்க்கபுரி’யாக மாற்றவேண்டும் என பால் பாட் முடிவு செய்தான். நல்ல வேளை, பக்கத்து நாடான வியட்நாமிலும் கம்யூனிஸ்டுகளே ஆட்சியில் இருந்தாலும், கிமேர் ரூஜ் கோட்பாடுகள் எவ்வளவு அபாயமானவை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆரம்பத்தில் பால் பாட் அரசுடன் நட்பாக நடக்கப் பார்த்தார்கள். ஆனால் கிமேர் ரூஜ் அரசு வியட்நாமைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்ததால், இரு நாடுகளுக்கும் இடையே பகை வளர்ந்து, 1978-ல் போராக மூண்டது.

அமெரிக்காவை எதிர்த்து சண்டையிட்டு தாக்குப் பிடித்திருந்த வியட்நாமியப் படைபலத்தின்முன் பால் பாட்டின் படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கம்போடியா வியட்நாம் வசமானது. ஆனால் பால் பாட்டும் கிமேர் ரூஜும் முற்றிலுமாக ஒழியவில்லை அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்திருந்து வியட்நாம் உருவாக்கிய கம்போடிய அரசை எதிர்த்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தான் பால் பாட். ஆனால், கிமேர் ரூஜ் கட்சியின் உள்ளே பால் பாட்டின் செல்வாக்கு சரிந்து, கொஞ்சம் கொஞ்மாக அவன் ஓரம் கட்டப்பட்டான். 1997-ல் கிமேர் ரூஜ் ஆயுதப்போரைக் கைவிட்டு சரணடைய ஒப்புக்கொண்டது.

ஆனால் பால் பாட் மட்டும் உயிருடன் சிக்கவில்லை. அவனை அரசிடம் ஒப்படைக்கிறோம் என்று கிமேர் ரூஜ் உறுதி அளித்த சில நாட்களிலேயே மர்மான முறையில் அவன் இறந்து போனான். அரைவேக்காட்டு சித்தாந்திகளின் கையில் அதிகாரம் சிக்கினால் சமூகம் என்ன பாடுபடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது பால் பாட்டின் வாழ்க்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புரட்சித் தளபதி!

தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ

ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ.

ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.)

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதியிலிருந்த பல மாநிலங்கள் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் சேர்ந்தன. ஆனால் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழிக்க முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் மிகப்பெரும்பான்மையானோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் தொழிலாளிகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்கள் அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கத் தயாராக இல்லை. இரு தரப்பும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒரு சமரசத்துக்கு வந்தார்கள் – தென் மாநிலங்கள் அடிமைமுறையைப் பின்பற்றலாம். ஆனால் வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

 

ஆப்ரஹாம் லிங்கன்

இந்த சமரசம் வெகு நாள்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கா அப்போது மேற்கு நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாநிலங்கள் அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய மாநிலங்களில் அடிமைமுறையை அமல்படுத்துவது பற்றி இரு தரப்புக்கிடையில் மீண்டும் பிரச்னை எழுந்தது. இந்த நிலையில்தான் அடிமைமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆப்ரஹாம் லிங்கன் 1861-ல் அமெரிக்க அதிபரானார். லிங்கன் அதிபரானால் தங்கள்மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று தென் மாநிலங்கள் நினைத்தன. லிங்கனைத் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்த தென்மாநிலங்கள், அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. கான்ஃபெடரசி என்ற பெயரில் புதிய நாடு ஒன்றை உருவாக்கின. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதால், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ. லீ.

லீ, வர்ஜீனியா மாநிலத்தில் ராணுவப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து அமெரிக்க ராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகச் சேர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். 1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறையைப்பற்றி அழுத்தமான கருத்துகள் கிடையாது. சமகாலத்திய அமெரிக்கர்களில் மிகப் பெரும்பாலானோர் கருதியதுபோலவே அவரும் கறுப்பர்களை வெள்ளையர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்தார். அவர் பிறந்த வர்ஜீனியா மாநிலம், தென் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்தது. அங்கு பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவில்தான் இருந்தன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீடுகளில்தான் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்தனர். பண்ணையடிமைகள் படும் கொடுமைகளை லீ நேரடியாகப் பார்த்து அறிந்திருக்கவில்லை. இதனால் அடிமைமுறையை அவர் ஆதரிக்கவில்லை என்றாலும், அது ஒழிக்கப்படவேண்டியது என்று அவர் கருதவில்லை.

கறுப்பர்களுக்கு முழு விடுதலை அளித்தால் அவர்களால் தனியாக வாழ இயலாது; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் அவர்களுக்கு அவசியம் என்றே லீ கருதினார். ஆனால் அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிரித்துப் புதிய நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பவில்லை. தென் மாநிலத்தின் அரசியல்வாதிகளைப் பற்றியும் அவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது.

கான்ஃபெடரேட் மாநிலங்கள் பிரிந்துபோனபோது வரிஜீனியா உடனடியாக அவற்றுடன் சேரவில்லை. போர் நிச்சயம் என்று முடிவானபின் இரு தரப்புகளும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்தொடங்கின. அனுபவம் வாய்ந்த படைத்தளபதிகளுக்கு இருதரப்பிலும் நல்ல கிராக்கி இருந்தது. லீயின் ராணுவ அனுபவமும் திறமையும் அவருக்கு ராணுவத் தரப்பில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தன. எனவே ஆபிரகாம் லிங்கன், தங்கள் தரப்புக்கு வந்தால் வட அமெரிக்கப் படையில் பெரிய பதவி தருவதாக லீக்கு செய்தி அனுப்பினார். ஆனால் லீ பிறந்த வர்ஜீனியா அதற்குள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து தென் மாநிலங்களுடன் சேர்ந்துகொண்டது. போர் மூண்டால் தனது மாநிலத்துக்குப் பெரும் சேதம் உண்டாகும் என்று லீக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் சொந்த மண்ணின் விசுவாசம் அவரைத் தென்மாநிலப் படையில் சேர வைத்தது. வட அமெரிக்காவைப்போல தென் மாநிலங்கள் தொழில் மயமான பகுதிகள் அல்ல. அவற்றின் படைபலமும் வடக்கின் படைபலத்தைவிடக் குறைவு.

 

ஜெனரல் லீ

போர் தொடங்கினால் வெகுசீக்கிரம் வடஅமெரிக்கப் படைகள் கான்ஃபெடரேட் படைகளைத் தோற்கடித்துவிடும் என்று பரவலாக நம்பப்பட்டது. கான்ஃபெடரேட் படையில் சேர்ந்த லீ, தலைமைத் தளபதிகள் ஐவருள் ஒருவராக நியமிக்கப்பட்டார். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள படைகள் அவரது கட்டுப்பாட்டில் வந்தன. கான்ஃபெடரேட் தளபதியாக அவர் ஈடுபட்ட முதல் சண்டையே அவருக்குத் தோல்வியில் முடிந்தது. அவரது செல்வாக்கைப் பிடிக்காத அவரது உள்ளூர் எதிரிகள் அவரைப் போர்முனையிலிருந்து தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர் மீண்டும் போர்த் தளபதியாக மாறும் நிலை உருவானது. 1862-ல் வட அமெரிக்காவின் பெரும்படை ஒன்று கான்ஃபெடரசியின் தலைநகர் ரிச்மாண்டைத் தாக்க வந்தது. அப்போது ரிச்மாண்டைப் பாதுகாத்து வந்த கான்ஃபெடரேட் வடக்கு வர்ஜீனீயாப் படையின் தளபதி போரில் காயமடைந்ததால், அந்தப் பதவி லீக்குக் கிடைத்தது.

லீ தளபதியானது குறித்து தென்மாநிலங்களில் கடும் அதிருப்தி நிலவியது. அவருக்குத் தைரியமே கிடையாதென்றும், தாக்குதல் நடத்தாமல் சும்மா வெட்டியாக இருப்பாரென்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ நேர் எதிரான ஒன்று. ஒரே வருடத்தில் வட அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய கான்ஃபெடரசியை நான்கு ஆண்டுகள் தனது போர்த்திறமையால் தாக்குப்பிடிக்க வைத்தார் லீ. முதலில் ரிச்மாண்டின் அரண் நிலைகளைப் பலப்படுத்தியபின் அதனைத் தாக்கவந்த அமெரிக்க ஒன்றியப் படையை எதிர்த்துத் தாக்கினார். சில மாதங்களில் கான்ஃபெடரசியின் கதையை முடித்துவிடலாம் என்ற இறுமாப்புடன் வந்திருந்த வட அமெரிக்கத் தளபதிகள், லீயின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். கான்ஃபெடரசியைத் தாக்க வந்த வட அமெரிக்கப் படைகளை விரட்டியதோடு நிற்காமல், வட மாநிலங்களின்மீது படையெடுத்தார் லீ. பாதுகாப்புப் போர் (defensive war) நடத்தினால் கான்ஃபெடரசியால் நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். நாளாக ஆக ஆள் பலமும் ஆயுத பலமும் மிக்க அமெரிக்க ஒன்றியத்தின் பலம் கூடிக்கொண்டேதான் போகும். அதற்குள் ஒன்றியத்தின் குடிமக்களின் மன உறுதியைக் குலைத்து போர் வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளவேண்டும் என்று லீ முடிவு செய்தார். இதை நிறைவேற்ற வடக்கு வர்ஜீனியாப் படையுடன் அமெரிக்க ஒன்றியத்தின்மீது படையெடுத்தார்.

சில மாதங்களில் போர் முடிந்துவிடும், ஓடிப்போன தென் மாநிலங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மீண்டும் வந்து ஒன்றியத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் என்று எண்ணியிருந்த வட மாநில மக்களுக்கு லீயின் படையெடுப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. லீயின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தாலும் அவர் தன் படைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிப் பின்வாங்கிவிட்டார். ஆனால் தனது படையெடுப்பின் தாக்கம் போர்க்களத்தைவிட ஒன்றிய மக்களின் மனத்தில்தான் அதிகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து தோல்விகள் கிடைத்தால் அவர்கள் போர் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே அடுத்த ஆண்டு (1863) மீண்டும் வடக்கு நோக்கிப் படையெடுத்தார். அவரை எதிர்க்க அனுப்பப்பட்ட ஒன்றியப்படைகள் அனைத்தையும் முறியடித்து வேகமாக முன்னேறினார்.

லீ அளவுக்குத் திறமையுள்ள தளபதிகள் ஒன்றியப்படையில் அப்போது இல்லை. ஆனால் படை எண்ணிக்கையும் தளவாட எண்ணிக்கையும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. கெட்டிஸ்பெர்க் என்ற இடத்தில் லீயின் படையைத் தடுத்து நிறுத்தின ஒன்றியப்படைகள். மூன்று நாட்கள் பெரும் உயிர்ச்சேதத்துடன் கடும் சண்டை நடந்தது. லீயின் படை தோற்றுப் பின்வாங்கியது. அதோடு போரில் கான்ஃபெடரசி ஜெயிக்கும் கனவும் பொய்த்துப் போனது. அப்போதே கான்ஃபெடரசி சரணடைந்திருந்தால் பின் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம். லீ போன்ற திறமையான தளபதி ஒன்றியப் படைகளைச் சமாளிக்கவில்லை என்றாலும், போர் சீக்கிரம் முடிந்திருக்கும். கெட்டிஸ்பெர்க் சண்டைக்குப் பிறகு கான்ஃபெடரசியின் கதையை முடிக்கவந்த ஒன்றியப் படைகளைத் தாமதப்படுத்திப் போரிட்டார் லீ. ஆனால் ஒன்றியத்தின் படைபலத்தின் முன் லீயின் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு கான்ஃபெடரசியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, லீ அளவுக்குத் திறமை வாய்ந்த கிராண்ட், ஷெர்மன் என்ற இருவர் ஒன்றியப் படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகிவிட்டனர்.

1864-65ல் கான்ஃபெடரசியின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு அதன் பகுதிகள் ஒன்றியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியில்லாமல் கறுப்பின அடிமைகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் படைகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கினார் லீ. எப்படி இருக்கு கதை! எந்த அடிமைகள் கீழ்த்தரமானவர்கள், அவர்களுக்கு கொஞ்சம்கூட உரிமைத் தரக்கூடாது என்று கான்ஃபெடரசியை உருவாக்கி உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்களோ அதே அடிமைகளைக் கொண்டு கான்ஃபெடரசியைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. ஷெர்மன், கிராண்ட் இருவரின் படைகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் ஏப்ரல் 1865-ல் கான்ஃபெடரசி சரணடைந்தது. அடிமைமுறையும் ஒழிக்கப்பட்டது. கான்ஃபெடரசிக்காகப் போராடியவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. லீ நாடிழந்தவர் ஆனார். சில வருடங்கள் கழித்து அப்படி குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டபோது லீயும் அதற்கு விண்ணப்பித்தார். ஆனால் ஏனோ அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1870-ல் அவர் மரணமடைந்தபோது அவர் எந்த நாட்டின் குடிமகனும் இல்லை. அவர் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகே அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை திருப்பியளிக்கப்பட்டது.

லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் இவரெல்லாம் வில்லனா என்று தோன்றும். ஆனால் அவர் யாருக்காகப் போராடினார் என்பதைப் பார்த்தால் அவரால் மானுட சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது விளங்கும். கான்ஃபெடரசி ஒரு தீய அரசு என்பதில் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை. அடிமைமுறையைத் தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசம் அது. தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இந்த முறையைப் பரப்பவேண்டும் என்று முயன்ற நாடு அது. லீ இல்லை என்றால் ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய இந்தக் ‘கொடியவர்களின் கூடாரம்’ நான்காண்டுகள் பிழைத்து உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்தப் போர் நான்காண்டுகள் நடந்தற்கு லீதான் முக்கியக் காரணம். இத்தனைக்கும் அவருக்கு அடிமைமுறை மீது எந்தப் பற்றும் கிடையாது. தனது மாநிலத்தின்மீது வைத்திருந்த விசுவாசத்தால் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றப் பார்த்தார் லீ.

உள்நாட்டுப் போர் முடிந்து லீ இறந்து பல ஆண்டுகளாகியும் அவரது நினைவை அமெரிக்கத் தென் மாநிலங்களின் இனவெறியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உள்நாட்டுப் போர் ஒரு சுதந்திரப் போராட்டம் என்றும், அடிமைமுறைக்காக நடத்தப்பட்டதில்லை என்றும் தென் மாநிலங்களின் ஆதரவாளர்கள் வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். கான்ஃபெடரசிக்கு புனித பிம்பத்தை உண்டாக்க அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாதம் – லீ போன்ற நல்லவர்கள் எல்லாம் கான்ஃபெடரசிக்காகச் சண்டையிட்டார்கள் என்பதே. இனவெறிக்கு இப்படியொரு விடுதலை வேட்கைச் சாயம் பூசியதன் விளைவுகள் இன்றுகூட அமெரிக்க சமுதாயத்தில் தெரிகின்றன. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் 1960-கள் வரை கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இன்றுகூட ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் தென் மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற இயலாது. 2008-ல் பராக் ஒபாமாவே ஓரிரு தென்மாநிலங்களில் மட்டும் – அதுவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் – தான் ஜெயித்தார். இன்றும்கூட அடிமைமுறையின்கீழ் கறுப்பர்கள் செளகரியமாக வாழ்ந்தார்கள் என்று நம்புபவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கான்ஃபெடரசி தோற்றபோதே இந்த நிலை என்றால், லீயின் முயற்சியால் அவர்கள் வென்றிருந்தால் இன்று அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளின் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அதி தேசியவாதி

6. சொலானா லோபெஸ்

லோபெஸ்

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. இதற்கு தேசபக்தியும், தேசியவாதமும் விதிவிலக்கல்ல. எதார்த்தத்தை உணராமல்,  எங்காளு ஒவ்வொருத்தனும் பத்து பகையாளிக்குச் சமம் என்று வம்படியாக மார்தட்டி செயல்பட்டால் தேசமே நாசமாகப் போய்விடும் என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  19ம் நூற்றாண்டில் தனது அதி தேசியவாதத்தால் தன் நாட்டையே கிட்டத்தட்ட அழித்து விட்ட பராகுவே சர்வாதிகாரி ஃபிரான்சிஸ்கோ சொலானோ லோபெஸ் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

தென்னமெரிக்க நாடுகளுக்கு ஒரு சாபக்கேடு இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் ஒன்று கொழுத்த முதலாளிய சர்வாதிகாரிகளாக இருப்பார்கள் அல்லது இடதுசாரி புரட்சிக்கார சர்வாதிர்காரிகளாக இருப்பார்கள். ஐரோப்பிய காலனியவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  உள்நாட்டு விடுதலை இயக்கங்களின் மூலம் 19ம் நூற்றாண்டில் பல தென்னமெரிக்க நாடுகள் சுதந்திரம் வாங்கி விட்டன. ஆனால் காலனியாதிக்கத்தின் தாக்கம் அப்பகுதியை விட்டு அகல நூறாண்டுகளுக்கு மேலாகின (இன்னும் மொத்தமாககப் போகவில்லை என்று சொல்லலாம்).   சுதந்திரம் பேரளவில் கிடைத்தே தவிர ஜனநாயக கருத்துகளோ அமைப்புகளோ இந்த நாடுகளில் வேரூன்ற வில்லை. ஐரோப்பிய எஜமானர்களுக்கு  பதில் உள்ளூர் எஜமானர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.  ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்கு “செய்ய வேண்டிதை”  செய்து விட்டு தங்களுக்குச் சாதகமான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும்.  அதிக வட்டிக்குக் கடன்களை வாங்கி, குறைந்த விலைக்குத் தங்கள் நாட்டு மூலப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தென்னமெரிக்க ஆட்சியாளார்கள் ஒப்புகொண்டனர். அதற்குப் பதிலாக மக்களை அடக்கத் தேவையான ராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் செய்து வந்தன.  ஆட்சியாளரின் வரிக்கொடுமையும் அடக்குமுறைகளும் தாங்க முடியாமல் போனால் அவ்வப்போது புரட்சிகள் வெடித்து, புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வருவார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் அவர்களும் முன் வந்தவர்களைப் போலவே செய்யத் தொடங்கி விடுவார்கள். இந்த தீ சுழற்சி (vicious cycle) 19ம் நூற்றாண்டில் தென்னமெரிக்க நாடுகளுக்கு தீராத ஒரு சாபக்கேடாக இருந்தது.

தென்னமெரிக்க கண்டமே ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் பாக்கெட்டில் இருந்தபோது அதில் ஒரு சிறுநாடு மட்டும், தனிவழியில் பயணம் செய்து கொண்டிருந்தது. பிரேசிலுக்கும்,  அர்ஜெண்டைனாவுக்கும் இடையே அமைந்துள்ள பராகுவே தான் அந்த நாடு.  உள்ளூர்ச் சந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஐரோப்பிய நாடுகளிடம் கடன் வாங்காதிருத்தல்,  அதிகமான சுங்கத் தீர்வைகளின் மூலம் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பொருளாதாரப் பாதுகாப்புக் கொள்கைகளைத் தீவிரமாக பராகுவே கடைபிடித்து வந்தது.  ஓரளவு நல்ல பொருளாதாரக் கொள்கைகளென்றாலும், அரசியல் ரீதியில் மற்ற தென்னமெரிக்க வாழைப்பழக் குடியரசுகளுக்குச் சிறிதும் சளைத்ததல்ல பராகுவே.  பெயரளவில் தான் அது குடியரசு, நடைமுறையில் முடியரசே.  அதன் குடியரசுத் தலைவர் /சர்வாதிகாரி தான் நாட்டில் எல்லாம்.  நாடாளுமன்றம், அமைச்சரவை, உள்ளாட்சி அமைப்புகள் இதெல்லாம் டம்மிகள், அவருக்குத் தலையாட்டும் அமைப்புகள்.  பராகுவேயில் எதிர்கட்சிகளே கிடையாது,  தேர்தல்களும் சும்மா கண் துடைப்புகளாக நடத்தப்பட்டன.  அந்நாடு சுதந்திரம் வாங்கியது முதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் குடியரசுத் தலைவராக முடியும். அந்தக் குடும்பம் முழு பராகுவே நாட்டையும் தங்களது சொந்தப் பண்ணையைப் போலவே பாவித்து நடத்தி வந்தது.  இந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சொலானோ லோபெஸ். இவரது அப்பா கார்லோஸ் அண்டோனியோ லோபெஸ் பராகுவேயின் குடியரசுத் தலைவர் / சர்வாதிகாரி.  அப்பா லோபெசின் காலத்தில் பராகுவேயின் நிலை ஓரளவு நன்றாகத்தான் இருந்தது. பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையால் ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் அவ்வப்போது முரண்பட்டாலும்,  அந்த வேறுபாடுகள் போராக மாறாமல் அப்பா லோபெஸ் பார்த்துக் கொண்டார்.  1862ல் அப்பா லோபெஸ் மரணமடைய மகன் சொலானோ லோபெஸ் கையில் அதிகாரம் வந்தது. பராகுவேவும் அழிவுப் பாதையில் செல்லத் தொடங்கியது.

லோபெஸ் சின்னப்பையனாக இருந்தபோதே அவர்தான் அவரது அப்பாவுக்கு அடுத்து சர்வாதிகாரி ஆவார் என்று முடிவாகியிருந்தது. இதனால் அவருக்குச் சிறுவயதிலேயே பெரும் பொறுப்புகள் அளிக்கப்பட்டன.  இருபத்தியேழு வயதிருக்கும் போதே ஐரோப்பாவுக்குப் பராகுவேயின் தூதராக அப்பா லோபெஸ் அவரை அனுப்பி வைத்தார்.  ஐரோப்பாவில் லோபெஸ் கழித்த நாட்கள் அவருள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.  பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன போனாபார்ட்டின் வரலாறு அவரை மிகவும் கவர்ந்தது.  நெப்போலியனைப் போலவே தானும் ஒரு நாள் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டுமென்று பகல் கனவு காணத் தொடங்கினார். நெப்போலியனது போர் வரலாறுகளைக் கவனமாகப் படித்த லோபெஸ் ஊர் திரும்பியபின் பராகுவேயின் படைபலத்தைப் பெருக்க வேண்டுமென்று உறுதி கொண்டார்.  பாரிசிலிருந்த காலத்தில் எலிசா லின்ச் என்ற தாசியின் அழகில் மயங்கி அவளைத் தனது வைப்பாட்டியாக வைத்துக் கொண்டார். எலிசாவை அவர் முறைப்படி மணம் செய்யவில்லையென்றாலும், பின்னாளில் நடைமுறையில் எலிசாவே பராகுவேயின் அரசி போல நடந்துகொண்டார்.

ஐரோப்பியப் பயணம் முடிந்து புதிய துணையுடனும் மனதில் சாம்ராஜ்யக் கனவுடனும் ஊர் திரும்பிய லோபெசை அவரது அப்பா உடனே போர் மந்திரியாக நியமித்தார். ராணுவம் லோபெசின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் தான் ஐரோப்பாவில் கண்டிருந்தபடி அதனைத் சீர்திருத்தத் தொடங்கினார். ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுப் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  எப்படியும் போர் மூளும், அதற்கு நல்ல ராணுவம் வேண்டுமென்று பணத்தைத் தண்ணீராக இறைத்தார். ஒரு நவீன ராணுவத்துக்குத் தேவையான தளாவாடங்களைச் செய்வதற்குப் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினார்.  ரயில் வண்டிகளும், தபால் தந்தி வசதிகளும் ராணுவத்தின் தேவைக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தபட்டன. எஃகு ஆலைகள், பீரங்கித் தொழிற்சாலைகள்,  ராணுவ சீருடைகளைச் செய்யும் நெசவாலைகள் திறக்கப்பட்டன.   தனது படைவீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான ஐரோப்பிய ராணுவ நிபுணர்களைப் பணிக்கு அமர்த்தினார்.  இந்த முயற்சிகளால்  லோபெஸ் போர் மந்திரியாகப் பதவியேற்று சில ஆண்டுகளிலேயே பராகுவேயின் படை தென்னமெரிக்க நாடுகளின் படைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகிவிட்டது.   இவ்வளவு செலவு செய்து ஒரு படையை உருவாக்கிவிட்டு அதைப் பயன்படுத்தாமல் எப்படி? அதற்கான  சந்தர்ப்பமும் லோபெசுக்கு விரைவில் கிடைத்தது.

1862ல் அப்பா லோபெஸ் இறந்து போனார். தென்னமெரிக்க வாரிசு அரசியலின் எழுதப்படாத நியதிகளின் படி,  பராகுவே நாடாளுமன்றம் கூடி மகன் லோபெசை அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜனாதிபதியாக அறிவித்தது.  அதிகாரம் கைக்கு வந்த உடன் பக்கத்து நாடுகளின் அரசியலில் தலையிடத் தொடங்கினார். அப்போது தென்னமெரிக்காவில் இரண்டு வல்லரசுகள் இருந்தன –  பிரேசில் மற்றும் அர்ஜெண்டைனா.  வல்லரசுகளுக்கு அழகு அடுத்த நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பது. அதற்கேற்ப இரண்டும் அருகிலிருந்த உருகுவேயின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வந்தன. வல்லரசுகளுக்குப் போட்டியாக லோபெசும் மூன்றாவது ஆளாக உருகுவே நாட்டு விஷயங்களில் தலையிடத் தொடங்கினார். மேலும் இந்த நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள ரியோ டி பிளாட்டா முகத்துவாரப் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் சம்பந்தப்பட்ட நான்கு நாடுகளுக்கும் பிரச்சனை இருந்து வந்தது.  இப்பகுதியில் கனிம, வன வளங்கள் அதிகமாக இருந்ததுடன் அட்லாண்டிக் கடல்வழியாகத் தென்னமெரிக்காவுக்கு வரும் வர்த்தகக் கப்பல்கள் இப்பகுதியைத்தான் அதிகமாகப் பயன்படுத்தின என்பதால் சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளும் இப்பகுதியை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆசைப்பட்டன.  இதுநாள்வரை சின்ன நாடாக இருந்ததால் பராகுவே வெளிப்படையாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் புதிய ராணுவபலம் தந்த தெம்பால் லோபெஸ் நேரடியாக கோதாவில் இறங்கினார்.

1864ல் பிரேசில் நேரடியாக உருகுவே அரசியலில் தலையிட்டு தனக்குச் சாதகமான கோலராடொ கட்சியை ஆட்சியில் அமர்த்தியது.   லொபெசோ இதுவரை அவர்களுக்கு எதிரான பிளாங்கோ கட்சியை ஆதரித்து வந்தார்.  பிரேசில் நாட்டுப்படைகள் உருகுவேயில் தலையிடுவதைப் பராகுவே பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று அறிவித்தார்.  உன்னால் முடிந்தைப் பார் என்று பிரேசில் அவரது எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டது.. இதற்குப் பதிலடி கொடுக்க நவம்பர் 1864ல் பிரேசிலைத் தாக்கினார் லோபெஸ்.  ஆரம்பத்தில் போர் பராகுவேக்குச் சாதகமாகத்தான் இருந்தது.  நிறைய செலவு செய்து நவீனப்படுத்தப்பட்டிருந்த பராகுவே ராணுவம் பலவீனமான பிரேசில் ராணுவத்தை எளிதில் முறியடித்து வேகமாக பிரேசில் எல்லைக்குள் நெடுந்தூரம் முன்னேறி விட்டது. ஆனால் லோபெஸ் பிரேசிலை ஜெயிப்பதுடன் திருப்தியடையவில்லை. உருகுவேயையும், அர்ஜெண்டைனாவையும் ஒரே அடியில் வீழ்த்த நினைத்தார்.  இதனால் இரு நாடுகள் மீதும் போர் தொடுத்தார்.  பராகுவே போன்ற சின்ன நாடு ஒரு வல்லரசுடன் மோதுவதே மடத்தனம். மூன்று நாடுகளுடன் மோதுவது தற்கொலைக்குச் சமானம்..  தற்கால அரசியலில் ஒரு ஒப்புமை சொல்ல வேண்டுமென்றால் பாகிஸ்தான் திடீரென்று இந்தியா, சைனா, ஈரான் என மூன்று நாடுகளுடனும் ஒரே நேரத்தில் சண்டையிடுவது போல.

பிரேசிலும் அர்ஜெண்டைனாவும்  நில அளவில், மக்கள் தொகையில், பொருளாதாரத்தில், ஆள்பலத்தில் பராகுவேயைக் காட்டிலும் பல மடங்கு பெரியவை.  உருகுவே பராகுவேயை ஒத்த நாடு. இந்த மூன்றும் சேர்ந்து அடித்தால் பராகுவேயால் தாக்குப்பிடிக்க முடியுமா. ஆனால் இந்த உண்மைகளெல்லாம் அதிகார போதையில் மிதந்து கொண்டிருந்த லோபெசுக்குப் புரியவில்லை. எல்லா அதி தேசியவாதிகளும் சொல்வதைப் போல,  எங்க ஆளு ஓவ்வொருத்தனும் அவங்க ஆளு பத்துபேருக்குச் சமானம், எங்க பூமி வீரம் விளஞ்ச பூமி போன்ற வறட்டு தேசியவாத கோஷங்கள்தான் பராகுவேயிலும் சத்தமாக ஒலித்தன.  எல்லா நாடடு தேசபக்தர்களுக்கும் இந்த விதிவிலக்கு வியாதி (exceptionalism)  சில பல அளவுகளில் இருக்கும். ஆனால் யதார்த்தம் தெரியாமல் கண்ணை மறைக்கும் அளவுக்குப் போய்விட்டால் அந்த நாட்டுக்கு அழிவு நிச்சயம்.  இதுதான் பராகுவேயிலும் நடந்தது. போர் தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகள் பராகுவேக்குப் போன இடமெல்லாம் வெற்றி. பிரேசிலும், அர்ஜெண்டைனாவும் போருக்குத் தயாராக இல்லாததால், அவற்றின் படைகளால் லோபெசின் படைகளை எதிர்த்து சமாளிக்க முடியவில்லை.  ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல அவற்றின் ஆள்பலமும் பணபலமும் பராகுவே படைகளைச் சோர்வடைய வைத்து விட்டன. நெப்போலியனின் வரலாற்றை ஆர்வமாகப் படித்த லோபெசுக்கு நெப்போலியன் சொல்லிவிட்டுப் போன ஒரு படையின் வெற்றி அதன் வீரர்களுக்கு உணவு கிடைப்பதைப் பொறுத்தே அமையும் (An army marches on its stomach)  என்ற நியதி மறந்து போனது. நாட்டின் ஆண்மக்களில் பெரும்பாலானோர் படைகளில் பணி புரிந்தால், யார் விவசாயம் செய்வது?  பிற நாடுகளுக்குப் போய் வர்த்தகத்தை கவனிப்பது?. போர் நீள நீள பராகுவேயின் பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போனது. வயல்களில் விளைச்சலும் இல்லை, தொழிற்சாலைகளில் வேலைகளும் நடக்கவில்லை. மக்கள் பட்டினியாலும், நோய்களாலும் ஆயிரக்கணக்கில் மடியத் தொடங்கினர்.  போரில் இறந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை உருவாக்க முடியவில்லை, சேதமடைந்த துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் பழுதுபார்க்க முடியவில்லை.  முதலில் முன்னேறிய படைகள் பின்பு பின்வாங்க ஆரம்பித்தன.  பிரேசிலும் அர்ஜெண்டைனாவும் சுதாரித்துக் கொண்டு திருப்பித் தாக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக பராகுவே அழிந்தது.

நிலை கைமீறிப் போய்விட்டதென்பதை லோபெஸ் உணர்ந்தாலும் அவரால் சரணடைய முடியவில்லை.  போரை நிறுத்த வேண்டுமென்றால், லோபெஸ் பதவி விலக வேண்டுமென்று பிரேசிலும், அர்ஜெண்டைனாவும் விதித்த நிபந்தனையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.  சரணடைந்து விடலாம் என்று ஆலோசனை சொன்னவர்கள் அனைவரையும் கொன்று குவித்தார்.  1869 ல் பராகுவேயின் தலைநகர் அசூன்சியான் பிரேசில் படைகள் வசமானது.  லோபெசின் உள்நாட்டு விரோதிகளைக் கொண்டு ஒரு புதிய பராகுவே அரசை உருவாக்கியது. அப்போதும் லோபெஸ் சரணடையவில்லை. எஞ்சிய படைகளைக் கொண்டு அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குப் பின்வாங்கி அங்கிருந்து போரைத் தொடர்ந்தார். அவரது படைகளை முற்றிலும் ஒழிக்க புதிய அரசுக்கு மேலும் ஒரு ஆண்டானது. இறுதிவரை லோபெஸ் சரணடையவே இல்லை. போர்க்களத்தில் சண்டையிட்டபடியே என் நாட்டுக்காக நான் சாகிறேன் என்று டயலாக் விட்டுக் கொண்டுதான் மரணமடைந்தார்.  அவருடைய சாம்ராஜ்யக் கனவுக்கும் வறட்டு தேசியவாதத்துக்கும் பராகுவே கொடுத்த விலை மிக அதிகம்.  போரிலும் அதனால் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் லட்சக்கணக்கானோர் மடிந்திருந்தார்கள். பராகுவேயின் மக்கள்தொகையில் 70 முதல் 90 சதவிகிதம் வரை மாண்டிருக்கலாம் என்று வரலாற்றாளர்களின் கணிப்புகள் சொல்கின்றன. (தற்கால இந்தியாவில் ஒரே போரில் நூறு கோடி பேர் சாவதற்குச் சமானம்)  போர் இன்னும் சில ஆண்டுகள் நீண்டிருந்தால் பராகுவேயே இல்லாமல் போயிருக்கும்.

போர் முடிந்த பின்னரும், ஏராளமான ஆண்கள் இறந்திருந்ததால் சகஜ நிலை திரும்ப பல பத்தாண்டுகள் ஆயின.  ஒரு ஆணுக்கு பல பெண்கள் என்பது போருக்குப்பின் பராகுவேயின் நிலை. இதனைச் சமாளிக்க பலதார மணத்தை அரசே ஊக்குவிக்க வேண்டிய நிலை உருவானது.  அரசியல் ரீதியாகவும், பராகுவே மீண்டுவர பல ஆண்டுகள் ஆகின.  போரில் வெற்றி பெற்றாலும் பிரேசிலும் அர்ஜெண்டைனாவும் போரின் தீயவிளைவுகளிலிருந்து தப்பவில்லை. போருக்காகப் பட்ட கடன் இரு நாட்டுப் பொருளாதாரத்தையும் பல ஆண்டுகளுக்கு முடக்கி விட்டது.  இப்படி நாட்டையே கூண்டோடு கைலாசம் அனுப்பப் பார்த்த சர்வாதிகாரி இன்று பராகுவே நாட்டின் தேசப் பிதாக்களில் ஒருவராகக் கருதப்படுவதுதான் வேடிக்கை. லோபெஸ் இறந்த நாளை மாவீரர் தினமாகக் அந்த நாடு கொண்டாடி வருகிறது!  லோபெசின் மடத்தனத்தைப் பராகுவே மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் லொபெசின் வாழ்க்கை, அதி தேசியவாதம் எங்கு கொண்டு போய்விடும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எல்லாம் மாயா!

7. டியாகோ டி லாண்டா

ஒரு  நாகரிகத்தைக் காணாமல் போக வைக்க வேண்டுமென்றால் அவர்களது மொழியினை முதலில் அழிக்க வேண்டுமென்பது வில்லன்கள் வகுத்த இலக்கணம். இதன் அடிப்படையில், மாயா நாகரிகத்தை ஒழிக்க ஸ்பானிய மதகுருவான பிஷப் டியாகோ டி லாண்டா 16ம் நூற்றாண்டில் செய்த முயற்சி அந்த மக்களின் விலைமதிக்க முடியாத ஆயிரக்கணக்கான பண்பாட்டு பொக்கிஷங்களையும் புத்தகங்களையும் அழித்து விட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அமெரிக்கப் பகுதியில் மாயா நாகரிகம் தோன்றி விட்டது. அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மெல்ல வளர்ந்து அப்பகுதி முழுவதும் மாயா மக்களின் கட்டுப்பாட்டில் வந்தது.  கி. பி. மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டம் மாயா பண்பாட்டின் பொற்காலமென்று அறியப்படுகிறது.  மாயா மக்கள் தங்கள் புகழின், சக்தியின் உச்சத்தில் இருந்த காலமது.  வியக்கவைக்கும் பல நகரங்களும், கோவில்களும், பிரமிடுகளும் இக்காலகட்டத்தில் தான் எழுந்தன.  அரசியல், போர், கட்டிடக் கலை, கணிதம் என பல்வகைத் துறைகளில் மாயா மக்கள் பெரும் முன்னேற்றங்கள் கண்டனர். ஆனால் அவர்கள் என்றும் ஒரு ஒருங்கிணைந்த பேரரசாக இருக்கவில்லை. தனிப்பட்ட நகர அரசுகளே ஒரு கூட்டமைப்பாகச் செயல்பட்டு வந்தன.  எவ்வளவு பெரிய நாகரிகமாக இருந்தாலும் கால ஓட்டத்தில் வீழ்ச்சியடையும் என்பதற்கு மாயா நாகரிகம் விதிவிலக்கல்ல. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பல்வேறு காரணங்களால் மாயா நகர அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து மாயா நாகரிகம் சுருங்கிப் போனது. அடுத்த அறுநூறு ஆண்டுகளுக்கு மாயா நகரங்கள் குறுநில அரசுகளாக மாறி மத்திய அமெரிக்காவின் ஒரு பகுதியை ஆண்டு வந்தன. அவ்வப்போது ஏதேனும் ஒரு நகரத்தின் சக்தி அதிகமானாலும் பொற்காலத்தில் விளங்கியது போல மீண்டும் அவைகளால் எழுச்சியடைய முடியவில்லை.  பதினாறாம் நூற்றாண்டில் புதிய உலகைத் தேடி ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்த போது, மாயா அரசுகளை அவர்கள் ஒரு பலம் பொருந்திய எதிரியாகக் கருதவில்லை. மாயா பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலுமிருந்த ஆஸ்டேக் மற்றும் இன்கா பேரரசுகளே புதிய உலகில் ஐரோப்பிய காலனியவாதிகளின் முக்கிய இலக்குகளாக இருந்தன.

அமெரிக்காவைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த பந்தயத்தில், மத்திய அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் ஸ்பானியப் பேரரசு தான் முந்தியது. அமெரிக்கக் கண்டத்தில் காலெடுத்து வைத்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக இன்கா மற்றும் ஆஸ்டெக் பேரரசுகள் ஸ்பானிய பீரங்கிகளின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்ந்தன.  ஸ்பானிய பேரரசின் நோக்கம் முதலில் புதிய பகுதிகளைக் கொள்ளையடிப்பது மட்டுமே.  நாடுகளைக் கைப்பற்றிப் பேரரசில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை.  புதிய உலகின் வளங்களை முடிந்தவரை கொள்ளையடிக்க வேண்டுமென்று எண்ணிதான் செயல்பட்டார்கள். ஆனால் ஆஸ்டெக், இன்காப் பேரரசுகள் எளிதில் வீழ்ந்து விட்டதால் அவசரம் அவசரமாகக் கொள்ளையடிப்பதற்கு பதில், நிதானமாக இருந்து அரசாண்டு கொள்ளையடிக்கலாம் என்ற ஐடியா அவர்களுக்குத் தோன்றி விட்டது.  கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் போல மெதுவாக தென், மத்திய அமெரிக்காக்களின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.  வெடிமருந்து, துப்பாக்கிகள், குதிரைப்படைகள், எஃகு ஆயுதங்கள் போன்ற புதிய போர் தொழில் நுட்பங்களின் முன்னால், உள்ளூர் நாடுகளாலும், பண்பாடுகளாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு ஸ்பானியர்கள் தங்களுடன் கொண்டு வந்த காலரா, பெரியம்மை போன்ற ஐரோப்பிய வியாதிகளுக்கு இயற்கையில் எதிர்ப்பு சக்தி கொஞ்சமும் இல்லாத உள்ளூர் அமெரிக்கர்கள்  லட்சக்கணக்கில் செத்து மடிந்தனர்.  இப்படிப் புதிய ரக ஆயுதங்களும், புதிய கொடிய நோய்களும் வெகு விரைவில் ஸ்பானியர்களை அமெரிக்காவின் எஜமானர்கள் ஆக்கி விட்டன.

ஆஸ்டெக், இன்காப் பேரரசுகளுக்கு நேர்ந்த கதி மாயா அரசுகளுக்கு உடனடியாக ஏற்படவில்லை. ஏனென்றால், அவற்றைப் போல மாயா அரசுகள் ஒருங்கிணைந்த பேரரசுகள் இல்லை, பணக்கார நாடுகளும் இல்லை. எனவே ஸ்பானிய தளபதிகள் மாயா நாடுகளை முதலில் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மற்ற பேரரசுகளை வீழ்த்திய பின்னரே மெதுவாக மாய நாடுகளின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். ஸ்பெயினின் மாயா ஆக்கிரமிப்பும் தொடங்கியது.  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் மாயா அரசுகள் இருந்த யுகாடான் தீபகற்பம் முழுவதும் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ராணுவ ரீதியாகக் கைப்பற்றியது போதாதென்று அடுத்து மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் யுகாடானைக் கைப்பற்ற ஸ்பானிய அரசு யத்தனித்தது. அப்போது (இப்போதும்) ஸ்பெயினின் முக்கிய மதம் ரோமன் கத்தோலிக்கம்.  புதிய உலகு ராணுவ ரீதியாக   அடக்கப்பட்ட உடனே, கத்தோலிக்க மிஷனரிகள் பைபிளைத் தூக்கி கொண்டு அமெரிக்கக் காடுகளுக்குள் நுழையத் தொடங்கி விட்டார்கள்.  பேரரசின் புதிய குடிமக்களை “காட்டுமிராண்டி” மதங்களிலிருந்து  வெளிக்கொணர்ந்து அவர்களது ஆத்மாக்களை “காப்பாறு” வதே அவர்களது குறிக்கோள். . ரோமன் கத்தோலிக்கம் கொள்கை இறுக்கத்தின் உச்சியில் இருந்த காலமது.  புதிய உலக மக்களை கத்தோலிக்கத்துக்கு மாற்றக் கிளம்பிய பாதரியார்களுள் ஒருவர் தான் டியாகோ டி லாண்டா.

ஸ்பெயினில் பிறந்த லாண்டா,  கி.பி. 1549 ல் மத்திய அமெரிக்காவில் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்காக யுகாடானுக்கு வந்து சேர்ந்தார்.  அப்போது தான் யுகாடான் ஸ்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் வந்திருந்தது. பல இடங்களில் மாயா மக்கள் தங்கள் புதிய எஜமானர்களைக் கோபத்துடனும் வெறுப்புடனும் பார்த்தனர்.  ஆங்காங்கே ஸ்பானிய ஆட்சிக்கெதிராகப் புரட்சிகள் வெடித்த வண்ணம் இருந்தன. புதிதாக யுகாடானுக்கு வந்த லாண்டா பயப்படாமல் யுகாடினின் மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். மற்ற பாதரியார்கள் போவதற்கு அஞ்சிய பிரதேசங்களுக்கெல்லாம் சென்று கத்தோலிக்கத்தைப் போதித்தார். மாயா மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது பண்பாட்டைப் புரிந்து கொள்ள முயன்றார். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல அவருக்கு ஆற்றாமையும் ஆத்திரமும் அதிகரித்தன.  கத்தோலிக்கம் வேகமாகப் பரவினாலும், மாயா மக்கள் தங்கள் பாரம்பரியப் பழக்க வழக்கங்களையும் கடவுள்களையும் விடத் தயாராக இல்லை.  கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கூட கிருத்துவக் கடவுளைத் தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்றார் போலத்தான் வழிபட்டனர். உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் கூடாதென்று கத்தோலிக்கம் கூறினாலும் மாயா கத்தோலிக்கர்கள் கிருத்துவக் கடவுளுக்குத் தங்கள் பிற கடவுளரைப் போல உருவம் கொடுத்து அவர்களுள் ஒருவராக மாற்றி விட்டனர்.  அவர்களது பழக்கவழக்கங்களை மாற்ற மிஷனரிகள் முயன்றால் ஆவேசம் கொண்டு எதிர்த்தனர். இப்படி கத்தோலிக்கம் லோக்கல் மதமாக மாறுவதை லாண்டாவால் ஒத்துக்கொள்ள முடியவிலை.  ஐரோப்பாவில் உள்ள சுத்தமான கத்தோலிக்கமே இருக்க வேண்டும். மற்ற பழக்க வழக்கங்களையெல்லாம் சுத்தமாக ஒழிக்க வேண்டும் என்று அவர் கங்கணம் கட்டினார்.

பழைய மாயா மதத்தின் பூசாரிகள்தான் ரகசியமாக ஒன்றிணைந்து மக்களை உண்மையான கத்தோலிக்கர்களாக மாற விடாமல் தடுத்து வருவதாக நினைத்த லாண்டா, பழைய மாயா மதச் சின்னங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஸ்பெயினில் வழக்கமான இன்குவிசிஷன் (inquisition) என்ற விசாரணை முறையை  யுகாடானில் அறிமுகப்படுத்தினார்.  விசாரணை என்றால் சும்மா பேச்சு விசாரணை இல்லை. அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொண்டே விசாரிப்பார்கள்.  உண்மையான கத்தோலிக்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் (heretics and apostates) என்று சந்தேகப்படும் யாராக இருந்தாலும் தூக்கி வந்து சித்ரவதைக் கருவிகளில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்டனர். இதில் மாயா சமூகத்தில் சாதாரணக் குடிமக்களிலிருந்து பெரும் பிரபுக்கள் வரை யாரும் தப்பவில்லை. ஒருவர் உருவ வழிபாடு செய்கிறார், பழைய மாயா மதத்தைப் பின்பற்றுகிறார் என்று கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டால் போதும் அவர் தூக்கிச் செல்லப்பட்டு நையப் புடைக்கப்படுவார். வலி தாங்க முடியாமல்,  “உண்மையான” கிருத்துவனாக இருப்பதாக ஒத்துக்கொள்வார். அடி விழுந்தும் செய்த “பாவங்களை” உடனே ஒத்துக்கொள்ளாமல், சித்ரவதையின் போதே உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள்.  ஒரு புறம் மாயா மக்களுக்கு அடி உதை விழுந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு புறம், பழைய மாயா புத்தகங்களையும்,  விக்கிரகங்களையும் எங்கு கண்டாலும் பிடுங்கி வர ஆணையிட்டிருந்தார் லாண்டா.

இப்படிச் சேகரிக்கப்பட்ட புத்தகங்களையும், விக்கிரகங்களையும் ஜூலை 12, 1562ல் பொது இடத்தில் போட்டுக் கொளுத்தினார். இந்தச் சம்பவம், அவரது சக மிஷனரிகளிடையே கூட பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  லாண்டாவின் செய்கைகள் வரம்பு மீறிப் போய்விட்டன என்று யுகாடானின் பிஷப் அவர் மீது குற்றஞ்சாட்டி விசாரணைக்காக ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டார். மதமாற்றத்துக்கு  வன்முறையைப் பயன்படுத்தினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஸ்பெயினில் அவரை விசாரித்த தேவாலய அதிகாரிகள் அவர் செய்தது சரியே என்று அறிவித்து, அவரையே அடுத்த யுகாடான் பிஷப்பாக அறிவித்து விட்டனர். அப்புறம் என்ன, யுகாடான் திரும்பிய லாண்டா புதிய அதிகாரத்துடன் முன் செய்த வேலைகளையே மீண்டும் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்.  பிஷப்பாக அவர் இருந்த காலத்தில் ஸ்பெயினின் மத்திய அமெரிக்க ஆட்சியாளர்களைக் கூட அவர் மதிக்கவில்லை. இதனால் அவரது ஆட்சி காலத்தில் ஸ்பானிய ஆளுனர்களுக்கும் அவருக்கும் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.  ஆனால் அவர்களால் லாண்டாவின் அராஜகத்தை அடக்க முடியவில்லை. சித்ரவதையும்,  புத்தக எரிப்பும் லாண்டா 1579ல் இறக்கும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. லாண்டாவின் மறைவுக்குப் பின் அவரது இறுக்கமான கொள்கை அதிகாரப்பூர்வமாகத் தளர்த்தப்பட்டாலும் மிஷனரிகளுள் அவரைப் பின்பற்றியவர்கள் இருக்கத்தான் செய்தனர்.

லாண்டாவின் இந்த செயல்களால் எவ்வளவு மாயா பண்பாட்டுப் பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன என்று இதுவரை கணக்கிடப்படவில்லை. ஆனால லாண்டா மற்றும் அவரைப் பின் தொடர்ந்த கலாச்சார தீவிரவாதிகளின் செய்கைகள் மாயா மொழியை அழிப்பதில் ஓரளவு வெற்றி கொண்டு விட்டன.  சில நூறாண்டுகளுக்குப் பிறகு மாயா எழுத்துருவை வாசித்து மொழிக்கு அர்த்தம் சொல்ல ஒரு மாயருக்குக் கூட தெரியாமல் போனது.  யுகாடானும் சுற்றியுள்ள பிரதேசங்களும் பெரும்பாலும் கத்தோலிக்கத்தைத் தழுவின. இப்படி ஒரு மொழியை அழிப்பதில் லாண்டா வெற்றியடைந்தாலும்,  ஒரு வழியில் அவரது முயற்சிகள் தான் இன்று மாயா எழுத்துகளை வாசிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளன. மேலும் லாண்டா மாயா சமூகத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியும் எழுதி வைத்த குறிப்புகள் இன்று மாயா நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்யும் இனவியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் பெரும் துணையாக உள்ளன. மாயா நாகரிகத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு தான் அவர் மாயா மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதத் தொடங்கினார்.  மேலும் அவரது குறிப்புகளை அவர் புத்தகமாக வெளியிட்டது அவர் மீது விசாரணை நடந்ததால் தான். மாயா நாகரிகம் சாத்தானின் கைவேலை என்பதை ஸ்பானிய மத அதிகாரிகளுக்குப் புரிய வைப்பதற்காகத்தான் அக்குறிப்புகளை அவர் புத்தகமாக்கினார். அவரை யாரும் தட்டிக்க் கேட்கவில்லையென்றால் இன்று மாயா நாகரிகத்தைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.  வேறு எந்த வேற்றாளிடமும் நம்பிக்கை வைக்காத மாயா மக்கள் லாண்டா மீது மதிப்புக் கொண்டு அவரிடம் தங்களது பாரம்பரிய நூல்களைக் காட்டினர். ஆனால் மான்தோலில் எழுதப்பட்டிருந்த இந்தப் புத்தகங்களைச் சாத்தானின் கைவேலையாகக் கருதினார் லாண்டா. அவரால் அந்தப் புத்தகங்களைப் படிக்கக் கூட இயலவில்லை – அவருக்கு மாயா எழுத்து முறையைப் படிக்கத் தெரியாது.  ஆனால் அவற்றை அழிக்க வேண்டுமென்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்.  மாயா மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குத் துரோகமிழைத்து அவர்களது மொழியையும் கலாச்சாரத்தையும் அழிக்கத் தன்னால் இயன்றதைச் செய்தார். அந்த முயற்சியில் தற்காலிகமாக அவர் வெற்றி பெற்றாலும் அவர் விட்டுச் சென்ற குறிப்புகளைக் கொண்டுதான் 20ம் நூற்றாண்டில் மாயா எழுத்துக்களைப் படிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பிற கலாசாரங்களை எடை போடக்கூடாது என்பதற்கு லாண்டா போன்றவர்கள் தான் நல்ல எடுத்துக்காட்டுகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஜனநாயகத்தின் எதிரி

8. கிளமன்ஸ் வான் மிட்டர்னிக்

தற்காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் மக்களாட்சி முறை பயன்பாட்டில் உள்ளது. மன்னராட்சி பிழைத்திருக்கும் ஒரு சில நாடுகளிலும் அரச குலத்தின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு தேசிய விடுமுறை நாட்களில் கொடியேற்றி மக்களைப் பார்த்துக் கையாட்டும் டம்மிகளாக மட்டுமே அவர்கள் உள்ளார்கள். ஆனால் இந்த ஜனநாயக அரசியல் சூழல் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் உள்ளது. அதற்குமுன் பெரும்பாலான நாடுகளில் ஏதேனும் ஒரு விதமான முடியாட்சியே அமலில் இருந்தது. 20-ம் நூற்றாண்டில் வேரூன்றிய ஜனநாயக முறை 19-ம் நூற்றாண்டிலேயே பரவலாகும் வாய்ப்பிருந்தது. அதனைக் கூடியமட்டும் தடுத்து முடியாட்சிகளை இன்னுமொரு நூற்றாண்டு நிலைத்திருக்கச் செய்த புண்ணியம் ஆஸ்திரிய ராஜதந்திரி கிளமன்ஸ் வான் மிட்டர்னிக்கையே சாரும்.

18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஐரோப்பாவில் பெரும் மாற்ற அலைகள் அடித்துக்கொண்டிருந்தன. அரசர்களின் யுகம் முடிந்து தேசங்களின் யுகம் ஆரம்பாகிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியனின் எழுச்சி போன்ற நிகழ்வுகள் ஐரோப்பிய அரசியல் சூழலைப் புரட்டிப் போட்டன. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி,  ‘அரச குலம் ஆளவதற்கு என்று கடவுளால் படைக்கப்பட்டது’ (divine right of kings) என்ற பழம் கோட்பாட்டைக் கடுமையாகச் சோதித்தது. முந்தைய நூற்றாண்டுகளிலேயே இங்கிலாந்தில் அரசனைக் கொல்வது, மக்களாட்சி, தேர்தல்கள், சக்தி வாய்ந்த நாடாளுமன்றம் போன்ற விஷயங்கள் வந்து விட்டாலும், பிரெஞ்சுப் புரட்சி ஏற்படும்வரை ஐரோப்பாவில் மன்னர்களும் பிரபுக்களும் கேட்பாரின்றிதான் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள்.

பிரெஞ்சு மக்கள் பதினாறாம் லூயியை கில்லட்டினில் வைத்துக் கழுத்தை வெட்டிக் கொன்றபின், முதலாம் பிரெஞ்சுக் குடியரசை நிறுவியதே மன்னராட்சிக்கு எதிராக ஐரோப்பாவில் நடந்த முதல் கலகச் செயல். அப்போதிருந்து ஐரோப்பாவில் மாற்ற அலை உருவாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சி தோல்வியடைந்து பிரான்சில் நெப்போலியன் வடிவத்தில் மன்னராட்சி உருவாகிவிட்டாலும், சாதாரண மக்கள் நினைத்தால் என்ன செய்யமுடியும் என்பதை உலகுக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது பிரெஞ்சுப் புரட்சி.

ஆரம்பம் நன்றாக இருந்தாலும், புரட்சியாளர்களின் கட்டற்ற வன்முறையும், நிலையற்ற ஆட்சியும் பிரெஞ்சு மக்களை மீண்டும் மன்னராட்சிக்கு ஆதரவாளர்களாக மாற்றிவிட்டன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நெப்போலியன், தன்னைத்தானே பிரெஞ்சுப் பேரரசராகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். பிரான்சை ஆண்டது போதாது என்று ஐரோப்பா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றார். சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன் படைபலத்தின் மூலம் கைப்பற்றிய நாடுகளில் எல்லாம், தனது உறவினர்களை அரசர்கள் ஆக்கியும், ஐரோப்பிய ராஜ குடும்பங்களில் பெண் கொடுத்துப் பெண் எடுத்தும் தனக்கென புதிதாக ஒரு அரச வம்சத்தையே உருவாக்கிவிட்டார். ஆனால் புதிய பிரெஞ்சுப் பேரரசை உருவாக்குவதில் அவசரம் காட்டியதில் அகலக் கால் வைத்துவிட்டார்.

இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துகல், ஆஸ்திரியா, ரஷியா, பிரஷியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து நெப்போலியனைத் தோற்கடித்து, அவரது சாம்ராஜ்யக் கனவைச் சிதறடித்துவிட்டன. நெப்போலியனை வீழ்த்தியபின் அவரது பேரரசை என்ன செய்வது, எப்படிப் பிரிப்பது என்ற கேள்விகள் எழுந்தன. இந்த பாகப்பிரிவினைப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ள ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 1815-ம் ஆண்டு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடாகியது. காங்கிரஸ் ஆஃப் வியன்னா என்றழைக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஒரு தனி மனிதனின் முயற்சியால் ஐரோப்பா, பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னிருந்த நிலைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டது; தேசியவாத மக்களாட்சியின் குரல்கள் நசுக்கப்பட்டன. அப்படித் தனியாளாக ஜனநாயகத்தின் எழுச்சியைத் தாமதப்படுத்தியவர் பெயர் கிளமன்ஸ் வான் மிட்டர்னிக்.

மிட்டர்னிக் ஆஸ்திரிய பிரபுக் குலத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஆஸ்திரியாவின் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றியவர். மிட்டர்னிக், ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, தந்தையைப் போலவே ஆஸ்திரிய தூதரகப் பணியில் சேர்ந்தார் மிட்டர்னிக். தனது ராஜதந்திரத் திறமையால் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, பல நாடுகளில் ஆஸ்திரியத் தூதராகப் பணியாற்றினார். பின்னர் நெப்போலியனது எழுச்சிக்குப்பின் அவரிடம் வேலைக்குச் சேர்ந்து, பிரெஞ்சுப் பேரரசில் கொஞ்ச காலம் பணியாற்றினார். நெப்போலியன் ஆஸ்திரியாவைக் கைப்பற்றியபின், 1809-ல் ஆஸ்திரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார். தனது ராஜதந்திரத்தால், நெப்போலியனிடமும் அவரது விரோதிகளிடமும் ஒரே சமயத்தில் ஆஸ்திரியா நட்புறவுடன் இருக்கும்படிப் பார்த்துக்கொண்டார். இப்படி அனைத்துத் தரப்பிலும் நம்பகமானவர் என்று பெயர் எடுத்திருந்ததால், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இடைத்தரகராகப் பணியாற்றும் வாய்ப்புகள் அவருக்குக் கிட்டின. நெப்போலியனது வீழ்ச்சிக்குப் பிறகு, ஐரோப்பாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வியன்னா பேராயம் கூடியபோது அதன் முக்கிய புள்ளிகளில் ஒருவராக உருவெடுத்தார் மிட்டர்னிக்.

வியன்னா பேராயத்தில் மிட்டர்னிக்கின் முதன்மை நோக்கம் அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளால் ஐரோப்பாவில் உருவாகியிருந்த ஜனநாயக தேசியவாத உணர்வுகள் வளர இடம் கொடுக்காமல் அடக்குவதாக இருந்தது. அவற்றை வளரவிட்டால் வெகு விரைவில் மன்னராட்சிக்கும் பிரபுத்துவ முறைக்கும் ஐரோப்பா முழுவதும் ஆபத்து விளையும் என்று மிட்டர்னிக் உறுதியாக நம்பினார். இதனால் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் ஐரோப்பா எப்படி இருந்ததோ அதே நிலைக்கு மீண்டும் திரும்பப் பெரு முயற்சி செய்தார். வியன்னாவில் நடந்ததற்குப் பெயர்தான் பேராயமே தவிர, அங்கே தூதர்கள் வெளிப்படையாக மன்றத்தில் உரையாடி முடிவுகளை எடுக்கவில்லை. ரகசியமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுத்தான் முடிவுகளை எடுத்தனர். உள்ளடி வேலைகளில் கை தேர்ந்தவராகிய மிட்டர்னிக் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். நெப்போலியனின் பேரரசின் பகுதிகளை வெற்றிபெற்ற நாடுகள் பகிர்ந்துகொள்ள வழி வகுத்தார். பகிர்ந்துகொள்ளப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை இல்லாமல் பண்டங்களைப் பிரிப்பதுபோல நாடுகள் உருவாக்கப்பட்டன. சாதாரணப் பொதுமக்களின் உரிமைகள் சட்டமாகாமலும், புரட்சிகரக் கருத்துகள் பரவாமலும் பார்த்துக்கொள்ள இதன் மூலம் ஒரு பழமைவாதக் கூட்டணியை உருவாக்கிவிட்டார் மிட்டர்னிக்.

1815-ல் கையெழுத்தான வியன்னா ஒப்பந்தம், மிட்டர்னிக் திட்டமிட்டபடி, பழைய முடியாட்சி ஐரோப்பாவை மீண்டும் உருவாக்கியது. பழமைவாதக் கோட்பாடுகளைப் பாதுகாக்க பிரஷியா, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து புனிதக் கூட்டணி (holy alliance) ஒன்றை உருவாக்கின. பிரிட்டன் மட்டும் அதில் இணைய மறுத்துவிட்டது. இந்த நான்கு நாடுகளுக்கும் இடையே போர் மூளாமல் தவிர்க்க பழமைவாதிகள் தங்கள் இஷ்டத்துக்கு ஐரோப்பிய வரைபடங்களை மாற்றி அமைத்தனர். இந்த நாடுகளுக்கு இடையே பல புதிய இடைப்பகுதிகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்காகப் புதிய அரச வம்சங்களும் உருவாக்கப்பட்டன. போலந்து நாட்டை ரஷ்யா, பிரஷியா, ஆஸ்திரியா ஆகியவை மூன்றாகப் பிரித்துத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டன. பிரான்சில் பதினாறாம் லூயியின் போர்பன் வம்சம் மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்த்தப்பட்டது. இப்படி ஒரு வழியாக பழைய ஐரோப்பாவை உருவாக்கினர் மிட்டர்னிக்கின் பழைமைவாதிகள். அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இந்த ஐரோப்பிய அரசியல் சூழலைப் பாதுகாக்கவும் மக்களின் உரிமைகளை நசுக்கவும் மிட்டர்னிக்கும் அவரது சகாக்களும் பெரும்பாடு பட்டனர்.

மிட்டர்னிக்கின் கும்பல் சகட்டு மேனிக்கு ஐரோப்பிய வரைபடத்திலும், மக்களின் உரிமைகளிலும் விளையாடியதற்கு வெகு விரைவில் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. தேசியவாதமும் புரட்சிக் கருத்துகளும் பரவுவதை மிட்டர்னிக்கால் தடுக்க முடியவில்லை. தங்களுக்கு விருப்பமில்லாத அரசர்கள், பிரபுக்கள் ஆகியோர்கீழ் வாழ்வதை ஐரோப்பிய மக்கள் விரும்பவில்லை. ஆங்காங்கே கலகங்களும் புரட்சிகளும் வெடித்தவண்ணம் இருந்தன. புரட்சிகரக் கருத்துகள் பரவி புரட்சி வெடிக்கும் நிலை எங்கு உருவானாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க மிட்டர்னிக்கின் ஆதரவாளர்கள் முயன்றனர். வியன்னா ஒப்பந்தம் கையெழுத்தாகி ஐந்தாண்டுகளுக்குள் ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் மக்களாட்சிக்கு ஆதரவாகப் புரட்சிகள் வெடித்தன. பழமைவாதிகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் இரு நாடுகளிலும் அடுத்த பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சண்டை நடந்துகொண்டே இருந்தது.

1830-ல் பிரான்சிலும் புரட்சி வெடித்தது. போர்பன் வம்சத்தின் பதினாறாம் லூயியை ஆட்சியிலிருந்து விரட்டத்தான் பிரெஞ்சுப் புரட்சி 1789ம் ஆண்டு வெடித்திருந்தது. ஆனால் 1815ல் மிட்டர்னிக்கின் கைங்கரியத்தால் பதினாறாம் லூயியின் வம்சாவளியினரே மீண்டும் பிரான்சில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இதனால் பிரெஞ்சு மக்களிடையே ஏற்பட்ட புகைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி 1830-ல் வெளிப்படையாகப் புரட்சியாக வெடித்துவிட்டது. போர்பன் வம்சத்தை ஆட்சியிலிருந்து மீண்டும் துரத்திவிட்டு, மக்களின் ஆதரவு பெற்றவரை அரசராகத் தேர்ந்தெடுத்தது ஃபிரான்ஸ். இப்புரட்சியின் வெற்றியால் தூண்டப்பட்ட பெல்ஜிய மக்களும் தங்களை ஆண்டுவந்த நெதர்லாந்து ராஜ்ஜியத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். 1833-ல் பெல்ஜியமும் விடுதலை அடைந்தது.

இப்படி மிட்டர்னிக் உருவாக்கிய புதிய ஐரோப்பாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தொடர்ந்து புரட்சிகளும் கிளர்ச்சிகளும் உருவாகிக்கொண்டிருந்தன. ஆனாலும் மிட்டர்னிக்கின் பழமைவாதக் கும்பல் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை முடிந்தவரை தடுத்து வந்தது. 1820-களிலும் 1830-களிலும் வெடித்த புரட்சிகளை, ‘படிக்காத மடையர்களின் புரட்சி’ என்று உதாசீனப்படுத்தினார் மிட்டர்னிக். வெறும் கத்திமுனையில் அவர்கள் எப்படி மக்களாட்சியை உருவாக்குவார்கள் என்று கிண்டலடித்தார். மக்களைப் படிப்பறிவின்றி அறியாமையில் வைத்திருக்க வேண்டும் என்பதே மிட்டர்னிக் கும்பலின் கொள்கை. அப்படி அவர்களை வைத்திருந்தால்தானே அவர்களது கோரிக்கைகளை, படிக்காத முட்டாள்களின் பிதற்றல்கள் என்று புறந்தள்ள முடியும்.

மிட்டர்னிக் எவ்வளவு முயன்றாலும் தேசியவாதமும் சோஷலிசமும் ஐரோப்பிய மக்களிடையே பரவுவதைத் தடுக்க முடியவில்லை. பழமைவாத அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைகளை மீறி மேலும் மேலும் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. 1848-ல் மிட்டர்னிக்கின் ஆஸ்திரியப் பேரரசிலும் புரட்சி வெடித்தது. தனது முப்பது வருடப் பழைமைவாதக் கொள்கையின் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகினார் மிட்டர்னிக். ஆனால் அவர் போய்விட்டாலும் அவரது கொள்கைகளின் தாக்கம் உடனடியாக அகலவில்லை. மேலும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பல போர்களும் புரட்சிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. வியன்னா ஒப்பந்தத்தின் தாக்கம் இறுதியாக இருபதாம் நூற்றாண்டில் முதலாம் உலகப் போரில் கொண்டுபோய் விட்டது.

மிட்டர்னிக்கின் பழமைவாதக் கூட்டணி ஐரோப்பிய மக்களின் உரிமைகளை மறுக்காமல் இருந்திருந்தால், 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் நடைபெற்ற பல போர்களைத் தவிர்த்திருக்கலாம். அதி தேசியவாதமும் வளர்ந்திருக்காது; லட்சக்கணக்கான உயிர்களைக் காத்திருக்கலாம். மெதுவான அரசியல் மாற்றமும் சுயாட்சி உரிமைகளும் மக்களின் உரிமைப் புரட்சி உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக அமைந்திருக்கும். அரசியல் அமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி அமைப்புகளை நிறுவி இரு தரப்புகளும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்சிமுறையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் மிட்டர்னிக்கின் இறுக்கமான பழமைவாதத்தால் இது முடியாமல் போனது. பேரரசுகளின் செளகரியத்துக்காக வரைபடங்களை வகுத்ததால், ஐரோப்பாவில் பல இடங்களில் தீவிர தேசியவாத உணர்வுகள் வெளியாகி இனக்குழுக்களிடையே பகையுணர்வு வளர்ந்தது. பிரதிநிதித்துவ அரசுகள் உருவாக பழமைவாதிகள் அனுமதித்திருந்தால், இந்த தேசியவாதிகள், அரசியல் மைய நீரோட்டத்தில் கலந்திருப்பார்கள். ஆயுதமேந்திய போராளிக்குழுக்களும், இனவெறுப்பும் வளர்ந்திருக்காது.

அப்படி செய்யாது விட்டதால் ஐரோப்பாவில் அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு, முரண்படும் தேசிய இனக்குழுக்கள் ஒன்றை ஒன்று தாக்கிச் சண்டையிட்டன. இன்றுகூட இவற்றுள் சில தொடர்ந்து நடந்துவருகின்றன. அரசியலிலும் சமூகத்திலும் மாற்றம் இன்றியமையாதது. ஆட்சியாளர்கள் அதனைப் பிடிவாதமாக எதிர்ப்பதை விடுத்து, சமூகத்தில் பிரச்னை எழாமல் ஏற்றுக்கொள்ளும் வழியை ஆராய்வதே நல்லது; இல்லாவிட்டால் வருங்காலத்தில் எதிர்பாராத தீயவிளைவுகள் உண்டாகும் என்பதற்கு மிட்டர்னிக்கின் பழமைவாதக் கொள்கை நல்ல எடுத்துக்காட்டு.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஊழல் பெருச்சாளி

9. மொபூட்டு

மொபூட்டு

ஈ மெயில் ஐடி வைத்திருக்கும் அனைவருக்கும் எந்த மின்னஞ்சல் வருதோ இல்லையோ தவறாமல் ஆப்பிரிக்க சர்வாதிகாரி மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கும்.  எங்கப்பா ஒரு ___  ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி. அவர் நிறைய பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு வைத்து விட்டு செத்துப் போனார். அதை உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி விடுகிறேன், கமிஷனும் தருகிறேன் என்று ஆசைகாட்டி இதுவரை உலகெங்கும் பல நாடுகளில் பல பேரின் பணத்தை ஏமாற்றிச் சுருட்டிள்ளது இந்த நைஜீரிய ஈ மெயில் மோசடி.  பேர் தான் நைஜீரிய மோசடியே தவிர இந்த மோசடிப் பேர்வழிகள் அடிக்கடிப்  பயனபடுத்துவதென்னவோ காங்கோ நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி மொபூட்டுவின் பெயரைத் தான்.  யாரிந்த மொபூட்டு? ஒரு சாதாரண ஆப்பிரிக்க நாட்டின் தலைவருக்கு எப்படி சுவிஸ் வங்கியில் இவ்வளவு பணம் இருக்க முடியும்? என்று கேட்கிறீர்களா. ஆப்பிரிக்கா என்றால் நினைவுக்கு வரும் காடு, யானை என்ற ஸ்டீரியோடைப்புகளின் வரிசையில் நாட்டுப் பணத்தை மொத்தமாக  கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சர்வாதிகாரி என்ற ஸ்டீரியோடைப்பையும் சேர்த்த புண்ணியவான் தான் மொபூட்டு. காங்கோ நாட்டை அப்படியே சுருட்டி முப்பது வருட காலமாகத் தன் பாக்கெட்டில் வைத்திருந்தவர்.

பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பொதுவாக ஒரு சாபக்கேடு உள்ளது.  பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள் தங்கள் சாம்ராஜ்ய கனவுகளைத் தணித்துக் கொள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தான் பயன்படுத்தின. 20ம் நூற்றாண்டில் காலனியாதிக்கம் குறைந்து ஐரோப்பிய எஜமானர்களிடமிருந்து விடுதலையடைந்த ஆப்பிரிக்க நாடுகள் சர்வாதிகாரிகளிடமும் திருடர்களிடமும் சிக்கிக் கொண்டன. உள்நாட்டுப் போர்கள், இனக் கலவரங்கள்,  படுகொலைகள், மட்டமான நிர்வாகம்,  பரவும் தொற்று நோய்கள், கொடிய வறுமை என ஆப்பிரிக்க மக்கள் அரை நூற்றாண்டாக அனுபவிக்காத கொடுமையே கிடையாதெனலாம். இன்று வரை இந்த அவல நிலை பல நாடுகளில் நீடிக்கிறது. காங்கோவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப் போல காங்கோ ஒன்றும் ஏழை நாடல்ல.  தங்கம், வைரம், செம்பு என எக்கச்சக்க கனிம வளங்களைக் கொண்டது.  அதன் இயற்கை வளங்களுக்காகத்தான் பெல்ஜியம் அதனைக் கைப்பற்றித் தனது காலனியாக்கியது.  19ம் நூற்றாண்டின் இறுதிவரை மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ பிரதேசம் வெளியாட்கள் போகாத மர்மப் பகுதியாக இருந்தது. ஐரோப்பாவிலுள்ள குட்டி நாடுகளில் ஒன்றான பெல்ஜியம்,  பெரிய நாடுகள் மட்டும் தான் காலனி வைத்துக்கொள்ளலாமா தனக்கும் ஒரு காலனி வேண்டுமென்று அதுவரை ஐரோப்பியர் எவரும் போய்ப்பார்த்திராத காங்கோ பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டது. அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு பெல்ஜியத்தின் இரும்புப் பிடியில் காங்கோ இருந்தது.  அங்கு தான் 1930ல் மொபூட்டு பிறந்தார்.

சிறு வயதில் கத்தோலிக்க பாதரியார்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார் மொபூட்டு. அங்கு தான் பல ஐரோப்பிய மொழிகளைக் கற்று வெளியுலகைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். ஆனால் அவர்களது கடுமையான விதிமுறைகள் பிடிக்காமல் தனது பத்தொன்பதாவது வயதில் பள்ளியை விட்டு ஓடிவிட்டார்.  மீண்டும் பிடிபட்ட போது பள்ளியை விட்டு ஓடியது க்குத் தண்டனையாக காங்கோ ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். அவர் ராணுவத்தில் இருந்த போதுதான் பெல்ஜிய விடுதலை இயக்கம் தீவிரமடைய ஆரம்பித்தது.  இரண்டாம் உலகப் போருக்குப் பின் முன்னாள காலனியாதிக்கப் பேரரசுகள் அனைத்தும் ஆட்டம் கண்டு போயிருந்தன. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஒன்றன் பின் ஒன்றாக பல நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கின. காங்கோவிலும் உடனே விடுதலை வேண்டுமென்ற குரல் வலுக்கத் தொடங்கியது. பாட்ரீஸ் லுமும்பா என்ற மக்கள் செல்வாக்கு வாய்ந்த தலைவர் காங்கோ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தார். கூடிய விரைவில் பெல்ஜிய ஆட்சியாளர்கள் காங்கோவின் ஆட்சிப் பொறுப்பை லுமும்பாவின் கையில் ஒப்படைத்துவிடுவார்கள் என்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. காற்று லுமும்பா பக்கம் அடிப்பதை உணர்ந்து கொண்ட மொபூட்டு ராணுவத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு லுமும்பா கட்சியில் இணைந்தார். விரைவில் தன் திறமையாலும் அறிவாலும் உயர்ந்து லுமும்பாவின் அந்தரங்கச் செயலாளராகி விட்டார்.

தங்களுடைய பொருளாதார நிலைக்கு பங்கம் விளையாமல் காங்கோவுக்கு எப்படி சுதந்திரம் வழங்குவதென்று  ஆராய்ந்து கொண்டிருந்த மேற்கத்திய நாடுகளின் பார்வையில் மொபூட்டு விழுந்தார். லுமும்பா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். சோவியத் யூனியனில் படித்தவர். அவர் கையில் ஆட்சிப் பொறுப்பு சிக்கினால் விரைவில் காங்கோவிலுள்ள ஐரோப்பிய கம்பனிகளையெல்லாம் தேசியமயமாக்கிவிடுவார் என்று அமெரிக்கா முதலான நாடுகள் பயந்தன. எனவே லுமும்பா பதவியேற்பதற்கு முன்பே அவரைக் காலி செய்வதற்கான உள்ளடி வேலைகளில் இறங்கின.  ஜூன் 1960ல் காங்கோ விடுதலையடைந்தது.  பல கட்சிகளும் கூட்டணிகளும் பங்கேற்ற முதல் காங்கோ அரசு பதவியேற்றது. இந்தக்  கூட்டணி அரசில் குடியரசுத் தலைவர் கசாவுபு அமெரிக்க ஆதரவாளர், பிரதமர் லுமும்பாவோ இடது சாரி ஆதரவாளர். ஆட்சியமைந்து கொஞ்ச நாளில் புதிய ஆட்சியாளர்களுக்குள் சண்டை மூண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது.  குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஒருவரையொருவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.  அடுத்து நிகழ்ந்த குழப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் மொபூட்டு.  அமெரிக்க உளவு நிறுவனமான சி. ஐ. ஏ காங்கோ சோவியத் யூனியனின் கையில் சிக்காமல் இருக்க மொபூட்டுவை அதிபராக்க முடிவு செய்தது. காங்கோ விடுதலையாவதற்கு முன்பே சி. ஐ. ஏவின் ஏஜெண்டாகியிருந்தார். 1961ல் லுமும்பாவை சி ஐ ஏ மொபூட்டுவின் துணையோடு  படுகொலை செய்தது. பின்னர் ஏற்பட்ட அரசாங்கத்தில் மொபூட்டுவுக்கு முக்கியமான பொறுப்பு தரப்பட்டது.  காங்கோ ராணுவத்தில் உயர் பதவியேற்ற மொபூட்டு அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் வளர்ந்து 1965ல் அமெரிக்க ஆதரவுடன், காங்கோவின் தலைவராகி விட்டார்.  அந்த ஐந்தாண்டுகளில் காங்கோவின் பல பகுதிகளில் பிரிவினைப் போராட்டங்கள் நடந்ததும் அவருக்கு சாதகாமாகிப் போனது.  நாட்டைச் சிதறாமல் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த தலைவர் வேண்டுமென்று மக்கள் நினைத்ததால் அவருக்கு மக்களிடமும் பெரும் ஆதரவு இருந்தது.  இந்த உள்நாட்டுப் போர்களும் பிரிவினைக் கலவரங்களும் அடங்கி அமைதி திரும்புவதும் மொபூட்டுவின் பதவியேற்பும் சரியாகப் பொருந்தி அமைந்தன. தனது 35 வயதில் காங்கோவின் முடிசூடா மன்னரானார் மொபூட்டு.

பதவிக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்தது தான். கட்சிகள் இருந்தால்தான் அரசியல் கருத்து வேறுபாடு வரும்,  அதனால் நாட்டில் சச்சரவுகள் மூளும் என்று காரணம் சொல்லி ஐந்து வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் காங்கோவில் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்.  அரசியல்வாதி என்ற சொல்லே காங்கோவில் கெட்ட வார்த்தையாகி விட்டது. எல்லா சர்வாதிகாரிகளும் செய்வது போல தனது தலைமையில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். மக்களாதரவு புரட்சி இயக்கம் என்று பெயர் கொண்ட அக்கட்சியில் காங்கோவின் அனைத்து குடி மக்களும் கட்டாயமாக உறுப்பினராக வேண்டுமென்று உத்தரவு போட்டார் மொபூட்டு. காங்கோவிலிருந்து ஐரோப்பிய தாக்கத்தை அறவே ஒழிக்கும் முயற்சியில் இறங்கினார். பெல்ஜிய ஆட்சியாளர்கள் நகரங்களுக்கும் அமைப்புகளும் வைத்திருந்த ஐரோப்பிய பெயர்களையெல்லாம் லோக்கல் மொழியில் மாற்றினார். நாட்டின் பெயரையே காங்கோவிலிருந்து ஸெயர் என்று மாற்றி விட்டார்.  நடை உடை பாவனை என அனைத்து விஷயங்களிலும் ஐரோப்பிய பாணிகள் தடை செய்யப்பட்டன.  தனது பெயரைக் கூட ”தனது மன உறுதியாலும், நிலைத்து நிற்கும் தன்மையாலும், அனைத்தையும் வென்று செல்லுமிடமெல்லாம் தீக்கிரையாக்கும் வீரன்” என்று மாற்றிக் கொண்டார்!

நாடு முழுவதும் எல்லாத் துறைகளிலும் இந்த ஸெயராக்கத்தைத் தொடர்ந்து நடத்தினார். பொருளாதாரம், கல்வி, தொழிற்சாலைகள், என அனைத்துத் துறைகளும் மொபூட்டுவின் கட்டுப்பாட்டில் வந்தன.   தனது உறவினர்களையும் ஜால்ராக்களையும் நாட்டின் முக்கிய பதவிகளுக்கு நியமித்தார். மொபூட்டுவின் ஆட்சியில் அதிபருக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. நாட்டின் நாடாளுமன்றம் ஆமாம் சாமி போடும் அமைப்பாக மாற்றப்பட்டது.  மொபூட்டுவின் அரசியல் விரோதிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் அல்லது நாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். தனது அமைச்சரவையில் கூட எதிர்த்துப் பேசியவர்களை பொது இடத்தில் தூக்கிலிட்டார் மொபூட்டு.   தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு மொபூட்டு ஆதரவாளர்கள் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டன.  அரசு ஊடகங்களில் கூட மொபூட்டுவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் செய்தி வெளியிடக் கூடாதென்று உத்தரவு போடப்பட்டது.  தேர்தல்கள் நடந்தாலும் “ஜனநாயக” முறைப்படி மொபூட்டு மட்டும் தான் அவற்றில் போட்டியிடுவார். சர்வாதிகார இலக்கணப்படி 98 சொச்ச சதவிகித வோட்டுகளுடன் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இப்படி ஐந்தாண்டுகளில் தனது பதவியைத் தக்க வைக்க அரசியல் எதிரிகளையெல்லாம் ஒழித்த பின்னர் நாட்டை விஞ்ஞான முறைப்படி கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கினார். காங்கோவிலிருந்த நிறுவனங்களெல்லாம் தேசியமயமாக்கப்பட்டு அவற்றின் நிர்வாகங்கள் மொபூட்டுவின் அல்லக்கைகள் கையில் கொடுக்கப்பட்டன.  காங்கோ நாட்டின் கருவூலமே மொபூட்டுவின் பாக்கெட்டில் தான் இருந்தது.  தனது கொள்கைகளுக்கு மொபூட்டுயிசம் என்று பெயரிட்டு நாட்டிற்குத் தானேதான் எல்லாம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்த முட்டாள் தனமான முடிவால் விரைவில் காங்கோவின் பொருளாதாரம் சின்னாபின்னமானது. மொபூட்டுவின் அல்லக்கைகளின் கேவலமான நிர்வாகத்தால் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தில் மூழ்கின.  மொபூட்டுவின் குடும்பத்தினரும், கூட்டாளிகளும் அரசு பணத்தைத் தங்கள் பெயரில் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துக் கொண்டனர். புதிய ஆப்பிரிக்க மறுமலர்ச்சி ஒன்றை ஏற்படுத்திகிறேன் பேர்வழி என்று மொபூட்டு வகுத்த திட்டங்கள் அனைத்தும் எக்கச்சக்க பணத்தை வீணடித்து நாட்டின் கடன் சுமையை மேலும் ஏத்தின.  உலக வங்கி கூட கடன் தர மறுக்கும் அளவுக்கு காங்கோ நாட்டின் பொருளாதாரம் மோசமாகிப் போனது. ஆனால் மத்திய ஆப்பிரிக்காவில் சோவியத் ஆதரவு இயக்கங்களுக்கு எதிராக ஒரு ஆள் வேண்டுமென்று அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் கருதியதால், அவை மொபூட்டுவின் முட்டாள்தனத்துக்குத் துணை போயின. காங்கோ திவாலாகாமல் பார்த்துக் கொண்டன.

பனிப்போர் அரசியலில் தனக்குள்ள முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த மொபூட்டு அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். மேலை நாடுகளின் உதவிப் பணத்தையெல்லாம் அப்படியே தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.  நாடே வறுமையில் வாடிக் கொண்டிருக்க மொபூட்டுவின் கூட்டாளிகள் மட்டும் சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  நாட்டில் சாலைகளே இல்லாத போது மொபூட்டு குடும்பம் மட்டும் பெரிய லிமோசின்களில் பவனி வந்தது. போக்குவரத்து வசதியில்லாத நாட்டில் மொபூட்டு போவதற்கு ஒரு தனி கன்கார்டு வகை விமானமே வாங்கப்பட்டிருந்தது.  நாடெங்கும் மாட மாளிகைகள், கேளிக்கை விருந்துகள், அவ்வப்போது வெளி நாடுகளில் ஷாப்பிங்க் என உல்லாசமாக வாழ்க்கை நடத்தியது மொபூட்டு குடும்பம.  ஊழல் பெருச்சாளி என்ற தொடருக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினார் மொபூட்டு.  தனது பதவிகாலத்தில் ஐந்து பில்லியன் டாலர் வரை அவர் சுருட்டியிருக்க வேண்டுமென்று பரவலாக நம்பபட்டது. (பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தால் இன்றைய மதிப்பில் இது இன்னும் பல மடங்கு அதிகம்).

ஆனால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மொபூட்டுவின் உல்லாச வாழ்க்கைக்குக்கும் முடிவு ஏற்பட்டது.  சோவியத் யூனியன் வீழ்ந்து பனிப்போர் முடிவுக்கு வந்த பின்,  அமெரிக்காவுக்கும் சி ஐ ஏவுக்கும் மொபூட்டு தேவையில்லாது போனார். அவருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. அமெரிக்க உதவியில்லாமல், மொபூட்டுவால் ரொம்ப வருஷம் தாக்கு பிடிக்க முடியவில்லை. நாசமாகிப் போயிருந்த பொருளாதாரமும், புதிதாக முளைத்திருந்த தலைவர்களும் மொபூட்டுவின் பதவிக்கு உலை வைத்தனர். முப்பதாண்டுகளாக எதிர்க்க ஆளில்லாமல் தனியாளாக ஆட்சி செய்துவந்த மொபூட்டு பதவியைத் தக்க வைக்க தனது போட்டியாளர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டி வந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக மொபூட்டுவின் பலம் குறைந்தது.  மேலும் கேன்சரால் பாதிக்கபபட்ட மொபூட்டுவால் முன்போல வேகமாக செயல்படவில்லை. 1990களில் காங்கோவில் உள்நாட்டுப் போர் மூண்டது.  பல பக்கங்களிலிருந்து உருவான நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிவிட்டார் மொபூட்டு.  ஆனால் பதவியை விட்டு விலகியபின் நீண்ட நாட்கள் அவர் உயிருடன் இருக்கவில்லை. சில மாதங்களுக்குள்ளாக இறந்து போனார்.  அவர் இறந்த பின் அவரது சுவிஸ் வங்கிக் கணக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுருட்டிய பில்லியன் கணக்கான டாலர்களில் மீதி எங்குபோனது என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கின்றன.  இந்த மர்மத்தைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் பேராசை பிடித்தவர்களை மின்னஞ்சல் மோசடி மூலமாக ஏமாற்றி வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பேரினவாதி!

10. ஹிடேக்கி டோஜோ

ஆட்சியில் இருப்போர் அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் கடுமையைக் கூட்டினால் அது பிற்காலத்தில் நாட்டிற்கே ஆபத்தாய்ப்போய் விடும்.  இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நுழைந்து அமெரிக்காவிடம் தர்ம அடி வாங்கியது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஹிடேக்கி டோஜோ என்ற அரசியல்வாதி தனது கொள்கைப் பிடிப்பினாலும், பதவி ஆசையினாலும் ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தி இந்த நிலைக்கு ஆளாக்கினார்.

டோஜோ

ஆசிய நாடுகளில் ஜப்பான் கொஞ்சம் வித்தியாசமானது.  பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களின் வரவால் பெரும்பாலான ஆசியப் பேரரசுகள் ஆட்டம் கண்டன.  வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் நுழைந்தனர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஆளைக் கடித்த கதையாக பல ஆசிய நாடுகளை இரு நூறு ஆண்டுகளுக்கும் தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாகக் கொண்டு வந்தனர்.  அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த வெகு சில ஆசிய நாடுகளுள் ஜப்பானும் ஒன்று.  பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் ஜப்பானியர்கள் தங்களைத் தாமே உலகிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டனர்.  சகோகு (பூட்டிய நாடு) கொள்கை என்ற கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினர். அதன்படி வெளிநாட்டவர் யாரும் ஜப்பானுக்குள் நுழையக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.  அதே போல் ஜப்பானியர் யாரும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. மீறினால் மரணதண்டனை. இந்த கடுமையான கொள்கையால், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பனிகளால் பிற நாடுகளில் செய்தது போல உள்ளே நுழைந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போயிற்று. இந்தத் தனிமை இருநூறு ஆண்டுகள் நீடித்தது. ஐரோப்பியர் வசம் சிக்காமல் போனாலும், இந்த இரு நூற்றாண்டுகள் தனிமையின் போது உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் ஜப்பானை எட்ட வில்லை.  தொழிற்புரட்சி மற்றும் எந்திரமயமாக்கலின் தாக்கங்கள் ஜப்பானுக்குக் கிட்டாமல் போய்விட்டன. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில்தான் இந்தத் தனிமை முடிவுக்கு வந்தது. ஜப்பான் மீண்டும் உலகுடன் தொடர்புகளை ஏற்படுத்தியபோது உலகம் தலைகீழாக மாறியிருந்தது. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உலகைப் பங்கிட போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

தாங்கள் தனித்து வாழ்ந்திருந்த காலத்தில் ஐரோப்பியர்கள் உருவாக்கிய பெரும் சாம்ராஜ்யங்களைக் கண்டு ஜப்பானியர்களுக்கும் தங்களுக்கென ஒரு பேரரசை உருவாக்கும் ஆசை வந்தது. இருநூறு வருட பின்தங்கலைச் சரிகட்ட நாலு கால் பாய்ச்சலில் தங்களது நாட்டையும் சமூகத்தையும் நவீனப் படுத்தத் தொடங்கினர்.  ஐரோப்பிய நாடுகளைப் போலவே தங்களுக்கும் காலனிகளை அமைத்துக் கொள்ளத் தொடங்கினர். ஓகினாவா, கொரியா, தாய்வான் என பக்கத்திலிருந்த பகுதிகளையெல்லாம் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.  இப்பகுதிகள் ஜப்பானின் இராணுவ பலத்தைப் பெருக்கவும்,  பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் நன்றாக கசக்கிப் பிழியப்பட்டன.  தங்களது காலனியாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் நியாயப்படுத்த ஐரோப்பிய நாடுகள் சொன்ன அத்தனைக் காரணங்களையும் ஜப்பானும் தத்தெடுத்துக் கொண்டது.  பேரினவாதக் கோட்பாடுகள் ஜப்பானிய சமூகத்தில் பரவின. தாங்கள்தான் உலகாளப் பிறந்தவர்கள்,  மற்ற இனங்களெல்லாம் அடி பணிந்து வாழ வேண்டுமென்று ஜப்பானிய மக்கள் நம்பத் தொடங்கினர்.  ஜப்பானியப் பேரரசும் சிறிது சிறிதாக வளரத் தொடங்கியது.

ஒரு பேட்டையில் ஒரு பிஸ்தா தான் இருக்க முடியுமென்பது இயற்கையின் நியதி.  பிஸ்தாவாக இருவர் முயன்றால் அது அடிதடியில் தான் முடியும். பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் இதுதான் நடந்தது.  பெருங்கடலின் ஒரு பக்கம் ஜப்பான் இருநூறு ஆண்டுகாலத் தனிமையை அரை நூற்றாண்டில் ஈடுகட்டி பேரரசை உருவாக்கப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நிழலிலிருந்து வெளி வந்து தனி ஆவர்த்தனம் செய்யப் பழகிக் கொண்டிருந்தது. பசிபிக் பெருங்கடல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் இரு நாடுகளும் உரசிக் கொள்ளத் தொடங்கின. முதலாம் உலகப் போர் அதுவரை  உலகை ஆட்டிப் படைத்து வந்த ஐரோப்பிய வல்லரசுகளைப் பலவீனப்படுத்தியதும் இவ்விரு நாடுகளுக்கும் சாதகமாகப் போனது.   பசிபிக்  பகுதியில் உள்ள பிற நாடுகளை ஆதிக்கம் செலுத்தவும் இயற்கை வளங்களைத் தமதாக்கவும் இரு நாடுகளும் போட்டி போட்டன.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தப் போட்டி நட்பான போட்டியாகத்தான் இருந்தது. 1920களிலும் 30 களிலும் கடுமை கூடி இரு நாடுகளும் அடுத்தவரை எதிரியாகப் பார்க்கத் தொடங்கின.  காலனியாதிக்கப் போட்டி தவிர இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப் போட்டியும் வளரத் தொடங்கியது.  அமெரிக்கா இயற்கையிலேயே பெரிய நாடு; வளங்கள் நிறைந்த நாடும் கூட. ஆனால் ஜப்பான் அப்படியல்ல.  சிறிய, வளங்கள் குறைந்த நாடு.  எனவே இயற்கை வளங்கள் மிகுந்த பக்கத்து நாடுகள் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

இப்படியொரு சூழ்நிலையில் தான் ஜப்பானில் இராணுவத்தின் ஆதிக்கம் படிப்படியாக உயர்ந்தது.  ஜப்பானியப் பேரரசர் நாட்டுத் தலைவராகவும், மக்களுக்கெல்லாம் கடவுளாகவும் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே ஆட்சி புரிந்து வந்தன. ஆனால் பக்கத்து நாடுகளுடான சண்டை, அமெரிக்காவுடனான போட்டி ஆகியவற்றால், ஜப்பானிய இராணுவமும் அந்நாட்டில் ஒரு பலமான அதிகார மையமாகி விட்டது. அதன் இசைவின்றி பெரிய கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்க இயலாது என்ற நிலை உருவானது.  ராணுவ தளபதிகளும் அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுமளவுக்கு பலம் வாய்ந்தவர்களாகினர். அப்படி நியமிக்கப்பட்டவர்களுள் ஒருவர் தான் ஹிடேக்கி டோஜோ.

ராணுவ தளபதி ஒருவரின் மகனாகப் பிறந்த டோஜோ,  சிறு வயதிலேயே தானும் ராணுவத்தில் சேர்ந்து விட்டார்.  தன் வாழ்நாள் முழுவதும் ராணுவ அதிகாரியாகவேதான் இருந்தார். படிப்படியாக உயர்ந்து 1930களில் ஜப்பானிய ராணுவத்தில் பலம் வாய்ந்த தளபதியானார். இந்த காலகட்டத்தில் ஜப்பானிய அதிகாரவர்க்கத்தில் ஒரு பெரும் பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது.  சீனா, கொரியா, தைவான் போன்ற நாடுகளில் ஜப்பானியப் படைகளுக்குக் கிடைத்த வெற்றிகள் வலதுசாரி பழமைவாதிகளின்  நிலையை பலப்படுத்தியிருந்தன. இவர்களது ஆதரவாளர்கள் அமெரிக்காவுடனான போர் மூள்வது தவிர்க்க இயலாது, எனவே அதற்கான ஆயத்தங்களில் உடனே இறங்க வேண்டுமென்று கருதினர். அதற்கு தடையாக இருக்கும் ஜனநாயக முறைகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்த விரும்பினர். இந்த கோஷ்டியின் முக்கியமான உறுப்பினர் டோஜோ.  ராணுவ அதிகாரியாக இருந்து கொண்டே ஜப்பானிய அமைச்சரவையில் ராணுவ அமைச்சராகவும் இருந்தார். டோஜோ கோஷ்டிக்கு எதிர் கோஷ்டியும் சமாதான கோஷ்டியல்ல ஆனால் உடனடியாகப் போரை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் நேரடியாக மோதினால் பேரிழப்பு ஏற்படுமென்று அவர்கள் உணர்ந்திருந்தால், பொறுத்துப் போவோம் என்று சொல்லிப் பார்த்தார்கள்.  ஆனால் பழமைவாதிகள் கேட்பதாக இல்லை.  ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் மூண்டதும் அவர்களுக்குச் சாதகமாகிப் போனது.

மிதவாதிகள் அமெரிக்காவுடனான பிரச்சனைகளை இப்போதைக்குப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும், டோஜோ கோஷ்டி கேட்பதாக இல்லை. போருக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்.  அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா கடுமையாக நடந்து கொண்டதாலும், ஜப்பானுக்குத் தேவையான தளவாடங்களை விற்க தற்காலத் தடை விதித்ததாலும்,  மிதவாதிகளின் கட்சி பலவீனமானது. டோஜோ ஆதரவாளர்கள் கை மேலும் ஓங்கியது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே அமெரிக்காவுடனான போருக்குத் தயாராகத் தொடங்கினர். மிதவாதிகளின் தலைவர் கொனோயே ஜப்பானியப் பிரதமராக இருந்தாலும், டோஜோ அமைச்சரவையுள் இருந்து கொண்டே அவருக்குக் குழி பறித்தார். ஒவ்வொரு அமைச்சராக டோஜோவின் பேச்சைக் கேட்டு அவரது  கோஷ்டியில் சேர்ந்தனர்.  ஜப்பானியப் பேரரசர் ஹீரோஹிட்டோவையும் போர் ஏற்படுவது நிச்சயம், அதில் நாம் எளிதில் வென்று விடலாம் என்று மனதை மாற்றிவிட்டார் டோஜோ. அக்டோபர் 1941ல் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட கொனோயே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில் டோஜோ பிரதமரானார்.  போர் மூள்வது தவிர்க்க முடியாமல் போனது.

டிசம்பர் 7, 1941ல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே,  ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது படைகளுக்கு உத்தரவிட்டார் டோஜோ.  யுத்த விதிகளின்படி போர்ப் பிரகடனம் செய்யாமல் எந்த நாடும் மற்றொரு நாட்டைத் தாக்கக் கூடாது. பிரகடனம் செய்தால் பியர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்கக் கப்பல்கள் உஷாராகி விடும் என்பதனால், தாக்குதல் தொடங்க சில நிமிடங்களுக்கு முன்பு போர்ப் பிரகடனம் செய்ய உத்தரவிட்டார் டோஜோ. ஆனால் வாஷிங்டனிலிருந்த ஜப்பானியத் தூதரகம் செய்த குளறுபடியால், அதிகாரப்பூர்வ போர்ப் பிரகடனம் செய்யும் முன்னரே ஜப்பானியத் தாக்குதல் நடந்தேறிவிட்டது.  ஜப்பான் கோழைத்தனமாக தன் முதுகில் குத்திவிட்டதாக  கோபம் கொண்ட அமெரிக்கா போருக்கு அவசர அவசரமாகத் தயாரானது. ஆனால் ஜப்பான் போருக்கான ஆயத்தங்களை வெகு நாட்களுக்கு முன்னரே தொடங்கியிருந்ததால்,  போரின் ஆரம்பத்தில் அமெரிக்கப் படைகளை முறியடித்து வேகமாக முன்னேறியது. ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா, பபுவா, மலேசியா, சிங்கப்பூர் என ஜப்பானியப் படைகள் மளமளவென்று கைப்பற்றி முன்னேறின. போரின் ஆரம்பத்தில் டோஜோ சொல்லியிருந்தபடியே எளிதான வெற்றிகள் கிட்டியதால் ஜப்பானிய அதிகார வட்டத்தில் அவருக்கு செல்வாக்கு கூடியது. ஐரோப்பிய நாடுகள் பல நூற்றாண்டுகளாய் உருவாக்கிய காலனிகளை சில ஆண்டுகளில் ஜப்பானுக்கு உருவாகக முனைந்தார் டோஜோ.

கைப்பற்றிய ஆசிய நாடுகளெல்லாம், ஜப்பானுக்கு அடிமை நாடுகளாக மாறின. ஜப்பானிய மக்கள் தான் உலகாளப் பிறந்தவர்கள், மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு அடிபணிந்து வாழ வேண்டுமென்ற கொள்கையுடன் தான் கைப்பற்றிய நாடுகளை ஆட்சி புரிந்தது டோஜோ அரசு. போரில் கைப்பற்றப்பட்ட நேசநாட்டுப் போர்க்கைதிகள் கொடுமைப்படுத்தப் பட்டனர். சரியான உணவில்லாமல் கடுமையாக உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். கொரியா முதல் பர்மா வரை ஒரு கொடூர சர்வாதிகார அரசாக ஜப்பான் உருவாகியது.  இந்த வெற்றிகள் ஜப்பானிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.  டோஜோவின் ஆட்சி இராணுவத்துக்கும் அரசுக்கும் இடையேயான இடைவெளியை அகற்றி விட்டது. அரசுக்காக ராணுவம் என்பது மாறி, ராணுவத்துக்காக அரசு என்ற நிலை உருவானது.  ஆனால் அடிபட்ட அமெரிக்கா சும்மா இருக்கவில்லை. விரைவில் வெகுண்டெழுந்தது. ஜப்பான் கைப்பற்றிய பகுதிகளை ஒவ்வொன்றாக மீண்டும் கைப்பற்றத் தொடங்கியது.  ஜப்பானோடு ஒப்பிடுகையில் ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும் அமெரிக்கா பன்மடங்கு பெரிது.  அதனுடன் மோதுவது ”தூங்கும் அரக்கனை எழுப்பி அவனுக்கு எரிச்சலூட்டுவது” போல என்று பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு முன் ஜப்பானின் பிரபல தளபதி யமாமாட்டொ டோஜோவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை பொருட்படுத்தாமல், டோஜோவும் பிற பழமைவாதிகளும் போரைத் தொடங்கினர்.  யமாமாட்டொ சொன்னது நிஜமானது. அமெரிக்காவின் அசுர பலத்தைச் சமாளிக்க முடியாமல் ஜப்பானியப் படைகள் அனைத்து போர்க்களங்களிலும் பின்வாங்கின.  இதனால் டோஜோவின் செல்வாக்கும் வெகுவாக சரிந்தது.

ஜூலை 1944ல் அமெரிக்கப் படைகள் சைபான் தீவைக் கைப்பற்றியதை டோஜோவின் அரசியல் விரோதிகள் பயன்படுத்திக் கொண்டனர். அத்தோல்விக்குப் பொறுப்பேற்று அவரைப் பதவி விலகச் செய்தனர். நான்காண்டுகளுக்கு முன்னர் கொனோயேவை பிரதமர் பதவியிலிருந்து டோஜோ எப்படி இறக்கினாரோ அதே போல அவரும் இறக்கப்பட்டார். டோஜோ அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டாலும் அவரது சிஷ்யர்களை குருவை மிஞ்சினர். அமெரிக்காவிடம் தோற்கப்போவது உறுதி என்று தெரிந்தும் சரணடையாமல் வம்படியாக இறுதிவரை போராடினர். விளைவு ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு.  இவர்களை விட்டால் ஜப்பானை அழித்து விடுவார்கள் என்று பயந்த பேரரசர் ஹீரோஹிட்டோ அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்.  வெற்றி பெற்ற அமெரிக்கா கைது செய்ய வேண்டுமென்று தயாரித்த போர்க்குற்றவாளிகள் பட்டியலில் முதலில் டோஜோவின் பெயர் இருந்தது. தன்னைக் கைது செய்ய வருகிறார்கள் என்று தெரிந்த உடன் தன் இதயத்தில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார் டோஜோ. ஆனால் குறி தவறி வயிற்றில் சுட்டுக்கொண்டார். படுகாயமடைந்த அவரை ஆசுபத்திரியில் சேர்த்து குணமாக்கி பின்னர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அமெரிக்கா.

1948ல் போர்க்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டார் டோஜோ.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடைந்தெடுத்த ஏகாதிபத்தியவாதி

11. செசில் ரோட்ஸ்

 

செசில் ரோட்ஸ்

ஆப்பிரிக்காவைப் பற்றிய தற்கால பத்திரிக்கை செய்திகளைப் படிப்பவர்கள் மனதில் அக்கண்டம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி எழும். அங்கு  எப்போது பார்த்தாலும் ஏதேனும் ஒரு நாட்டில் ஏதாவது சண்டை, உள்நாட்டுப் போர் அல்லது இராணுவப் புரட்சி என்று நடந்து கொண்டே இருக்கிறது.  கடும் வறுமையில் வாடும் மக்கள், கொடிய தொற்று நோய்கள், இனக்கலவரங்கள், அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்  சுவிஸ் வங்கியில் போட்டு விட்டு நாட்டை விட்டு ஓடும் அரசியல்வாதிகள் என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் உலகின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் சகஜம் என்றாலும் ஆப்பிரிக்காவில் மட்டும் அடிக்கடி நிகழ்கின்றது. ஏன் ஆப்பிரிக்காவில் மட்டும் நிலைமை இப்படி மோசமாக இருக்கிறது என்பதற்கு பெரும்பாலான வரலாற்றாளர்கள் சொல்லும் பதில் ஏகாதிபத்தியத்தின் பின்விளைவுகள்.

ஐரோப்பியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஆப்பிரிக்காவைத் தெரிந்திருந்தாலும் கி. பி பதினேழாம் நூற்றாண்டில் தான் அங்கே சீரியசான குடியேற்ற முயற்சிகளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஆப்பிரிக்க அரசுகளுடன் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற துறைமுகங்கள் தான் ஐரோப்பிய காலனிகளாக உருவாகின. பின்னர் மெதுவாக ஐரோப்பிய ஆதிக்கம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் உட்பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. வியாபரத்தில் ஆரம்பித்த ஆப்பிரிக்க- ஐரோப்பியர் உறவு விரைவில் சுரண்டலாக மாறியது. அடிமைகள், தந்தங்கள், வைரங்கள், தங்கம், வெள்ளி, போன்ற பொருட்களை ஆப்பிரிக்க அரசுகளிடமிருந்தும் குடிகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கி ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர் ஐரோப்பிய வணிகர்கள்.  இந்த வர்த்தகத்தில் கிடைத்த லாபம்    சின்னச் சின்னதாக வணிகம் செய்வதற்குப் பதிலாக கண்டத்தையே வளைத்துப் போட்டால் என்ன என்று அவர்களுக்குத் தோன்றச் செய்தது.  அப்படித்  தான் ஆப்பிரிக்காவுக்கான அடிதடி (scramble for Africa)  ஆரம்பித்தது.

ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்த ஆப்பிரிக்கக் குடிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் எதிரிகளை வீழ்த்த ஐரோப்பியருக்கு உதவி செய்தன.  இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வரைபடத்தில் தங்கள் இஷ்டப்படி கோடு கிழித்துக் கொண்டு அப்பகுதிகளைத் தங்கள் லாபத்துக்குச் சுரண்டத் தொடங்கினர்.  இரண்டு நூற்றாண்டுகளுள் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி ஐரோப்பிய காலனிகளாக மாறிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய ஆப்பிரிக்காவிலும் சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகள் அனைத்தும் ஐரோப்பிய ஆதிக்கத்தில் வந்துவிட்டன. அடுத்த அரை நூற்றாண்டில் தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் சாம்பெசி ஆற்றுப்பகுதியை பிரிட்டிஷ் காலனியாக்குவதில் பெரும் வங்கு வகித்தவர் தான் செசில் ரோட்ஸ்.  வரலாற்றில் ஒரு தனி மனிதனாக வியாபார நோக்குக்காக அரசின் கொள்கைகளை வளைத்து ஒரு பெரும் நாட்டையே வளைத்துப் போட்ட முதல் ஆள் செசில் ரோட்ஸ் தான்.

1853ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு சாதாரண பாதிரியாருக்கு மகனாகப் பிறந்தார் ரோட்ஸ். சிறு வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்குப் போய்விட்டார். தென்னாப்பிரிக்கா அப்போது மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. கிம்பர்லி பகுதியில் வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதால், புதிய வைரச் சுரங்கங்களைக் கண்டுபிடித்து பணக்காரர் ஆகும் கனவோடு ஆயிரக் கணக்கானோர் தென்னாப்பிரிக்காவுக்குக் குடி பெயர்ந்தனர்.  இந்த வைர வேட்டைக்காரர்களோடு ரோட்சும் சேர்ந்து கொண்டார். ஆனால் மற்றவர்களைப் போல சிறிய அளவில் முயற்சிக்கவில்லை அவர். அப்போதே ஒரு பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கிவிட வேண்டுமென்ற வெறியுடன் இருந்தார்.  வேகமாக செயல்படுவதன் மூலமும் தனது வியாபார உத்தியைப் பயன்படுத்தியும் கிம்பர்லி பகுதியில் வைரச் சுரங்க உரிமம் பெற்றிருந்த சிறு நிறுவனங்களையெல்லாம் வாங்கி ஒரே நிறுவனமாக மாற்றினார்.  இது நிகழ்ந்த போது அவருக்கு வயது 17!. இன்னும் கல்லூரியில் கூட நுழையவில்லை. தனது கல்லூரிப் படிப்பை முடிப்பதற்காக வியாபாரத்தைத் தனது சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் இங்கிலாந்து வந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து விட்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா போன போது வைரத் தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. ரிசெஷனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல நிறுவனங்கள்  மூடப்பட்டன. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரோட்ஸ், திவாலாகும் நிறுவனங்களையும், அவற்றின் சுரங்க உரிமங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டார்.  அவரது நிறுவனம் மேலும் பன்மடங்கு வளர்ந்தது. அப்போதெல்லாம் வைரச் சுரங்கங்களில் மேற்பரப்பில் கிடைக்கும் வைரங்களை மட்டும் தோண்டி விட்டு அப்படியெ போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் அடியிலிருக்கும் பாறையில் தான் அதிக வைரங்கள் கிடைக்கும் என்று நம்பிய ரோட்ஸ்,  காலியானவை என்று நம்பப்பட்ட சுரங்கங்களை வாங்கிப் போட்டார். அவரது நம்பிக்கை உண்மையானது. பாறைகளில் அதிக வைரங்கள் கிடைத்தன. இதனால் ரோட்ஸ் கோடீஸ்வரரானார். சாதாரண கோடீஸ்வரராக இருப்பதுடன் அவர் திருப்தி அடையவில்லை. உலகின் வைர வர்த்தகத்தையே கட்டுப்படுத்த நினைத்தார். இதற்காக 1880ல் டீ பியர்ஸ் வைர நிறுவனத்தை உருவாக்கினார்.  பெரும் வைர நிறுவனங்களை அணுகி தனது கூட்டாளிகளாக்கிக் கொண்டார். வைர வியாபாரத்தில் ஒரு ஏகபோகக் கூட்டணியை உருவாக்கினால் வைர விலைகளை இஷ்டத்துக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை மற்ற நிறுவனங்களுக்குப் புரிய வைத்தார். இதனால் பெரும்பாலானவை டீ பியர்ஸ் நிறுவனத்தில் இணைந்து விட்டன. உலகின் வைர சப்ளையில் 90 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்தியது டீ பியர்ஸ். இதனால் உலகின் வைர விலைகளின் கட்டுப்பாடு ரோட்ஸ் கையில் வந்து விட்டது.

வர்த்தகத்தில் பலம் பெற்றதோடு, அரசியலிலும் வளர வேண்டுமென்று விரும்பினார் ரோட்ஸ். அவர் ஒரு கடைந்தெடுத்த ஏகாதிபத்தியவாதி மற்றும் பிரிட்டிஷ் பேரினவாதியும் கூட. வெள்ளை இனமே உலகாளப் பிறந்தது, உலகினைக் கைப்பற்றிப் பிற இனங்களை ஆட்சிபுரிவது என்பது அவர்களது விதி என்று உறுதியாக நம்பினார்.  உலகைக் கைப்பற்ற ராணுவ பலம் மட்டும் போதாது, வர்த்தக பலத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நம்பினார்.  அரசு வர்த்தகர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும், சட்டங்களும் அவர்களது விருப்பப்படியே இயற்றப்பட வேண்டும் என்று நம்பினார். தனது பெரும் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசில் பலரைக் கைக்குள் போட்டுக் கொண்டார். இதனால் தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் பொருளாதாரக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் ரோட்சின் விருப்பப் படிதான் இருந்தன.  தென்னாப்பிரிக்க கேப் காலனியின் சட்டமன்ற உறுப்பினராகி கொஞ்ச காலத்துக்குள் அதன் பிரதமரும் ஆகி விட்டார். அதன் பின்னர் தென்னாப்பிரிக்க காலனி அரசுகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தன. அவர் வைத்ததே சட்டம் என்றானது.

தென்னாப்பிரிக்காவை ஆட்டுவித்தது போதாதென்று மேலும் பல புதிய பிரிட்டிஷ் காலனிகளை உருவாக்கும் வேலையில் இறங்கினார். புதிய காலனிகளை உருவாக்க ஒரு நல்ல உத்தியை உருவாக்கினார். முதலில் ஒரு பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் குடிகளின் தலைவரோடு நண்பராவார். அவருக்கு பல புதிய சாமான்களை அன்பளிப்பாக வழங்கி நெருக்கமாகிக் கொள்வார். பின்னர் உங்கள் ஊரில் பூமியில் ஒரு குழி தோண்ட வேண்டும் அனுமதி கொடுங்கள் என்று கேட்பார். சுரங்கங்களைப் பற்றியும், அவற்றில் கிடைக்கும் செல்வத்தைப் பற்றியும் அறிந்திராத ஆப்பிரிக்கத் தலைவர்கள் சரி நம்ம நண்பர் கேட்கிறாரே தோண்டி விட்டுப் போகட்டும் என்று அனுமதி கொடுத்து விடுவார்கள். ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத அவர்களிடம் தனக்கு சாதகமான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விடுவார் ரோட்ஸ். ஒரு குழி தோண்டிக் கொள்கிறேன் என்று வாய்மொழியாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு, அந்தப் பகுதி முழுதையும் தனது நிறுவனத்துக்கு எழுதி வாங்கிக் கொள்வார். அடுத்து இந்த ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு பிரிட்டிஷ் அரசிடம் போவார். பார் அந்தத் தலைவன் எனக்கு நிலம் முழுவதையும் எழுதிக் கொடுத்து விட்டான். இதில் சுரங்கம் தோண்டினால் நம் நாட்டுக்கு நல்ல லாபம் கிடைக்கும், எனக்கு சாதகமாக செயல் படுங்கள் என்று கேட்பார். ஒத்துவராத அதிகாரிகளை நன்றாக “கவனித்துக்” கொள்ளுவார். . அரசிலும் ராணுவத்திலும் ரோட்சின் ஆதரவாளர்கள் பெரிய பதவிகளில் இருப்பார்கள். அவர்களும் இவருக்கு ஆதரவாக பேசுவார்கள். இறுதியில் இவர் ஒப்பந்தம் செய்த இடத்தை பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட இடமாக (british protectorate)  அறிவித்து விடுவார்கள்.

ஒரு குழி தோண்டிக் கொள்ள அனுமதி கொடுத்த ஆப்பிரிக்கத் தலைவருக்கு அதிர்ச்சி காத்திருக்கும்.  ரோட்சின் கூலிப்படைகளும் பிரிட்டிஷ் படைகளும் அப்படியே அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். முதலில் கொஞ்ச நாள் லாபத்தில் பங்கு தருவது போல பள பளாவென்று ஏதேனும் அன்பளிப்புகள் தந்து ஆப்பிரிக்கத் தலைவரைச் சமாதானப் படுத்துவார்கள்.  அவர் ஒத்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டால் அப்படியே அந்த நிலம் ஒரு பிரிட்டிஷ் காலனியாக மாறிவிடும், ஒப்புக் கொள்ளவில்லை என்றால், போர் மூளும்.  பிரிட்டிஷ் புரட்டக்டரேட்டாக அறிவித்து விட்டதால், அதனைத் தன் படைகளைக் கொண்டு பாதுகாக்கும் நிர்பந்தம் பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு. படைகளை அனுப்பி ஆப்பிரிக்கக் குடிகளை விரட்டி அடிக்கும்.  சுரங்கத்தில் கிடைக்கும் லாபம் ரோட்சுக்கு, அதனைப் பாதுகாக்கும் செலவு அரசுக்கு.  ரோட்சின் இந்த ஏமாற்று வேலைகளால் பிரிட்டிஷ் அரசு 19ம் நூற்றாண்டின் இறுதியில் பல போர்களில் ஈடுபட வேண்டியதாயிற்று.  அப்படி மூண்ட போர்களில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆலைகளையும், தோட்டங்களையும் நன்றாகப் பாதுகாத்துக் கொள்வார் ரோட்ஸ்.  இந்த மாதிர் தில்லு முல்லுகளை செய்து வந்ததால் ரோட்சுக்கு அரசில் எதிரிகளும் உருவானார்கள். ஆனால்  தென்னாப்ப்ரிக்க காலனியாளர்களிடையே அவருக்கு பெரும் செல்வாக்கும் ஆதரவும் இருந்ததால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.  தனக்கு ஒத்துழைக்காத காலனிகளில் புரட்சிகளைத் தூண்டி விடவும் அதன் மூலம் பிரிட்டிஷ் அரசைப் புதிய போர்களில் ஈடுபட வைக்கவும் ரோட்ஸ் முயற்சி செய்தாலும் அவரை அவரது எதிர்ப்பாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ராஜ துரோகக் குற்றத்துக்காக அவருடைய அடியாட்களைக் கைது செய்யத் தான் முடிந்ததே தவிர ரோட்சைத் தொட முடியவில்லை.

ரோட்சின் செப்பிடு வித்தைகளால் இன்றைய ஸாம்பியா, ஸிம்பாவே நாடுகள் பிரிட்டிஷ் காலனிகளாக மாறின.  ரோட்சின் ஃபிராடு வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1888ல் ஸூலூ அரசர் லோபன்குலாவிடம் சுரங்க உரிமைகளை வாங்க முயற்சி செய்தார் ரோட்ஸ். லோபன்குலா கொஞ்சம் உஷாரானவர் என்பதல் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான ராபர்ட் மொஃபாட் என்ற மிஷனரியை ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார் ரோட்ஸ். மொஃபாட்டும் லோபன்குலாவை சமாதானம் செய்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தார். லோபன்குலா கையெழுத்திட்ட ஒப்பந்தம் வேறு, ரோட்ஸ் பதிவு செய்த ஒப்பந்தம் வேறு. ரோட்சின் ஒப்பந்ததில் சுரங்க நிறுவனங்கள் லோபன்குலாவின் நாட்டில் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்று எழுதியிருந்தது. அதன்படி உடனே சுரங்க உரிமம் பெற்ற பகுதியை ரோட்சின் நிறுவனம் வளைத்துப் போட்டுவிட்டது. நான் இந்த அனுமதியை உங்களுக்குக் கொடுக்கவில்லையே என்று சொன்ன லோபன்குலாவை ரோட்ஸ் கண்டுகொள்ளவில்லை. கோபம் கொண்ட லோபன்குலா சுரங்கத்தைத் தாக்க, அதற்காகக் காத்திருந்த ரோட்ஸ் பிரிட்டிஷ் அரசிடம் போய் காட்டுமிராண்டி அரசன் நமது சுரங்கத்தை அழிக்கிறான் என்று முறையிட்டார். பிரிட்டிஷ் படைகளும் உடனே வந்து லோபன்குலாவை நையப் புடைத்து அவரது நாட்டைப் பிடுங்கிக் கொண்டு துரத்து விட்டன. சுரங்கம் மட்டுமல்ல நாடும் சேர்த்து ரோட்சின் வசமானது. இப்படித் தான் ஸாம்பியாவும் ஸிம்பாபேவேயும் ரோட்சின் கைக்குள் வந்தன. இந்த நாடுகளில் அடுத்த நூறாண்டுகளுக்கு ரோட்ஸ் உருவாக்கிய நிறுவனங்களின் வாரிசுகளே ஆட்சி செய்து சுரண்டி வந்தன.  20ம் நூற்றாண்டில் ஒரு வழியாக விடுதலை கிடைத்தாலும், வெள்ளை முதலாளிகளுக்குப் பதிலாக கறுப்பு சர்வாதிகாரிகள் இன்று இந்நாடுகளைச் சுரண்டி வருகிறார்கள்.

காலனிகளை உருவாக்கியதோடு நிற்காமல் ரோட்சு தன்பெயரையே அவற்றுக்கு வைத்து விட்டார். தற்போது ஸாம்பியா என்றழைக்கப்படுவது வடக்கு ரொடேசியா என்றும் ஸிம்பாவே தெற்கு ரொடேசியா என்றும் அழைக்கப்பட்டன.  நாடுகளை உருவாக்கிய பின்னரும் ரோட்ஸ் திருப்தி அடையவில்லை. தனது பெரும் செல்வத்தைக் கொண்டு ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளையும் பிற கண்டங்களையும் பிரிட்டிஷ் பேரரசுக்காக வளைத்துப் போட வேண்டுமென்று விரும்பினார். அதற்காக ஒரு ரகசிய சங்கத்தை உருவாக்க முயற்சி செய்தார். நல்ல வேளையாக அதற்குள் அவருக்கு வயசாகி இறந்து போனார். இல்லையென்றால் இன்னும் எத்தனை நாடுகளின் தலைவிதியோடு விளையாடியிருப்பாரோ.  இன்று ரோட்ஸ் தென்னாப்பிரிக்காவின் வரலாற்று நாயகர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் உலகப் புகழ்பெற்ற ரோட்ஸ் ஸ்காலர்ஷிப்புகளும் இயங்கி வருகின்றன.  அவர் உருவாக்கிய டீ பியர்ஸ் வைர நிறுவனமும் இன்று வரை ஆப்பிரிக்காவில் பல உள்நாட்டுப் போர்களை மூட்டிவிட்டும் வைர விலைகளைக் கட்டுப்படுத்தியும்  ரோட்சின் வேலையைத் தொடர்ந்து வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ‘இயல்பான’ வில்லன்

12. இரண்டாம் கெய்சர் வில்லெம்

 

தனியே வில்லத்தனம் செய்யவேண்டிய தேவையே இல்லாமல் தான் பாட்டுக்கு இயல்பாக இருந்ததாலேயே வரலாற்றில் வில்லனான சிலர் இருக்கிறார்கள்.

நமது பள்ளிக்கூட வரலாற்றுப் பாடத்தில் “இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் என்ன?” என்ற கேள்விக்கு முதலில்,  முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வி என்று பதில் போட்டிருக்கும். முதலாம் உலகப் போரின் காரணங்கள் என்ன என்ற கேள்விக்கு இரண்டாம் கெய்சர் வில்லெமின் கொள்கைகள் என்று போட்டிருக்கும்.  ஆக மொத்தம், இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் போர்கள் நிகழ நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தவர் ஜெர்மானியப் பேரரசர் வில்லெம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை ஜெர்மனி என்றொரு நாடே கிடையாது. தற்போது ஜெர்மனியாக இருக்கும் நிலப்பகுதி பல சிற்றரசுகளாகச் சிதறிக் கிடந்தது. அந்த சிற்றரசுகளில் பெரியதும் வலிமையானதும் பிரஷியா என்றழைக்கப்பட்டது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரஷியாவின் வலிமை கூடத் தொடங்கியது. பலமான இராணுவம், திறமையான அதிகாரிகள், உறுதியான ஆட்சியாளர்கள் என பிரஷியாவுக்குச் சாதகமாக பல விஷயங்கள் பொருந்தி வந்தன. 1871ல் நடைபெற்ற பிரெஞ்சு – பிரஷியப் போரில் ஐரோப்பாவின் வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரான்சினை  மிக எளிதில் தோற்கடித்து பேரரசுகள் பட்டியலில் இடம் பிடித்தது பிரஷியா. இதன்பின்னர் ஜெர்மானிய மொழி பேசும் பெரும்பாலான பகுதிகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஜெர்மானியப் பேரரசாக உருவானது. இந்த புதிய பேரரசை உருவாக்கியதில் பிரஷிய அரசின் வேந்தர் (சான்சிலர்) ஓட்டோ வான் பிஸ்மார்க்கின் பங்கு மிகப் பெரியது.  1871ல் உருவான இந்தப் புதிய ஜெர்மானிய சாம்ராஜ்யத்துக்குப் பிரஷியாவின் அரசர் முதலாம் வில்லியமே பேரரசராக அறிவிக்கப்பட்டார். அவரது ஆட்சி காலத்தில் எஞ்சியிருந்த சிற்றரசுகளெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக ஜெர்மானியப் பேரரசில் இணைந்தன.  அடுத்த இரு பத்தாண்டுகளில் ஜெர்மனி பிரிட்டன், ரஷியா, பிரான்சு, ஸ்பெய்ன் போன்ற ஐரோப்பிய வல்லரசுகளை ஒத்த வலிமை மிகுந்த பேரரசாக உருவானது.  பெரும் பலம் கிடைக்கும் போது பெரும் பொறுப்பும் கூடக் கிடைக்கும் என்பார்கள் (with great power comes great responsibility). அதனை உணர்ந்த பிஸ்மார்க்கும் அவரது சக அதிகாரிகளும் நாளுக்கு நாள் அதிகமாகும் தங்களது பலத்தைக் கவனமாக நிர்வாகம் செய்ய வேண்டுமென்று நினைத்தனர். உலக அரங்கில் ஜெர்மனி பெரிய நாடாக நிதானித்து செயல்பட வேண்டுமென்று கருதினர்.  பேரரசர்  முதலாம் வில்லியமும், அவரது மகன் பட்டத்து இளவரசர் ஃபிரடரிக்கும் அவ்வாறே கருதினர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் இருவருக்கும் வாரிசான ஃபிரடரிக்கின் மகன் இரண்டாம் கெய்சர் வில்லெம்முக்கு அவர்களைப் போன்று பொறுமையும் விவேகமும் இல்லை.

1888ம் ஆண்டு முதலாம் வில்லியம் இறந்து போனார். பட்டத்து இளவரசர் மூன்றாம் ஃபிரடரிக் என்ற பெயரில் பேரரசராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவ்வப்போது அவர் கடுமையான தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  தனது தந்தையையுடனும் மகனுடனும் ஒப்பிடுகையில் ஃபிரடரிக் மிகவும் அமைதியானவர், நிதானமாக செயல்பட விரும்பியவர். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால், ஜெர்மானியப் பேரரசை பொறுப்பாக நிர்வகித்து ஜனநாயக முறைகள் தழைக்க உறுதுணையாக இருந்திருப்பார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது. ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் புற்றுநோய்க்கு இரையானார் ஃபிரடரிக்.  ஜெர்மானியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பு முப்பது வயது கூட நிரம்பாத இரண்டாம் கெய்சர் வில்லெம்மின் கையில் வந்தது.  கூர்மையான அறிவும் திறமையும் இருந்தாலும் கூடவே அவருக்கு அளவுக்கு அதிகமான கோபமும் அகங்காரமும் இருந்தது. புதிய நவீன முறைகளை விரும்பினாலும்,  மக்களை ஆள இறைவனால் தான் படைக்கப்பட்டிருப்பதாக உறுதியாக நம்பினார்.

 

வில்லெம்மின் ஆட்சி நல்லபடியாகத் தான் ஆரம்பித்தது.  அனுபவமில்லாத இளைஞன் தானே, சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு சும்மா இருப்பான் என்று அவரது அதிகாரிகள் அவரை அலட்சியமாக நினைத்தது தவறானது. எடுத்த எடுப்பிலிலேயே அரசியல் சாணக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டவரான வேந்தர் பிஸ்மார்க்குடன் நேரடியாக மோதினார் வில்லெம். பிஸ்மார்க்கின் கைப்பொம்மையாக இருந்து காட்டிய இடத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார். இருவருக்குமிடையேயான பலப்பரீட்சையில் இறுதியில் வில்லெம் வென்று 1890ல் பிஸ்மார்க்கை வேலையை விட்டு நீக்கினார். அவருக்குப் பதில் தனக்கு வேண்டியவர்களைப் பதவியில் அமர்த்திக் கொண்டார். உள்நாட்டில் தனது நிலை பலமானவுடன் உலகளவில் ஜெர்மனியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியைத் தவிர பிற முக்கிய ஐரோப்பிய நாடுகள அனைத்தும் ஆசியாவில் ஆப்பிரிக்காவிலும் பெரிய காலனிகளைக் கொண்டிருந்தன. ஒரு நாடு வைத்திருக்கும் காலனிகளின் அளவும் செல்வமும் அதன் அந்தஸ்தை உணர்த்தின. தனது நாட்டை உலக நாடுகளின் பட்டியலில் முதன்மையானதாகக் கொண்டுவர நினைத்த கெய்சர் ஜெர்மனிக்கென காலனிகளைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்.  மற்ற ஐரோப்பிய நாடுகள் இருநூறு ஆண்டுகளாக உருவாக்கிய காலனியப் பேரரசுகளைப் போல ஜெர்மனிக்குக் குறுகிய காலத்தில் உருவாக்க முயன்றார். ஆனால் உள்நாட்டு அரசியலில் கிடைத்த வெற்றி அவருக்கு பன்னாட்டு அரங்கில் கிட்டவில்லை. காரணம் அவரது பொறுமையின்மையும் அனுபவமின்மையும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்றிருந்த அவரது நடவடிக்கைகள் உள்நாட்டில் பெரும் திறமைசாலி போல அவரைக் காட்டிக்கொண்டாலும் பன்னாட்டு அரசியலில் அவரைக் கோமாளி போல சித்தரித்தன. தனது நாட்டுக்குக் காலனிகளை உருவாக்கும் அவசர முயற்சியின் பகுதியாக பிற நாடுகளின் விஷயங்களில் மூக்கை நுழைத்து அவர்களது எரிச்சலையும் பகையையும் சம்பாதித்துக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் அரசுக்கும் போயர்களுக்கும் சண்டை மூண்ட போது, போயர்களுக்கு ஆதரவாகப் பேசி பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் பகையை வளர்த்தார்.

சீனாவின் பெரும்பகுதியை வளைத்துப் போட வேண்டுமென்று ஆசைப்பட்ட கெய்சர், உலகளவில் சீனர்களைப் பற்றி தப்பான எண்ணத்தை உருவாக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சீனர்கள் பிற நாடுகளுக்கு பெருமளவில் குடிபெயர்ந்து மற்ற நாட்டுக்காரர்களின் வேலைகளைப் பறித்துக் கொள்வார்கள் என்று பிரச்சாரம் செய்தார். வில்லெம்மின் இந்த “மஞ்சள் அபாயம்” (yellow peril) பிரச்சாரத்தால், சீனாவில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் அதிகமாகத் தலையிடத் தொடங்கின.  சீனாவில் ஏற்கனவே இருந்த ஜெர்மானியக் குடிமக்களை உள்ளூர்க் குடிமக்களைத் தாக்கிக் கொல்லும்படி தூண்டிவிட்டார். இதனால் சீனர்கள் திருப்பித் தாக்குவார்கள்; அதனைக் காரணம் காட்டி படைகளை அனுப்பி பல பகுதிகளைக் கைப்பற்றி ஒரு பெரிய ஜெர்மானியக் காலனியை உருவாக்கி விடலாம் என்பது வில்லெம்மின் திட்டம். ஆனால் அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.  ஐரோப்பியத் தலையீடுகளுக்குச் சீனர்களின் எதிர்ப்பு நினைத்தை விட வேகமாக இருந்தது.  ஐரோப்பியப் படைகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதால் காலனி ஆசையைக் கைவிட்டு பின்வாங்க நேர்ந்தது.  வில்லெம்மின் இந்த முயற்சிகள் பன்னாட்டு அரங்கில் அவருக்கு இருந்த ”கவனமற்ற முரடன்” தோற்றத்தை வலுப்படுத்தின.

 

வில்லெம்முக்குப் பொறுமை கொஞ்சம் கூட கிடையாது. அவர் நாவடக்கம் இல்லாத சரியான ஓட்டை வாய். பொது இடங்களிலும் பத்திரிக்கைப் பேட்டிகளிலும் பல முறை வாயைத் திறக்கக்கூடாத தருணங்களில் உளறிக் கொட்டியதால் ஜெர்மனிக்குப் பல தரப்பிலும் பகையினை வளர்த்தார். உதாரணத்துக்குப் பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் பத்திரிக்கை நிருபர் ஒருமுறை வில்லெம்மைப் பேட்டி காண வந்தார். டெய்லி டெலிகிராஃப் பிரிட்டனில் அதிகம் படிக்கப்படும் செய்தித்தாள்களுள் ஒன்று. இப்பேட்டியைப் பயன்படுத்தி ஜெர்மனியைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தைப் பிரிட்டிஷ் மக்களிடையே ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தது ஜெர்மானிய அரசு. ஆனால் பேட்டியின் போது வில்லெம் உணர்ச்சிவசப்பட்டு உளறியதால் காரியம் அடியோடு கெட்டுப் போனது.  ஒரே பேட்டியில் நான்கைந்து நாடுகளின் எரிச்சலை சம்பாதித்தார் வில்லெம்.  ஜெர்மனி கபபல் படையை உருவாக்குவது பிரிட்டனைக் குறி வைத்தல்ல, ஜப்பானை எதிர்க்க என்று சொன்னதால் ஜப்பான் கோபம் கொண்டது;  போயர் போரில் பிரான்சும் ரஷ்யாவும் தான் தன்னை மூக்கை நுழைக்கத் தூண்டின என்றார்; இதனால் அவ்விரு நாடுகளும் எரிச்சல் அடைந்தன. பேட்டியின் உச்ச கட்டமாக பிரிட்டிஷ்காரர்களெல்லாம் சரியான பைத்தியங்கள் என்று திருவாய் மலர்ந்தார். பேட்டி வெளியானவுடன் ஜெர்மனி மீது பிரிட்டிஷ் பொது மக்களிடம் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிபிராயமும் காற்றில் பறந்து விட்டது.

இப்படி வார்த்தைகளால் பகையை வளர்த்தது ஒரு புறமிருக்க, தனது செயல்களாலும் ஜெர்மனிக்கு எதிரிகளை உருவாக்கி வந்தார். அக்காலத்தில் ஜெர்மனிக்குப் பலமான கடற்படை கிடையாது.  பிரிட்டனின் விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தின் போது ஐரோப்பியக் கடற்படைகளெல்லாம் கலந்து கொண்ட ஒரு கப்பல் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் பிற கடற்படைகளைக் காட்டிலும் ஜெர்மானியக் கடற்படை பலவீனமாக இருந்ததைக் கண்டு வில்லெம் கோபம் கொண்டார்.  இதை தனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமாகக் கருதினார்.  தனது அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு பெரும் கடற்படையை உருவாக்க விரும்பி வேலைகளைத் தொடங்கினார் வில்லெம். ஏற்கனவே வில்லெம் மீது சந்தேகப் பார்வை கொண்டிருந்த பிரிட்டனுக்கு அவரது செய்கைகள் மேலும் சந்தேகத்தைக் கிளப்பின. இந்த ஆள் அடுத்த போருக்கான ஆயத்தங்களைத் தான் செய்கிறான் என்று உறுதியாக பிரிட்டனும் ஃபிரான்சும் நம்பத்தொடங்கின.  பதிலுக்கு அவையும் தங்கள் படைகளைப் பலப்படுத்தத் தொடங்கின. ஐரோப்பாவில் ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியது.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இப்படி ஐரோப்பாவை போர் மேகம் சூழ்ந்தது.  இரு தரப்பினரும் போட்டி போட்டிக் கொண்டு கூட்டணிகளை உருவாக்கத் தொடங்கினர். எதாவது ஒரு காரணம் வைத்து போர் மூள்வது தவிர்க்க முடியாது போனது.

வில்லெம்மின் முயற்சியால் ஜெர்மனியின் படைபலம் கணிசமாக அதிகரித்துக் கொண்டிருந்த போதே ஜெர்மனியின் உள்நாட்டு அரசியலில் இராணுவத்தில் கையும் ஓங்கிக் கொண்டே போனது.  கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இராணுவ தளபதிகள் வில்லெம்மை விட சக்தி வாய்ந்தவர்களாகி விட்டனர்.  இதற்கு மேல் வில்லெம்மே தவிர்க்க நினைத்தாலும்கூட போர் கண்டிப்பாக மூண்டு விடுமென்ற நிலை உருவானது.  1914ல் ஜெர்மனியின் கூட்டணியிலிருந்த ஆஸ்திரிய நாட்டு பிரபு ஃபெர்டினாண்ட் செர்பியாவில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி போர் மூள்வதற்கு உடனடி காரணமானது. ஆஸ்திரியா செர்பியா மீது போர் தொடுக்க, செர்பியாவுக்குத் துணையாக ரஷியா ஆஸ்திரியா மீது போர் தொடுத்தது. பதிலுக்கு ஜெர்மனி ரஷியா மீது போர் தொடுக்க, ரஷியாவுக்குத் துணையாக பிரிட்டனும் ஃபிரான்சும் களத்தில் இறங்கின.  சீக்கிரம் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளத் தொடங்கின. முதலாம் உலகப் போரும் கன ஜோராக ஆரம்பமானது.  போரை நிறுத்த அரை மனதாக வில்லெம் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. அவரது தளபதிகள் அவரை டம்மியாககி விட்டனர். ஜெர்மானிய அரசின் கட்டுப்பாடு ராணுவத்தின் கையில் வந்து விட்டது. அடுத்த நான்காண்டுகள் பெரும் போர் நடந்து கொண்டிருந்த போது தளபதிகளின் கைப்பொம்மையாகவே வில்லெம் இருந்தார்.  இறுதியில் ஜெர்மனி போரில் தோற்றபோது, மக்களின் கோபம் வில்லெம் மீது பாய்ந்தது. அவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். வில்லெம் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவானது.

முதல் உலகப் போரில் தோற்ற அவமானம் ஜெர்மானியப் பொது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அடுத்த இருபது ஆண்டுகளில் அதனைப் பயன்படுத்தி ஹிட்லரின் நாசிக் கட்சி ஆட்சியைப் பிடித்து ஒரு பெரும் சர்வாதிகாரப் பேரரசை உருவாக்கி விட்டது. முதல் போரில் ஏற்பட்ட இழுக்கை அகற்றுகிறேன் என்று ஹிட்லர் இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து ஜெர்மனியே நாசமாகிப் போனது. ஆனால் அதனைக் காண வில்லெம் உயிருடன் இல்லை. 1941ல் தான் ஆண்ட நாட்டுக்குத் திரும்ப முடியாமலேயே இறந்து போயிருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ரத்த சரித்திரம்

13.செங்கிஸ் கான்

செங்கிஸ் கான்

வல்லரசு என்றவுடன் நம்மில் பலருக்கு அமெரிக்காவும் முன்னாள் சோவியத் யூனியனும் தான் நினைவுக்கு வரும். பொதுவாக வல்லரசென்றால் பெரிய பரந்து விரிந்த சாம்ராஜ்யம், பக்கத்து நாடுகளில் அடாவடித்தனம், உலக அரசியலில் நாட்டாமை செய்வது, சொன்னதைக் கேட்காத நாடுகளை உதைப்பது என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. இந்த வரையறைப்படி பார்த்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் ஒரு வல்லரசு இருந்துள்ளது தெரியும்.  மிகக் குறுகிய காலத்தில் உருவாகி அதே வேகத்தில் காணாமல் போன மங்கோல் பேரரசு தான் அது.  ஒரு வல்லரசு உருவாவது பல நாடுகளின் கல்லறைகளின் மீது தான் என்பதற்கு மங்கோல் பேரரசு மட்டும் விதிவிலக்கல்ல.  பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து அவர்களது சடலங்களின் மீதே மங்கோல் பேரரசு உருவானது. அதனை உருவாக்கியது செங்கிஸ் கான்.

செங்கிஸ் கான் பிறந்த போது (கிபி பன்னிரெண்டாம் நூற்றாண்டில்) மங்கோல்கள்  ஒரு சாதாரண நாடோடி இனமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது, சாம்ராஜ்ய ஆசையும் கிடையாது.  மங்கோல் கூட்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டும்,  ஒருவரிடம் இருந்து இன்னொருவர் திருடிக் கொண்டும்,  அண்டை நாட்டு அரசர்களிடம் கூலிப்படைகளாகவும் வேலை செய்து கொண்டிருந்தன. ஆனால் அப்போதே மங்கோல் வீரர்களின் போர்க்களத் திறனும், வீரமும் மத்திய ஆசியாவில் புகழ் பெற்றிருந்தன. இதனால் ஆசியாவில் நடந்த பல போர்களிலும் மங்கோல்கள் கூலிப்படையினராகப் பயன்படுத்தப் பட்டுவந்தனர். அவர்களுக்குள் எப்போதாவாது ஒற்றுமை ஏற்படுவது போலத் தோன்றினாலேபோதும் உடனே பக்கத்து நாடுகள் தலையிட்டு அவர்கள் ஒன்றுபடுவதைத் தடுத்துவிடும்.  ஒரு அளவுக்கு மேல் அவர்கள் பலம் கூடினால், உடனே மங்கோல்களின் ஜென்மப் பகைவர்களான டார்ட்டர்களுக்குக் கொம்பு சீவிவிட்டு மங்கோலகளைத் தாக்கச் சொல்லி விடுவார்கள்.  இதனால் நெடுங்காலம் மங்கோல்கள் ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைய முடியாமல் சிறு சிறு கூட்டங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  இப்படிப் பட்ட ஒரு மங்கோல் கூட்டத்தின் தலைவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தான் செங்கிஸ் கான். பிறக்கும் போதே கையில் இரத்தக் கட்டி ஒன்றை இறுக்கிப் பிடித்தபடி பிறந்ததால் பின்னாளில் பெரியாளாக வருவார் என்று ஜோசியர்கள் சொன்னார்கள். ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் அது நம்பத்தக்கதாக இல்லை. ஏனென்றால் செங்கிஸின் தந்தை ஒர் குறுநிலப் பிரபு. ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே தலைவர். அவருக்குப் பல மனைவிகளும் ஏகபட்ட குழந்தைகளும் இருந்தனர். இவர்களையெல்லாம் தாண்டி செங்கிஸ் தனது தந்தையின் இனக்கூட்டத்துக்குத் தலைவனாவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

செங்கிஸ் சின்னப் பையனாக இருந்த போதே அவனது தந்தை அவனை இன்னொரு குழுத்தலைவரின் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார். அக்காலத்தில் மங்கோல் குழுக்களுக்குள் இப்படி திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. இரு குழுக்கள் கூட்டணி அமைக்க வேண்டுமென்றால் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டன. மங்கோல் குல வழக்கப்படி பெண் வீட்டில் வாழ அனுப்பப்பட்டான் சிறுவன் செங்கிஸ்.  அங்கு வாழ்ந்து கொண்டிருந்த போது, அவனது தந்தையின் மரணச் செய்தி அவனை எட்டியது.  மங்கோல்களின் குலப்பகைவர்களான டார்ட்டர்கள் தந்திரமாக விஷம் கொடுத்து அவனது தந்தையைக் கொன்றிருந்தனர். அவருக்கு அடுத்து தலைவனாவது யார் என்று செங்கிசுக்கும் அவனது சகோதரர்களுக்குமிடையே சண்டை மூண்டது.  ஆனால் சின்னப் பையனாக இருந்த செங்கிசை யாரும் தலைவனாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. செங்கிசையும் அவனது தாயையும் கூட்டத்தை விட்டே அடித்துத் துரத்தி விட்டனர். அடுத்த பல ஆண்டுகளுக்கு செங்கிசின் குடும்பம் பிழைக்க மிகவும் கஷடப்பட்டது. இந்த பின்னடைவு செங்கிசை அசர வைக்க வில்லை, மாறாக அவனது மன உறுதிக்கு உரமூட்டியது.  ஒரு நாள் அவன் தனது குடும்பதுக்கு உணவு தேடிக்கொண்டிருக்கும் போது இன்னொரு நாடோடிக் கூட்டம் அவனைக் கைப்பற்றி கடத்திக் கொண்டு போய்விட்டது.

அடிமையாக நடத்தப்பட்ட சிறுவன் செங்கிஸ் தைரியமாகத் தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து தப்பினான்.  அவன் தப்புவதற்கு உதவி செய்தவர்கள் பின்னாளில் அவனது தளபதிகளானார்கள். ஒரு சிறுவன் அடிமைத் தளையிலிருந்து எளிதில் தப்பியது பிற மங்கோல் கூட்டங்களிடையே அவனது மதிப்பை உயர்த்தியது. முன்பு அவனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளத் தயங்கிய அவனது கூட்டத்தார் தயக்கமின்றி அவனைத் தலைவனாக்கினார்கள்.  தலைவனாவுடன் செங்கிஸ் செய்த முதல் காரியம் சிதறிக் கிடந்த மங்கோல் கூட்டங்களை ஒன்றிணைக்கும் பணியில் இறங்கியது தான்.  சாம பேத தான தண்டம் என அனைத்து வகை உத்திகளையும் பயன்படுத்தி சில ஆண்டுகளுக்குள் மங்கோல் கூட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் செங்கிஸ். அவரை எதிர்த்த பிற தலைவர்கள் அனைவரையும் போரில் வெற்றி கொண்டு கொன்றார்.  சக்தி வாய்ந்த மங்கோல் அரசு உருவானவுடன் தங்களை இதுவரை கூலிப்படையினராகவும் அடியாட்களாகவும் பயன்படுத்தி வந்த நாடுகள் மீது படையெடுத்தார். மங்கோல்கள் என்றாலே பின்னாளில் உலகமே அலறி நடுங்கச் செய்த கொடூரச் செயல்களை இந்தப் படையெடுப்பில் தான் செய்யத் தொடங்கினார். மங்கோல் படைகள் நாடோடிக் கூட்டங்கள், நகரங்களை வெறுத்தவர்கள். அவர்களுக்கு நாகரிக நாடுகளைப் போல கூட்டணி அமைத்து சூழ்ச்சி செய்து சாம்ராஜ்யம் வளர்க்கப் பிடிக்கவில்லை. ஒரே அடியில் தங்கள் எதிரிகளை வீழ்த்துவது தான் அவர்களுக்கு பிடித்தமானது.  அவர்கள் தாக்க நினைக்கும் நகரத்துக்கு முதலில் ஒரு தூதுவனை அனுப்புவார்கள். எங்களிடம் ஒழுங்காக சரணடைந்து விடுங்கள் இல்லையெனில் உங்கள் நகரத்தை உருத்தெரியாமல் அழித்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுப்பார்கள்.

சரணடைந்து விட்டால் நாசம் குறைவாக இருக்கும். எதிர்த்து போரிட்டாலோ, அந்த நகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள். வயது வந்த ஆண்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள், பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக்கப் படுவார்கள், நகரமும் கொளுத்தப்படும். இப்படி செங்கிஸ் கானின் படை செனற இடமெல்லாம் அழிவும் அழுகுரலும் தான் மிஞ்சின.  ஆனால் செங்கிசிடம் சரணடைந்து விட்டால் சரணடைந்த நாட்டு மக்களைத் தன் உறவு முறைகளாகவே பாவித்தார் செங்கிஸ். இதனால் அவரது படைகள் மேலும் பலப்பட்டன. சரணடைபவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், எதிர்ப்பவர்களுக்கு நிகழும் பேரழிவும் வேகமாக அக்கம்பக்க நாடுகளுக்குப் பரவி பல நாடுகள் தானாக முன் வந்து செங்கிசுடைய தலைமையை ஏற்றுக் கொண்டன.  இதனால் விரைவில் மத்திய ஆசியாவின் பெரும் பகுதி செங்கிசின் கட்டுப்பாட்டில் வந்தது. மங்கோல் பேரரசை நிறுவி ஓரளவு வலுப்படுத்திய பின்னர் ஆசியாவின் பிற நாடுகளை நோக்கி செங்கிசின் கவனம் திரும்பியது. வரலாறு கண்டிராத ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவ அவர் விரும்பினார். அதற்காக லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். முதலில் மேற்கு நோக்கி முன்னேறிய செங்கிசின் படைகள் சீனாவின் ஸியா மற்றும் ஜின் வம்ச அரசுகளை அழித்தன.  மேற்கு எல்லையில் எதிரிகளை ஒடுக்கிய பின்னர் கிழக்குத் திசையை நோக்கித் திரும்பின.  அப்போது மத்திய ஆசியாவின் மிகப்பெரிய பேரரசாக இருந்தது குவாரெஸ்மிய அரசு.  ஐரோப்பாவையும் சீனாவையும் இணைக்கும் “பட்டுப் பாதை”  (silk route)  இந்த நாட்டின் வழியாகத்தான் சென்றதால், செல்வச் செழிப்பு மிகுந்த நாடாக இருந்தது.

செங்கிஸ் முதலில் குவாரெஸ்மிய நாட்டு சுல்தானுக்கு ஒரு வர்த்தகக் குழுவைத் தூதாக அனுப்பினார்.  அமைதியான வர்த்தக உறவை விரும்புவதாகவே வெளியே காட்டிக் கொண்டார். ஆனால் சுல்தான் செங்கிசின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. செங்கிசின் புகழும்,  அவரது சாம்ராஜ்யக் கனவுகளும் சுல்தானின் காதுகளை எட்டியிருந்தன. இதனால் செங்கிசின் தூதுக் குழுவைத் தாக்கி அவரகளது உடைமைகளைப் பறித்துக் கொண்டு துரத்தி விட்டார்.  இந்த செயல் செங்கிசுக்குச் சாதகமாகப் போனது. நமது தூதுக் குழுவை அவமானப்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்தைக் காட்டி,  இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையொன்றைத் திரட்டி குவாரெஸ்மிய நாட்டின் மீது படையெடுத்து விட்டார்.

படையெடுப்பென்றால் சாதாரண நாடு பிடிக்கும் படையெடுப்பல்ல, நாட்டை அழிக்கும் படையெடுப்பு.  குவாரெஸ்மிய நாட்டையே இருந்த இடம் தெரியாமல் அழிப்பது தான் செங்கிசின் திட்டம். இதற்காக மங்கோல் குதிரைப் படைகளோடு  சீனாவில் முற்றுகைப் போரில் பயிற்சி பெற்ற படைப்பிரிவுகளையும்  சேர்த்துக் கொண்டார்.  குவாரெஸ்மிய சுல்தானின் படை செங்கிசின் படைகளை விட இரு மடங்கு எண்ணிக்கையில் பெரியது என்றாலும் அதற்கு செங்கிசைப் போல திறமையான தளபதி கிடையாது. நேரடியாக மஙகோல் படைகளுடன் மோதாமல் சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து  பல நகரங்களில் நிறுத்தப்பட்டன. இது செங்கிசுக்கு வசதியாகப் போனது. ஒவ்வொரு நகரமாக முற்றுகையிட்டு அங்கிருந்த படைகளைத் தோற்கடித்தார் செங்கிஸ். கைப்பற்றிய நகரங்கள் அனைத்தையும் சுடுகாடாக்கினார்.  எதிரி நாட்டு போர் வீரர்களுக்கும், அப்பாவிப் பொது மக்களுக்கும் வித்தியாசம் காட்டாமல் சிக்கிய அனைவரையும் கொன்று குவித்தார். எஞ்சிய ஒரு சிலரை அடிமைகளாகச் சிறை பிடித்தார்.  பட்டுப் பாதையில் அமைந்திருந்த வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களான சமர்கண்ட், புகாரா, உர்கெஞ்ச் நகரங்களுக்கும் இந்த கதியே நேர்ந்தது.  அவை மங்கோல் படைகளால் சூறையாடப்பட்டு லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.  கலைஞர்களும் இளம் பெண்களும் மட்டும் அடிமைகளாக்கப் பட்டு மங்கோல் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மிஞ்சிய மக்கள் அனைவரையும் கொன்று குவித்தார் செங்கிஸ்.  உர்கெஞ்ச் நகரில் மட்டும் சுமார் பன்னிரெண்டு லட்சம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்.  மக்களைக் கொன்றது மட்டுமல்லாமல் குவாரெஸ்மியாவில் சுல்தான் இருந்த அடையாளம் கூட இருக்கக் கூடாதென்று உத்தரவிட்டார். அவரது படைகள் சுல்தான் சொந்த ஊர் அருகே அமைந்திருந்த ஒரு ஆற்றின் மீது அமைந்திருந்த அணையைத் தகர்த்து,  ஆற்று வெள்ளத்தைச் சுல்தானின் ஊர் மீது செலுத்தி அதனை ஒட்டுமொத்தமாக அழித்தன.

குவாரெஸ்மியாவை அழிக்கப் பயன்படுத்திய உத்திகளை அதற்குப் பின் படையெடுத்த இடங்களில் எல்லாம் பயனபடுத்தத் தொடங்கினார் செங்கிஸ். மங்கோல் என்றால் காட்டுமிராண்டி என்று பொருள் ஏற்படும் அளவுக்கு அவரது படைகள் சென்ற இடங்களிலெல்லாம் அட்டூழியங்களை நிகழ்த்தின.  மத்திய மற்றும் மேற்கு ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் இதே உத்திகளைப் பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பாவிலும் தற்கால சீனாவிலும் பல நாடுகளைக் கைப்பற்றின செங்கிசின் படைகள்.  செங்கிஸ் கனவு கண்டது போலவே அதுவரை உலகம் கண்டிராத பெரிய சாமராஜ்யத்தை உருவாக்கி விட்டார்.   அவர் மேலும் பல ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் குவாரெஸ்மியாவுக்கு நிகழ்ந்த அதே கதி ஐரோப்பாவுக்கும் நிகழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நல்ல வேளையாக தனது புகழின் உச்சியில் இறந்து போனார் செங்கிஸ். ஒவ்வொரு பேரரசனுக்குப் பின்னும் ஒரு ரத்த சரித்தரம் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது செங்கிசின் வாழ்க்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சர்வாதிகார வம்சம்

13. கிம் குடும்பம்

ஒரு குடும்பத்தில் அப்பாவைப் போலவே பிள்ளையும் வந்தால் அக்குடும்பத்தில் எல்லோருக்கும் கொண்டாட்டம். ஆனால் அதுவே சர்வாதிகாரி குடும்பத்தில் நடந்தால் நாட்டு மக்களுக்கெல்லாம் திண்டாட்டம் தான்.  அப்பனைப் போல் பிள்ளை; தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதெல்லாம்  கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கும்; நாட்டை ஆளும் அதிகார வம்சத்தில் நிகழும் போது மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு ஓட வேண்டியது தான். வரலாற்றில் பல நாடுகளில் இப்படி கொடுமைக்காரத் தந்தையும் பிள்ளைகளும் தம் நாட்டு மக்களை இம்சித்த சம்பவங்கள் நிறைய. ஆனால் இதே நிலை இன்று உலகில் மிச்சமிருக்கும் சொற்ப கம்யூனிச நாடுகளில் ஒன்றான வட கொரியாவில் நிலவுகிறது.  அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வட கொரியாவைப் பீடித்த சாபக்கேடாக விளங்கும் கிம் குடும்பமே இந்த வார வில்லன்(கள்).

கொரிய நாட்டின் முதல் சாபக்கேடே அது அமைந்துள்ள இடம் தான்.  ஒரு பக்கம் சீனா இன்னொரு பக்கம் ஜப்பான்.  இரு மத யானைகளுக்கு இடையே மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சின் நிலை தான் கொரியாவுக்கும். . வரலாற்றில் கொரியா சுதந்திரமாக இருந்த காலத்தை விட இவ்விரு நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த காலம் தான் அதிகம் எனலாம்.  நேரடியான ஆக்கிரமிப்பு நடந்தது குறைவான காலமே என்றாலும்,  சீனா மற்றும் ஜப்பானைப் பகைத்துக் கொண்டு கொரியா சின்ன விஷயத்தைக் கூட செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனியப் பேரரசுகளுக்குப் போட்டியாகத் தனக்கும் காலனிகளைத் தேடிக் கொண்டிருந்த ஜப்பான் கொரியா மீது படையெடுத்து அதனைத் தன் காலனியாக்கிக் கொண்டது.  முந்தைய ஆக்கிரமிப்புகளைப் போல அல்லாமல் இது விரைவில் முடியவில்லை. மாறாக பல பத்தாண்டுகள் தொடர்ந்து நீடித்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பினாலும் உலகில் அப்போது வேகமாகப் பரவி வந்த புதிய அரசியல் கருத்துகளாலும்  கொரியாவின் பழைய அரச அமைப்புகளும் பாரம்பரிய ஆட்சி முறைகளும் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டன.  பாரம்பரிய கருத்தாக்கங்களின் இடத்தைத் தேசியவாதம், சமதர்மம், கம்யூனிசம் போன்ற புதிய சித்தாந்தங்கள் பிடித்துக் கொண்டன. ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கொரியாவில் தேசியவாத மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அமைப்புகள் போராடத் துவங்கின.

அப்படி உருவான எதிர்ப்பு இயக்கங்களில் தான் கிம் இல்-சங் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.  அப்போது கொரிய கம்யூனிசக் கட்சி அனைத்துலக கம்யூனிச கட்சிகளின் அமைப்பிலிருந்து (comintern) ”தள்ளி வைக்கப்”  பட்டிருந்தது. .  இதனால் அதில் சேராமல் சீன கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார் கிம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொரியாவையும் தைவானையும் முழுங்கி ஏப்பம் விட்டிருந்த ஜப்பான் 1930களில் சீனா மீது படையெடுத்திருந்தது.  சீனாவின் மஞ்சூரியா பகுதியில் சீனாவின் பல கோஷ்டிப் படைகளுக்கும் ஜப்பானிய இராணுவத்துக்கும் கடும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டு வந்த கம்யூனிச படைப்பிரிவு ஒன்றில் அரசியல் அதிகாரி ஆனார். அங்கிருந்து படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி உயர்வு பெற்றார். இதற்கு அவருடைய அரசியல் திறமையும் ஜப்பானுடனான போரில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடிக்கடி மரணமடைந்ததும் துணையாக இருந்தன.  1940களில் எஞ்சியிருந்த ஒரு சில கொரிய கம்யூனிச படைத்தளபதிகளில் கிம்மும் ஒருவர்.  இக்காலகட்டத்தில் தான் கிம் சோவியத் யூனியனின் செஞ்சேனை அதிகாரிகளின் கண்ணில் பட்டார். அப்போது செஞ்சேனை  உலகெங்கும் இருந்த கம்யூனிச போராளிக் குழுக்களுக்குப் போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்து வந்தது.  செஞ்சேனையில் சேர்ந்து பயிற்சி பெற்ற கிம் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை சோவியத் யூனியனிலேயே தங்கி விட்டார்.

ஐரோப்பாவில் நாசி ஜெர்மனியை வீழ்த்திய பிறகு செஞ்சேனை கிழக்கு நோக்கித் திரும்பியது. ஜப்பானியப் பேரரசின் ஆசியப் பிரதேசங்களை 1945ல் தாக்கியது. ஏற்கனவே நான்கு ஆண்டுகள் போரில் அமெரிக்காவிடம் நன்றாக அடிவாங்கியிருந்த ஜப்பானியப் படைகள் சோவியத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கொரிய தீபகற்பத்தை விட்டு வெளியேறின.  கொரியாவில் தனக்கு ஆமாம் போடும் ஒரு புதிய அரசை உருவாக்க நினைத்த ஸ்டாலினுக்கு அதற்கு உகந்த ஒரு ஜால்ராத் தலைவர் தேவைப்பட்டது. . செஞ்சேனையில் கொஞ்சம் பிரபலமாகியிருந்த கிம்முக்கு அதிர்ஷ்டம் அடித்து அவரை புதிய வட கொரிய நாட்டின் அதிபாராக்கினார் ஸ்டாலின். (கொரியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் வசமாகவில்லை, தென்பகுதி அமெரிககாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.  கிம்முக்கு வழி செய்யும் வகையில் சோவியத் உளவுத்துறை கொரியாவில் செல்வாக்குடன் இருந்த உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களையெல்லாம்  தீர்த்துக் கட்டியது.  அடுத்த ஐந்தாண்டுகளில் கிம் தனது நிலையைப் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். சோவியத் யூனியனின் கையாளாக மட்டும் இருந்தால் என்றும் அவர்களது தயவை நாடியே இருக்க வேண்டும் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இதனால் தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கினார். நெடுங்காலமாக அந்நியர் ஆதிக்கத்தில் கஷ்டப்பட்டிருந்த வட கொரிய மக்களும்.. ஆகா நம்மில் ஒருவர் இப்படி சக்தி வாய்ந்த தலைவராக உருவாகிறாரே என்று சந்தோஷப்பட்டனர், கிம்முக்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தனர். .பாவம், சொந்த செலவில் சூனியம் வைக்கிறோம் என்று அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

மகன் கிம்

1950க்குள் வட கொரியா மீதான கிம்மின் பிடி நன்றாக இறுகி விட்டது. தனக்கு எதிராக வளரக்கூடியவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஒழித்துக் கட்டினார் கிம்.  அனைத்து அரசியல் கட்சிகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்தார். 1948ல் அதிகாரப்பூர்வமாக இரு கொரிய நாடுகளும் உருவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பனிப்போர் அரசியலின் காரணமாக, தென்கொரியாவை சோவியத் யூனியனும், வட கொரியாவை அமெரிக்காவும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் ஆதரவு பெற்ற கொரியா தான் ஒரே அதிகாரப்பூர்வ கொரியா என்று சொல்லி வந்தன.  இந்த சச்சரவைப் பயன்படுத்திக் கொண்டு தனது நிலையை இன்னும் பலப்படுத்தினார் கிம்.  கொரிய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபடுவது போல மக்களிடம் காட்டிக் கொண்டார். 1950ல் தென் கொரியாவைக் கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைப்பதற்காகக் கொரியப் போரை ஆரம்பித்து வைத்தார்.  இதுவரை சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவின் கைப்பாவையாக இருந்து வந்த கிம், திடீரென்று தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு நிலையைத் தலைகீழாக மாற்றியது. பனிப்போர் அரசியல் காரணமாக ஸ்டாலினும் மாவோவும் வட கொரியாவுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க வேண்டியதானது.  போரின் ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய கொரியப் படைகள் தென்கொரியா முழுவதையும் கிட்டத்தட்ட கைப்பற்றி விட்டன. ஆனால் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் படை அவற்றை விரட்டியடித்து வட கொரியா மீது படையெடுத்தன.  கம்யூனிசத்தின் மானத்தைக் காப்பாற்ற சீனா நேரடியாக போரில் ஈடுபட வேண்டியதானது.  மூன்று வருடங்கள் கடும் சண்டைக்குப் பின்னர் போர் நிறுத்தம் கையெழுத்தானது.  கிம் போரை ஆரம்பிப்பதற்கு முன் என்ன நிலை இருந்ததோ அதே நிலைக்கு எல்லைகள் திரும்பின. கிம்மின் பேரரசு ஆசை லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது தான் மிச்சம். மேலும் இரு கொரிய நாடுகளும் நாசமாகிப் போயிருந்தன.

போரினால் ஏற்படுத்திய நாசம் பத்தாதென்று, நிர்வாகத்தால் நாட்டினை சீர் குலைக்கும் முயற்சியில் இறங்கினார் கிம்.  இந்த காலகட்டத்தில் வட கொரியாவில் ஒரு பெரும் தனி மனித துதி இயக்கம் தொடங்கியிருந்தது. அரசு எந்திரமே கிம்முக்கான ஒரு ஜால்ரா எந்திரமாக மாறியிருந்தது. அவரது பெயரைப் பயன்படுத்தாமல் அனைவரும் அவரைப் “பெருந் தலைவர்”  (Great Leader”) என்றே அழைக்கவேண்டும் என்பது எழுதப் படாத விதியானது.  கிம் தான் நாட்டிற்குச் சந்திரகுப்தர், சாணக்கியர் எல்லாமே. அரசியல், பொருளாதாரம், இராணுவம் என்று எல்லா விஷயங்களிலும் கிம்மே முடிவெடுத்தார்.  அவருக்குத் தான் ஒரு பெரிய தத்துவ ஞானியென்ற நினைப்பு வேறு இருந்தது. எப்படி ஸ்டாலினசமும் மாவோவிசமும் உருவானதா அது போலவே தானும் ஒரு கொள்கையை உருவாக்க முயன்றார். ஜூச்சே (Juche) என்ற அந்த கொள்கை அடுத்த முப்பது ஆண்டுகளில் வட கொரியாவை முழுவதும் நாசபடுத்தி விட்டது.  கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் கொரிய தேசிய வாதம், நிறைய தனி மனித துதி ஆகியவற்றின் அரைவேக்காட்டுக் கலவை தான் ஜூச்சே.   எந்த நாட்டை நம்பியும் வட கொரியா இருக்கக் கூடாதென்று நாட்டைத் தனிமைப்படுத்தினார் கிம்.  எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு என்பது தான் ஜூச்சேவின் அதிகாரப்பூர்வ இலக்கு. ஆனால் நடந்து என்னமோ தலைகீழ்.  அனைத்து நாடுகளிடமிருந்து வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொண்டதால் பொருளாதாரம் நாசமானது.  சரியான உள்கட்டமைப்பு வசதிகளும் திட்டமிடுதலுமில்லாத அரைகுறை கம்யூனிசத்தைப் பின்பற்றியதால் உள்நாட்டு உற்பத்தியும் காலியானது. முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தென்கொரிய உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து அரசியல் செய்து வந்ததால் இராணுவத்துக்குச் செய்யும் செலவு மீதமிருந்த பொருளாதாரத்தையும்  குலைத்து விட்டது.

எந்த நாட்டு தயவுமில்லாமல் வட கொரியா வாழும் என்று கிம் பிரசாரம் செய்து வந்தாலும்,  சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் தயவில்லாமல் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலை உருவானது. இடையில் சோவியத்-சீன மோதல்களில் கிம் சீனாவுக்கு ஆதரவளித்தார். அதற்குப் பின்னர் சீனா வடகொரியாவைக் கிட்டத்தட்ட தத்து எடுத்துக் கொண்டது.  ஏறக்குறைய திவாலாகிப் போயிருந்த வடகொரியாவை இருபது ஆண்டுகளுக்குச் சீனாவின் நிதி மற்றும் உணவு நிவாரணங்களே தூக்கி நிறுத்தின. நாடு நாசமாகிக் கொண்டிருந்த போது கிம் மட்டும் சொகுசாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.  மக்களுக்கு சாப்பிட சோறு இருக்கிறதோ இல்லையோ “பெருந்தலைவருக்கு” நாடெங்கும் பிரமாண்ட சிலைகளும், நினைவு மண்டபங்களும் மட்டும் தவறாமல் கட்டப்பட்டன.  வட கொரிய குழந்தைகள் கல்வி கற்றார்களோ இல்லையோ பெருந்தலைவருக்குத் துதி பாட கற்றுக் கொண்டார்கள்.  வட கொரியா அழிவை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது தென் கொரியா அமெரிக்க உதவியுடன் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. வடகொரியா சீனாவிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க  தென்கொரியா ஆசியாவில் ஒரு பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்து விட்டது. இரு நாடுகளுக்கும் இடையே விழுந்த இந்த இடைவெளி கிம்மின் தென் கொரியப் படையெடுப்பு கனவைத் தகர்த்து விட்டது.

1990களில் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு வட கொரியாவின் நிலை இன்னும் மோசமானது. பொருளாதாரம் என்பதே மருந்தளவுக்குக் கூட இல்லை என்றானது.  தவறான உற்பத்திக் கொள்கைகளால் விவசாயம் நொடித்துப் போய் நாட்டில் பஞ்சம் உருவானது. சீனா தானம் கொடுக்கும் அரிசியை வைத்து மக்கள் உயிர் பிழைத்து வந்தனர்.  1994ல் கிம் தன்னுடைய 82வது வயதில் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அதற்கு முன்னரே அவர் தனது மகன் கிம் ஜோங்-இல் ஐ தனக்கு வாரிசாகத் தயார் படுத்தியிருந்தார். இரண்டாவது கிம் தந்தை விட்ட இடத்திலிருந்து வட கொரியாவைப் பாழாக்கும் வேலையைத் தொடங்கினார்.  மக்களுக்குச் சோறு கூட போட முடியாத நிலையில் ராணுவத்தை மட்டும் நல்ல பலமாக வைத்துக் கொண்டார். அணு ஆயுதங்களையும் உருவாக்கத் தொடங்கினார். பஞ்சத்தினால் ஒரு புறம் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க,  இன்னொரு புறம் தந்தையைப் போலவே மகனும் ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்.  தனது தந்தைக்கும் நாடெங்கும் சிலைகளை நிறுவினார்.  தந்தையைப் போலவே தனக்கும் ஒரு தனி மனித துதி இயக்கத்தை நிறுவிக்கொண்டார். அப்பா கிம் பெருந்தலைவர் என்றால் மகன் கிம் “அன்பான தலைவர்” (dear leader).  வட கொரியாவுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்த சீனாவும் ஆப்பசைத்த குரங்கு போல மாட்டிக் கொண்டது.  ஆதரவை நிறுத்தி விட்டால் வட கொரியா சீர் குலைந்து விடும், பின்னர் வட கொரிய மக்கள் அனைவரும் சீனாவுக்கு அகதிகளாக ஓடி வந்து விடுவார்கள்.  இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் வேறு வழியின்றி வட கொரியாவுக்கு ஆதரவளித்து இரண்டாவது கிம்மின் ஆட்சியைத் தூக்கி நிறுத்தி வருகிறது.

சீனாவின் கதி இப்படியென்றால்,  வட கொரியாவின் எதிரிகளான தென் கொரியாவும், அமெரிக்காவும் இன்னும் பரிதாபமான நிலையில் இருக்கின்றன. வட கொரியாவிடம் சில அணுகுண்டுகளும் அவற்றை நெடுந்தூரம் வீசக் கூடிய ஏவுகணைகளும் உள்ளதே காரணம். வட கொரியாவை அடிக்கவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.  இப்போது இரண்டாம் கிம்முக்கு உடம்பு சரியில்லை என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர் தனக்கு வாரிசாக தனது மகன் கிம் ஜோங் உன் ஐ நியமித்திருக்கிறார். வட கொரியாவுக்கும் உலகுக்கும் கிம் குடும்பத்திலிருந்து விமோசனம் கிடைப்பது போலத் தெரியவில்லை.



-- Edited by Admin on Saturday 24th of September 2016 06:47:59 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புரட்சிக்குப் பிறகு புதிய முகம்

13. ரோபெஸ்பியர்

 

கொடுங்கோல் அரசுகளைத் தூக்கி எறியவே புரட்சிகள் வெடிக்கின்றன. ஆனால்  அப்படி கோடுங்கோலர்களை ஒழித்த பின்னர் புரட்சிக்காரர்களே அடுத்த சர்வாதிகார கொடுங்கோலர்களாக உருவாவதும் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது.. ஒரிஜினல் கொடுங்கோலனையாவது மன்னித்து விடலாம், அவனுக்கு தன் சுயநலத்தைத் தவிர எதுவும் தெரியாது, குடிமக்களின் கஷ்டம் புரியாது என்று. ஆனால் மக்களில் ஒருவனாக இருந்து மக்கள் விரோத ஆட்சிகளின் கொடுமைகளை நேரடியாக அனுபவித்து, அவற்றைத் தடுத்து ஒழிக்க ஒரு புரட்சியை உருவாக்கி ஜெயித்த பின்னர், தானே கொடுங்கோலனாக மாறும் புரட்சிக்காரர்களை மட்டும் மன்னிக்கவே முடியாது.  இப்படி திசை மாறிய புரட்சிக்காரர்களில் ஒருவர் தான் ரோபெஸ்பியர் – பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் பிரஞ்சுக் குடியரசின் சர்வாதிகாரியாகி முடியாட்சியே தேவலாம் என்று மக்கள் முணுமுணுக்கும்படி செய்தவர். அவரே இந்த வார வில்லாதி வில்லன்.

பதினெட்டாம் நூற்றாண்டு பிரான்சில் ஒரு பெரும் மக்கள் புரட்சி ஏற்படுவதற்கான அனைத்து அம்சங்களும் பொருந்தி அமைந்திருந்தன. சில நூறு ஆண்டுகளாக போர்போன் வம்சத்தால் ஆளப்பட்டு வந்த பிரான்சில் மெதுவாக ஜனநாயக எண்ணங்கள் தழைக்கத் தொடங்கின. ரூசோ, வால்டயர் போன்ற பெரும் மெய்யிலாளர்கள் இந்த புதிய கருத்துகளைச் சமூகத்தில் விதைத்து, புரட்சி நெருப்புக்குத் தூபம் போட்டு வந்தனர்.  அதுவரை கொடுங்கோலர்களாக இருந்தாலும் திறமையான மன்னர்களைப் பெற்றெடுத்த போர்பன் வம்சத்தில் ஒரு சோப்ளாங்கி மன்னராக பதினாறாம் லூயி வந்து பிறந்தார்.  நாட்டில் புரட்சித் தீ புகையத் தொடங்கிய போது அதனை அவரால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கவும் முடியவில்லை,  மக்களாட்சிக்குப் பச்சைக் கொடி காட்டி அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் முடியவில்லை. இதனால் நிலைமை மெதுவாக மோசமாகி 1780களின் இறுதியில் வெளிப்படையாகப் புரட்சி வெடித்து விட்டது.  பல ஆண்டுகளாகக் கூட்டப்படாமல் இருந்த பிரெஞ்சு நாடாளுமன்றத்தை (estates general) 1789ல்  கூட்டச் செய்தது தான் புரட்சிக்காரர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.  அடுத்த இரு ஆண்டுகளில் புரட்சிக்காரர்களின் கை நாளுக்கு நாள் வலுபட்டது.  முடியாட்சி மற்றும் பிரபுக்களின் பலம் தேய்ந்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மெல்லக் கூடின.  பதினாறாம் லூயி தனது வழக்கமான சொதப்பல் பாணியில் செயல்பட்டதால், பாரிசின் மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். முடியாட்சியுடன் தொடர்புடையவர்களையெல்லாம் தீர்த்துக் கட்டத் தொடங்கினர்.  வெளிப்படையான புரட்சியின் முதல் காரியங்களில் ஒன்றாக பாஸ்டில் சிறையைத் தகர்த்து அதிலிருந்த கைதிகளை விடுதலை செய்தனர்.

நாள்தோறும் புரட்சிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களிடையே ஒற்றுமையில்லை.  பழைய நிர்வாகத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே இருந்தது, ஆனால் அதற்கு பதிலாக எந்த மாதிரியான அரசாங்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் ஆளுக்கொரு கருத்து நிலவியது.  முடியாட்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்று ஒரு சாரரும்,  பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட (அதாவது பல் பிடுங்கப்பட்ட) முடியாட்சியை உருவாக்க வேண்டுமென்று இன்னொரு சாரரும் வாதிட்டனர். தலைவர்கள் வாதிட்டுக் கொண்டிருக்கும் போது பாரிசின் வீதிகளில் தொண்டர்கள் கையில் சிக்கிய பிரஞ்சு துரைகளையும் பிரபுக்களையும் பிடித்து சாத்திக் கொண்டிருந்தனர்.  புரட்சியாளர்களுக்குள் கோஷ்டிகள் உருவாகி உள்ளடி அரசியல் வேலைகள் தொடங்கின.  பிரெஞ்சு இராணுவத்திலும் பெரிய குடும்பகளில் பிறந்த அதிகாரிகளின் ஆணைகளுக்குக் கீழ்படிய சாதாரண போர் வீரர்கள் மறுத்ததால் பெரும் குழப்பம் உருவானது.  புரட்சிக் குழுக்களுள் உருவான பிளவு விரிவடைந்து பல புதிய தீவிரவாத கோஷ்டிகளும் தலையெடுத்தன. அவற்றுள் ஒன்று தான் பின்னாளில் புகழ்பெற்ற ஜாக்கோபின் கிளப். (Jacobin club). இந்நேரத்தில் பதினாறாம் லூயி தனது உயிருக்கு ஆபத்தென உணர்ந்து குடும்பத்துடன் பிரான்சை விட்டுத் தப்ப முயன்று கையும் களவுமாகப் பிடிபட்டார்.  ஆபத்தான காலத்தில் நாட்டை விட்டு தப்ப முயன்றது துரோகச் செயல் என்று குற்றஞ்சாட்டி வெகு சீக்கிரத்தில் அவரைப் பதவியிலிருந்து இறக்கி விட்டனர் புரட்சிக்காரர்கள். அவரையும் அவரது குடும்பத்தையும் சிறையில் அடைத்து முடியாட்சியைக் கலைத்து விட்டனர்.

லூயி இருந்த வரை மன்னராட்சிக்கு எதிர்ப்பு என்ற சித்தாந்தம் புரட்சியாளர்களை ஒருங்கிணைந்து செயல்பட வைத்தது. அவரைத் தூக்கி உள்ளே போட்ட பின்னர் அவர்களிடையே இருந்த வேற்றுமைகள் பல்கிப் பெருகி கோஷ்டிப் பூசலாக வெடித்து சிதறியது.  நிலை மோசமாகிக் கொண்டிருந்த போதே புரட்சி நம் நாட்டிலும் வெடித்து விடும் என்று பயந்து கொண்டிருந்த பிற ஐரோப்பிய நாடுகள் பிரான்சின் மீது படையெடுத்தன. அவ்வளவு தான் அதுவரை புரட்சி பிரெஞ்சு மிதவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி அராஜகக்காரர்களின் கையில் சிக்கியது.  நாடு கட்டுப்பாட்டில் வந்தவுடன் ஜாக்கோபின் தீவிரவாதிகள் செய்த முதல் காரியம், லூயியின் தலையை சீவியது தான். லூயியைத் தீர்த்துக் கட்டியதோடு நிற்காமல் புரட்சியின் எதிரிகள் என்று தங்களது அரசியல் பகைவர்கள் மீதெல்லாம் குற்றம் சாட்டி கொலை செய்ய ஆரம்பித்தனர்.  அப்போது பிரான்சை ஆட்சி செய்த ஜாக்கோபின் அமைப்புக்குப் பொது மக்கள் பாதுகாப்புக்கான கமிட்டி என்று பெயர் (Committee of Public Safety). ஆனால் இரண்டாண்டுகள் நடந்த கமிட்டி ஆட்சியில் பிரான்சில் யாருடைய உயிருக்கும் உத்திரவாதமில்லாது போனது.  இந்த பப்ளிக் சேஃப்டி கமிட்டியின் தலைவர் தான் மாக்சிமில்லியன் ரோபெஸ்பியர்.

ரோபெஸ்பியர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு வக்கீல். இள வயதிலேயே ரூசோ போன்ற புரட்சிகர சிந்தனையாளர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரைத் தீவிர அரசு எதிர்ப்பாளராக மாற்றிய சம்பவம் நிகழ்ந்தது.  ரோபெஸ்பியரின் கல்லூரிக்கு பதினாறாம் லூயி வருவதாக ஏற்பாடாயிருந்தது.  மன்னரை வரவேற்று உரையாற்றும் பொறுப்பு சிறந்த மாணவராக விளங்கிய இளம் ரோபெஸ்பியருக்கு அளிக்கப்பட்டிருந்தது.. பேச்சுக்குத் தயாராகிய ரோபெஸ்பியர் மன்னரின் வருகையை எதிர்பார்த்து சக மாணவர்களுடன் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தார். அதிகார வர்க்கத்தின் மரபுப்படி பல மணி நேரம் கழித்து தாமதமாக வந்து சேர்ந்த மன்னரும் அரசியும், தங்கள் வண்டியிலிருந்து இறங்கவே இல்லை. சில நிமிடங்கள் மட்டும் கல்லூரியில் கழித்து விட்டு வந்த வழியே திரும்பிச் சென்று விட்டனர்.  மழையில் நனைந்து நொந்து போயிருந்த ரோபெஸ்பியரின் மனதில் மன்னராட்சி மீது அளவு கடந்த வெறுப்பு உருவானது. அரச குடும்பத்தை ஒழித்து கட்டுவதாகக் கங்கணம் கட்டிக் கொண்டார் ரோபெஸ்பியர்.

பிரெஞ்சு நீதித் துறையில் நீதிபதியாக வேலைக்குச் சேர்ந்த ரோபெஸ்பியர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். அதே நேரத்தில் அரசியலிலும் குதித்து பல தேர்தல்களில் வென்றார். 1789ல் நாடாளுமன்றம் கூடிய போது அராஸ் பிரதேசத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரிசுக்கு வந்தார். அப்போது பிரெஞ்சு தேசிய அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டி. , யாருமே அறிந்திராத ஒரு ஜூனியர். எந்த மாதிரியான அரசை உருவாக்குவது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, ரோபெஸ்பியரும் அவருடன் ஒத்த மனநிலை உடைய நண்பர்கள் சிலரும் தீவிரவாத ஜாக்கோபின் கிளப்பை ஆரம்பித்தனர். இவர்களது குறிக்கோள் புரட்சியாளர் கூட்டத்தில் தங்கள் அதிகாரத்தைப் படிப்படியாகப் பெருக்கி ஆட்சியைப் பிடிப்பது.  பெரும் அரசியல் குழப்பம் நிலவிய இக்காலத்தில், ஜாக்கோபின்களின் ஊழலற்ற வாழ்க்கை, நேர்மை, கொள்கைப் பிடிப்பு ஆகியவை பிரெஞ்சுப் பொது மக்களிடையே அவர்களின் செல்வாக்கை வெகுவாக உயர்த்தியது. ஆரம்பத்தில் ஜாக்கோபின்கள் எந்த தீவிரவாத நிலையையும் வெளிப்படையாக எடுக்கவில்லை. மக்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்ட ஒரு மிதவாத நடுநிலைவாதிகளாகவே தங்களை வெளியில் காட்டிக்கொண்டனர்.

பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது பிரெஞ்சு அரசியலில் நிலையற்றதன்மை மோசமானது.  பாரிசின் வீதிகளில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து குண்டர்களின் ஆட்சி கோலோச்சியது.  உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் தினமும் கலவரங்கள் மூண்டன.  முடியாட்சிக்கு ஆதரவாக பகை நாடுகள் வேறு ஃபிரான்சின் எல்லைகளில் தாக்கக் காத்திருந்தன.  இந்த அபாயமான காலத்தில் ரோபெஸ்பியரின் அடக்கமும், அப்பழுக்கற்ற பிம்பமும் அவரை மக்கள் மனதில் இடம்பெறச் செய்தன. பாரிசின் அரசு வழக்கறிஞராக அவர் பதவி உயர்வு பெற்றார்.  தேசிய அரசியலில் ரோபெஸ்பியரின் கை ஓங்கத் தொடங்கியது.  நாடாளுமன்றத்தில் நிலவிய குழப்ப நிலை மோசமடைந்து அதுவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த கிரோண்டின் கோஷ்டி பலவீனமடைந்தது. ரோபெஸ்பியரின் ஆதரவாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பொது மக்கள் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கி விட்டனர். ஆரம்பத்தில் ஒன்பதே ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட இந்த கமிட்டியை, உள்நாட்டு அரசியல் துரோகிகளைக் கண்டுபிடித்து அழிப்பதற்கும் வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து புரட்சியையும் நாட்டையும் பாதுகாப்பதற்கும் உருவாக்கியதாக ரோபெஸ்பியரும் அவரது சகாக்களும் சொல்லிக் கொண்டனர்.

புரட்சியின் எதிரிகளாக அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டவர்களது பட்டியலை வெகுவாக விரிவாக்கம் செய்தார் ரோபெஸ்பியர்.  அதுவரை முன்னாள் பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள்,  முடியாட்சிக்கு வேண்டியவர்கள், பணக்காரர்கள் போன்றோரே இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வந்தனர். ரோபெஸ்பியரோ ஜாக்கோபின்களுக்கு அரசியல் ரீதியாக தொல்லை தரக்கூடியவர்கள் அனைவரையும் இப்பட்டியலில் சேர்த்தார். புரட்சியின் எதிரி (enemy of the revolution) என்று ஒருவரை முத்திரை குத்திவிட்டால் போதும்.  சம்பிரதாயத்துக்கு ஒரு புரட்சி நீதிமன்றத்தில் விசாரணை செய்து மரண தண்டனை விதித்து விடுவார்கள். இப்படி எக்கச்சக்கமான பேருக்கு மரண தண்டனை விதித்ததால், அவர்களுக்கு தூக்கிலிட்டுக் கொன்று கட்டுப்பிடியாகவில்லை. எனவே புரட்சியின் எதிரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக கில்லோட்டின் (guillotine) என்ற புதிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.  இயக்குவதற்கு எளிமையானதும்,  தயாரிக்கவும் பராமரிக்கவும் எளிதானதுமான இந்த எந்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரைப் படுக்க வைத்து, ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தால் போதும், குற்றவாளியின் தலை துண்டிக்கப்பட்டு ஆள் காலி. பப்ளிக் சேஃப்டி கமிட்டி பதவிக்கு வருவதற்கு முன்னர் புரட்சியின் எதிரிகளைக் கொல்லப் பயன்பட்ட கில்லோட்டின் ரோபெஸ்பியரின் கைங்கரியத்தில் புரட்சியாளர்களைக் கொல்ல பயன்படலாயிற்று. ஜாக்கோபின் கோஷ்டிக்குப் போட்டி கோஷ்டிக்காரர்கள் அனைவரையும் இப்படி குற்றம் சாட்டி கில்லோடினில் ஏற்றிக் கொன்றார் ரோபெஸ்பியர். ஒன்றன் பின் ஒன்றாக பெரும்பாலான போட்டி கோஷ்டிகள் இப்படி ஒழித்துக் கட்டப்பட்டன. தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட மக்களுக்கு வெறியூட்டினர் ரோபெஸ்பியரின் சகாக்கள்.  கொலைவெறியேறிய பாரிசின் வீதிக் கும்பலுக்குத் தினம் வீதிக்கொரு கில்லோட்டின் மரண தண்டனையை நிறைவேற்றி காட்சிப் பொருளாக்கியது ரோபெஸ்பியரின் கமிட்டி. உணவுப் பற்றாகுறை, வெளி நாட்டுப் போர்கள், இராணுவத்துக்கு கட்டாய ஆள் சேர்ப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து பொது மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இந்த வீதி மரண தண்டனைகள் பயன்பட்டன. அதோடு நில்லாமல், அதுவரை புரட்சிக்காரர்களின் அதிகாரப் பூர்வ கொள்கையான நாத்திகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஒரு புது மதத்தைத் தோற்றுவித்து ஆன்மீகக் கண்கட்டு வித்தை செய்யவும் முயற்சி செய்தார்.

தங்கள் எதிரிகளையெல்லாம் தீர்த்துக் கட்டிய பின்னர் பப்ளிக் சேஃப்டி கமிட்டிக்குள்ளேயே உட்கட்சித் தகராறு மூண்டது.  ஒருவரை ஒருவர் புரட்சியின் எதிரி என்று குற்றம் சாட்டி கில்லோட்டினில் ஏற்றத் தொடங்கினர். ரோபெஸ்பியரின் நெருங்கிய கூட்டாளியும் பாரிசின் புகழ்பெற்ற பேச்சாளருமான டாண்டனுக்கே இந்த கதிதான் நேர்ந்தது.  புரட்சியைப் பாதுகாக்கப் பதவிக்கு வந்ததாக சொல்லிக் கொண்ட ரோபெஸ்பியர் இப்போது தனது பதவியைப் பாதுகாக்கத் தனது நண்பர்களைக் கொல்லும் நிலைக்கு ஆளானார். ”பயங்கர ஆட்சி” (reign of terror) என்று வர்ணிக்கப்பட்ட ரோபெஸ்பியரின் ஆட்சி காலத்தில் சுமார் நாற்பதாயிரம் பேர் இப்படி வீதிகளில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாளர்கள் கணிக்கின்றனர்.  விரோதிகள், முன்னாள் நண்பர்கள் என்று சகலரையும் கொலை செய்து தீர்த்த ரோபெஸ்பியருக்கும் இறுதியில் அதே கதி தான் நேர்ந்தது.  பழைய விரோதிகள் அனைவரையும் தீர்த்துக் கட்டியதால் ரோபெஸ்பியருக்குப் பாதுக்காப்பு உண்டாகவில்லை. மாறாக அதுவரை நடுநிலை வகித்த அனைவருக்கும் உயிர்ப் பயம் உண்டாகி ரோபெஸ்பியருக்கே உலை வைத்தது.  சகட்டு மேனிக்கு அனைவரையும் கொலை செய்யத் துணிந்த இந்த ஆள், நம் மீது பாய ரொம்ப நேரம் ஆகாது என்று நடுநிலையாளர்கள் எண்ணத் தொடங்கினர். ரோபெஸ்பியரை ஒழிக்க திட்டமும் தீட்டினர். ஜூலை 27, 1794ல் நாடாளுமன்றத்தில் வைத்தே ரோபெஸ்பியரின் மீது கொலைக்குற்றமும் தேச துரோகக் குற்றமும் சாட்டப்பட்டது. படையினர் தன்னைக் கைது செய்வதற்கு முன்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அவர் சாகவில்லை; குண்டடிபட்டு சுருண்ட அவரைக் காப்பாற்றிக் காயத்துக்குக் கட்டுப்போட்டு அதற்கு மறுநாள் கில்லோட்டினில் ஏற்றிக் கொன்று விட்டனர்.  பல ஆயிரம் பேருக்கு ரோபெஸ்பியர் விதித்த தீர்ப்பே அவருக்கும் இறுதியில் விதிக்கப்பட்டது.

பல பத்தாயிரம் மக்களைக் கொலை செய்தது மட்டும் ரோபெஸ்பியரின் குற்றமல்ல, பெரும் மக்கள் எழுச்சியாகத் தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சியை, தான் கட்டவிழ்த்து விட்ட வன்முறையின் மூலம் திசை திருப்பியதும் அவர் செயத பெரிய குற்றமாகும்.  ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் மக்களாட்சியை வரவேற்ற பொதுமக்கள் ரோபெஸ்பியரின் பயங்கரவாத ஆட்சியாலும் சட்ட ஒழுங்கற்ற காட்டு ராஜாங்கத்தாலும் அதிருப்தியுற்று இதற்கு மன்னராட்சியே எவ்வளவோ தேவலாம் என்று முடிவுக்கு வந்தனர். இதனால் ரோபெஸ்பியர் இறந்து ஐந்தே ஆண்டுகளில் நெப்போலியனது தலைமையில் பிரான்சில் முடியாட்சி மீண்டும் ஏற்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அகலக் கால்

16. மித்ரிடேட்டிஸ்

அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். ஒரு நாட்டை ஆள்பவர் தனது பலத்தை அறிந்திருத்தல் அவசியம். அதை விட முக்கியம் தனது பலவீனங்களை உணர்ந்திருத்தல்.  யாருடன் மோதுகிறோம் என்பதை ஆராய்ந்து மோத வேண்டும்.  சும்மா இருந்திருந்தால் நாடும் பதவியும் தப்பியிருக்கும் ஆனால், அரசைப் பேரரசாக்குகிறேன் என்று, சாம்ராஜ்யக் கனவு கண்ணையும் அறிவையும் மறைத்ததால் வல்லரசுகளுடன் மோதிக் காணாமல் போன அரசர்கள் வரலாற்றில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.  இவர்களுடைய தப்புக் கணக்கால் அவர்களுடைய நாடுகளும் வரலாற்றில் சுவடில்லாமல் மறைந்து போய்விட்டன. அவர்களுள் ஒருவர் தான் போண்டசின் அரசர் ஆறாம் மித்ரிடேட்டிஸ்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பாவில் வல்லரசென்றால் அது ரோமக் குடியரசு தான். இத்தாலி நாட்டில் தோன்றி மெல்ல மத்தியத் தரைக்கடல் பகுதியெங்கும் பரவி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா,  மேற்கு ஆசியா என பல பகுதிகளையும் கைப்பற்றி விரிவடைந்தது ரோம். ஐநூறு ஆண்டுகளாக அதனை எதிர்க்க முற்பட்ட அனைத்து நாடுகளுக்கும் ஒரே கதி தான் – சர்வ நாசம். இக்கால வல்லரசுகளுக்கு உள்ள அனைத்து இலக்கணங்களும் ரோமக் குடியரசுக்கும் இருந்தன. அண்டை நாடுகள் தான் சொல்வதைக் கேட்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு,  அவைகள் தனக்கு சாதகமான வர்த்தகக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற வற்புறுத்தல், பக்கத்து நாடுகள் கடன் வாங்கினால் கூட தன்னிடம் தான் வாங்க வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது,  உள்நாட்டு அரசியல் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப போர்களை ஆரம்பிப்பது என அனைத்து வல்லரசு குணாதிசயங்களும் ரோமிடம் இருந்தன.  ரோமுக்கு சலாம் அடித்து பணிந்து போன நாடுகள் பிழைத்துக் கொள்ளும், ஆனால் ஒத்து வராமல் முரண்டு பிடிக்கும் நாடுகள் மீது ஏதேனும் சாக்குப் போக்கு சொல்லி உடனே படையெடுத்து விடுவார்கள் ரோம ஆட்சியாளர்கள்.

அக்காலத்தில் ரோமில் முடியாட்சி கிடையாது. ரோம் குடியரசானதால்,  அதன் செனேட் எனப்படும் நாடாளுமன்றமே நாட்டை ஆண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் கோஷ்டித் தகராறு ஏற்படுவதும், அதிகார பலப்பரீட்சை நடப்பதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தன. எவ்வளவு தான் உட்கட்சித் தகராறு இருந்தாலும் வெளி நாட்டான் ஒருவனைப் போட்டு அடிக்க வேண்டுமென்றால் ரோமின் அரசியல்வாதிகள் அனைவரும் உடனே ஒற்றுமையாகி விடுவார்கள்.  ரோமின் அரசியல் குழப்பங்களைப் பயனபடுத்தி அதனை வீழ்த்தி விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட அரசர்கள் பலர்.  பொதுவாக இத்தகைய முயற்சிகளை எளிதில் ரோம் முறியடித்து விடும் கிமு ஒன்றாம் நூற்றாண்டில்  இந்த உள்நாட்டுக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ரோமை அழிக்க போண்டஸ் நாட்டு அரசர் மித்ரிடேட்டீஸ் செய்த முயற்சி கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. ஆனால் அதுவே அவருக்கும் அவரது நாட்டுக்கும் எமனாகவும் அமைந்தது.

போண்டஸ் கருங்கடல் கரையோரமாக அமைந்திருந்த ஒரு சிறு நாடு.  அதனை ஆண்டு வந்த மித்ரிடேட்டிஸ் வம்சம் பண்டைய கிரேக்க, பாரசீக அரச வம்சங்களின் வழித்தோன்றல்கள்.  மித்ரிடேட்டிஸ் இளைஞனாக இருந்த போதே அவரது தந்தை (இவர் பெயரும் மித்ரிடேட்டிஸ் தான்)  படுகொலை செய்யப்பட்டார்.   மித்ரிடேட்டிசுக்கு நாடாளும் வயதாகவில்லையென்பதால், ஆட்சி அதிகாரம் தற்காலிகமாக அவரது தாய் லாவோடைசிடம் ஒப்படைக்கப்பட்டது.  லாவோடைசுக்கோ தனது மூத்த மகன் மித்ரிடேட்டிசை சுத்தமாகப் பிடிக்காது, தனது இளைய மகனே அடுத்த அரசனாக வேண்டுமென்று விரும்பினார். இதற்காக தனது மூத்த மகனைத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார்.  அக்கால அரச குடும்பங்களில் இப்படி ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டுவது சகஜம். தனது அம்மாவின் திட்டங்களை உணர்ந்து கொண்ட மித்ரிடேட்டிஸ், இனியும் தலைநகரில் இருந்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று காட்டுப் பகுதிக்கு தனது ஆதரவாளர்களோடு தப்பி ஓடிவிட்டார். சில ஆண்டுகள் பதுங்கித் திரிந்து தனது தாய்க்கும் தம்பிக்கும் எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டார். அவற்றில் வெற்றி கிட்டி நாடு மீண்டும் அவர் வசமானது.  சிறையிலடைக்கப்பட்ட அவரது தாயும் தம்பியும் விரைவில் ”மர்மமான” முறையில் இறந்து போனார்கள்.

காட்டில் சுற்றித் திரிந்த காலங்களில் போண்டசை பெரிய பேரரசாக உருவாக்க வேண்டுமென்ற ஆசை மித்ரிடேட்டிசுக்கும் உண்டாகியிருந்தது. உள்நாட்டில் தனது நிலை பலப்பட்ட உடன் அதற்கான வேலைகளில் இறங்கினார். கருங்கடல் பகுதியிலுள்ள நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றி மெல்லத் தனது நாட்டை விரிவுபடுத்தினார். இப்படி அவர் மோதிய ஒரு நாடு தான் பித்தினியா. பித்தினியாவின் அரசர் நிக்கோமெடிஸ் மித்ரிடேட்டிசை சமாளிக்க முடியாமல் ரோமின் உதவியை நாடினார். இம்மாதிரி கிடைக்கும் வாய்ப்புகளை எப்போதும் நழுவ விடாமல் பார்த்துக் கொள்ளும் ரோமக் குடியரசும் உடனே போண்டஸ்-பித்தினியா சண்டையில் மூக்கை நுழைத்தது.  ஆரம்பத்தில் நிக்கோமெடிசுக்கு ஆலோசகர்களாக வந்த ரோம் அதிகாரிகள் விரைவில் பித்தினியா முழுவதையும் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். நிக்கோமெடிசு ரோமின் கைப்பாவையாக மாறி விட்டார்.   மித்ரிடேட்டிஸ் நேரடியாக ரோமுடன் மோதும் நிலை உருவானது. வேறொரு அரசனாக இருந்தால் அதோடு சண்டையை நிறுத்தி விட்டு, ரோமுடன் சமாதானமாகப் போயிருப்பார். ஆனால் மித்ரிட்டேட்டிசுக்கு ஆத்திரம் அதிகமாகியது. எங்கோ சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ரோம் தனது நாட்டிற்கு வந்து நாட்டாமைத்தனம் செய்வதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  ரோமின் ஆதிக்கத்தை அடியோடு அழிக்க அவர் உறுதி பூண்டார். அப்போது ரோமுக்கு கருங்கடல் பகுதியில் பெரிய படைபலம் கிடையாது.  ரோம் தனது பொருளாதார பலத்தையும், பேச்சை மீறினால் உதை விழும் என்ற பயத்தையும் வைத்துக் கொண்டே அப்பகுதியில் உள்ள நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.  அப்பகுதி ஆட்சியாளர்கள் அனைவருக்கும் ரோம் என்றாலே பயம்.

ரோமை கருங்கடல் பகுதியிலிருந்து துரத்த வேண்டுமென்றால் முதலில் அப்பகுதி மக்கள் அனைவரையும் ரோமுக்கு எதிராகத் திருப்ப வேண்டுமென்று முடிவு செய்தார் மித்ரிடேட்டிஸ். கிமு 88ல் அப்பகுதியிலிருந்த ரோம் குடிமக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அடிமைகளையும் ஒரே நேரத்தில் மித்ரிடேட்டிசின் ஆட்கள் கொலை செய்தார்கள்.  இப்பகுதியிலிருந்த ரோமர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகவும், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மீது அப்பகுதி மக்களுக்கு எரிச்சலும் அதிருப்தியும் இருந்து வந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மித்ரிடேட்டிஸ் தனது ஆட்களை விட்டு சுமார் 80,000 ரோமர்களைப் படுகொலை செய்தார். படுகொலை செய்தியைக் கேட்ட ரோம் கடும் கோபம் கொள்ளும், கொன்றவன் யார் என்று ஆராயாமல், அப்பகுதி மக்கள் அனைவரையும் ஒழிக்க முடிவு செய்யும்; இதனால் அப்பகுதி மக்கள் தானாக தனக்கு ஆதரவாளர்களாக மாறுவார்கள் என்பது அவரது திட்டம். அவர் நினைத்தபடியே நடந்தது. படுகொலை பற்றிய செய்தி ரோமை எட்டியவுடன் ஒரு சிறிய படையைக் கருங்கடலுக்கு அனுப்பி வைத்தனர் ரோமர்கள். அப்பகுதி மக்களும் ரோமின் கோபத்திலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து மித்ரிடேட்டிசின் கூட்டணியில் இணைந்து விட்டனர். முதலாம் மித்ரிட்டேட்டியப் போர் தொடங்கியது.

போர் தொடங்கியவுடன் ரோமினால் மித்ரிடேட்டிசின் மீது தங்கள் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை. இத்தாலியில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்ததால் சிறிய படைப்பிரிவு ஒன்றையே முதலில் மித்ரிடேட்டிசை ஒழிக்க அனுப்பி வைத்தனர் ரோமர்கள். ஆனால் இந்த மோதலுக்காகப் பல ஆண்டுகளாகத் தயாராகி வந்த மித்ரிடேட்டிஸ் ஆசிய மைனர் (இன்றைய துருக்கி) பகுதியினை முழுவதும் விரைவில் கைப்பற்றி கிரேக்க நாட்டு எல்லை வரை முன்னேறி விட்டார். கிரேக்க ஆட்சியாளர்களைத் தன்பக்கம் இழுக்க தன்னை பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழிவந்தவராக அடையாளம் காட்டிக் கொண்டார். ரோமின் ஆதிக்கத்தால் எரிச்சலடைந்திருந்த கிரேக்கர்களும் மித்ரிடேட்டிசின் பக்கம் சாய்ந்தனர்.

கிரேக்கம் மித்ரிடேட்டிசுடன் கூட்டணி அமைத்த செய்தியைக் கேட்டவுடன் ரோம் விழித்துக் கொண்டது.  செனேட்டர் சுல்லா தலைமையில் வலிமையான படையொன்றை அனுப்பி வைத்தது.  ஐந்தாண்டுகள் கடுமையான போருக்குப் பின்னால் சுல்லா கிரேக்க நாட்டினை மீண்டும் கைப்பற்றி தலைநகர் ஏதென்சை சூறையாடினார்.  மித்ரிடேட்டிசின் படைகள் சிதறியிருந்த நிலையில் அடுத்து போண்டசின் மீது சுல்லா படையெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் மித்ரிடேட்டிசின் அதிர்ஷ்டம் ரோமில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டதால், சுல்லா உடனடியாக ரோமுக்குத் திரும்ப விரும்பினார்.  இதனால் பாண்டஸ் மீது படையெடுக்காமல்,  மித்ரிடேட்டிசுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அவ்வொப்பந்தத்தின் படி, பாண்டஸ் மட்டும் மித்ரிடேட்டிசுக்கு மிஞ்சியது. ஆறாண்டுகளாக அவர் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் ரோமின் ஆதிக்கத்துக்குத் திரும்பின. பல ஆண்டுகள் திட்டமிட்டு கஷ்டப்பட்டு கைப்பற்றிய நாடுகள் அனைத்தும் பறிபோனாலும் மித்ரிடேட்டிஸ் கவலைப்படவில்லை. சுல்லாவின் தலை மறைந்ததும் மீண்டும் அடுத்த போருக்கான ஆயத்தங்களில் இறங்கினார்.  ரோமில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து சுல்லாவுக்கும் அவரது அரசியல் விரோதி மாரியசுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்ததால், ரோமினால் மித்ரிடேட்டிசை சரிவர கவனிக்க முடியவில்லை. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மித்ரிடேட்டிசின் படைபலம் அதிகரித்துக் கொண்டே வந்தது.  இக்காலகட்டத்தில் சுல்லாவின் மரணமும் அவருக்குப்பின் சிறந்த தளபதிகள் யாரும் உருவாகாததும் மித்ரிடேட்டிசின் தைரியத்தை அதிகரித்தன.

கிமு 73ம் ஆண்டில் மித்ரிடேட்டிஸ் மீண்டும் ரோம் மீது தனது படையெடுப்பைத் தொடங்கினார். முன் போலவே ஆரம்பத்தில் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. மீண்டும் ஆசிய மைனர் முழுவதும் அவர் வசமானது.  ஆனால் முன் போலவே ரோம் இன்னொரு பெரும் படையை அனுப்பியது. சுல்லா இறந்திருந்தாலும் அவரது சீடரும் நண்பருமான லூசல்லஸ் இப்படைக்குத் தலைமை தாங்கினார். இம்முறை நேரடியாக மித்ரிடேட்டிசுடன் மோதாமல் அவருக்குத் துணையாக இருக்கும் நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக லூசல்லஸ் அழிக்கத் தொடங்கினார். பல பத்தாண்டுகளாக மித்ரிடேட்டிசுக்கு உறுதுணையாக இருந்து வந்த ஆர்மீனியாவைக் கைப்பற்றினார் லூசல்லஸ்.  ஆர்மீனியா வீழ்ந்ததால் மித்ரிடேட்டிசுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.  லூசல்லசுக்கு அடுத்து ரோமப்படைகளுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட பாம்பே நேரடியாகப் பாண்டசின் மீதே படையெடுத்து விட்டார்.  மித்ரிடேட்டிஸ் உயிருக்கு பயந்து, பாம்பேயிடமிருந்து தப்பிக்க நாட்டை விட்டு ஓடும் படியானது.  அவரை விரட்டி விட்டு பாண்டசை ரோமின் ஒரு மாகாணமாக அறிவித்துவிட்டனர் ரோமர்கள்.  காட்டில் ஒரு சிறு படையுடன் சுற்றித் திரிந்த மித்ரிடேட்டிஸ் மீண்டும் இழந்த தன்  நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தார். ஆனால் மீண்டும் மீண்டும் தோல்விகளையே சந்தித்து வந்ததால்,  ரோமர்களை இனி மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்த அவரது உறவினர்களும் தளபதிகளும், அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.  ஆள், அம்பு, சேனை என அனைத்தையும் இழந்து தனித்து விடப்பட்ட மித்ரிடேட்டிஸ் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்குப் பின்னர் அவரது மகன் இரண்டாம் ஃபார்னகஸ் சிறிது காலம் பாண்டசை ரோமர்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சி செய்து தோற்றுப் போனார். பாண்டஸ் நாடு ரோமின் ஒரு பகுதியாகி விட்டது.  மேலுமொரு நூறு ஆண்டுகளுக்கு ரோமினால் நியமிக்கப்பட்ட குறுநில மன்னர்களே அதனை ஆண்டு வந்தனர். கிபி 62ல் இதுவும் நிறுத்தப்பட்டு ரோமப் பேரரசுடன் முற்றிலுமாக இணைக்கப்பட்டு விட்டது.

மித்ரிடேட்டசுக்கு பெரிய சக்கரவர்த்தியாக வேண்டுமென்ற கனவு இல்லாமல் இருந்திருந்தால் பாண்டஸ் சுதந்திர நாடாகவே இருந்திருக்கும். சிறிய நாடென்றாலும் யாருக்கும் அடிமையாகிருக்கத் தேவையில்லை. தன் பலத்தையும் எதிரியின் பலத்தையும் உணராமல்,  வேண்டுமென்று ரோமுடன் சண்டையை இழுத்துக்கொண்டதால், மித்ரிடேட்டிஸ் மட்டுமின்றி அவரது நாடும் அழிந்து போனது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இனப் படுகொலை

17. ஓட்டோமானிய துருக்கி

 

 

வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுபவர்கள்

வரலாற்றில் சில கொடிய நிகழ்வுகளுக்கு ஒருவர் மட்டுமே காரணமாக அமைவதில்லை.  ஒரு குடும்பம்,  குழு, ஊர், அரசு, ஏன் ஒரு முழு நாகரீகமே சில சமயங்களில் வில்லன்களாகிப் போவதுண்டு.  ஒரு பெருங்குற்றத்துக்கு அதை நேரடியாகச் செய்தவர்கள் மட்டும் பொறுப்பல்ல, அவர்களை உருவாக்கிய சமூகம், ஊக்கமளித்த கலாச்சாரம், செய்தால் தவறில்லை செய் என்று உசுப்பிவிட்ட மக்கள்,  செய்யும் போது நமக்கென்ன வேடிக்கை பார்த்தவர்கள்,  நடப்பது தவறெனத் தெரிந்தும் மெளனம் காத்தவர்கள்,  செய்த பின்னர் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள்,  குற்றம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதனை மறுத்து வரலாற்றில் இருந்து அழிக்கப் பார்ப்பவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு விதத்தில் அக்குற்றத்தில் பங்கெற்றவர்களாகிறார்கள்.  அதுவும் இனப்படுகொலை போன்ற மிகக் கொடும் குற்றங்களுக்கு ஒரு சிலரை மட்டும் பொறுப்பாளிகளாக்க முடியாது.  அப்படுகொலையை நிகழ்த்திய ஒட்டுமொத்த சமூகத்தையும் வில்லன்களாகவே பார்க்க வேண்டும்.  கூட்டுப் பொறுப்பு (collective guilt) கிடையாது என்று பொதுவாக வரலாற்றில் வாதிடப்பட்டாலும், இனப்படுகொலை போன்ற பெரும்குற்றங்களுக்கு தனி மனிதர்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. அதுவும் “இனப்படுகொலை”(genocide) என்ற வார்த்தை உருவாகுவதற்கே காரணமாக இருந்த ஆர்மீனியப் படுகொலையை நிகழ்த்திய ஓட்டோமானிய சுல்தானகமே இந்த வார வில்லன்.

பேரரசுகள் உருவாகும் போது ஏற்படும் பிரச்சனைகளை விட அவை வீழும் போது ஏற்படும் சிக்கல்களே கடினமானவை.  எல்லாப் பேரரசுகளுக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் உண்டு. அது முடிந்த பின்னர் வரலாற்றிலிருந்து காணாமல் போவது தான் இயற்கையின் நியதி. முடியாது என முரண்டு பிடிக்கும் பேரரசுகள் சாகும் தருவாயில் சுற்றியிருக்கும் பல சமூகங்களுக்கு பெருந்தீங்கு இழைத்துவிட்டுப் போகின்றன. ஓட்டோமானிய சுல்தானகம், உலகின் பெரும் பேரரசுகளுள் ஒன்று. பதினான்காம் நூற்றாண்டில் தொடங்கி சுமார் அறுநூறு ஆண்டுகள் மத்திய ஆசியாவில் கோலோச்சியது.  ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலும் தன் ஆதிக்கத்தைப் பரப்பியது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதன் வலிமை குறைந்து புகழ் மங்கத் தொடங்கியது. எந்திரமயமாக்கலும், தொழிற்புரட்சியும் ஐரோப்பிய நாடுகளின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தன. அவை காலப்போக்கில் ஓட்டோமானியத் துருக்கியின் பல பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு, அதனை ஒரு இரண்டாம்தரப் பேரரசாக்கி விட்டன.

கொல்லப்பட்ட ஆர்மீனியர்கள்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமானியப் பேரரசு சிதைந்து போகும் தருவாயில் இருந்த போது தான் முதலாம் உலகப் போர் மூண்டது. துருக்கி ஜெர்மனியின் கட்சியில் சேர்ந்து போரில் ஈடுபட்டது. இப்போரில் இழந்த தங்களது பெருமையையும் பேரரசையும் மீட்க இறுதிகட்ட முயற்சி மேற்கொண்டனர் ஓட்டோமானிய ஆட்சியாளர்கள். இம்முயற்சி பரிதாபமாகத் தோற்றதால், யார் மீது பழியைப் போடுவது என்று தேடியவர்களுக்கு சிக்கியது ஆர்மீனிய சமூகம்.  ஆர்மீனியா மத்திய ஆசியாவில் ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது.. பதினாறாம் நூற்றாண்டில் ஓட்டோமானியப் படைகளால கைப்பற்றப்பட்டு சுல்தானகத்தின் ஒரு பகுதியானது.  ஒட்டாமானிய சுல்தானகம் ஒரு இசுலாமிய அரசு.  பெரும்பாலும் கிருத்துவர்களான ஆர்மீனியர்களை திம்மிகளாக நடத்தியது.  திம்மிகள் என்றால், இசுலாமியச் சட்டப்படி ஜெசியா எனப்படும் வரியைக் கட்டிவிட்டு அவரவர் மதத்தைப் பின்பற்றிக் கொள்ளலாம். ஆனால் சட்டப்படி அவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு படி கீழான குடிமக்களே. இதனால் ஆரம்பத்திலிருந்தே இரு தரப்புக்கும் உரசிக் கொண்டே இருந்தது.  மதத்தாலும் இனத்தாலும் தாங்கள் உயர்ந்தவர்கள் எனக் கருதிய துருக்கியர்கள் ஆர்மீனியர்களை சின்னதும் பெரிதுமாகப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கி வந்தனர். எனினும் ஆர்மீனியர்கள் துருக்கியின் ஆட்சியின் கீழிருந்த பிற கிருத்துவ நாடுகள் போலல்லாமல் பெரும்பாலும் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில்,  ஓட்டோமானியத்தின் பிடி தளரத் தொடங்கியது. அப்பேரரசிலிருந்து கிருத்துவர்கள் அதிகம் வாழும் பகுதிகள் பிய்த்துக் கொண்டு போகத்தொடங்கின. கிரேக்கம், பால்கன் நாடுகள் போன்றவை கிருத்துவ ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் துருக்கியிடமிருந்து விடுதலை பெற்றன.  மெதுவாக ஆர்மீனியர்களும் சுதந்திரம் அடைவது பற்றி யோசிக்கத் தொடங்கினார்கள். அதற்காக ரஷ்யாவின் துணையை நாடினர். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்குக்கிடையேயான அரசியலால் மற்ற கிருத்துவ நாடுகளைப் போல ஆர்மீனியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.  அரசியல் சீர்திருத்தங்கள் நிகழும் என வெறும் வாக்குறுதிகள் மட்டுமே கிடைத்தன. ஆசைப்பட்டு ஏமாந்து போன ஆர்மீனிய மக்களிடையே பல ஆயுதமேந்திய புரட்சிக் குழுக்களும் அமைதியான விடுதலை இயக்கங்களும் உருவாகின. ஆனால் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவில்லாமல் அவைகளால் துருக்கிய ஆட்சியாளர்களை எதிர்த்து ஒன்று செய்ய முடியவில்லை.  ஆர்மீனியர்களை ஐரோப்பியர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை என்பதை உணர்ந்த துருக்கியர்கள் அவர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். 1895-96ல் துருக்கியின் பல இடங்களில் நூற்றுக்கணக்கான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். ஆர்மீனிய விடுதலை இயக்கம் தற்காலிகமாக நசுக்கப்பட்டு விட்டது.

ஆனால் இந்த அரசியல் குழப்பங்களால் துருக்கியின் அதிகார மையங்கள் ஆட்டம் காணத் தொடங்கின. முடியாட்சிக்கு எதிராக துருக்கியுள் பல இயக்கங்கள் தோன்றின. மக்கள் அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்கத் தொடங்கினர்.  மதவாதத்தையும் இனவாததையும் புறந்தள்ளிவிட்டு தேசியவாதம் தலைதூக்கியது.  தேசியவாதிகளை எதிர்க்க மதவாதிகள் முயன்றனர். இந்த உள்நாட்டு அதிகாரச் சண்டையில் ஆர்மீனியர்களின் தலைதான் உருண்டது. அனைத்து கோஷ்டிகளும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களுக்கெல்லாம் ஆர்மீனியர்களின் சதிதான் காரணம் என்று பரப்புரை செய்து துருக்கிய மக்களிடையே ஆர்மீனிய சமுதாயத்தின் மீது வெறுப்பை வளர்த்து வந்தன. இத்தகைய கொந்தளிப்பான உள்நாட்டு அதிகார பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்த போது தான் முதலாம் உலகப் போர் மூண்டது.

போரில் தொல்வி மீது தோல்வி கிட்டியதால் துருக்கியின் ஆளும் வர்க்கம் ஆட்டம் காணத் தொட்ங்கியது. தங்களது நிலையைத் தக்க வைக்கவும், எதிரிகளின் குற்றச் சாட்டுகளைத் திசை திருப்பவும் அவர்கள் ஒட்டு மொத்த ஆர்மீனிய சமூகத்தின் மீது துரோகிப் பட்டம் கட்டினர்.  ஆர்மீனியர்கள் காட்டிக் கொடுத்ததால் தான் போரில் தோல்விகள் ஏற்படுகின்றன என்று குற்றம் சாட்டி மக்களிடையே வெறியை மூட்டினர். நாட்டின் பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணமான ஆர்மீனிய சமூகத்தை ஒழித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பரப்புரை செய்து நம்பவைத்தனர்.  பரப்புரைத் திட்டம் வெற்றி பெற்று துருக்கி மக்களிடையே ஆர்மீனியர்கள் துரோகிகள், நமது நாடு பிழைக்க வேண்டுமெனில் ஈவு இரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற பிம்பத்தை ஆழ விதைத்த பின்னர் ஆர்மீனிய இனவொழிப்பு தொடங்கியது.

முதலில் துருக்கிய ராணுவத்தில் பணிபுரிந்த ஆர்மீனியர்கள் அனைவரையும் ஒரு கூலியாட்கள் படைப்பிரிவுகளுக்கு (labour battalions) மாற்றினர். இதன் மூலம் போர்ப்பயிற்சி பெற்றிருந்த, பிற்காலத்தில் தங்களை எதிர்க்கும் திறனுள்ள அனைத்து ஆர்மீனியர்களையும் நிராயுதபாணிகளாக்கி ஒரே இடத்தில் கொண்டு வர முடிந்தது.  இப்படி ஆயுதமின்றி சிக்கிக்கொண்ட ஆர்மீனிய வீரர்கள் முதலில் கொல்லப்பட்டனர்.  படுகொலைகளுக்கு ஆர்மீனியர்கள் காட்டிய எதிர்ப்பு மேலும் அவர்களைத் துரோகிகளாகச் சித்தரிக்க பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.  ஏப்ரல் 1915ல் ஆர்மீனிய சமூகத்தின் தலைவர்களும் முக்கிய புள்ளிகளும் ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

தலைவர்களைத் தனிமைப்படுத்தியபின் ஆர்மீனிய மக்கள் தொகையைக் குறைக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.  வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என வித்தியாசம் பார்க்காமல் அனைத்து ஆர்மீனியர்களும்  கொலை செய்யப்பட்டனர்.  ஆர்மீனிய கிராமங்கள் அவற்றில் வசித்தவர்களோடு சேர்த்து கொளுத்தப்பட்டன.  நச்சுப்புகை, பீரங்கி குண்டுவீச்சு என பல வழிகளில் இனவொழிப்பு நடந்தேறியது. ஆரம்பத்தில் தனித் தனியே ஒவ்வொரு இடத்திலும் படுகொலைகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் எதிர்பார்த்த அளவு வேகமாக ஆர்மீனியர்களைக் கொல்ல முடியவில்லை என்பதை உணர்ந்த துருக்கிய அதிகாரிகள், உடனே ஆர்மீனிய மக்களை கொலை செய்வதற்கு வசதியான இடங்களுக்கு குடி பெயர்க்கும் வேலைகளில் இறங்கினர்.  ஆர்மீனிய மக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே அவர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களைத் தீர்த்துக்கட்டுவதற்கெனத் தனியாக வதை முகாம்கள் கட்டப்பட்டன.  தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு இந்த முகாம்களுக்கு குடிபெயர்ந்த லட்சக்கணக்கான ஆர்மீனிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்பட்டவில்லை. முகாம்களுக்குப் போகும் வழியிலேயே பல்லாயிரக்கணக்கனோர் இறந்து போனார்கள். இந்த கொடுமையான பயணத்தில் பிழைத்து முகாம்களை அடைந்தவர்களைக் கொல்ல சிறப்புப் படைப்பிரிவுகள் துருக்கியர்களால் உருவாக்கப்பட்டன.  ஆரம்பத்தில் மதவாத, இனவாத, தேசியவாத வெறியினால் தொடங்கிய இந்த இனவொழிப்பு நாளாக நாளாக சாதாரண அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஆர்மீனியர்களிடமிருந்து மக்களின் கவனம் போரின் உண்மை நிலவரம் பக்கம் திரும்பி விட்டால் தங்கள் பதவிக்கு ஆபத்து என்பதால், துருக்கிய அதிகாரிகள் இந்த இனவொழிப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டியதாயிற்று.

1915லிருந்து 1918 வரை தொடர்ந்து நடந்த படுகொலைகளில் பல லட்சக்கணக்கான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் முதல் பன்னிரெண்டு லட்சம் பேர் வரை இவ்வாறு கொல்லபபட்டிருக்கலாம் என்று ஆர்மீனியர்கள் துருக்கியில் கொல்லப்படுகின்றனர் என்பதைப் பிற நாடுகள் நன்கு அறிந்திருந்தன. ஆனால் போர்க்கால அரசியல்க் காரணங்களால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. துருக்கியின் சகாக்களான ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அதன் துணை வேண்டி மெளனம் காத்தன. துருக்கியின் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை துருக்கி படுகொலைகளை நடத்துகிறது என்று கூக்குரலிட்டாலும் போர் அரசியலில், எதிரி நாடுகளின் பரப்புரையாகவே அது பார்க்கப்பட்டது.  போர் நடந்து கொண்டிருந்ததால் நேரடியாக அவற்றால் ஆர்மீனியர்களுக்கு உதவ முடியவில்லை.  நடுநிலை வகித்த நாடுகளும் எதுவும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்து கொண்டு ஆர்மீனிய இனம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தன.

பல லட்சம் ஆர்மீனியர்களைக் கொன்றாலும், எந்தக் காரணங்களுக்காக துருக்கி இந்த இனவொழிப்பை ஆரம்பித்ததோ அவை கைகூடவில்லை.  முதலாம் உலகப் போரில் துருக்கி பரிதாபமாகத் தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற பிரிட்டனும் பிரான்சும் துருக்கியின் பேரரசைத் தங்களுக்கிடையே பங்கு போட்டுக் கொண்டன. சில ஆண்டுகள் கழித்து ஓட்டோமானிய முடியாட்சியை அறவே ஒழித்தும் விட்டன.  1924ல் துருக்கியில் கெமால் அடாடர்க் தலைமையில் புரட்சி வெடித்து, துருக்கி மதசார்பற்ற குடியரசு நாடாகி விட்டது.  ஆனால் என்னதான் ஆட்சிமுறை மாறினாலும் இன்று வரை துருக்கி நடந்தது இனவொழிப்பு என்பதை மறுத்து வருகிறது.  துருக்கியில் 1915-18ல் நடந்த சம்பவங்களை வர்ணிக்க “இனவொழிப்பு” எனற வார்த்தையை பயன்படுத்துபவர்களைத் தண்டிக்க சட்டங்கள் கூட உள்ளன.  பல எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நமது முன்னோர் செய்தது தவறு தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.   ஆர்மீனியர்கள் ரஷ்யாவுக்கு ஓட்டோமானியத் துருக்கியைக் காட்டிக் கொடுக்க முயன்றனர், அதனைத் தடுக்க அவர்களை உள்நாட்டில் வேறு இடங்களில் குடிபெயர்த்திய போது பலர் இறந்தனர் என்பதே இன்றையத் துருக்கியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.  இப்படி முரட்டுப் பிடிவாதம் பிடிப்பதால் துருக்கிக்கும், இப்போது அதன் அண்டை நாடாக இருக்கும் ஆர்மீனியாவுக்கும் தீராத பகை நிலவுகிறது. துருக்கியர்கள் தங்கள் இனத்தை அழிக்க முயன்றதை ஆர்மீனியர்கள் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் தயாராக இல்லை.  இன்னும் இரு நாடுகளும் எலியும் பூனையுமாகவே இருக்கின்றன.  ஒரு சமுதாயம் தன்னிடையே நடக்கும் பெரும்குற்றத்திற்குத் துணை போய், அதனை ஒத்துக்கொள்ள மறுத்து, அதனால் உலகமெங்கும் அவப்பெயர் பெற்றிருப்பதற்கு துருக்கி ஒரு எடுத்தக்காட்டாக உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இருவர்

13. எர்னான் கோர்டேஸ் – ஃபிரான்சிஸ்கோ பிசாரோ

 

 

கோர்டேஸ்

ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக்கி அதன் நாகரிகத்தை அழித்த நிகழ்வுகள் உலக வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளன. பொதுவாக இவை ஒரு பேரரசரின் சாம்ராஜ்ய கனவுகளை மெய்பிக்கவும் சர்வாதிகாரிகளின் சக்தியைப் பெருக்கவும் நடந்துள்ளன. ஆனால் சாதாரண போர் வீரர்கள் பணத்துக்காகவும் புகழுக்காகவும் பெரும் நாகரிகங்களை ஒழித்ததும் பதினாறாம் நூற்றாண்டில் நடந்துள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவுடனான ஐரோப்பிய வர்த்தகம் கான்ஸ்டாண்டினோப்பிள் ந்கரம் (தற்கால இஸ்தான்புல்) வழியாகத் தான் நடந்து கொண்டிருந்தது. 1453ல் துருக்கியர்கள் அந்த நகரைக் கைப்பற்றி வர்த்தக வழியை அடைத்து விட்டார்கள். நில வழி அடைபட்டதால் இந்தியாவுக்குப் போகும் கடல்வழியைக் கண்டுபிடிக்க முயன்றனர் ஐரோப்பியர். அப்படித் தான் 1492 இல் கொலம்பஸ் வட அமெரிக்க கண்டத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் அமெரிக்க பூர்வீக குடிகளுக்குக் கெட்ட காலம் ஆரம்பமாகி விட்டது. இந்தியாவிற்குப் போகும் வழியைத் தேடித் தான் கொலம்பஸ் அமெரிக்கா போனார். ஆனால் அமெரிக்காவின் செல்வச் செழிப்பைக் கண்டவுடன் இந்தியா மறந்து போனது. கொலம்பசுடன் வந்தவர்கள் ஐரோப்பாவிற்குத் திரும்பிப் போய் தாங்கள் கண்ட புதிய உலகைப் பற்றிய கதைகளைப் பரப்பத் தொடங்கினர். பெரும்பாலும் அக்கட்டுக் கதைகள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தின – புதிய உலகத்தில் எக்கச்சக்கமாக செல்வம் இருக்கிறது; அங்கே போனால் பணக்காரனாகி விடலாம்.

அந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக ஐரோப்பிய காலனியாளர்கள் அமெரிக்காவிற்கு வரத்தொடங்கினர்.  அப்படி வந்தவர்கள் காலரா, பெரியம்மை போன்ற பல புதிய நோய்களை வட,தென் அமெரிக்க கண்டங்களுக்கு அறிமுகப்படுத்தினர். இப்புதிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் பூர்வீக குடியனர் லட்சக் கணக்கில் இறந்தனர். நோய்கள் கொல்லாமல் விட்டவர்களை ஐரோப்பியர்களின் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொன்று குவித்தன.  இந்தப் புதிய உலகத்தைக் கொள்ளையடிக்க பல ஐரோப்பிய தேசங்களிடையே கடும் போட்டி நிலவினாலும் ரேசில் ஜெயித்ததது ஸ்பானியப் பேரரசு தான். கொலம்பஸ் வந்திறங்கிய பின் ஐம்பது ஆண்டுகளுக்குள் பூர்வீக குடியினரின் பெரும் சாம்ராஜ்யங்கள் ஸ்பானியப் படைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தன.   ஸ்பானியத் தளபதிகளின் பொன்னாசைக்கும், மூர்க்கத்திற்கும் முன்னால் அஸ்டெக், இன்கா பேரரசுகளால் சிறிது காலம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.  இப்படி அரை நூற்றாண்டுக்குள் அமெரிக்க கண்டத்தில் ஸ்பானிய ஆதிக்கத்தை நிறுவுவதற்கும் அஸ்டெக் மற்றும் இன்கா சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரு கான்கிஸ்டடார்கள் – எர்னான் கோர்ட்டேஸ் மற்றும் ஃபிரான்சிஸ்கோ பிசாரோ. கான்கிஸ்டடார் (conquistador)  என்றால் கைப்பற்றுபவர் என்று பொருள். இந்த இருவரும் சேர்ந்து எப்படி ஒரு கண்டத்தையே ஸ்பெயினுக்காகக் கைப்பற்றினார்கள் என்று இனி பார்ப்போம்.

பிஸாரோ

கோர்ட்டேஸ் குடும்பம் ஸ்பெயினில் ஒரு பிரபுக் குடும்பமாக இருந்தாலும் அவர்கள் அப்படி ஒன்றும் பணக்காரர்கள் இல்லை.  சட்டத்துறையில் கல்வி கற்ற கோர்ட்டேசுக்குப் பெரும் புகழும் பணமும் சம்பாதிக்க வேண்டுமென்று வெறி இருந்தது. குடும்பத்தார் பேச்சைக் கேட்டால் அவர்களைப் போலத் தானும் பணமில்லாதவனாக இருக்க வேண்டியது தான் என முடிவு செய்தார். அப்போது தான் அமெரிக்காவில் ஸ்பானியக் காலனிகள் உருவாகத் தொடங்கியிருந்தன.  பணம் சம்பாதிக்கவும் தங்கள் பெயரை நிலை நாட்டவும் ஸ்பானியர்கள் பலரும் புதிய காலனிகளுக்குக் கிளம்பினார்கள்.  அப்படி போய் வந்தவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு கோர்ட்டேசுக்குத் தானும் அங்கு போக வேண்டுமென்ற ஆசை எழுந்தது.  1504ம் ஆண்டு ஸ்பானியக் காலனியான ஹிஸ்போனியாலாவுக்கு (தற்கால கியூபா) போனார். அடுத்த சில ஆண்டுகளுக்கு கியூபாவை முழுவதும் கைப்பற்றும் ஸ்பானிய முயற்சியில் பங்கேற்று பெரும் புகழும் பணமும் சம்பாதித்தார்.  ஸ்பானிய ஆட்சியாளர்களிடையே நல்ல பேரும் பதவியும் அவரைத் தேடி வந்தன. ஆனால் கியூபா போன்ற ஒரு சிறிய தீவில் அவர் தனது வாழ்க்கையைக் கழிக்க விரும்பவில்லை.  சிறிய தீவிலேயே இவ்வளவு செல்வம் கிட்டியதென்றால அமெரிக்காவின் உட்பகுதியில் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட்டார். பதினைந்து ஆண்டுகள் கியூபாவில் கழித்த பின்னர், அமெரிக்கா மீது படையெடுக்க ஆயத்தங்களைத் தொடங்கினார்.

இந்த முயற்சிக்கு கியூபாவின் ஆளுனர் விரும்பவில்லை. தற்கால மெக்சிகோ பகுதிகளைக் கைப்பற்ற பெரும் செலவாகும் என்று அவர் கருதியதால் கோர்ட்டேசுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோர்ட்டேஸ் அரசின் ஆதரவின்றி சொந்தச் செலவில் ஒரு படையினை உருவாக்கி மெக்சிகோ மீது படையெடுக்க வேண்டியதாயிற்று.  அப்போது மெக்சிகோ முழுவதும் அஸ்டெக் பேரரசால் ஆளப்பட்டு வந்தது.  அதன் தலைநகரம் தெனோசித்லானில் (தற்கால மெக்சிகோ நகரம்)  தங்கமும் வெள்ளியும் குவிந்து கிடப்பதாக கோர்ட்டேசுக்கு தகவல் கிடைத்தது.  கோர்ட்டெசின் படைகள் பலம் பொருந்தியவை அல்ல.  ஆயிரம் வீரர்கள் கூட அப்படையில் இல்லை. ஆனால் வெடிமருந்தும், அதுவரை எதிர் கொண்டிராத புதிய நோய்களும் அஸ்டெக் பேரரசை அழிக்க அவர்களுக்குத் துணையாக இருந்தன. தனது படை எவ்வளவு பலவீனமானது என்பதை கோர்ட்டேஸ் நன்கறிந்திருந்தார். இதனால் அஸ்டெக் மக்களிடையே தன் பெயரைக் கேட்டாலே அலறும்படி செய்ய, கையில் சிக்கிய அஸ்டெக் ஆட்சியாளர்களையெல்லாம் படுகொலை செய்தார். அஸ்டெக் மக்களுக்கு அடிபணிந்து வாழ்ந்து கொண்டிருந்த மற்ற பழங்குடியினரைத் தன் பக்கம் ஈர்த்தார்.  கோர்ட்டேசின் மூர்க்கமும் அவர் படையிலிருந்த புதிய வெடிமருந்து ஆயுதங்களும் அஸ்டெக் அல்லாத குடியினருக்கு, அஸ்டெக் சாம்ராஜ்யத்தை வீழ்த்த அவர் தான் சரியான ஆள் என்று காட்டிக் கொடுத்தன. அவர்கள் ஆயிரக்கணக்கில் அவரது படையில் சேர்ந்தனர்.

கோர்ட்டேசின் படையெடுப்பைச் சமாளிக்கத் தெரியாமல் திகைத்த அஸ்டெக் ஆட்சியாளர்கள் அவருடன் சமாதானமாகப் போகலாம் என்று எண்ணி அவரை டெனோசித்லானுக்கு அழைத்தனர். தலைநகரின் செல்வச் செழிப்பை நேரடியாகக் கண்ட கோர்ட்டேஸ் அதனை முற்றுகையிட்டு 1521ம் ஆண்டு கைப்பற்றினார். அஸ்டெக் அரச குலத்தவர்களையெல்லாம் படுகொலை செய்து விட்டார்.  அஸ்டெக் பேரரசு அப்படியே வீழ்ந்து மெக்சிகோ முழுவதும் கோர்ட்டெஸ் வசமானது.  ஆரம்பத்தில் இதனால் அவர் நினைத்தபடி பெரும் புகழும் பணமும் கிடைத்தன. ஸ்பானியப் பேரரசர் அவருக்கு பல பட்டங்களையும் நிலங்களையும் அளித்து கெளரவித்தார். ஆனால் இந்த நிலை நீடிக்கவில்லை. அஸ்டெக் சாம்ராஜியத்தில் அரசியல் செய்தவருக்கு உள்ளூர் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அவரது அரசியல் விரோதிகள் அவரை ஓரம் கட்டி விட்டனர். இழந்த புகழைப் பெற அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இறுதியில் கடனாளியாகத் தான் இறந்தார்.

அஸ்டெக் பேரரசுக்கு கோர்ட்டேஸ் போல தென் அமெரிக்காவின் இன்கா பேரரசுக்கு வாய்த்தவர் ஃபெர்னாண்டோ பிசாரோ.  இவரும் கோர்ட்டெசைப் போலவே ஒரு சுமாரான குடும்பத்தில் பிறந்து பொருள் ஈட்டுவதற்காக அமெரிக்காவுக்கு வந்தார். கோர்ட்டேஸ் மத்திய அமெரிக்காவைக் குறி வைத்தது போல பிசாரோ தென் அமெரிக்காவைக் குறிவைத்தார்.  1520களில் தென் அமெரிக்காவின் பெரும் பகுதிகளை ஆட்சி புரிந்து வந்த இன்கா பேரரசு பற்றிய செய்திகள் ஸ்பானிய காலனியாளர்களை எட்டின. பல நூற்றாண்டுகளாகப் பெரும் பிரதேசங்களை ஆண்டு வந்த இன்கா வம்சத்தினர் சுற்றியுள்ள சிற்றரசுகளை அடக்கி, தட்டிக் கேட்க ஆளில்லாமல்  ஆண்டு வந்ததால் அதன் கஜானாக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. இந்த செழிப்பு தான் அதற்கு வினையாகிப் போனது.  கோர்ட்டேசுக்கு மெக்சிகோவில் கிடைத்த வெற்றி பிற ஸ்பானிய கான்கிஸ்டடோர்களை உசுப்பி விட்டது.  எங்கே தங்கம்? எங்கே தங்கம்? என்ற தவிப்புடன் அமெரிக்கா வந்திறங்கியிருந்த ஸ்பானியத் தளபதிகளுக்கு இன்கா பேரரசில் தங்கத்தால் செய்த நகரங்கள் (el dorado) உள்ளன போன்ற வதந்திகள் மேலும் வெறியூட்டின.  பிசாரோவும் தனது சகாக்களுடன் 1520களில் மூன்று முறை  தெற்கு நோக்கிப் படையெடுத்தார்.  நோய்கள், அடர்ந்த காடுகள், எதிர்த்துச் சண்டையிடும் உள்ளூர் குடிகள் என பல இன்னல்களை மீறி இன்கா பேரரசினை அடைந்தார்.

இன்கா பேரரசிற்குப் பெரும் படைகளிலிருந்தன. பிசாராவிடமோ நூற்றுக்கும் குறைவான வீரர்கள். எனவே நேரடியாக மோதாமல், தந்திரமாக ஒரு காரியம் செய்தார் பிசாரோ. இன்கா பேரரசர் அடாஹுல்போவைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்.  அடாஹூல்போ தன்னை விடுவித்தால் ஒரு அறை முழுக்கத் தங்கமும் அது போல இரு மடங்கு வெள்ளியும் தருவதாக பேரம் பேசினார். சுமார் இருபதுக்கு பதினைந்தடி நீள அகலமும் எட்டடி உயரமும் கொண்ட ஒரு அறையைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அது முழுவதும் தங்கம்! அது போல இரு மடங்கு வெள்ளி!! குறைந்த பட்சம் 24 டன் தங்கமாவது இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவையனைத்தும் ஒரு நாள் கொள்ளையில் பிசாரோ சம்பாதித்தவை. தங்கத்தை வாங்கிக் கொண்டு மன்னரை விட்டாரா என்றால் அதுவும் இல்லை. போட்டுத் தள்ளி விட்டார். அடாஹூல்போ இறந்ததால் இன்கா பேரரசில் பெரும் அரசியல் குழப்பம் உருவானது.  இன்கா மக்களை ஸ்பானியர்களுக்கு எதிராகத் திரட்ட சரியான தலைவரில்லாமல் போனதால், பிசாரோவின் ஆட்கள் மொத்தப் பேரரசையும் சுருட்டி தங்கள் கையில் போட்டுக் கொண்டனர். இன்கா பேரரசு ஸ்பெயினின் ஒரு மாகாணமாகி விட்டது. பிசாரோ அதன் ஆளுனராகிவிட்டார். ஆனால் கோர்ட்டேசைப் போலவே அவராலும் அவரது புகழையும் பணத்தையும் அனுபவிக்க முடியவில்லை.  இன்கா பேரரசு வீழ்ந்து சிறிது வருடங்களிலேயே, பிசாரோவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதில் பிசாரோ கொலை செய்யப்ப்ட்டார்.

புதிய கண்டத்தில் ஒரு பேரரசை நிறுவ ஸ்பெயின் முதலில் முயலவிலை. கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவது தான் அவர்களின் முதல் குறிக்கோளாக இருந்தது. ஆனால் பிசாரோ மற்றும் கோர்ட்டேசின் செயல்களால் நிதானமாக ஆட்சி புரிந்து திட்டமிட்டு கொள்ளையடிக்கும் வாய்ப்பு ஸ்பெயினுக்கு கிட்டியது. பிசாராவுக்கும் கோர்ட்டேசுக்கும் கையில் சிக்கிய தங்கத்தைப் போல  பல லட்சம் ஆயிரம் மடங்கு அதிக செல்வங்கள் அடுத்த சில நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலிருந்து கொள்ளை போயின.  அஸ்டெக், இன்கா என்ற இரு பெரும் நாகரிகங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. சில நூற்றாண்டுகளில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சுத்தமாகத் துடைத்து எடுத்து விட்டனர் ஸ்பானியர்கள்.

தங்கம், வெள்ளி மட்டுமல்ல விலைமதிப்பற்ற கற்கள், வாசனை திரவியங்கள், பட்டு ஆடைகள், புகையிலை, சர்க்கரை என கிடைத்த எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.  அமெரிக்க அரசுகளின் கஜானாக்கள் காலியான பின்னர் ஸ்பானியப் பேரரசு அமெரிக்க அடிமைகளைக் கொண்டு தங்கம், வெள்ளி சுரங்கங்களை இயக்க ஆரம்பித்தது.  இதனால் பிசாரோவுக்கும் கோர்ட்டேசுக்கும் கிடைக்காத தங்க வெள்ளி மலைகள் அவர்களுக்குப் பின் வந்த காலனியாளர்களுக்குக் கிடை­த்தன. இந்தக் கொள்ளை சில நாட்களிலோ, சில ஆண்டுகளிலோ முடிந்து விடவில்லை, சில நூறு ஆண்டுகள் நீடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளிடம் இருந்து விடுதலை கிடைத்தது. ஆயினும் இந்த கட்டுக்கடங்காத கொள்ளை மற்றும் காலனியாதிக்கத்தின் பின் விளைவுகள் இன்றளவும் மத்திய, தென் அமெரிக்க நாடுகளைக் கடுமையாகப் பீடித்துள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ரத்த ராணி

13. எலிசபெத் பாதோரி

வரலாற்றைப் படிப்பவர்களுக்கு கொள்கைக்காகவும் சொந்த ஆதாயத்துக்காகவும்  மக்களைக் கொன்று குவித்த வில்லன்கள் அடிக்கடி தென்படுவார்கள்.  இப்படிப்பட்ட வில்லன்களை விட தனிப்பட்ட சந்தோஷத்துக்காக ஒரு சில பத்து பேரைக் கொன்ற தொடர் கொலையாளிகள் (serial killers) தான் மக்களிடையே பிரபலமாக இருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் சீரியல் கில்லர், சைக்கோபாத் போன்ற வார்த்தைகளெல்லாம் உருவாக்கப்பட்டன என்றாலும் வரலாற்றில் அதற்கு பல காலம் முன்னரே தொடர் கொலையாளிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் பெண்களும் அடக்கம்.   இவர்கள் வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்னரும் அவர்களைப் பற்றிய கதைகள் மட்டும் இன்னும் உலா வந்து கொண்டிருக்கினறன.  காலப்போக்கில் ஊதிப் பெரிதாக்கப்பட்டு ஈறு பேனாகி, பேன் பெருமாளானது போல இன்று பல மொழி இலக்கியங்களுக்கும் கற்பனைப் பாத்திரங்களுக்கும் அடிப்படையாகிப் போயிருக்கின்றன.  இப்படி இலக்கியத்தில் அமரத்துவம் பெற்ற தொடர் கொலையாளிகளில் ஒருவரான எலிசபெத் பாதோரி தான் இந்த வார வில்லி.

வரலாற்றில் எப்போதும் கிழக்கு ஐரோப்பாவுக்கென ஒரு தனி இடம் உண்டு. மேற்கு    மற்றும் தெற்கு ஐரோப்பியப் பகுதிகள் பழம் நாகரிங்களுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் போனவை. ஆனால் கிழக்கு ஐரோப்பா என்றுமே வரலாற்றில் “இருண்ட பிரதேச” மாகத் தான் இருந்துள்ளது. .  இப்பிராந்தியத்தின் அமானுஷ்யக் கதைகள் மிகப் பிரபலம். மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகள் வாழுமிடம் எனக் கருதிய ஆசியாவின் எல்லையில் அமைந்திருப்பதோ என்னமோ கிழக்கு ஐரோப்பாவென்றால் பேய் பிசாசு இன்ன பிற இரத்த வெறி பிடித்த ஐட்டங்கள் அலையும் இடம் என்றொரு பிம்பம் உருவாகி விட்டது.  இந்த கருத்துருவாக்கத்துக்கு தீனி போடுவது போல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல வில்லன்களும் வில்லிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுள் அதிக பிரபலமானவர் விளாட் டிராக்கூல்.  டிராகுலா கதைக்கு மூல காரணம் என்று சொல்லப்படுபவர். இவருக்கு அடுத்தபடியாக அதிக பிரபலமாக இருக்கும் வில்லி, ஹங்கேரியின் எலிசபெத் பாதோரி. 650  இளம் பெண்களைக் கொலை செய்து அவர்களது இரத்ததில் குளித்து “இரத்த ராணி” என்றும் “பெண் டிராகுலா”  என்றும் பெயர் பெற்றவர்.

எலிசெபெத் 1560ம் ஆண்டு ஹங்கேரி ராஜ்ஜியத்தின் பலம் வாய்ந்த பாதோரிக் குடும்பத்தில் பிறந்தார். பாதோரி பிரபுக்கள் குறுநில மன்னர்கள். ஹங்கேரியில் பல துறைகளிலும் முக்கிய பதவிகளை வகித்தவர்கள்.  அந்தக் காலத்தில் ஹங்கேரியில் நில அடிமைத்துவம் (serfdom) அமலில் இருந்தது. இம்முறையில் ஒரு பகுதியின் குறுநில மன்னருக்கே அப்பகுதி நிலமனைத்தும் சொந்தம். அப்பகுதி மக்கள் அனைவரும் ஒரு வகையில் அவருடைய அடிமைகளே. அவரே அப்பகுதியில் காவல்துறை, நீதித்துறை எல்லாம். அவர் வைத்தது தான் சட்டம். ஒரு  பிரபு தன் கட்டுப்பாட்டிலுள்ள நில அடிமைகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் கேட்க முடியாது.  ஒரு பிரபு தன்னை விட மேலதிகாரத்தில் உள்ள மற்றொரு பிரபுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். கீழிருப்பவர்களைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. பாதோரி குடும்பத்தினர் இந்த நில அடிமை அதிகார அடுக்கில் பல நிலைகளை வகித்தனர்.

பிரபுக்களின் குடும்பங்கள் பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் தான் தங்கள் அரசியல் கூட்டணிகளைப் புதுப்பித்தும் பலப்படுத்தியும் வந்தன. அது போல பதினைந்து வயதான எலிசபெத்தையும் அவரது பெற்றோர் நிச்சயித்தது போலவே நாடாஸ்டி பிரபு குடும்பத்தில் உறுப்பினரான ஃபெரென்க் நாடாஸ்டிக்கு மணமுடித்தனர்.  ஃபெரென்க்கும் ஹங்கேரி அரசியலில் பெரும் புள்ளி. தனது புதிய மனைவிக்கு திருமணப் பரிசாக ஒரு பெரிய கோட்டையினையும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களையும் வழங்கினார். இப்பகுதி முழுவதும் நாடாஸ்டி குடும்பத் தனிச்சொத்தாக இருந்ததால் இங்கு ஹங்கேரியின் சட்ட திட்டங்கள் செல்லாது. எலிசபெத்தும் அவரது கணவனும் வைத்தது தான் சட்டம். கணவன் இல்லையென்றால் எலிசபெத்து தான் இப்பகுதிக்கு முழு சொந்தக்காரி என்ற நிலை இருந்தது.

இங்கு தான் அடுத்த பல ஆண்டுகள் எலிசபெத் வாழ்ந்தார். கணவர் ஃபெரென்க் ஹங்கேரியின் ராணுவத்தில் உயர் பதவி வகித்தவர். அடிக்கடி படைகளுக்குத் தலைமை தாங்கி தளபதியாகப் பணியாற்ற பல போர்முனைகளுக்குச் சென்று விடுவார். தனித்து விடப்பட்ட எலிசபெத் கணவர் இல்லாத நேரங்களில் குடும்ப விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார். குடும்ப நிலங்களின் நிர்வாகம், கீழிருக்கும் பிரபுக்களுக்கும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நில அடிமைகளுக்கும் ஏற்படும் சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்து தீர்ப்பு சொல்லுதல் போன்ற பொறுப்புகள் அனைத்தையும் எலிசபெத்தே ஏற்று செய்தார். இப்படியே முப்பது ஆண்டுகள் கழிந்தன.

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த போது மெதுவாக பாதோரி குடும்ப நிலங்களிலிருந்து வெளியுலகுக்கு பயங்கர வதந்திகள் கசியத் தொடங்கின. பாதோரி குடும்பக் கோட்டையில் சொல்ல முடியாத கொடூரங்கள் நடக்கின்றன, சாத்தானிய பில்லி சூனிய வேலைகள், ரத்த மாந்திரீகம் போன்றவையும் நிகழ்கின்றன என பலவாறாக பேசப்பட்டது.  இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாதோரி மற்றும் நாடாஸ்டி குடும்பத்தின் அரசியல் எதிரிகள் வதந்திகளில் உண்மையுள்ளதா என்று தோண்டித் துருவினர். விசாரணையில் கேள்விப்பட்ட விஷயங்கள் அவர்களைக் குலை நடுங்க வைத்தன. கணவர் ஊரில் இல்லாத போது எலிசபெத் தங்கள் குடும்ப நிலங்களை நிர்வாகம் செய்வதோடு மட்டும் நிற்கவில்லை நூற்றுக்கணக்கான கொலைகளையும் செய்திருந்தார்.  கணவரின்றி தனித்து விடப்பட்ட எலிசபெத்துக்கு போரடித்த வாழ்க்கை சூனியமாக இருந்தது.  பொழுது போக்குவதற்காக முதலில் தனது பணிப்பெண்களை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அடி உதையுடன் நின்று போன சித்திரவதைகள் போகப் போக கடுமையாகின.  பணிப்பெண்களைத் தனது கோட்டையில் உள்ள நிலவறையில் நிர்வாணமாகக் கட்டி வைத்து வகை வகையாக சித்தரவதை செய்து மகிழ்ந்தார். அதுவும் யாராவது அழகான பெண் எலிசபெத்தின் கண்ணில் பட்டு விட்டால் போதும் அவரது வெறி தலைக்கேறி விடும். அப்பெண்ணைக் கட்டைகளால் அடித்தும், ஊசிகளால் குத்தியும், முகத்தை சிதைத்தும் துன்புறுத்துவார்.  வெறியேறிய பின் தீயினால் சுட்டு ரசிப்பார். தன்னை விட அழகான அப்பெண் அவலட்சணமாகி துடிதுடித்து சாகும் வரை எலிசபெத்தின் வெறி அடங்காது.

எலிசபெத்தின் இந்த மனநோய் விரைவில் வேறு திசையில் திரும்பியது.  அவருக்கு வயது அதிகமாக அதிகமாக தனது அழகை இழந்து விடுவோம் என்ற பயம் பிடித்துக் கொண்டது.  எப்படியாவது இளமையையும் அழகினையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற வெறி மூண்டது. ஏற்கனவே எலிசபெத்தின் வெறியாட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த பில்லி சூனியக்காரர்கள் அவரது புது இளமை மோகத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். கன்னிப் பெண்களின் ரத்தத்தில் அடிக்கடி குளித்தால் இழந்த இளமையினை மீண்டும் பெறலாம் என்று அவரது காதில் போட்டு வைத்தனர். அவ்வளவு தான், பாதோரி குடும்ப நிலங்களில் இளம் பெண்கள் காணாமல் போவது திடீரென்று அதிகரித்தது. முன்பு பணிப்பெண்களை அடித்துக் கொல்வதோடு திருப்தியடைந்திருந்த எலிசபெத், இப்போது தனது “இளமைக் குளிய”லுக்காக  பிற இளம்பெண்களையும் கொண்டு வர தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார்.   இந்த இளம் பெண்களை முன்பு போல துன்புறுத்தி கொலை செய்த பின்னர் அவர்களது உடம்பில் உள்ள ரத்தத்தினை வடித்து அதில் குளிக்கத் தொடங்கினார் எலிசபெத்.

தங்கள் எஜமானியின் கோட்டையில் வேலைக்கு சேரும் பெண்கள் யாரும் உயிருடன் திரும்பி வருவதில்லை என்பதைக் கண்டுகொண்ட குடியானவர்கள் தங்கள் பெண்களை அக்கோட்டைக்கு அனுப்ப மாட்டோம் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கினர். இதனால் எலிசபெத்தின் அடியாட்கள் அக்கம் பக்கத்திலிருந்த பெண்களைக் கடத்தி வந்து தங்கள் எஜமானியின் இரத்த பசிக்கு தீனி போடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு அதிகமாகி எலிசபெத்தின் அட்டூழியங்கள் பற்றிய வதந்திகள் ஹங்கேரியின் பிற பகுதிகளுக்குப் பரவின. இதைக் கேள்விப்பட்டுத் தான் பாதோரி மற்றும் நாடாஸ்டி குடும்பங்களின் அரசியல் விரோதிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கினர். வதந்திகள் உண்மையென உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு ஹங்கேரியின் அரசரிடம் விஷயத்தைப் போட்டு உடைத்தனர்.  அரசர் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு குழுவினை அமைத்தார். அவர்கள் எலிசபெத்தின் கோட்டையைச் சோதனையிட்டனர். அங்கு அவர்கள் கண்ட ஒரு இளம்பெண்ணின் பிணம் குற்றச்சாட்டினை உறுதிபடுத்தியது. மேலும்

அக்கம் பக்கமுள்ள கிராமங்களில் விசாரித்ததில் எலிசபெத்தின் அட்டூழியங்கள் பற்றிய முழு உண்மைகள் மெதுவாக வெளியே வந்தன.  எலிசபெத்தும் அவருடைய அடியாட்களும் கைது செய்யப்பட்டனர். எலிசபெத் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை வீட்டுக் காவலில் மட்டும் வைத்தனர். அடியாட்களைச் சிறையில் அடைத்து விசாரித்ததில் சுமார் 650 இளம்பெண்களை எலிசபெத் 30 ஆண்டுகளில் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

எலிசபெத் கொலைகாரி என்பது உறுதியான பின்னரும் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. பிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சாதாரண மக்களைக் கொலை செய்ததற்காகத் தண்டித்தால் தவறான (!) முன்னுதாரணமாக ஆகி விடும் என்பதற்காகவும், பலம் வாய்ந்த பாதோரி குடும்பத்தின் பிற கிளைகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவரை தண்டிக்கவில்லை. அவரது அடியாட்கள் மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர்.  எலிசபெத் தனது மீதி வாழ்நாளை வீட்டுச் சிறையிலேயே கழித்தார். அவரது கொடூர குற்ற சரித்தரம் கதைகளோடு கலந்து விட்டது. டிராகுலா கதைகளிலும் மாந்திரீகப் புனைவுகளிலும் இன்று எலிசபெத் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இனவெறி

20. டூட்சிக்களும் ஹுட்டுக்களும்

ஒரு சின்ன கதையைக் கேளுங்கள். இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன.  ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு நாங்களே இந்த மண்ணின் மைந்தர்கள், அவனுங்க வந்தேறிகள், இந்த மண்ணின் மீது உரிமை இல்லதாவங்க என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ அவனுங்க சுத்த சோம்பேறிங்க,  ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க, இந்த நாட்டை வளப்படுத்துன நாங்க தான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு என்று உரிமை கொண்டாடும்.  இரு தரப்பிலும் இனகலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைய சமுதாயத்தினர் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்து விடக்கூடாது என்று என்று ரொம்ப கண்டிப்பாக இருப்பார்கள். அவ்வப்போது இரு குழுக்களுக்கும் இடையே உரசல்கள் இருக்கும்.  உங்க தரப்பு மாடு எங்க வயலில் மேய்ந்துவிட்டது, உங்க பையன் எங்க பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் போன்ற சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, நாட்டு அரசியலில் தங்களக்கு சேர வேண்டிய இடத்தை அடுத்தவர் ஆக்கிரமித்துள்ளனர் போன்ற பெரிய விஷயங்கள் வரை சின்ன சின்ன புகைச்சல்கள் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் கைகலப்பும் உயிர்ச்சேதமும் ஏற்படுவதுண்டு.

என்ன இதுவரை சொன்ன கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா. எல்லா நாடுகளில், சமூகங்களில் இது மாதிரி ஆயிரக்கணக்கான கதைகள் உண்டு. எங்கெல்லாம் மனித நாகரிகம் தழைத்திருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கதை பல வகைகளில் அரங்கேறியுள்ளது, இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மிகப் பெரும்பாலான கேசுகளில் வாய்ச்சண்டைகளோடும் சிறு கைகலப்புகளோடும் இந்த மோதல் நின்று போகும்.  ஆனால் ஆயிரத்தில் ஒன்றாக ஒரு தரப்பு இன்னொரு தரப்பை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்து இனப்படுகொலை செய்யவும் முயன்றதுண்டு.  லட்சக்கணக்கில் உயிர்களைக் காவு கேட்டுள்ள ருவாண்ட இனப்படுகொலை இப்படியொரு முயற்சி.  சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகாமல் அடுத்த இனத்தையே தீர்த்துக் கட்ட முயன்ற / முயன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்க டுட்சி, ஹுட்டு இன மக்களே இந்த வார வில்லர்கள்.

டுட்சிக்களும் ஹுட்டுக்களும் மத்திய ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் இரு இனக்குழுக்கள். பல நூறு ஆண்டுகளாக பெரும் ஏரிகள் பகுதி (Great lakes region) என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காவின் பிற இனக்குழுக்களைப் போலவே அவர்களுள் சிறு சிறு மோதல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இரு குழுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஊதிப் பெரிதாக்கியப் பெருமை காலனியாதிக்கத்தைச் சாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆப்பிரிக்காவில் காலனிகளை உருவாக்கின.  இந்த காலனியாக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு – அக்கண்டத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதிலிருந்து பக்கத்து நாட்டுக்காரனை விட பெரிய நிலப்பரப்பைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற வெத்து ஜம்ப நினைப்பு வரை.  இதனையே வரலாற்றாளர்கள் ஆப்பிரிக்காவிற்கான அடிதடி (the scramble for Africa) என்று அழைக்கின்றனர்.  ஆப்பிரிக்காவின் எதார்த்த நிலையைப் பொருட்படுத்தாமல் ஐரோப்ப்பாவில் உட்கார்ந்து கொண்டு ஆப்பிரிக்க வரைபடத்தில் கோடு கிழித்தனர் ஐரோப்பிய அரசியல்வாதிகள். இதனால் ஆப்பிரிக்காவில் சம்பந்தமில்லாமல் நாடுகள் உருவாகி விட்டன.  பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இனக்குழுக்கள் ஐரோப்பியர் வரைந்த எல்லைகளால் பிளவுபட்டன.  அதே போல பல நூற்றாண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருந்த இனக்குழுக்கள் ஒரே நாட்டில் அருகருகே வாழும்படியும் ஆனது.  இந்த குழப்படி வேலையில் உருவானைவை தான் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகள்.  இவ்விரு நாடுகளும் ஜெர்மனியின் காலனிகளாக மாறின. இதற்கு முன்பே இப்பகுதி பல நூறு ஆண்டுகளாக டுட்சி இன மன்னராட்சியின் கீழ் இருந்தது.  டுட்சிக்கள் எண்ணிக்கையில் ஹுட்டுக்களை விட குறைவென்றாலும், ஆட்சி அதிகாரங்கள் அவர்களது கையில் தான் இருந்தன. ஜெர்மனியின் காலனிய ஆட்சியாளர்களும் டுட்சிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டதால், அவர்களது அரசிலும் டுட்சிகளே உயர் பதவிகளை வகித்தனர். டுட்சிகள் தான் மரபணு அடிப்படையில் உயர்ந்த இனம் என்ற எண்ணம் கொண்டிருந்த ஜெர்மானியர்களின் கொள்கைகள் அதுவரை சிறிய அளவில் புகைந்து கொண்டிருந்த இனவெறுப்பை நன்றாக ஊதி விட்டன.  எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இரண்டாம் தரக் குடிமக்கள் போலவே ஹுட்டுக்கள் வாழ நேரிட்டது.   இதனால் அவர்களுக்கு டுட்சிக்களின் மேலிருந்த கோபம் வெறுப்பாக மாறியது.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதால்,  ருவாண்டாவும் புருண்டியும் பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. பெல்ஜியமும் ஜெர்மனியின் இனவாதக் கொள்கைகளை மேலும் விரிவுபடுத்தி டுட்சிக்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது.  இப்பகுதி மக்களுக்கு இன அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் அளவுக்கு காலனிய ஆட்சியாளர்கள் இனவாதக் கொள்கையைப் பின்பற்றினர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆப்பிரிக்கா மீதான ஐரோப்பிய பிடி தளர்ந்தது.  ஆப்பிரிக்கா முழுவதும் தேசியவாதம் தழைத்தோங்கி எல்லா நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் தோன்றின. ருவாண்டாவிலும் புரூண்டியிலும், ஹுட்டு இன மக்களளே விடுதலை இயக்கங்களில் பெரும் பங்காற்றினர். நாடு விடுதலை அடைந்துவிட்டால், இதுவரை கிடைக்காத அரசியல் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்பது அவர்களது கணக்கு.  மக்களாட்சி முறையில் எண்ணிக்கையில் அதிகமானோருக்கே அரசு அமைக்க முடியும் என்பதால் இரு நாட்டு ஹுட்டுக்களுக்கும் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டனர். ஆனால் டுட்சிக்கள் நாடுகள் விடுதலை அடைவது பற்றி அவ்வளவு உற்சாகம் கொள்ள வில்லை. காலனியாட்சி போய் மக்களாட்சி வந்துவிட்டால், எண்ணிக்கையில் குறைந்த தங்கள் இனம் அதுவரை அனுபவித்து வந்த ஆட்சியும் அதிகாரமும்   இழந்து ஹுட்டுக்களின் தயவில் வாழ வேண்டுமே என்று அஞ்சினர். இதனால் விடுதலை இயக்கங்களில் பங்கேற்கவில்லை. இரு நாடுகளும் 1960களில் விடுதலையடைந்து மக்களாட்சி முறையில் தேர்தல்கள் நடந்தன. மக்கள் தொகையில் சுமார் 80 சதவிகிதம் இருந்த ஹூட்டுகள் ருவாண்டாவில் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர்.  அதிகாரத்தை இழந்த டுட்சிக்கள் எப்படி மீண்டும் அதனைக் கைப்பற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் அண்டை நாடான புரூண்டியில் டுட்சிக்களின் ராணுவ ஆட்சியே நடந்து வந்தது.

1960களில் ஆப்பிரிக்காவெங்கும் காணப்பட்ட அரசியல் நிலையின்மையும் அடிக்கடி நிகழும் இராணுவப்புரட்சிகளும், ருவாண்டாவில் தங்கள் இன மக்களின் வெற்றியும் புரூண்டியின் ஹுட்டுக்களுக்கு அதிகாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ளலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தன. 1972ல் புரூண்டியில் ஹூட்டுக்களின் புரட்சி வெடிததது. சில ஆயிரம் டுட்சிக்கள் புரட்சியால் விளைந்த கலவரங்களில் கொல்லப்பட்டனர். ஆத்திரம் அடைந்த டுட்சி அரசு பதிலுக்கு ஹுட்டுக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது.  திட்டமிட்டு ஹுட்டு இனத்தை அழிக்க முயன்றது. இக்காலகட்டத்தில் டுட்சி அரசின் முழு ஒத்துழைப்போடு நடந்த  படுகொலைகளில் ஒன்றரை லட்சம் ஹுட்டுக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சில லட்சம் பேர் தப்பித்து ஓடி அண்டை நாடுகளில் அகதிகளானார்கள்.  அதுவரை இரு இனங்களுக்குமிடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்று வந்தாலும் ஒரு இனம் கவனமாகத் திட்டமிட்டு அடுத்த இனத்தை முழுவதும் அழிக்க முயன்றது இதுவே முதல் முறை. இந்த முயற்சி வெற்றி பெறவில்லையென்றாலும் சம்பந்தப்பட்டவர்களது மனதுகளில் இனவொழிப்பு செய்துவிடலாம் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றச் செய்தது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ருவாண்டாவிலும் புரூண்டியிலும் பெரிய அளவு கலவரங்கள் எதுவுமின்றி அமைதியாக இருந்தது. எனினும் ருவாண்டாவின் ஹுட்டு பெரும்பான்மை அரசை வீழ்த்த டுட்சி போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி போராடி வந்தன. உகாண்டா, செயர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து ருவாண்டா மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தன. 1990களில் இந்த மோதல்கள் பெரிய அளவில் உள்நாட்டுப் போராக வெடித்தன.  உள்நாட்டுப் போர் மூண்டவுடன் பிற நாடுகள் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசின. ஆட்சி அதிகாரத்தில் டுட்சிப் போராளிகளுக்கு பங்கு கொடுக்கும் படி ஹுட்டு அரசை வற்புறுத்தின.

இத்தனை நாள் அதிகாரமற்று இருந்த நாங்கள் இப்போது கொஞ்ச நாளாகத் தான் அதிகாரத்தை அனுபவித்து வருகிறோம். அதுவும் பொறுக்காமல் அதைப் பிடுங்கி டுட்சிகளுக்கு கொடுக்கச் சொல்கிறார்களே என்று ஹுட்டுக்களுக்கு ஆத்திரம் மூண்டது. இந்தப் பிரச்சனையே டுட்சிக்கள் இருந்தால் தானே. அவர்களை வேரோடு அழித்து விட்டால் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்காவது மண்ணாவது என்று ஹுட்டுக்களுக்குத் தோன்றியது. மேலும் 1972ல் புரூண்டியில் டுட்சிக்கள் செய்ய முயன்று தோற்ற இனவொழிப்பை இந்த முறை தாங்கள் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.  இனவொழிப்புக்கான ஆயத்தங்களைத் தொடங்கினர்.  ஏப்ரல் 1994ல் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் பயணம் செய்த விமானம் ருவாண்டா நாட்டுத் தலைநகர் கிகாலியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இதில் மரணமடைந்தனர்.  இனவொழிப்பைத் தொடங்க ஹுட்டுக்கள் தேடிக்கொண்டிருந்த காரணம் அவர்களுக்கு கிடைத்து விட்டது.  எப்படியும் டுட்சிக்கள் நம்மை ஆள விடமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்ய இது வசதியாகப் போனது. (யார் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள் என்று இன்றுவரை சர்ச்சையாகவே உள்ளது.  டுட்சிப் போராளிக் குழுக்கள் தான் செய்தன என்று ஹுட்டுக்களும், ஹுட்டு தீவிரவாதிகளே இனவொழிப்பைத் தொடங்குவதற்க்காக இதைச் செய்தனர் என்று டுட்சிக்களும் இன்று வரை மாறி மாறி  குற்றம் சாட்டி வருகின்றனர்)

யார் ஆரம்பித்தார்களோ அடுத்து நிகழ்ந்த பயங்கரம் இதுவரை உலக வரலாற்றில் யாரும் கண்டிராதது.  ருவாண்டாவின் ஊடகங்கள் டுட்சி இனத்தவரின் மீது வெறுப்பினை உமிழ்ந்தன.  ஹுட்டு மக்களின் ரத்தம் கொதிக்கும் படி டுட்சிக்களின் சதிகளையும் துரோகங்களையும் பற்றி அவதூறுகளைப் பரப்பின. டுட்சிக்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள். அடியோடு நசுக்கா விட்டால், பல்கிப் பரவி தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள் என்று மக்களை உசுப்பேத்தின.  அடுத்து நிகழவிருந்த இனக்கொலைக்குத் தேவையான கத்திகளை லட்சக்கணக்கில் அரசு இறக்குமதி செய்து, ஹுட்டுக்களுக்கு வினியோகம் செய்தது.  ஓவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் டுட்சி குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை யார் கொல்ல வேண்டுமென்று “பொறுப்புகள்” பிரிக்கப்பட்டன..  ஹுட்டு இளைஞர்களைக் கொண்டு கொலை படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.  டுட்சிக்களை எளிதில அடையாளம் கண்டுகொள்ள மக்கள் அனைவரும் இனத்தின் அடிப்படையில் தனித்தனியே அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏப்ரல் 7, 1994ல் டுட்சி இனப்படுகொலை தொடங்கியது. குழந்தைகள் வயதானோர், ஊனமடைந்தவர்கள் என யாரும் விட்டுவைக்கப்படவில்லை.  ஒரு ஊரில் வாழ்ந்த டுட்சிக்களை அவர்களது பகுதியில் வாழ்ந்த ஹுட்டுக்களே அடையாளம் கண்டு கொன்றனர்.  படுகொலையில் பங்கெடுக்க மறுத்த ஹுட்டுக்களுக்கும் டுட்சிகளின் கதியே நேர்ந்தது.  தப்பியோடி ஒளிந்த டுட்சிக்களைக் கொல்ல கொலைப்படைகள் நாடெங்கும் அலைந்தன. தேவாலயங்கள், பள்ளிகள் என எங்கு ஒளிந்திருந்தாலும் டுட்சிக்களைத் தேடிப்பிடித்து கொலை செய்தன. ஜூலை மாத இறுதி வரை இந்த வெறியாட்டம் தொடர்ந்தது. ஐந்து லட்சத்திலிருந்து பதினோரு லட்சம் டுட்சிக்கள் இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிமிடத்துக்கும் 7 டுட்சிக்கள் வீதம் கொலை செய்யப்பட்டிருந்தனர்.   இப்படியொரு படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த போது ஐக்கிய நாடுகளும், பன்னாட்டு சமுதாயமும் ஏதோ உள்நாட்டுத் தகராறு நடக்கிறது என்று சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. டுட்சி போராளிக் குழுக்கள் தங்கள் இன மக்கள் சாவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை, படைதிரட்டி ருவாண்டா நாட்டைக் கைப்பற்றி ஹுட்டு அரசை பதவியிலிருந்து விரட்டி விட்டன.  பல லட்சம் ஹுட்டுக்களும் டுட்சி அரசு தங்களைப் பழிவாங்கிவிடும் என்று பயந்து நாட்டை விட்டு அகதிகளாக ஓடிவிட்டனர்.

இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. டுட்சி அரசு ருவாண்டாவை இரும்புப் பிடியுடன் ஆளுகிறது. ஹுட்டு போராளிப் படைகள் பக்கத்து நாடுகளில் இருந்து கொண்டு ருவாண்டாவைத் தாக்கி வருகின்றன. அவற்றை ஒழிக்கிறேன் பேர்வழி என்று ருவாண்டா பக்கத்து நாடான செயருக்குள் அவ்வப்போது படையெடுத்து அங்கு உள்நாட்டுப் போரை தூண்டி விடுகிறது. லட்சக்கணக்கில் மக்கள் இறந்தும், இன்னும் பல லட்சம் பேர் வீடிழந்து அகதிகளாகியும் இரு தரப்பிலும் வெறி தணியாமல் இன்னும் பகைமை வளர்ந்து கொண்டிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொள்ளையர் பிதாமகர்

21. கறுந்தாடி டீச்

 

பொதுவாக திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என சட்டத்தை மீறுவோர் மீது மக்களுக்கு ஒரு இனம்புரியாத கவர்ச்சி உள்ளது.  அதிலும் கடல் கொள்ளையர்கள் என்றால் ஒரு அலாதிப் பிரியம் தான். கடற் கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம் –    தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர்.  இன்னும் கொஞ்சம் யோசித்தால் மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கறுப்பு கொள்ளையர் கொடியும் பாய்மரக் கப்பல்களும், புதையல் பெட்டிகளும் நினைவுக்கு வரும். இந்த பொது பிம்பம் உருவாக பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கரிபீயன் கடலைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பல கொள்ளையர்களே காரணம். இவர்களது கதைகளே காலங்காலமாக  கதைகளிலும், திரைப்படங்களிலும் வந்து கடற்கொள்ளையர்கள் மீது மக்களின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டன. .என்ன தான் கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் கடற்கொள்ளையர்கள் சட்டத்தை மீறிய திருடர்களே. வர்த்தகர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தவர்களே. இந்த வில்லன்களுள் மிகப் பரவலாக அறியப்படும் வில்லன் கறுந்தாடி எனப்படும் எட்வர்ட் டீச்.  கடற் கொள்ளையர் பொது பிம்பத்துக்கு கறுப்பு தாடியை இரவல் கொடுத்தவர் இவரே.

பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரலாற்றாளர்களால் கடல் கொள்ளையின் பொற்காலம் (Golden Age of Piracy) என்றழைக்கப்படுகிறது. அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய நாடுகள் அங்கே பல காலனிகளை உருவாக்கி தங்கள் மக்களை குடியேற்றின.  பெரும் பரப்பளவில் பண்ணைகளும் தோட்டங்களும் உருவாக்கப்பட்டு பருத்தி, கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற அனைத்து முன்னணி ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவில் காலனிகள் இருந்தன. காலனிகளுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே அட்லாண்டிக் கடல் இருந்தது. அதைக் கடப்பதற்கு அதிவேகமான கப்பலென்றாலும் குறைந்த பட்சம் சில வாரங்களாவது ஆகும்.   காலனிகளுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வர்த்தகம் வருடந்தோறும் பெருகி வந்ததால், கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டது. கப்பல் வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. ஒவ்வொரு பிரயாணமும் மாதக் கணக்கில் நீடிக்கும்.   உயிருடன் திரும்பி வருவோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஊதியமோ மிகக் குறைவு. அதுவும் சரியாக வழங்கப்படுவது சந்தேகமே.  கப்பல்களின் மேலதிகாரிகள் ஊழலுக்குப் பேர் போனவர்கள். மாலுமிகளின் சம்பளத்தைத் திருடுவது, அவர்களுக்கான உணவை, உடைகளை வாங்குவதில் ஊழல் என பலவகைகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருந்த மாலுமிகளால் இதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.  எதிர்த்துப் பேசினால் சாட்டையடி விழும், வாரக்கணக்கில் இருட்டறையில் அடைத்து வைக்கப்படுவார்கள்,  அல்லது பட்டினி போடப்படுவார்கள். பல சமயங்களில் சிறு குற்றங்களுக்குக் கூட தூக்கில் போட்டு விடுவார்கள்.  பெரும்பாலான மாலுமிகள் கடுமையான கப்பல் வாழ்க்கையிலிருந்து தப்பிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் கொடுமைகளைத் தாங்க முடியாதல்லவா. அதுதான் நடந்தது இங்கும். பல கப்பல்களில் மாலுமி புரட்சிகள் வெடித்தன. மாலுமிகள் தங்கள் மேலதிகாரிகளைக் கொன்று கப்பல்களைக் கைப்பற்றினர்.  புரட்சிக்குப் பின் அவர்களால் தாய்நாடு திரும்ப முடியாது. திரும்பினால் தூக்கு தான். கொள்ளையராக மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.  கடுமையான மாலுமி வாழ்க்கையைவிட கொள்ளையர் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகத் தெரிந்தது. இப்படித்தான் பல புதிய கொள்ளையர் கூட்டங்கள் உருவாகின.

இப்படி மாலுமியாக இருந்து கொள்ளையரானவர் தான் எட்வார்ட் டீச்.  ஐந்துக்கும் பத்துக்கும் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்த டீச்,  புகழ்பெற்ற கொள்ளையர் கேப்டனான பெஞ்சமின் ஹார்னிகோல்டின் சீடனாக ஆன பின்னர் பெரிய அளவில் கொள்ளையடிக்கத் தொடங்கினார்.  அமெரிக்க கண்டத்திலிருந்து ஐரோப்பாவுக்கு புதையல்களை கொண்டு சென்ற ஸ்பானிஷ் கப்பல்களைக் கொள்ளையடித்து பெரும் பொருள் சேர்த்த ஹார்னிகோல்டு,  கொள்ளையர்களுக்கென தனியே ஒரு தளம் வேண்டுமென்று விரும்பினார். இதற்காக கரிபியன் தீவுகளில் ஒன்றான பஹாமாசின் தலைநகர் நசாவுவைக் கைப்பற்றினார். இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர் கூட்டமைப்பு முன்னை விட அதிகமான முனைப்புடன் கொள்ளைத் தொழிலில் இறங்கினர். விரைவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார் கறுந்தாடி. ஹார்னிகோல்ட் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர், தேசப்பற்றால் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தார். ஆனால் அவரது சீடர்களோ கொள்ளையர்கள் நமக்கு தேசமாவது பற்றாவது என்று அவரை கேப்டன் பதவியிலிருந்து இறக்கி விட்டனர். அவரது இடத்திற்கு 1717ம் ஆண்டு கறுந்தாடி வந்தார்.

கொள்ளையர் கேப்டனான பின்னர் கறுந்தாடியின் கொள்ளைத் தாக்குதல்கள் அதிகரித்தன. அதுவரை சின்னச் சின்ன வணிகக் கப்பல்களை மட்டும் தாக்கி கொள்ளையடித்து வந்த அவரது கூட்டம், பெரும் போர்க்கப்பல்களைத் துணிந்து தாக்கத் தொடங்கியது. லா கன்கார்ட் என்ற பிரெஞ்சு ஆயுதமேந்திய சரக்குக் கப்பலைக் கைப்பற்றிய கறுந்தாடி அதனைத் தனது கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமைக் கப்பலாக்கிக் கொண்டார்.  குயின் ஆனிஸ் ரிவெஞ்ச் (Queen Anne’s Revenge) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இக்கப்பல்தான் அதுவரை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்திய கப்பல்களுள் மிகவும் பலம் வாய்ந்தது.  அதிகமான பீரங்கிகளும் திறமையான கேப்டனும் இருந்ததால் குயின் ஆனி வருகிறது என்ற செய்தியைக் கேட்டாலே வணிகக் கப்பல் கேப்டன்களுக்கு குலை நடுங்கும் நிலை உருவானது. கறுந்தாடியின் புகழ் பிற கொள்ளையர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியதால், பல கொள்ளையர்கள் தேடி வந்து அவரது கூட்டத்தில் இணைந்து கொண்டனர்.  கறுந்தாடியின் கூட்டத்தில் உறுப்பினர் என்ற கெளரவம் (!) கிடைத்தாலும் அவரது கூட்டத்தினர் அடிக்கடி வெற்றிகரமாகக் கொள்ளையடிப்பதால் சீக்கிரம் பணக்காரர்களாகி விடலாம் என்ற எண்ணமே பிற கொள்ளையர்களைக் கறுந்தாடியின் பக்கம் ஈர்த்தது.

விரைவில் கறுந்தாடியின் கொள்ளைக் கூட்டம் 150 பேர் கொண்டதாகப் பெருகியது. அனைவரையும் ஒரே கப்பலில் வைத்திருக்க முடியாதென்பதை உணர்ந்த கறுந்தாடி,  தான் கைப்பற்றிய இரு கப்பல்களைக் கொள்ளைக் கப்பல்களாகத் தயார் செய்து தன் கூட்டத்தினிடம் கொடுத்தார்.  இதனால் ஒரு கப்பலுக்கு கேப்டனாக இருந்த அவர் மூன்று கப்பல்களுக்கு கமடோராகி (கடற்படை தளபதி) விட்டார். இக்காலகட்டத்தில் தான் அவருக்கு கறுந்தாடி என்ற பெயர் பிரபலமானது. அதுவரை எட்வர்ட் டீச் அல்லது எட்வர்ட் தாச் என்றே அறியப்பட்டு வந்த அவர், தன்னைக் காண்பவர் பயப்படும் வண்ணம் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார். நீண்ட கறுந்தாடி,  தோளின் குறுக்கே பல கைத்துப்பாக்கிகள் அடங்கிய  தோல் பட்டை, பெரிய தொப்பி, நீண்ட அங்கி என தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.  அவரது பெயரும் “கறுந்தாடி” என்றாகிப் போனது. . 1718ம் ஆண்டு கறுந்தாடியின் கொள்ளைத் தாக்குதல்கள் மேலும் அதிகரித்தன. கரிபியன் கடலில் ஒரு குறுகிய பகுதியில் மட்டும் கொள்ளையடித்து வந்த அவர் அந்த ஆண்டு அப்பகுதியிலிருந்த பிற ஐரோப்பிய காலனிகளிலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.  கறுந்தாடியின் சாகசங்கள் பிற கொள்ளையர்களுக்கும் தைரியமளித்து அவர்களும் தங்கள் கைவரிசையைப் பல இடங்களில் காட்டத் தொடங்கினர். ஹார்னிகோல்டு நசாவுவில் உருவாக்கியிருந்த கொள்ளையர் தளம், ஒரு குடியரசைப் போன்று செயல்படத் தொடங்கியது.  கொள்ளையர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கினர்.

கொள்ளையர் தொந்திரவால் வடஅமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நடைபெற்ற கடல்வழிப் போக்குவரத்து முழுதும் துண்டிக்கப்பட்டது. ஐரோப்பியரின் அமெரிக்க பேரரசுகள் ஆட்டம் கண்டன. அமெரிக்க காலனியாளர்கள் கொள்ளையரிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு இங்கிலாந்தின் முதலாம் ஜார்ஜ் மன்னரிடம் முறையிடத் தொடங்கினர்.  மன்னரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார். கொள்ளையரின் கொட்டத்தை அடக்க வேண்டுமெனில் முதலில் பஹாமாஸ் தீவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அவரது அமைச்சர்கள் வலியுறுத்தினர். எனவே பஹாமாசுக்கு ஒரு புதிய ஆளுனரை நியமித்து அவரைப் படைபலத்துடன் கரிபியனுக்கு அனுப்பி வைத்தனர். வூடஸ் ரோஜர்ஸ் என்ற அந்த தளபதி ஒரு கப்பல் படையுடன் கொள்ளையரை ஒழிக்க இங்கிலாந்திலிருந்து கரிபியன் தீவுகளுக்கு கிளம்பினார். ரோஜர்ஸ் கரிபியன் தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்த போது கறுந்தாடியின் கொள்ளைப் படை தங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சகட்ட சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை கரிபியன் பகுதியிலிருந்த ஐரோப்பிய காலனிகளை மட்டும் கொள்ளையடித்து வந்த கறுந்தாடிக்கு வட அமெரிக்கப் பகுதிகளில் ஏன் கொள்ளையடிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவரை யாரும் கொள்ளையடிக்காத பகுதியென்பதால் அங்கு பாதுகாப்புக்கு கடற்படை கப்பல்கள் ஏதும் இல்லை. எனவே 1718ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கக் காலனியான தெற்கு கரோலினாவின் தலைநகர் சார்லஸ்டன் துறைமுகத்தைத் தாக்கினார் கறுந்தாடி. ஒரு கொள்ளையர் கூட்டம் தைரியமாக ஒரு பெரிய நகரை நேரடியாகத் தாக்குவது அதுவே முதல் முறை.  சார்லஸ்டன் துறைமுக வாயிலில் தன் கப்பல்படையை நிறுத்திய கறுந்தாடி, அங்கு வந்த பல கப்பல்களைக் கைப்பற்றி அதன் பயணிகளை சிறைபிடித்தார். தனக்கு வேண்டிய சில மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் பிணைக்கைதிகளைக் கொன்றுவிடுவதாக சார்லஸ்டன் ஆளுனரை மிரட்டினார்.  சில நாட்கள் இந்த முற்றுகை நீடித்தது, பின்னர் மருந்துகளைப் பெற்றுக் கொண்டு கைதிகளை விட்டுவிட்டார். அவர் நினைத்திருந்தால் சார்லஸ்டனை தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால் வெறும் சில மருந்துகளுக்காக ஏன் இப்படியொரு தாக்குதலை நடத்தினார் என்பது மர்மமாகவே உள்ளது.

வட அமெரிக்காவிலிருந்து திரும்பிய கறுந்தாடிக்கு ரோஜர்சின் படை நசாவுவை நோக்கிச் செல்லும் செய்தி கிட்டியது.  அதனை சமாளித்துப் போரிட முடியாது என்று முடிவு செய்த அவர் தற்காலிகமாக கொள்ளைத் தொழிலிலிருந்த் ஓய்வு பெற முடிவு செய்தார். அமெரிக்கவின் வட கரோலினா மாநிலத்தின் ஆளுனருக்கு லஞ்சம் கொடுத்து அங்கு குடியேறினார். அதற்காக வேண்டுமென்றே தனது குயின் ஆனி கப்பலை தரைதட்டச் செய்தார்.

சில மாதங்கள் அமைதியாக வடக்கு கரோலினாவில் காலம் கடத்தினார். இந்நேரத்தில் ரோஜர்சின் கப்பற்படை நசாவு தீவினை அடைந்து அங்கிருந்த கொள்ளையர்களை அடித்து விரட்டியது. பல கொள்ளையர் தலைவர்கள் கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.  அவர்களுக்கு நேர்ந்த கதியிலிருந்து புத்திசாலித்தனமாக கறுந்தாடி தப்பி விட்டாலும் அவரால் நிலத்தில் அமைதியாக வாழ முடியவில்லை. மீண்டும் கொள்ளைத் தொழிலுக்குத் திரும்ப வேண்டுமென்ற ஆசை எழுந்தது. சில மாதங்களுக்குப் பின்னர் வட கரோலினா கடற்கரைப் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.  நசாவுவிலிருந்து தப்பி வந்திருந்த வேறு சில கொள்ளையர் கேப்டன்களும் அவருடன் இணைந்து கொண்டனர். ஆனால் இம்முறை காலனிய ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருந்தனர். வட கரோலினாவுக்கு பக்கத்து மாநிலமான விர்ஜீனியாவின் ஆளுனர், கறுந்தாடி மீண்டும் கொள்ளைத் தொழிலில் இறங்கியதைக் கேட்டவுடன், கறுந்தாடியை ஒழிக்க உடனடியாக ஒரு கடற்படையைத் தயார் செய்தார். இப்படை லெப்டினண்ட் மேனார்ட் தலைமையில் கறுந்தாடியின் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ரகசியமாக அணுகியது.  கறுந்தாடியின் கப்பலின் மேற்தளத்தில், கறுந்தாடியின் கூட்டத்துக்கும் மேனார்டின் படைவீரர்களுக்குமிடையே கடும் சண்டை நிகழ்ந்தது.  ஆவேசத்துடன் கறுந்தாடி போராடினாலும் இறுதியில் மேனார்டின் வீரர்கள் அவரைத் தீர்த்துக் கட்டினர். அவரது தலை துண்டிக்கப்பட்டு மேனார்டின் கப்பல் பாய்மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டது.

கறுந்தாடி இறந்து சில வருடங்களில் பிற கொள்ளையர் தலைவர்களும் பிடிபட்டனர். கடற்கொள்ளையின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது.  ஆனால் மரணத்துக்குப் பின்னரும் கறுந்தாடியின் புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. கடற் கொள்ளையர் என்றாலே கறுந்தாடியின் உருவம் நினைவுக்கு வருமளவுக்கு இன்றை நிலை உள்ளது. நிஜ வாழ்வில் கரிபியன் கடற்பகுதியைக் கலங்கடித்தவர், இப்போது கதைகள் திரைப்படங்கள் மூலமாக உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வில்லனான புத்தகம்

22. புரோட்டோக்கால்ஸ் ஆஃப் சியான்

 

உலக வரலாற்றில் வில்லனகள் வெவ்வேறு அளவிலும் வடிவத்திலும் வந்துள்ளனர்.  ஒருவர் வில்லனாவதற்கு பெரும் சக்கரவர்த்தியாகவோ,  கொடூர கொலையாளியாகவோ பல லட்சம் பேர்களை நேரடியாகக் கொலை செய்தவராகவோ இருக்கத் தேவையில்லை. ஏன் உயிருள்ள மனிதராக இருக்கக்கூடத் தேவையில்லை. உயிரற்ற எண்ணக்கருக்களும்,  கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் கூட பல சமயங்களில் அவற்றை பின்பற்றுவோரால் உயிர்பெற்று    உலகில் பெரும் நாசத்தை விளைவித்துள்ளன / வருகின்றன. ஏன் பொய்களும் புரட்டுகளும் திட்டமிட்டு பரப்பட்ட வதந்திகளும் கூட பல நூற்றாண்டுகளாக மனித குலத்துக்கு பல தீமைகளைச் செய்து வந்திருக்கின்றன.  இப்படி ஒரு இனத்தின் மீது வீண்பழி சுமத்தி உலகையே அவர்களை வெறுக்கச் செய்து, அழிக்கத் தூண்டிய ஒரு புத்தகமே இந்த வார வில்லன்.  யூதர்களைப் பற்றி நூறாண்டுகளுக்கு மேலாக அவதூறுகளைப் பரப்பப் பயன்படுத்தப்படும் தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் சியான் (The Protocols of the Elders of Zion)  என்ற இப்புத்தகம் 20ம் நூற்றாண்டில் யூதர்களுக்கு சொல்லவொண்ணாத் துயர்களையும் பேரிடர்களையும் உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே யூதர்களின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.  ஏசுவை சிலுவையில் அறையக் காரணமானவர்கள் என்பதிலிருந்து அதிக வட்டி கேட்கிறார்கள் என்பது வரை அவர்கள் மீது ஐரோப்பிய கிருத்துவர்கள் சிறிதும் பெரிதுமாக பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். சிலுவைப் போர்களில் யூதர்களைப் படுகொலை செய்வது, மதம் மாறச் சொல்லி துன்புறுத்துவது,  மொத்த யூத மக்களையும் நாடு கடத்துவது, பல தொழில்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுபாடுகள்,  நகரங்களில் வசதியற்ற குறுகிய பகுதிகளில் ஆடுமாடுகளைப் போல் அடைத்து வாழ வற்புறுத்துவது என்று பல வழிகளில் ஐரோப்பிய யூதர்களைத் துன்புறுத்தி வந்துள்ளனர்.  யூதர்களுக்கு பல தொழில்களைப் புரிய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஒன்று கைவினைக் கலைஞர்களாக வேண்டும் அல்லது வட்டிக்கு கடன் கொடுக்கும் லேவா தேவிக்காரர்களாக வாழ வேண்டும்.  பொதுவாக வட்டி வசூலிக்கும் யாரையும் மக்களுக்குப் பிடிக்காது; ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் வட்டிக்காரர்களாக இருந்தால்,  அந்த இனத்தின் மீதே அவர்களுக்கு வெறுப்பு வளர்ந்து விடும். யூதர்களுக்கு இதுவே நடந்தது. யூதன் என்றாலே பேராசை பிடித்து பணம் பணம் என்று அலைபவன் என்ற பிம்பம் ஐரோப்பிய மக்களிடையே உருவாகி விட்டது.  கூட சட்டத்தை மதிக்காமல் பெரும் குற்றமிழைப்பவர்கள் என்ற முத்திரையும் சேர்ந்து கொண்டது.  புனைவுக் கதைகளும் நாடகங்களும் இந்த பிம்பத்தை தூபம் போட்டு வளர்த்து விட்டன. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் எழுதிய மெர்ச்சண்ட் ஆஃப் வெனிசில் வரும் ஷைலாக் கடன்காரன் பாத்திரமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் டுவிஸ்ட் புதினத்தில் வரும் ஃபாகின் திருடன்  பாத்திரமும் இந்த பிம்பங்களைப் பலப்படுத்திய கற்பனைப் படைப்புகளுள் ஒரு சில.

ஒரு புறம் அவதூறும் கொடுமைகளும் நடந்து கொண்டிருந்த போதே இன்னொரு புறம் யூதர்களில் ஒரு பகுதி வட்டித் தொழிலில் செழித்துக் கொண்டிருந்தது. என்னதான் மக்கள் கடன்காரர்களை வெறுத்தாலும் அதற்காகக் கடன் வாங்காமலா இருந்து விடப்போகிறார்கள்.  சர்வதேச வங்கி வர்த்தகத்தின் முதுகெலும்பே கடன் கொடுக்கலும் வாங்கலும் தான். இதனால் வட்டித் தொழிலில் ஈடுபட்ட ஐரோப்பாவின சில யூதக் குடும்பங்கள் காலப்போக்கில் பெரும் வங்கியர்களாகி (bankers) விட்டன.  இது ஐரோப்பிய கிருத்துவர்களுக்கு யூதர்களின் மீதிருந்த பொறாமையினையும் வெறுப்பையும் பன்மடங்காக்கியது. நாட்டிற்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதற்குப் பின்னால் யூதர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் பழக்கமும் ஏற்பட்டது.  விலைவாசி உயர்விலிருந்து, போரில் தம் நாட்டுப் படைகள் தோற்பது வரை அனைத்துக்கும் காரணம் யூதர்களின் சதி தான் என்று ஒரு தரப்பு குற்றம் சாட்டத் தொடங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத சமுதாயத்தினிடையேயும்  பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. கைவினைத் தொழிலும், வட்டித் தொழிலும் செய்து திருப்தியடையாத பல யூதர்கள் உயர் கல்வி கற்று பெரும் சிந்தனையாளர்களாகவும், மெய்யியலாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும் மாறத் தொடங்கினர். மேற்கு ஐரோப்பாவில் மெதுவாக யூத சமுதாயத்தின் நிலை முன்னேறத் தொடங்கியது. ஆனால் கிழக்கு ஐரோப்பாவிலும் அருகிலிருந்த ரஷியப் பேரரசிலும் அவர்களது வாழ்வில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம். தொழிற்புரட்சியும் எந்திர மயமாக்கலும் உலகின் சமுதாய அரசியல் கட்டமைப்பைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. நில அடிமை வாதம், வர்க்கவொழுக்கம் போன்றவற்றால் நூற்றாண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த அரசியல் அமைப்புகளும், பேரரசுகளும் ஆட்டம் கண்டன.  ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்த மக்களிடையே சின்னதும் பெரிதுமாக பல புரட்சிகள் வெடித்து வந்தன. அவற்றை அடக்குவதற்கு மன்னர்களும் மந்திரிகளும் திணறிக் கொண்டிருந்தனர். 20ம் நூற்றாண்டு பிறந்த பின்னர் பழைய சமுதாய அரசியல் கட்டமைப்புகளில் பெருத்த மாற்றம் நிகழப்போகிறது என்பது தெளிவானது. ஆனாலும் பல பழமைவாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள விடாது போராடினர். மக்கள் கோபத்தைத் திசை திருப்ப அவர்கள் கையாண்ட ஒரு உத்தி, அதனை யூதர்கள் மீது திசைதிருப்புவது.  இது ரஷ்யப் பேரரசில் ஒரு தேர்ந்த அரசியல் உத்தியாகவே ஜார் மன்னர்களால் மாற்றப்பட்டிருந்தது.  போரில் தோல்வியா யூதனை நோக்கி குற்றம் சொல்,  இந்த ஆண்டு பயிர்கள் விளையவில்லையா அப்படியென்றால் யூதன் சதி செய்து விட்டான், பஞ்சமா யூதன் தானியத்தைப் பதுக்கி விட்டான். இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய அரசியல்.

வெறுமனே குற்றம் சாட்டுவதோடு நிற்காமல் யூதர்களின் மீது திட்டமிட்ட வன்முறையும் கலவரங்களும் ஜார் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. போக்ராம் (pogram) என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட இனக்குழுவைத் திட்டமிட்டுத் தாக்குதல் என்று அர்த்தம் உருவாக ஜார் மன்னர்களின் யூதப் போக்ராம்களே காரணமாக அமைந்தன. இப்படி யூதர்கள் மீது மக்களின் வெறியைக் கூட்ட உருவாக்கப் பட்ட புத்தகமே தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் சியான். முதன் முதலில் 1903ம் ஆண்டு ரஷ்ய மொழியில் இந்த புத்தகம் ஒரு அறிக்கை வடிவில் வெளியானது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகத்தைக் கைப்பற்றி ஆளுவதற்காக யூதத் தலைவர்கள் கூடித் திட்டமிட்டனர் என்றும். அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சுகள், வகுத்த திட்டங்களை புத்தக வடிவில் வெளியிடுகிறோம் என்றும் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சொன்னார்கள்.  ஐரோப்பிய மக்களுக்கு யூதர்கள் மீதிருந்த எல்லா கெட்ட நினைப்புகளையும் இந்தப் புத்தகம் நன்றாக வெளிக்கொணர்ந்திருந்தது.  யூத வங்கியர்கள் முதலில் உலகப் பொருளாதாரத்தை சீர் குலைப்பார்கள், பிற இனத்தவர்களின் சமூக கட்டுப்பாடுகளைத் தகர்த்து அவர்களை பலவீனப்படுத்துவார்கள்,  உலகெங்கும் போர்களை மூட்டுவார்கள். இதனால் பேரிழப்புகளுக்காளாகி பலவீனப்பட்டு இருக்கும் உலகத்தை எளிதில் கைப்பற்றி ஒரு உலகளாவிய யூதப் பேரரசை உருவாக்கிவிடுவார்கள் என்று புரோட்டோகால்ஸ் பூச்சாண்டி காட்டியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் நடந்த ஒரு சாதாரண யூத மாநாட்டைச் சாக்காக பயன்படுத்திக் கொண்ட ரஷ்ய உளவுத்துறையின் பாரிசு கிளையே இந்த ஃபோர்ஜரிக்குக் காரணம். யூதர்கள் கூட்டியதோ ஒரு சாதாரண ஜாதிச் சங்க மாநாடு போன்ற ஒரு விஷயம். ஆனால் ரஷ்ய உளவுத்துறை அதற்கு நன்றாக பில்டப் கொடுத்து உலகத்தைக் கைக்குள் போட திட்டம் தீட்டினார்கள் என்று தயார் செய்து இந்த போலி “திட்டத்தை”க் கசியவிட்டது. யூதர்களின் மீது மக்களுக்கு வெறுப்பு கிளப்பும் ரஷ்ய ஆட்சியாளர்களின் செயலகளில் இதுவும் ஒன்றாகவே தொடங்கியது. ஆனால் சந்தர்ப்பவசமாக பொதுமக்களிடம் இது பிரபலமானதால் மீண்டும் மீண்டும் பல தரப்பினரும் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர்.  பல ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஐரோப்பாவெங்கும் இப்புத்தகம் பரவியது.

ஐரோப்பிய யூத வெறுப்பாளர்களுக்கு புரோட்டோகால்சின் பிரபலம் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானாது. நாங்க சொன்னோம்ல அவனுங்க உலகமகா வில்லனுங்கன்னு என்று பரப்புரை செய்யத் தொடங்கினர்.  யூதர்கள் மீது இதுவரை சாற்றப்பட்டு வந்த அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமாகக் காட்ட புரோட்டாகால்ஸ் அவர்களுக்கு வசதியாகப் பயன்பட்டது.  அதுவரை குடிசைத் தொழிலாக இருந்த யூத அவதூறு புரோட்டோகால்ஸ் புத்தகத்தின் துணையுடன் பெரும் உற்பத்தித் தொழிற்சாலையாக விசுவரூபமெடுத்தது.. யூதர்களின் மீது பழி போட்டு பல ஆண்டுகளாகத் தப்பி வந்த ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி 1917ல் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சியால் முடிவுக்கு வந்தது.  கம்யூனிஸ்டுகளிடமிருந்து தப்பி ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த முன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களும், புரோட்டோகால்சின் புகழ் பரவ புத்துணர்ச்சி அளித்தனர். கம்யூனிஸ்டு புரட்சிக்கு யூதர்களே காரண கர்த்தாக்களென்றும், புரோட்டோகால்சில் சொல்லப்பட்டிருந்த திட்டங்களுக்கு ரஷ்யப் புரட்சியே நல்ல எடுத்துக் காட்டு என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். ஐரோப்பிய மக்களின் மனங்களில் இதனால் புரோட்டோகால்ஸ் புத்தகம் உண்மை என்ற கருத்து ஆழமாக வேரூன்றிவிட்டது.

1920களில் புரோட்டோகால்ஸ் ஒரு ஃபோர்ஜரி புத்தகமென்று தெளிவாக நிரூபிக்கப்பட்டது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பல புத்தகங்களில் இருந்து முழுப் பக்கங்களை அப்படியே காப்பியடித்து ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட புத்தகம் என்று இலக்கிய ஆய்வாளர்களும் வரலாற்றளர்களும் தெளிவாக நிரூபித்தனர். ஆனால் ஐரோப்பிய மக்கள் தான் அதனை நம்பத் தயாராக இல்லை.” புத்தகத்திலேயே போட்ட்ருக்காம்ல் யூதன் சதி செய்யறான்னு” என்ற ரீதியிலேயே அவர்களது புரிதல் இருந்தது.  இதனை ஐரோப்பாவின் புதிய ஆட்சியாளர்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். முதலாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியில் போரில் நம்ம நாடு தோற்று விட்டது என்று பலரால நம்ப முடியவில்லை. நம்ம படை தோற்கடிக்கப்பட்டிருக்குன்னா அதுக்கு யாராச்சும் சதி செஞ்சுருப்பாங்க என்று சொல்லிக் கொண்டவர்கள் புரோட்டாகால்சை ஆதாரமாகக் காட்டினார்கள்.  இது கண்டிப்பாக யூதர்களின் சதியாகத் தான் இருக்க முடியுமென்று  ஹிட்லரின் ஆதரவாளார்கள் சொல்லத் தொடங்கினர். இப்படிப் பரவிய யூத வெறுப்பே ஹிட்லர் ஜெர்மனியில் பதவிக்கு வரத் துணையாக இருந்தது.  நாஜிக்களின் இன வெறிக்கு அறுபது லட்சம் யூதர்கள் பலியாகவும் காரணமாக அமைந்தது.

ஒரு புறம் ஹிட்லர் போன்றவர்களின் அரசியல் துணை இன்னொரு புறம் அமெரிக்கத் தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு போன்றோரின் ஆதரவு. இது போன்ற காரணங்களால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புரோட்டோகால்சுக்கு உலகெங்கும் ஆதரவு பெருகியது.  இரண்டாம் உலகப் போரில் பாசிச நாடுகள் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவானதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாகத் தொடங்கியது. புரோட்டோகால்ஸ் புத்தகம் ஒரு போலி என்று தெளிவாக எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை என்று நம்புவோர் கோடிக்கணக்கில் உள்ளனர்.  யூதர்கள் இன்னும் உலகையாள முயலுகிறார்கள்,  பொருளாதார சிக்கல்களுக்கு அவர்களது சதியே காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.  பொதுமக்கள் மட்டுமல்ல பல நாடுகளின் ஆட்சியாளர்களும் இன்னும் இதை நம்புகின்றனர். 1990களில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியை யூதர்கள் தான் வேண்டுமென்றே உருவாக்கினார்கள் என்று அப்போதைய மலேசியப் பிரதமர் மஹாத்திர் முகமது வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

இப்படி வெளியாகி நூறாண்டுகள் ஆகியும் இஸ்ரேலையும் யூதர்களையும் தாக்குவதற்கும் அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதற்கும் இந்த புரோட்டோகால்ஸ் புத்தகம் பயன்பட்டு வருகிறது.  ஒரு பெரும் இனவழிபபு (holocaust)  நிகழக் காரணமாக இருந்த இது இன்று வரை பரவலாக நம்பபடுவதுதான் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் அளிக்கும் விஷயமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆசை எமன்

23. ஜியா உல் ஹக்

 

ஆமை புகுந்த வீடு, அமீனா புகுந்த வீடு போலத் தான் மதம் அரசியலில் புகுந்த நாடும். உருப்படாமல் போகும். வெறுமனே மதம் புகுந்த நாட்டுக்கே இந்த கதியென்றால் மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நாட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம்.  இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ முடியாது என்ற அச்சத்தில் உருவானதே பாகிஸ்தான்.  முஸ்லிம்களுக்கென ஒரு தனி நாடு வேண்டுமென்று கோரிய ஜின்னாவின் ஆசைப்படி ஒரு இஸ்லாமிய நாடாகத் தோற்றுவிக்கப்பட்டது பாகிஸ்தான்.  மதத்தின் அடிப்படையில் நாடு அமைந்ததேயொழிய, சரியான முறையில் மக்களாட்சி அமைப்புகள் அதில் உருவாகவில்லை.  மாறி மாறி ராணுவ ஆட்சியும்,  மக்களாட்சியும் ஏற்பட்டு அந்நாடு அழிவை நோக்கி மெல்லச் சென்றது.  பாகிஸ்தானின் நிலை அந்நாட்டை மற்றும் பாதிப்பதில்லை. சுற்றியுள்ள நாடுகளையும் – குறிப்பாக இந்தியாவையும் பாதிக்கிறது. பாகிஸ்தானை நாச பாதையில் இட்டுச் சென்ற பெருமை அதன் ஆட்சியாளர்கள் அனைவரையும் சேரும் என்றாலும், அதைக் காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்கு ஆளாக்கியவர் பதினோராண்டுகள் அதன் ஜனாதிபதியாகவும் சர்வாதிகாரியாகவும் இருந்த தளபதி ஜியா-உல்-ஹக்.

ஜின்னாவுக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களின் பேராசையாலும் கையாலாகாத்தனத்தாலும் அந்நாட்டில் அடிக்கடி ராணுவப் புரட்சி வெடித்து ராணுவ தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றி வந்தனர். அரசியல்வாதிகளின் ஊழல் தாங்க முடியாமல் மக்கள் ராணுவ ஆட்சியை வரவேற்பதும், கொஞ்ச நாள் போன பின்னால் ராணுவ சர்வாதிகாரியின் அட்டகாசம் தாங்க முடியாமல் மீண்டும் மக்களாட்சி வேண்டுமென்று கேட்பதும் பாகிஸ்தானில் வழக்கமாகிப் போய்விட்டது.  பாகிஸ்தான் உருவாகி சில ஆண்டுகளிலேயே ஜின்னா இறந்து போனார். அவர் உயிருடன் இருந்த போது அவரைப் போல பெரிய பிம்பம் கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க வில்லையென்பதால் அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அவரைப் போன்று பாகிஸ்தான் மக்கள் மத்தியில் மதிப்போ பரவலான ஆதரவோ பெற்றிருக்கவில்லை. பாகிஸ்தான் வெளியிலிருந்து பார்ப்பதற்கு  ஒரே மதத்தால் ஒன்று பட்ட நாடுபோலத் தோன்றினாலும், அதன் மக்களுக்கு மதத்தைத் தவிர பொதுவில் ஒன்றும் கிடையாது. இந்தியாவைப் போலவே அங்கும் பல இனங்கள், குழுக்கள், மொழிகள், பிரதேச உணர்வுகள் இருந்தன. இந்தியா தன் அரசியலமைப்பிலேயே யதார்த்தத்தை ஒத்துக்கொண்டு அதற்கேற்றார் போல் தன் போக்கினை அமைத்துக் கொண்டது. ஆனால் பாகிஸ்தான் தன் மக்களை இணைக்க மதம் ஒன்றே போதும் என்று தப்புக் கணக்குப் போட்டதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் பெருகின. முதலில் மொழிப்பிரச்சனை தான் உருவானது – கிழக்குப் பாகிஸ்தானில் (தற்கால பங்களாதேசம்) வங்காள மொழிக்கு உருது மொழிக்கு இணையான அந்தஸ்து வேண்டுமென்று போராட்டங்கள் தொடங்கின.  பின் முஸ்லிம்களுள் ஒரு பிரிவினரான அஹ்மாதியாவினருக்கு எதிராக அவ்வப்போது கலவரங்கள் வெடித்த வண்ணம் இருந்தன.

பொருளாதார ரீதியாகவும் நாடு பின்தங்கத் தொடங்கியது. 1958ல் ஜனநாயகத்தின் குறைபாடுகளைச் சகிக்க முடியாத பாகிஸ்தான் மக்கள் தங்களது முதல் பெரும் தவறினைச் செய்தனர் –  ராணுவத் தளபதி அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றிய போது தங்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என எண்ணி அதனை வரவேற்றனர்.  அடுத்த பதின்மூன்று ஆண்டுகள் அயூப் கானே பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்தார். உள்நாட்டுப் பிரச்சனைகளை மக்கள் மறக்க வேண்டுமென்பதற்காக இந்தியாவுடன் 1965ல் ஒரு போரையும் மூட்டி விட்டார். யாருக்கும் வெற்றியில்லாமல் முடிவடைந்த அப்போரினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. அயூப் கானுக்கு மக்களிடம் ஆதரவு கரைந்து போனதால் அவர் பதவி விலகி, இன்னொரு ராணுவ தளபதி யாஹ்யா கான் சர்வாதிகாரியானார். அவர் நடத்திய பொதுத் தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின் வங்காளிகள் வெற்றி பெற்று அவர்களது தலைவர் முஜிபூர் ரகுமான் அடுத்த பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்பு உருவானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்கு பாகிஸ்தான் இனவாதிகள் தேர்தல் முடிவுகளைச் செல்லாது என்று அறிவித்தனர். கிழக்கு பாகிஸ்தானில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர், லடசக்கணக்கில் மக்கள் மடிந்து, மேலும் பல லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கு அகதிகளாக ஓடும் நிலை உருவானது. இந்தியா இவ்விஷயத்தில் தலையிட்டுப் போர் மூண்டு பாகிஸ்தான் இரண்டாகப் பிளவுபட்டது. பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது.

நாடு இரண்டு பட்டபின் இராணுவ ஆட்சியின் அபாயங்களைப் பற்றி மக்களுக்கு லேசாக உறைத்தது. இதனால் மீதமிருந்த பாகிஸ்தானில் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்டு சுல்ஃபிக்கார் அலி பூட்டோ பிரதமரானார். ஆனால் அவரும் முந்தைய ராணுவ ஆட்சியாளர்களைப் போலவே நாட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல், இந்தியாவை எப்படி ஒழிப்பது என்பதிலேயே குறியாக இருந்தார். இந்தியா அணுகுண்டு செய்ததைக் கண்டு பொறாமை கொண்டு பிச்சை எடுத்தாலும் நம் நாடும் அணுகுண்டு செய்யவேண்டும் என்று முறுக்கிக் கொண்டார். இப்படி தன்னாட்டை கவனியாமல் இந்தியா மீதே கவனம் செலுத்தி வந்ததால் பாகிஸ்தானில் பிரிவினைவாதமும் மதவாதமும் தலைதூக்கத் தொடங்கின.  வழக்கமாக பாகிஸ்தானின் ஜனநாயக ஆட்சியாளர்களுக்கு நேரும் கதியே அவருக்கும் நேர்ந்தது. 1977ல் மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்றார். அதுவரை மதப் புதைகுழிக்குள் இடுப்புவரை முழுகியிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து மீண்டுவர மிதமிருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பு அதோடு காலியானது.

ஜியா பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்தவர்.  பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது ராணுவமும் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ராணுவம் உருவானது. அதில் உடனே இணைந்தார் ஜியா.  படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.  அவர் ராணுவத்தில் பணியாற்றிய போது தான் அதன பலம் உயர்ந்து நாடே அதன் வசமானது. இப்படிப்பட்ட சூழ்நிலை ஜியா போன்ற இளம் அதிகாரிகளுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு இளக்காரமான எண்ணத்தை உருவாக்கி விட்டது. யார் தங்களை ஆள்வது என்பதைத் தீர்மானிக்க மக்கள் லாயக்கற்றவர்கள், மக்களாட்சி வேஸ்ட், ராணுவத்தால் மட்டுமே நிலையான நல்லாட்சி தரமுடியும் என்ற பிம்பத்தில் மூழ்கிய ஒரு புதிய தலைமுறையே உருவானது.  யாஹ்யா கான் ஆட்சி கவிழ்ந்து பூட்டோ பிரதமரான போது பாகிஸ்தான் தரைப்படையில் மிக உயரிய பதவியில் இருந்தார் ஜியா. உடனடியாக பூட்டோவுக்கு காக்கா பிடிக்கும் வேலைகளில் இறங்கினார்.  பூட்டோவுக்கு விசுவாசமானவர் போல நடித்தார்.

ராணுவம் மீண்டும் அரசியலில் தலையிடாமல் இருக்க தனக்கு நம்பிக்கையான ஒருவர் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருக்க வேண்டுமென்று பூட்டோ விரும்பினார். தனது கையாள் என்றால் ராணுவம் தன் மீது பாயாது என்று நம்பினார். பாம்புக்கு பால் வார்க்கிறோம் என்ற றியாமல் ஜியாவினை ராணுவத்தின் தலைமை தளபதியாக்கினார். ஜியாவைக் காட்டிலும் சீனியராக பல தளபதிகள் இருந்தனர் ஆனால் அவர்களுக்கு மேலாக பதவி உயர்வு கொடுத்து ஜியாவை உயர் பதவிக்குத் தூக்கி விட்டார் பூட்டோ.  வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற கதை ஜியா விஷயத்திலும் உண்மையானது.  பதவிக்கு வந்து ஆறாண்டுகளில் பூட்டோவை பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்காது போனது. தனக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்க்கட்சிகளையும் ஜியாவின் துணையுடன் ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் பூட்டோ.  இதனால் பூட்டோ-ஜியா கூட்டணியில் ஜியாவின் கை ஓங்கியது.  ராணுவத்தின் துணையின்றி பூட்டோ பதவியில் நீடிக்க முடியாதென்ற நிலை உருவானது.  நமது தயவினால் தான் இவன் பதவியில் இருக்கிறான், நாமே பேசாமல் ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன என்று எண்ணினார் ஜியா. பூட்டோவையும் அவரது அமைச்சர்களையும் பிடித்து சிறையில் தள்ளினார். பாகிஸ்தானின் மூன்றாவது ராணுவ சர்வாதிகாரியாகத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவிக்கு வந்தவுடன் புதிய சர்வாதிகாரிகள் வழக்கமாகப் பாடும் -விரைவில்  தேர்தல்கள் நடத்துவேன் என்ற பல்லவியை ஜியாவும் பாடினார். ஆனால் விரைவில் அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார். தன்னைத் தானே பாகிஸ்தானின் குடியரசுத் தலைவராக அறிவித்தார். பூட்டோவை உயிருடன் விட்டு வைத்தால், தனக்கு போட்டியாக வரக்கூடும் என்பதை உணர்ந்து, அவர் மீது கொலை வழக்கு போட்டு அவரை தூக்கிலிட்டார்.  அரசியல் எதிரிகளைக் கொலை செய்வது பாகிஸ்தானில் புதிதில்லை என்றாலும்,   நாட்டின் முன்னாள் தலைவரை கிரிமினல் குற்றம் சாட்டி தூக்கிலிடுவது அதுவே முதல் முறை.  அதன்பின்னர் பாகிஸ்தானின் மீது ஜியாவின் பிடி இறுகியது.

தனக்கு முன் ஆட்சியைப் பிடித்த ராணுவ தளபதிகளுக்கு நேர்ந்த கதி தனக்கு நிகழாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார் ஜியா. இதற்காக நாட்டின் வெளியிலும் உள்ளேயும் பல காரியங்களைச் செய்தார். வெளியே நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு அடகு வைத்தார், உள்நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டார். இவ்விரு விஷயங்கள் தான் இன்றளவும் பாகிஸ்தானின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருகின்றன.

1950களிலிருந்தே பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவு நாடாக இருந்து வந்தது.  அதற்கு பிரதிபலனாக ஆயுத உதவியும் நிதி உதவியும் பெற்று வந்தது.  ஆனால் 1978ல் சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்த பின்னர் பாகிஸ்தானுக்கு மவுசு கூடிப்போனது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு ஆப்பு வைக்க முஜாஹுதீன் போராளிகளை ஏவிவிட்டது அமெரிக்கா. இதில் அமெரிக்காவுக்கும் முஜாஹூதீனுக்கு இடையே தரகர் வேலை செய்தது பாகிஸ்தான். இதனால் ஆப்கன் முஜாஹூதீனுக்கு பாகிஸ்தானில் பயிற்சி தளங்கள் அமைத்து போர் பயற்சி வழங்கியது பாகிஸ்தானிய இராணுவம். முஜாஹூதீனுக்கு போகும் பணத்தையும் ஆயுதங்களையும் பெருமளவில் தனது பயன்பாட்டுக்கும் எடுத்துக் கொண்டது.  அமெரிக்க பணவெள்ளம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் கையை பலப்படுத்திவிட்டது. பாகிஸ்தான் சமுதாயத்தில் ராணுவம் எல்லா அம்சங்களிலும் தன் பிடியை இறுக்கியது.   பாகிஸ்தானின் மிகப்பெரிய நில உரிமையாளர்களுள் ராணுவம் ஒன்றானதுடன் பல தொழில்களிலும் ஈடுபட்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரும் புள்ளியாகவும் வளர்ந்துவிட்டது. இராணுவம் இல்லையென்றால் நாடே இல்லையென்ற நிலை உருவானது.

இராணுவத்தின் பிடி இறுகிக் கொண்டிருக்கும் போதே மக்களின் கவனத்தை திசை திருப்ப மதவாதத்தைத் தூண்டி விட்டார் ஜியா. அதுவரை பொதுச்சட்டம் வழக்கில் இருந்த பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷாரியா சட்டத்தை புகுத்தினார். தன்னை ஒரு இஸ்லாமிய ஆட்சியாளராகக் காட்டிக் கொள்வதற்காகவும் அரசியல் எதிரிகளை ஒடுக்கவதற்காகவும் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைக் கொண்டு வந்தார். ஹுடூட் சட்டங்கள் (Hudood Ordnances) என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் பெண்களுக்கும், பிற மதத்தினருக்கும் முஸ்லிம்களுள் அஹ்மாதியாக்கள் போன்ற சிறுபான்மையினருக்கும் பல உரிமைகளைப் பறித்தன.  ஜியா பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவின் கையிலும், உள்நாட்டுக் கொள்கை மதவாதிகளின் பிடியிலும் சிக்கிக் கொண்டன. தனது பதவியைத் தக்க வைப்பதிலேயே குறியாக இருந்த ஜியா இதனால் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்து விளையும் என்பது பற்றி  கவலைப்படவில்லை.  ஆனால் எவ்வளவு தான் கெட்டியாக நாற்காலியைப் பிடித்துத் தொங்கினாலும் ஒரு நாள் பதவியிலிருந்து இறங்கத் தானே வேண்டும்.  ஜியாவின் பதவி ஆசையே அவருக்கு எமனாக அமைந்தது. 1988ம் ஆண்டு அவரது விரோதிகளோ அல்லது போட்டியாளர்களோ அவர் சென்ற விமானத்தில் நாச வேலை செய்து அதனை விபத்துக்குள்ளாக்கினர். அந்த விபத்தில் ஜியா மரணமடைந்தார்.

அவர் இறந்த பின்னர் வழக்கம் போல பாகிஸ்தான் கொஞ்ச நாள் மக்களாட்சி, கொஞ்ச நாள் ராணுவ ஆட்சி என்று அல்லாடிக் கொண்டிருக்கிறது.  வெளியே அமெரிக்கா உள்ளே மதவாதம் என்று இருமுனைகளிலும் பாகிஸ்தான் நாட்டை அழிவு சக்திகள் அரித்துத் தின்று வருகின்றன. பாகிஸ்தான் ஒரு நாள் அழியுமெனில் அதற்கு வித்திட்ட பெருமை ஜியா உல் ஹக்கையே சேரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

லஞ்சக் கலாசாரம்

23. ராபர்ட் கிளைவ்

 

ராபர்ட் க்ளைவ்

உலகத்தில் அத்தனைபேர் எண்ணமும் ஒரே போல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு விசயம் பிடித்தால் பலருக்கு அது பிடிக்காது. வில்லத்தனமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சாரருக்கு வில்லனாகப் படும் ஒரு ஆள் இன்னொரு சாரருக்கு நாயகனாகத் தென்படுவார்.  ஒரு நாட்டையே கொள்ளையடித்துக் கைப்பற்றியவரை,  அவரது நாட்டுக்காரர்கள் தேசத்தொண்டனாகப் பார்ப்பதும், கைப்பற்றப்பட்ட நாட்டுக்காரர்கள் பக்கா வில்லனாகப் பார்ப்பதும் சகஜம்.  இந்தியாவையே எடுத்துக் கொண்டால் இங்கு படையெடுத்து வந்து நமது வரலாற்றுப் புத்தகங்களில் கொள்ளைக்காரர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் நாம் படித்துக் கொண்டிருக்கும் பலர், அவரவர் நாடுகளில் தேசநாயகன்களாக போற்றப்படுகின்றனர்.  இவ்வரிசையில் நடுநாயகமாக வீற்றிருப்பவர் ராபர்ட் கிளைவ். இந்தியத் துணைக்கண்டம் ஆங்கிலேயர் வசமாவதற்கு முக்கிய காரணகர்த்தாவாகக் கருதப்படுபவர். அவரே இந்த வாரம் (நமக்கு) வில்லன்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பின்னால் முகலாயர் ஆட்சி வலுவிழக்கத் தோன்றியது.  முகலாய அரசின் சிற்றரசர்களும் பிராந்திய ஆளுனர்களும், ஆளுக்கொரு மாநிலத்தை பிரித்தெடுத்துக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்தலாயினர். முகலாயர்களின் இந்த வீழ்ச்சியால் இந்தியாவில் ஒரு அதிகார வெற்றிடச்சூழல் உருவாகியது.  இக்காலத்தில் தலைதூக்கிய மராத்தியப் பேரரசும் இதை நீக்க முயன்று தோற்றது. யார் அடுத்து இந்தியாவை ஆளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த இக்காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவை வணிக நோக்குடன் பார்த்துவந்தனர். வர்த்தகமும் லாபமுமே பல்வேறு ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகளின் குறிக்கோள்களாக இருந்து வந்தன.  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று முதலில் அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் முகலாயர்களுக்குப் பின்னால் இந்தியாவில் பலமான ஒரு  அரசு அமையாதது ஆட்சியைக் கைப்பற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட பேரரசை அமைப்பது அவர்களது குறிக்கோளாக இல்லை, அதிகாரத்தால் அதிகமாக சம்பாதிப்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசிய, டானிய என பல கிழக்கிந்தியக் கம்பனிகள் அப்போது இந்தியாவில் இருந்தாலும், இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை வளைத்துப் போடும் ரேசில் ஜெயித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி தான். இதற்கு முதற் காரணம் ராபர்ட் கிளைவ்.

கிளைவ் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். இங்கிலாந்து நடுத்தர இளைஞர்கள் பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டுமென்றால் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து இந்தியாவில் சில காலம் பணிபுரிவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கப்படி கிளைவும் தனது பதினெட்டாவது வயதில் கம்பனியில் ஒரு எழுத்தராகச் சேர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார். அவர் இந்தியா வந்த காலத்தில், பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கும் தென்னிந்தியாவில் யார் தாதா ஆவதென்று பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. இந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் இரு நாடுகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு போர் மூளும்போதெல்லாம், அதைக் காரணம் காட்டி இந்தியாவிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிந்தியாவில் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை தான் பிரிட்டிஷாரின் தலைமையிடமாக இருந்தது.  கிளைவ் சென்னைக்கு வந்து எழுத்தராக வேலை பார்க்கத் தொடங்கி சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைத் தாக்கினர். பாண்டிச்சேரி ஆளுனர் டூப்ளே தலைமையிலான பிரெஞ்சுப் படை சென்னையைக் கைப்பற்றி கிளைவ் உட்பட பல கம்பனி ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டது.  சென்னையை மீட்க கம்பனிகாரர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே கிளைவ் தன் சக ஊழியர்களோடு சென்னையிலிருந்து தப்பினார்.  சாதாராண குமாஸ்தாவான இளைஞன் ஒருவன் தந்திரமாக பிரெஞ்சுப் பிடியிலிருந்து தப்பியது கம்பனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அவர்கள் கம்பனி படையில் அதிகாரியாக கிளைவை நியமித்தார்கள்.

ஆனால் வெகு சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்களோடு அமைதி உடன்பாடு கையெழுத்தானதால், கிளைவ் மீண்டும் பழைய எழுத்தர் வேலைக்கே போக நேரிட்டது. ஆனால் சென்னையிலிருந்து தப்பியபோது கிடைத்த சந்தோஷத்தை கிளைவ் மறக்கவே இல்லை. அவருக்கு எழுத்தர் வாழ்க்கை சலித்துப் போனது. பிரெஞ்சுக்காரர்களோடு நிகழ்ந்த அடுத்த கட்ட மோதலில் தானாக முன்வந்து படைகளில் மீண்டும் சேர்ந்தார்.  டூப்ளேவும், கம்பனியும் கர்னாடகப் பகுதியை (தற்கால ஆந்திரா, தமிழகம்)  யார் கட்டுப்படுத்துவது என்று பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர். கம்பனி முகமது வாலாஜாவையும்,  டூப்ளே சந்தா சாகிபையும் ஆதரித்தனர். 1751ல் சந்தா சாகிபின் பெரும்படையொன்று பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஆற்காட்டை முற்றுகையிட்ட போது, ஆற்காட்டுப் படைகளுக்குத் தலைமையேற்ற கிளைவ் திறமையாகச் செயல்பட்டு முற்றுகையைத் தோற்கடித்தார். இதனால் அவரது புகழ் கம்பனி வட்டாரங்களில் பரவத்தொடங்கியது.  சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்த கிளைவ், இம்முறை வங்காளத்துக்கு அனுப்பப்பட்டார்.

தென்னாட்டைப் போலவே வங்காளத்திலும் கடும் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கும் உள்ளூர் அரசியலில் கம்பனிக்காரர்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இது பிடிக்காத வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தாலா கம்பனித் தலைமையிடமான கல்கத்தா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். கல்கத்தாவை சிராஜ் உத்-தாலாவிடமிருந்து மீட்க ஒரு திறமையான ஆள் கம்பனிக்குத் தேவைப்பட்டது. ஆற்காடு முற்றுகையை திறம்பட சமாளித்த கிளைவின் தலைமையில் ஒரு சிறுபடையை  கல்கத்தாவுக்கு அனுப்பினர்.  நவாபின் பலமோ அளப்பரியது, படைபலமும் பணபலமும் பெரியது. கிளைவிடம் இருந்ததோ சிறு படை. நேரடியாக நவாபுடன் மோதினால் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த கிளைவ் அதிரடித் தாக்குதல் உத்திகளைக் கையாண்டார். விரைவில் கல்கத்தாவை நவாபிடமிருந்து மீட்டார். அடுத்து நவாபை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினார். நவாபின் ஆட்களுள் அவர் மீது அதிருப்தியடைந்த சிலர் நவாப் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வந்தனர். இந்த செய்தி கிளைவின் காதுகளை எட்டியவுடன் உடனடியாக சதிகாரர்களை சந்தித்தார்.  நவாபின் படைத்தளபதி மீர் ஜாஃபர் தான் இந்த சதிகாரர்களின் தலைவர்.  மீர் ஜாஃபரின் பதவி ஆசையைப் பயன்படுத்திக் கொண்ட கிளைவ், சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுத்தால் ஜாஃபரை அடுத்த நவாபாக்கி விடுவதாக ஆசைகாட்டி தன் கைக்குள் போட்டுக் கொண்டார்.

ஜாஃபருக்கும் கிளைவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் உமிச்சந்த் என்ற வங்காள வர்த்தகர்.  சதிகார கும்பலுக்கும் கம்பனிக்குமிடையே தூதராக செயல்பட்டு வந்தார். தனது சேவைகளுக்கு பதிலாக அதிக பணம் வேண்டுமென்று கிளைவை நச்சரித்து வந்தார். நவாபுக்கு துரோகமிழைக்க ஜாஃபரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த அதே சமயம் உமிச்சந்துக்கு ஒரு துரோகத்தைச் செய்தார் கிளைவ்.  சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுக்க உதவினால் மூன்று லடசம் பவுண்டுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கேற்றார் போல ஒரு போலிப் பத்திரத்தைத் தயார் செய்து உமிச்சந்திடம் காட்டினார். அதனை நம்பி ஏமாந்த உமிச்சந்தும் மீர் ஜாஃபர்-கிளைவிடையே தூது போய் வந்தார். ஜாஃபரைக் கைக்குள் போட்டுக் கொண்டவுடன் சிராஜ் உத்-தாலாவை சண்டைக்கு இழுத்தார்.  1757ல் வங்காளத்தில் பலாஷி என்ற இடத்தில் (ஆங்கிலத்தில் பிளாசி என்றானது) இரு தரப்பும் மோதிக்கொண்டன. பிளாசி சண்டை (Battle of Plassey) என்று தற்போது வரலாற்றாளர்களால் அறியப்படும் இந்த சண்டை தான் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்தது.  சிராஜ் உத்-தாலாவின் படைகள் கம்பனிப் படைகளை விட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகம். ஆனால் அவற்றில் ஒரு பகுதி மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டில் இருந்தது.  சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மீர் ஜாஃபாரின் படைப்பிரிவு போரிலிருந்து விலகிக் கொண்டது. ஜாஃபரின் துரோகம் தந்த அதிர்ச்சியிலிருந்து சிராஜ் உத்-தாலா மீள்வதற்குள் கிளைவின் படைகள் அவரது படைகளைத் தோற்கடித்துவிட்டன. சிராஜ் உத்-தாலா உயிர் பிழைக்க போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார். ஆனால் ஜாஃபரின் சக சதிகாரர்கள் அவரைக் கைதுசெய்து கொலை செய்துவிட்டனர்.  ஜாஃபர் வங்காளத்தின் புதிய நவாப் ஆனார், இந்தியாவில் பிரிட்டிஷ ஆதிக்க காலம் தொடங்கியது. (கிளைவ் ஆரம்பித்து வைத்த துரோக சூழ்ச்சி உத்திகளை சில ஆண்டுகளில் ஜாஃபர் மீதே பிரயோகித்தனர் பிரிடிஷ்காரர்கள் – அவரை நவாப் பதவியில் இருந்து தூக்கி விட்டு அவரது மருமகன் மீர் காசிமை நவாப் ஆக்கிவிட்டனர்.)

தன்னை நவாப் ஆக்கியதற்கு நன்றிக்கடனாக கிளைவுக்கு பணத்தை அள்ளி வீசினார் மீர் ஜாஃபர். கம்பனி கணக்கிலும், படை வீரர்கள் கணக்கிலும் எழுதியது போக லட்சக்கணக்கில் சொந்த செலவுக்காகவும் வங்காள அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார் கிளைவ்.  இப்படி உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து நேரடியாக கையூட்டு வாங்கும் பழக்கத்தைக் கிழக்கிந்திய கம்பனிக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை கிளைவையே சேரும். சம்பாதிக்க நினைத்ததை விட பல மடங்கு ஈட்டியபின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் மூன்றாவது முறையாக 1765ல் மீண்டும் இந்தியா திரும்பினார். இம்முறை சூழ்ச்சிகளில் ஈடுபடாமல் நேரடியாக முகலாயப் பேரரசரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தியாவின் பல பகுதிகளை கம்பனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதன் மூலம் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியாளராகிவிட்டது. அடுத்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் கம்பனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பின்னால் கிளைவ் கம்பனியின் நிருவாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த லஞ்சக் கலாசாரம் கம்பனியின் கீழ்மட்டம் வரை பரவியதால் அவரது சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்பனி பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்று  இங்கிலாந்து திரும்பிய கிளைவ் சில வருடங்களுக்குப் பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்தியாவில் செய்த காரியங்களால் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு கருத்தும்,  தீராத நோயினால் அவதிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்னொரு கருத்தும் நிலவுகின்றன. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லையென்றாலும்,  பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஆரம்பித்து வைத்த வேலையை, வாரன் ஹாஸ்டிங்க்ஸ், ஆர்தர் வெல்லஸ்லி,  தல்ஹாய்சி ஆகியோர் முடித்து வைத்தனர். இந்தியத் துணைக்கணடம் முழுவதும் அடுத்த நூற்றைம்பதாண்டுகளுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது.  இப்போது இந்தியர்களால் நாட்டைக் கொள்ளையடித்த வில்லனாகவும், பிரிட்டிஷ்காரர்களால் சிலைவைத்துப் போற்றப்படும் நாயகனாகவும் விளங்குகிறார் கிளைவ்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard