New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியர் காலம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தொல்காப்பியர் காலம்
Permalink  
 


http://swamiindology.blogspot.in/2012/09/2_10.html

தொல்காப்பியர் காலம் தவறு-1


tolkappian+katturai.jpg
 
 
ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் ஒரே ஆசிரியரே அவரை கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கி.மு.ஆயிரம் ஆண்டு என்றும் எழுதிக் குழம்புவதையும், மற்றோரைக் குழப்புவதையும் காணலாம். மற்றும் பலர் மொழி இயலின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 20,000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று பிதற்றுவதையும் பார்க்கலாம். தமிழின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், தொல்காப்பியன் காலம் எதுவானாலும் சரி—அவர் பாணிணிக்கு முந்தியவர் என்று சொன்னால் போதும் என்று வட மொழி வெறுப்பில் தவிப்பதையும் காணலாம்.
 
உலகமே வியக்கும் வண்ணம் முதல் இலக்கண நூலை எழுதிய பாணினியைக் குருவாகக் கொண்டே தொல்காப்பியர் நூலை எழுதினார் என்பதை இரு மொழியும் அறிந்தவர்கள் அறிவர். பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை போன்றோருக்கு இது புரியும். தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கருதுவோருக்கு இது விளங்கும். ஒல்காப் புகழ் தொல்காப்பியனுக்கும் இது தெரிந்தே உளது என்பதை கட்டுரையில் போகப் போகக் காண்பீர்கள்.
 
அதனால்தான் தொல்காப்பியரின் புகழைப் பாட மறந்த பாரதியும் கூட பாணினியின் புகழைப் பாட மறக்கவில்லை:
“ நம்பருந்திறலோடு ஒரு பாணினி
ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்” என்று பாடினான்.
 
வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்.
 
1610= தொல்காப்பிய சூத்திரங்கள் 1610
3999= மொத்த அடிகள் 5630
5630= சொல் வடிவங்கள் 5630
13708= தொடை விகற்பம் 13,708
பிரிவுகள் 3: எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள்
என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
 
பெரிய பெரிய புதிர்
 
தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று கூறினார்?
 
தொல்காப்பியர் சிவன், கணபதி போன்ற தெய்வங்களைக் குறிப்பிடாதது ஏன்?
 
வள்ளுவர், இளங்கோ போலவே அதிகாரம் என்ற சொல்லை நூலில் புகுத்தியது ஏன்?
 
வள்ளுவர் போலவே அறம், பொருள், இன்பம், (வீடு) (தர்ம அர்த்த காம (மோட்ச) என்ற வேத வழி முறையை வலியுறுத்துவது ஏன்?
 
பலராமனின் கொடியான பனைக் கொடியைக் குறிப்பிடுவது ஏன்?
 
தொல்காப்பியர் நான்மறை முற்றிய பிராமணன் அதங்கோட்டு ஆசார்யார் (ஆசான்) தலைமையில் நூலை நிறவேற்றியது ஏன்?
 
த்ருண தூமாக்கினி என்பதே இவருடைய ‘ஒரிஜினல்’ பெயர் என்றும் பாணினி ‘ஸ்டைலில்’ பாணினீயம் என்று பெயர் வைத்தது போலவே தொன்மையான காப்பியக் குடியில் வந்தவர் தொல்காப்பியர் என்றும் அதன் மூலம் நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் நச்சினார்க்கினியர் முதலியோர் கூறுவது ஏன்?
 
சங்க கால இலக்கியத்துக்குப் பின்னர் வந்த சொற்களை மூன்று அதிகாரங்களிலும் பயன்படுத்துவது ஏன்?
 
இதுவரை எந்த தமிழ் அறிஞரும் இந்த சொற் பிறப்பியல் விஷயத்தை அலசாமல் மறைத்தது ஏன்?
 
மொழியியலில் எல்லோரும் ஒத்துக் கொண்ட கொள்கைகளை தொல்.ஐ மதிப்பிடும்போது மட்டும் “அறிஞர்கள்” கண்டு கொள்ளாதது ஏன்?
 
தொல். ஆய்த எழுத்து  ( ஃ ) பற்றிப் பேசுவதால் முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வைக்க முடியாது என்று பல அறிஞர்கள் வாதிடுவது ஏன்?
ஏதேனும் சிறிது இசகு பிசகு வந்தால், இது எல்லாம் இடைச் செருகல் என்று சொல்லி சில “தமிழ் அறிஞர்கள்” தப்பிக்க முயல்வது ஏன்?
பொருள் அதிகாரம் பிற்காலச் சேர்க்கை என்று வெளி நாட்டு அறிஞர் பலரும் கூறுவது ஏன்?
 
இதற்கெல்லாம் விடை காண்போம். சுருக்கமான விடை:- தொல். உடைய காலம் நாலாவது அல்லது ஐந்தாவது நூற்றண்டுதான். ஆனால் அவர் கூறும் விதிகளோ அவருக்கு 1000 ஆண்டுக்கு முந்திய தமிழ் மொழியின் பழைய விதிகள்.
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விதிகளை அவர் தொகுத்தளித்தமைக்கு தமிழ் கூறு நல் உலகம் அவருக்கு என்றும் கடப்பாடு உடையதே.
 
தொல்காப்பியரை ஐந்தாம் நூற்றாண்டில் வைக்க அவருடைய சொற்களே சாட்சி. இதோ ஒவ்வொன்றாகப் படியுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 2


tamil+grammar+image.jpg
 
 
(முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்: லண்டன் சுவாமி)
 
1.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. இதை அடுத்து வந்த குறள், சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்தோ கடவுள் வாழ்த்தோ உண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் சிதறிக்கிடந்த பாடல்களை எல்லாம்-- வியாச மாமுனிவன் வேதத்தைத் தொகுத்தது போல ---பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியோர் தொகுத்தபோது அதில் கடவுள் வாழ்த்தை இணைத்தனர். தொல்காப்பியர் அதற்கு ஒரு நூற்றாண்டு முந்தியவராக இருக்கலாம்.
 
2.இந்த நூலை ஒட்டி வளர்ந்த சொற்களான சூத்திரம், காப்பியம், அதிகாரம் ஆகியன வட மொழிச் சொற்கள். சங்க இலக்கியத்தில் 27,000+ வரிகளில் காண முடியாதவை. புலவர் பெயரில் மட்டும் ‘காப்பிய’ உண்டு. ஏனெனில் அவர்கள் காப்பிய (உஷனஸ் மஹா கவியின் காவ்ய கோத்திரம்) கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்.
 
3.ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட பேரறிஞரைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பும் இல்லாதது ஏன்? இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் தமிழாக இருக்கிறதே! மொழி இயல் ரீதியில் இவர்களை மிகவும் முன் போட முடியாதே. மேலும் முதல், இடைச் சங்க புலவர் பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இருக்கின்றன. அவைகளின் நடையைப் பார்க்கையில் மூன்று தமிச் சங்கங்களும் 200  அல்லது 300 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.
 
(எனது ‘ 3 தமிழ் சங்கங்கள் உண்மையா கட்டுக் கதையா?’ Three Tamil Sangams: Myth and Reality என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க)
 
4. தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனார் பாட்டிலும் ஆதிரையாரின் சிறப்புப் பாயிரத்திலும் வடமொழி சொற்களும் (அவையம், உலகம்), பிற்காலக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் கூறும் நல் உலகம் வேங்கட மலைக்குள் சுருங்கி விட்டதை மாமுலனார் போன்ற புலவர்களும் வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாடுகளை ‘மொழி பெயர் தேசம்’ என்று குறிப்பிடுவர். ஆகையால் ஏறத் தாழ ஒரே காலத்தைப் பற்றி அல்லது மாமுலனாருக்குப் பிந்திய காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கிறது.
 
5. தொல்காப்பியர் 68 இடங்களில் பயன்படுத்தும் “என்மனார்” முதலிய சொற்கள் சங்கச் சொல்லடைவில் இல்லை என்பதோடு ‘ஆர்’ விகுதி பிற்கால விகுதியாகும். வினைச் சொற்கள் ஆன், ஆய், ஆர் என்று நெடிலில் முடிவது கலித்தொகை, பரிபாடலில் அதிகம் வரும். இவை பரிபாடல், கலித்தொகை காலத்தைச் சேர்ந்தவை. இந்த இரு நூல்கள் பற்றிய குறிப்பும் தொல். இல் உண்டு. இதற்கு முந்திய பரிபாடல், கலித்தொகை பற்றிய சான்றுகள் இழந்த நூற்பட்டியலிலும் இல்லை.
 
6. தொல். பயன்படுத்தும் இலக்கணம் ,வணிகன், காரணம் போன்ற வடமொழிச் சொற்கள் சங்க கால நூல்களில் இல்லை.
 
7. தொல்காப்பியர் காலப் பாண்டியனை வழுதி, மாறன், செழியன் என்று சொல்லாமல் பாண்டியன் என்று மட்டும் அழைப்பதையும் கருத்திற் கொள்க. அகம், புறம் முதலிய பாடல்களில் இச் சொல் உண்டு என்றாலும் அவைகளின் காலம் சங்க கால இறுதிக் கட்டமா என்பதை ஆராய வேண்டும்.
 
8.தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது.
 
9.பரைத்தமை: பரத்தையிற் பிரிவு என்பது தலைவனின் ஒழுக்கக் கேட்டிற்கு அடையாளம். சங்க நூல்கள் இவைகளை அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியாகப் பேசும். ஆனால் திருக்குறள் காலத்திலிருந்து இதைக் கண்டனப் பார்வையில் காண்கின்றனர். தொல்காப்பியர் இதை ஒரு பிரிவாக இலக்கணத்திற் சொல்ல மனமில்லாமல் ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அதாவது காலத்தின் தாக்கம். பிற்கால இறையனார் களவியல் இதை ஒரு சூத்திரமாக வைத்து நூல் செய்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக பலர் சந்தேகிக்கும் சிலப்பதிகாரத்தில் பரத்தையர் வாழும் வீதியை இளங்கோ அடிகள் 22 வரிகளில் வருணிக்கிறார்.
 
10.எதுகை:- குறளைப் போல, அதிகம் காணப்படுகிறது. ஆய்த எழுத்துப் பிரயோகமும் சங்க நூல்களை விட அதிகம்.
 
11.ஒட்டகம்: தொல்காப்பியர் ஒட்டகம், குதிரை முதலிய சொற்களைப் பயன்படுத்துவதும் இவரது காலத்தைக் காடுகிறது. சங்க காலத்தின் இறுதிகட்டத்தில் வந்த சிறுபாணாற்றுபடையிலும் அகம் 245லும் மட்டுமே ஒட்டகம் வருகிறது.
 
12.தொல்காப்பியர் 287 இடங்களில் தனக்கு முந்தி இருந்தவர்கள் கூறியது என்று பல விதிகளைக் கூறுகிறார். அவருக்கு முந்திய அத்தனை பேரின் நூல்களில் ஒரு சில கிடைத்திருந்தாலும் கூட, இந்தக் கட்டுரைக்குத் தேவையே எழுந்திராது. ஆக அவர் கூறுவது நாமறிந்த சங்க காலப் புலவர்கள் என்றே கருதவேண்டும்.
 
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
 
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம், பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.
 
சில சொற்கள் மீண்டும் வந்த போதும் திருப்பிக் கொடுத்தமைக்குக் காரணம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரே காலத்தில் இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை எனபதைக் காட்டவே.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3

 

Picture shows Kannaki’s cooking for Kovalan

தொல்காப்பியத்தின் துவக்க வரியே நெருடலாக இருக்கிறது. “எழுத்தெனப்படுவது” என்று செயப்பாட்டு (வினை) பொருளில் –Pseudo Passive voice–துவக்குகிறார். இதை பொருளதிகாரத்திலும் காண்கிறோம்.உலகத்தில் எந்த நூலும் இப்படி துவங்குவது இல்லை.

சொல்லப்/ பட்டன/ படும்/ பட்ட (3-564-1, 651-1; 3-63-22, 68-8, 253-2,). இது போல மணிமேகலை-24,30. திருக்குறளிலும் ‘கொல்லப்படு’ என்ற சொல் வருகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் காலத்தைக் காட்டுவதோடு மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை என்பதையும் காட்டும். புரிதல், புரிந்தோள் என்பன தொல்காப்பியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலையில் மட்டூமே வரும்.

ஆகும்: இந்தச் சொல் மூன்று அதிக்கரங்களிலும் நிறைய இடங்களில் வரும். மேலும் சம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஆசிரியர் மூன்று அதிகரங்களையும் எழுதாவிடில் இப்படி இருக்கமுடியாது. புறநானூற்றில் மூன்றே இடங்களில் மட்டுமே வருகிறது.

எண்ணுங்காலும்: இது தொல். இல் 2-47-1 ல் உள்ளது. இதைத் தவிர திணைமாலை ஐம்பதில் (150-2) மட்டுமே வருகிறது. இப்படிக் ‘கால்’ விகுதியுடன் வருவது சங்க காலத்தில் மிகமிகக் குறைவு. கலி., குறள் போன்ற நூல்களில்தான் அதிகம்.

எப்பொருள்: இது சொல் அதிகாரத்துக்குப் பின்னர் குறள் முதலான பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளது. மேலும் ‘எப்’ துவக்கத்துடன் சங்க இலக்கியத்தில் சொற்களே இல்லை.

என்ப: தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த இச்சொல் மூன்று அதிகாரங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் ஒரே ஆசிரியர், ஒரே காலத்தில் எழுதியதே என்பதைக் காட்டும்.

என்மனார்: முன்னர் குறிப்பிட்டது போல 60–க்கும் மேலான இடத்தில் வரும் இச்சொல்லும் 3 அதிகாரங்களிலும் காணப்படுகிறது. இது தவிர கலித்தொகை, குறுந்தொகையில் இரண்டே இடங்களில்தான் வருகிறது.

என்றா: இந்தச் சொல்லும் 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை.

ஏனை, ஏனவை: ஏனவை என்ற சொல்லை 1, 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஏனை, என்ற சொல் குறிஞ்சிப்பாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வரும். தொல். இல் எல்லா அதிகாரங்களிலும் காணப்படுகிறது.

எண்கள்: ஐந்து, எட்டு, ஐம்பது, ஐயீர் ஆயிரம் போன்ற எண்களை 3 அதிகாரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார். உயிர் எழுத்துக்களில் துவங்கும் சொற்களில் இருந்து மட்டுமே எடுத்துகாட்டுகளைக் கொடுத்தேன். ஏணையவற்றைக் கொடுத்தால் கட்டுரை நீளும்.

எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது— குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.

‘இன்’– னில் முடியும் சொற்கள் ஒன்றின், நுவலின், நீங்கின், மறுப்பின், மறைப்பின் முதலியன தொல். தவிர குறள், சிலம்பு முதலிய சங்கம் மருவிய கால நூல்களிலேயே காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு

Picture shows the greatest of the Choza Kings: Karikalan

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பகுதி 5–தொல்காப்பியர் காலம் தவறு

 

Picture shows Yaalpaanan (Musician with Yaaz)

தொல்காப்பியர் பயன்படுத்திய மேலும் பல சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை சங்க இலக்கிய நூல்களைவிட பிற்கால நூல்களிலேயே அதிகம் வருகின்றன. சங்க இலக்கியச் சொல்லடைவு, தொல்காப்பியச் சொல்லடைவு, பதினெண்கீxக்கணக்கு நூல்களின் சொல்லடைவு ஆகியவற்றைக் கொண்டு ஒப்பிட்டால் நான் சொல்லுவது நன்கு விளங்கும் ஒரு சில சொற்களை வைத்து மட்டும் இப்படி முடிவு செய்யவில்லை. நூற்றுக் கணக்கான சொற்களை ஆராய்ந்தே இந்த முடிவுக்கு வந்தேன்.

முதல் நாலு பகுதிகளையும் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்.

அரில்தப (குற்றமற) : அரிஷ்ட என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இதைப் பாயிரத்திலும், நூலிலும் காணலாம்

உயிர்த்தல்: இச் சொல் தொல்.(1-33, 3-104-3, 14) தவிர, கலி.யில் (54-11) மட்டுமே வரும்.

என்பதனால்: இது தொல். (3-145-23), கலி.(39-5) மற்றும் நாலடியார், ஐந்திணை எழுபது போன்ற பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளன.

‘வை’ யில் முடியும் சொற்கள்: அனையவை, என்றவை, மறைந்தவை போன்ற சொற்கள் பிற்கால நூல்களில் மட்டுமே அதிகம் உள்ளன.

நூறாயிரம், நுனி, நுவலுக்காலை,புணருங்காலை,நீட்டம், நீட்டல் ஆகியனவும் பிற்கால வழக்கில் அதிகம்.

மை—இல் முடியும் சொற்கள்: இவ்வகைச் சொற்கள் குறளில் பரவலாக உள்ளன. புறநானூற்றில் ஓரிடத்தை தவிர தொல். (3-138-1) மற்றும் பிற்கால வழக்கில் அதிகம்.

முதலில், முடிவினது, முடிவு, முடிபு ஆகியனவும் இப்படிபட்டவை.

மானம்: இது தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளது. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

மறுதலை, விழைவு, கொற்றவை நிலை, பல்லவை, பல்முறை, பல்வகை, புரிதல், புல்லா, புல்லாது, பெருநெறி, பாங்கன், மடிமை, மடன்மா, வரைதல், கொள்ப ஆகிய சொற்களையும் காண்க.

 

குறிலும் நெடிலும்

சங்க இலக்கியத்தில் குறில் ஒலியுடன் வரும் சொற்கள் நமது காலத்தில் நெடில் ஒலியுடன் வழக்கத்தில் உள்ளன. பழங்காலத்தில் வந்தனன், வந்தனர், வந்தனள் என்றால் இப்பொழுது நாம் வந்தான், வந்தார்கள், வந்தாள் என்று நீட்டு முழங்குவோம். அதாவது ஆன், ஆர், ஆள் விகுதி பிற்காலத்தில் அதிகம். இதை தொல். இல் நிறைய காணலாம்.

விழிப்ப, பொச்சாப்பு, பெருமிதம், மூவகை இவைகளும் தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளன. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

சிவண: இந்த ஒலி தொல்காப்பியரின் முத்திரை. சிவணல், சிவணிய, சிவணி, சிவணாது, சிவணும் போன்று 20க்கும் மேலாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் 27000 வரிகளில் மூன்று இடத்தில் மட்டுமே காணலாம். ஆக மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரு கைப்பட எழுதியவை என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

இதே போல காரணம், கருமம், வெறுப்பு, கல்வி போன்ற சொல் வழக்குகளும் குறளிலும் பிற்பட்ட நூல்களில்ம் மட்டுமே உள்ளதால் தொல்காப்பியரையும் அவர்களோடு வைத்தே காணவேண்டும்.

தொல். கூறும் ஔ, ஃ முதலியன சங்க இலக்கியத்திலும் பழைய கல்வெட்டிலும் இல்லை அல்லது குறைவு. இதுவும் அவரது காலத்தை கணக்கிட உதவும். தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?

சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இடைச்செருகல்கள் செய்துள்ளதாகவும் அவற்றை நீக்கி, புதிய உரையெழுத அறிஞர்கள் முன்வரவேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், நான்கு வகைச் சாதியமைப்பு, மனு வர்ணாஸ்ரம முறைகள் தொல்காப்பிய உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன என்று சிலர் சொல்வது சரியா?

இவற்றைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் புகுத்தியதாகச் சொன்னால் அது அறியாமை; தொல்காப்பியத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டது என்றால் அது உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை; இதற்கும் அப்பால் தொல்காப்பியன் என்ற பிராம்மணன் தங்களுடைய நால் வர்ண முறையை தமிழர்களிடத்தில் புகுத்த முயற்சிசெய்து தோல்வியுற்றதாக ’தமிழக வரலாற்றை’ முதன்முதலில் எழுதிய கனகசபைப் பிள்ளை கூறியிருக்கிறார். இம்மூன்று கருத்துகளுமே விஷமத்தனமான, வேறோர் உள்நோக்கத்துடன் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்பாகும்.

இம்மூன்று கருத்துகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது ஓர் அபத்தம்; அதனால் இதை விடுத்துவிடுவோம்.

தொல்காப்பியத்தில் இவை இடைச்செருகல்கள் என்போர் மரபியல் என்ற அதிகாரமே இடைச்செருகல்தான் என்கிறார்கள். ஏனெனில், மரபியலில்தான் அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற வர்ண அமைப்பு வரிசை இடம்பெறுகிறது. அதில் வைசியன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற நூற்பா “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்பதாகும். மரபியல் முழுவதுமே இடைச்செருகல் என்று சொல்பவர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்ற திணையடிப்படையிலான சமூக அமைப்புதான் தமிழர்களுக்குரியது என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதை ஒப்பிட்டு மரபியல் முழுவதுமே செயற்கையான ஒரு பிரிவினையைக் குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வகைப்பாடு மட்டுமே தமிழகத்தில் நிலவிற்றா? வேறு வகைப்பாடுகள் ஏதும் இருந்ததில்லையா? தன்மை அடிப்படையில் வெவ்வேறு விதமாக மக்கள் தொகுதியை வகைப்படுத்த முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைக்கும் வருவாய்த் துறையினர் ஊர்களை வகைப்படுத்துவது ஓர் அணுகுமுறை; அதாவது ஒரு வருவாய்க் கிராமம் என்பது விளை நிலங்கள் சார்ந்து ஆயக்கட்டை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ள வகைப்பாடாகும். உள்ளாட்சித் துறை வகைப்பாடு என்பது வேறு அணுகுமுறை; காவல்துறை தனது சரகங்களைப் பிரித்து வகைப்படுத்துவது என்பது வேறோர் அணுகுமுறை. இவற்றுக்கெல்லாம் வெவ்வேறு அளவுகோல்கள் உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களையே எடுத்துக்கொள்வோம். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் கொண்டது; ஆனால், திருக்குறளோ அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைச் சொல்கிறது. இதற்குக் காரணம் அவற்றின் பாடுபொருள் வேறுபாடுகள். இத்தகைய பாடுபொருள் வேறுபாட்டையொட்டியே வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பாடுபொருளுக்காகவே வகைப்பாடேயன்றி வகைப்பாட்டுக்காகப் பாடுபொருள் அல்ல. தொல்காப்பிய அகத்திணையியல் புறத்திணையியல் ஆகியவற்றில் காதலும் வீரமும் சொல்லப்படுகின்றன. மற்ற பல விவரங்களுக்கு விளக்கமளிக்க வேறு வகை அளவுகோல்கள் தேவை; அதன் அடிப்படையில் அவை வேறுவிதத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, போர் நடக்கும்போது அரசர்களுக்கிடையே ஒரு தூதுவன் சமாதானம் பேசச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அவனை அகத்திணையியலிலோ அல்லது புறத்திணையியலிலோ சொல்லப்படும் வகைப்பாட்டுக்குள் அடக்கி, அவனை ஆயனாகவோ, குறவனாகவோ, களமனாகவோ, நுளையனாகவோ, எயினனாகவோ சித்திரித்துவிட முடியுமா? அவனை ஒரு தூதுவனாகத்தான் சித்திரிக்க வேண்டும். ஏன், ஒரு அமைச்சரைப் பாடுபொருளாகக் கொண்டு விவரிக்க நேர்கையில் அகத்திணையியலோ அல்லது புறத்திணையியலோ நமக்குப் பயன்படாது. அதை விளங்கிக் கொள்ள நமக்கு மரபியல்தான் தேவை.

அகநானூற்றில் ஒரு பாடலைப் பாருங்கள்:

இவனே நெடுங்கொடி நுடங்கும் நியமமூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
யானே மீனெறி பரதவர் மகளே

- இந்த வர்ணனையில் இடம் பெருகிற தலைவனை அகத்திணையியல் புறத்திணையியல் வகைப்பாடுகளுக்குள் அடக்கி திணை சார்ந்த மக்கள் தொகுப்பின் பெயரைக்கொண்டு மட்டும் அடையாளங்காண இயலுமா? மரபியலில் தேரைப் பயன்படுத்துகிற உரிமை அரசர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாகச் சொல்லப்பட்டிருப்பதனால் இத்தலைவனை அரசன் என நாம் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு; அதேநேரம் நியமமூதூர் என்று இருப்பதனால் அத்தலைவன் ஒரு வைசியனாகவும் இருக்கமுடியும். மரபியலிலேயே தேர், ‘மன்பெருமரபின்’ ஏனோர்க்குமுரிய என்று சொல்லப்பட்டுள்ளதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். எனவே, ஒரு வைசியனும் தேரில் செல்லமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு மரபியலே பயன்படும். இப்படியான பயன்பாடுடைய மரபியலை இடைச்செருகல் என்று கூறுவது அபத்தமான ஒரு கருத்தாகும்.

அகத்திணையியலில்

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

புறத்திணையியலில்

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

கற்பியலில்

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே
’ என்றும்

பொருளியலில்

பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இளம்பூரணர் தொடங்கி பழைய உரையாசிரியர்கள் அனைவரும் சரியான முறையில் விளக்கமளித்துள்ளனர். அவர்களெல்லாம் நம் காலத்திற்குச் சற்றொப்ப 700 ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்தவர்கள். இப்போது இருப்பதைவிட தமிழ்ச் சமூகம் அப்போது பழைய இலக்கியங்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளது. எனவே நாம் தற்கால சமூக நிலைமையைக் கருத்தில் கொண்டு இவற்றை இடைச்செருகல் என்பது அவ்வுரையாசிரியர்களின் புலமையைக் கேள்விக்குள்ளாக்குகிற செயலாகும்.

மரபியல் இடைச்செருகல் என்றால் இவற்றுக்கெல்லாம் விளக்கமளிக்க முடியாமல் போய்விடும். எனவேதான் கனகசபைப் பிள்ளை, பின்வருமாறு கூறுகிறார்: “நான் விவரித்துக்கொண்டிருக்கும் காலத்திற்கு, குறைந்தது ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்குள் குடியேறத்தொடங்கிய பார்ப்பனர்கள், தங்களின் சாதி முறையை தமிழர்களின் தலையில் கட்ட முற்பட்டனர். தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பார்ப்பனரால் கி. மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தற்போதும் வழக்கில் உள்ள முற்பட்ட தமிழ் இலக்கண நூலில், அறிவர் அல்லது ‘துறவி’கள் பற்றி அடிக்கடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து அவர் விவரிக்கின்ற அத்தியாயத்தில், நூலாசிரியர் அறிவர் பற்றி எதுவும் குறிப்பிடுவதை விட்டுவிட்டு, புனித நூல் (பூணூல்) அணிந்த பார்ப்பனரை முதல் சாதியாக வைக்கிறார். வீரர்கள் என்னாது, ஏதோ சேர, சோழ பாண்டியன் என்று மூன்றே அரசர்கள் ஒரு சாதியாகிவிட முடியும் என்பது போல, மிகுந்த எச்சரிக்கையுடன், அரசர்கள் எனப் புனித சாதியாகச் சொல்கிறார்; வணிகத்தைக் கொண்டு வாழ்ந்த அனைவரையும் மூன்றாவது சாதியாகச் சொல்கிறார். அரசர்களோ அல்லது வணிகர்களோ புனித நூல் அணிந்திருந்தார்களா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளர்களை மட்டும் தனிமைப்படுத்தி, நிலத்தை உழுவது தவிர அவர்களுக்கு ஒரு தொழிலுமில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களை சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களை சூத்திரர்களாகக் கருதவேண்டும் என்றும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கெளரவிக்கவேண்டும் என்றும் மறைமுகமாக, உட்கிடக்கையாகச் சுட்டுகிறார். இதுதான் தங்களின் சாதி அமைப்புக்குள் தமிழர்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களது முயற்சி வெற்றிபெற சாத்தியமில்லாது போயிற்று. மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ, இன்றைக்கு வரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்.” (The Tamils, Eighteen Hundred Years Ago, V.Kanakasabhai, Pub: The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd. 2nd edn. Sep., 1956, p.116.)

தொல்காப்பியர் ஒரு காவ்ய கோத்ர பிராம்மணர் என்று சொல்லக்கூடிய ஒரு மரபு உண்டு. காப்பியத் தொல்குடி [வரந்தரு காதை, வஞ்சிக் காண்டம் 82] என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியர் ஒரு பிராம்மணர் என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் தமிழ் மக்களிடத்தில் “பார்ப்பான் தமிழும் வேளாளன் க்ரந்தமும் விழ விழலே” [ரெவரண்ட் ஜெ.பி. ராட்லர் தமிழ் இங்லிஷ் அகராதி] என்றொரு பழமொழி வழங்கியுள்ளது. இதன் பொருளாக ராட்லர் குறிப்பிடுவது ”தொல்காப்பியன் என்ற பிராம்மணன் செய்த தமிழிலக்கணமும் அமரசிம்மன் என்ற சூத்திரன் செய்த நாமலிங்கானுசாசனம் என்கிற சம்ஸ்கிருத நிகண்டும் இல்லையெனில் தமிழ் மொழியும் வட மொழியுமே விழலுக்கிறைத்த நீராகப் போயிருக்கும்” என்பதாகும். அதே நேரத்தில் தொல்காப்பியர் சமணராக இருக்கலாம் என்பது வையாபுரிப் பிளளை போன்ற அறிஞர்களின் கருத்து. தொல்காப்பியர் சமணரோ பிராம்மணரோ, அவர் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கை முறைகளையும் வரையறைகளையும் இலக்கணமாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

தொல்காப்பியர் காலத்தில் இத்தகைய அமைப்பு இருந்ததற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லாதைப்போல சில ‘அறிஞர்கள்’ திரித்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் மரபியல் இடைச்செருகல் என்று கொண்டு அகத்திணையியலும் புறத்திணையியலும்தான் தமிழர் வாழ்வெனில், சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகச் சித்திரம் இவற்றுடன் முரண்படுவதாயிருக்கும்.

மதுரைக் காஞ்சியில்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்
’ [489-92] என்றும்,  அதேபோல,

நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீ இயுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
’ [497-499] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடலிலுள்ள அறங்கூறு அவைய உறுப்பினர்களும் காவிதி மாக்களும் அரசமைப்பு என்ற நிறுவனத்தையொட்டி உருவாகி வளர்ந்த வர்க்கத்தவர்கள். இவர்கள் திணை மக்களிடத்திலிருந்தே வந்தவர்கள்தான் என்றாலும் அவர்களின் திணைப் பெயரைத்தான் சொல்லவேண்டுமெனில் அவர்களின் பதவியை நாம் புரிந்துகொள்ள இயலாமல் போகும். எனவே அரசதிகாரம் சார்ந்து நாம் அவர்களை அறங்கூறு அவையத்தார் என்றும் காவிதி மாக்கள் என்றும்தான் அடையாளம் காட்ட முடியும். இதுபோன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள மரபியல்தான் நமக்கு உதவுகிறது.

புறநானூறு குறிப்பிடும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்பவர்கள் முல்லைத் திணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கொண்டு அவர்களை முல்லைக்குரியவர்களாக மட்டுமே கொண்டால், மருத நிலத்தில் நாம் காண்கிற பாணர்களை எப்படி விளக்கமுடியும். இவர்கள் தலை மககளுக்குப் பணி மக்களாக பணிபுரிந்த நிலையையும் நாம் பார்க்கமுடிகிறது. அப்படியானால் இந்த ஏற்றத்தாழ்வு தமிழ்ச் சமூக வளர்நிலையையொட்டி உருவாயிற்றா அல்லது வர்ணாஸ்ரம அமைப்பால் புகுத்தப்பட்டதா? புகுத்தப்பட்டது என்று சொன்னால், தமிழ்ச் சமூக அமைப்பே வர்ணாஸ்ரம அமைப்பால் உருவாயிற்று என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். சங்க இலக்கியத் தலைமக்களெல்லாம் வர்ணாஸ்ரமத்தினால் உருவானவர்கள் என்றாகிவிடும்.

தொல்காப்பிய அகத்திணையியலில் அன்பின் ஐந்திணை என்பது தலைமக்களுக்கு மட்டுமே உரியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. அடியோர், வினைவலர் ஆகிய பிரிவினர்களின் காதலை கைக்கிளை, பெருந்திணையில்தான் பாட வேண்டும் என்று தொல்காப்பியர் தெளிவாகக் கூறியுள்ளார். “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்.” மௌரியர்கள் ஆட்சியில் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை தாச, ப்ருத்ய என்ற இரு வகை அடிமைகளாகப் பணியமர்த்தினர் என்று தெரியவருகிறது. தாசர் என்பவர்கள் முழுமையான அடிமைகள். ப்ருத்யர் என்போர் நிபுணத்துவம் மிக்க பணியாளர்களாவர். அவர்களும் அடிமைகள் தானெனினும் அடிமைகளைவிடச் சற்றே மேம்பட்டவர்கள். அடியோர், வினைவலர் என்ற தொல்காப்பிய வகைப்பாடும் அத்தகையதே. சங்க கால அரசர்களிடையே போர்களே நடந்ததில்லை; போர்களில் யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை; அவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டோர் அடியோர்களாகவோ வினை வலர்களாகவோ பணியமர்த்தப்படவில்லை; அடியோர்களும் வினைவலர்களும் உருவாகவும் போர்கள் நிகழவும் காரணம் வர்ணாஸ்ரமமே என்று கொண்டால்தான் தொல்காப்பிய நூற்பாவுக்கு வேறுவிதமாக விளக்கம் கூறமுடியும்.

சோழர்கள் சூரிய குலம் என்றும் பாண்டியர்களும் சேரர்களும் சந்திர குலம் என்றும் உரிமை கொண்டாடும் மரபு மிகப் பழமையானது. சூரிய குலத்தவர்களும் சந்திர குலத்தவர்களும்தாம் க்ஷத்ரியர்கள். சந்திர குலத்தின் கிளைக் குலமாகிய யது குலத்தவர்களே வேளிர்கள். “நீயே வடபான் முனிவன் தடவினுட் டோன்றி” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல் [201] இதற்குச் சான்று. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் மாண்ட வீரர்கள் தன் முன்னோரென்பதால் பெருஞ்சோற்றுப் பிண்டம் படைத்தான் என்பது புறநானூறு குறிப்பிடுகிற ஒரு செய்தியாகும். பாண்டவர் கௌரவர்களோடு தன்னை இணைத்து இனம் காட்டிக்கொள்வதற்காக ஆரிய பிராம்மணர் சொல்லிக்கொடுத்த பொய்யை ஏற்றுப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இச்சடங்கைச் செய்தான் என்று சொல்வது நம்மை நாமே இகழ்ந்து கொள்ளும் முயற்சியாகும்.

இந்திய நாடு முழுவதும் அரச குலத்தவரிடையே மணவுறவு இருந்துள்ளது. இது ஒரு யதார்த்தம். மொழியியல் அடிப்படையில் வடமொழியை இந்தோ ஐரோப்பிய மொழியென்றும் தமிழை திராவிட மொழியென்றும் சொல்வதனாலேயே இவ்விரு மொழி பேசிய மக்கள் தொகுதிக்கும் பரஸ்பர உறவு இருந்ததில்லை; ஒன்று மற்றதன் மீது தனது பண்பாட்டைத் திணித்தது என்று கொள்வதெல்லாம் மிகப்பெரிய அபத்தம் என்பதை ரொமிலா தாப்பர் போன்ற  வரலாற்றாசிரியர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். உதாரணமாக, நாம் மேலே சொன்ன ‘காவிதி’ என்ற சொல்லாட்சி இலங்கைக் கல்வெட்டுகளில் கபதி (அ) கபிதி என்றும், பாலி மொழியில் கஹபதி என்றும், வடமொழியில் கிரகபதி என்றும் வழங்கி வந்துள்ளது. இப்படிப் பல சொற்கள் இந்திய அளவிலான பின்புலத்தைக் கொண்டவை. இவை குறித்து மொழியியல் அறிஞர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.

சங்கப் புலவரான கபிலர் ஓர் அந்தணர். அவர் பாரிவேள் என்ற சிற்றரசனைப் பாடி பரிசில் பெற்றுள்ளார். ஆனால் எந்த வேளிரும் வேந்தரும் பிறரைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்றதாக ஒரு சான்றுமில்லை. இது தொல்காப்பியர் கூறும் மரபுடன் எங்ஙனம் பொருந்துகிறது என்று பார்ப்போம்.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்

- என்ற தொல்காப்பிய வரிகளுக்கு இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள், அறுதொழில் செய்யும் அந்தணர்கள் என்றும் ஐந்தொழில் புரியும் அரசர்கள் என்றும் உரை கூறுகின்றனர். திருவள்ளுவரும்கூட அந்தணர்களை அறுதொழிலோர் என்கிறார். அறுதொழில்களாவன, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன. அரசர்களின் ஐந்தொழில்களாவன ‘ஏற்றல்’ என்பது தவிர்த்த மேற்படி ஐந்துமாகும். இது மேற்குறித்த தொல்காப்பிய மரபுடன் பொருந்தியிருப்பதை நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களுடைய கோட்பாடுகளுக்கு இசைவாக இல்லாதவற்றை இடைச்செருகல் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவினருமே தங்களுக்கு உடன்பாடாக இல்லாதவற்றை நீக்கவேண்டும் என்று கூறத் தொடங்கினால் ஒட்டுமொத்தமுமே இடைச்செருகல் என்றாகிவிடும்.

முக்கியமான ஒரு செய்தி. தொல்காப்பியர் தனது இலக்கண நூலை யாருடைய அங்கீகரத்திற்காகச் சமர்ப்பித்தார் என்பது பனம்பரனாரின் பாயிரத்தில் பதிவாகியுள்ளது. ஆசான் மரபினராகிய அதங்கோட்டு ஆசான் என்பவர்தான் தொல்காப்பியரைக் கேள்விகள்மூலம் சோதித்து இறுதியில் ஒப்புதல் வழங்கிய பெருமகனாவார். குமரி மாவட்ட அதங்கோட்டில் உள்ள சான்றோர் குலத்தவருள் ஒரு பிரிவினர் தங்களின் முன்னோரான அதங்கோட்டு ஆசானுக்கு இப்போதும் ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர். அவர்கள் மண்ணின் மரபுகளை அறியாதவர்கள் என்றோ, வர்ணாஸ்ரம மாயையில் சிக்கி இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றோ சொல்வது தமிழக வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிற ஒரு செயலாகும்.

கடைசியாக ஒரு வினா. ரசிகமணி டி.கே.சி. கம்ப ராமாயணத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பாடல்களை, அவற்றில் கம்பருடைய முத்திரை இல்லை என்று சொல்லி நீக்கிப் பதிப்பிக்க முயன்றபோது திராவிட இயக்கப் பகுத்தறிவு முகாமைச் சேர்ந்த பாவேந்தர் பாரதிதாசன் ”கம்பனில் கைவைக்க இந்தக் கொம்பன் யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதுபோலத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும், அதை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களின் தகுதி என்ன? தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழாய்வில் என்னவும் செய்ய நினைப்பது ஓர் அராஜகம்.

http://solvanam.com/?p=5574



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

நன்றி - Gopinath R

நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் நற்றிணையில் இருந்து ஒரு பாடல் 367வது பாடல் காகம் கரைந்தால் விருந்தாளி வருவார் என்கிற நம்பிக்கையும் காகத்திற்கு சோறு வைப்பது முன்னோருக்கு வைத்ததாக கருதப்படும் என்கிற நம்பிக்கையும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்களிடம் நிலவி வந்தது அதற்கு எப்படியும் 2000 வயது இருக்கலாம் என்று அதே அர்த்தத்தில் இன்னொரு பாடல் இருக்கிறது குறுந்தொகையில் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எழுதியது.

"திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே."

திண்மையான தேரையுடைய நள்ளியின் கானகத்தில் மேய்க்கப்படும் பசுக்களின் பாலில் இருந்து எடுத்த நெய்யை சேரர்களின் தொண்டி என்னும் நகரத்தில் விளைந்த வெண்ணெல் அரிசி சோற்றுடன் கலந்து ஏழு பாத்திரத்தில் வைத்து படைத்தாலும் சிறியது தான் என் தோழியின் பருத்த தோள்கள் இளைக்குமாறு சென்ற தலைவர் மீண்டும் வருகிறார் என்று கரைந்த காக்கையே உனக்கான இந்த படையல்... இந்த பாடல் எழுதப்பட்டே குறைந்தது 1800 வருடங்கள் இருக்கும் நான் மீண்டும் மீண்டும் சொல்வது தான் நம் நம்பிக்கைகள், வழிபாடுகள், புராணங்கள், கற்பனைகள் எதுவும் திடீரென்று தோன்றியவை அல்ல காலம் காலமாக இந்த மண்ணில் முளைத்து கிளைத்தவையே..



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இன்னொரு இடம் ஒலி பற்றிய பகுதியில்

"சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே"



உந்திமுதலாத் தோன்றி உறழ்ந்தெழும் எழுத்துக்களுள் மந்திர

நூலோர் கொள்ளும் மாத்திரை மரபு வேறு உண்டு. அஃது
ஈண்டைக்கு வேண்டாமையான் செவிப்புலனாகப் பொருள்
உணர்த்தும் எழுத்துக்களுக்கே ஈண்டு அளபு கூறப்பட்ட
தென்கின்றது.

பொருள்:

சொல்லிய பள்ளி வளியின் எழுதரும் எல்லா எழுத்தும் =

மூவகையாய இடங்களினிடமாக நின்று ஓசைக் காற்றினான் எழும்
எனப்பெற்ற எல்லா எழுத்துக்களையும்
கிளந்து, பிறப்பொடு விடுவழி=

ஐவகை
உறுப்புக்களினிடமாகக் கிளந்து அவ்வவற்றின் பிறப்பியல்புகளோடு
செவிப்புலனாக வெளிப்படுத்துமிடத்து, 

அகத்தெழு வளியிசை உறழ்ச்சி
வாரத்து=

உந்தியினிடமாக அகத்தெழும் வளியிசை ஒன்றற் கொன்று
முரண்பட்டு வருதலை,

அரில்தபநாடி=

குற்றமற ஆராய்ந்து, 

அளபிற்கோடல்
அந்தணர் மறைத்தே = 

மாத்திரையான் அளவிட்டு மேற்கோடல்
நிறைமொழி மாந்தராகிய அந்தணரது மந்திரநூலின் கண்ணதாகும். 

அஃது
இவண் நுவலாது =

அம்மாத்திரையளவினை (இயற்றமிழ் எழுத்துக்களுக்கு
இலக்கணங் கூறும்) இந்நூலகத்துக்கூறாமல், 

எழுந்து புறத்திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே =

புறத்தே செவிப்புலனாக
எழுந்து தன் உருவந்தோன்ற இசைக்கும் எழுத்தோசைகளின்
அளவைகளையே யான் கூறியுள்ளேன்.

அதனை அந்தணர் மறைத்தே என்று கூறுகின்றார். வாக்குக்கு நான்கு நிலைகள் உள்ளன, 1 பரா 2 பச்யந்தி 3 மத்யமா 4 வைகரி. இந்த நான்காவதற்குத்தான் தான் இலக்கணம் வகுப்பதாகக் கூறுகின்றார்,வாக்கின் நான்கு நிலைகளை ரிக் வேதம் 
चुत्वारि वाक्परिमिता पदानि तानि विदुर्ब्राह्
मणा ये मनीषिणः।
गुहा त्रीणि निहिं नेङ्गयन्ति तुरीयं वचो मनुष्या वदन्ति ॥ ४५ ॥ 1-154-45
Four are the constituent parts of speech which the wise men of learning know. Three of them are hidden in the cave of the mind, they are neither analysed, nor defined, nor understood by ordinary speakers, only the fourth part of speech, or parole, they use in communication.
(The four constituents of the structure of speech are: Nama or substantive, noun, Akhyata or roots of verbs, Upasarga or affixes, and Nipata or irregular accepted forms. These four are the subjects for grammarians and linguists. For the ordinary person, speech is the whole language, just what it is, and accepted without the understanding of structure and grammar. Ata higher level, language is analysed in four layers of existence and consciousness: Para or transcendent language which is beyond thought and understanding. It may be regarded as the languagecorrespondence of the omniscience of God. The second Is Pashyanti, one step close to us from Para. This may be understood to be the language existing in the unconscious layers of the mind. The third is Madhyama, another step closer to our consciousness. Let us say it exists in our sub-conscious mind. And the fourth is Vaikhari, existing at our conscious level of the mind. This is the language in use. Further, this language is analysed into four constituents: Nama, Akhata, Upasarga and Nipata. And of this language too the ordinary speaker uses the accepted form without knowing the structure and grammar. For the ordinary speaker, the language in use is only behaviour purely at the natural and social level. And in yet another way, language may be understood in the way of the Veda: Ila, the language of omniscience, Sarasvati, the language of Veda and learning, Mahi, the spoken language at the level of the earth, nation, region, family and the mother. Another name for this speech is Bharati. And one thing more at the end of this note: This analysis and study is for the learned and for the seekers of learning. It has no value for the ordinary speaker. He or she speaks what is spoken for the only reason that he or she speaks thus, and what is spoken is understood.)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தமிழ் எழுத்து தோன்றிய காலம்.

மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்-றிய மொழி தமிழ். இன்றைய மொழிக் குடும்பங்களில் தலைசிறந்த எட்டுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். உலக மொழிகள் அனைத்-துமே தமிழ் மொழியிலி-ருந்துதான் தோன்றின என்பது மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் கருத்து.

இந்நிலையில் தமிழ் மொழி எழுத்து கி.பி. 6_7ஆம் நூற்றாண்டுகளில் தோன்-றியது என்றும் அது செம்மையுற்றது சோழர்காலத்தில் என்றும் அண்மையில் மய்ய சாகித்ய அகாதெமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற பேரா. எஸ். செத்தார் என்ற கன்னட அறிஞர் கூறி-யது இந்து ஆங்கில நாளேட்டில் (8.05.2009) வெளி வந்துள்ளது. ஒரு மொழி அறிஞர் பிறமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் அறியாத பேராசிரியராக உள்ளது வியப்பாக உள்ளது. அதுவும் ‘சங்கம் தமிழகம்’ என்ற சங்கத்தமிழ் பற்றிக் கன்னட மொழி-யில் எழுதிய நூலுக்காக விருது பெற்றபின் இவ்வாறு கூறியிருப்பது விந்தையாக உள்ளது.

ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவரைக்கேட்டால் நம் ஊர் வையா-புரிப் பிள்ளையைத்தான் காட்டுவார். ‘தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்-டில் வாழ்ந்தவர் என்று அழுத்தம் திருத்தமாகக் (தமிழ்ச்சுடர் மணிகள், பக். 38) கூறியுள்ளார். ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்றுரைத்தான் ஒரு பேதை; (பாரதியார்) இந்தப் பேதையோ தொல்காப்பியர் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

மேல் நாட்டுத் தமிழறிஞரான டாக்டர். கமில் சுவலபில் கூட வையா-புரியாரின் வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டுதான் ‘தமிழ் எழுத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகிறார். இருப்பினும் பல்வேறு அறிஞர்களின் கருத்துகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் தீவிரமாக ஆராய்ந்து கி.மு. 100_க்கும் கி.பி. 250_க்கும் இடையில் தோன்றியது சங்க இலக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)” “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)” 

தமிழ்எழுத்து வரிவடிவத்தைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார். பழந்தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (கி.மு. 3_ 1ஆம் நூ) தொல்- காப்பியம் (கி.மு. 2_1 ஆம் நூ) சங்க இலக்-கியம் (கி.மு. _ 1 ஆம் நூ) அரிக்கமேடு (கி.பி. 1_ 2 ஆம் நூ) பிற்காலத் தமிழ் பிராமி கல்-வெட்டுகள் (கி.பி. 3 _ 4 ஆம் நூ) இவ்வளவு காலகட்டங்களை ஆய்வு செய்யும் சுவலெபில் மொத்தத்தில் சங்க இலக்கிய நூல்களின் காலம் (கி.மு. 1_கி.பி. 4 ஆம் நூ) என்ற முடிவுக்கு வருகிறார்.

சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி (இயக்-குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்துவெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஏகாதிபத்தியம் (2008) நூலில் சிந்து-வெளி முத்திரைகளைப்பற்றிய தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

“காட்டுமிராண்டிகளான ஆரியர் வருகைக்கு முன்னரே, இந்தியாவில் ஒரு தலை சிறந்த நகர நாகரிகத்தை உருவாக்-கியவர்கள் தமிழர்கள் என்பதும், அந்நாக-ரிகம் நிலவிய காலத்தே வழங்கப்பட்ட மொழி, எழுத்து பழந்தமிழ்க் குடும்-பத்தைச் சார்ந்தது என்பதும் அய்யத்-திற்கப்பாற்பட்ட உண்மைகளாகும். குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும்.

பேரா. செத்தார் அசோகர் கண்டு-பிடித்த பிராமி எழுத்துகளுக்கு முன் தென்னிந்தியாவில் எந்த மொழிக்கும் எழுத்து கிடையாது என்கிறார். அசோகரின் பிராமியை முதலில் கன்னடமும் தெலுங்கும் ஏற்றுக் கொண்-டன. கி.பி. 6ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் மொழி பிராமி வரிவடிவத்தை ஏற்றுக்கொண்டது என்கிறார் செத்தார். (The Tamil Script emerged during the pallava period) 6-7 Century and attained maturity under the cholas 

பிராமி வடிவத்தைப்பற்றி முனைவர் வாவூசி குறிப்பிடுவது வருமாறு:

ஆரம்ப நிலையில் பிராமி எழுத்து வடிவானது பழந்தமிழ் மொழிகளில் மிகப் பழைமையான தமிழ் மொழிக்காக உருவாக்கப்பட்டது. இவ்வரிவடிவின் ஆரம்ப நிலையே ஹரப்பா நாகரிக மக்கள் தங்களுக்குள் எழுதி வந்த எழுத்து வடிவமாகும். இத்தகு பிராமி வடிவத்தைப் பிற்காலத்தில் ஆரியமல்லா மொழியான பிராகிருதம் பயன்படுத்திக் கொண்டதால், தமிழ் மொழி தனக்-கென, வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டது. பிராமி வரிவடிவமானது சிந்து நாகரிக எழுத்து வடிவத்திலிருந்து வளர்ந்ததைப் பேரா. வேங்கடன் தெளிவு-படுத்துகிறார். எனவே பழந்தமிழ் மொழிக்-காக உருவாக்கப்பட்ட பிராமியின் ஆரம்பகால வடிவங்கள்தான், ஹரப்பா நாகரிக முத்திரைகளில் காணப்படு-கின்றன என்பது மிகச் சரியானதாகும்.

அஸ்கோ பர்போலா போலந்து, சோவியத் ஆய்வாளர்கள், திரு அய்ரா-வதம் மகாதேவன், ஹீராஸ் பாதிரியார், போன்றோர் “ஹரப்பா நாகரிக எழுத்து வடிவங்கள் பழந்தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் முனைவர் வாவூசி.

உண்மை இவ்வாறிருக்க பேரா. செத்தார் தமிழ் மொழி பிராமி வடி-வத்தைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில்-தான் முதல் முதல் பெற்றது என்று கூறி-யிருப்பது அவர் தம் மொழியறிவின்-மையைப் புலப்படுத்துகின்றது. இது- வேத-னைக்குரியதாகும்.

செத்தாரைப் போன்ற வேறு சில அறிஞர்கள் சிந்துவெளியில் காணப்-படும் முத்திரைகள் எழுத்து வடிவம் இல்லையென்ற கொள்கையைப் பரப்பி வருகின்றனர். ஃபார்மர் (கலிஃபோர்-னியா) விட்ஸெல் (யார்வேட் பல்கலைக்-கழகம்) என்பார் இக்கருத்தை வெளியிட, இதை மறுத்து அஸ்கோ பர்போலா (போலந்து) மெஸ்ஸிகோ விடேல் போன்ற அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

இவர்கள் அனைவருடைய கருத்து-களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘சிந்து-வெளி வரிவடிவங்கள் படிக்கக்கூடிய எழுத்துகளே என்றும், பெரும்பாலும் அவை திராவிட மொழியைச் சார்ந்-தவையே’என்றும் பேரா. முனைவர் அய்ராவதம் மகாதேவன் இந்து நாளிதழில் (மே 3, 2009) மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ஆணித்தரமான சில கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.

சிந்து வெளி முத்திரைகளிலுள்ளவை படிக்கக் கூடிய எழுத்துகளே. அவை பெரும்பாலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே.

அவை சிந்து சம வெளியில் பழக்கத்திலிருந்த திராவிட மொழியான பிராகுவி மொழியைச் சார்ந்தவையே.

ரிக்வேதத்தில் திராவிட மொழிச் சொற்கள் கடன் பெற்று சேர்க்கப்-பட்டுள்ளன.

பிராகிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளின் தொகுப்-புகள் (ஹன்டர், பர்லோ, மகாதேவன்) சிந்துவெளி முத்திரைகளில் காணப்-படும் மொழி திராவிட மொழி குடும்-பத்தைச் சார்ந்தவையே.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை யூரி வெலன்டினோவிச் (ரஷ்யா) வால்டர் ஃபேர் சர்விஸ் (அமெரிக்கா) போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு உலகளாவிய அளவில் தமிழ்மொழி சார்ந்த திராவிட மொழி எழுத்து வடிவத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற சூழ்நிலையில் கன்னடக் கிணற்றுத் தவளை தவறான கருத்தைத் தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியம் ‘வடுகர்’ என்று குறிப்பிடுவது (Vadugars are the inhabitants of present day Karnataka) கன்ன-டர்களையே என்று செத்தார் குறிப்பிட்-டுள்ளார். அதே சங்க இலக்கியம் வடுகரை ‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம் _ களிற்றியானை. பாடல் 107) (கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் என்று குறிப்பிடுகிறது. சங்ககால வடுகர்தான் ‘கல்லா நீண் மொழியினர்’ என்றால் 21 ஆம் நூற்றாண்டு வடுகரும் கல்லா நீண்மொழியர் தானோ-? அய்யத்திற்குரியதாக்கிவிட்டது செத்தாரின் கூற்று.

நன்றி: செந்தமிழ்செல்வி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard