மனித சமுதாயத்திற்கு இருந்துவரும் தொல்லை என்பவற்றில் மாபெரும் தொல்லையும், மற்றெல்லா தொல்லைகளுக்கும் பிறப்பிடமாவதானது மனிதன் இல்லறம் நடத்துவது, சம்சாரம் நடத்துவது, குடும்பம் நடத்துவது, குடித்தனம் நடத்துவது என்பன போன்ற சொற்களின் பொருளான வாழ்க்கை நடத்துவது தான்.
ஆணுக்குப் பெண் தேவையும், பெண்ணுக்கு ஆண் தேவையும் வெறும் காம இச்சைக்குத்தானே ஒழிய, குடும்பம் நடத்துவதற்கு அல்ல என்பதை மனிதன் உணர வேண்டும்.
இந்தக் "குடும்பம் நடத்துகிறது, இல்லறம் நடத்துகிறது" என்கின்ற தொல்லை மனிதனுக்கு ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் சொத்துரிமை ஏற்பட்டது தான்.
இந்தச் சொத்துரிமையின் தொல்லை குடும்பம் மாத்திரமல்ல, அதைத் தேடுவதிலும், பராமரித்துப் பாதுகாப்பதிலும் உள்ள தொல்லை மனிதனின் பெரும்பாலான நேரத்தை ஈடுபடுத்தி, பெரும் கவலையில் மூழ்கி இருக்க வேண்டியதாகி விடுகிறது. மனித ஜீவனின் வாழ்வு இதற்குத் தானா பயன்பட வேண்டும்?
இப்படி நான் சொல்வது "வாய்ப் பேச்சு வேதாந்த ஞானம்" என்று சொல்லப்பவதில்லை. அனுபவத்தின் பேரால், ஆராய்ச்சியின் பேரால், மனித சமுதாய நல்வாழ்வுக்கும், நிம்மதியான, கவலையற்றத் தன்மைக்கும் மனித ஜுவ வளர்ச்சிக்குமாகவே சொல்லுவதாகும்.
மற்றும் மனிதன் இதை நான் சொல்லுவதை ஏற்பதற்கு ஏதோ கஷ்டமிருப்பதாகவும், ஏற்கனவே முடியாது என்றும் யாரும் கருத வேண்டியதில்லை. இல்லறம் வேண்டாம்; குடும்ப வாழ்க்கை வேண்டாம் என்பதற்கு மனிதன் ஆணோ, பெண்ணோ எந்தவிதமான கஷ்டமும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரே ஒரு காரியம் செய்யாமல் இருந்தால் அதுவே போதும்.
அதாவது மனிதன் கல்யாணம், திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்பவற்றில் எதையும் செய்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் மனிதனுக்கு விடுதலை - 'மோட்சம்' என்பது.
அதனால் குடும்பமே ஏற்படாது. தேவையுமிருக்காது. மனிதனுக்கு (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தொல்லையோ, கவலையோ கூட இருக்காது. இருக்க இடமும் ஏற்படாது.
இந்தப்படி இருக்க முடியுமா? என்று கேட்கலாம். முடியும் முடிந்தும் இருக்கிறது. சில நாடுகளில் சமீபகாலம் வரையில் பழக்கத்தில் அனுபவத்தில் இருந்தும் வந்திருக்கிறது. ஓர் அளவுக்கு இருந்தும் வருகிறது.
எங்கே என்றால் மலையாளத்தில் - நாயர் வகுப்பில், 'சம்பந்த முறை' என்ற தத்துவத்தில் இருந்து வந்தது வருகிறது.
ஒரு பெண் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தனது காதலனை (சம்பந்தக்காரனை) வரவேண்டாம் என்று சொல்லி விடலாம். அதுபோலவே ஓர் ஆண் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தன் காதலியிடம் (சம்பந்தக்காரியிடம்) போக்கு வரத்தை நிறுத்திக் கொள்ளலாம்.
இவர்கள் இருவருக்குள் குடும்பத் தொல்லையோ, அதாவது பிள்ளைக்குட்டி சம்பந்தமான ஜீவனாம்சத் தகராறோ, சொத்து தகராறோ ஏற்படுவதில்லை. ஏற்படவும் வழி இல்லை.
இந்த நிலை அங்கு வெகு சகஜமாக இருந்து வந்தது; சில குடும்பங்களில் இருந்து வருகிறது. சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் அங்கு (மலையாளத்தில்) மக்களுக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் அரசாங்க ஆதாரங்களிலும், சமுதாய வாழ்க்கை ஆதாரங்களிலும் தகப்பன் பெயருக்குக் கலமே இல்லை. ஒருவருக்கொருவர் கேட்கவும் மாட்டார்கள். ஆதாரங்களில் குறிப்பதும் இல்லை. திதி செய்தாலும் தகப்பன் பேர் யாரும் சொல்லுவதில்லை.
இதன் பயனாக அவர்களது (நாயர்களுடைய) நாணயம், நேர்மை, ஒழுக்கம் மற்ற நாட்டார்களை விடச் சிறப்பானது; மேலானது என்று சொல்லலாம். இது எனது 60, 70-ஆண்டுகளுக்கு முற்பட்ட அனுபவமாகும்.
இது மாத்திரமல்ல; அங்கு இந்தக் குடும்பத் தொல்லை காரணமாக ஒரு பெண்ணுக்கு 2, 3-கணவன்மார் உண்டு. இவர்கள் இந்தக் கணவர்களின் சகோதரர்களாகவும் இருப்பார்கள். அல்லது ஒருவருக்கெர்ருவர் நெருங்கிய உறவினர்களாகவும் இருப்பார்கள். இதன் பலன் என்னவென்றால் குடும்பத் தொல்லை, இல்லற பாரம் இல்லை என்பதுதான். இருந்தால் 'மனசாட்சி'க்கு விரோதமாய் நடந்துதான் ஆக வேண்டும்.
மனிதன் படிக்க வேண்டும். வருவாய்க்கு ஏற்ற தொழில் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தாயார் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் சாப்பாடு உணவு விடுதிகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் இருப்பிடமாக வருவாய்க்கேற்ப லைன் - வீடுகளில் இரண்டு அறை, அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படியே தான் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறுவதை இரண்டுக்கு மேல் இல்லாமல் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை சர்க்கார் கொடுத்து விடுகிறார்கள். பணம் கையில் மீதி இருக்குமானால் பாங்கியில் போட்டு விட வேண்டும். காதலனிடத்தில் காதலுக்கு ஆக பணம் பெறக் கூடாது. தமது இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த வேண்டும் ஆணை.
இந்த நிலையை 1932-ல் நான் மேல் நாடுகள் பலவற்றில் நேரில் பார்த்தேன். அதாவது பலருக்கு பாஸ்போர்ட் லவ்வர் - லவ்லேடி தான். குடும்பத்துடன் இருப்பவர்களும் உணவு விடுதியில் உணவு கொள்ளுவதையும், வாடகை அறைகளில் தனித்தனியாக வாழ்வதையும் பார்த்தேன்.
நம்மில் உள்ள பெரும் தொல்லைக்குக் காரணம், காதலை இரண்டாகப் பிரித்து விட்டோம். சுதந்திரக் காதல் என்றும், அடிமைக் காதல் என்றும் பிரித்து விட்டோம். அதாவது "களவு" என்றும், "கற்பு" என்றும். இந்தக் கற்பு, அடிமைக் காதல் ஆசிரியர்களால் ஏற்பட்டதே ஒழிய, நமக்கு இருந்திருக்கவே முடியாது. ஏனென்றால், அந்த அடிமைக் காதல் முறை நம்முடையதாகவே தோன்றவில்லை. ஏனெனில், நமக்கு அந்த அடிமைக் காதலுக்கு அவசியமே இல்லை. ஆண், பெண் சரிநிகர் சமானமாக இருந்தவர்கள். இதுதான் இயற்கையும் சுதந்திரமாகும்.
ஆகவே, பெண்ணை அடிமைப்படுத்துவது தான் கற்பு அடிமைக் காதலாகி விட்டது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் தொல்லை, துன்பம். மனித சமுதாயத்தையே உழவன் கை மாடுகள் போல ஆக்கிவிட்டது.
ஆகவே, திருமணம் என்பது ஒரு பெண்ணைச் சுவாதீனமற்ற அடிமையாக்குவது மாத்திரமல்லாமல், ஓர் ஆணும் இல்லற முறைக்கு - கவலைக்கு அடிமையாகிறான், தன்னைப் பலி கொடுத்து விடுகிறான்.
இதனால் மனித வளர்ச்சி, உலக வளர்ச்சி பெருமளவிற்குத் தடைப்பட்டு விடுகிறது. ஜீவனும், துக்க சாகரத்தில் அழுந்திக் கிடக்க நேரிடுகிறது.
நான் சொல்லுகிறேன், இந்தச் சுதந்திரத்திற்குப் பெண்கள் இசைய மாட்டார்கள். அவர்களுக்கு ஓர் எஜமான் இல்லாவிட்டால் ஆடை நழுவுவது போன்ற உணர்ச்சி இருக்கும்.
ஆனால், ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.
ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.
சுயநலமற்ற பொதுத் தொண்டுக்கு ஏராளமான மக்கள் ஏற்படுவார்கள். மக்களுக்கும் நிபந்தனையற்ற பகுத்தறிவு வளர்ச்சி ஏற்பட முடியும். இதனால் ஆயுள் வளரும்.
நாட்டில் மக்களிடம் சமுதாயத்தில், ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும் பரவும். சாகும் போதும் கவலையற்றுச் சாவான்.
இன்று மக்களிடையில் காணப்படும் அல்ப சுபாவமெல்லாம் மறைந்து ஒழியும். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு சமுதாயமாகிய பெண்கள் சமுதாயம் பேரறிஞர் சமுதாயமாக உயரும். விஞ்ஞான தத்துவப்படிப் பார்த்தால் இல்வாழ்வில் பெண் மாத்திரம் அடிமை அல்ல. ஆணும் அடிமையே ஆவான்.
இல்லறம் என்றாலே சுதந்திரமற்ற வாழ்வு என்பதுதான் தத்துவம்.
----------------------------
"விடுதலை' ஞாயிறு மலர் தந்தை பெரியார் கட்டுரை. "விடுதலை" 02.03.1969