New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர்
Permalink  
 


93. பெருந்தகை புண்பட்டாய்!

 
பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்பாடலில், “பெரும, உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள். அவர்கள் அவ்வாறு தோற்று ஓடியதால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.

அருஞ்சொற்பொருள்:
1.திண்மை = வலிமை; பிணி = கட்டு; இழும் - ஒலிக் குறிப்பு. 2. அமர் = போர்; கடத்தல் = வெல்லுதல்; யாவது = எவ்வாறு. 3. தார் = முற்படை; வெடிபடுதல் = சிதறுதல். 4. மரீஇய = மருவிய, தழுவிய; பீடு = பெருமை, வலிமை. 5. விளித்தல் = இறத்தல்; யாக்கை = உடல்; தழீஇய = தழுவிய. 6. மருங்கு = பக்கம், விலாப்பக்கம். 7. புரிதல் = விரும்பல். 8. திறம் = செவ்வை (செப்பம்), மேன்மை. 9. கந்து = பற்றுக்கோடு. 10. நீள் = உயரம், ஒளி; உழி = இடம். 11. போழ்தல் = பிளத்தல்; உய்ந்தனர் = தப்பினர்; மாதோ - அசைச் சொல்.12. ஞிமிறு = வண்டு, தேனீ;ஆர்க்கும் = ஒலிக்கும்; கடாம் = யானையின் மத நீர். 13. அடுகளம் = போர்க்களம். 14. சமம் = போர்; ததைதல் = நெருங்கல், சிதைதல்; நூறுதல் = வெட்டுதல், அழித்தல். 15. மாறு = ஆல்.

கொண்டு கூட்டு: பெருந்தகை, நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால் நின்னொடு எதிர்த்து வந்தோர் தாம் பீடில் மன்னர் விளித்த யாக்கை தழீஇ நீள் கழல் மறவர் செல்வுழுச் செல்கென வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் ஆதலின், இனி முரசு முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது எனக் கூட்டுக.

உரை: பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர்
Permalink  
 


சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன் ஒரு வள்ளல்.

பார்ப்பனக் குடியில் பிறந்தவன்.
சோழநாட்டில் வாழ்ந்தவன்.
இவன் காலத்தில் சோழநாட்டை ஆண்டவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
ஆவூர் மூலங்கிழார் இந்தக் கிள்ளிவளவன், இந்த விண்ணத்தாயன் ஆகிய இருவரையும் பாடியுள்ளார்.
மற்றும்

நன்மாறன் (பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்)
சாத்தன் (பாண்டியன் கீரஞ்சாத்தன்)
ஆதி (மல்லி கிழான் காரியாதி)

ஆகியோரும் இப் புலவரால் பாடப்பட்ட சமகாலத்தவர்.

பூச்சாற்றூர்
சோழநாட்டில் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள ஊர் பூச்சாற்றூர். - டாக்டர் உ.வே.சாமிநாதையர் குறிப்பு
கவுணியன்
கவுள் = கன்னத்தின் உட்பகுதி, கடைவாய்
நெடுங்கழுத்துப் பரணர் கழுத்து உறுப்பால் பெயர் பெற்ற புலவர். அதுபோல இந்தப் புலவர் கவுள் உறுப்பால் பெயர் பெற்ற புலவர்.
விண்ணத்தாயன்
பூதத்தனார் என்னும் பெயர் போல விண்ணத்தாயன் என்பதும் ஐம்பூதங்களில் ஒன்றான விண்ணைக் கொண்டு அமைந்த பெயர்.
பூதங்கள் ஐந்து என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.[1]
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் இந்தப் பூதங்கள் ஐந்தும் நமக்கு வெளியிலும், உடலுக்குள்ளும் இருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்தவன் பூதத்தன்.

விண்ணத்தாயன் பண்புகள் [2]

[தொகு]
விண்ணத்தாயனின் முன்னோர்
பார்பனர் எவ்வாறு வாழ்ந்தனர் என்பது இங்குக் காட்டப்படுகிறது.
சிவநெறியாளர்
சிவன் நீண்ட சடைமுடி உடையவன்.
அவன் நன்றாக ஆராய்ந்து பார்க்கப்பட்டவன்.
சிவன் முதுமுதல்வன். முதியவர்களுக்கெல்லான் முதிர்ந்தவன்.
விண்ணத்தாயனின் முன்னோர் சிவபெருமான் வாக்கின் வழியில் நடந்துவந்தவர்.
நான்மறை வழியில் ஒழுகுபவர்
நான்மறை வழியைக் கடைப்பிடித்தவர்கள்.
ஆறு சமயங்களை உணர்ந்தவர்
ஆறு சமய நெறிகளையும் உணர்ந்தவர்கள்.
(ஆறு சமையங்களில் ஒன்று பௌத்தம் ஆகையால் விண்ணத்தாயனின் முன்னோரே புத்தர் காலத்துக்குப் பிந்தியவர்கள் எனத் தெரிகிறது.)
21 துறைகளில் தெளிந்தவர்
சோமவேள்வி 7, அவிர்வேள்வி7, பாகவேள்வி 7, ஆக 21 வேள்வித்துறைகள்.
இப்படிப்பட்ட நெஞ்சுரம் படைத்தவர்களின் வழித்தோன்றலாக வந்த மருகன் இந்த விண்ணத்தாயன்.
விண்ணத்தாயன் தோற்றம்
இடப்பக்கத் தோள்மீது பூணூலுக்கு மேலே ஆண்மானின் தோலைப் போட்டிருப்பான்.
இடப்பக்கத் தோளிலிருந்து வலப்பக்க மருங்குல் வரை தொங்கும்படி பூணூல் அணிந்திருப்பான்.
விண்ணத்தாயனின் துணைவியர்
இவனது துணைத்துணைவியர் அறம் என்னும் வலைக்குள் கட்டுப்பட்டுக் கிடந்து இவன் சொற்படி நடந்துகொள்வர்.
வேள்வி செய்தவன்
நீர் ஓடுவது போல நெய்யை ஊற்றி எண்ணிக்கைக்கு வராத அளவில் பல வேள்விகளை இவன் செய்தான். காட்டிலும், நாட்டிலும், ஈரேழ் இடங்களிலும் வேள்வி செய்தான்.
விருந்தோம்புபவன்
இவனது ஊருக்குச் சென்றால் இவன் அனைவரையும் விருந்தோம்பிப் பாதுகாப்பான்.
ஊர்
விண்ணத்தாயன் காவிரியாற்றுப் படப்பை(படுகை)யில் இருந்த ஊரில் வாழ்ந்தவன்.
குடாஅது பொன்படு நெடுவரை
குடகு நாட்டு மலையைப் பொன்படு நெடுவரை என்றனர். அங்கு மழை பொழிந்தால் காவிரியில் பொன் கொழிக்கும்.
புலவர் வாழ்த்து
இவனிடம் சென்ற புலவர் ஆவூர் மூலங்கிழார் இவன் அளித்த உணவை உண்டும், தின்பண்டங்களைத் தின்றும், ஊர்திகளில் ஏறி உலாவியும் மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். தன் ஊருக்குத் திரும்பும்போது மூங்கில் வளரும் இமயமலை போல நிலைத்த புகழுடன் இவன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1.  திருக்குறள் 271 பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
  2.  புறநானூறு 166


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard