New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் விழாக்கள்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்க இலக்கியத்தில் விழாக்கள்
Permalink  
 


சங்க இலக்கியத்தில் விழாக்கள்

   2
 

-முனைவர் க.லெனின்

முன்னுரை

பண்டைய காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனத்திற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலைமுடிந்து வீடு திரும்பியவன், கையில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு இசைத்தும் ஆடியும் பாடியும் தன்னை திருப்திப்படுத்திக் கொண்டான். அதுவே பெரியதாகவும், அனைத்து உறவுகளையும் ஒன்று கூட்டி விழாவாகச் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். விழா நடத்துவதற்கு காரணம் வேண்டுமே! தெய்வத்தின் திருப்பெயரைச் சொல்லி மக்களை அழைத்து விழாக்கொண்டாடினான். புதுஆடை உடுத்தியும், இல்லையென்று வந்தவருக்கு வேண்டியவைகளைக் கொடுத்தும் தன்னுடையக் குலம் இவ்பூவுலகில் நிலைபெறச் செய்தான். “மனிதன் வேட்டையாடினான். ஓய்வாக இருந்தபோது தன் களைப்பைப் போக்க ஆடிப்பாடினான். இதன் பயனாக விழா கொண்டாடி மகிழ்ந்தான். கிழமைக்கு ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டான். சங்ககாலத்தில் தைந்நீராடல், கார்த்திகை விழா, ஓணவிழா, இந்திரவிழா, உள்ளி விழா, பூந்தொடை விழா முதலிய விழாக்கள் குறிக்கின்றன”என்று பா.இறையரசன் குறிப்பிடுகின்றார்.

விழாக்கள் என்றால் என்ன?

விழவு, சாறு, திருவிழா, பண்டிகை, நோன்பு, திருநாள் என விழாவிற்கு வேறுபெயர்களாகச் சுட்டுவர். “விழாக்கள் உடலுக்கு ஓய்வும், உள்ளத்திற்கு இன்பமும் தரவல்லன. எனவே மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாடுவதால் விழா என்று அழைக்கப்படுகிறது. விழா எனும் சொல் விழை என்ற சொல்லின் அடியாகத் தொன்றியது. இதற்கு விருப்பம், பற்று ஆகியபொருள்கள் உள”2 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார். பரந்துபட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் நிகழ்வினை விழா என்கிறோம். விழாக்களைப் பொது விழாக்கள், வழிபாட்டு விழாக்கள் என்று இருவகைப்படுத்தலாம். பொது விழாக்களை ஆண்டுவிழாக்கள், தின விழாக்கள், வாழ்வியல் சார்ந்த விழாக்கள் (திருமண விழா, காதணி விழா, பூப்பு விழா போன்றவைகள்) என வகைப்படுத்தலாம். வழிபாட்டு விழாக்களை தேர்த்திருவிழா, எருதுவிடும் விழா, குடமுழக்கு விழா எனப் பிரிக்கலாம்.

விழாவும் விருந்தோம்பலும்

பெரும்பாலான விழாக்கள் ஒற்றைப்படை நாட்களிலே நடைபெற்றன. முதல் நாள் பொங்கல் வைப்பது, இரண்டாம் நாள் கிடா வெட்டி உறவுகளுக்குச் சோறிடுவது, மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு திருவிழாவினை முடித்து விடுகின்றனர். அக்காலத்தினர் இரவு நேரங்களில் சமைத்த பாத்திரங்களில் ஒரு பிடி சோற்றையாவது வைப்பர். ஏனெனில் இரவு நேரத்தில் யாரேனும் உறவினர்கள் வந்தால், இல்லையென்று சொல்லாது உணவிட்டு மகிழ்வார்கள். திருவிழாக்கள் என்பது உறவுகளைக் கூட்டி சோறிடுதலே முக்கிய நோக்காக அமைகின்றது.

கூடி வாழும் பண்பு

வறுமையின் காரணமாகவும், உறவுகளின் மூலமும் பிரிந்து சென்றவர்கள் கூடத் திருவிழாக்காலங்களில் சரியான நேரத்திற்கு உள்ளூர்க்கு வந்து விடுகின்றனர். இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடுதலை திருவிழாக்களில் பார்க்க முடியும். விவசாயிகள் மழைவருவதற்கு வெயில் காலத்தில் விழா எடுக்கின்றார்கள்.  பெரும்பாலும் தெய்வ வழிபாட்டு திருவிழாக்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் நடைபெறுவதைக் காணமுடியும். “கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. திருவிழாவிற்கு பொதுமக்கள் பல பகுதியில் இருந்து வந்தனர். அவர்கள் செய்யும் நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் ஆகியவை கூறப்படுகிறது”3 என்று பா இறையசரன் கோயில்கள் மூலமே திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்கிறார். விழாக்களைப் பொறுத்தவரையில் அரசன் முதல் ஆண்டி வரை மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது எனலாம்.

விழாக்களினால் ஏற்படும் நன்மைகள்

  1. அனைத்து மக்களும் ஒன்று கூடி உறவாட முடிகிறது.
  2. விருந்தோம்பல் பண்பு வெளிப்படல்.
  3. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வு ஒருநிலைப்படுத்தல்.
  4. விழாக்களினால் திருமணம் நிச்சயமாதல்.
  5. தெய்வங்களுக்கு வழிபாடுகள் மூலம் நேர்த்திக்கடன் செலுத்துதல்.

ஆகியவைகள் திருவிழாக்காலங்களில் மக்களுக்கு நன்மைகளாக அமைகின்றன. மேலும், விழாக்காலங்களில் ஊரில் ஒரே இரைச்சல் நிறைந்திருக்கும் என்பதை ‘கல்லென் விழவு’ என்ற புறநானூற்றுத் தொடரால் ஏற்றுக்கொள்ளலாம். கல் என்பது ஓசையை உணர்த்தும் ஓர் இடைச்சொல்”4 என்று கண்ணப்ப முதலியார் கூறுகின்றார். இக்கட்டுரையில் சங்க இலக்கியங்களில் விழாக்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை இவ்வாய்வு எடுத்துரைக்க முயல்கிறது.

சங்ககால திருவிழாக்கள்

சங்க காலத்தில் அழகிய குடில்களையுடைய சிற்றூரில் எப்பொழுதும் விழாக்களைக் கொண்டாடி மகிழும் ஊராகத் திகழ்ந்தது என்கிறது குறுந்தொகை,

“சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற” (குறும்.41:2)

 இங்கு சாறு என்னும் சொல் விழாவினைக் குறித்தது. சிற்றூர் மட்டும் அல்லாது பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற நகரத்திலும் விழாக்களினால் மிகுந்த ஆரவாரம் உண்டானது.

“பேர்ஊர் கொண்ட ஆர்கலி விழவின்
செல்வாம் செல்வாம் என்றி என்று, அன்று இவன்
நல்லோர் நல்ல பலவால் தில்ல” (குறும்.223:1-3) 

விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால், அவ்விடத்தில் வாழுகின்ற நல்லோர்களைப் பார்க்க முடியும். அவர்களிடமிருந்து நற்சொற்களைப் பெற்று நம்முடைய வாழ்வு சிறக்க உதவும் என்கிறாள் தலைவி. பண்டைய தமிழ் மக்கள் விழாக்களை இறைவனைத் தொடர்புபடுத்தியே நடத்தி வந்தனர். ஏதேனும் ஒரு கடவுளை முன்னிறுத்தியே விழாக்கள் கொண்டாடப்பட்டன. நற்றிணையில்,

“விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!” (நற்.19:5)

அரும்பு முதிர்ந்த தாழை மரங்களை கொண்டு வந்து விழா நிகழும் இடத்தினை அழகுப்படுத்துவர். அத்தாழை மரங்களில் உள்ள நறுமணம் விழா நடைபெறும் களமெல்லாம் வீசும்.

மகளிர் அலங்கரித்தல்

 விழாக்காலங்களில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். புது ஆடை உடுத்தியும், நீர்முள்ளிச் செடியில் வெண்மையான காம்புகளையுடைய பூக்களைப் பறித்து தலைநிறையப் பூச்சூடியும் விழா நடக்கும் இடத்தினை அழகுப்படுத்துகிறார்கள். அகநானூற்றில்,

“மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்” (அகம்.26:2-3)

என்கிறார் ஆசிரியர். பெண்கள் அணிகின்ற தழையாடைக்கு அழகு செய்யும் விதமாக நெய்தற் பூக்களைப் பறித்து அணிந்து கொள்கின்றனர் (அகம்.70:12). ஊரில் நடைபெறும் விழாவானது எவ்வாறு சிறப்புடன் விளங்குகின்றதோ, அதுபோல் தன்னுடைய பெண்மையும் சிறப்புடையவனாக விளங்கியது என்கிறாள் தலைவி,

“விழவு மேம்பட்ட என் நலனே” (குறும்.125:3-4)

இப்பாடல் வரிகள் மூலம் திருவிழாக்களினால் பெண்களிடம் உண்டாகும் தன்னம்பிக்கை எடுத்தாளப்பட்டுள்ளது.

ஒழிவில்லாத விழாக்கள்

விழாக்கள் பகல்பொழுதில் நடைபெற்றாலும், இரவுநேரத்தில் நிலவொளியில் ஆடல் பாடல் எனப் பார்ப்பது மிகவும் இனிமையுள்ளதாக தோன்றும். நற்றிணையில்,

நிலவே நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி,
கலிகெழு மறுகின், விழவு அயரும்மே” (நற்.348:1-4)

மகிழ்வுடன் விழா எடுக்கும் இந்நேரத்தில் நிலவின் ஒளியும், மத்தளத்தின் இசையும் (அகம்.4:14) தலைவிக்கு மிக்க காமத்தை உண்டாக்கின. தலைவன் இல்லாது இவ்விழாவில் கலந்து கொள்ளுதல் துயரத்தை ஏற்படுத்தியது. ஆகவே கணவன் மனைவி என்று கூட்டங்கூட்டமாய்த் திருவிழாவினைக் காண வந்திருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. மாதம் மும்மாரிப் பொழிந்திருக்கிறது. அக்கால மக்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். பகைவர்களுக்கு அச்சத்தைத் தரக்கூடிய பழமை வாய்ந்த இவ்வூர். ஒழிவில்லாத விழாக்களை என்றும் கொண்டுள்ளது என அகநானூறு (115:1) உரைக்கின்றது.

பங்குனி விழா

தமிழக மக்களிடையே மிகப் பெரியதாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர விழாவாகும். இவ்விழாவில் பக்தர்கள் காவடி எடுப்பதும், மொட்டைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அகநானூற்றில்,

“உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9)

பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரிப் பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்றதருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி உத்திர விழா நடைபெறும்.

“பல்பொடி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து” 
(அகம்.149:15 – 16)

பாண்டிய மன்னன் ஆட்சிபுரிகின்ற மதுரை மாநகரில் கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடையது. அனைத்து வீடுகளிலும் மயில் தோகையினைத் தொங்கவிட்டிருப்பார்கள். இடைவிடாது நடைபெறும் விழாக்களையுடைய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அங்கே அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகப்பெருமானின் வழிபாடுகளும் விழாக்களும் சொல்லப்படுகின்றன.

இந்திர விழா

சங்க காலத்தில் இந்திரவிழா நடைபெற்று வந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகியவைகளையே கடவுளாக வணங்கி வந்தனர்.  ஐம்பூதங்களின் தலைவராகவும், இயற்கையின் தெய்வமாகவும் இந்திரனே விளங்கினார். மருதநிலக் கடவுள் இந்திரன் ஆவார். வருடா வருடம் இந்திரனுக்கு விழாஎடுத்து கொண்டாடி மகிழ்வது வழக்கமாகிக் கொண்டிருந்தனர். அன்றைய விழாக்களில் சிறந்ததாக இந்திரவிழா கொண்டாப்பட்டது.

“இந்திர விழவிற் பூவின் அன்ன” (ஐங்.62:1)

நறுமணம் மிக்க பூக்களைச் சூடிய நடன மங்கையர் ஒன்றாகச் சேர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழாவில் மக்கள்  கூட்டங்கூட்டமாய் அலைமோதுவார்கள். கடைகள், வாண வேடிக்கை எனக் களைக்கட்டும். சிலம்பில்,

“கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலம்பு.5:144-146)

 விழாத் தொடங்குகிறது என்பதை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்காகக் கொடியேற்றுதல் மரபு. இந்திரவிழாவின் போது வச்சிரக்கோட்டத்திலிருந்தும் முரசைக் கச்சணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றி ஐராவதம் நிற்கும் கோட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள். விழாவின் தொடக்கம் முடிவுபற்றிய விவரங்களை முரசறைந்து தருநிலைக் கோட்டத்தில் கொடி வானளாவப் பறக்குமாறு ஏற்றப்பட்டது.

காமன் விழா

இளவேனிற் காலத்தில் நடக்கக்கூடிய விழாவாகும். மன்மதனே காமன் என்று அழைக்கப்படுகிறார். காமன் விழா மக்கள் இன்பமாகப் பொழுதை கழிக்கக் கொண்டாடிய ஒரு விழாவாகும். சிற்றூர்களில் மழைவேண்டி மன்மதனுக்கு விழாஎடுக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளதை அறியலாம். திருமணமாகாத ஆண்களும் பெண்களும் காமனை வணங்குவதால் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத் தம்பதிகளுக்கு குழந்தை கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. கலித்தொகையில்,

“வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி.35:14)

நீர் நிறைந்த ஆற்றின் கரையில் குடிகொண்டிருக்கும் மன்மதனுக்குப் பரத்தையர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விழா எடுக்கின்றனர்.  அவ்விழாவில் தலைவனும் கலந்துகொண்டு தன்னுடன் உறவாட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

“விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ” ( கலி.30:13)

காமனுக்கு எடுத்த விழாவில் தலைவன் பரத்தையருடன் விளையாடியதை நினைத்து வருத்தம் அடைகின்றாள்.  காமவேளுக்குச் செய்யும் விழாவில் தலைவன் இல்லாத தலைவிக்குத் தனிமைத் துயரம் துன்பத்தைக் கொடுத்தது. கலித்தொகையில்,

“காமவேள் விழவாயின், கலங்குவள் பெரிது என” (கலி.29:24)

என்கிறார் ஆசிரியர். “காமன் விழாவை உயர்ந்தவன் விழா, வில்லவன் விழா முதலிய பெயர்களில் கொண்டாடுவதையும், அவ்விழா இளவேனிற் காலத்தில் நடைபெற்றது”5 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார்.

கார்த்திகை விழா

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பூரண திதியும் கூடிய நாளில் கொண்டாடப்படும் விழா. சிவபெருமான் திரிபுர அசுரரைக் கண்டு சிரித்து எரித்ததை நினைவூட்டும் வகையில் இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இரவு நேரங்களில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். எங்கும் ஒளிபரவி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அகநானூற்றில்,

“அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகுவிளக் குறுத்து மாலை நோக்கி” 
(அகம்.141:8 – 9)

மழைபெய்து ஓய்ந்த சாயங்காலம். வானில் நிறம்மங்கி இரவை நெருங்கிற்று. மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற வீதிகள் திருவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

“பெருவிழா விளக்கும் போலப் பலவுடன்” (அகம்.185:11)

கார்த்திகைத் திருநாளில் இடும் விளக்குகளைப் போல, இலவ மரங்களின் பூக்கள் பூத்திருக்கிறது. இந்நாளில் அறம் செய்வதற்கு நன்னாள். அன்றைய தினத்தில் விளக்கில் ஏற்றப்பட்ட ஒளியானது வானத்து நட்சத்திர சந்திரனின் ஒளியைவிட மிஞ்சி நிற்கும் (நற்.202:910) எனப் பாடல் அடிகள் குறிப்பிடுகிறது.

புனல் விழா

 நீர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. நீர்இன்று அமையா உலகம் போல என நற்றிணை உரைக்கும். மனிதத் தேவையின் மிகவும் இன்றியமையாதன  ஒன்று தண்ணீர்தான். இவ்வுலகமானது வறண்டு விட்டால் நிலத்தில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களும் மண்ணில் புதைய வேண்டியதுதான். அன்றைய மக்கள் காவிரி ஆற்றில் வருகின்ற புதுப்புனலை ஆடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கின் நாளன்று காவிரிக்கரையில் புதுத்துணி உடுத்தி புனலாடுதல் வழக்கம்.

“மலிபுனல் பொருத மருதுஓங்கு படப்பை
கலிகொள் சுற்றமொடு கரிகால் காண” ( அகம்.376:3-5)

நன்றாக வளர்ந்த கதிர்களையுடையது கழார் என்னும் பகுதியாகும். அப்பகுதியில் கரிகால மன்னன் தன் சுற்றத்தாருடன் ஆரவாரம் மிக்க புனல்விழாவினைக் கண்டு மகிழ்ந்தான் என்கிறார் ஆசிரியர். அகநானூற்றில் (222:4-7) மிகுந்த அழகுப் பொலிவினையும் திரண்ட தோள்களையும் உடைய ஆட்டனத்தி என்பான் முரசொலி இடைவிடாது கேட்கும் புனல்விழாவில் நடனம் ஆடினான் என்கிறது.

தைத்திருவிழா

இக்காலத்தில் பொங்கல் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. உழவர்களின் அறுவடை நாள் தைத்திருவிழாவாகக் கொண்டாப்படுகிறது. “மழைப்பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் ஆயமகளிர் விழாச் சிறப்புக்களைப் பற்றி  முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பொங்கல் பொங்கும்போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்”6 என்கிறார் நா.வானமாமலை. சூரிய பகவானுக்கு நெல்லும் பூவும் இட்டு, ஏர்க்கலப்பை முன்னே பொங்கல் வைத்து இறைவனை வணங்குகின்றனர்.

“நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போல” (ஐங்.84:3-4)

என்ற ஐங்குறுநூற்று அடிகள், நறுமணம் மிக்க மலர்களை அணிந்து ஐந்து வகையில் அலங்காரம் செய்யத்தக்க கூந்தலையுடையவர்களும், விடியற்காலையில் குளிர்ந்த நீரில் தைத்திங்கள் நோன்பிற்காக  நீராடுகின்றார்கள். பாவை நோன்பிற்கும் இவ்வாறு நீராடுதல் உண்டு.  இவ்வகை நோன்பின் பயனாகப் பிரிந்துசென்ற தலைவன் மீண்டும் என்னை விரும்பி நாடி வருவான் எனத் தலைவி நம்புகிறாள். தன்னிடம் உள்ளப் பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுகிறாள் (நற்றிணை.80:7) என்றும், தை்திருநாளில் இறைவனை வழிப்பட்டு நிற்கும் தலைவி வகைவகையாய் அணிகலன்கள் புனைந்து பொலிவுப்பெற்று   (கலித்தொகை.59:13)  விளங்கினாள்.

முழவு விழா

 முழவு என்பது இசைக்கருவிகளில் ஒன்றாகும். விழாக்காலங்களில் மேளம் அடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடுவார்கள். முழவுக்கருவி விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டதும், வட்டமாகவோ சதுரமாகவோ இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும். நெருப்பில் சூடு பறக்கக் காட்டி அடிப்பார்கள். நற்றிணையில்,

“முழவு கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220:6)

சிறுவர்கள் பனைமடலில் செய்யப்பட்டக் குதிரையை வீதியில் இழுத்து வருகின்றார்கள். இவ்விளையாட்டுச் செயலுக்கு முழவு அடித்து ஆடியும் பாடியும் வருகிறார்கள். திருவிழாக்களின் போது அடிக்கின்ற மேளத்திற்கு ஏற்ப ஆட்டம் ஆடுவார்கள். அவ்வாட்டத்தைப் பார்க்க மக்கள் கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். முழவு விழா என்பது தனியாக நடைபெறக்கூடியது இல்லை. விழாக்காலங்களில் முழவு இசைக்கப்படும். இந்நிகழ்வானது பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் நடைபெறும். 

உள்ளி விழா

கொங்கு மண்டலத்தின் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறுவது உள்ளிவிழா. கொங்கர்கள் இடுப்பில் மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்ற விழாவாகும்.

“கொங்கர்கள் மணிஅரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன” 
( அகம்.368:16-18)

என்று அகநானூறு உரைக்கும். இவ்விழாவினைக் காணவந்த மக்களின் ஆரவாரம் மிகப்பெரிது.

வில் விழா

வெற்றிப்பெற்ற மறவனின் வில்லினை வைத்துக் கொண்டாடப்படுவது.    இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி வீரத்தைக் கொண்டிருப்பவர்கள். தங்களின் வீரத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த எண்ணி தெருக்களில் தம்மில் தாம் மாறுபட்டுப் போர் செய்கிறார்கள். தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் உடையவர்கள் மறவர்கள்.

“மள்ளர் குழிஇய விழவினானும்” (குறும்.31:1)

என்று குறுந்தொகை கூறுகிறது. போரிலே வெற்றி கண்ட வில்லினை சிறப்பிக்கும் பொருட்டு வீரர்கள் கூடி எடுக்கும் விழாவாக அமைந்துள்ளது.

பூந்தொடை விழா

படைக்கலப் பயிற்சி பெற்று திரும்பிய வீரர்களை அரகேற்றும் விழாவாகும். பெரும் வீரனான தன் மகன் பயிற்சி முடிந்து வீடு திரும்புகிறான். அவனுடைய வெற்றியை இவ்வுலகம் காணட்டும் என்று தங்களின் வீடுகளில் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன்னால் பரந்துபட்ட இடத்தில் மணல் பந்தலிட்டுத் துணங்கைக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.

“வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்.187:7-9)

பயிற்சிக் காலத்தில் விற்போர், வாட்போர், குதிரையேற்றம், யானையேற்றம், மதிலைக் காத்தலும் அழித்தலும், முன்னின்று சண்டையிடுதல் போன்றவற்றைக் கற்றுத்தெளிந்து வந்துள்ள மழவர்கள் பூந்தொடை விழாவினைப் பொலிவுடன் கொண்டாடினார்கள்.

கோடியர் விழா

கோடியர் என்போர் கூத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள், விரலியர்கள் என அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து விழா நிகழ்த்துகிறார்கள்.

“கோடியர்  விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ,” (அகம்.352:4- 6)

என்கிறது அகநானூறு. ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் இணைந்து பழமையான ஓர் ஊரின்கண் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் ஆடுவோர், பாடுவோர், முழவு வாசிப்போர் என அவரவர் திறனை மக்களிடையே வெளிப்படுத்துவர். விழா நேரங்களில் ஆடும் கூத்தர்கள் வெவ்வேறான ஒப்பனைகளுடன் திகழ்வார்கள் என்று புறநானூற்றுப் பாடல் அடிகள் (29:22-23) குறிப்பிடுகின்றன.

ஓணவிழா

பலம் வாய்ந்த அசுரரை அழித்தும், பொன்னால் செய்த மாலையை அணிந்தும், கருநிறம் உடைய திருமால் பிறந்த திருவோண நட்சத்திர நன்னாளில் ஊரிலுள்ளோர் விழா எடுப்பர். தங்களைத் திருமாலாக நினைத்து அழகுப்படுத்திக்கொண்டு நடனம் புரிவர்.

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓணநல் நாள்” (மதுரை.590-591)

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப்பெற்றது. அவ்விழாவில் யானைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கேரள மக்கள் மட்டும் ஓணவிழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

சங்க இலக்கியத்தில் விழாவைப் பற்றியக் குறிப்புகள்

  • தழையாடையை உடுத்திய தங்கைமார்கள் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் மீன்களை விற்று வருவார்கள். (அகம்.320:3-5)
  • “விழவும் மூழ்த்தன்று, முழவும் தூங்கின்று” (நற்.320:1) – ஊரினர் நடத்திய திருவிழாவும் முடிவுற்றது. மத்தளங்களின் ஓசையும் அடங்கிவிட்டது என்று விழா முடிந்த நிகழ்வினை நற்றிணை உரைக்கிறது.
  • விழா நடைபெறுவதற்கு முன் முந்நீர் (ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர்) கொண்டு வந்து இறைவனைத் தொழுது, ( புறம்.9:10) பின் தொடங்குவார்கள்.
  • குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபட்டு விழா கொண்டாடுகின்றார்கள் என்று புறநானூறு (17:1-4) கூறுகிறது.
  • பல சிறப்புகளையுடைய பாசறையில் சிறு சோற்று விழாவினை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். (புறம்.33:22)
  • புறப்புண்ணுக்கு நாணி சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தலால் அவ்வூரில் விழாக்களே மக்கள் மறந்து போயினர். ( புறம். 65:1-4)
  • போர் தொடங்குவதற்கு முன்னும், போரில் வெற்றிப்பெற்ற பின்பும் விழா எடுப்பார்கள். (புறநானூறு.84:3-5)
  • விழாக்காலங்களில் செம்மறி ஆட்டுக்கறியை உண்ணல். (புறம்.96:6)

விழாக்கள் பற்றியச் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன. 

முடிவுரை

வழிபாட்டை முன்னிறுத்தியே விழாக்கள் நடைபெறுவதால் ஆங்காங்கே சிறுமாறுபாடு அடைகின்றன. விழாக்களின் தோன்றலே மக்களின் மன மகிழ்வுதான். கடன் பெற்றாவது விழாவினை நன்முறையில் கொண்டாட வேண்டும். தன்னால் இயன்ற நாலு பேருக்காவது வயிறுநிரம்ப உணவு கொடுக்க வேண்டும்.  விழாக்காலங்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தன்னிறைவு பெறவும், பிரிந்துசென்ற உறவுகளை மீண்டும் சந்திக்கக் கிடைக்கும் விழாவினை மக்கள் எந்நாளும் வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.

சான்றெண் விளக்கம்

  1. பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, பக்.237-242
  2. கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, பக்.5-6
  3. பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, ப.235
  4. கண்ணப்ப முதலியார், கட்டுரைக்கொத்து, அம்மையப்பர் அகம், சென்னை -7, ப.40
  5. கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, ப.51
  6. நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்), NCBH, சென்னை – 98, பக்.14-15

**********

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத் துறை
எம்.ஜி.ஆர் கல்லூரி
ஓசூர் – 635 130
9789246983



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard