New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்வெட்டில் செங்கோல்


Guru

Status: Offline
Posts: 24459
Date:
கல்வெட்டில் செங்கோல்
Permalink  
 


--------------------------------
செங்கோல் என்பது நீதி நெறி பிறழாமல் ஆட்சி செலுத்துதல் என்பதன் அடையாளம் ஆகும்.
தமிழ் மரபில் செங்கோலுக்குத் தனித்த ஓா் இடம் உண்டு. சங்ககால அரசா்கள், செங்கோல் வழுவாது ஆட்சி புரிய வேண்டுமென்று விழைந்துள்ளனா். தங்களின் புகழ், செங்கோலின் சிறப்பினால் அறியப்படவேண்டுமென்று விரும்பியுள்ளனா்.
தமிழ் மன்னா்கள் அனைவருமே செங்கோலுக்கு மிகுந்த மரியாதை கொடுத்துள்ளனா். எனவேதான், அறநெறியைப் பயிற்றுவிக்கும் ஆசானான அரசகுருவிடத்திலிருந்து ஆட்சிக் கட்டில் ஏறும் மன்னா் செங்கோலைப் பெற்றுக்கொள்வது என்னும் முறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரபின் அங்கமாகவே, இன்றளவும் மதுரையில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவில், மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று, மீனாட்சியின் திருக்கரத்தில் ரத்தினச் செங்கோல் வழங்கப் பெறுகிறது. சிம்மாசனத்தில் அமா்வது, திருமுடி தரிப்பது, பட்டாடை அணிவது போன்றவற்றைக் காட்டிலும், ஆசானிடமிருந்து செங்கோலைப் பெறுவதுதான் ஆட்சியின், ஆட்சித் தொடக்கத்தின் அடையாளம் என்றே தமிழ் மன்னா்களும் தமிழ்ச் சமுதாயத்தினரும் கருதியுள்ளனா்.
அறத்தின் வழி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே செங்கோலின் சிறப்பு என்று கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
செங்கோல் குறித்து கல்வெட்டுகளும், சங்க இலங்கியங்களும்
==================================
செங்கோல் ஆட்சி என்பது நீதியும் நோ்மையும் நிறைந்த முறையான ஆட்சி என்பதை நிறுவுவதற்காகச் ‘செங்கோன்மை’ என்னும் சொல்லையே வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு"
திருக்குறளில் உள்ள 544 வது குறள்.
தனது குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகிற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலைபெறும் என்கிறது இந்த செய்யுள்.
இளங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும், சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் செங்கோலின் சிறப்பு குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் நிரம்பவே சுட்டியுள்ளனா்.
சங்க கால சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான், தொண்டைமான் இளந்திரையன் ஆகியோரின் ஆட்சியை முறையே,
"அறனொடு புணர்ந்த, திறனறி செங்கோல்'
எனவும்,
"அல்லது கடிந்த, அறம்புரி செங்கோல்'
எனவும் பத்துப்பாட்டு குறிப்பிடுகிறது.
சித்தன்ன வாசல் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு மதுரையைச் சார்ந்த இளங்கௌதமன் என்ற சமண முனிவன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னனின் ஆதரவில் சித்தன்ன வாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுக்கி முகமண்டபத்தை எடுத்ததாகக்
"திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை ...... . . . . . . . . . . . . . .
பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
மெடுத்தான் முன் "
என்ற கல்வெட்டு வரிகளில் இருந்து,
பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
"சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்"
பாண்டிய மன்னன் செங்கோல் கொண்ட விவரம் அறிய முடிகிறது.
நந்திக்கலம்பகம் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை (கி.பி.825-850),
"செங்கோல் அரசன்"
“அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன்”
“தண் செங்கோல் நந்திதனிக் குடையுடையவன்”
"தண் செங்கோல் நீந்தி".
என்றெல்லாம் வர்ணிக்கின்றது.
சங்ககால சோழராட்சி முடிவுற்றதும், சுமார் 400 ஆண்டுகள் சிற்றரசராய் பாண்டியருக்கும், பல்லவருக்கும் அடங்கியிருந்த சோழர் இனம், கி.பி 848ம் ஆண்டில் சுதந்திர அரசாய் வீறுகொண்டு எழுந்து, செங்கோலுடன் சுயாட்சி நடத்தும் தகுதியை மீண்டும் அடைந்தது,
இதனை விஜயாலய சோழன் தனது கல்வெட்டில் "செங்கோல் பற்றிய பரகேசரி" என பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறார். இக்கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள சிவன்கோயிலின் அர்த்தமண்டப அதிட்டான சுவரில் உள்ளது.
இத்தல இறைவனுக்கு மழநாட்டு வேள் என்பவர் நந்தாவிளக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
விஜயாலய சோழனை பின்பற்றி அவர் வழி வந்த சோழ மரபினர் செங்கோலுடன் ஆட்சிபுரிந்ததை அவர்களது மெய்கீர்த்திகள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மையான பிற்காலச் சோழ அரசர்கள் தங்கள் மெய்க்கீர்த்தி களிலேயே செங்கோலையும், சிங்காதனத்தையும், மணிமுடியையும் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜேந்திர சோழரின் மகனாகிய வீரராஜேந்திர சோழர் தனது "திருவளர் திரள்புய" எனத் தொடங்கும் நீண்ட மெய்க்கீர்த்தியின் இறுதியில்,
‘வடதிசை இமயத் தொடுங் கிடந்த சேது வரம்பாகச் செங்கோல் செலுத்தி’
எனக் குறிப்பிடுவதைக் காணலாம்.
செங்கோல் என்பதே அறத்தின் வழி ஆட்சி புரிவதை குறிப்பதே என்பது இதன் மூலம் விளங்கும்.
அடுத்து அதிராஜேந்திர சோழர் தனது
‘திங்களேர் மலர்ந்து வெண்குடை’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்
‘முறையிற் செங்கோல் திசைதோறுஞ் செல்லத் தங்கள் குல’
எனும் வரும் வரிகளில் அனைத்து திசைகளிலும் தங்கள் செங்கோல் செல்ல அதாவது ஆட்சி அனைத்து திசைகளிலும் பரவியிருந்ததை குறிப்பதைக் காணலாம்.
அடுத்து வந்த முதலாம் குலோத்துங்க சோழரின் ‘திருமன்னி விளங்கு’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘குல மணிமகுட முறைமையிற் சூடித்
தன்கழல் தராதிபர் சூடச் செங்கோல் நாவலம் புவிதோறும் நடத்திய’
எனும் வரிகளில் புவிதோறும் செங்கோலோய்ச்சியவன் குலோத்துங்கன் என புகழப்படுவதை அறியலாம்.
குலோத்துங்கன் மைந்தன் விக்கிரம சோழனின் ‘பூமாது புணரப் புவிமாது வளர’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘மணிமுடி சூடிச் செங்கோல் சென்று திசைதோறும் வளர்ப்ப’
எனும் வரிகளில் அனைத்து திசைகளிலும் நல்லாட்சியை செங்கோல் கொண்டு வளர்ப்பதை குறிப்பிட்டுருப்பதை அறியலாம்.
விக்கிரம சோழன் மைந்தன் இரண்டாம் குலோத்துங்கனின் ‘பூமன்னு பதுமம் பூத்தவே’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘ஏழ்கடற் புறத்தினுங் கோடாச்
செந்தனிக்கோலினி துலாவ’
எனும் வரிகளில் செந்தனிக்கோல் என செங்கோல் குறிக்கப்படுவதைக் காணலாம்.
அடுத்து வந்த இரண்டாம் ராஜராஜரின் ‘பூமருவிய திருமாதும் புவிமாதும்’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘கருங்கலிப்பட்டியைச் செங்கோல் துரப்ப’
எனும் வரிகளில் கலிகாலம் சூழ்ந்த நிலமகளை செங்கோல் கொண்டு நல்லாட்சி புரிந்திட்ட என்று இரண்டாம் ராஜராஜரை புகழ்வதை அறியலாம்.
அதன்பின் வந்த இரண்டாம் ராஜாதிராஜனின் ‘கடல்சூழ்ந்த பாமாதரும்’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘ஊழிஊழி ஒரு செங்கோல் ஏழுபாரும் இனிதளிப்ப’
எனும் வரிகள் மூலம் ஏழுலகங்களிலும் செங்கோல் செலுத்தியவன் இரண்டாம் ராஜாதிராஜன் எனப் புகழ்வதைக் காணலாம்.
அடுத்ததாக மூன்றாம் குலோத்துங்கனது ‘புயல்பெருக வளம்பெருக’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘சக்கிரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செல்ல’
எனும் வரிகளில் திக்கனைத்தும் மூன்றாம் குலோத்துங்கனின் செங்கோல் சென்றடைந்தது, அதாவது அவனது நல்லாட்சி சென்றடைந்தது எனப் புகழப்படுவதை அறியலாம்.
மூன்றாம் ராஜராஜனின் ‘சீர்மன்னி இருநான்கு’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,
‘கலிப்பகை விடநாகம் செங்கோலுங் கொடிப்புலியுந் திகிரிவரை வரம்பளக்க’
எனும் வரிகளில் புலிக்கொடி பறக்குமிடமெல்லாம் அவனது செங்கோலாட்சி பரவியிருந்ததை குறிப்பிடுவதைக் காணலாம்.
அன்னதான மடத்திற்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரையே தானமாக வழங்கியதைத் தெரிவிக்கும் ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளம், கழுநீர் பாலமுருகன் கோயில் வளாக 350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில்,இரண்டு பக்கங்களில் கல்வெட்டு எழுத்துக்களும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன் மற்றும் சந்திரனும் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

தமிழகத்தின் தென்காசி கோயிலில் சிவன் சிலையிலிருக்கும் செங்கோல்
==========================================
பாண்டியர்கள் காலத்திய தென்னகத்தின் காசி என்று அழைப்படும் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பராக்கிரமப் பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஊர்த்துவ தாண்டவம், மகா தாண்டவம் ஆடும் காட்சி சிற்பமாக கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. அதில் சிவன் இடது கையில் அதிகார நந்தி சின்னம் பொறித்த செங்கோலை கம்பீரமாக ஏந்தியபடி நடனமாடுகிறார்.
செங்கோல் என்பது மன்னர் ஆட்சியின் ஒரு அரசின் சின்னமாக பார்க்கப்பட்டது. செங்கோல் உயர உயர நாட்டு மக்களும் உயர்வார்கள் என்ற நம்பப்பட்டது.
அதாவது பாண்டி என்றால் மாடு என்று பொருள் கொள்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் திருக்குறளில் ஒரு நாட்டின் முதல் செல்வம் மாடு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் பாண்டிய மன்னர்கள் எப்போதும் தங்களை அரசன் என்பதை விட ஒரு உழவன் என்று சொல்வதில் தான் அதிக பெருமை கொண்டதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் எப்போதும் தன்னை உழவன் என்று சொல்வதில் தான் பெருமை கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் உழவுக்கும் உழவுத் தொழிலுக்கும் பாண்டிய மன்னர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக பண்டைய ஏடுகளில் உள்ளது.
எனவே மாடு உழவுத் தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாண்டிய மன்னர்கள் காளை சின்ன பொறித்த செங்கோலை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக அரசர்களின் மெய்க்கீர்த்திகள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கக்கூடிய இலக்கிய விபரங்கள் உடையது. அதில் "செங்கோல்" எனும் இந்த அரசுரிமைச் சொல் எங்கனம் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் செங்கோலும் அது தொடர்புடைய மெய்க் கீர்த்தி சில வரிகளும் :
பராந்தக நெடுஞ்சடையன் (768-815) வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி, மெய்க் கீர்த்தியில்,
“நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய்
மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோல்
தென்ன வானவன் செம்பியன் சோழன்
மன்னர் மன்னன் மதுரகரு நாடகன்
கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்;”
எனவும்,
சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218), கல்வெட்டு மெய்க் கீர்த்தியில்,
“வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்பக்
கொடுங்கலி நடுங்கி நெடும்பிலத் தொளிப்ப
வில்லவர் செம்பியர் விராடர் மராடர்
பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய”
எனவும், மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“திருநிலவு சொரிந்த விருநில வரைப்பின்
வெங்கலி கடிந்து செங்கோல் நடப்ப”
எனவும், மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“வெண் குடைநீழல் செங்கோல் நடப்ப
நாடொறும் மதியமும் ஞாயிறு வலங்கொள்
ஆடகப் பொருப்பின் அரசுமீ னிருப்ப”,
எனவும்,
மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239) – 2 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
ஒருகுடை நீழல் ருநிலங் குளிர
மூவகைத் தமிழு முறைமையின் விளங்க
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை யற்ற - 10
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் யலுடன் பரவ
எண்டிசை யளவும் சக்கரம் செல்லக்
கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர்
சிங்களர் தெலிங்கர் சீனர் குச்சரர் - 15
வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர்
பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம்
உறைவிட மருளென ஒருவர்முன் னொருவர்
முறைமுறை கடவதம் திறைகொணர்ந் திறைஞ்ச”
எனவும்,
சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268) மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“வடுவரைக் கொடுங்கோல் வழங்கா வண்ணம்
நடுவுநிலை செங்கோல் நாடொறும் நடப்ப
எத்திசை மன்னரும் ருங்கலி கடிந்து - 30
முத்த வெண்குடை முழுநிலவு சொரிய
ஒருமொழி தரிப்பப் புவி முழு தாண்ட
மதமார்பு விளங்க மணிமுடி சூடி
உரைகெழு....பல அரைசியல் வழக்கம்
நெறிப்பட நாட்டுங் குறிப்பி னூரட்டு”.
எனவும்,
மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 - 1285) மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“செங்கோல் நடப்பவும் வெண்குடை நிழற்றவும்
கருங்கலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும் - 5
கானிலை செம்பியன் கடும்புலி யாளவும்
மீனம் பொன்வரை மேருவில் ஓங்கவும்
முத்தமிழும் மனுநூலும் நால்மறை முழுவதும்
எத்தவச் சமயமும் னிதுடன் விளங்கவும்
சிங்களம் கலிங்கம் தெலிங்கம் சேதிபம் - 10
கொங்கணம் குதிரம் கோசலம் குச்சரம்
முறைமயின் ஆளும் முதுநில வேந்தர்
திறைமுறை காட்டிச் சேவடி வணங்க”
எனவும்,
மாற வர்மன் விக்கிரம பாண்டியன் (1283 - 1296) மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“நேமி வரைசூழ் நெடுநில முழுவதும் - 5
தரும வெண்குடை நிழலில் தழைப்ப
செங்கோல் நடப்பக் கருங்கலி துறந்து
வேத விதியில் நீதி நிலவ
சேரனும் வளவனும் திறைகொணர்ந் திறைஞ்ச
வீரமும் புகழும் மிகநனி விளங்க”,
எனவும்,
சோழன் முதலாம் இராசாதிராசன் (கி. பி 1018 - 1054) -1 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“வெண்குடை நிழலெனத் தண்குடை நிழற்றித்
திசைதொறும் செங்கோல் ஓச்சி இசைகெழு
தென்னவன் மானா பரணன் பொன்முடிப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
வேணாட் டரசரைச் சோணாட் டொதிக்கிக் - - - - - - 10
கூவகத் தரசரைச் சேவகந் தொலைத்து
வேலைகொள் காந்தளூர்ச் சாலைகல மறுத்தற்பின்
தன்குலத் தவனிபர் நன்குதரு தகைமையில்
அரசிய லுரிமை முறைமையி லேத்தி”.
எனவும்,
சோழன் இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) – 2 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன்
முன்னோன் சேனை பின்னது வாக”
எனவும்,
சோழன் வீரஇராஜேந்திரன் (கி. பி 1063 - 1070) – 2 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“வீரசிங் காதணம் பார்தொழ வேறி
எழில்தர உலக முழுதுடை யாளொடும் - - - - - - - -65
விசையமணி மகுடம் இசையுடன் சூட்டி
திசைதொறும் செங்கோல் செலுத்தி”
எனவும், மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“வாழிய விரதமாற்றிப் பூழிமஞ்
செய்துவரம் பாகச் செங்கோல் செலுத்தி
மேதினி விளக்கி மீதுயர் வீரத்
தனிக்கொடி தியாகக் கொடியொடு மேற்பவர்
வருக என்று நிற்ப………….”
எனவும்,
சோழன் அதிராசேந்திரன் (கி. பி 1067 - 1070) - 1 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“மன்னுயிர் தோறும் இன்னருள் சுரந்து
நிறைகழல் பரப்பி நிற்ப முறைமையிற்
செங்கோல் திசைதொறும் செல்ல”
எனவும்,
சோழன் குலோத்துங்கன் I (கி. பி 1070 - 1120 ) – 1 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“உரிமைச் சுற்றமாகப் பிரியாத் தராதலம்
நிகழச் சயமும் தானும்வீற் றிருந்து
குலமணி மகுடம் முறைமையில் சூடித்
தன்கழல் தராதிபர் சூடச் செங்கோல்
நாவலம் புவிதொறும் நடாத்திய - 20
கோவிராச கேசரி வன்ம ரான
உடையார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு 2 ஆவது”,
எனவும், மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“திருமணி மகுட முரிமையிற் சூடித்
தன்னடி யிரண்டும் தடமுடி யாகத் - 15
தொன்னில வேந்தர் சூட முன்னை
மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறும் செல்ல வெண்குடை
இருநில வளாக மெங்கணும் தனாது
திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி - 20
மேருவிற் புலிவிளை யாட………”
எனவும்,
 சோழன் விக்கிரம சோழன் (கி. பி 1018 - 1135 ) – 1 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“……………………………………………….கலைமகள்
சொற்றிறம் புணர்ந்த கற்பின ளாகி
விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறும்
திகிரியொடு செங்கோல் நடப்ப அகில
புவனமும் கவிப்பதோர் புதுமதி போல
வெண்குடை மீமிசை நிற்ப”,
எனவும்,
மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“தன்னிரு பதமலர் மன்னவர் சூட
மன்னிய உரிமையில் மணிமுடி சூடிச்
செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப - 5
வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக்
கலிங்கம் இரியக் கடல்மலை நடாத்தி
வலங்கொள் ஆழி வரைஊழி நடாத்தி
இருசுடர் அளவும் ஒருகுடை நிழற்கீழ்
முக்கோக் கிழான்அடிக ளோடும் செம்பொன் - 10
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கோப்பர கேசரி பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் உடையார் ஸரீ விக்கிரம
சோழ தேவர்க்கு யாண்டு 10-ஆவது.”
எனவும், மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“கோக்கவி மூர்க்க ஸரீவிக்கிரம சோழ தேவர்க்குத்
திருவெழுத் திட்டுச் செங்கோல் ஓச்சி
வெள்ளி வெண்குடை மிளிர ஏந்தி
நாடுவளம் படுத்து நையுங்குடி ஓம்பி”
எனவும்,
சோழன் குலோத்துங்கன் II. (கி. பி 1133 - 1150 ) - 1 மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“நிழல்மருவிய தனிவெண்குடை நீடூழிகள் நிலாப்பரப்பக்
கோடாத தனிச்செங்கோல் கொள்கைசான்ற அறுசமயமும்”,
எனவும்,
மற்றொரு மெய்க்கீர்த்தி கல்வெட்டில்,
“மணிமுடி கவித்தென மணிமுடி சூடி
மல்லை ஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம்
எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த
வெண்குடை நிழற்றச் செங்கோல் ஓச்சி”
எனவும்,
 


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

சோழன் இராசராசன் II (கி. பி 1146 - 1163 ) – 1
“அருமறை விதிநெறி அனைத்துந் தழைப்ப
வருமுறை யுரிமை மணிமுடி சுடித்
திங்கள் வெண்குடைத் திசைக்களிறு எட்டுந்
தங்கு தனிக்கூடந் தானென விளங்கக்
கருங்கலி படிமிசைச் செங்கோல் துறப்பப்
பொருவலி யாழி புவிவளர்த் துடன்வர”,
எனவும்,
செங்கோல் பற்றிய முக்கியத்துவம் பாராட்டுப் பொருளாக உரிமைப் பொருளாக, புகழாக போற்றப்பட்டுள்ளது கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்தி வரிகளில் தெரிய வருகிறது.
உலக நாகரிகங்கள் பலவற்றிலும் செங்கோல் இருந்துள்ளது; இன்னமும் இருக்கிறது.
எகிப்தியா்கள் ஆட்சிக் கோல் ஒன்றைக் கையில் பிடித்திருந்தாா்கள் என்பதை ஃபாரோக்களின் சிற்பவடிவங்கள் காட்டுகின்றன.
சுமேரியத் தலைவா்கள் அதிகாரக் கோல் ஒன்றைக் கையில் வைத்திருந்தனா் என்பது ஆய்வுகள் பலவற்றிலிருந்து தெரிய வருகிறது.
உலக நாடுகள் பலவற்றில், ஆட்சியின், அதிகாரத்தின், அரசின் அடையாளமாக அதிகாரக் கோல் ஒன்று கண்டிப்பாக உள்ளது. ‘செப்டா்’, ‘ஸ்டாஃப்’, ‘வேஸ், வேண்ட்’, ‘ஸ்டாஃப் ஆஃப் ஆஃபிஸ்’ போன்ற பெயா்களால் இத்தகைய கோல் அழைக்கப்படுகிறது. இவற்றின் வோ்ச்சொற்களைத் தேடினால் ஒன்று புரியும். இப்பெயா்களில் பெரும் பாலானவற்றுக்கு ‘கோல்’ அல்லது ‘கழி’ என்றே பொருள். ‘வேஸ்’ என்னும் எகிப்தியப் பெயருக்கு, ‘அதிகாரம்’ என்று பொருள். ஸ்டாஃப் ஆஃப் ஆஃபிச் என்னும்போது, அதிகார வரம்பு என்னும் பொருள் கிட்டுகிறது. ஆக, இப்பெயா்கள் யாவும், தலைமையின் அதிகாரத்தை, தலைமையின் இருப்பை உறுதி செய்கின்றன.
ஆனால், தமிழில் இதற்கு செங்கோல்! செம்மையின், அதாவது, நோ்மையின், சீா்மையின், நெறிபிறழா செம்மையின் கோல். இதுதான் பிற அதிகாரக் கோல்களுக்கும் செங்கோலுக்கும் உள்ள வேறுபாடு.
‘மன்னா்க்கு மன்னுதல் செங்கோன்மை’ என்கிறாா் வள்ளுவர்.
உலகின் மிகப் பெரிய குடியரசு நாடாகத் திகழும் இந்தியா, மன்னராட்சி காலத்திலேயே குடியாட்சி முறையைப் பின்பற்றி யிருக்கிறது. சோழப் பேரரசின் உத்தரமேரூா் கல்வெட்டுகள் இவ்வாறு மன்னா் காலத்திலேயே குடியாட்சித் தத்துவம் கடைப்பிடிக்கப்பட்டதற்குச் சான்று பகா்கின்றன.
கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌
=============================
ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. அச்காலத்தில்‌ குறிப்‌பிடத்தக்க வகையில்‌ நிகழ்ந்த எதாவது ஒரு நிகழ்ச்சியை மையமாகக்‌ கொண்டு அந்‌நிகழ்ச்‌சி நடந்து முடிந்த இத்தனாவதி ஆண்டு என்று குறிப்பதை வழக்கமாக முதன்‌ முதலில்‌ பெற்றிருந்திருக்கிறார்கள்‌ என்பதை “மகாவீரர்‌ நிர்வாணம்‌ அடைந்து இத்தனாவது ஆண்டு” என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும்‌’ புத்தர்‌ நிர்வாணம்‌ அடைந்து இத்தனாவது ஆண்டு” என்று தெரிவித்திருப்பதிலி ருந்தும்‌ தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆட்சி ஆண்டு புகுத்தப்பட்ட காலம்‌ நாளடைவில்‌, பெரும்‌ பேரரசர்கள்‌ எந்த ஆண்டிலிருந்து அரசாளத்‌ தொடங்கி னார்‌களோ அந்த ஆண்டிலிருத்து இத்தனாவது ஆண்டில்‌ இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்று குறிப்பிடுவது ஆரம்பமானது. இப்பழக்கம்‌ முதன்‌ முதலில்‌ மெளரியப்‌ பேரரசன்‌ அசோகனின்‌ (கி.மு. 278-232) கல்வெட்டுகளில்‌ காணப்படுகிறது.”
ஆட்சியாண்டு:
மேற்‌ கூறப்பட்ட ஆண்டு முறைகளும்‌ வழக்கத்தில்‌ இருந்தாலும்‌ அதிக அளவில்‌ அரசன்‌ ஆட்சிக்‌ கட்டில்‌ ஏறியதிலிருந்து கணக்கிடும்‌ முறைதான்‌ கல்‌வெட்டு களில்‌ கையாளப்‌பட்டிருக்கின்றன.
இவ்வாண்டு முறையை வடமொழியில்‌ “ராஜ்யவர்ஷம்‌’ ? என்றும்‌ தமிழில்‌ “*செங்கோல்‌ பற்றியாண்டு” என்‌றும்‌ செப்பேடும்‌, கல்வெட்டும்‌ முறையே புலப்படுத்துகின்‌றன.
பராந்தக வீரநாராயணன் (859-907)
தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதி,
"மதுராபுர பரமேச்வரன் மாநிதி மகரகேதனன்தன்
செங்கோல்யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர்யாண்டில் . . . ."
என்ற கல்வெட்டு வரிகளை உதாரணமாக கொள்ளலாம்.
அரசனின்‌ ஆட்சி ஆண்டைக்‌ குறிப்பிடுவதிலும்‌ தமிழகத்தில்‌ ஒரு புதுமையை அதாவது ஒரு ஆண்டைக்‌ குறிப்பிட்டு அதற்‌கெதிராமாண்டு என்று வழங்கப்படுவதாகும்‌. எதிராமாண்டு என்பது எதிர்வந்த ஆண்டு என்பதின்‌ குறுகிய வடிவமாக இருக்கலாம்‌. ஏனெனில்‌ அவ்வாறு எதிராமாண்டு இன்னது என்று குறிக்கப்பட்டிருப்‌பதைக்‌ கூட்டித்தான்‌ கணக்கிடப்படவேண்டும்‌ என்பதை வேறொரு கல்வெட்டால்‌ அறியப்படுவதிலிருற்து ஆகும்‌.
தமிழ் மன்னா்களும் சரி, இந்தியச் சான்றோா்களும் சரி, செங்கோலை வெற்றுப் பொருளாகவோ, அதிகாரக் குறியீடாகவோ கண்டாா்களில்லை. அறத்தின் அடையாளமாகக் கண்டாா்கள்; அவ்வாறே கொண்டாா்கள்.
முடியாட்சி என்பதே மக்களைத் தழுவிய குடியாட்சியாகத் திகழ வேண்டு மென்பதால்தான், செங்கோல் என்னும் பொருளுக்குச் செங்கோன்மை என்னும் தத்துவத்தைக் கொடுத்தாா் வள்ளுவர்.
பாரத புதிய பாராளுமன்றத்தில் தமிழரின் செங்கோல்
------------------------------------------------------
இன்று 28 5 2019 வைகாசி 14ஆம் தேதி வளர்பிறை அஷ்டமி காலை எட்டு ஆறு முதல் ஆரம்பிக்க கூடிய நாள் ஞாயிற்றுக்கிழமை, கிழமை அதிபதி சூரியன். அந்த சூரியனுடைய ராசியான சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் பவ கரணத்தில் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்திய புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடங்கப் பட்டுள்ளது. மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.
* புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
* சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிப் பெட்டிக்குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன் பிறகு குத்துவிளக்கு ஏற்றினார். *
'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.
செங்கோல் என்பது பூரம் நட்சத்திரத்திற்கு பலம் கொடுப்பதாக அமைகிறது. செங்கோல் என்பது பூரம் நட்சத்திரத்தின் அடையாளமாக அமைந்து விடுகிறது.சூரியனுடைய அடையாளமாக நந்தி அமைந்து விடுகிறது ;அதுவும் செங்கோலில் காணப்படுகிறது.வளர்பிறை அஷ்டமி நவமிக்குள் துவக்கம் அதுவும் அபிஜித் எனும் முகூர்த்த நேரத்தில் துவக்கம் என்பது, இந்த அமைப்பு பிரகாரம் இது அரசாங்கத்துக்கும் அரசு நடத்துபவர்களுக்கும் அரசர்களுக்கும் இது ஒரு ஏற்றமான காலமாகத்தான் இருக்கும் என்பது கணிப்பு.
அரசாங்கத்தை அடுத்த கட்டத்துக்கு போவதற்கு உண்டான முயற்சியில் நடக்கும்; நிறைய சட்டங்களை மாற்றுவதற்கு எல்லாம் வாய்ப்புகள்; நிறைய பிரச்சனைகள் எல்லாம் வரும்; ஆனால் போர் தந்திரங்கள், அவர்களுடைய ரகசியங்களை தெரிந்து கொள்வது, நட்பு நாடுகளை அதிகமாக வளர்க்கிறது; இப்படிப்பட்ட பொருளாதாரத்தை தாண்டி ராணுவத்துக்கும் ராணுவ பலத்திற்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தான் இங்கு எதிர்காலத்துல இந்த நாடாளுமன்ற கட்டிடத்தினுடைய செயல்பாடுகள் இருக்கும். இந்த மாதிரியான ஒரு தொடக்கம் இருந்தால் தான் பின்னாடி வரக்கூடிய போர்களை சந்திக்க முடியும். அதற்கு சரியான ஒரு அடித்தளம் தான் இன்று போடப்பட்டுள்ளது என்பது பஞ்சாங்க விளக்கம்.
1947, ஆகஸ்ட் 14-ஆம் நாளின் நள்ளிரவுக்குச் சற்று முன்னா், திருவாவடு துறை ஆதீனத் தம்பிரானிடமிருந்து ஜவகர்லால் நேரு செங்கோலைப் பெற்றுக் கொண்டுள்ளாா். சுதந்திரப் போராட்ட களத்தில் முன்னின்ற பெரியோா் பலா் முன்னிலையில், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்குதல் நிகழ்ந்துள்ளது. வரலாற்றுப் பெருமைக்குரிய தருணமாகவே பாரத தமிழ் மக்கள், தங்களின் அன்பையும் ஆதரவையும் அரவணைப்பையும் செங்கோல் வழியாக வெளியிட்டிருக்கிறாா்கள்.
இதில் செங்கோலின் தலைப்பகுதியில் ரிஷபம் பொருத்தப்பட்டிருகிறது. மூதறிஞா் ராஜாஜியின் வேண்டுகோளுக்கிணங்க, ஆட்சி மாற்ற அடையாளமாகச் செங்கோலுக்கு வடிவம் கொடுத்தவா் திருவாவடுதுறை ஆதீன குருமகாசன்னிதானம். திருக்கயிலாயப் பரம்பரையை நினைவுறுத்தும் வகையில், ரிஷபத்தைப் பொருத்தச் செய்திருக்கிறாா்கள்.
ரிஷபம் என்பது தா்மத்தின் அடையாளம். நந்தி என்றே இவ்வடிவத்தைப் போற்றுகிறோம். ‘நந்து’ என்னும் சொல்லுக்கு ‘ஆனந்தம்’, ‘மகிழ்ச்சி’ எனும் பொருள்கள் உண்டு. நந்தி ஆனந்தந்தைத் தருபவா். செங்கோல் என்பது தா்ம தண்டம்; அறக்கோல். அறத்தைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதே ஆட்சியின் நோக்கம் என்பதால், அறத்தின் அடையாளச் சின்னமான நந்தி வடிவம், செங்கோலில் பொருத்தப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
’என்னை நந்தி ஆக்கு; பகைமைகளை ஒழித்து, முழுமையான அரசனாக்கு’ என்னும் பொருள்படும்படியான விண்ணப்பம் ஒன்று ரிக் வேதத்தில் காணப்படுகிறது (ஹந்தாரம் சத்ரூணாம் க்ருதி விராஜம் கோபதிம் கவாம்). இந்த வகையில் நோக்கினால், நந்தி என்பது வெற்றி, பகையை அழித்தல், விடுதலை பெறுதல் ஆகியவற்றின் அடையாளம். அந்நிய ஆட்சி அகன்று, சுதந்திர ஆட்சி தொடங்கிய தருணத்தில் வழங்கப் பெற்ற செங்கோலில், வெற்றியின் அடையாளமாக நந்தி இடம்பெற்றது !
பண்டைய சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் நந்தி அல்லது ரிஷப அல்லது காளை வடிவங்கள் கிட்டியுள்ளன. ஒன்றாம் நூற்றாண்டு கால கட்டத்திலேயே, ஆன்ம - தா்ம ரீதியில் நந்திக்கு முக்கியத்துவம் இருந்ததாக டாக்டா் சா்வபள்ளி இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறாா். இந்த வகையில் நோக்கினால், இந்தியாவின் தொல் பழமைக்கும் இந்தியப் பெருமிதத்தின் அனுபவச் செழுமைக்கும் நந்தி ஒரு சான்று.
சுதந்திரம் அடைந்து கடந்து விட்ட இந்த 75 ஆண்டுகளைக் காட்டிலும், வருகிற 25 ஆண்டுகளில் அபரிமிதமான வளா்ச்சியையும் மேம்பாட்டையும் காண இருக்கிறோம். இத்தகைய வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான அடையாளமாகச் செங்கோல் நிலைநிறுத்தப்படுகிறது.
பாரதப் பிரதமர் எதை மனதில் வைத்து இந்த ஏற்பாட்டிற்கு வந்தாரோ தெரியாது ஆனால் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள செங்கோல் அடையாளச் சின்னம் நாட்டை ஆள்வதற்கு ஒப்பாக இயற்கையாக அமைந்துவிட்டதாக வருங்காலத்தை அறிவிப்பதாக எண்ணலாம் என்று தோன்றுகிறது.
மகாகவி பாரதியாா் ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று பாடியது மீண்டும் யமுனைக் கரையில் இச்செங்கோல் புதிய கட்டடத்தில் மீள்நிறுவுதல் காண்கிறது என்பது, மன்னா்களின் கைச் செங்கோல், தமிழ் மரபில் குடியாட்சி சாசனமாகி, இப்போது குடிமக்கள் சொத்தாக நாடாளுமன்றத்தில் நிலைபெறுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நாடு செல்லும் நிலையும்|புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பும்|New Parliament House Inauguration|Astrology/ https://www.youtube.com/watch?v=Et0WGzlyMvs
பார்த்தீபன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், திருச்சி.
கட்டுரை :Priyadarshini R
இந்தியப் பெருமிதம் செங்கோல்!
By டாக்டா் சுதா சேஷய்யன் | Published On : 27th May 2023 05:03 AM |
 


__________________


Guru

Status: Offline
Posts: 24459
Date:
Permalink  
 

இன்று நாடாளுமன்றத்தில் செங்கோல் நாட்டும் விழா நடைபெற்றது. அந்த செங்கோல் 1947 - ஆகஸ்டு 14 ந் தேதி இரவு ஆங்கில ஆட்சி இந்தியா விடம்மாற்றித்தரும் அடையளாமாக அந்த செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது. அந்த செங்கோலில் நந்தி உள்ளது. இது சைவ மத அடையாளம் என்று சிலர் கூறி வருகின்றனர். நந்தி என்னும் காளைமாடு சைவம், சனாதனம், சமணம் இப்படி எல்லா மதங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நந்தி என்பதை தர்மநந்தி என்று சொல்லப்படும். இறைவன் தர்மத்தை நிலைநாட்ட நந்தியை அடையாளப்படுத்துகிறார் என்பதும் ஒரு கருத்து. பொதுவாக. நந்தி என்பது. தர்மம், நீதி நேர்மை போன்றவற்றிற்கு அடையாளமாகக் கொண்டுள்ளனர். இது தான் நம் நாட்டின் பழமையான நிலைப்பாடு. தர்மத்தின் குறியீடு நந்தி என்பதற்கு வேறு ஒரு சிறந்த உதாரணம் உண்டு. நம் நாட்டின் பழமையான சனாதன மதத்தை. த்தான் தற்போது இந்துமதம் என்று பெயரிட்டு அழைக்கிறோம். அந்த வகையில் இந்துமதத்தில் மனிதன் இறந்தபின் சுவர்க்கம், நரகம், பித்ருலோகம் என ஒரு உலகத்திற்கு மரணித்தவன் ஆத்மா செல்லும். அப்படி செல்லும் வழியில் வைத ரணி என்னும் ஆறு ஓடும்.. அதில் இரத்தமும் இ சீழும். ஓடும். அநேக பயங்கர கிரு மிகள் இருக்கும். முடைநாற்றம் வீசும். அதை கடந்து ஆத்மா செல்வது மிகக்கொடுமை. வாழ்ந்த காலத்தில் தர்மங்கள் செய்து தர்மநீதி தவறாது வாழ்ந்தவன் புண்ணிய பலன் அந்த ஆற்றை கடக்க உதவும். புண்ணிய பலம் எந்த அளவு உள்ளது என்பதை அறிய முடியாத நிலையில், மரணித்தவனுக்காகச் செய்யும் பித்ரு கடனில் விருஷபோற்சனம். என்ற ஒரு கிரியை .உண்டு. அதாவாது. ஒரு காளைக்கன்றை அலங்கரித்து. உரிய மந்திரங்கள் கூறி தகுந்த பிராமணனுக்கு, அதன் வாலைப் பிடித்து கையில் கொடுத்து தானம் செய்வதே. விருஷபோற்சனம். இதைச் செய்வதால் அந்தக் காளையின் வாலைப் பிடித்துக்கொண்டு அந்த நதியை ஆத த்மா தடக்கும் என்பது. நம்பிக்கை. இதன் தத்துவம் என்னவெனில் காளைக்கன்று தர்மத்தின் குறியீடு அதை தானம் செய்வதால் தர்மத்தின் புண்ணிய பலன் கூடும். அதனால் அந்த நதியை ஆத்மா கடக்கும் என்பதாகும். பிராமணனுக்கு தானம் அளிக்கவிட்டாலும் கோயிலு க்கு,விடுவதும் உண்டு. அதை கோயில்காளை என்பர். அப்படி விட்டவர் யாருக்காக விட்டார்களோ அந்த ஆத்மாவை அந்த காளை கொம்பில் சுமந்து ஆற்றைக் கடந்து விடும் என்பது நம்பிக்கை. எது எப்படி ஆனாலும் தர்மம் என்பதின் குறியீடு, அடையா ளமாக. காளையை நந்தியை கொள்வது, இந்திய பாரம்பரிய கொள்கை. எனவே தர்மத்தின் வழியில் நீதி நிலைநாட்டி. நேர்மையான அரசு நடத்த அடையாளமாகக் கொள்ளப்படும் செங்கோலில் தர்மத்தின் அடையாளமான நந்தி அமைவது. சாலச் சிறந்தது. மத சார்புடைய தல்ல. இந்திய நாட்டின் , தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளம் . இதை புரிந்து கொள்ள இன்னும் சில எடுத்துகாட்டுகள். காளையை தர்மநந்தி என்பதோடு. சிவனின் வாகனமாகவும் வைத்தனர். சிவனே முழுமுதற் கடவுன் அவரே படைக்கிறார், காக்கிறார் அழிக்கிறார். இதற்கு அவர் ஒரு தர்ம நியதி தத்துவமும் கால தத்தவ மும் கொண்டு செய்கிறார் என்பது சைவர்களின் நம்பிக்கை. காளை சிவனுக்கே சிறப்பான வாகனம்..நந்தியே அவருக்க காவல், செய்பவர். இப்படியெல்லாம் காளைமாட்டை தர்மத்தின் வடிவாகச் சித்தரித்துள்ளது இந்திய கலாச்சாரம் என்பதை நினைவில் கொண்டால் மாதச்சாயம் பூச வேண்டிய தேவை இல்லை. எந்த ஒரு நாடு அதன் காலாச்சாரத்தை பேற்றி காக்கிறதோ அந்த நாகு உல அரங்கில் உயர்வடையும் இந்தே நேசியா இன்று இஸ்லாமிய நாடானாலும் அவர்கள் காலச்சாரத்தைக் காக்கிறார்கள் அவர்கள் நாட்டு கரன்சியில் விநாயகர் லக்குமி போன்ற படங்கள் உள்ளன. அவர்கள் அதை மத அடயாளமாக கொள்ளாமல் கலாச்சாரமாகக் கொள்கின்றனர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard