— முனைவர் சி.சேதுராமன்.
தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் களவு, கற்பு என்ற இயல்களும் பொருளியல் என்பது ஐந்தாவது இயலாகவும் அமைந்துள்ளது. யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தொடு சேர்க்காமல் பிற இலக்கணத்தை; தனித்தனியாகக் கூறுவர். ஆனால் தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியல் என்றும் அணி இலக்கணத்தை உவமயியல் என்றும் கூறியுள்ளார். ஆறாவதாக மெய்ப்பாட்டியலும் ஏழாவதாக உவமவியலும் எட்டாவதாகச் செய்யுளியலும் ஒன்பதாவதாக மரபியலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன.
அகத்திணை – புறத்திணை
தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அவ்வொழுக்கம் தொடர்புடைய மனைவி, மக்கள் உற்றார், உறவினரோடு ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், அயலார், பொதுமக்கள் என்பவரோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. திணை என்பது ஒழுக்கம் என்பதால் அகவொழுக்கம் அகத்திணையிலும் புறவொழுக்கம் புறத்திணையிலும் கூறப்பட்டன.
புறவொழுக்கத்தைக் கூறும் புறத்திணையியலில் முதலாவதாகக் கூறப்படும் வெட்சி என்னும் ஒழுக்கம், அறவழியில் நடக்கும் மன்னன் ஒருவன்தான் படையெடுத்துச் செல்லும் செய்தியைத் தன் பகைவனுக்கு முன்னரே அறிவிப்பதாகும். திடீரென்று படையெடுத்துப் போனால் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிரும், பிணியுடையோரும், சிறுவரும் பிறரும் அஞ்சி அல்லலுற்று அலமருதல் வேண்டத் தகுந்ததில்லை என்ற அறவுணர்வுதான். பகைவர் எனினும் அவரிடம் அறவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை உணர்த்துவதே வெட்சி ஒழுக்கமாகும். இத்தகைய அடிப்படை உணர்வுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புறத்திணை இயலில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது வஞ்சித்திணை. வஞ்ச நெஞ்சப் பகைவனின் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வதே அது. மூன்றாவது உழிஞைத் திணை. பகை நாட்டிலுள்ள அரணை வளைத்துக் கைப்பற்றிக் கொள்வது. நான்காவது தும்பைத் திணை. போர்க்களத்தில் இருபடையும் பொருது வெற்றி தோல்வி அடைவது. ஐந்தாவது வாகைத் திணை. வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவது. ஆறாவது காஞ்சித்திணை. நிலையாமை பற்றி எண்ணிச் செயற்படுவது. ஏழாவது பாடாண்திணை. இஃது முன்னோர் கூறிய குறிப்பில் பரவலும் புகழ்தலும் செய்வது ஆகும்.
பாடாண்திணை
பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினைப் பாடாண் எனும் சொல் உணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.
பாடாண்திணை தனக்கென ஒரு தனிநிலை பெறாது பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழுக்கு ஏற்ற ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாக அமையும். அகத்திணை, புறத்திணை இரண்டும் மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவனவாகும். ஆதலால் பாடாண் திணையும் மக்களுக்கு உரியதாகவே ஆதல் வேண்டும். இது கருதியே பாடாண் பாடல்கள் எல்லாம் மக்களில் தக்காரின் புகழாகவே வரும் என்று கூறினர்.
பாடாண் திணையும் கைக்கிளையும்:
பாடாண் திணைப் பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது எட்டு வகையுடையதாகும் என்பதை,
‘‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங்காலை நாலிரண்டுடைத்தே’’(தொல்.புறத்.,20)
என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
கைக்கிளையில் காதற் சிறப்பு ஒருவருக்கே ஆகிவரும். அதுபோலப் பாடாண்திணையிலும் சிறப்பானது தகுதியுடைய ஒருவருக்கே உரித்ததாக வரும். கைக்கிளையில் காதற்கூற்று, பாராட்டும் தலைவனிடத்ததாகும். பாடாண்திணையில் புகழும் கூற்று புகழ்வோனிடத்திலேயே அமையும். கைக்கிளையில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுதல் உரிது. பாடாணில் பழி தழுவாத புகழ்ச்சி ஒன்றே பயின்று வரும். கைக்கிளைக்கும் பாடாணுக்கும் நிலமும் பொழுதும் வரையறையில்லை. ஒருதலையாய் வெளிப்படையாக அமையுமதனால் படாண்திணை கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.
ஒரு நிலத்திற்கு உரியதாக அன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோன்று ஒரு பாலுக்கு உரித்ததன்றி ஒருவரை ஒருவர் ஏதேனும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப்பெறுவது பாடாண்திணையாகும். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாது வெளிப்படையாக வருவதுமாகிய பண்பு இவ்விரண்டிற்கும் பொருந்தும். பாட்டுடைத் தலைவன் வணங்கிப் பாடும் புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணை ஆதலால் இஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று.
இல்லற வாழ்வில் ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்கங்களும், அரசியல் வாழ்விலே போர் வீரர்கள் மேற்கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்றும் அறுவகைப் புறத்திணை ஒழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக்கங்களை நிலைக்களமாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வனவாகும்.
பாடாண் திணையில் பாடுதல்வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்குறித்த திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும்.
தலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தரது ஒழுகலாறு பாடாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்புப் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாகும் எனவும் அச் செயல்களைக் கருவாகக் கொண்டு புலவர்கள் பாடும்போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக் குறிப்புப் பாடாண் என்னும் சார்புநிலைத் திணையாகும் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.
புலமையுடையோர் பலரும் தமது உரையினாலும், பாட்டினாலும் உயர்வாகப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க இல்வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற் தன்மையே தொல்காப்பியர் கூறிய பாடாண் திணை எனில் மிகவும் பொருத்தமுடையதாகும்.
வெட்சிப் பாடாண் – வெட்சியடியாகப் பிறப்பது
‘‘ஒன்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉம் என்ஐக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே’’(புறம்.,262)
பகைவருடைய தூசிப் படையை முறியடித்துப் பெயர்ந்து போகும் தன் படைக்குப் பின்னே நின்று ஆநிரையோடு வருகிறான் என் தலைவன். அவனுக்கு அருகேயிருந்து உடன் வரும் வீரர்கள் அவனைக் காட்டிலும் பெரிய பொலிவு உடையவராய் உள்ளனர் என்று கூறித் தலைவனையும் வெட்சியடியாகப் புகழப்படுவதால் இது வெட்சிப் பாடாண்திணை ஆயிற்று எனலாம்.
இவ்வாறே உழிஞைப் பாடாண் உழிஞையடியாகப் பிறப்பது:
‘‘ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும்செய்கை’’ (புறம்.,45)
என்று நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்திருந்தான். எனவே இது உழிஞையாயிற்று. கோவூர்க்கிழார், ‘‘உம்முள் ஒருவர் தோற்பினும் தோற்பது உம்குடியே! இருவரும் வெல்லுதல் இயற்கையும் அன்று; ஆதலால் நும் செய்கை உம் குடிக்குத் தக்க ஒரு செயல் அன்று’’ என்று குடியைப் புகழ்வதால் இது உழிஞைப் பாடாண்திணையாகும். இவ்வாறே பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு பாடாண்திணை வரும்.