(உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன)
ஜீலான் (சிலோன்) தீவை விட்டு வெளியேறி, மேற்கு நோக்கி அறுபது மைல்கள் பயணம் செய்தால் நீங்கள் ஒரு மாபார் (மலபார்) என்கிறதொரு பெரிய மாகாணத்தைச் சென்று அடைவீர்கள். இது ஒரு தீவு அல்ல. ஆனால் பெரிய இந்தியக் கண்டத்தின் ஒரு பகுதி. உலகின் மிக உன்னதமான, மிகப் பணக்கார நாடு அது.
இந்த நாட்டினை நான் கு மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் சுந்தர பாண்டி எனப் பெயரிடப்பட்டவர். அவரது ஆட்சிக்குட்ட பகுதி மிகவும் மீன் வளம் உள்ளது. ஜீலான் தீவிற்கும் மாபார் நாட்டிற்கும் இடையில் அமைந்துள்ள வளைகுடாவில் முத்துக்கள் அதிகம் விளைகின்றன. அந்த வளைகுடா அதிக ஆழமுள்ளதல்ல. அதிகபட்சம் பத்து முதல் பனிரெண்டு அடி ஆழமிருக்கலாம். சில இடங்களில் இரண்டு அடிகளுக்கும் குறைவான ஆழம் இருக்கிறது.
இந்தப் பகுதிகளில் மீன்பிடி வணிகம் கீழ்க்கண்டமுறையில் நடத்தப்படுகிறது,
பல வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு நிறுவனத்தை உருவாக்கி வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த நிறுவனத்தின் சார்பாக வெவ்வேறு அளவுகள் உள்ள பல படகுகளை வாங்கிக் கொண்டு அதில் பணி செய்ய பலரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அந்தப் படகுகள் அனைத்திற்கும் வலிமையான நங்கூரங்கள் வழங்கப்படுகின்றன. ஆழ் கடலுக்குள் மூழ்கி முத்துச் சிப்பிகளை எடுத்துவரும் திறமை வாய்ந்த பலரும் அந்தப் படகுகளில் இருந்தார்கள். அவர்கள் தங்களுடன் வலைகளால் செய்யப்பட்ட உறுதியான பைகளைத் தங்களின் உடலுடன் கட்டிக் கொண்டு கடலுக்குள் மூழ்குகிறார்கள். அந்தப் பைகள் நிறையும் வரையில் முத்துச் சிப்பிக்களைச் சேகரித்துப் பின்னர் கடலிலிருந்து வெளிவந்து அவற்றைப் படகுகளில் நிறைக்கிறார்கள். பின்னர் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் கடலுக்குள் மூழ்கி அதேமுறையில் பலதடவைகள் முத்துச் சிப்பிக்களைக் கொண்டு வருகிறார்கள்.
இந்தப் பகுதிகளில் கிடைக்கும் முத்துச் சிப்பிகளில் இருந்து பெறப்பட்ட முத்துக்கள் மிக வட்டமாக, அதிகப் பொலிவுடன் இருக்கின்றன. அதிகமான முத்துச் சிப்பிகள் கிடைக்கும் இடத்தினை கடற்கரையில் வசிப்பவர்கள் பெட்டலா என அழைக்கிறார்கள்.
இந்த வளைகுடாப் பகுதி முழுவதும் ஒருவகையான பெரிய மீன்கள் இருக்கின்றன. இந்த மீன்களால் முத்துக்குளிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் விளையலாம் என நம்புகிற வணிகர்கள் தங்களுடன் மந்திரங்கள் தெரிந்த பிராமணர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். அந்த பிராமணர்கள் தங்களின் மந்திர வலிமையால் அந்த மீன்களை மயக்கி அவற்றினால் முத்துக்குளிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
இந்த முத்துக் குளிக்கும் தொழில் பகல் நேரங்களில் மட்டுமே நடக்கவேண்டும் என்பது விதி. ஆனால் சிலர் எவருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக முத்துக்குளிப்பதும் உண்டு. அப்படியானவர்கள் சிக்கினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேற்படி மந்திரவாதிகள் இதனையும் தடுத்து அனைவரையும் வசீகரிக்கும் கலைகளில் திறமையானவர்கள்.
இந்தப் பகுதிகளில் முத்துக்குளித்தல் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாதத்தின் நடுப்பகுதிவரையில் தொடர்ந்து நடகிறது. அவ்வாறு கிடைக்கும் முத்துக்களில் பத்தில் ஒருபங்கு அந்த நாட்டின் அரசனுக்கு அளிக்கப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பாகவே இந்தப் பகுதிகளில் உள்ள முத்துச் சிப்பிக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடுகிறது. பின்னர் அந்தப் படகுகள் அனைத்தும் வேறுபகுதிகளை நோக்கிச் செல்கின்றன. அந்தப் பகுதி கரையிலிருந்து ஏறக்குறைய முன்னூறு மைல்கள் தூரத்தில் இருக்கிறது. செப்டம்பர் மாதம் அங்கு செல்லும் இந்த முத்துக் குளிக்கும் படகுகள் அக்டோபர் மாத மத்தியப்பகுதி வரையில் அங்கு இருக்கின்றன.
அரசனுக்கு அளிக்கப்படும் பத்தில் ஒருபங்கு முத்துக்கள் அனைத்தும் உயரிய தரத்துடன் இருந்தாக வேண்டுயது அவசியம். நன்கு பெரிய, அழகான வடிவமுள்ள முத்துக்களை மட்டுமே அரசன் தனக்கென தெரிவு செய்துகொள்கிறான். ஆனால் வணிகர்கள் எவரும் அவ்வாறு நல்ல முத்துக்களை அரசனுக்கு அளிப்பதில் தயக்கம் எதுவும் காட்டுவதில்லை.
இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் எப்போதும் நிர்வாணமாகவே காணப்படுகின்றனர். மறைக்க வேண்டிய உடல்பாகங்களை மறைக்க ஒரு சிறிய துண்டுத் துணியை மட்டுமே உபயோகிக்கின்றனர். அவர்களின் அரசன் தன் குடிமக்களை விடவும் அதிக ஆடைகளை அணிந்து காணப்படுவதில்லை. ஒரு விலையுயர்ந்த துணி மட்டுமே அவனது உடலை அலங்கரிக்கிறது என்றாலும் உடல் முழுக்க விலையுயர்ந்த ஆபரணங்கள், நகைகள், நீல மணிகள், முத்துக்கள், மரகதங்கள் போன்றவற்றை அணிந்திருக்கிறான். அதன் மதிப்பு மிகவும் அதிகமானது.
கழுத்தில் துவங்கி, மார்பகம் முழுக்க பட்டு நூலினால் கோர்க்கப்பட்ட பெரிய, அழகான முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்த மாலைகளில் இருக்கும் முத்துக்களின் எண்ணிக்கை நூற்று நான்கினைத் தாண்டுவதில்லை. அந்த அரசனின் மத நம்பிக்கைகளின்படி அவனது இறைவனின் பெயரைத் தினமும் நூற்று நான்கு முறைகள் அவன் பாராயணம் செய்தாக வேண்டும். அவனது முன்னோர்கள் அனைவருமே அதனைச் செய்தவர்கள். அவனது தினப்படி பிரார்த்தனைகளில் பக்காவுகா(!), பக்காவுகா (pacauca!) என நூற்று நான்கு தடவைகள் அவன் தொடர்ந்து சொல்லுகிறான்.
அந்த அரசனின் ஒவ்வொரு கையிலும் முத்துக்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தங்கக் காப்புகளை அணிந்துள்ளார்; இரண்டு கால்களின் மூன்று வெவ்வேறு பாகங்களின் மீது தங்கப்பட்டைகள் அலங்கரிக்கின்றன. அவரது கை விரல்களிலும், கால்விரல்கள் ஒவ்வொன்றிலும் விலையுயர்ந்த மோதிரங்கள் அலங்கரிக்கின்றன. தனது ராஜ்ஜியத்தில் கிடைக்கும் இந்த விலையுயர்ந்த முத்துக்கள், வைரங்கள், வைடூரியங்களைக் குறித்து அந்த அரசனுக்கு மிகவும் பெருமிதம் இருக்கிறது.
அவருக்கு குறைந்தது ஐநூறு மனைவிகள் மற்றும் காமக்கிழத்திகள் உள்ளனர். வீதியில் செல்லும்போது எந்தப் பெண்ணின் அழகாவது அவரைக் கவர்ந்தால் உடனடியாக அவளை அந்த அரசன் அடைய முற்படுகிறான். இதன் காரணமாகவே அவன் தனது சொந்த சகோதரனின் மனைவியையும் அந்த அரசன் தன்வசம் வைத்திருந்தான். அவர் ஒரு புத்திசாலி மற்றும் விவேகமான மனிதராக இருந்ததால், அதைச் செய்யக்கூடாது என்கிற எண்ணம் எனக்க்கு மேலோங்கியது.
மேற்படி ராஜா தனது அரச சபையில் பல மாவீரர்களை வைத்திருக்கிறார். அவரது மாட்சிமையின் அர்ப்பணிப்புள்ள, இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் அவருக்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடைய உண்மையான ஊழியர்கள். அவரது சேவகர்கள், மந்திரிப் பிரதானிகள் அனைவரும் அந்த அரசன் செல்லுமிடமெல்லாம் அவனுடன் செல்லுகின்றனர். அந்த ராஜ்ஜியத்தின் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரம் கணிசமானது.
அரசரின் மரணம் மற்றும் நிகழ்கையில் அவரது உடலை எரிக்கும் சடங்கு நடைபெறுகிறது, அவ்வாறு அவனது உடல் எரிக்கப்படும்போது அந்த அரசனுக்குச் சேவை செய்த படைவீரர்களும் அதே தீயில் விழுந்து இறக்கிறார்கள். அரசனுக்கு அடுத்த உலகத்திலும் சேவை செய்வதற்காக அவர்கள் இதனைச் செய்கிறார்கள்.
ராஜா இறந்தபிறகு ஆட்சிக்கு வரும் அவரது மகன் தன்னுடைய தந்தை சேகரித்து வைத்த சொத்து விவகாரங்களில் தலையிடுவதில்லை. தன்னுடைய தந்தை சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டால் அது தன்னுடைய ஆளுமைத்திறனை பாதிக்கும் என்னும் எண்ணம் பொதுவில் இருப்பதால் அவன் அதனைச் செய்வதில்லை. தானும் தனது தந்தையைப் போல ஆட்சி புரிந்து கருவூலத்தைச் செழுமையாக்க வேண்டும் என்னும் எண்ணமும் அதன் பின்னனியில் இருக்கிறது. இப்படியாகப் பெருமளவு செல்வம் அடுத்தடுத்த தலைமுறைகளினால் குவிக்கப்படுகிறது.
(உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழகச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன)
மாபாரிலே குதிரைகள் வளர்க்கப்படுவதில்லை. எனவே மாபார் அரசனும் அவனது மூன்று சகோதரர்களும் அந்த நாட்டிற்கு வரும் குதிரை வியாபாரிகளிடமிருந்து பெரும் பணம் கொடுத்து குதிரைகளை வாங்குகின்றனர். இதன் காரணமாக குதிரைவியாபாரிகள் பலர் பெரும் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய ஐந்தாயிரம் குதிரைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்படி வரும் குதிரைகள் ஒவ்வொன்றுக்கும் ஐநூறு சகி (பழங்கால அளவீடு) அளவிற்கான தங்கத்தைப் பெறுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரே வருடத்தில் பெரும்பாலான குதிரைகள் இறந்து போய்விடுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தாயிரம் குதிரைகளில் முன்னூறு குதிரைகள் மட்டும் உயிருடன் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு வருடமும் புதிதாக குதிரைகள் வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
என்னுடைய எண்ணம் என்னெவென்றால் இந்த நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை குதிரைகள் வளர்ப்பிற்கு ஏற்றதாக இல்லை என்பதாகும். எனவே இவற்றை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது மிகக் கடினமான காரியம். அதற்கும் மேலாக இந்தக் குதிரைகளுக்கு என்ன உணவு தருவது என்பது இவர்களுக்குத் தெரியாததால் அவற்றிற்கு இறைச்சி கலந்த அரிசிச் சோற்றினையும் இன்னபிற சமைத்த உணவு வகைகளையும் கொடுக்கிறார்கள். இந்தப் பிராந்தியங்களில் அரிசியைத் தவிர வேறெந்த தானியமும் விளைவதில்லை.
ஒரு புதுமையான பழக்கம் இந்தப் பகுதிகளில் காணப்படுகிறது. ஏதேனும் ஒரு குற்றம் செய்து அகப்பட்டுக் கொண்ட மனிதனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகையில், கொலையாளியின் கையால் இறக்காமல், தன்னுடைய உடலை ஏதோ ஒரு தெய்வத்திற்குப் பலி கொடுத்துக் கொள்வதாக வேண்டிக் கொள்கிறான். அவ்வாறான வேண்டுதலைக் கேட்கும் அவனது உறவினர்களும், நண்பர்களும் அவனை ஒரு நாற்காலியில் அமரவைத்து அவன் கையில் கூர்மையான பனிரெண்டு வாள்களைக் கொடுத்துப் பின்னர் அவனை ஊர்வலமாகச் சுமந்து செல்கிறார்கள். அந்த நகரமெங்கும் அந்த ஊர்வலம் செல்லுகிறது. அவ்வாறு செல்லுகையில் அவனுடன் இருப்பவர்கள் உரத்த குரலில் மேற்படி குற்றவாளியானவன் தன்னுடைய உடலை தனது இஷ்ட தெய்வத்திற்குப் பலி கொடுக்கப் போகிறான் எனச் சொல்லிக் கொண்டே செல்கிறார்கள்.
அவனுக்கு மரண தண்டனை வழங்கவிருக்கும் இடத்திற்கு வந்தவுடன் அவன் உடனடியாக இரண்டு வாட்களைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு "தனது இஷ்ட தெயவத்திற்குத் தன் உடலை பலியாக்கப் போவதாகச் சொல்லிவிட்டு" உடனடியாக அந்த வாட்களினால் தன் இரு தொடைகள், ஒவ்வொரு கைகளிலும் வாளினால் ஒரு வெட்டு வெட்டிக் கொள்கிறான். பின்னர் தனது வயிற்றில் இரண்டு வெட்டுக்களும், மார்பில் இரண்டு வெட்டுக்களையும் அந்தக் கத்தியினால் வெட்டிக் கொள்ளுகிறான். இப்படியாக அவன் தொடர்ந்து தனது இஷ்ட தெய்வத்தின் பெயரினை உச்சரித்துக் கொண்டே அந்த வாட்களினால் தன் உடலின் பல பாகங்களிலும் வெட்டிக் கொள்கிறான். இறுதியில் தன் இதயத்தை நோக்கிக் குத்திக் கொண்டு உடனடியாக மரணமடைகிறான்.
அவன் இறந்தவுடன் அவனது உறவினர்கள் அவனது உடலினை எடுத்துக் கொண்டு அதனை எரிப்பதற்காக மிகவும் கொண்டாட்டத்துடன் மயானம் நோக்கிச் செல்கிறார்கள். இறந்தவனின் மீது மிகவும் அன்பு கொண்ட அவனது மனைவியானவள் அவனைப் பிரிந்து உயிர்வாழ விரும்பாமல் அவளும் அதே சிதையின் மீது அமர்ந்து இறந்து போகிறாள். அப்படி இறக்கும் அந்தப் பெண் மிகவும் புனிதமானவளாகக் கருதப்படுகிறாள். அவளது உறவினர்களும், சாதியினரும் அவளை மிகவும் புகழ்ந்துரைக்கிறார்கள். அப்படிச் செய்ய மறுப்பவர்களை அந்த உறவினர்கள் வெறுக்கிறார்கள்.
அந்த நாட்டில் எவரும் மாடுகளை உண்பதில்லை. ஆனால் கௌய் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை ஆண்கள் இங்கு உள்ளனர். அவர்கள் மாடுகளின் இறைச்சியை உண்ணலாம் என்றாலும், அவர்கள் அதைக் கொல்லத் துணிவதில்லை. அதேசமயம் அவர்கள் ஒரு மாட்டின் சடலத்தைக் கண்டால், அது இயற்கையாக இறந்ததா அல்லது இல்லையா என்பதினை உறுதி செய்துகொண்ட பிறகே அதனை அவர்கள் உண்ணுகிறார்கள்.
அந்த நாட்டு மக்கள் தங்கள் வீடுகளை பசுவின் சாணத்தால் மெழுகுகிறார்கள். அவர்கள் தரையில் கம்பளங்களை விரித்து அமர்கிறார்கள். அதனைக் குறித்து நான் கேட்டபோது பூமித்தாய் மிகவும் புனிதமானவள் என்றும், நாமெல்லோரும் அதிலிருந்து முளைத்தவர்கள் என்றும், மீண்டும் ஒரு நாள் அங்கு திரும்புவோம் எனவும், அதன் காரணமாக பூமித்தாய்க்குப் போதுமான மரியாதை செய்ய இயலாது என்பதால் அவளை மிகவும் மதித்து நடக்கவேண்டும் எனவும் சொன்னார்கள். மாடுகளின் இறைச்சியைத் தின்னும் கெளய் இனத்தவர்கள் அப்போஸ்தலரான செயிண்ட் தாமசைக் கொலை செய்தவர்களின் வழி வந்தவர்கள் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த கெளய் இனத்தவன் எவனும் புனித அப்போஸ்தலரின் உடல் வைத்திருக்கும் கட்டிடத்தினுள் நுழைவதற்குத் தகுதியற்றவர்கள்.
(அதாகப்பட்டது தாமசைக் கொலை செய்தவன் இன்றைக்கு நமக்குச் சொல்லப்படுவதனைப் போல ஒரு பிராமணன் இல்லை என்கிறார் மார்கோ போலோ என்பதனை இங்கு கவனிக்கவேண்டும். பிராமணன் கொலை செய்தான் என்பது கிறி!ஸ்தவ தாசியின் மகன்கள் கட்டிவிடும் கட்டுக்கதை).
இந்த நாட்டில் அரிசி மற்றும் எள்ளினைத் தவிர்த்து எதுவும் விளைவதில்லை.
போர் புரிவதற்குச் செல்லும் படைவீரர்கள் ஈட்டியையும், கேடயத்தையும் மட்டுமே கொண்டு செல்கிறார்கள். உடைகள் எதுவும் அணியாமல் போர் புரிகிற போர்வீரர்கள் மிகவும் மோசமானவர்கள். அப்படிப் போர் செய்யும்போது அவர்கள் ஒருபோதும் பசுக்களையோ அல்லது வேறெந்த விலங்குகளையோ உணவுக்காகக் கொலை செய்வதில்லை. அதேசமயம் அவர்கள் விரும்பிய சமயங்களில் ஆடுகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவதற்குத் தயங்குவதில்லை. அந்த விலங்குகளைக் கொல்லுவதெற்கெனத் தனிப்பட்ட கசாப்புக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள்.
அங்கு ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு இருவேளைகள், காலை மற்றும் மாலை, குளிப்பதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு குளித்து உடலைச் சுத்தம் செய்யாமல் அவர்கள் எதனையும் உண்ணுவதோ அல்லது அருந்துவதோ இல்லை. இதனைக் கடைப்பிடிக்காத ஒருவனை மக்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள். அவர்கள் உணவு உண்கையில் தங்களின் வலது கையை மட்டுமே பயன்படுத்துவதனைக் கண்டிருக்கிறேன். இடதுகையால் அவர்கள் மறந்தும்கூட உணவினைத் தொடுவதில்லை. சுத்தமான அல்லது நுட்பமான வேலைகள் செய்வதற்கு வலது கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் வேளையில் அசுத்தமான தேவைகளுக்கு அவர்கள் தங்களின் இடது கைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அதற்கும் மேலாக குடி நீர் அருந்துவதற்கென ஒரு குறிப்பிட்ட வகையான பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நபரும் மற்றொரு நபரின் நீரருந்தும் பாத்திரத்தை உபயோகப்படுத்துவதில்லை. அப்படி நீருந்துகையில் அந்தப் பாத்திரம் உதட்டில் படாதவாறு தலையை மேலே உயர்த்திக் குடிப்பதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மதுபானங்கள் குடிக்கிற சமயங்களில் அவரவர் அவர்களின் சொந்த கிண்ணத்தை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அந்தக் கிண்ணத்தில் மதுபானமோ அல்லது தண்ணீரோ ஊற்றப்படுகிறது.
இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கடன் வாங்கி அதனைத் திருப்பித் தராதவனுக்குக் கீழ்க்கண்ட மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது,
பணம் கடன் கொடுத்தவன், கடனாளியிடம் பலமுறைகள் கேட்டுக் கொண்ட பிறகும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பொய்யான வாக்குறுதுகளைத் தந்து கொண்டே இருந்தால், கடன் கொடுத்தவன் அந்தக் கடனாளியைச் சுற்றி ஒரு வட்டம் வரைகிறான். அப்படி அவனைச் சுற்றி வட்டம் வரைந்த பிறகு அந்தக் கடனாளி தான் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிக் கட்டாமல் அந்த வட்டத்தை விட்டுத் தாண்டவே முடியாது. அப்படி உடனடியாக அவனால் திரும்பக் கொடுக்க முடியாவிட்டால், கடன் கொடுத்தவன் திருப்தியடையும் வகையில் அவனுக்கான பதிலை அவன் சொல்லியாக வேண்டும். அப்படிச் செய்யாமல் அவன் அந்த வட்டத்தைத் தாண்டி தப்ப முயன்றால் அது மரணதண்டனைக் குற்றமாகும். நீதிமன்றத்தில் அவனுக்கு உடனடியாக மரணதண்டனை அளிக்கப்படும்.
மார்கோ போலோ அந்த நாட்டிலிருந்து தன்னுடைய நாட்டிற்குத் திரும்புகையில் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியைக் காண நேர்ந்தது.
அந்த நாட்டின் அரசன் ஒரு வெளிநாட்டு வியாபாரியிடம் ஏராளமான கடன்பட்டிருந்தான். அந்த வியாபாரி பலமுறை அரசனிடம் சென்று தனது பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டபிறகும் அந்த அரசன் அவனுக்குப் பணம் தராமல் நீண்டகாலம் இழுத்தடித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அந்த அரசன் தனது குதிரையில் ஏறி ஊர்வலம் போய்க் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்ட அந்த வியாபாரி அந்த குதிரையைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுவிட்டான். அதனை உணர்ந்து கொண்ட அந்த அரசன் உடனடியாக தனது குதிரையை நிறுத்தி அந்த வட்டத்திலிருந்து தாண்டாமல் நின்று கொண்டான். அதன் பிறகு அந்த வியாபாரிக்குச் சேரவேண்டிய பணத்தை உடனடியாக அவனிடம் ஒப்படைத்த பின்னரே அந்த அரசன் அங்கிருந்து சென்றான். இவையத்தைனையும் நடுத்தெருவில், அந்த நாட்டுக் குடிமக்கள் பலர் பார்க்க நிகழ்ந்தது. தங்கள் நாட்டுச் சட்டத்தை மதிக்கும் தங்கள் அரசன் ஒரு நீதிமான் என அவர்கள் பாராட்டினர்.
இந்த நாட்டு மக்கள் திராட்சையால் தயாரிக்கப்பட்ட மதுவினை அருந்துவதைத் தவிர்க்கிறார்கள். பொதுவாக பெரும்பாலோர் எந்தவிதமான மதுவினையும் அருந்துவதில்லை. அவ்வாறான மது அருந்தும் குடிகாரன் ஒருவனின் சாட்சியம் அந்த நாட்டு நீதிமன்றங்களில் செல்லுபடியாவதில்லை. அவன் சொல்லும் சாட்சியத்தை நீதிபதிகள் நிராகரித்துவிடுகிறார்கள். இவர்களைப் போலவே கடலுக்குள் முத்துக்குளிக்கச் செல்லுபவர்களின் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் செல்லுபடியாவதில்லை. கடலுக்கு அடிக்கடி சென்று விலையுயர்ந்த முத்துக்களை எடுப்பவர்கள் பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது காரணத்தினால் அவர்களின் சாட்சியமும் மறுக்கப்படுகிறது.
(உண்மைகளும், தவறான புரிதல்களும், பல கற்பனைகளும் கொண்டவை மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகள். அதேசமயம் பனிரெண்டாம் நூற்றாண்டு தமிழகச் சித்திரத்தையும் அவை அளிக்கின்றன)
மாபாரின் கோடை மிகக் கடுமையானது. இதன் காரணமாகவே இந்தப் பகுதியின் மக்கள் மிகக் குறைவான ஆடைகளை அணிந்து திரிகிறார்கள். ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிய பெய்யும் மழைக்கு இடையில் மழை எதுவும் பெய்வதில்லை. அந்த மூன்று மாத மழையின் காரணமாக காற்றில் சூடு தணிந்து காணப்படுகிறது. அது இல்லாவிட்டால் இங்கு மனிதர்கள் வாழ்வதே கடினம்.
இந்த நாட்டில் பல அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். இயற்கையின் குணங்களைக் கற்பிக்கும் இயற்பியல் மற்றும் மனிதர்களின் குணங்களை அவர்களின் செயல்களின் அடிப்படையில் அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது போன்ற ஞானத்தையும் அவர்கள் கற்பிக்கிறார்கள். இம்மாதிரியான குணங்களை உடைய ஆண்கள் மற்றும் பெண்களை இங்கு மிக எளிதாக அடையாளம் காண இயல்கிறது. இந்த அறிவியல் நிபுணர்கள் சில விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகளைக் கவனித்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதினைக் கணிக்கிறார்கள். அதிலும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் வானத்தில் பறக்கும் பறவைகளை அடிப்படையாக வைத்து நல்லது நடக்குமா, இல்லையா என அறிந்து சொல்லுகிறார்கள்.
வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் சில மணி நேரங்கள் மிகவும் துரதிருஷ்டமானவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் எவரும் எதனையும் வாங்குவதோ அல்லது விற்பதோ இல்லை. பொதுவில் எந்தவிதமான கொடுக்கல், வாங்கல்களையும் அந்த நேரத்தில் இங்கிருப்பவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படியான செயல்கள் வெற்றிகரமாக இருக்காது என்பதே இவர்களின் அடிப்படையான நம்பிக்கை. ஒவ்வொரு நாளின் நேரத்தையும் கணிக்க ஒரு மனிதனை வெயிலில் நிற்க வைத்து அதன் மூலமாக கீழே விழும் அவனது நிழலின் நீள, அகலத்தின் மூலம் நேரத்தைக் கணிக்கிறார்கள்.
இங்கிருக்கும் ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, அந்தக் குழந்தையின் தகப்பனானவன் அந்தக் குழந்தை பிறந்த நாள், நேரம், நட்சத்திரம், மாதம், வருடம் என அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைக்கிறான். அந்தக் குழந்தையின் ஒவ்வொரு எதிர்காலச் செயலும் அந்த ஜோதிடக் குறிப்பின்படியே நடக்கும் என்னும் நம்பிக்கை இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள்.
அந்தக் குழந்தை மகனாக இருந்தால் அவனுக்குப் பதின்மூன்று வயதானவுடன் அவனைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறார்கள். அவன் அதற்குமேல் தகப்பனின் வீட்டில் இருக்கத் தேவையில்லை. அவனுக்கு இருபத்து மூன்று groats(?!) (தோப்புகள்? அல்லது ஆடுகள்?) வாங்கும் அளவிற்குச் சமமான பணம் கொடுக்கப்படுகிறது. இப்படிக் கொடுக்கும் பணம் அவன் சுதந்திரமாக அவனது வாழ்வினை அமைத்துக் கொள்வதற்கான அடிப்படையை அளிக்கிறது. அவன் அந்தப் பணத்தைக் கொண்டு ஏதோ ஒருவகையில் வணிகம் செய்து நலமாக இருக்கிறான். அப்படிப் பணம் பெற்றுக் கொண்ட சிறுவன் நாளெல்லாம் அந்த நாட்டின் ஒருபகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஓரிடத்திலிருந்து பொருட்களை வாங்கி இன்னொரு இடத்தில் விற்று லாபம் சம்பாதிப்பதனை அவன் நிறுத்துவதே இல்லை.
முத்துக்குளிக்கும் காலத்தில் கடற்கரைக்கு அதிகமாக வரும் இந்த இளைஞர்கள் அங்கிருக்கும் மீனவர்களிடமிருந்து ஐந்து அல்லது ஆறு சிறிய முத்துக்களை வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றை அங்கிருக்கும் வியாபாரிகளிடம் கொண்டு சென்று விற்கிறார்கள். அதிக வெயிலின் காரணமாக வீட்டிலேயே உட்கார்ந்திருக்கும் வியாபாரிகளிடம் சென்று தாங்கள் மிகவும் சிரமப்பட்டு மிக அதிக விலைக்கு இந்த முத்துக்களை வாங்கியதாகவும், அதற்கேற்ற விலையை அவர்கள் தரவேண்டும் எனவும் கோருகிறார்கள். அதனை வாங்கிப் பார்க்கும் வியாபாரிகள் அந்த முத்துக்களின் தரத்திற்கேற்ப அந்தச் சிறுவர்களுக்குப் பணத்தை அளிக்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாங்கிய விலையைவிடவும் அதிகமாகவே இருக்கும்.
இதனைப் போல பலவிதமான பொருட்களை அந்தச் சிறுவர்கள் இளவயதிலேயே வாங்கி, விற்று மிகத் திறமையான வியாபாரிகளாக வளர்கிறார்கள். அன்றன்றைக்கு அவர்கள் சம்பாதிக்கும் லாபப் பணத்தைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு அதனை அவர்களின் அன்னையர்களிடம் தருகிறார்கள். அதனைக் கொண்டு சமைத்த உணவினை மட்டுமே அந்த இளைஞர்கள் உண்ணுகிறார்கள். ஒருபோதும் அவர்களின் தகப்பனின் சம்பாத்தியத்தில் வந்த பணத்தால் அவர்கள் உண்ணுவதில்லை.
இந்த ராஜ்ஜியத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்ற விலங்குகளும், பறவைகளும் நமது நாட்டிலிருப்பவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானவை. குயிலைத் தவிர. இந்தியக் குயிலைப் போலவே நமது நாட்டுக் குயில்களும் இருக்கின்றன. மிகப் பெரிய வல்லூறுக்கு இணையான அளவில் வெளவால்களும், காக்கையைப் போலக் கறுத்து வல்லூறுகளும் நமது நாட்டிலிருப்பதனைவிடவும் பலமடங்கு பெரியதாக இருக்கின்றன. மிக வேகமாகப் பறக்கும் இந்த வல்லூறுகள் தாங்கள் குறிவைத்த இரையைத் தப்பவிடுவதேயில்லை.
மாபாரில் பல பெரும் ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களில் ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் இருக்கின்றன. இந்தத் தெய்வங்களுக்குப் பெற்றோர்கள் தங்களின் மகள்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள். இவ்வாறு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் விஷேஷ நாட்களில் ஆலயங்களுக்கு வந்து இறைவனுக்கு அளிக்கப்படுகிற பூஜை, புனஸ்காரங்களில் கலந்து கொள்ளுகிறார்கள். அப்படியான நாட்களில் இந்தப் பெண்கள் இசைக்கருவிகளை இசைத்து மிக இனிமையாகப் பாடி ஆடுகிறார்கள். இம்மாதிரியான பெண்கள் ஏராளமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். வாரத்தில் பல நாட்களில் இறைவனுக்கென விஷேஷமாகத் தயாரித்த உணவுப் பொருட்களை சுமந்து சென்று தாங்கள் அர்ப்பணிக்கப்பட்ட இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பின்னர் அதனை பிறருக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள்.
இந்த மாதிரியான படையல்களைப் படைப்பதற்கெனவே ஆலயங்களில் ஒரு விசேடமான மேசைகள் அமைக்கப்பட்டு, அதில் இந்தப் பெண்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டு வைக்கப்படுகிறது. இறைவனுக்கு முன்னர் அந்தப் பெண்கள் ஒருமணி நேரம் வரையில் நிற்காமல் பாடி, ஆடுகிறார்கள். பின்னர் அந்த உணவுகள் அங்கு வந்திருக்கும் பக்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகள் ஒவ்வொரு வருடமும் பலமுறை செய்யப்படுகிறது.
இளம்பெண்கள் இந்த மாதிரியான பூஜைகளை இறைவனுக்குச் செய்வதற்கான காரணம் இவ்வாறு விளக்கப்படுகிறது,
ஆலய பூசாரிகள் தங்களின் கடவுள்கள் கோபமான நிலையில் இருப்பதாகவும், அதன் காரணமாக மானுடர்களிடம் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும், அதனை மாற்றி இறைவனை சாந்தப்படுத்தி மானுட குலத்திற்கு நன்மைகள் செய்விப்பதற்காகவும் இம்மாதிரியான வழிபாடுகளை நடத்தவேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கிறார்கள். இதற்காக ஆண்களும், பெண்களும் தங்களின் இடையில் சுற்றிய ஆடைகளைத் தவிர வேறெதனையும் அணியாமல் அங்கிருக்கும் ஆண், பெண் கடவுளர்களைச் சுற்றி வந்து பல பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள். இம்மாதிரி செய்வதன் காரணமாக இறைவனின் கோபம் தணிந்து தங்களின் பக்தர்களுக்கு அருளுவதாக இந்த மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நாட்டு மக்களின் படுக்கை மிக மெல்லிய பிரம்புகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரு கயிற்றினை இழுக்கையில் அந்தப் படுக்கையைச் சுற்றிலும் துணிகளால் ஆன திரை விழுந்து அவர்கள் நிம்மதியாக உறங்க வழி செய்கிறது. இந்த நாட்டில் இருக்கும் பல பூச்சிகள், ஈக்கள், கொசுக்களின் தொல்லையிலிருந்து இந்தத் திரைகள் அவர்களைக் காக்கின்றன. இம்மாதிரியான படுக்கைகள் அந்த சமுதாயத்தின் பணக்காரர்களால் மட்டும் முக்கியஸ்தர்களால் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. மற்றவர்கள் தெருவில் கிடந்து உறங்குகிறார்கள்.
(போகிற போக்கில் மார்கோ போலோ அவர் பங்கிற்கு தாமஸ் புரட்டுக்களை அவிழ்த்துவிட்டுச் செல்லுகிறார். அவருக்கு யாரோ சொல்லிய புளுகுகளின் அடிப்படையில் அவரது தாமஸ் குறித்தான புளுகுகள் இருக்கின்றன. தாமஸ் புரட்டு குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது முற்றிலும் பொய்யான ஒன்று என இன்றைக்கு நிருபிக்கப்பட்டிருப்பதனை நினைவில் கொள்க).
இந்த மாபார் மாகாணத்திலே புகழ்பெற்ற தியாகியான அப்போஸ்தலர் செயிண்ட் தாமசின் உடல் இருக்கிறது. அவரது உடல் ஒரு சிறிய ஊரில் (சென்னைக்கு அருகில்) துயில் கொள்ளுகிறது. ஆனால கிறிஸ்தவ வியாபாரிகள் எவரும் அங்கு அதிகம் செல்லுவதில்லை. ஏனென்றால் அந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை. அதேசமயத்தில் அங்கு பல கிறிஸ்தவர்களும், சரசன்ஸ்களும் (Saracens) பெருமளவு இருக்கிறார்கள். அவர்கள் தாமசை ஒரு பெரும் புனிதராகவும், தெய்வீகம் பொருந்தியவராகவும் அர்த்தமுடையா அனானியா என்கிற வார்த்தையில் அழைத்தார்கள்.
புனித அப்போஸ்தலரின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்லும் கிறிஸ்தவர்கள் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இடத்திலிருந்து மண்ணைச் சேகரித்து எடுத்துச் செல்லுகிறார்கள். அந்த மண் சிவந்த ரத்தத்தின் நிறத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு மிகக் கவனத்துடன் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த மண் பல அற்புதங்களையும் செய்துகாட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த மண்ணை நீரில் கலந்து குடிக்கிற நோயாளிகள் உடனடியாக சொஸ்தமடைவதாகச் சொல்லப்படுகிறது.
நமது பிரபுவான ஏசு கிறிஸ்துவின் நாமத்தாலான ஆண்டு 1288 ஆம் வருடம் இந்த மாபார் பகுதியில் இருந்த ஒரு வலிமையான சீமான் ஒருவன் தன்னுடைய வயற்காட்டில் விளைந்த ஏராளமான நெல்லை சேமித்துவைக்க இடமில்லாததால் நமது அப்போஸ்தலர் புதைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் அவற்றைச் சேமித்து வைக்க எண்ணினான். அதன்படியே அங்கு சேமித்தும் வைத்தான். ஆனால் அந்த தேவாலயத்தின் பாதுகாவலர்கள் புனிதரின் உடலைப் பார்க்க வரும் பக்தர்கள் தங்குவதற்குச் சிரமமாக இருப்பதால் அந்த நெல்லை அங்கிருந்து நீக்கக் கோரினர். ஆனால் அந்தச் சீமானானவன் அந்த நெல்லை அங்கிருந்து அகற்ற மறுத்துவிட்டான்.
அன்றைய இரவே நமது அப்போஸ்தலரானவர் அந்தச் சீமானின் கனவில் கத்தியுடன் தோன்றி, அந்தச் சீமானின் கழுத்தில் அந்தக் கத்தியை வைத்து, "என்னுடைய இருப்பிடத்தை ஆக்கிரமித்து நீ வைத்திருகும் பொருட்களை உடனடியாக நீக்காவிட்டால் நான் உனக்கு மிகக் கொடுமையான மரணத்தை அளிப்பேன்" என மிரட்டினார். இந்த பயங்கரமான கனவிலிருந்து விழித்த அந்தச் சீமான் உடனடியாக தனது படைகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்த நெல்லை அப்புறப்படுத்தினான். அத்துடன் நில்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் தான் தனது கனவில் அப்போஸ்தலரைக் கண்டதாகக் கூறினான். இதனைப் போன்ற பல அற்புதங்கள் அந்த இடத்தில் நிகழ்த்திக் காட்டப்பட்டன. நோயாளிகள் குணமடைவதும், ஊனமுற்றவர்கள் நலமடைவதும் நாளும் நடந்து கொண்டிருக்கிறது.
மேற்படி கிறிஸ்தவ தேவாலயத்தைப் பராமரித்துவருபவர்கள் அங்கிருந்த மரங்களில் கிடைக்கும் ஒருவிதமான கொட்டையை வியாபாரம் செய்து அதன் மூலம் பொருளீட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பணத்தில் ஒருபகுதியை அந்தப் பணக்காரச் சீமானுக்கு மாதாந்திர வாடகையாகவும் கொடுத்து வருகிறார்கள்.
இந்த கிறிஸ்தவ புனிதரின் மரணம் கீழ்க்கண்டவாறு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது,
தனது தினப்படி ஆராதனைகளை முடித்துக் கொண்ட அப்போஸ்தலர் தன்னுடைய இருப்பிடத்தில் மயில்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் உருவ வழிபாட்டுக்காரனான ஒரு கெளய் (Gaui) இனத்தவன் அந்தவழியே சென்றிருக்கிறான். அங்கு அப்போஸ்தலர் அமர்ந்திருப்பதனை அறியாத அவன் தன்னுடைய அம்பினால் அங்கிருந்த ஒரு மயிலைக் குறி வைத்து தன் வில்லை வளைத்து ஒரு அம்பினை எய்தான். துரதிருஷ்டவசமாக அந்த அம்பு அப்போஸ்தலரின் பக்கவாட்டில் தாக்கியது. கடுமையாக காயமடைந்த அப்போஸ்தலர் இனித் தான் உயிர் பிழைப்பது கடினம் என்பதினை உணர்ந்து கொண்டு, தன்னுடைய தேவனின் ஆசிர்வாதங்களுக்கு நன்றி கூறி அந்த இடத்திலேயே மரித்தார்.
(இந்தப் புரட்டுக்கதை நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம் மாறுபடுவதனைக் கவனிக்கலாம். தற்போது தாமசைக் கொன்றவன் ஒரு பிராமணன் எனப் புளுகுகள் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. அதனையும் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள் இன்றைக்கு)
*
இந்த மாபார் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் கறுமை நிறமுடையவர்கள் என்றாலும், மேலும் கறுப்பாவதற்காகச் செயற்கையான கறுப்பு நிற சாயத்தை உடலெங்கும் பூசிக் கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தினமும் மூன்று வேளைகள் எள்ளு எண்ணெயை (நல்லெண்ணெய்) உடலெங்கும் பூசுகிறார்கள். அவர்கள் வணங்கும் கடவுளர்களும் கறுப்பு நிறத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிசாசுகள் அனைத்திற்கும் வெள்ளை நிறம் உபயோகப்படுத்தப்படுகிறது.
அவர்களில் பலர் தங்களின் காளை மாடுகளின் மீது தாளாத பிரியம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் போருக்குச் செல்லுகையில் தங்களின் பிரியப்பட்ட காளையின் உடலிலிருந்து சிறிதளவு ரோமத்தை எடுத்து அதனைத் தங்கள் குதிரைகளின் பிடறியில் கட்டி வைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படிச் செய்வது தங்களுக்கு எல்லாவிதமான ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாப்பினை அளிக்கும் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாகவே அந்த நாட்டின் காளை மாட்டு ரோமம் மிக அதிகமான விலைக்கு அந்த நாட்டில் விற்கப்படுகிறது.
*
முர்பிலி அல்லது மொன்சுல் (MURPHILI OR MONSUL) ராஜ்ஜியம் குறித்து: (ஆந்திரா?)
மாபார் ராஜ்ஜியத்தைக் கடந்து, வடக்கு முகமாக ஐநூறு மைல்கள் பயணம் செய்தால் முர்பிலி ராஜ்ஜியத்தை அடையலாம். அங்கு வசிக்கும் சிலை வணங்கிகள் எந்த ராஜ்ஜியத்திற்கும் கட்டுப்படாத சுதந்திரமுடையவர்கள். அங்கு அரிசியும், மீனும் பலவைகயான கனிகளும் கிடைக்கின்றன.
இந்த ராஜ்ஜியத்தின் மலைகளில் ஏராளமான வைரங்கள் கிடைக்கின்றன. மழைக்காலங்களில் இந்த மலைகளின் முகடுகள், பாறைகளின் இடைவெளி வழியாக நீர் மிகுந்த சக்தியுடன் வழிந்தோடுகிறது. மழை நின்றவுடன் அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாகப் புறப்பட்டு ஆற்றங்கரைகளிலும், குகைகளிலும் வைரங்களைத் தேடுகிறார்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர்கள் ஏராளமான வைரங்களை பொறுக்கி எடுக்கிறார்கள். வெயில் அதிகமிருக்கும் கோடைக்காலங்களில் அந்த நாட்டு மக்கள் மிகவும் சிரமத்துடன், கொடிய விஷப்பாம்புகளையும் பொருட்படுத்தாமல் அங்கிருக்கும் மலைகளின் உச்சிகளை நோக்கி ஏறிச் செல்லுகிறார்கள்.
அந்த மலைகளின் உச்சிகளுக்கு அருகில் இருக்கும் பள்ளத்தாக்குகளில் ஏராளமான குகைகள் இருக்கின்றன. அந்தக் குகைகளில் ஏராளமான வைரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அந்தக் குகைகளை சென்றடைவது மிகவும் கடினமான, ஆபத்தானதொரு செயல். மலை உச்சிகளில் ஏராளமான கழுகுகளும், வெள்ளை நாரைகளும் வசிக்கின்றன. அந்தப் பகுதிகளில் இருக்கும் விஷப்பாம்புகளை உண்ணுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கும் அந்த கழுகுகளும், நாரைகளும் மலை உச்சிகளில் தங்களின் கூடுகளைக் கட்டி இருக்கின்றன.
வைரங்களை எடுக்கும் ஆசையுடன் அந்த மலைகளின் உச்சிகளுக்குச் சென்றவர்கள் அந்த ஆபத்தான குகைகளின் வாயிலில் இறைச்சித் துண்டங்களைத் தூவி வைக்கிறார்கள். கழுகுகள் அந்த இறைச்சியைத் தூக்கிக் கொண்டு தங்களின் கூட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் அந்த மனிதர்கள் உடனடியாக அந்தக் கூடுகளை நோக்கி இறக்கி அந்தப் பறவைகளை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு அந்த இறைச்சித் துண்டங்களைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் அந்த இறைச்சித் துண்டங்களில் பல விலையுயர்ந்த வைரங்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அந்தக் கழுகு அந்த இறைச்சித் துண்டத்தை விழுங்கிவிட்டால் அவர்கள் விடிகாலை வரையில் காத்திருந்து பின்னர் பாறைகளுக்கு இடையில் அந்தக் கழுகின் எச்சத்தைத் தேடுகிறார்கள். அதிலும் அவர்களுக்கு வைரங்கள் கிடைக்கின்றன.
அவ்வாறு கிடக்கும் வைரங்களில் பலவும் அந்த நாட்டு ஆட்சியாளர்களைச் சென்று சேர்கின்றன.
மேலும், இந்த ராஜ்ஜியத்தில் மிக அற்புதமான பருத்தி விளைகிறது. ஏராளமான மாடுகளும், உலகிலேயே மிகப்பெரிய ஆடுகளும் அங்கிருக்கின்றன. அங்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள் பலவிதமானவை.
லாக் லோயக் அல்லது லார் (LAC LOAC OR LAR ) பகுதி குறித்து: (கேரளா? அல்லது கோவை?)
மாபாரிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றால் லார் என்கிற பகுதியைச் சென்றடைவீர்கள். இங்கிருந்துதான் பிராமணர்கள் இந்தியாவெங்கும் பரவினார்கள்.
இந்த லார் பகுதியில்தான் உலகத்திலேயே மிக நேர்மையான வியாபாரிகளைக் காணுவீர்கள். அவர்களிடம் எதனை அள்ளிக் கொடுத்தாலும் அதற்காக அவர்கள் பொய்யான செயல்களைச் செய்யமாட்டார்கள். அதில் அவர்களின் வாழ்வே அடங்கியிருந்தாலும் அவர்கள் பொய்களைச் சொல்லுவதில்லை. பிறரை வஞ்சகமாக ஏமாற்றிப் பொருள்களைக் கவர்ந்து செல்பவர்களை அவர்கள் முழுமையாக வெறுத்தார்கள். அதனைப் ஏக பத்தினி விரதர்களான அந்த வியாபாரிகள் பத்தினிகளான தங்களின் மனைவியரைத் தவிர்த்து வேறெந்த பெண்களையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
வெளிநாடுகளிலிருந்து இந்தப் பகுதிக்கு வரும் வியாபாரிகள் லார் பகுதி வியாபாரிகள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு அவர்களிடம் வியாபாரம் செய்தார்கள். இந்த வெளி நாட்டு வியாபாரிகளின் கணக்கு வழக்குகளை இங்கிருந்த பிராமணர்கள் மேற்பார்வை பார்த்து சிறப்பாக நிர்வாகம் செய்தார்கள். தங்கள் நாட்டுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வியாபாரிகளை ஏமாற்றி அவர்களின் பொருட்களைக் கவரவேண்டும் என எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாக, அவர்கள் தவறேனும் செயதால் அவர்களை மன்னிப்பவர்களாக இந்த பிராமணர்கள் இருந்தார்கள். அதேசமயம் இந்த பிராமணர்களுக்குத் தேவையான பொருளுதவிகளை அவர்களின் கடமைக்கேற்ப அவர்களின் முதலாளிகள் அளித்தார்கள்.
லார் பகுதியில் வசிப்பவர்கள் மதுவருந்துவதனையும், இறைச்சியை உண்பதினையும் செய்தார்கள் என்றாலும் அவர்கள் ஒருபோதும் நேரடியாக எந்த விலங்கினையும் கொல்வதனைத் தவிர்த்தார்கள். அவ்வாறு விலங்குகளைக் கொல்வதற்கென்றே முகமதியர்களை வேலைக்கு வைத்திருந்தார்கள். வெளி நாட்டு வியாபாரிகளுக்கு உதவிகள் செய்யும் பிராமணர்கள் தங்களின் அடையாளச் சின்னமாக ஒரு கடினமான பருத்திக் கயிற்றினைத் தங்களின் தோள்களின் வழியாக கைகளுக்கு அடியில் தொங்கும்படி இட்டிருந்தார்கள் (பூணூல்). அவர்களை முன்னாலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ பார்த்தாலும் அந்த நூல் தெளிவாகத் தெரியும்படி தொங்கவிடப்பட்டிருந்தது.
அந்த நாட்டு அரசன் மிக வலிமையானவன் மட்டுமல்லாமல் மிகுந்த செல்வந்தனுமாக இருந்தான். அவனிடம் ஏராளமான விலையுயர்ந்த வைரக் கற்களும், முத்துக்களும் இருந்தன. மாபாரிலிருந்து வரும் வியாபாரிகள் மிகுந்த தரமுடைய முத்துக்கள், வைரங்களை மட்டுமே அந்த அரசனுக்கு விற்பனை செய்தார்கள். அதனைக் கண்டு மகிழ்ந்த லார் அரசன், அந்த வியாபாரிகள் கேட்கும் விலையை விடவும் இரண்டும் மடங்கு விலையை அவர்களுக்கு அளித்து மகிழ்ந்தான்.
இந்தப் பகுதி மக்கள் மிக மோசமான சிலை வணங்கிகள். அதற்கும் மேலாக சகுனங்களிலும், அறிகுறிகளிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சந்தையில் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர், வெட்டவெளியில் நின்று கீழே விழும் நிழலினை உற்று நோக்குகிறார்கள். அந்த நிழலின் நீளம் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே அந்தப் பொருளை வாங்குகிறார்கள்.
அதற்கும் மேலாக, அவர்கள் ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்குகையில் சுவற்றில் ஏதேனும் சிலந்தி தென்பட்டால் அந்தச் சிலந்தி எந்தத் திசையிலிருந்து வந்தது என்பதனைக் கவனித்து அதற்கேற்றபடியே வியாபரம் செய்யத் துணிகிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்கையில் யாரேனும் தும்மினால் உடனடியாக அவர்கள் வீட்டுக்குள் திரும்பச் சென்றுவிடுகிறார்கள். பின்னர் வீட்டுக்குள்ளேயே அமர்ந்து கொள்கிறார்கள்.
அவர்களின் உணவுப் பழக்கம் அருவருப்பானது. அவர்களில் பலர் நீண்டகாலம் உயிர்வாழ்கிறார்கள். அவர்களின் பற்கள் ஒருவிதமான கறையால் பாதுகாக்கப்படுகின்றன. அந்தக் கறையானது அவர்கள் தொடர்ந்து மெல்லும் ஒரு விமான இலையினால் உருவானது. அந்த இலை அவர்களுக்கு நல்ல செரிமானத்தைக் கொடுத்து பொதுவில் அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கிறது.
இந்தப் பகுதியின் மக்களிடையே இவர்களின் மதங்களுக்கென அர்ப்பணித்து வாழும் ஜோகிக்கள் (யோகி) வாழ்கிறார்கள். அவர்கள் மிகுந்த ஆசாரமான, தெய்வீகத்தன்மை கொண்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த ஜோகிக்கள் எந்த உடையையும் அணியாமல் நிர்வாணமாகவே எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள். அதனைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான கூச்ச உணர்வு இல்லை. அடுத்தவர்கள் தன்னைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் இல்லாமல் அவர்கள் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அவர்களின் மனதில் எந்தப் பாவகரமான எண்ணங்களும் இல்லாததால் அவர்கள் அப்படிச் செய்வதில் எவரும் குற்றம் காணுவதில்லை.
லார் பகுதி மக்கள் தங்களின் காளைகளின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தக் காளைகளுக்குப் பலவிதமான அலங்காரங்கள் செய்து மகிழ்கிறார்கள். அதன் கொம்புகளுக்கு வர்ணங்கள் பூசி, அதனிடையே சிறிய ஆபரணங்களைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இறந்த காளைகளின் எலும்பினை எரித்துப் பஸ்பமாக்கி அதனைத் தங்களின் உடலில் பல பாகங்களிலும் பூசிக் கொள்ளுகிறார்கள். அந்தச் சாம்பலைத் தங்களின் உடலில் பூசிக் கொள்ளுவதனை ஒரு புனிதமான காரியமாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் போகும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்தால் அவர்களின் நெற்றியிலும் இந்தச் சாம்பலை மிகுந்த வாஞ்சையுடன் பூசி மகிழ்கிறார்கள்.
தங்களின் வாழ்நாளில் ஒரு சாதாரண ஈ, எறும்பு அல்லது பேனைக் கூடக் கொல்வது பாவம் எனவும், இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆன்மா இருப்பதாகவும், விலங்குகளைக் கொன்று புசிப்பது பாவத்திலெல்லாம் பெரும் பாவம் எனவும் லார் ராஜ்ஜியத்தின் ஜோகிகள் நினைக்கிறார்கள். அதற்கும் மேலாக, பச்சைக் காய்கறிகளுக்கும் உயிர் இருப்பதாக அந்த ஜோகிகள் நினைப்பதால் அவர்கள் அதனை உண்பதில்லை. அதற்குப் பதிலாக காயவைக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், பழங்கள், வேர்கள் ஆகியவற்றைப் புசிக்கிறார்கள். அதுபோல உணவினை வைத்துக் கொள்வதற்கு எந்தவிதமான பாத்திரங்களையோ அல்லது கரண்டிகளையோ அவர்கள் உபயோகப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக காய்ந்த இலைகளை அவர்கள் உபயோகிக்கிறார்கள்.
அந்த யோகிகளில் பல நீண்டகாலம் உயிர்வாழ்கிறார்கள். சிலர் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான உடல் நலத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் படுப்பது வெறும் கட்டாந்தரையில்தான். அவர்கள் இறந்ததும் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. தங்களின் உடல்கள் புதைக்கப்பட்டால் அதில் பல புழுக்களும், பூச்சிகளும் உருவாகும் என்கிற காரணத்தால் அவர்கள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் செய்த பாவங்களை அவர்களின் ஆன்மா சுமக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.
*
காயில் நகரம் (City of Kael): (காயல்பட்டினம்?)
ஓரளவிற்குப் பெரிய நகரமாக காயிலை அஸ்தியர் என்பன் ஆட்சி செய்கிறான். அவன் மாபார் அரசனின் நான்கு சகோதரர்களில் ஒருவன். நாம் ஏற்கனவே சொன்ன மாபார் அரசனின் சகோதரனான இவ கணக்கில்லாத அளவிற்குத் தங்கமும், வைரமும் வைத்திருப்பவன். அவன் நாட்டினை மிகவும் அமைதியான முறையில் மிகச் சிறப்பாக ஆண்டு கொண்டிருப்பவன். இந்தக் காயில் நகரத்திற்குப் பல நாட்டிலிருந்தும் வியாபாரிகள் வந்து குவிந்தார்கள். அவர்களையெல்லாம் காயல் அரசன் மிகவும் மரியாதையாக நடத்தினான். மேற்குலக் நாடுகளான ஓர்மஸ், சிஸ்தி, ஏடன் மற்றும் அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் ஏராளமான பொருட்களுடன் குதிரைகளையும் சுமந்துவந்து இந்தக் காயில் துறைமுகத்தில் இறக்கின. இம்மாதிரியான வியாபாரத்திற்கு இந்தக் காயில் பகுதி மிகவும் உகந்ததாக இருந்தது.
இந்தக் காயில் அரசன் ஏறக்குறைய முன்னூறுக்கும் அதிகமான அழகான பெண்களைத் தன்னுடன் வைத்திருந்தான்.
இந்த நகரத்து முழுவதும் இருக்கிற ஜனங்கள், பொதுவில் இந்தியாவி இருக்கிற அத்தனை ஜனங்களும், காலை முதல் மாலைவரையில் வெற்றிலையைக் குதப்பும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் இன்பத்திற்காகவும் அவர்கள் இந்தத் தம்பல் (தாம்பூலம்) பழக்கத்தை விடாது செய்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக வெற்றிலையை மென்றுவிட்டு எச்சிலை கண்ட இடங்களில் துப்புகிறார்கள். இவர்களில் நல்ல வசதி உள்ளவர்கள் கற்பூரம் மற்றும் பல வாசனைத் திரவியங்கள் சேர்த்த வெற்றிலையை மிக நளினமாக மெல்லுகிறார்கள். ஏதேனும் காரணங்களுக்காக இவர்களில் எவருக்கேனும் பிரச்சனைகள் உண்டானால் ஒருவன் மற்றொருவன் முகத்தில் வெற்றிலை எச்சிலை உமிழ்கிறான். இப்படிச் செய்வது மிகவும் கேவலமானதொரு செயலாகக் எண்ணப்படுகிறது.
இப்படி எச்சிலால் உமிழப்பட்டவன் உடனடியாக அரசனிடம் ஓடித் தன்னுடயை நியாயத்தைச் சொல்லி அதற்கு நீதி வழங்கும்படி கோரிக்கை விடுக்கிறான். பின்னர் அரசனிடம் தங்களிருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையைச் சண்டையிட்டுத் தீர்த்துக் கொள்வதாக அவரிடம் முறையிடுகிறான். அதன்படி அந்த அரசன் அவர்களிருவருக்கும் தேவையான ஆயுதங்களை, வாளும் கேடயமும், அவர்களுக்கு அளிக்கிறான். பின்னர் அனைவரும் ஓரிடத்தில் கூடி இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையைக் காணுகிறார்கள்.
இருவரில் ஒருவன் கொல்லப்படும்வரையி இந்தச் சண்டை நீடிக்கிறது. இரண்டு பேர்களில் ஒருவன் வாளினாலும் காயமடைந்தாலும் சண்டை நிறுத்தப்படுவதில்லை.
மாபாரிலிருந்து தென்மேற்காக ஐநூறு மைல்கள் சென்றால் கொவுலம் ராஜ்ஜியத்தைச் சென்றடையலாம்.
இந்த ராஜ்ஜியத்திலே பல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த மொழிகளை இன்றளவும் பராமரிக்கிறார்கள். இந்த அரசன் வேறெந்த நாட்டிற்கும் கப்பம் கட்டாதவன்.
ஏராளமான சாய மரங்களும், மிளகும் இங்கு ஏராளமாக விளைகின்றன. இந்த ராஜ்ஜியத்தில் காடுகளும், சமவெளிப் பிரதேசங்களும் இருக்கின்றன. மிளகுக் கொடிகளிலிருந்து மே மாதம் துவங்கி ஜூலை மாதம் முடிய மிளகு எடுக்கப்படுகிறது. இந்த மிளகினை விளைவிப்பதெற்கென தனித் தோட்டங்கள் இருக்கின்றன. நல்ல தரமான இண்டிகோவும் (கரு நீலம்) இங்கு ஏராளமாக விளைகிறது. ஒரு குறிப்பிட்ட தாவரத்திலிருந்து இண்டிகோ எடுக்கப்படுகிறது. இந்தச் செடியை வேரோடு பிடுங்கி பெரிய நீர் நிரம்பிய கொப்பரைகளில் ஊற வைக்கிறார்கள். அந்தச் செடி அழுகிய பிறகு அதனைப் பிழிந்து இண்டிகோ தயாரிக்கிறார்கள். அந்த பிழிந்த பசையை சூரிய ஒளியில் வைத்து நன்றாகக் காயவைத்து எடுத்துக் கொண்டு பின்னர் அதனை வில்லைகளாக வெட்டி வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்தப் பகுதியின் கோடைக்காலம் மிகக் கடுமையான ஒன்றாக இருந்தாலும் மன்ஜி ராஜ்ஜியம், அரேபியா போன்ற போன்ற வெளிநாடுகளிலிருந்து இங்கு குவியும் வியாபாரிகள் வெயிலைப் பொருட்படுத்தாமல் இங்கிருந்து ஏராளமான பொருட்களை வாங்கிக் கப்பல்களில் வைத்து எடுத்துச் செல்லுகிறார்கள். அவர்களின் தேசத்தில் இந்தப் பொருட்களுக்கு ஏராளமான லாபம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கொவுலம் ராஜ்ஜியத்தில் இருக்கின்ற விலங்குகள் பிறபகுதி விலங்குகளைவிடவும் வித்தியாசமாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் முழுவதும் கறுமை நிறமுடைய புலிகள் இருக்கின்றன. பலவகையான கிளிகள், அவற்றில் சில பனியைப் போல வெண்மை நிறத்துடனும், கால்கள் மற்றும் மூக்கு சிவந்த நிறத்துடனும் காணப்படுகின்றன. மற்ற பறவைகள் சிவப்பும், நீலமும் கலந்ததொரு கலவையான நிறத்தில் இருக்கின்றன. நமது நாட்டில் இருப்பதனை விடவும் மிகவும் பெரிய, அழகான மயில்கள் இங்கு காணப்படுகின்றன. இதே மாதிரியாகவே பலவிதமான பழங்களும் இந்த ராஜ்ஜியத்தில் கிடைக்கிறது. இந்தப் பகுதியில் நிலவும் கடுமையான சூட்டின் காரணமாகவே இத்தனைவிதமான பழங்கள் இங்கு விளைவதாகக் கூறுகிறார்கள்.
பனைமரத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையிலிருந்து மது தயாரிக்கிறார்கள். அந்த மது மிக அற்புதமாக இருப்பதுடன் உடனடியாக போதையை வழங்குகிறது. திராட்சையினால் தயாரிக்கப்படும் மதுவினை விடவும் அதிக போதையை அளிக்கிறது இந்தப் பனை மது. இங்கிருக்கும் காய்கறிகளின் வகைக்கும் அளவில்லை என்றாலும் இந்த ராஜ்ஜியத்தில் அரிசியைத் தவிர வேறெதுவும் விளைவதில்லை. ஏராளமான அரிசி இங்கு விளைகிறது.
இந்த நாட்டு மக்களிடையே பல ஜோதிடர்களும், மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் தொழிலில் சந்தேகமில்லாமல் மிகத் திறமையானவர்கள்.
ஆண்கள், பெண்கள் என எல்லாக் குடிமக்களும் கறுத்த நிறமுடையவர்கள். இடையைச் சுற்றி ஒரு சிறிய துணியை மட்டுமே அணிந்தவர்கள். சிற்றின்பத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்களின் உறவுக்காரப் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்பவர்களாக இருப்பதுடன், இறந்துபோன தங்கள் சகோதரர்களின் விதவைகளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னபடி இந்தியா முழுமையும் இதுபோலவே ஒழுக்கம் இருக்கிறது.
*
கொமரி குறித்து (குமரி):
ஜாவா தீவில் நம் கண்ணுக்குத் தென்படாத வடக்குதிசை விண்மீன் இந்தக் கொமரியிலிருந்து முப்பது மைல்கள் தொலைவில் கடலுக்குள் தென்படுகிறது. அடிவானத்திலிருந்து ஒரு முழ உயரத்தில் இந்த விண்மீனைப் பார்க்கலாம்.
இந்த ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி காடுகளால் நிறைந்து காணப்படுகிறது. விவசாயம் அதிகமில்லை. இந்தப் பகுதியின் காடுகளுக்குள் ஏராளமான வனவிலங்குகள், குறிப்பாக குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சில குரங்கினங்கள் மனிதர்கள் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அதற்கு மேலாக பிற குரங்குகளிலிருந்து மிக வித்தியாசமான நீண்டவால் குரங்குகள், புலிகள், சிறுத்தைகள் போன்றவையும் அதிகம்.
*
டெலி ராஜ்ஜியம் குறித்து (Kingdom of Dely):
கொமரியிலிருந்து புறப்பட்டு மேற்குமுகமாக முன்னூறு மைல்கள் பயணித்தால் டெலி ராஜ்ஜியத்தை அடையலாம். இந்த டெலி ராஜ்ஜியத்தின் மொழி மிக வித்தியாசமானது. இந்த ராஜ்ஜியம் வேறேந்த ராஜ்ஜியத்திற்கும் கப்பம் கட்டாத சுதந்திர ராஜ்ஜியமாகும். இந்தப் பகுதி மக்களும் சிலை வணங்கிகிளே. இந்த ராஜ்ஜியத்தில் கப்பல்கள் வந்துசெல்வதற்கான துறைமுகம் எதுவுமில்லை. ஆனால் ஒரு கடலுடன் கலக்கும் ஒரு பெரிய ஆறு கப்பல்கள் நுழைவதற்கான வழியை அமைத்துத் தருகிறது.
இந்த நாட்டின் வலிமை அங்கிருக்கும் மக்களின் வீரத்தாலோ அல்லது உழைப்பினாலோ உண்டானதில்லை. எதிரிகள் எவரும் இந்த நாட்டுக்குள் நுழைவதற்கு மிகவும் சிரமமான காரியம். இந்த தேசத்தில் ஏராளமான இஞ்சியும், மிளகும் விளைகிறது. ஏதாவது ஒரு கப்பல் தெரியாத்தனமாக ஆற்றின் முகத்துவாரம் வழியாக உள்ளே நுழைந்துவிட்டால் அந்த நாட்டு மக்கள் அந்தக் கப்பலைப் பிடித்து வைத்துக் கொள்ளுகிறார்கள். பின்னர் அந்தக் கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு "எங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக" அவற்றைப் பறிமுதல் செய்வதாக அறிவிக்கிறார்கள்.
நல்ல பருவகாலம் முடிவதற்கு முன்பாக மன்ஜி தேசத்திலிருந்து வந்த கப்பல் ஆற்றின் வழியாக டெலிக்கு வந்தது. பருவகாலம் முடிந்தால் ஆற்றில் தண்ணீர் குறைந்துவிடும், பின்னர் கப்பலை வெளியே கொண்டு செல்வது சிரமம் என்பதால் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் ஆழத்தை அறிவதற்குப் பெரிய இரும்பிலான நங்கூரங்கள் அவர்களிடம் இருந்தன. இந்த ராஜ்ஜியத்தில் ஏராளமான புலிகளும் பிற ஆபத்தான விலங்குகளும் இருக்கின்றன.
*
மலபார் குறித்து:
மிகப் பெரிய ராஜ்ஜியமான மலபார், பரந்து விரிந்த இந்திய தேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முக்கியமான இந்தப் பகுதியைக் குறித்து நான் எல்லா முக்கிய விவரங்களையும் எழுதியாக வேண்டும். சுதந்திரமான இந்த ராஜ்ஜியம் ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவன் யாருக்கும் கப்பம் கட்டுவதில்லை. இவர்களுக்கென தனித்துவமான மொழியும் இருக்கிறது.
இந்தப் பகுதியில் வடக்கு நட்சத்திரம் கடலிலிருந்து இரண்டு முழ உயரத்தில் தெரிகிறது. குஸ்ஸராத் (குஜராத்) ராஜ்ஜியத்தில் இருப்பதனைப் போலவே இங்கும் பல கடற் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். ஏறக்குறைய நூறு சிறு கப்பல்களில் இந்தப் பிராந்தியத்தின் கடல்களில் திரியும் இவர்கள் அங்கு வரும் வியாபாரக் கப்பல்களைக் கைப்பற்றிக் கொள்ளையடிப்பதனைத் தொழிலாகச் செய்கிறார்கள். அப்படிக் கொள்ளையடிக்கப் போகையில் தங்களுடன் தங்களது மனைவி, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுகிறார்கள். அந்தப் பகுதியில் வரும் எந்தக் கப்பலையும் தப்ப விடக்கூடாது என்கிற காரணத்தால் ஒவ்வொரு ஐந்து மைல்களுக்கு ஒரு கொள்ளையனின் படகு நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்படியாக நூறு மைல்கள் சுற்றளவில் இருபது கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
தூரத்தில் வியாபாரக் கப்பல் தெரிய ஆரம்பித்ததும், அதனை முதலில் பார்த்தவன் தனக்கு அடுத்து இருக்கும் கொள்ளைக் கப்பலுக்கு புகைமூட்டம் போட்டு சமிக்ஞை (சிக்னல்) கொடுக்கிறான். அதனைத் தொடர்ந்து அத்தனை கப்பல்களும் நெருக்கமாக நின்று கொண்டு வியாபாரக் கப்பலைப் பிடித்துக் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களிடம் சிக்கிய அந்தக் கப்பல் தப்ப முடியாது. வியாபாரக் கப்பல்களில் பயணம் செய்யும் எவருக்கும் எந்தவிதமான தொல்லைகளும் செய்யப்படுவதில்லை. கைப்பற்றப்பட்ட வியாபாரக் கப்பல் கரைக்குக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் அதிலிருப்பவர்கள் இறக்கிவிடப்படுகிறார்கள். வேறொரு கப்பலை வாங்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு அந்தக் கொள்ளைக்காரர்கள் அறிவுரை சொல்லுகிறார்கள். இதன் மூலம் மீண்டுமொருமுறை அவர்களைக் கொள்ளையடிக்க இயலும் என்கிற காரணத்தால்.
மலபார் ராஜ்ஜியத்தில் மிளகும், இஞ்சியும், இலவங்கப்பட்டையும் ஏராளமாக விளைகின்றது. இந்த ராஜ்ஜியத்தில் உற்பத்தியாகும் பருத்திக்கு இணையாக வேறெங்கும் காணமுடியாது.
மன்ஜி தேசத்திலிருந்து வரும் கப்பல்கள் வெண்கலத்தினை எடைப்பாரமாக (ballast) உபயோகிக்கின்றன. அந்த வெண்கலத்தை மலபார் ராஜ்ஜியவாசிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கும் மேலாக தங்கத்தால் செய்யப்பட்ட பல அணிகலன்கள், பட்டுத்துணிகள், தங்க, வெள்ளிக் காசுகள் இவற்றுடன் மலபார் தேசத்தில் கிடைக்காத பல மருந்துப் பொருட்களும் அந்தக் கப்பல்களில் வந்திறங்குகின்றன. ஒரு கப்பலைக் கண்டவுடனேயே அது ஏடனிலிருந்து வந்ததா அல்லது அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்ததா எனச் சரியாகக் கணித்துக்கூறும் வியாபாரிகள் பலரும் அங்கு இருந்தார்கள்.
மலபாரைக் குறித்து இத்தனையும் சொல்லியபிறகு, இந்த நாட்டின் எல்லையாக இருக்கிற குஸ்ஸராத் (குஜராத்) பகுதிக்குச் செல்லுவோம். இந்திய தேசத்திலிருக்கும் அத்தனை நகரங்களைக் குறித்தும் சொல்லுவதென்றால் அதற்குப் பலகாலம் பிடிக்கலாம். சோர்வடையச் செய்யும் வேலை அது.
*
குஸ்ஸராத் ராஜ்ஜியம்:
மேற்குப் பகுதியில் இந்தியக் கடலால் சூழப்பட்ட குஸ்ஸராத் ராஜ்ஜியம், அங்குள்ள ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான பாஷையும் இருக்கிறது. இந்த இடத்தில் வடக்கு நட்சத்திரம் கடலிலிருந்து ஆறு முழ உயரத்தில் தெரிகிறது.
இந்தப் பகுதியில் வசிக்கும் கடற்கொள்ளைக்காரர்கள் மிகப் பயங்கரமானவர்கள். அந்த வழியாகச் செல்லும் ஏதாவது ஒரு கப்பலை அவர்கள் கைப்பற்றிய பிறகு அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்கு வலுக்கட்டாயமாக கடல் நீரைக் குடிக்க வைக்கிறார்கள். கடல் நீரைக் குடித்தவர்கள் பயங்கரமாக வாந்தியெடுக்கிறார்கள். அவர்கள் வயிற்றிலிருப்பதெல்லாம் வெளியே வந்துவிடுமளவுக்குக் கடுமையான வாந்தி. அதன் மூலம் இந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்து யாரேனும் விலையுயர்ந்த பொருட்களை வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வழிமுறையாக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பல விலையுயர்ந்த ரத்தினங்களும், முத்துக்களும் இதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இங்கும் ஏராளமாக இஞ்சியும், மிளகும், இண்டிகோ நீலச்சாயமும் ஏராளமாக விளைகிறது. இங்கு இருக்கும் ஒருவகையான மரங்களிலில் இருந்து ஏராளமான பருத்தி விளைகிறது. ஏறக்குறைய ஆறடி உயரம் இருக்கிற இந்த மரத்தில் கோடைக்காலத்தில் அதிக பருத்தி விளைகிறது. இந்த மரத்தின் பருத்தியைக் கொண்டு துணிகள் நெய்ய முடியாது. பெரும்பாலும் படுக்கைகளில் மட்டுமே இது உபயோகப்படுத்தப்படுகிறது. அதேசமயம் பனிரெண்டு வயதான மரங்களில் எடுக்கப்படுகிற பருத்தியைக் கொண்டு உயரிய தரத்திலான மெல்லிய மஸ்லின் துணிகளை தயாரிக்கிறார்கள்.
ஆடுகள், எருமைகள், காட்டு விலங்குகள் போன்றவற்றின் தோல்களை பதப்படுத்தி அவற்றை அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தத் தோல்களினால் செய்யப்படும் மிருதுவான, நீல மற்றும் சிவப்பு நிறப் படுக்கை விரிப்புகளின் ஓரங்கள் தங்க மற்றும் வெள்ளியினால் ஆன நூல்களால் தைக்கப்படுகின்றன. பெரும்பாலும் முகமதியர்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்கிறார்கள். அதனைப் போலவ பறவைகள் மற்றும் விலங்குகளைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்படும் தலையணைகளும், திண்டுக்களும் கிடைக்கின்றன. சில இடங்களில் இவற்றின் விலை ஏறக்குறை ஆறு வெள்ளிப் பணத்தின் அளவு இருக்கிறது. அவற்றில் பொறிக்கப்படும் அழகு வேலைப்பாடுகள் உலகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.
கனான்:
இனி நாம் கனான் என்கிற ராஜ்ஜியத்தைக் குறித்துப் பார்க்கலாம்.
இந்தக் கனான் ராஜ்ஜியம்: (கர்நாடகா?) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறதொரு பெரிய நாடாகும். இதனை ஆளும் இளவரசன் எவருக்கும் கப்பம் கட்டுவதில்லை. இங்கிருக்கும் சிலைவணங்கிகள் ஒரு வித்தியாசமான மொழியில் பேசுகிறார்கள். இந்த நாட்டில் ஊதுபத்திகள் ஏராளமாக உற்பத்தியாகிறது. குறிப்பாக வெண்மை நிறமும், கறுப்பு நிறமும் உடைய ஊதுபத்திகளைத் தயாரிக்கிறார்கள்.
இந்த நாட்டில் கிடைக்கும் பலவிதமான மருத்துவப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காகப் வெவ்வேறு நாடுகளின் கப்பல்கள் இங்குவருகின்றன. அந்தக் கப்பல்களில் கொண்டுவரப்படும் ஏராளமான குதிரைகள் இந்தியாவின் பலபாகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
காம்பே:
இதே மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இன்னொரு ராஜ்ஜியம் காம்பே (பாம்பே?). மிகப்பெரிய பரப்பளவுள்ள இந்த ராஜ்ஜியமும் ஒரு அரசனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கும் தனித்துவமான மொழி இருக்கிறது. இந்தத் தேசத்தின் மக்களும் சிலைவணங்கிகளே. இந்த நாட்டில் வடக்கு நட்சத்திரம் இந்தியாவின் பிற தேசப்பகுதிகளில் இருந்து மிக உயரத்தில் தெரிகிறது.
இங்கு நடக்கும் வியாபாரம் மிக அதிகமானது. இண்டிகோ நீல நிறச்சாயம் ஏராளமாகத் தயாராகிறது. அத்துடன் பருத்தியும், கம்பளியும் உற்பத்தியாகின்றன. பல விலங்குகளின் தோல்களும் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்குமேல் இங்கு சொல்வதற்கு எதுவுமில்லையாதலால் நான் செர்வநாத் குறித்துக் கூறுகிறேன்.
செர்வநாத்: (சாரநாத்?)
இந்த ராஜ்ஜியமும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த, சுதந்திரமானதொரு அரசனால் ஆளப்படுகிற, சிலைவணங்கிகள் நிறைந்ததொரு தேசம். நல்ல வசதியுள்ள மனிதர்கள் வாழும் இந்தப் பகுதிக்கென்று பிரத்யெகமான மொழி ஒன்றும் இருக்கிறது. ஏராளமான வணிகர்கள் இந்த தேசத்தினை நோக்கி வருகிறார்கள். ஏராளமான பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லுகிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் சிலைவணக்க ஆலயங்களில் பணிபுரியும் பூசாரிகள் உலகத்திலேயே மிகவும் கொடூரமானவர்கள் எனக் கேள்விப்பட்டேன் (இது மார்கோ போலோ எழுதியதுதான். நான் இட்டுக்கட்டவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளனாக அவர் சொன்னதை மாற்றவோ அல்லது மறைக்கவோ எனக்கு உரிமையில்லை).
அடுத்து கேஸ்மகோரான் ராஜ்ஜியத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
கேஸ்மகோரான் ராஜ்ஜியம்: (காஷ்மீர்?)
பரந்துவிரிந்த இந்த ராஜ்ஜியத்தையும் ஒரு அரசன் ஆளுகிறான். அவர்களின் மொழியும் விசித்திரமானது. குடிமக்களில் சிலர் சிலைவணங்கிகள். பெரும்பாலோர் சாராசென்கள் (முகமதியர்?). இங்கும் ஏராளமாக வாணிபம் நடைபெறுகிறது. இவர்களின் முக்கிய உணவு அரிசி, கோதுமை, இறைச்சி மற்றும் பால். இவையனைத்தும் இந்தப் பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கிறது. உலகத்து வணிகர்கள் பலர் தரைவழியாகவும், கடல்வழியாகவும்(?) இங்கு வருகின்றனர்.
இந்தியப் பெருநிலத்தில் நான் கடைசியாகச் சென்ற பகுதி இதுதான். இங்கிருந்து வடமேற்கு திசையில் சென்றால் மாபாரை (தமிழகம்?) சென்றடையலாம். நான் கடற்கரையோரம் இருந்த பட்டினங்களைப் பற்றிமட்டுமே இங்கு கூறியிருக்கிறேன். உள் நாட்டுக்குள் செல்லுவதென்றால் ஏராளமான நாட்கள் பிடிக்கும். இதற்குப் பிறகு இந்தியத் தீவுகள் பல இருக்கின்றன. அதில் ஒரு தீவு ஆண்களுக்கானது, இன்னொரு தீவு பெண்களுக்கானது. (மாலத்தீவுகள்?)