பெருந்தேவி இக்குறிப்பை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வைரமுத்து பற்றி தமிழ் ஹிந்து வெளியிட்ட மூன்று முழுப்பக்கக் கட்டுரைகள் பற்றி.
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் சென்று நான் சுட்டிக்காட்ட விரும்புவது ஒன்று உண்டு. தமிழ் இந்து தமிழிலக்கியத்தின் தலைமகன் என இந்த மிகைச்சொற்கூட்டியை முன்வைக்கிறது என்றால் நவீனத் தமிழிலக்கியம் பற்றிய அதன் புரிதல் என்ன? அது முன்வைக்கும் மதிப்பீடு என்ன? வேறெந்த படைப்பாளியைப் பற்றி இவ்வண்ணம் ஒரு கட்டுரை இவ்விதழால் வெளியிடப்பட்டுள்ளது?
சரி, தமிழில் எவர் கவிஞர் என்று சொல்லத்தகுதி கொண்டவர்களா ஆசை, செல்வப்புவியரசன், சங்கர ராமசுப்ரமணியன் என்னும் இந்த மூன்று மொண்ணைகளும்? சங்கர ராமசுப்ரமணியன் தவிர பிற இருவருக்கும் இலக்கியமென்றால் கோழிமுட்டை போல ஏதோ ஒன்று. சங்கர ராமசுப்ரமணியன் இங்கே வெற்றுப்பிழைப்புச் சூழ்ச்சியாக இதை எழுதியிருக்கிறார். இதழில் எழுதும் நிலையில் உள்ளமையாலேயே அரைவேக்காடுகள் இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்குவார்கள் என்றால் இலக்கியச் செயல்பாடுகளுக்கு என்னதான் அர்த்தம்?
இக்கட்டுரை ஏன் எழுதப்பட்டது என புரிய பெரிய அறிவுப்புலமேதும் தேவையில்லை. ஒன்று, இது இன்று வைரமுத்து சற்றும் மனம்தளராமல் செய்துகொண்டிருக்கும் ஞானபீட முயற்சிக்கான படிகளில் ஒன்று. இதன்பொருட்டு அவர் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார். தி ஹிந்து போன்ற வெளியீடுகள் இன்று பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நாய்கள்.
இன்னொன்று சாதி. வைரமுத்து அந்த சரடுகளை மிகச்சரியாக இழுக்கக் கற்றவர். மிடூ போன்ற குற்றச்சாட்டுகளின் போதுகூட தமிழின் ‘முற்போக்கு’ ‘திராவிட’ அறிவுச்சூழல் அவரை பாதுகாப்பதைக் கவனியுங்கள். அவர் பாரதிய ஜனதாவின் செல்லமாக இருக்கையில்கூட முற்போக்கு திராவிடக் கூட்டத்திற்கு சிறு கண்டனம்கூட இல்லை, அவரை நம்மவராக முன்னிறுத்த தயக்கமும் இல்லை. தங்கள் எதிரிகளையெல்லாம் கட்டுடைத்து சங்கி என முத்திரைகுத்தும் வெற்றுக் கும்பலின் மௌனத்தை கவனியுங்கள்.
கீழ்மை. ஆனால் நம் மீது இதை சுமத்துபவர்களுக்கு எதிராக நம்மால் சீற்றம் கொள்ள மட்டுமே முடியும்.
முகநூலில் பெருந்தேவி
சில வாரங்களுக்குமுன் பத்திரிகையாளர் ஜி.கிருபா, பல வருடங்களாக நடைபெறும் வைரமுத்துவின் பாலியல் அத்துமீறல் லீலைகள் பற்றிய தொகுப்பை ஒரு நேர்மையான, தேர்ந்த கட்டுரையாளராக எழுதியிருந்தார். https://silverscreenindia.com/…/vairamuthus-accusers-on-th…/
அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கும் துப்பு இங்கே இருக்கும் ஒரு பத்திரிகைக்கு, நாளிதழுக்கு இல்லை. ஆனால் தி இந்து தமிழ்த் திசை‘கவிஞருக்கு’ பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டுக் கொண்டாடுகிறது.வெட்கம்!
”அவரைப் போல ஒரு கவிஞனாகத் தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு எளிதல்ல” என்று புகழ்பாடுகிறார் பத்திரிகையாளர் செல்வ புவியரசன். ’நம்மவர்’ கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனோ ”ஒரு யுகச் சந்திப்பில் வைரமுத்து என்னும் நிகழ்வு உருவெடுக்கிறது” என்று அவதானித்திருக்கிறார். ”தனது கற்பனையால் அகண்டம் கொண்ட கலைஞர் என்று வைரமுத்துவுக்கு இணை சொல்ல அவர் காலத்தில் யாரும் இல்லை!” என்று வேறு புல்லரிக்கிறார். இன்னொரு ’நம்மவர்’ ஆசைத்தம்பி சற்றே அடக்கமாக என்றாலும் அன்னாரின் “கவித்துவத்தைத்” தவறாமல் குறிப்பிடுகிறார்.
இத்தகைய பாராட்டத்தக்க, வியக்கத்தக்க, பெருமைப்படத்தக்க ஊடக‘நிகழ்வுகள்’ தமிழ்ச் சூழலில் மாத்திரமே நடக்கும். தமிழ் இலக்கியவாதிகளால் மாத்திரமே சற்றும் கூச்சமில்லாமல் பாலியல் அத்துமீறல் புகாருக்கு உள்ளானவர்களை வெளிப்படையாக அங்கீகரித்து நீட்டி முழக்கமுடியும்.
பெண்ணியத்தை விடுங்கள், பாலியல் அத்துமீறல் என்பது அடிப்படை மனித உரிமையைப் பாதிக்கும் வகையிலும் மோசமான விஷயம். அதைப் பற்றிய ஒரு சின்ன மன உறுத்தல்கூட இங்கே எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப்படும் ஜீவிகளுக்கு இருப்பதில்லை. இங்கே பால் பாகுபாட்டுக்கோ பாலியல் வன்முறைக்கோ எதிராக எந்த நீதியும் நியாயமும் சாத்தியமேயில்லை.
 
			

 Rajinikanth, Vairamuthu, Kamal Haasan At #Kamal60 in November 2019
Rajinikanth, Vairamuthu, Kamal Haasan At #Kamal60 in November 2019
 Mani Ratnam, AR Rahman, and Vairamuthu at the ‘Chekka Chivantha Vaanam’ audio launch
Mani Ratnam, AR Rahman, and Vairamuthu at the ‘Chekka Chivantha Vaanam’ audio launch







