New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தன்னேரிலாத தமிழ் க.தில்லைக்குமரன்


Guru

Status: Offline
Posts: 24455
Date:
தன்னேரிலாத தமிழ் க.தில்லைக்குமரன்
Permalink  
 


  தன்னேரிலாத தமிழ்
க.தில்லைக்குமரன்


”ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”                   – தண்டியலங்காரவுரை மேற்கோள்
Indus Valley Map
4000 ஆண்டுகளுக்கு முன் ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப்
பகுதிகளில் தொல் திராவிட மொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற திராவிட மொழி பேசப்பட்டு வருவது இதற்குச்
சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்)
சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத்
துவங்கினர்.  ஆரியர் அரப்பாவிற்கு வந்த போது சிந்து வெளி நாகரீகம் (கி.மு. 2900 –
1900) பெரும்பாலும் அழிந்திருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தொல் திராவிட மொழி
பேசியிருக்க வாய்ப்புள்ளது என்று பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியல் பேராசிரியர் அசுகோ
பர்ப்போலா (http://en.wikipedia.org/wiki/Asko_Parpola) அவர்களும், தமிழகத்தைச்
சேர்ந்த திரு ஐராவதம் மகாதேவன்
(http://en.wikipedia.org/wiki/Iravatham_Mahadevan) அவர்களும் கூறுகின்றனர்.
ஆனால் அரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் பல மொழிகள் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆர்வர்டு
பல்கலைக்கழகத்தின் சமசுகிருதப் பேராசிரியர் மைக்கல் விட்சல்
(http://en.wikipedia.org/wiki/Michael_Witzel) அவர்கள். அவர் அப்பகுதியில்
முண்டா மொழிகளும் பேசப்பட்டிருக்கக் கூடும் என்கிறார். எது எப்படியோ சிந்து வெளி மக்கள்
ஆரியருக்கு முன்னரே வாழ்ந்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது. தொல் திராவிட மொழி
அங்கு பேசப்பட்டிருக்கும் வாய்ப்புமுள்ளது என்பது வேதகாலத்தில் ஆரியர்கள் எழுதிய இருக்கு
(Rig Veda : 1500 -1200 BCE) வேதத்திலிருக்கும் திராவிடச் சொற்கள் மூலம்
தெரிகிறது. முண்டா மொழிச் சொற்களும் இருக்கு வேதத்திலிருப்பதிலிருந்து முண்டா
மொழியும் அங்கு பேசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
ஆரியர் வருகைக்குப் பின் வட மொழியின் நெருக்கடியினாலும் ஆரிய மன்னர்களின் பலத்தினாலும்
வடக்குத் திராவிட மொழிகள் ஒன்றன்பின் ஒன்றாக அழியத் துவங்கின. தென்னிந்தியாவில்
அக்காலத்தில் ஆரிய மொழியின் தாக்கம் அதிகமில்லாததால் திராவிடமொழி அங்கு தொடர்ந்து
வழக்கத்திலிருந்தது. தொல் திராவிட மொழியிலிருந்து முதலில் தோன்றியது தமிழ் மொழி.
அதன் பின் கன்னடமும் தெலுங்கும் தோன்றின. ஆனால் இவ்விரண்டு மொழிகளிலும் சமசுகிருதத்தின்
தாக்கம் அதிகமாகவுள்ளது. 12-ம் நூற்றாண்டிற்குப் பின்பு தமிழிலிருந்து தோன்றிய மலையாள
மொழியிலும் வட மொழியின் தாக்கம் அதிகமுள்ளது. ஆனால் தமிழர் மட்டும் வட மொழி ஆதிக்கத்தை
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து தமிழின் தனித்துவத்தைக் காத்து வருகின்றனர்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் இலக்கியத் தொடர்ச்சி வியக்கத் தகுந்தது.
அதனால்தான் அன்று எழுதப்பட்ட சங்கத் தமிழ் இன்றும் நம்மால் படித்து புரிந்துக் கொள்ள
முடிகிறது. இந்த இலக்கியத் தொடர்ச்சி எம்மொழிக்குமில்லை என்பது வெறும்புகழ்ச்சியில்லை,
உண்மை. இதற்குக் காரணம் நம் முன்னோர்களின் உழைப்பும் தமிழுணர்வுமாகும். தமிழ் மன்னர்கள்
தங்களுக்குள் போரிட்டாலும் தமிழ்ப்புலவர்கள் தமிழுணர்வோடு மன்னர்களினிடையில் அமைதிக்காகப்
போராடியுள்ளனர் என்பதை புறநானூற்றுப் பாடல்களில் காணலாம்.  (எ.கா. புறம் 27).
அதியனுக்கு ஆதரவாக ஔவை மூவேந்தர்களிடம் பேசியது சங்கப் பாடல்களில் காண்கிறோம்.
தமிழின் தொன்மையை அறிய மற்றுமொரு சான்று கி.மு. 2-ம் நூற்றாண்டில் காரவேல மன்னனின்
புவனேசுவரம் நகர் (ஒரிசா மாநிலம்) அருகிலுள்ள உதயகிரி மலையிலுள்ள அதிகும்பா  
கல்வெட்டுக்கள் (http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription).
அக்கல்வெட்டுக்களில் காரவேல, ’த்ரமிரா (தமிழ்) கூட்டரசை (confederacy)’ தோற்கடித்ததாக
கூறப்பட்டுள்ளது.  இதை ஆய்ந்த அமெரிக்காவில் வாழும் முனைவர் சு. பழனியப்பன் அவர்கள்
அகநானூற்றின் 31-ம் பாடலை மேற்கோள் காட்டித் தமிழர் கூட்டரசு இருந்ததை நிறுவியுள்ளார்.
மாமூலனார் எனும் சங்கப் புலவர் எழுதிய அப்பாடல், “தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர்
தேஎத்த பல் மலை”. இப்பாடலில் மூவர் என்பது சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கிறது என்பது
தெள்ளத் தெளிவு. இம்மூவரின் தமிழ்ப் படை வடக்குத் தமிழகத்தில் நிலை கொண்டு தமிழகத்தைக்
காத்து வந்தது என்பது இப்பாடலின் மூலம் தெளிவாகிறது. பழனியப்பன் அவர்களின் ஆய்வைக்
கீழ்க்கண்ட இந்தியவியல் குழுமத்தில் காணலாம்.
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R4899&I=-3
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0908&L=INDOLOGY&P=R6548&I=-3
மேலும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ ஒரு தமிழ்த் தேசியவாதியாக வாழ்ந்துள்ளார் என்பது
அவரது காவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சேரநாட்டில் பிறந்த அவர் சோழநாட்டையும்,
பாண்டிய நாட்டின் பெருமையையும் தம்நூலில் விவரித்துள்ளார். செக்கோசுலேவியால் பிறந்த
பெரும் தமிழறிஞரான பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் சிலப்பதிகாரத்தைத் ‘தமிழில்
எழுதப்பட்ட முதல் தமிழ்த்தேசிய நூல்’ என்று வருணித்துள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் அவர்
எழுதிய”Smile of Murugan, The Tamil Literature” என்கிற நூலில்,
”There is no “Dravidian” Literature per se. It is however entirely
different with respect to Tamil Literature. It is of course only the
earliest period of the Tamil literature which shows those unique
features. But the early Tamil poetry was rather unique not only by
virtue of the fact that some of its features were so unlike everything
else in India, but by its literary excellence. There is yet another
important difference between Tamil and other Dravidian literary
languages: the meta language of Tamil has always been Tamil, never
Sanskrit.
Tamil and Sanskrit cultures have shared with each other. The very
beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence
– just as the very beginnings of Indo-Aryan literature, the Rgvedic
hymns, and show traces of Dravidian influence. On the other hand, there
are some sharply contrasting features which are typical for Tamil
classical culture alone, for the Tamil cultural and literary tradition
as opposed to other non-Tamil tradition – and in this respect, Tamil
cultural tradition is independent, not derived, not imitative; it is
pre-Sanskritic, and from this point of view Tamil alone stands apart
when compared with all other major languages and literatures of India”
AK Ramanujan
அமெரிக்காவில் பணியாற்றிய மற்றுமொரு பெரும் தமிழறிஞரான பேராசிரியர் அ.கி.
இராமானுசன் அவர்கள் தமிழைக் குறித்து எழுதும் போது, ”In most Indian languages
the technical gobbledygook is Sanskrit; in Tamil the gobbledygook is
ultra-Tamil. Tamil, one of the two classical languages of India, is the
only language of contemporary India which is recognizably continuous
with a classical past”.
அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள பொருந்தல் என்கிற கிராமத்தில் புதை
குழியொன்றில் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு
இறந்தவருடன் புதைக்கப்பட்ட விலையுயர்ந்த மணிகள் போன்ற பல பொருள்களுடன் நெல்மணிகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த நெல்மணிகள் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்று ஒரு
அமெரிக்க நிறுவனம் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்பானையில் தமிழ்ப் பிராமி
எழுத்துக்களினால் ‘வயரா’ என்று எழுதியிருந்ததை வைத்துப் பார்க்கையில் பிராமி
எழுத்துக்கள் அக்காலத்தில் புழக்கத்திலிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
(http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2408091.ece)
இக்கண்டுபிடிப்பினால் பிராமி எழுத்துக்கள் அசோகப் பேரரசனுக்கு பின்பு தமிழகத்தில்
புழக்கத்திற்கு வந்தது என்பது கேள்விக்குறியாகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்கப் பாடல்கள் மூலம் பழந்தமிழர் வாழ்வை நாம்
தெளிவாக அறிய முடிகிறது. சாதி, மத பேதமின்றி, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி தமிழர்கள்
வாழ்ந்திருப்பதை நாம் காண முடிகிறது. தன்னேரிலாத தமிழ் மொழியை இன்று நாம் படிப்பதற்கு
முக்கியக் காரணம் தமிழ்ப் பெரியவர்கள் உ.வே.சாமிநாதைய்யரும் ஈழத்தைச் சேர்ந்த சி.வை.
தாமோதரம் பிள்ளையவர்களும்தான். அதுவரை சங்க இலக்கியங்கள் தமிழ் அறிஞர்களால் அறியப்படாமல்
இருந்தன. இவர்கள் இருவரைத் தொடர்ந்து பல தமிழறிஞர்கள் சங்க நூல்களைப் பதிப்பித்து
உரையெழுதியுள்ளனர்.
திராவிட மொழிக்குடும்பம் குறித்த ஆய்வு கி.பி 1800-க்கு பின்புதான் துவங்கியது.
அதற்கு முன் அனைத்து மொழிகளும் (தமிழ் உட்பட) சமசுகிருதத்திலிருந்து தோன்றியதாகத்தான்
அறிஞர்கள் கருதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள்
திராவிட மொழியிலிருந்து தோன்றின என்கிற உண்மையை உணர்த்தியர்வர்கள் மேலை நாட்டு
மொழியிலறிஞர்கள்தான். 1816-ம் ஆண்டு பிரான்சிசு எல்லிசு (Francis W. Ellis) அவர்கள்
A.D. Campbell அவர்களின் ‘A Grammar of the Teloogoo Language’ என்கிற நூலின்
அறிமுகவுரையில் திராவிட மொழிகளைக் குறித்து எழுதியுள்ளார்.  அவர் முதலில்
தென்னிந்திய மொழிக்குடும்பம் என்று அழைத்தார்.  அதன் பின்பு 1856-ம் ஆண்டில் இராபர்ட்
கால்டுவெல் என்கிற பாதிரியார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலான ‘A comparative
Grammar of the Dravidian or South-Indian Family of Languages’ என்கிற
நூலில் முதன் முறையாகத் திராவிட மொழிக்குடும்பத்தைக் குறித்து எழுதி, தமிழ் உட்பட
மற்றைய திராவிட மொழிகள் சமசுகிருதத்திலிருந்து தோன்றவில்லை. இவையொரு தனி மொழிக்
குடும்பம் என்று உலகிற்கு உணர்த்தினார். (Preface of ‘A Dravidian Etymological
Dictionary’ by T. Burrow and M.B. Emeneau).
தமிழ் மொழிக்கு மேலை நாட்டு அறிஞர்கள் செய்த தொண்டு சிறப்பு மிக்கது. அவர்கள் தமிழை
அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆய்ந்து தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
இராபர்ட் கால்டுவெல், அருட்தந்தை ஜியு போப், பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர்
அ.கி. இராமானுசன், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு, முனைவர் சு. பழனியப்பன் மற்றும்
பலருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களுடன் தமிழகத்தில் தமிழைக் காக்க உழைத்த மறைமலை
அடிகள், தேவநேயப் பாவாணர், திரு.வி.க, இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்ற
ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு நாம் செய்யும் கடமையொன்றே. தன்னேரிலாத தேனினும் இனிய
தமிழை நாமும் கற்று அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை எடுத்துச் செல்வதுதான் அது.
கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறுக் காரணங்களினால் நல்ல தமிழறிஞர்கள் தமிழகத்தில் தோன்றுவது
பின் தங்கி விட்டது. அதற்கு அரசும் ஒரு காரணம் என்று கூறுவதில் தவறேதுமில்லை. மீண்டும்
தமிழை அரியணையிலேற்றி அதை மேம்படுத்துவது நம் கடமை. அதற்கான பணியை நாம்
தமிழுணர்வாளர்களுடனும், தமிழ் நாட்டிலும் மேலை நாட்டிலும் வாழும் தமிழறிஞர்களுடனும்
இணைந்து செயல்பட்டு உருவாக்க வேண்டும்.


--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.


அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com__________________


Guru

Status: Offline
Posts: 24455
Date:
Permalink  
 

பக்தியும் அற்புதங்களும்
பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Apr 25, 2015

0
inShare
1
Tweet
This page has been shared 1 times. View these Tweets.

0
இதை பொதுவாக விரும்ப இங்கு கிளிக் செய்க.


4
LikeLike

pakthiyum arputhangalum2
உலக மொழிகளிலேயே தமிழில்தான் பக்தி இலக்கியம் மிகுதியாக இருக்கிறது. ஏறத்தாழத் தமிழ்
இலக்கியப் பரப்பில் பாதியளவுக்கும் மேல் பக்தி இலக்கியம்தான். பரிபாடலில் காணும் முருகன்,
திரு மால் பற்றிய வழிபாட்டுப் பாக்களில் தொடங்கி, காரைக்காலம்மையார் வழியாக,
நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஊடே பயணம் செய்து கடைசியாக தாயுமானவர், மஸ்தான் சாகிபு,
வள்ளலார் வரையிலும் வந்து நிற்கிறோம். அதற்குப் பின்னும் தொடர்ந்து எழுதிவருபவர்கள் உண்டு.
ஆனால் அவை பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் புராணங்கள் என்று ஆகிவிடுகின்றன.
இதைப் பெருமையாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள், சிறுமையாகக் கருதுபவர்களும்
இருக்கிறார்கள். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், பிரெஞ்சு காதலின் மொழி என்றால்,
ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றால்…. என்று நீட்டிக்கொண்டே போய், தமிழ் பக்தியின் மொழி என்று
முடிப்பவர்கள் உண்டு.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இதனை எப்படி எதிர் கொள்வது என்பது மிகப் பெரிய
பிரச்சினை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் பக்தி இலக்கியம் என்ற ஒன்று இல்லவே இல்லை யாதலின்
அவர்கள் இதனை இலக்கியம் என்ற வட்டத்திற்குள் சேர்க்காமலே விட்டுவிட்டார்கள். ஆனால் தமிழின்
பக்திமணத்தில் அமிழ்ந்து பாராட்டியவர்களும் உண்டு. உதாரணமாக, திருவாசகத்தை மொழிபெயர்த்த
ஜி. யூ. போப், அதற்கு இணையான உருக்கமான இலக்கியம் உலகில் இல்லை என்று பாராட்டுகிறார்.
இது ஒருபுறமிருக்க, நாம் பாடப்புத்தக கர்த்தாக்களுக்கு பக்தி இலக்கியம் ஒரு தலைவலி.
அவர்களுக்கு சைவ இலக்கியத்தில் ஒரு பக்திப் பாடலைப் பாடமாக வைத்தால், வைணவ இலக்கியத்தில்
ஒன்று வைக்க வேண்டும்; பிறகு முஸ்லிம் இலக்கியம், கிறித்துவ இலக்கியம் என்று அவ்வவற்றில்
ஒவ்வொரு பாடலையாவது பாடமாக வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தம்மை மதச்சார்புள்ளவர்கள்
என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம். அதனால் தேவையோ இல்லையோ, மாணவர்கள் ஆண்டாண்டுதோறும்
தேவாரத்தில் அல்லது திருவாசகத்தில் சில, ஆழ்வார் பாடலில் சில, சீறாப்புராணத்தில் சில,
இரட்சணிய யாத்திரிகத்தில் சில என்று படித்தாக வேண்டும். நல்லவேளையாக சமண பௌத்த
இலக்கியங்களுக்கு யாரும் பிரதிநிதித்துவம் கேட்டு வரவில்லை போலும்!
எவ்விதமாயினும், வாழ்க்கைக்காக, வாழ்க்கைக்குள்தான் சமயம், மதம் எல்லாம் இருக்கின்றன.
மதத்திற்காக, மதத்திற்குள் வாழ்க்கை இல்லை. எனவே வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்லும்
அனுபவங்களைக் கொண்ட இலக்கியம் என்றுதான் பக்தி இலக்கியத்தைப் பயில வேண்டும். பக்திக்காக
அன்றி இலக்கியமாகப் பயில வேண்டும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். எத்தனையோ
முஸ்லிம்களும் கிறித்துவர்களும் கம்பராமாயணத்தை இலக்கியமாகப் பயிலவில்லையா? எத்தனையோ
சைவர்கள் சீறாப்புராணத்தை இலக்கியச் சிறப்பு கருதிப் படிக்க வில்லையா? அதுபோல மதத்தை
ஒதுக்கிவிட்டு, இலக்கியமாக நோக்கும் பார்வை வேண்டும்.
பிற இலக்கியங்களைப் பண்பாட்டிற்கெனவும் வரலாற்றுச் சான்றுகளுக்கெனவும் படிப்பதுபோல, பக்தி
இலக்கியங்களையும் படிக்கமுடியும். பக்தி இலக்கியத்திலும் அரசு ஆதிக்கமும் வர்க்கப்
போராட்டமும் இயங்குவதைக் காணவே முடிகிறது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகள் பக்தியைப்
பயன்படுத்துவதால்தான் மக்கள் பிளவுபடுகிறார்கள், மோதுகிறார்கள், சமயச் சண்டைகளில்
ஈடுபடுகிறார்கள். எங்குமே வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ ஆதிக்கத்திற்கு மதத்தின் ஆதரவு
தேவைப்படுகிறது. மதத்திற்கு ஆதிக் கத்தின் பலமும் பணமும் தேவைப்படுகிறது.
அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம்
திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள்
சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத்
திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால்
குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?
பக்தி இலக்கியங்களில் இந்த மாதிரி அற்புதச் செயல்கள் இடம் பெறுவது ஒரு பெரிய
பிரச்சினைதான். பாடம் நடத்தும் ஆசிரியர் பக்திமானாக இருந்தால் அவை அப்படியே நடந்தன
என்று சொல்வார். அதிலும் மதவேறுபாடு உண்டு. கடவுள் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தால்
இம்மாதிரி நடப்பது சாத்தியமில்லை என்பார். இவை காரணமாக மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் என மோதல்கள் ஏற்படுவதும் உண்டு.
pakthiyum arputhangalum1
இதெல்லாம் ஒருபுறமிருக்க, பக்திப்பாக்களில் காணும் அற்புதச் செயல்களை நாம் எப்படி
எடுத்துக்கொள்வது? கவிதை உள்ளத் தோடு உலகத்தை நோக்குபவனுக்கு ஒவ்வொரு இயற்கைக்
காட்சியும் அற்புதம்தான். நயாகரா நீர்வீழ்ச்சியும் ஆல்ப்ஸ் மலையும் தான் அற்புதங்கள் என்றில்லை,
வானில் காணும் மாறிச் செல்லும் மேகங்களின் பல்வேறு வடிவங்களும், புல்லின் சிரிப்பும்,
பூவின் தலையாட்டலும் அற்புதங்கள்தான். ஆனால், நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பிற
பக்திமான்களுக்கும் பற்பல அற்புதச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன. திருநாவுக்கரசரை நீற்றறையில்
(சுண்ணாம்புக் காளவாயில்) இட்டார்களாம், அவர் அதில் உயிர்பிழைத்து வந்தாராம். கல்லோடு
சேர்த்துக் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டார்களாம், அதிலும் அவர் உயிர்பிழைத்தாராம்.
இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா? நடந்தன என்பார்கள் சிலர். நடந்திருக்காது,
கட்டுக்கதை என்பார்கள் சிலர்.
நீற்றறையில் இட்டபோது நாவுக்கரசர் பாடிய பாடல் எது?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
என்பதை எடுத்துக்காட்டுவார்கள். இதில் இறைவனின் இணையடி நிழல் வீணையின் கானம் போலவும்
முழுநிலவு போலவும் தென்றல்போலவும் இளவேனிற் காலம் போலவும் பொய்கை போலவும் இனிமையானது
என்றிருக்கிறதே தவிர, வேறு என்ன இருக்கிறது? இதே போலத்தான், அவரைக் கடலில் இட்டபோது
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே
என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான்
துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன்
அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது? பூம்பாவை இறந்தபோது ஞானசம்பந்தரும்
இவ்வுலக இன்பங்களையெல்லாம் இழந்து போகின்றாயே பூம்பாவாய் என்று பாடும் குரல் கேட்கிறதே
தவிர, எலும்பைச் சாம்பலைப் பெண்ணாக்கினார் என்று எங்கிருக்கிறது?
கண்ணனைத் தன் காதலனாக, மணாளனாக வரித்த ஆண்டாளும், கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ என்றெல்லாம் பாடுவது கற்பனை தானே தவிர, இது
உண்மையில் அனுபவித்தது என்று சொல்ல முடியுமா?
நல்ல பக்திமான்களின் பாக்கள் யாவும் இம்மாதிரி இறைவன் தரும் இன்பத்தைப் பாடுபவையே தவிர,
அவற்றில் அற்புதச் செயல்கள் செய்த குறிப்பிருப்பதாகக் கொண்டது நமது தவறான பார்வை என்றே
கருதுகிறேன். ஆனால் சிவபெருமானோ திருமாலோ செய்ததாகப் பல அற்புதச் செயல்கள்
இப்பாக்களில் இடம் பெறுகின்றன. இறைவன் எதனையும் செய்ய வல்லவன் என்பதை உணர்த்துவது இதன்
நோக்கமாகலாம். மாணிக்கவாசகரும் ஓரிடத்தில் இறைவன் கருதினால் நரியைப் பரியாக்க
முடியும், பரியை நரியாக்க முடியும் என்று பாடுகிறாரே அன்றி, தம் வாழ்க்கையில் அவ்விதம்
இறைவன் நடத்தியதாகக் குறிப்பினைத் தரவில்லை.
இன்னும் கேட்டால், திருமாலின் அவதாரங்களில், கண்ணன் அவதாரத்தில் எத்தனையோ
துராக்ருதங்களையும் கூடக் காண்கிறோம். இறைவனின் நோக்கில் நன்மை-தீமை என்பவைகூடச்
சார்புள்ளவை தான் என்று உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். ஆகவே இறைவனின் அருளாற்றலை
மேம்படுத்திச் சொல்வதற்காகப் புனைந்த கதைகள் என்று இவற்றைக் கொள்ளவேண்டும்.
மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே
நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள்
தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில்
தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர்
பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது. உண்மையில் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த
ஏற்பட்ட உத்திமுறைகள் என்றே கருதவேண்டும். எவ்வளவு தூரம் இதில் அவை வெற்றி
பெற்றிருக்கின்றன என்பதுதான் நாம் நோக்க வேண்டியது.
அற்புதச் செயல்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாற்றில் தான் என்றில்லை. நாம் இன்று
நடைமுறையிலும் அவற்றை நம்பவே செய்கிறோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தமது கடையில்
முதலில் சிவபெருமான் உருவப்படத்தை மாட்டிவைத்திருந்தார். பிறகு சிலகாலம் கழித்து அதை
நீக்கிவிட்டுத் திரு வேங்கடப் பெருமாளின் படத்தை மாட்டினார். “என்னய்யா இது, ஏன் இந்த
மாற்றம்? நீர் சைவர்தானே?” என்று அவரைக் கேட்டேன். அவர் சொன்னார்: “சிவபெருமான் படத்தை
மாட்டியிருந்தபோது எனக்கு இலாபம் வரவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர்
சொன்னார்-’சிவபெருமான் ஆண்டி, பிச்சையெடுப்பவன். அவன் படத்தை மாட்டினால் நீயும்
அப்படித்தான் ஆகவேண்டும். சீனிவாசப் பெருமாள்-ஏழுமலையான்தான் உலகத்திலேயே பணக்காரக்
கடவுள். அவர் படத்தை மாட்டினால் நீயும் பணக்காரனாகி விடுவாய், இலாபம் வந்து கொட்டும்’
என்றார். அதனால் நான் படத்தை மாற்றிவிட்டேன்” என்றார். அவருக்குப் பணம் வந்து கொட்டியதோ
இல்லையோ தெரியாது, இன்றும் அற்புதச் செயல்களை நம்புபவர்கள்-தங்களுக்கேற்ற கதைகளை
உருவாக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.
பக்தி இலக்கியத்தை அதில் உள்ள அற்புதச் செயல்களுக்காக, கதைகளுக்காகப் படிக்காமல், அது
தரும் வாழ்க்கை மதிப்புகளுக்காகப் படித்தால் நம் வாழ்க்கை எவ்வளவோ பயன் பெறும்.__________________


Guru

Status: Offline
Posts: 24455
Date:
Permalink  
 

உலகநாதர் இயற்றிய உலகநீதி
தேமொழி

Feb 14, 2015

0
inShare
2
Tweet
This page has been shared 2 times. View these Tweets.


0
இதை பொதுவாக விரும்ப இங்கு கிளிக் செய்க.


119
LikeLike

needhinool1
உலகநீதி என்ற நீதிநூல் உலகநாதர் என்ற புலவரால் எழுதப்பட்டுள்ளது, இந்நூலின் இறுதிவரிகள்
இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த
நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின்
ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது.   பாடல் வரிகளின் மூலம் உலகநாதர் ஒரு
முருகபக்தர் என்பது மட்டுமே தெரிகிறது. இத்தகவலைத் தவிர இவரைப்பற்றிய பிற தகவல்களோ,
காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. தமிழிலக்கியம் தரும் நீதி நூல்களின் தொகுப்பில் மிக
முக்கியமான இடத்தைப் பிடித்த நூல்களுள் உலகநாதர் இயற்றிய உலகநீதியும் ஒன்று.
நீதி என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. இந்த நோக்கத்தை
நிறைவேற்றும் வகையில் விளக்க உரையின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய பாடல்
வரிகளை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார் உலகநாதர். ஒலி
நயத்தோடு பாடவும் அதனால் மனதில் இருத்தவும் கூடிய வரிகளைக் கொண்ட பாடல்களாக இவை
விளங்குகின்றன. உலகநீதியைப் பள்ளியில் படித்த நினைவில்லையே என்று வியப்பவர்களுக்கு
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்ற வரிகள்
சட்டென இப்பாடல் படித்ததை நினைவிற்கு கொண்டு வந்துவிடும்.
உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
என்ற இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி 13 ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன.
ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் (13 X 8) 104 வரிகளையும்,
பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு
வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் 106 வரிகள் மட்டும் கொண்டது. மிகச் சுருக்கமாக
உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.
பதினொன்றாவது பாடலும், பதின்மூன்றாவது பாடலும் அமைப்பில் சற்றே மாறுபட்டவை.  
பதினொன்றாம் பாடல் முழுவதும் கோர்வையாக ஒருகருத்தை முன்வைக்கும் நோக்கத்தில்
அமைக்கப்பட்டுள்ள பாடல். எனவே வரிக்கு வரி ஒரு நீதியை குறிக்கும் பொதுவான முறையில்
இருந்து பதினொன்றாவது பாடல் மாறுபட்டுள்ளது.
இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை ஏமாற்றாது கூலி கொடுக்க
வேண்டும், அவர்கள் நமக்கு செய்த ஊழியத்திற்கு ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறது. துணி வெளுத்துக் கொடுக்கும் வண்ணான், முடிதிருத்தும் நாவிதன், கல்வி
அல்லது கலை கற்பித்த ஆசிரியர், குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய்
தீர்த்த மருத்துவன் ஆகியவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரமான வருமானத்தை இனிய சொற்களுடன்
அளிக்காது ஏமாற்றுபவர்கள் எமனால் துன்புறுத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் கோணத்தில்
வலியுறுத்தியுள்ளார் உலகநாதர்.
அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்
      அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
      சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
      மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
      ஏதேது செய்வானோ ஏமன் தானே!   … 11
மேற்சொன்ன பாடலின் எட்டு வரிகளைப் போலவே 13 வது அல்லது இறுதிப்பாடலின் எட்டு வரிகளும்
பொது நடையில் இருந்து விலகியுள்ளது. இப்பாடலின் முதல் நான்கு வரிகளிலும் கல்வியும்
பொருளும் தேடி அடைந்த தன்னைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அழகிய தமிழால் முருகனைப்
போற்ற விரும்பும் உலகநாதனாகிய நான் பாடிவைத்த இந்தப் பாடல்களை விரும்பி கற்றவர்களும்
கேட்டவர்களும் இந்த நீதிகளைக் கடைபிடிப்பதால், மகிழ்ச்சியும் புகழும் பெற்று வாழ்வார்கள்
என்று சொல்லிச் செல்கிறார் உலகநாதர்.
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
      அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
      உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
      கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
      பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே! … 13
ஒவ்வொரு பாடலின் இறுதி இரு வரிகளை முருகனை வாழ்த்த ஒதுக்கி வைக்கிறார். “மயிலேறும்
பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!” என்ற போற்றுதல் எட்டு முறை கூறப்படுகிறது. எவ்வாறு
கடவுள் வாழ்த்துப் பாடலில் பிள்ளையாரை நேரடியாகக் குறிப்பிடாமல் கரிமுகன் என்று
குறிப்பிட்டாரோ, அது போல முருகனை “குமரவேள்” என்று இரு இடத்திலும், ஒன்பது முறை
“வள்ளி பங்கன்” என்றும், “மயிலேறும் பெருமான்” என்று எட்டு முறையும் குறிப்பிடுகிறார்.
முருகனை தேவர் குலமகள் தெய்வானையின் மணாளனாக இவர் பார்க்கவில்லை, குறவள்ளியின் கணவனாக
மட்டுமே போற்றுகிறார். ஓரிடத்தில் மட்டும் திருமாலின் தங்கையான உமையின் மைந்தன் என்றுக்
குறிப்பிடுகிறார்.
“குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!” என்று ஒருமுறையும், “குமரவேள் நாமத்தைக் கூறாய்
நெஞ்சே!” என்று ஒரு முறையும், “திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!” என்று மற்றொரு
இடத்திலும் குறிப்பிட்டு திருவடியையும், நாமத்தையும், திருக்கை வேலாயுதத்தையும்
போற்றுகிறார். இந்த வேறுபாடுகளைத் தவிர்த்து “வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய்
நெஞ்சே!” என்பதே தனது நெஞ்சிடம் புலவர் மன்றாடும் முறையாக இருக்கிறது. பாடலில் இறுதி
இருவரி போற்றுதாலாக வரும் 22 வரிகளையும் பிரித்தெடுத்து பாடினாலும் வேலவனைப் பாடும்
அழகிய சிறு போற்றுதல் பாடல் கிடைக்கும். உலகநீதி ஏதும் குறிப்பிடப்படாத இறைவணக்கப்
பாடல்வரிகள் மட்டுமே இவை.
இறைவணக்கப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது …
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்              ( 7 )
      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       ( 8 )
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்             (15)
      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       (16)
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்         (23)
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (24)
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்       (31)
      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       (32)
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்           (39)
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (40)
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்            (47)
      திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!(48)
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்          (55)
      குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!             (56)
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்             (63)
      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       (64)
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்       (71)
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (72)
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்            (79)
      குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!             (80)
மாறான குறவருடை வள்ளி பங்கன்        (95)
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (96)
முதல் இருவரி காப்புப்பாடல், கூலி தருவதை வலியுறுத்தும் 11 வது பாடல் மற்றும் பாடலின்
ஆசிரியர் குறிப்பு தரும் 13 வது பாடல் ஆகியவற்றின் இரு எட்டு வரிகள், வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தும் 22 வரிகள் தவிர்த்து ஏனைய 66 பாடல்வரிகளும் உலகநீதியை
அறிவுறுத்தும் பாடல்வரிகள், அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன …
needhinool2
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்          ( 1 )
      ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்     ( 2 )
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்          ( 3 )
      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்    ( 4 )
போகாத இடந்தனிலே போக வேண்டாம்           ( 5 )
      போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்     ( 6 )
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்   ( 9 )
      நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்      (10)
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்           (11)
      நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்     (12)
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்         (13)
      அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்(14)
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்   (17)
      மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்   (18)
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்     (19)
      தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்   (20)
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்              (21)
    சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம்   (22)
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்             (25)
    கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்     (26)
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்         (27)
      கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்   (28)
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்(29)
      கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்     (30)
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்(33)
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்(34)
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்               (35)
      வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்       (36)
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்           (37)
      தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்    (38)
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத்திரிய வேண்டாம்(41)
      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்   (42)
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்       (43)
      முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்   (44)
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்     (45)
      வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்      (46)
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்        (49)
      கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்       (50)
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்  (51)
      பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்     (52)
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்           (53)
      எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்    (54)
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்            (57)
      செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்  (58)
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்      (59)
      உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்(60)
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்         (61)
      பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்     (62)
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்              (65)
      மனம் சலித்துச் சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்      (66)
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்             (67)
      காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்     (68)
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்  (69)
    புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்    (70)
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்     (73)
      வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம்  (74)
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்              (75)
      தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்(76)
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்  (77)
      ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்         (78)
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்      (89)
      கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்(90)
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்        (91)
      துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்      (92)
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்            (93)
      வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்     (94)__________________


Guru

Status: Offline
Posts: 24455
Date:
Permalink  
 

மேற் கூறிய பாடல் வரிகளின் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)
(1)           நூல்களை கற்காமல் ஒருபொழுதும் நீ வாளா இராதே
(2)           யார் ஒருவர்க்கும் தீமை பயக்கும் சொற்களை சொல்லாதே
(3)           பெற்ற தாயை ஒருபொழுதும் மறவாதே
(4)           வஞ்சகச் செயல்களை செய்யுங் கயவர்களுடன் சேராதே
(5)           செல்லத்தகாத இடத்திலே செல்லாதே
(6)           ஒருவர் தன்முன்னின்றும் போன பின்னர் அவர் மீது புறங்கூறி அலையாதே
(9)           மனதார பொய்யை சொல்லாதே
(10)         நிலைபெறாத காரியத்தை நிலைநாட்டாதே
(11)         நஞ்சுபோன்ற மக்களுடன் ஒரு பொழுதும் சேர்ந்து பழகாதே
(12)         நல்லவரிடம் நட்பு கொள்ளாதவர்களுடன் நட்புக்கொள்ளாதே
(13)         அஞ்சாமல் தன்னந்தனியான வழியில் செல்லாதே
(14)         தன்னிடத்து வந்துஅடைந்தவரை ஒரு பொழுதும் கெடுக்காதே
(17)         உள்ளமானது சென்றவாறெல்லாம் செல்லாதே
(18)         பகைவனை உறவினன் என்று நம்பாதே
(19)         பொருளை வருந்தித் தேடி உண்ணாமல் மண்ணிற் புதைக்காதே
(20)         அறஞ் செய்தலை ஒரு பொழுதும் மறக்காதே
(21)         சினம் தேடிக்கொண்டு அதனால் துன்பத்தினையும் தேடாதே
(22)         வெகுண்டிருந்தாருடைய வாயில் வழியாக செல்லாதே
(25)         ஒருவர் செய்த குற்றத்தை மாத்திரமே எடுத்துச்சொல்லி அலையாதே
(26)         கொலையும் திருட்டும் செய்கின்ற தீயோருடன் நட்புச்செய்யாதே
(27)         நூல்களைக் கற்றவரை ஒரு பொழுதும் பழிக்காதே
(28)         கற்புடைய பெண்களை சேர்தற்கு நினையாதே
(29)         எதிரேநின்று அரசனோடு மாறான சொற்களை பேசாதே
(30)         கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்காதே
(33)         மனையாளை வீட்டில் துன்பமுற வைத்து, அவளோடு கூடி வாழாமல் அலையாதே
(34)         மனைவியின் மீது குற்றமான சொல் யாதொன்றும் சொல்லாதே
(35)         விழத்தகாத பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிடாதே
(36)         கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே
(37)         கீழான நடவடிக்கை கொண்டோருடன் சேராதே
(38)         எளியோரின் மீது தீங்கு சொல்லாதே
(41)         பயனில்லா சொற்கள் கூறுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவரோடு கூட
அலையாதே
(42)         நம்மை மதிக்காதவருடைய தலைவாயிலில் அடியெடுத்து வைக்காதே
(43)         தாய், தந்தை, தமையன், ஆசான், அறிவிற்பெரியோர் அறிவுரைகளை மறக்காதே
(44)         முன்கோபமுடையாருடன் சேராதே
(45)         கல்வி கற்பித்த ஆசிரியருடைய சம்பளத்தை கொடுக்காமல் வைத்துக்கொள்ளாதே
(46)         வழிப்பறி செய்து திரிந்து கொண்டிருப்பவருடன் சேராதே
(49)         செய்யத்தக்க காரியங்களை, அவற்றை செய்யும்வழியை ஆராயாமல் முடிக்க முயலாதே
(50)         பொய்க்கணக்கை ஒருபொழுதும் பேசாதே
(51)         போர் செய்வாருடைய போர் நடக்கும் இடத்தின்கண் போகாதே
(52)         பொதுவான இடத்தை ஒரு பொழுதும் ஆக்கிரமிக்காதே
(53)         இரு மனைவியரை ஒருபொழுது தேடிக் கொள்ளாதே
(54)         எளியாரை பகைத்துக் கொள்ளாதே
(57)         சேரத்தகாத இடங்களில் சேராதே
(58)         ஒருவர் செய்த உதவியை ஒருபொழுதும் மறக்காதே
(59)         ஊரெல்லாம் திரியும் கோள் சொல்பவராக இருக்காதே
(60)         உறவினரை இகழ்வாகப் பேசாதே
(61)         புகழ் அடைதற்கு உதவும் செயலை செய்யாது விலக்காதே
(62)         ஒருவருடைய அடிமையைப் போல அவருடன் துணையாக அலையாதே
(65)         ஒரு நிலத்தில் நின்று அந்த மண்ணைப்பற்றி ஒருதலைச் சார்பாகப் பேசாதே
(66)         உள்ளம் சலித்து யாருடனும் சண்டையிட்டு அலையாதே
(67)         இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே
(68)         கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே
(69)         கேட்போர் மனதைப் புண்படும் சொற்களை சொல்லாதே
(70)         புறம் சொல்லி அலைபவருடன் சேராதே
(73)         வீரமொழி கூறி சண்டைக்காக அலைபவருடன் நட்புக்கொள்ளாதே
(74)         வாதாடி ஒருவரை அழிக்கும் நோக்கில் கெடுவழக்கு சொல்லாதே
(75)         வலிமைகூறி, கலகம் செய்து அலையாதே
(76)         தெய்வத்தை ஒருபொழுதும் மறவாதே
(77)         இறக்கநேரிடுமாயினும் கூட பொய்யை சொல்லாதே உண்மை
(78)         இகழ்ச்சி செய்த உறவினரை விரும்பாதே
(89)         ஒரு குடும்பத்தை பிரிவுபடுத்தி கெடுக்காதே
(90)         பூவைத் தேடி கொண்டையின் மீது முடிக்கும் பகட்டையொத்த செயலைச் செய்யாதே
(91)         பிறர்மீது பழி ஏற்படும்வகையில் அவர் வாழ்வில் தலையிட்டு அலையாதே
(92)         தீயவர்களாகி ஊர்தோறும் அலைவருடன் சேராதே
(93)         பெருமையுடையனவாகிய தெய்வங்களை இகழாதே
(94)         மேன்மையுடைய பெரியோர்களை வெறுக்காதே
உலகநீதி பாடல் வரிகள், தான் கூறும் அறிவுரைகளை எதிர்மறையாகவே கூறிச் செல்கிறது.
இம்முறையை புலவர் கையாண்டதை, அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் முயற்சியாக,
எச்சரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அறிவுரைகளாகக் கொள்ளலாம். இதை ஒட்டிய சுவையான தகவல்
ஒன்றும் உண்டு. திரு அருட்பிரகாச வள்ளலார் இளமையில் கல்வி பயிலும்பொழுது “வேண்டாம்,
வேண்டாம்” என்று முடியும் இப்பாடல் வரிகளைக் கண்டு வியப்புற்றாராம். ஏன் அறநெறிகளை
“வேண்டும், வேண்டும்” என்று எழுதலாகாது என்ற எண்ணம் கொண்டு “உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலை எழுதியதாகக் கூறப்படுகிறது.
உலகநீதி பாடலகளில் காணும் வெறும் 66 வரிகளே உள்ள அறநெறிப் பாடல் வரிகளை சிறுவயதில்
பொருள் புரியாமல் மனனம் செய்தாலும்கூட, வளர்ந்த பின்னர் வாழ்நாள் முழுவதும்
நல்வழிப்படுத்தும் கருத்துரைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது தெரிகிறது. எனவே அதன்
அடிப்படையில் மனதில் எழும் கேள்வி; ஏனிந்த 66 வரிகளையும் ஆரம்பப்பள்ளி கல்வி
நாட்களிலேயே சிறார் எண்ணத்தில் பதியுமாறு சொல்லி, கடைபிடிக்கும் அவசியத்தையும்
வலியுறுத்தக் கூடாது என்பதே.
பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒரு திருக்குறள் கருத்துடன் இணைத்தும் கவிதை நயம்
பாராட்டலாம், அத்துடன் மற்ற அறநெறி நூல்களின் பாடல்களும் நினைவுக்கு வருவதைத்
தவிர்க்கவும் இயலாது. உலகநீதி பாடல் வரிகளை மேலும் பலகோணங்களிலும் ஆராய்ந்து இலக்கிய
நயம் பாராட்டலாம்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard