நானேகாட் கல்வெட்டு ஸாதவாஹன வம்ஸப் பேரரசர் ஶாதகர்ணியின் மனைவியான நாகனிகா/நாயனிகா தேவியால் ஏற்படுத்தப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு பொ.யு.மு.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும்,பொ.யு.மு.1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இது காலத்தால் முந்திய ஸமஸ்க்ருத கல்வெட்டுக்களுள் ஒன்று ஆகும்.இக்கல்வெட்டின் காலம் எது?
ஸாதவாஹனர்களின் ஆட்சி பொ.யு.மு.3 அல்லது 2 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று கூறப்படுகிறது. வாயுமஹாபுராணம்,ப்ரஹ்மாண்ட மஹாபுராணம்,மத்ஸ்யமஹாபுராணம் ஆகியவை 30 அல்லது 32 ஸாதவாஹனர் அரசர்கள் 400 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்ததாகக் கூறுகின்றன.
மத்ஸ்யமஹாபுராணம் அத்யாயம் 272ல் 32 ஸாதவாஹன அரசர்கள் 460 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. வாயுமஹாபுராணம் 2.37ல் 30 ஸாதவாஹன அரசர்கள் 411 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.ப்ரஹ்மாண்ட மஹாபுராணம் 2.3.74ல் 30 ஸாதவாஹன அரசர்கள் 456 ஆண்டுகள் ஆட்சிசெய்ததாகக் கூறப்படுகிறது.
வாயுமஹாபுராணம் மற்றும் ப்ரஹ்மாண்ட மஹாபுராணம் முதல் ஸாதவாஹன அரசரான ஸீமுகருக்குப் பின் க்ருஷ்ணரும்,அவருக்குப்பின் ஶாதகர்ணியும் ஆட்சி செய்ததாகக் கூறுகின்றன.மத்ஸ்யமஹாபுராணம் ஸீமுகருக்குப் பின் க்ருஷ்ணர்,க்ருஷ்ணருக்குப்பின் ஸ்ரீமல்லகர்ணி,பூர்ணோத்ஸங்கர்,ஸ்கந்தஸ்தம்பி ஆகியோர் ஆட்சி செய்ததாகவும் அவர்களுக்குப் பின் ஶாதகர்ணி ஆட்சிக்கு வந்ததாகவும் கூறுகிறது. ஸீமுகருக்கும்,ஶாதகர்ணிக்கும் இடையே 63 வருட இடைவெளி இருந்ததாகக் கூறப்படுகிறது.
நானேகாட் கல்வெட்டு ஸீமுகரை ஶாதகர்ணியின் தந்தை என்று கூறுவதாகத் தெரிகிறது. க்ருஷ்ணர் ஸீமுகரின் சகோதரர். தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஸீமுகர் பொ.யு.மு.120-96 வரை ஆட்சிசெய்ததாகக் கூறுகின்றனர்.ஆனால் ஸீமுகரின் ஆட்சி பொ.யு.மு.120க்கு முன்னரே முடிவடைந்தது என்று சிலர் கூறுகின்றனர். கலிங்கத்துக் காரவேலரின் ஹதிகும்பாக் கல்வெட்டு ஶாதகர்ணி பற்றிக் கூறுகிறது. ஆனால் ஹதிகும்பாக் கல்வெட்டின் காலமே இன்னும் பொ.யு.மு.2ஆம் நூற்றாண்டா அல்லது பொ.யு.மு.1ஆம் நூற்றாண்டா என்று உறுதியாக முடிவுசெய்யப்படவில்லை.மெகஸ்தனிஸ்(பொ.யு.மு.3ஆம் நூற்றாண்டு) தனது இண்டிகாவில் “ஆந்த்ரே” எனும் குலத்தின் அரசர் 1,00,000 காலாப்படையினர்,2000 குதிரைப்படையினர்,1000 யானைகள் கொண்ட படை உடையவராகத் திகழந்ததாகக் கூறுகிறார்.இது ஸாதவாஹனர்களைக் குறிப்பதாக இருக்கலாம்.
இதுவரை ஸீமுகரின் காலம் என்று கூறப்படுபவை பொ.யு.மு.3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி,பொ.யு.மு.2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி,பொ.யு.மு.2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.இதன் அடிப்படையிலேயே மற்ற அரசர்களின் ஆட்சிக்காலங்களைக் கணிக்க வேண்டியிருக்கிறது.ஹதிகும்பாக் கல்வெட்டு பொ.யு.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது தான் என்று உறுதிபடுத்தப்பட்டால் நானேகாட் கல்வெட்டும் பொ.யு.மு.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது தான் என்று உறுதிபடுத்தப்படும்.
இப்போது உள்ள வரலாற்று ஆதாரங்கள் மற்றும் புராணங்களில் உள்ள ஆதாரங்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது இக்கல்வெட்டு பொ.யு.மு.2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பொ.யு.மு.1ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
நானேகாட் கல்வெட்டின் சிறப்புகள்:
இது இதுவரை கிடைத்த ஸமஸ்க்ருதக் கல்வெட்டுகளில் பழைமையான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். மற்றவை ஹதிபடா-கோஸுன்டி,அயோத்யா கல்வெட்டுகள் ஆகும்.
ஶங்கர்ஶணர்,வாஸுதேவர்,இந்த்ரன்,குபேரன்,வருணன்,ஸூர்யன்,சந்த்ரன்,யமன் முதலான தெய்வங்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் உள்ளன.30 இடங்களில் எண்கள் கூறப்படுகின்றன.தற்கால நாகரி எழுத்து எண்களை ஒத்திருக்கும் எண்கள் இக்கல்வெட்டில் உள்ளன.உலகில் இதுவரை கண்டறியப்பட்ட 2,4,6,7 மற்றும் 9க்கான எண்களுள் இக்கல்வெட்டில் உள்ள எண்கள் பழைமையானவை ஆகும்.அரசவம்ஸத்தவர்களால் ஶ்ரௌத்த யஜ்ஞங்கள் இயற்றப்பட்டதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது இக்கல்வெட்டு.