பலவேசமுத்து, தன்னாசி-– இந்தப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உங்களின் தெரிந்தவர்கள் பெயராகவோ உறவினர் பெயராகவோகூட இருக்கலாம். சாலையில் போகும்போது ஏதேனும் ஒரு வண்டியில் பலவேசமுத்து துணை, தன்னாசி துணை என்பதைப் படித்திருக்கலாம். பொருட்கள் வாங்கப் போகும் கடையினரின் குலதெய்வப் பெயராக இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி ஆராய்ச்சியாளரிடமோ அல்லது பொதுப்புத்தியில் இந்துத் தெய்வங்களைப் பார்ப்பவரிடத்தில் கேட்டால் அவற்றை நாட்டார் தெய்வங்கள் எனச் சொல்லுவார். அதென்ன நாட்டார் தெய்வங்கள் என்றால் விளக்கம் ஏதும் வராது. ஏழைமக்களின் தெய்வம், உழைக்கும் மக்களின் தெய்வம் என்றெல்லாம் சிலர் சொல்லி அவை வேறு தெய்வங்கள் என விளக்கம் தருவதும் உண்டு.
இதிலேயும் ஒரு சிலர் அவையெல்லாம் பழங்குடி மக்கள் வணங்கிய தெய்வங்கள். இப்போது அவற்றை சிவனுடன் சேர்த்து அத்தெய்வங்களின் தனித்தன்மையை இழக்க வைக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லுவதுண்டு. கூடவே விஷ்ணு எங்கேயும் கிடையாது. அதெல்லாம் பிற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கதைகள் என்றெல்லாம்கூட சொல்லுவதுண்டு. இவைகளை வரலாறு, ஆராய்ச்சி எனப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியா? இத்தெய்வங்களை ஏன் இந்தப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடையே இக்கட்டுரை.
“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது. என்ன இது, பலவேசமுத்து என்று ஒரு பெயர், இப்படியெல்லாம் கூட சாமிக்குப் பெயர் இருக்குமா, இந்தப் பெயருக்கு என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் பலதும் மனதில் ஓடின. இப்பெயரை வைத்திருந்தால் ஏதேனும் சாமியாக இருக்கும். அதற்கு ஏதேனும் ஓர் விளக்கம் கட்டாயம் இருக்கும் எனவும் நினைத்தேன். பொதுவாகவே குலதெய்வங்களைக் கும்பிடுவோர் வரலாற்றை அறிந்துகொள்வதில்லை. அப்படியே வரலாற்றை அறிந்து, பதிப்பித்து நூலாகக் கொண்டு வந்தாலும் அவை குறிப்பிட்ட வட்டாரத்தைத் தாண்டிக் கிடைப்பதில்லை என்பதாலும் இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கக் கடினமாக இருந்தன.
இப்படியாக நாள்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் கடைக்குப்போய் பொருள் வாங்கும்போது அங்கு படத்தில் பலவேசமுத்து, சுடலைமுத்து, பேச்சியம்மனுடன் அருள் பாலித்தார். ஆகா கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்களே அது இது தானோ என்று நினைத்துக்கொண்டே சாமி இருக்கும் கோயில் எங்கே இருக்கிறது என விசாரித்தேன் பழனிக்கு அருகில் என்று சொன்னார்கள். தங்களுடைய குலதெய்வம் என்றும் சொன்னார்கள் கடையில் இருந்தவர். ஆனால் பெயரைப் பற்றிய விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.
இணையத்தில் தேடினேன். பலவேசமுத்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்திருக்கும் பாதக்கரை சாமிகள் கோயிலில் பாதக்கரையானுடன் ஆதிநாராயணரும் பலவேசமுத்துவும் வீற்றிருக்கீறார்கள். அருகில் சிவனும் பார்வதியும் தனியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள் என்று தெரிய முடிந்தது. ஆயினும் முழுவிவரம் கிடைக்கவில்லை.
இப்படியாக யோசித்துக்கொண்டிருக்கும் போது விகிர்தன் எனும் சொல் நினைவுக்கு வந்தது. இச்சொல்லுக்கு பலவிதமான உருவங்களை எடுப்பவர் என்று அர்த்தம். பல ரூபங்களைக் கொண்டவர் எனவும் அறியமுடியாத தோற்றம் கொண்டவர் எனவும்கூட அர்த்தங்கள். இச்சொல் சிவன், முருகன், விஷ்ணு என எல்லாத் தெய்வங்களுக்கும் போற்றியாகப் பாடப்பெறுகிறது. இந்த விகிர்தன் எனும் சொல் ஆண்களுக்கு உரியதாகவும் சைவப் பன்னிரு திருமுறைகளிலும் வைணவப் பிரபந்தங்களிலும் வழங்குகிறது. இந்த விகிர்தன் எனும் பதத்தை புரிந்து கொள்ள லீலாவிநோதம் எனும் கருத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகை இறைவனின் விளையாட்டு என்றே பெரியவர்கள் சொல்கிறார்கள். இறைவன் தன்னுடைய அளப்பரும் திறனாலே செயல்புரிகிறான், அவனுடைய செயல்களை அறியமுடியாது எனவே அவற்றை விளையாட்டு எனப் புரிந்துகொள்கிறோம்.
அறிவாளிகள் இப்படி எல்லாம் விளக்கம் தரும் போது பாமர மக்கள் அவர்களின் மொழியில் விளக்கம் தருகிறார்கள்…
“கடவுள் மாதிரி ஒருவர் வந்து காப்பாத்தினார் என்று சொல்லுவார்கள். சாமி ஏதோ உருவத்துல வந்து உதவி செய்யும். பிச்சைகாரன் மாதிரி வரும், பேயனா வரும், குறி சொல்றவனா பலவேசத்துல வரும். அதுனால அப்படி ஏதோ வேஷத்துல நாம போடாத துணிமணியும் நகைநட்டும் போட்டுட்டு வரும் சாமிக்கு பலவேசமுத்துன்னு பேர் வைச்சு கும்பிடுறோம்…”
சுடலை என்பதை சிவன் பெயர் என எடுத்துக்கொண்டால் இவர் விஷ்ணுவின் அம்சம், விஷ்ணு ரூபம். இங்கு கேள்வி கேட்கலாம், ஏன் எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய பெயர் என சொல்லிவிட்டு அப்புறம் பாமர மக்கள் விஷ்ணுவைத்தான் கும்பிடுகிறார்கள் என எப்படிச் சொல்லமுடியும். இதற்கான விடை, சுடலை, மாடன் என்றெல்லாம் அழைக்கப்படும் சாமிகள் உக்கிர தெய்வங்களாகச் சொல்லப்படும்போது அதைப்போல் சாந்தமான அமைதியான தெய்வங்களாக சொல்லப்படும் தெய்வங்களை விஷ்ணு ரூபம் என்கிறோம். அப்படியான கடவுள்தான் பலவேசமுத்து.
இவரோடு கூடவே தன்னாசி என்பவரைப் பற்றியும் பார்ப்போம். தன்னாசி சாமி, கொங்கு நாட்டிலே குடிகொண்டு மக்களைக் காத்து அருள்பாலித்து வருபவர். இவர் சுரப்புரடையில் கம்மஞ்சோறு குடித்து பித்தனாய் பேயனாய் திரிபவர் எனச் சொல்வதுண்டு. தன்னாசி முனியப்பர், தன்னாசி பித்தன், தன்னாசி கோயில் என கொங்கு நாட்டிலே பல இடங்களில் இப்பெயரோடு அருள் பாலிக்கும் சாமியை பார்க்கமுடியும். இப்படி அருள் பாலிப்பவர் யார்? கொங்கு நாட்டுக் கதைகளில், ‘மாயவர்’ என்று அழைக்கப்படும் விஷ்ணுதான். பித்தனாய் வந்து மாயம் பண்ணும் மாயவரே அப்படி அழைக்கப்படுகிறார்.
கொங்கு நாட்டு பாடலான அண்ணன்மார் கதை என அழைக்கப்படும் பாடலில் தன்னாசி பற்றி ஈசனே பேசுகிறார். கொங்கு நாட்டு சக்திகனல் பதிப்பித்த அண்ணன்மார் கதையில் வரும் பகுதி,
அம்பலத்துக்காணுமுண்டு அடிக்கிளைக்குப் பெண்ணுமுண்டு
பொன்னம்பலந்தனிலே போய்நீ தவமிருந்தால்
தன்னாசி கோவிலிலே தவமிருந்து வரங்கேட்டால்
தன்னாசி மனமிரங்கி சாமி வரங்கொடுப்பார்
என்றுசொல்லி ஈஸ்வரரும் ஏகிமறைந்துவிட்டார்
இந்த மாயவர் எனும் சொற்றொடர் தன்னாசிக்கே உரியது. மாயவர் என்றால் கிருஷ்ணன்தான்; அவரே தன்னாசியாக வருகிறார் என்றும் சொல்வாருண்டு. இந்த மாயவரின் வழிபாடும் பல்லாண்டுகளாக இருப்பதைப் பார்க்கமுடியும். சங்கப் பாடல்களின் ‘மாயோன்’ என்று குறிப்பிடப்படும் சொல் மாயவன் என்பதில் இருந்து வந்தது என ஊகிக்க இடமுண்டு. சங்ககாலப் பாடல்களில் சொல்லப்படும் பண்புகளான கரிய நிறம், பெரிய உருவம், காடுகளில் உறைபவன் என்பதெல்லாம் இப்போதும் மாயவருக்கே உரித்தானதாகச் சொல்லப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக சொந்த மண்ணில், மண்ணின் மக்களைக் காத்து அருள்பாலித்து வரும் தெய்வங்களை இல்லை என மறுக்கும்போதுதான் அப்படி இல்லை என உரத்துச் சொல்லவேண்டி நேர்கிறது.
இப்படியாக இருக்கும் தன்னாசியும் பலவேசமுத்துவும் பெரும்பாலும் குலசாமிகளாக இருப்பதைப் பார்க்கமுடியும். சாமியால் காக்கப்பட்டவர்கள் சாதி, இன, மொழி வேறுபாடில்லாமல் அவரையே குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபட ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி வழிபடும் வெள்ளந்தி மனதினருக்கு வழிபாடுதான் முக்கியமாகப் படுகிறதே ஒழிய அவற்றைக் காக்கவேண்டும், அதுவும் இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் எனப் பெயர் சூட்டி அவமானப்படுத்தும் ஆட்களிடம் இருந்து காக்கவேண்டும் எனத் தோன்றுவதில்லை. அதனாலே வரலாற்றைக் காக்கும் செயல்களை நாமே செய்யவேண்டும்.
விஷ்ணுவாக விஷ்ணு ரூபமாக வழிபடப்படும் தெய்வங்களை, குலசாமிகளை, இம்மண்ணின் சாமிகளை வணங்குவோம் அவர்களின் அருள் பெறுவோம்.
பின்குறிப்பு: இந்த ‘அண்ணன்மார் கதை’யைத்தான் திரித்து பாத்திரங்களின் தெய்வத்தன்மையை மறுத்து கருணாநிதி ஒரு புத்தகம் எழுதியதும் அதைக்கொண்டு படம் எடுத்ததும் எவ்வளவு தூரம் குலசாமிகளின் வரலாறு திரிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணம்.