New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலவேசமுத்துவும் தன்னாசியும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பலவேசமுத்துவும் தன்னாசியும்
Permalink  
 


பலவேசமுத்துவும் தன்னாசியும்

February 14, 2012
By ராஜசங்கர்

 

பலவேசமுத்து, தன்னாசி-– இந்தப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உங்களின் தெரிந்தவர்கள் பெயராகவோ உறவினர் பெயராகவோகூட இருக்கலாம். சாலையில் போகும்போது ஏதேனும் ஒரு வண்டியில் பலவேசமுத்து துணை, தன்னாசி துணை என்பதைப் படித்திருக்கலாம். பொருட்கள் வாங்கப் போகும் கடையினரின் குலதெய்வப் பெயராக இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி ஆராய்ச்சியாளரிடமோ அல்லது பொதுப்புத்தியில் இந்துத் தெய்வங்களைப் பார்ப்பவரிடத்தில் கேட்டால் அவற்றை நாட்டார் தெய்வங்கள் எனச் சொல்லுவார். அதென்ன நாட்டார் தெய்வங்கள் என்றால் விளக்கம் ஏதும் வராது. ஏழைமக்களின் தெய்வம், உழைக்கும் மக்களின் தெய்வம் என்றெல்லாம் சிலர் சொல்லி அவை வேறு தெய்வங்கள் என விளக்கம் தருவதும் உண்டு.

இதிலேயும் ஒரு சிலர் அவையெல்லாம் பழங்குடி மக்கள் வணங்கிய தெய்வங்கள். இப்போது அவற்றை சிவனுடன் சேர்த்து அத்தெய்வங்களின் தனித்தன்மையை இழக்க வைக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லுவதுண்டு. கூடவே விஷ்ணு எங்கேயும் கிடையாது. அதெல்லாம் பிற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கதைகள் என்றெல்லாம்கூட சொல்லுவதுண்டு. இவைகளை வரலாறு, ஆராய்ச்சி எனப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியா? இத்தெய்வங்களை ஏன் இந்தப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடையே இக்கட்டுரை.

“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது. என்ன இது, பலவேசமுத்து என்று ஒரு பெயர், இப்படியெல்லாம் கூட சாமிக்குப் பெயர் இருக்குமா, இந்தப் பெயருக்கு என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் பலதும் மனதில் ஓடின. இப்பெயரை வைத்திருந்தால் ஏதேனும் சாமியாக இருக்கும். அதற்கு ஏதேனும் ஓர் விளக்கம் கட்டாயம் இருக்கும் எனவும் நினைத்தேன். பொதுவாகவே குலதெய்வங்களைக் கும்பிடுவோர் வரலாற்றை அறிந்துகொள்வதில்லை. அப்படியே வரலாற்றை அறிந்து, பதிப்பித்து நூலாகக் கொண்டு வந்தாலும் அவை குறிப்பிட்ட வட்டாரத்தைத் தாண்டிக் கிடைப்பதில்லை என்பதாலும் இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கக் கடினமாக இருந்தன.

இப்படியாக நாள்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் கடைக்குப்போய் பொருள் வாங்கும்போது அங்கு படத்தில் பலவேசமுத்து, சுடலைமுத்து, பேச்சியம்மனுடன் அருள் பாலித்தார். ஆகா கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்களே அது இது தானோ என்று நினைத்துக்கொண்டே சாமி இருக்கும் கோயில் எங்கே இருக்கிறது என விசாரித்தேன் பழனிக்கு அருகில் என்று சொன்னார்கள். தங்களுடைய குலதெய்வம் என்றும் சொன்னார்கள் கடையில் இருந்தவர். ஆனால் பெயரைப் பற்றிய விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.

இணையத்தில் தேடினேன். பலவேசமுத்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்திருக்கும் பாதக்கரை சாமிகள் கோயிலில் பாதக்கரையானுடன் ஆதிநாராயணரும் பலவேசமுத்துவும் வீற்றிருக்கீறார்கள். அருகில் சிவனும் பார்வதியும் தனியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள் என்று தெரிய முடிந்தது. ஆயினும் முழுவிவரம் கிடைக்கவில்லை.

இப்படியாக யோசித்துக்கொண்டிருக்கும் போது விகிர்தன் எனும் சொல் நினைவுக்கு வந்தது. இச்சொல்லுக்கு பலவிதமான உருவங்களை எடுப்பவர் என்று அர்த்தம். பல ரூபங்களைக் கொண்டவர் எனவும் அறியமுடியாத தோற்றம் கொண்டவர் எனவும்கூட அர்த்தங்கள். இச்சொல் சிவன், முருகன், விஷ்ணு என எல்லாத் தெய்வங்களுக்கும் போற்றியாகப் பாடப்பெறுகிறது. இந்த விகிர்தன் எனும் சொல் ஆண்களுக்கு உரியதாகவும் சைவப் பன்னிரு திருமுறைகளிலும் வைணவப் பிரபந்தங்களிலும் வழங்குகிறது. இந்த விகிர்தன் எனும் பதத்தை புரிந்து கொள்ள லீலாவிநோதம் எனும் கருத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகை இறைவனின் விளையாட்டு என்றே பெரியவர்கள் சொல்கிறார்கள். இறைவன் தன்னுடைய அளப்பரும் திறனாலே செயல்புரிகிறான், அவனுடைய செயல்களை அறியமுடியாது எனவே அவற்றை விளையாட்டு எனப் புரிந்துகொள்கிறோம்.

அறிவாளிகள் இப்படி எல்லாம் விளக்கம் தரும் போது பாமர மக்கள் அவர்களின் மொழியில் விளக்கம் தருகிறார்கள்…

“கடவுள் மாதிரி ஒருவர் வந்து காப்பாத்தினார் என்று சொல்லுவார்கள். சாமி ஏதோ உருவத்துல வந்து உதவி செய்யும். பிச்சைகாரன் மாதிரி வரும், பேயனா வரும், குறி சொல்றவனா பலவேசத்துல வரும். அதுனால அப்படி ஏதோ வேஷத்துல நாம போடாத துணிமணியும் நகைநட்டும் போட்டுட்டு வரும் சாமிக்கு பலவேசமுத்துன்னு பேர் வைச்சு கும்பிடுறோம்…”

சுடலை என்பதை சிவன் பெயர் என எடுத்துக்கொண்டால் இவர் விஷ்ணுவின் அம்சம், விஷ்ணு ரூபம். இங்கு கேள்வி கேட்கலாம், ஏன் எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய பெயர் என சொல்லிவிட்டு அப்புறம் பாமர மக்கள் விஷ்ணுவைத்தான் கும்பிடுகிறார்கள் என எப்படிச் சொல்லமுடியும். இதற்கான விடை, சுடலை, மாடன் என்றெல்லாம் அழைக்கப்படும் சாமிகள் உக்கிர தெய்வங்களாகச் சொல்லப்படும்போது அதைப்போல் சாந்தமான அமைதியான தெய்வங்களாக சொல்லப்படும் தெய்வங்களை விஷ்ணு ரூபம் என்கிறோம். அப்படியான கடவுள்தான் பலவேசமுத்து.

இவரோடு கூடவே தன்னாசி என்பவரைப் பற்றியும் பார்ப்போம். தன்னாசி சாமி, கொங்கு நாட்டிலே குடிகொண்டு மக்களைக் காத்து அருள்பாலித்து வருபவர். இவர் சுரப்புரடையில் கம்மஞ்சோறு குடித்து பித்தனாய் பேயனாய் திரிபவர் எனச் சொல்வதுண்டு. தன்னாசி முனியப்பர், தன்னாசி பித்தன், தன்னாசி கோயில் என கொங்கு நாட்டிலே பல இடங்களில் இப்பெயரோடு அருள் பாலிக்கும் சாமியை பார்க்கமுடியும். இப்படி அருள் பாலிப்பவர் யார்? கொங்கு நாட்டுக் கதைகளில், ‘மாயவர்’ என்று அழைக்கப்படும் விஷ்ணுதான். பித்தனாய் வந்து மாயம் பண்ணும் மாயவரே அப்படி அழைக்கப்படுகிறார்.

கொங்கு நாட்டு பாடலான அண்ணன்மார் கதை என அழைக்கப்படும் பாடலில் தன்னாசி பற்றி ஈசனே பேசுகிறார். கொங்கு நாட்டு சக்திகனல் பதிப்பித்த அண்ணன்மார் கதையில் வரும் பகுதி,

அம்பலத்துக்காணுமுண்டு அடிக்கிளைக்குப் பெண்ணுமுண்டு
பொன்னம்பலந்தனிலே போய்நீ தவமிருந்தால்
தன்னாசி கோவிலிலே தவமிருந்து வரங்கேட்டால்
தன்னாசி மனமிரங்கி சாமி வரங்கொடுப்பார்
என்றுசொல்லி ஈஸ்வரரும் ஏகிமறைந்துவிட்டார்

இந்த மாயவர் எனும் சொற்றொடர் தன்னாசிக்கே உரியது. மாயவர் என்றால் கிருஷ்ணன்தான்; அவரே தன்னாசியாக வருகிறார் என்றும் சொல்வாருண்டு. இந்த மாயவரின் வழிபாடும் பல்லாண்டுகளாக இருப்பதைப் பார்க்கமுடியும். சங்கப் பாடல்களின் ‘மாயோன்’ என்று குறிப்பிடப்படும் சொல் மாயவன் என்பதில் இருந்து வந்தது என ஊகிக்க இடமுண்டு. சங்ககாலப் பாடல்களில் சொல்லப்படும் பண்புகளான கரிய நிறம், பெரிய உருவம், காடுகளில் உறைபவன் என்பதெல்லாம் இப்போதும் மாயவருக்கே உரித்தானதாகச் சொல்லப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக சொந்த மண்ணில், மண்ணின் மக்களைக் காத்து அருள்பாலித்து வரும் தெய்வங்களை இல்லை என மறுக்கும்போதுதான் அப்படி இல்லை என உரத்துச் சொல்லவேண்டி நேர்கிறது.

இப்படியாக இருக்கும் தன்னாசியும் பலவேசமுத்துவும் பெரும்பாலும் குலசாமிகளாக இருப்பதைப் பார்க்கமுடியும். சாமியால் காக்கப்பட்டவர்கள் சாதி, இன, மொழி வேறுபாடில்லாமல் அவரையே குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபட ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி வழிபடும் வெள்ளந்தி மனதினருக்கு வழிபாடுதான் முக்கியமாகப் படுகிறதே ஒழிய அவற்றைக் காக்கவேண்டும், அதுவும் இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் எனப் பெயர் சூட்டி அவமானப்படுத்தும் ஆட்களிடம் இருந்து காக்கவேண்டும் எனத் தோன்றுவதில்லை. அதனாலே வரலாற்றைக் காக்கும் செயல்களை நாமே செய்யவேண்டும்.

விஷ்ணுவாக விஷ்ணு ரூபமாக வழிபடப்படும் தெய்வங்களை, குலசாமிகளை, இம்மண்ணின் சாமிகளை வணங்குவோம் அவர்களின் அருள் பெறுவோம். 

பின்குறிப்பு: இந்த ‘அண்ணன்மார் கதை’யைத்தான் திரித்து பாத்திரங்களின் தெய்வத்தன்மையை மறுத்து கருணாநிதி ஒரு புத்தகம் எழுதியதும் அதைக்கொண்டு படம் எடுத்ததும் எவ்வளவு தூரம் குலசாமிகளின் வரலாறு திரிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on February 14, 2012 at 7:36 am

அன்புள்ள ராஜசங்கர், நல்ல சிந்தனை வழங்கியுள்ளீர்கள்.
சிவஞான சித்தியார்,
“ஒன்றோடு ஒன்று ஒவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
நின்றலால் உலகம் நின்றனன் என்றும் ஓரார்;
அன்றி அவ்வேடம் எல்லாம் அருள்புரி தொழிலென்று ஓரார்;
கொன்றது வினையைக் கொன்று நின்ற அக்குணம் என்றும் ஓரார்” என்று பாடுகின்றது. ஒன்றோடு ஒன்று ஒவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு’ என்ற தொடர்ப் பொருள்தான் ‘பலவேச முத்து’ என்று தெளிவாக்கியுள்ளீர்கள். எனக்கு இது இனிய புதிய செய்தி

கொங்கு நாட்டில் தன்னாசி தன்னசியப்பன் என்ற பெயர்கள் உண்டு. கிராமங்களில் தன்னசியப்பனுக்குக் கோயில்கள் உண்டு.சந்யாசி என்ற பெயர்தான் மருவி கொங்கு மக்கள் நாவில் தன்னாசி என வழங்குகின்றது. பண்டைக் கொங்கு மக்கள் விவசாயக் குடிகள். அவர்கள் வைதிகப் பெருந் தெய்வ்பங்களான சிவன் விஷ்ணு ஆகியோரைக் காட்டிலும் அவர்களுடைய குடும்பங்களுடன் பழகி நல்லது கெட்டதில் அறுவுரை வழங்கி ஆற்றுப்படுத்தும் சந்யாசிகலையே தெய்வமாகக் கொண்டாடும் பண்புடையவர்கள். வேட்டைகாரன்புதூர் அழுக்குச்சாமிகள் போல ஊர்பேர் தெரியாத சந்யாசிகள் கொங்கு மக்களிடம் தெய்வபக்தியையும் அறவுணர்ச்சியையும் வலர்த்தியவர்கள். அவர்களின் சமாதிக் கோயில்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் தன்னாசி கோயில்கள் என்று வழங்கப்படுகின்றன.
நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள அண்ணன்மார்சாமி கதையிலும், பொன்னம்பல நாதர் குன்றுடையான் தாமைரை நாச்சியிடம், பொன்னம்பலமாகிய சிதம்பரத்துக் குச் சென்றால், அங்கு தன்னாசி (சந்யாசி) ஒருவர் இருப்பார் அவர் பிள்ளை வரந்தருவார் என்று அறிவித்ததையும் அவ்வாறே அவர்கள் பொன்னம்பலமாகிய சிதம்பரத்திற்குச் சென்று பொன்னம்ப்லநாதனை வழிபட்டபொழுது தன்னாசி ஒருவரைச் சந்தித்ததும் அவர் பிள்ளை வரமளித்து அதற்கடையாளமாக் மாலி ஒன்றையும் கொடுத்ததையும் அண்ணன்மார்கதை கூறுவதைக் கவனிக்கவும். மரபுவழிக் கொங்குமக்களிடம் வைதிகர்கலைக் காட்டிலும் சந்நியாசிகளிடமே மரியாதையும் பக்தியும் உண்டு. தன்னாசி சந்யாசியே. தன்னாசியப்பன் சந்யாசியப்பனே. இவர்களே கண்கண்ட தெய்வம்.

நல்ல செய்தி; அருமையான செய்தி வழங்கியுள்ளீர்கள்

 

சரவணன் .V. on February 14, 2012 at 11:26 am

வணக்கம் திரு ராஜசங்கர்
ரொம்ப நாட்களாக மனதில் இருந்த விஷயத்தைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
பலவேசத்திற்கு அருமையான விளக்கம். மிக நன்றி.முனைவர் அவர்களின் கருத்துக்கும் மிக நன்றி.
சிலர் Folk Gods என்று ஆங்கிலத்தில் சொல்லும் பொது ஒரு வித கிண்டல் தொனிக்கிறது. தாங்கள் எழுதியிருப்பதைப்போல் ஒவ்வொரு வழிப்பாட்டு தெய்வத்திற்கும் பின்னே நிறைய அர்த்தம் உள்ளது.
பேச்சி எனும் தெய்வம் வாக் தேவியான சரஸ்வதியே என்று காஞ்சி பெரியவர் சொல்கிறார்.
முனீஸ்வரன் கோயில் பற்றி என் சித்தப்பா வாழ்ந்த ஊரில் சொல்வார்கள். பல ஊர்களில் பல கதைகள் கொண்டு பாடப்பெறும் முனீஸ்வரன் அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் [ ஒன்றுக்கு மேற்பட்ட] இருக்கலாம்.

சென்னையில் ஒருமுறை இதைப்பற்றி நினைத்தவாறு பயணிக்கையில் ஒரு முனீஸ்வரன் கோயிலைக்கண்டேன்.வெண் தாடி மீசையுடன் முனிவர் போல் தோற்றம் அளித்த சுதைச்சிற்பம் அக்கோயில் கோபுரத்தின் மேல் இருந்தது.
சுருட்டு பிடிக்கும் எங்க சாமி என்றார் ஒரு பக்தர். அவதூத சன்யாசிகள் என்கிறார்களே , .அப்படி இருக்கலாம் .அவர்கள் கருணை காரணமாக நம்மிடையே வருகிறார்கள்.

எப்படியாகிலும் மக்களுக்கு அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து , அவர்களுடன் வாழ்ந்து அருள் பாலிக்கும் பரம்பொருளின் வடிவங்கள் தான்.
வியாதி, குழந்தையின்மை முதலிய வாழ்வின் குறைகள் போக்கப்படால் தானே ஆன்மீக நாட்டம் பின்னாட்களில் வரும்?
சாமிகள் ” ரொம்ப சக்தி” என்பார்கள். அருகிலேயே இருக்கும் நீர்நிலை போல் அவர்கள் அருள் .எளிய மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர்.

தன்னாசி போல் தான தவசியும்? கிராமப்பகுதிகளில் தவம் செய்த தவசீலர்கலாக இருக்குமோ?
இதே போல் மாசாணியம்மன் தான் ஸ்மசான காளி என்று கேள்விப்பட்டேன்.
பல தொலைகாட்சி சானல்களில் குல சாமிகள் பற்றிய நிகழ்சிகள் காண்பிக்கிறார்கள்.
ஒரு புறம் பிரிக்க நினைப்போர் செய்யும் ஜாலங்கள்; மறுபுறம் தங்கள் குல சாமிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம்.
தமிழ்நாட்டில் இயற்கையாகவே தர்மத்தின் மீது மக்கள் கொண்டுள்ள பற்று அதிகம். செயற்கையாக அதை அழிக்க முடியாது
சரவணன் .

Satish on February 14, 2012 at 11:49 am

நல்ல பதிவு.

ஒரு நண்பர் கூறிய செய்தி – கருப்பு சாமி, வெள்ளை சாமி என்றழைக்கப்படும் தெய்வங்கள், கண்ணனையும், பலராமனையும் குறிக்கும் என்றார். கண்ணன் கருப்பு, பலராமர் வெள்ளை நிறம்.

இப்படி, நம் கிராம தெய்வங்களுக்கு பொருள் இருக்க, நாட்டார் தெய்வம், இதற்கும் ஹிந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு கூற்று நிலவுவது வேதனைக்குரியது.
நல்ல முயற்சி. பாராடுக்கள்.

C.N.muthukumaraswamy on February 14, 2012 at 5:35 pm

திருஞானசம்பந்தர், கோளறு பதிகத்தில், ‘பலபல வேடமாகும் பரன் நாரி பாகன்’ என உமாமகேசுவரைக் கூறுகிறார். இதுவும் பலவேசம் யார் என்பதைச் சுட்டும் சான்றாகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 செந்தில் on February 15, 2012 at 9:45 am

நல்ல பதிவு.. அதே போல, வீரமாத்தி அம்மன் சில பேருக்கு குல தெய்வமாக இருக்கும்.. இந்த வீர்மாத்தி என்னும் சொல், வீரமா ஹஸ்தி என்று சொல்லிலிருந்து வந்தது.. அதாவது, உடங்கட்டை ஏறுபவர்களை தெய்மாக வழிபடுபவர்கள்.. வட இந்தியாவில், சதி தேவதையை வழிபடுவது போன்றுதான்..

கொங்கு நாட்டில் ஈரோடு அருகில், இருக்கும் ஒரு வீர்மாத்தி அம்மன் கோயில் வரலாற்றின் படி, பறையர்கள், ஆண்டிகள் தங்கள் சேர்ந்து உடன்கட்டை ஏறியது வரலாற்று ஆவணமாக செப்பேட்டில் உள்ளது ..

நமது வர்ணாஸ்ரம தர்மத்தில், சூத்திரர்களுக்கும் உயர்ந்த வாழ்க்கை முறை இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு மிகப்பேரிய சாட்சி.. இன்றும், கொங்கு பறையர்களில், பெண்கள் தங்கள் கணவர் இறந்தவுடன் வெள்ளை சீலை கட்டும் வழக்கம் இருக்கிறது.. முடிந்தால், அவர்களுடன் பேசிப்பாருங்கள்.. எவ்வளவு பெருமையாக இதை சொல்வார்கள் என்று..

இன்னொரு ஆதாரத்தையும் நான் காட்ட் விரும்புகிறேன்..
http://www.samanvaya.com/dharampal/frames/downloads/vol1.PDF

மேற்கண்ட வலைத்தளத்தில், 15ஆம் நூற்றாண்டில் ஒரு ஐரோப்பிய பயணி தான் பார்த்ததை குறிக்கிறார்.. அதில், ஒரு பெண் தன் கணவர் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் முடிவை எடுக்கிறாள்.. அவரை “Wife of Drummer” என்று அந்த ஐரோப்பியர் குறிப்பிடுகிறார்.. அதன் அர்த்தம் என்ன என்று நான் விளக்க தேவையில்லை..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கட்டுரையாளர் திரு ராஜா சங்கர் கிராமப்புரங்களில் மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் ஹிந்து சமயத்தவை என்று நிறுவுகிறார். அந்த நாட்டுப்புறதெய்வங்கள் ஹிந்து சமய பெருந்தெய்வங்களான சிவபெருமான், திருமால் வேறுவடிவங்களே என்பது இக்கட்டுரையாளரின் கருத்து. கிராமப்புற தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகியவை ஹிந்து சமயத்தின் பிரிக்கமுடியாத கூறு. எனினும் எல்லா கிராமிய தெய்வங்களையும் சிவபெருமானாகவோ திருமாலாகவோ கருதிவிட முடியாது. ஆனால் அவர்தம் அடியார்களாகவே கொள்ளமுடியும். ஏன்எனில் தெய்வம் மனிதனாய் வந்து மக்களை உய்விப்பதும்(அவதாரம் எனப்படுவது) வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் வானுரையும் தெய்வமாவது(பவதாரம் என்பது) நமது சமயத்தில் மட்டுமே சாத்தியம். மக்களைக்காக்கப் போரிட்டவர் வீரசுவர்கம் புகுவது, தெய்வமாவது இங்கு மட்டுமே இயலும். அது மட்டுமல்ல ஆண்டவனையும் அடியாரையும் வணங்குகின்றவர்கள் நாம் மட்டும்தானே. எந்த ஒரு கிறித்தவரோ அல்லது இஸ்லாமியரோ தம் கிராம தேவதையையோ அல்லது குலதெய்வத்தையோ நினைக்கக்கூட முடியுமா? அவர்தம் சமய நூல் அனுமதிக்குமா என்ன?
கொங்கு நாட்டில் வழிபடப்படும் ஸ்ரீ தன்னாசியப்பன் என்ற தெய்வம் மாயவர்(திருமால்) என்று ஆசிரியர் கருதுகிறார். முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் தன்னாசி என்ற பதம் சன்யாசி என்பதன் திரிபு என்கிறார். ஐயாவின் கருத்தே ஏற்புடையது. ஸ்ரீ தன்னாசி அப்பர் கொங்கில் வழிபடப்படுவது போன்று ஸ்ரீ சன்னாசி என்று தென்மாவட்டங்களில் வழிபடப்படுகிறார். தவசி என்கிற பெயரும் இங்கே ஒப்பு நோக்கற்பாலது. கொங்கு மண்டலத்தவன் ஆதலின் தன்னாசியப்பன் வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன், வழிபாடு செய்திருக்கிறேன் அதனால் பயனும் பெற்று இருக்கிறேன். தன்னாசி என்ற பெயர் தாங்கிய ஒரு சில மனிதரையும் சந்தித்தும் இருக்கிறேன். கொங்கில் தன்னாசி வழிபாடு சைவ முறையில் பால் பச்சரிசி கொண்டு சிவ வழிபாட்டினைப் போல செய்யப்படும் இடங்கள் உண்டு. மாறாக மிருக பலியுடன் செய்யப்படும் வேறு இடங்களும் உண்டு. ஆகவே வழிபடப்படும் சன்யாசிகள் சிவனடியார்களாகவோ, பைராகிகளாக வாமாச்சாரிகளாகவோ இருந்திருக்கலாம். ஒரு சில இடங்களில் இது கருப்பசாமி(கொங்கில் கருப்பண்ண சாமி/கருப்பராயர்) வழிபாட்டோடு கலந்தும் விட்டது. பெரும்பாலும் திருநீறு பூசிய தன்னாசியப்பனையே காண்கிறோம். திருமண்தாங்கிய தன்னாசியப்பனை காண இயலவில்லை. இவர்களில் ஒருசிலர் அருள்வாக்கில் கொங்குனாட்டின் கைலைமலையாம் வெள்ளியங்கிரியில் வசிப்பதாகக் கூறுவதால் அங்கு தவம் செய்திருக்க வாய்ப்பும் உண்டு. ஈசா யோகமைய நிறுவனர் ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் வெள்ளிமலையினை மையமாகக்கொண்ட யோகியர் பலப்பலர் இருந்ததாகக் கூறுவது இங்கே கருதத்தக்கது. ஆக தன்னாசியையன் வழிபாடு சைவம் மற்றும் சாக்தம் சார்ந்ததாக இருப்பது கண்கூடு.
கட்டுரையாளர் கொங்கு நாட்டின் வீரகாவியமான அண்ணன்மார் சுவாமி கதையை மு. கருணாநிதி தன்போக்கில் எழுதியுள்ளதை ஹிந்து சமயத்திலிருந்து கிராமிய சமயத்தினைப் பிரிக்கும் முயற்சி என்று கூறியுள்ளார். திராவிட இயக்கத்தினர் கால்டுவெல்லின் கள்ளப்பிள்ளைகள் என்பதை நாம் அறிவோம். எனவே கிறிஸ்தவ மிசனரிகள் நாட்டார் வழிபாடு ஹிந்து சமயமன்று என்று சொன்னால் இவர்கள் ஆமாம் சாமி என்பதைத்தவிர இவர்களுக்கு வேறு பிழைப்பு என்ன இருக்கிறது. மக்களை வேறு வேறாகப்பிரித்துவிட்டால் அவர்களை மதம் மாற்றுதல் எளிதென்று இம்மிசநரிகள் என்ன வெல்லாம் சொன்னாலும் அதை மறுத்திடப்பலர் உண்டு இந்த கட்டுரையாளரைப்போல. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். பணி தொடர வாழ்துகிறேன்.
விபூதிபூஷண்

 

பூவண்ணன் on February 15, 2012 at 3:45 pm

காட்டேரி மதுரை வீரன் என்று கூட குலதெய்வங்கள் உண்டு

என் தாய் வழியில் காட்டேரி திருமணம்,காத்து குத்தல் இறப்பு போன்றவற்றிற்கு முன் படையலிட்டு சாராயம் வைத்து சுருட்டு வைத்து கும்பிடுவார்கள்
ஆனால் அந்த தெய்வம் என் தந்தை வழியினருக்கு ஆகாது என்பதால் எங்களுக்கு அனுமதியில்லை.படையல் உணவையும் எங்களுக்கு ஒரு பருக்கை கூட தர மாட்டார்கள்.
அதே போல் ஒரு கிராமத்தின்/குடும்பத்தின் குலதெய்வம் இன்னொரு கிராமத்திற்கு ஆகாது.
பலியானவர்கள்,தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர் குலதெய்வமான வரலாறும் உண்டு.இதில் எப்படி உங்கள் globalisation ஐ சிவன் விஷ்ணுவை நுழைக்கிறீர்கள் என்று பார்க்கலாம்.

குமரன் on February 15, 2012 at 4:26 pm

// சென்னையில் ஒருமுறை இதைப்பற்றி நினைத்தவாறு பயணிக்கையில் ஒரு முனீஸ்வரன் கோயிலைக்கண்டேன்.வெண் தாடி மீசையுடன் முனிவர் போல் தோற்றம் அளித்த சுதைச்சிற்பம் அக்கோயில் கோபுரத்தின் மேல் இருந்தது.
சுருட்டு பிடிக்கும் எங்க சாமி என்றார் ஒரு பக்தர். அவதூத சன்யாசிகள் என்கிறார்களே , .அப்படி இருக்கலாம் .அவர்கள் கருணை காரணமாக நம்மிடையே வருகிறார்கள். //

முனிவர்கள் முனீஸ்வரர்கள் ஆவதுண்டு. மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலம். சுருட்டு புகைப்பாரா எனத் தெரியவில்லை. அருகில் உள்ள கருப்பண்ணசாமிக்கு சுருட்டு படைப்பதுண்டு. அனைத்து சாதியாராலும் வழிபடப் படும் பாண்டி முனீஸ்வரரைப் பற்றிய தொன்மையான கதையுண்டு. கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டோம் என உணர்ந்து உயிர்துறந்த பாண்டிய நெடுஞ்செழியர் மறுபிறவியில் பிராயசித்தமாக சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து சோமசுந்தரர் அருளால் பாண்டி முனீஸ்வரன் எனும் தெய்வமானார் என்பது பாண்டிய நாட்டு மக்களின் நம்பிக்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சான்றோன் on February 15, 2012 at 7:11 pm

வாய்ப்புக்கிடைக்கும்போதேல்லாம் [ அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு ] ஹிந்து மதத்தின் மீது பாயும் பூவண்ணன் அவர்களுக்கு……….

// .இதில் எப்படி உங்கள் globalisation ஐ சிவன் விஷ்ணுவை நுழைக்கிறீர்கள் என்று பார்க்கலாம் //

உங்களைப்போலவே அபத்தமான கேள்வியை எழுப்பிய வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் அளித்த அழகான விளக்கம் இதோ………

” தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாடு இந்துமதத்துடன் இணைந்ததல்ல, இந்துமதத்துக்கு எதிரானதும்கூட என்ற குரலைப் பகுத்தறிவு பேசிய இடதுசாரிகளும் திராவிட இயக்க அறிவுஜீவிகளும் திடீரென்று வலுவாக எழுப்ப ஆரம்பித்தது தொண்ணூறுகளில்தான்.அதற்கு முன்னால் ஒட்டுமொத்தமாகவே அவற்றை மூடநம்பிக்கை என்றே சொல்லிவந்தார்கள்.”

” அந்த மாற்றம் நிகழக் காரணம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஃபாதர் ஜெயபதி என்பவரின் முன்னெடுப்பில் நடத்திய ’சனங்களின் சாமிகள்’ என்ற பத்துநாள் கருத்தரங்கம். அந்தக் கருத்தரங்கிலே நாட்டார்சாமிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சாமிகள், இந்துமதம் ஒடுக்கும் சாமிகளின் மதம் என்ற பிரிவினை மிக எளிதாக நம் அறிவுஜீவிகளுக்குள் திணிக்கப்பட்டது. இதற்காகக் கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவிடப்பட்டது.”

” அதைப்பற்றி நம் இடதுசாரி அறிவுஜீவிகளில் ஒருவரான ச.தமிழ்ச்செல்வன் சொல்வதைப் பாருங்கள். ‘பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் துடிப்போடு இயங்கிய அந்த நாட்களில் பத்துநாள் ’சனங்களின் சாமிகள்’ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.அந்தப் பத்துநாட்கள் என் வாழ்வில் புதிய திருப்புமுனையான நாட்கள்.தெய்வங்கள், கடவுள்கள் பற்றிய புதிய பார்வையை அக்கருத்தரங்கு எனக்கு வழங்கியது. http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_04.html கவனியுங்கள். தன்னுடைய சொந்தக் குலதெய்வங்கள் , தான் வாழும் சமூகம் பற்றிய வரலாற்றை யார் எங்கிருந்துகொண்டுவந்து கொடுக்கவேண்டியிருக்கிறது இந்த அறிவுஜீவிகளுக்கு என்று.”

” இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம் இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மட்டும் கேட்கவில்லை. அந்த அமைப்பாளர்களின் மதம் அந்த சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிக்கிறதா, அவர்களின் மதத்துக்கு மாறியவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தொடர அனுமதிக்கிறதா, முன்பு அவர்களிடம் மதம் மாறியவர்களின் குலதெய்வங்கள் என்னாயின, அப்படியென்றால் அச்சிறுதெய்வங்களை ஒடுக்கி அழிக்கும் உண்மையான ஒடுக்குமுறைமதம் எது? ஒரு மாணவர் மட்டும் எழுந்து அதைக் கேட்டார், அவர் வெளியேற்றப்பட்டார்.”

” இந்துமதம் என நாம் சொல்லும் இன்றுள்ள அமைப்பு ஆரம்பகாலம் முதலே இன்றுள்ள தொகைமதம் என்ற வடிவிலேயே உள்ளது. இந்துமதத்தின் மிகப்பழைமையான நூலான ரிக்வேதமே கூட இந்தத் தொகுப்புத்தன்மைக்கான உதாரணம்தான். அது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை அல்லது ஆசாரத்தை அல்லது தத்துவத்தை முன்வைப்பது அல்ல. அதில் அன்றிருந்த பல்வேறு வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் தத்துவங்களும் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உரையாடுவதையும் இணைவதையும் நாம் ரிக்வேதத்தில் காணலாம்.”

” ரிக்வேதத்தின் இறுதிப்பகுதியில் இந்த இணைப்பின் விளைவாக உருவாகி வந்த ஒரு தோராயமான பொதுமையம் உள்ளது. அதை பிரம்மம் என்று சொல்லலாம். அதாவது பிரபஞ்சசாரமான கருத்தை அல்லது ஆற்றலை ஒரு அறியமுடியாமையாக உருவகித்து அதன் வெளிப்பாடாக இந்தப் பிரபஞ்சத்தை உணர்வது. இப்படி ஒரு மையம் உருவானதுமே அந்த மையத்துக்கும் வேறு மையங்களுக்குமான உரையாடல் ஆரம்பித்துவிட்டது. அதையே நாம் உபநிடதகாலகட்டத்தில் காண்கிறோம்.”

” இந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்துமதம் என்ற மையக்கட்டுமானம் பிற சிறிய கூறுகளை உள்ளிழுத்துக்கொள்கிறது என்று இதை சில இடதுசாரிகள் விளக்கினார்கள். அதையே பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளிழுக்கப்பட்டதாக இவர்கள் சொல்லும் எந்த வழிபாட்டுமுறையும் தன் சுய அடையாளத்தை இழக்கவில்லை. இரண்டாயிரம் வருடம் முன்பு அவ்வாறு உள்ளே வந்த நம்பிக்கைகளும் தத்துவங்களும் கூட அப்படியேதான் இருக்கின்றன. மையம் என்று இவர்கள் சொல்வதை வந்தவைதான் மாற்றியமைத்துள்ளன. அப்படியென்றால் அது உள்ளிழுத்தல் அல்ல. அது உரையாடலும் சமரசமும் மட்டுமே.”

” வரலாற்றைப்பார்த்தால் இந்துமதத்தின் மையப்பெரும்போக்கு என்பது இரண்டுமூன்று நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகவே மாறிவிட்டிருப்பதைக் காணலாம். ஒருபுதிய மக்கள் திரள் உள்ளே வந்தால், ஒரு புதிய சிந்தனை உள்ளே வந்தால் அவர்களுடன் சமரசம்செய்துகொண்டு அது மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நதி போல. நாம் கங்கை என்பது ஒரு நதி அல்ல, அது ஒரு நதித்தொகை. அதில் சேரும் நதிகளே அதன் திசையை வடிவை எல்லாம் தீர்மானிக்கின்றன. இந்துமதத்தில் ஒவ்வொரு தரப்பும் தாங்களே மையம் என்று சொல்லக்கூடும், ஆனால் அது எப்போதும் எல்லாம் அடங்கியதுதான்.”

” ’நான் இந்துவா?’ இந்த வினாவை சைவர்களும் வைணவர்களும் சாக்தர்களும் எல்லாம் கேட்டுக்கொள்ளமுடியும் அல்லவா? சைவ வழிபாடு வேறு வைணவ வழிபாடு வேறு அல்லவா? அப்படியானால் இந்து என்பவர் யார்? எல்லாரும் சேர்ந்தால்தான் இந்து. தனியாக இருந்தால் சைவரோ வைணவரோ சாக்தரோதான்.”

” இந்துமதத்தில் உள்ளதாக உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஓர் இருமையை. அதாவது பெருமதம x நாட்டார் மதம் [Theological religion x Folk religion] முரண்பாடு. இது இங்குள்ள வழிபாட்டுமுறைகளை ஆராய்வதற்கான ஒரு சமூகவியல் வழிமுறை, வெள்ளையர் உருவாக்கியது. ஆனால் இதைவைத்து இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இங்குள்ள பெருந்தெய்வம் கொஞ்ச வருடம் முன்னால் நாட்டார் தெய்வமாக இருந்ததுதான். இன்று நாட்டார் தெய்வமாக இருப்பது பெருந்தெய்வத்துடன் இணைந்து பெருந்தெய்வமாக ஆகிக்கொண்டுமிருக்கும்.”

” சிவன் உங்கள் கருப்பசாமியைப்போல ஒரு நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்று சுடலைமாடசாமி அருள்மிகு சிவசுடலைமாடனாக ஆகிக்கொண்டிருக்கிறார். இந்தப் பரிணாமம் நடந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் நேற்றைய கருப்பசாமியைக் கும்பிடலாம் அல்லது நாளைய சிவனைக் கும்பிடலாம். அதாவது பைபிளில் ஒரு அத்தியாயத்தில் கருப்பசாமியை சேர்த்துக்கொண்டு அவரைக் கடவுளாக ஆக்க முடியாது, அதற்கு பைபிளில் குரானில் இடமில்லை. கீதையில் முடியும். ஆம் அந்த அம்சமே தொகைமதங்களை உருவாக்குகிறது.”

” உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? நாட்டார் தெய்வங்கள், அதிலும் குறிப்பாக நெல்லைகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் அனைத்தையும் நான் விரிவாகவே அறிவேன். நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் பத்தாண்டுகளாக நெருங்கி உரையாடி வருகிறேன். உங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரியவை ஒரு சில குலதெய்வங்கள் மட்டுமே. கருப்பசாமியும் மாடசாமியும் கன்னியம்மனும் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் எல்லாம் தெற்கத்திச்சீமை முழுக்க உள்ள தெய்வங்கள்.”

”இந்த தெய்வங்கள் அனைத்துக்கும் எழுதப்பட்ட வரலாறுகள் முந்நூறாண்டுகளாகவே கிடைக்கின்றன. நாட்டார் வாய்மொழி மரபில் அதற்கும் முன்னதாகவே இந்த தெய்வங்களைப்பற்றிய கதைகள் உள்ளன. சுடலைமாடசாமி கதைப்பாடல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருப்பசாமி வில்லுக்கதை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நீங்கள் வாசித்துப்பார்க்கலாம். தென்னகத்து நாட்டார் தெய்வங்கள் அனேகமாக அனைத்துமே சைவ மரபைச் சேர்ந்தவை. இத்தெய்வங்களின் தெய்வமாக சிவன் சொல்லப்பட்டிருப்பான். அல்லது சிவனிடம் வரம் வாங்கி அவை தெய்வமாக ஆகியிருக்கும். அந்த தெய்வங்களைப்பற்றிய வில்லுப்பாட்டுகள் , கணியான்முடியேற்று முதலியவற்றில் அந்தக் கதைகள் இன்றும் பாடப்படுகின்றன.”

” நம் பண்பாட்டில் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு நாட்டார்தெய்வம் உருவாவதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, குறியீட்டு தெய்வம். அதாவது ஒரு நோயை குணப்படுத்த அல்லது விளைச்சலை அதிகரிக்க வழிபடப்படும் சிறுதெய்வம். மரங்கள் பாறைகள் ஆறுகள் போன்றவற்றை வழிபடுதல். இரண்டு, நீத்தார் வழிபாடு. அருங்கொலை செய்யப்பட்டவர்கள், போரில் இறந்தவர்கள் பிரசவத்தில் இறந்தவர்கள் போன்றவர்களின் நினைவைப் போற்றும்முகமாக அவர்களை தெய்வமாக ஆக்குதல். மூன்று மூத்தார் வழிபாடு, குலமூதாதையரைக் கடவுளாக்குதல். சாமியார்களை அடக்கம்செய்யுமிடங்கள் கோயிலாகின்றன”

” முதலில் இப்படி உருவாகும் தெய்வங்கள் அந்த தெய்வத்தை உருவாக்கிய ஒரு இனக்குழுவுக்குள் இருக்கின்றன. அந்த இனக்குழு பிற இனக்குழுக்களுடன் உறவாடும்போது அவை பிற தெய்வங்களுடன் இணைந்து பெருந்தெய்வங்களாகின்றன. இன்று நீங்கள் பெருந்தெய்வங்களாகக் காணும் எல்லா தெய்வங்களும் இப்படி உருவானவையே. ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரிய தெய்வங்கள் மட்டுமே குலதெய்வங்களாக அவர்களுக்குள் மட்டும் நீடிக்கின்றன.”

” இந்த உறவாடல் ஆரம்பித்து எத்தனையோ தலைமுறையாகிவிட்டிருக்கும். சொல்லப்போனால் இங்கே ஒரு சிறுதெய்வம் உருவானதுமே அது சைவப் பொதுமரபுடன் இணைய ஆரம்பித்துவிடுகிறது. உதாரணம் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். ஏரலில் உள்ளது இந்த கோயில். அருணாச்சல நாடார் 1880 அக்டோபர் 2இல் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனணைந்த அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1906, செப்டம்பர் 5இல் ஏரலில் பஞ்சாயத்துத் தலைவராக [chairman] பதவி ஏற்றார். திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்தார். 1908 ஆடி அமாவாசையன்று இறந்தார். மக்கள் அவரைக் கடவுளாக நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்மெல்லமெல்ல சேர்மன் சாமி வழிபாடு சைவத்துடன் உரையாட ஆரம்பித்தது. சேர்மன் அருணாச்சல சாமி சிவனின் அவதாரமாக ஆனார். இன்று ஒரு முக்கியமான சைவத்தலமாக சேர்மன் அருணாசல சாமிகோயில் உள்ளது. இதுதான் இந்து மதம் உருவாகி வளர்ந்துகொண்டே இருக்கக்கூடிய விதம். இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மதத்துடன் உரையாடிக் காலப்போக்கில் அதனுடன் இணைந்துகொண்டே இருக்கும். இப்படி இணைவதன்மூலமே இந்துமதம் உருவாகி முன்செல்கிறது. ஒரு நிலத்தில் ஓடும் எல்லா நீரோட்டங்களும் எப்படியோ அங்குள்ள பெரிய நதியில் சென்று சேர்வது போல.”

” ஆகவே நீங்கள் நினைப்பது போல உங்கள் தெய்வங்கள் இந்து பொதுமரபுடன் உறவே இல்லாமல் தனியாக எங்கோ அந்தரவெளியில் நின்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் இந்து மதத்தின் பொது அமைப்புடன் உரையாடாமலும் இல்லை. அது உங்களுக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான். குலதெய்வங்கள் கூட அந்தக்குலம் சற்றே பெரிதாக பரவி விரிந்தால் இந்து பொது வழிபாட்டு மரபுக்குள் இணைந்துவிடும். பிறதெய்வங்கள் அனைத்துக்குமே இந்து மரபு சார்ந்த ஒரு வரலாற்று விளக்கம் இருக்கும். மறுமுறை செல்லும்போது விசாரித்துப்பாருங்கள்.”

” நம்முடைய சிறுதெய்வங்களைப்பொறுத்தவரை ஊரில் சிலரே அவற்றைப்பற்றிய அறிதலுள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்கு அக்கறை கிடையாது. இதற்கு என்ன காரணமென்றால் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே நிகழ்ந்த பெரும் பஞ்சங்களால் உருவான பண்பாட்டுப்பின்னடைவு. நம்மில் பெரும்பாலான குடும்பங்கள் அப்போது இடம்பெயர்ந்தவர்களாக இருப்போம். குலத்தின் வேர் வேறெங்கோ இருக்கும். விளைவாகக் குலதெய்வங்கள் கைவிடப்பட்டு மறக்கப்பட்டன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகள் அழிந்து போயின. மரபார்ந்த கதைகளும் ஞானமும் அழிந்தன. சென்றடைந்த இடங்களின் எளிய சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சின. நம்முடைய அப்பா தாத்தாக்கள் ஒரு பண்பாட்டு வெறுமையில் இருந்து மெல்ல அந்தந்த ஊர்களில் வேர்பிடித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது.”

” எனக்கும் குலதெய்வம் உண்டு. இட்டகவேலி நீலியும் மேலாங்கோடு யட்சியும். அவர்களைத்தான் என் முன்னோர் வழிபட்டார்கள். அதேசமயம் அவர்கள் திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலின் பிரம்மாண்டமான அமைப்பிலும் ஒரு சிறுபகுதியாக இருந்தார்கள். எல்லா சாதிகளுக்கும் இந்த இரட்டை மதநம்பிக்கை இருக்கும். சிறுதெய்வங்கள் அவர்களுக்குரிய பிரத்யேகமான தெய்வங்களாக இருக்கும். பெருந்தெய்வக் கோயில்களுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருப்பார்கள்.”

” வேதம் வெறும் சடங்குகளுக்குரிய நூலாகவே இங்கே கொள்ளப்பட்டது. ஆகவே சடங்குசெய்பவர்களே அதைப் படித்தார்கள். கீதையும் வேதாந்தமும் எல்லாருக்கும் உரியவையாக சொல்லப்படவில்லை. பக்தி, வழிபாடு போன்றவற்றைத் தாண்டி வந்து ஞானத்தைத் தேடுபவர்களுக்கானவை அவை. எல்லாச் சாதியினரிலும் அவற்றை அறிந்தவர்கள் மிகமிகச் சொற்பமே.”

”புராண இதிகாசங்கள் இந்தியாவின் எல்லா மக்களுக்கும் அவரவர்களுக்குரிய வடிவில் சொந்தமானவையாக இருந்தன. புராணக்கதைகளுக்கு ஒவ்வொரு சாதியிலும் அவரவர்க்குரிய வேறுபட்ட வடிவங்களே உண்டு. அடித்தள மக்களுக்குப் புராணம் அறிமுகம் இல்லை, அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம் , மதுரை இறையியல் கல்லூரி ஆகியவை உருவாக்கிய பித்தலாட்டம் மட்டுமே”

”தமிழ்நாட்டின் எல்லா நாட்டார்கலைகளுக்கும் முழுக்கமுழுக்க புராணங்களும் இதிகாசங்களுமே ஆதாரமானவை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, புள்ளுவன் பாட்டு, வில்லுப்பாட்டு என ஒரு இருநூறு நாட்டுப்புறக் கலைகள் நெல்லைவட்டாரத்தில் உள்ளன. எல்லாமே புராண இதிகாசக் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. இன்றும்கூட அவற்றில் நூற்றுக்குமேல் அழியாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எல்லா நாட்டார்தெய்வ கொடைவிழாக்களுக்கும் இருநூறாண்டுகளாக அவற்றைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.அவற்றில் வேடமிட்டு நடிப்பவர்களும் அவற்றைப் பார்ப்பவர்களும் அடித்தட்டு மக்கள்தான்”

” இந்துமதத்தின் இறையனுபவ முறைகள் நான்கு. ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டுமுறைக்குள்தான் இருக்கும்.”

கருப்பசாமிக்கு என்ன தொழுகையா செய்கிறீர்கள்? அல்லது கூட்டு ஜெப ஆராதனையா? தீபமோ பந்தமோ ஏற்றுவீர்கள். மலர் சூட்டி, உணவைப் படையலிட்டு ,வாழ்த்தி வணங்குவீர்கள் அல்லவா? அந்த உணவைப் பிரசாதமாகப் பகிர்ந்து உண்பீர்கள். அது இந்து வழிபாடு அல்லாமல் வேறென்ன? அதைத்தான் பிஜி தீவிலும் தென்னாப்ரிக்காவிலும் நேப்பாளத்திலும் எல்லாம் இந்துக்கள் செய்கிறார்கள். திருச்செந்தூர் முருகனுக்கும் அதுதான் செய்யப்படுகிறது. கருப்பசாமிக்கும் சுடலைக்கும் திருநீறுதான் பூசப்படுகிறது. கருப்பசாமிகோயிலுக்குச் சென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கருப்பசாமி கோயிலில் உயிர்ப்பலியும் புலால் உணவும் இருக்கும். பெருந்தெய்வக் கோயிலில் சைவ உணவு படைக்கப்படும். பொருட்களில், சொற்களில் சில வேறுபாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இன்னும் அதிகமான மக்களுக்கான தெய்வமாக ஆனவர். ஆகவே அனைவருக்கும் பொதுவான வழிபாட்டுமுறைகளை நோக்கிச் சென்றவர். இன்றுள்ள பல இந்து பெருந்தெய்வ கோயில்களில் நூறு வருடம் முன்புவரை உயிர்ப்பலி இருந்திருக்கிறது.

எந்த சிறுதெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது. தலித்துக்களின் தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள் கூட. இதுவே உண்மை. எந்த அளவுக்கு உள்ளே இருக்கும் என்பது அதை வழிபடும் சமூகம் எந்த அளவுக்குப் பெரியது, எந்த அளவுக்கு செல்வமும் படிப்பும் சமூகச் செல்வாக்கும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஒரு இனக்குழு எந்த அளவுக்கு சமூக இடத்தை அடைகிறதோ அந்த அளவுக்கு அந்த இனக்குழுவின் தெய்வம் பெருமரபுக்குள் முக்கியத்துவம் பெற்று இணைகிறது.

அதாவது இந்து மதம் உங்கள்மேல் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிக்க யார் இருக்கிறார்கள்? யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறார்களா என்ன? துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா? இந்துமதத்துக்கு என பிரச்சாரகர்களே கிடையாது. எதிர்ப்பிரச்சாரம் அதி உக்கிரமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நிகழ்கிறது.

நீங்கள்தான் உங்களை இந்து மதத்துக்குள் திணித்துக்கொள்கிறீர்கள். இது ஐயாயிரம் ஆறாயிரம் வருடத்து வரலாறு. ஒவ்வொரு இனக்குழுவும் சமூக அதிகாரத்துக்காகவே முட்டி மோதுகிறது. தன்னுடைய இடத்தை அது தேடுகிறது. அந்த இடத்தை அடைந்ததும் அங்கே தன்னை நிறுவிக்கொள்கிறது. உடனே அவர்களின் தெய்வங்கள் மையம் பெறுகின்றன. நாடார்களின் பத்ரகாளிகோயில்கள் இன்று பெற்றிருக்கும் பெரும் முக்கியத்துவம், வன்னியர்களின் மாரியம்மன்கள் பெற்றுவரும் முக்கியத்துவம் அதற்கான கண்கூடான சாட்சி.

சாலையோரங்களைப் பார்த்துக்கொண்டே செல்லுங்கள். புத்தம்புதிய அம்மன்களும் கருப்பசாமிகளும் கான்கிரீட்டில் எழுந்து நிற்பதைக் காண்பீர்கள். அந்த சாமிகளைக் கும்பிடும் இனக்குழுவில் கொஞ்சபேர் துபாய் போய் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரம் செய்து சம்பாதித்திருப்பார்கள். அவர்கள் சமூகப்படிநிலையில் மேலே சென்று அதிகாரத்தை அடைய அடைய அவர்களின் தெய்வம் இந்து மதத்தின் இன்றுள்ள மையம் நோக்கிச் செல்லும். அப்படி மையம் நோக்கிச் செல்லவேண்டுமென்றால் அது மையத்துடன் உரையாடவேண்டும். தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். மையத்தை அது கைப்பற்றவேண்டும். அதுதான் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது

உங்கள்கிராமத்தில் நடந்துகொண்டிருப்பதும் அதுவே. சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகும்போது அவற்றின் தோற்றமும் சடங்குகளும் மாறுகின்றன. உயிர்ப்பலி கேட்கும் கருப்பசாமி பிரபஞ்சத்தை ஆளும் பரம்பொருளாக வழிபடப்படும்போது எல்லா உயிருக்கும் கருணை கொண்ட சாமியாக ஆகவேண்டியிருக்கிறது. அதன்பின் அதற்கு உயிர்ப்பலி கொடுக்க முடிவதில்லை. அது அருள்மிகு கருப்பசாமியாக ஆகிறது.

இதுசரியா தவறா என்ற கேள்விக்கே இடமில்லை. இதுதான் இந்தியப் பெருநிலத்தில் ஐயாயிரம் வருடப்பண்பாட்டுச் செயல்பாடாக இருக்கிறது. இப்படித்தான் இந்துமதம் உருவாகி வந்திருக்கிறது. இச்சமூகம் வளர்ந்து முன்னால் சென்றுகொண்டிருக்கிறது. இது பண்பாட்டு ஆதிக்கம் என்று கூச்சலிடும் நம் அறிவுஜீவிகள் வெட்கம் மானமில்லாமல் இந்த ஒட்டுமொத்த சிறுதெய்வ வழிபாட்டையே வேருடன் அழிக்கும் மதமாற்ற சக்திகளுடன் சேர்ந்துகொண்டு பஜனைபாடுகிறார்கள்.”



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சாமியை நம்பாத இயக்கத்தினர் சாமிகளை தரம் பிரித்து நாட்டார் தெய்வம், நகரத்தார் தெய்வம், சிறு தெய்வம், பெருந்தெய்வம், மிடில்களாஸ் தெய்வம் என காமடி செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லா தெய்வமும் துவக்கத்தில் நாட்டார் தெய்வம் தான், முன்னோர் வழிபாடுதான். காத்தவராயன் கோயிலில் ஏன் சிவன் உருவம் இருக்கு?அவர் வாழ்ந்த காலத்தில் சிவபக்தனாக இருந்திருப்பார்.அவருக்கு கோயில் கட்டியபோது அவர் கும்பிட்ட சாமிக்கும் சேர்த்து கட்டினார்கள். இந்து கோயில்கள் பலவற்றிலும் பல கடவுள்களும் இருக்க காணலாம். ஸ்ரி ரங்கம் கோயிலிலேயே வினாயகர் கோயில் இருக்கு. உடனே இது திருவரங்கத்தில் வினாயக்ர் வழிபாட்டை திணிக்க நடந்த முயற்சி என சொல்ல இயலுமா?


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திராவிடன் on February 15, 2012 at 10:05 pm

////காட்டேரி மதுரை வீரன் என்று கூட குலதெய்வங்கள் உண்டு////
காட்டேரி மற்றும் மயான கொள்ளை சூறை சிவராத்திரி மறுநாள் எல்லா அங்காளம்மன் கோவிலும் நடக்கிறது.எங்கள் கிராம கோயிலின் படி அவர்கள் இருவரும் சிவனும் பார்வதியுமே என்று அத்தெய்வங்களை குலதெய்வமாக கொண்ட கிராமத்தினரே கூறுகின்றனர், எல்லோரும் அத்தெய்வ வேடமணிந்தவர்கள் மேல் அத்தெய்வங்கள் வந்து இருப்பதாய் ஏற்று அவர்களிடம் குறி கேட்கின்றனர்.
இதை எதற்கு globalisation செய்யனும், எங்க ஊரில் காட்டேரி வேடமனியும் நாகராஜும்,இருளன் வேடமனியும் பக்கிரிசாமியும்,மற்றும் குப்பு சாமி முனுசாமியும் கூட இவர்களை சிவ பார்வதியின் அம்சங்களே என்று தான் கூறுகின்றனர்.
மாட்டு பொங்கல் அன்று ஒரு நண்பரின் வீட்டில் காட்டேரி படையல் போடுவார்கள் சாராயம் சுருட்டு ஊர்வன நடப்பன பறப்பன நீந்துவன எல்ல்லாம் வைத்து. பின்னர் எங்கள் நண்பர்கள் எல்லாம் அந்த நண்பனின் வீட்டில் சாப்பிடுவோம்.ஒரு கட்டு கட்டி விடுவோம். அனால் சாராயம் எல்லாம் பெருசுகள் லவட்டிக்கொண்டு போய்விடும் (ஹி, ஹி )அப்போது நாங்கள் சிறுவர்கள் தான்.

இன்னொரு முக்கிய விஷயம் இன்றும் காட்டேரி அண்ட் இருளன் அருள் வருவதற்கு வேடமணிந்தவர்கள் முன் கிராமிய பாணியில் உடுக்கை பம்பை அடித்து காடேரியை அழைத்து பாடுவார்கள். ஆரம்பம் என்ன தெரியுமா? சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தான் ஆரம்பிப்பார் பூசாரி. இந்த வருடம் முழு பாடலையும் கேட்டு விட்டு வந்து இங்கு பதிவிடுகிறேன். அவற்றில் பல வரிகள் பார்வதியி அவதாரங்களாகவே காடேரியை குறிப்பிடுவர், விரைவில் வரிகளை தருகிறேன்.

ராஜசங்கர் on February 16, 2012 at 6:00 am

மறுமொழி அளித்த அனைவருக்கும் நன்றி. குலதெய்வ வரலாறு வைத்திருப்பவர்கள், குலதெய்வ வரலாறு தெரிந்தவர்கள் அவற்றை பாடல் வடிவிலோ எழுத்துவடிவிலோ என எப்படி இருந்தாலும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தன்னாசி என்பது சந்நியாசிகளை குறிக்கும் சொல் அல்ல. ஏனென்றால் குடும்பவாழ்க்கையில் இருப்பவரையும் தன்னாசி என்று சொல்வார்கள். மனம் போன போக்கில் திரியும் ஆனால் கெட்டது ஏதும் செய்யாதவரையும் தன்னாசி என்று சொல்வார்கள். தன்னாசி பித்தன் என்பது இன்னோர் சொல். தன்னாசியை தன்+ஆசு என பிரித்து பொருள் கொள்ளமுடியும் என நினைக்கிறேன். தன்னாசியை பற்றி விரிவாக எழுதும் போது அதையெல்லாம் சேர்த்து எழுதுகிறேன்.

இந்த கட்டுரையை வெளியிட்ட தமிழ்ஹிந்து ஆசிரியருக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சரவணன்.V. on February 16, 2012 at 10:26 am

அருமை .அருமை. மறுமொழிகளை குறிப்பிடுகிறேன். கேள்வி எழுப்பியவருக்கும் ரொம்ப நன்றி. அவர்களால் தானே நண்பர்கள் இவ்வளவு அருமையான விளக்கங்கள் அளிக்கிறார்கள்!

குறிப்பா திரு சான்றோனுக்கு நன்றி. உண்மை. இந்த கிராம தெய்வங்கள் பற்றிய கூச்சல் சமீபத்தில் எழுந்த ஒன்று தான். பொய்களைப்பரப்ப பணம் . ஆச்சரியமாக இல்லை. வழக்கமான கூத்து தான். நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

சென்னை பாரிஸ் கார்நேரில் தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலயம் என்ற பெயர்ப்பலகையைப்பார்தேன். கிராமம் விட்டு ப்பிழைப்புக்கென வந்தவர்கள் கட்டியது என்று நினைக்கிறேன்.கங்கை அம்மன் கோயில்களும் சென்னையில் அதிகம்.

திரு குமரன், நன்றி, மேலும் சென்னையில் பிரபலமான கோயில்- பாடிகார்டு முனீஸ்வரன் என்கிறார்கள். வழித்துணை என்பதை சென்னை ஸ்டைலில் சொல்வதும் அழகாகத்தான் உள்ளது.

மாரியம்மன் பற்றி ஒரு அறிவு ஜீவி காலோனி காலத்து தெய்வம் என்று உளறினார். சீதலா தேவி என்று வடக்கில் கொண்டடப்படுபவம் அவள்.
மேலும் மாரியம்மன் தாலாட்டில் ” ஆயி உமை ஆனவளே! ஆஸ்தான மாரிமுத்தே!” என்று வருகிறது.தாய் தெய்வங்களைப்பற்றி திரு அரவிந்தன் நீலகண்டன் tamilpaper.நெட் இல் எழுதிய ஞாபகம்.

திரு குருமூர்த்தி

“பெரியாண்டவர்” எனபது தான் எங்கள் குல தெய்வம் ஆனால் அங்கு ஒரு சிலையோ அல்லது ஒரு கோவிலோ ஏதும் இல்லை ஒரு வேப்பமரத்திற்கு கீழே கல் ஒன்று நட பட்டு இருக்கும்!! அவளவு தான்!! ”

எனக்கு தெரிந்தவர் ஒருவரின் குலதெய்வமும் பெரியாண்டவர் தான். சிதம்பரம் அருகில் உள்ளது என்றார்கள். சரியாகதேரியவில்லை. ஆண்கள் மட்டுமே கோயில் வரை செல்வார்களாம். அவர்கள் வீட்டின் திருமணமான பெண்ணுக்கு அக்கோயில் பிரசாதம் கொடுப்பதில்லை. மகன், மருமகளுக்கு மட்டும் உண்டு. கோயில் என்று சொன்னாலும் அது மிக எளிமையாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன். வருடம் ஒரு முறை செல்வார்கள். குடும்பத்தின் ஆண்கள் மட்டும் பூசாரியின் அருகில் சென்று விபூதி பிரசாதம் வாங்கி வருவார்களாம்.

தமிழ் ஹிந்து அடிக்கடி இது போன்றக்கட்டுரைக்ளை வெளியிடலாம்.

சரவணன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ராஜசங்கர் on February 18, 2012 at 7:24 pm

குலசாமிகள் தனியாக இருக்கும் சாமிகள் என்று இப்போது சொல்லப்படுவதால் தான். அது இல்லை என நிறுவவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்து மதத்தில் பெரும் தெய்வங்கள், சிறும் தெய்வங்கள் என்றெல்லாம் பிரித்து அதை மேற்கத்திய முறைப்படி ஆராய்கிறேன் என இருக்கும் போது அது தவறு என யாரேனும் சொல்லவேண்டும் அல்லவா?

நந்தாவும் நீங்களும் கேட்கும் ஆதாரம் பொன்னர் சங்கர் கதையிலேயே வருகிறது. அதை சுட்டி காட்டியிருந்தேன். பொன்னர் சங்கர் வரலாற்றின் படி பாண்டவர்கள் ஐவரும் பொன்னரும் சங்கராகவும் திரெளபதி தங்காள் ஆகவும் பிறக்கிறார்கள். கிருஷ்ணர் மாயவராக வருகிறார். கவிஞர் சக்திகனல் பதிப்பித்த பொன்னர் சங்கர் கதைப்பாடல் முழுவதுமாக இணையத்தில் உண்டு. சுட்டி பிறகு தருகிறேன்.

பொன்னர் சங்கர் வரலாறு முழுவதும் மாயவர் தன்னாசியாக வந்து அற்புதங்கள் நிகழ்த்துகிறார். கதை இறுதியிலும் அவரே முடிவு சொல்லுகிறார். இவற்றை கட்டுரையில் விளக்கினால் அது சொல்லவந்ததை விட்டு பொன்னர் சங்கர் வரலாறாக விரியும் என்றே அங்கங்கே குறிப்பு மட்டும் கொடுத்து விட்டேன்.

அடுத்து அண்ணன்மார் என அழைக்கப்படும் பொன்னர் சங்கர் வரலாற்றை சுருக்கமாகவும் விரிவாகவும் எழுதுவேன். அதிலே நீங்கள் இவற்றை விரிவாக படிக்கலாம்.

ராஜசங்கர்

ராஜசங்கர் on February 18, 2012 at 7:25 pm

உமாநாத்,

நீங்கள் எந்த மாதிரியான தரவுகளை எதிர்பார்க்கிறீர்கள்?

குலசாமிகளை பொறுத்தவரை ஏன் கடவுள் நம்பிக்கையை பொறுத்தவரை நம்பிக்கை தான் ஆதாரம். 🙂

இருப்பினும் விஷ்ணு ரூபம் என்று சொல்ல முக்கியமான ஒன்று அவர் உயிர்ப்பலி ஏற்பதில்லை. அடுத்து சுரப்புரடையில் கம்பஞ்சோறு படையல். இது அமிர்தத்திற்கு நிகராக நம்பப்படுகிறது. அமிர்தம் தந்தது விஷ்ணு தான் என நீருபிக்கவேண்டியதில்லை என நினைக்கிறேன். 🙂

சுடலை, மாடன், கருப்பன்,ஐயனார் போன்றோருக்கு உயிர்ப்பலி உண்டு. அவர்கள் காவல் தெய்வங்கள், நீதியை பரிபாலித்து அருள் புரிபவர்கள். இவரும் கன்னிமாரும் காவலுக்கு நிற்பதில்லை. எதிர்காலத்தை சொல்லுதல், தீரா நோயை தீர்த்தல் என அருள்புரிகிறார்கள்.

இவைகளை உள்ளடக்கியிருந்தால் கட்டுரை வேறு தளத்திற்கு போயிருக்கும். ஆகவே தான் சுருக்கமாக முடித்திருந்தேன். இந்த விவரங்களை கொண்டு இன்னோர் கட்டுரை எழுதலாம் போல. 🙂

ராஜசங்கர்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அன்புக்குரிய ஸ்ரீ ராஜாசங்கர்
தன்னாசி மாயவர்தான் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் போதாது. ஸ்ரீ தன்னாசி அப்பன் ஒருவர் அல்ல பலர். அய்யன் என்று கொங்கில் வழிபடப்படும் அனைவரும் துறவிகளே. ஜடாமுடி, ருத்ராட்ச தாரணம், தண்டம் போன்றவற்றுடன் காட்சிதரும் ஸ்ரீ தன்னாசி எப்படி திருமாலாக இருக்க முடியும். ஐயா மீண்டும் எனது மறுமொழியை அருள் கூர்ந்து வாசியுங்கள்.
கம்மஞ்சோறு எந்த பெருமாள் கோயிலில் படைக்கப்படுகிறது. நம் கொங்கு மண்டலத்தில் மாரியம்மனுக்குப்படைக்கப்படும் விளக்கு மாவுகூட கம்புமாவாகத்தான் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோளம், கம்பு, ராகி இவையே கொங்கு மக்களின் முக்கிய பயிராக உணவாக இருந்து பவானி மற்றும் அமராவதி ஆறுகள் நீர்பாசணத்திற்கு முன் என்பது வரலாறு என்று னீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். தாம் உண்டதை தமது கடவுளுக்குப்படைப்பது நம் பண்பாடு அல்லவா.
உங்கள் மறுமொழியில் ஐயனாருக்கு மிருகபலி அளிக்கப்படுவதாக கூறியிருந்தீர்கள். இது தவறு. ஐயனார் பூணூலுடன் விளங்குவதோடு அவருக்கு எங்கும் பலி கொடுக்கப்படுவதில்லை. அவருக்கு முன் திரைபோட்டுவிட்டு காவல்தெய்வமான கருப்பசாமிக்கோ அல்லது முன்னுடையானுக்கோ தான் பலியிடப்படுகிறது. கொங்கு நாட்டில் வாழும் முத்தரையர் மக்களிடையேயும் கடலூரில் மாவட்டத்தில் வாழும் வன்னியர் மக்களிடையேயும் கண்டது இது.
திரு செந்தில் வீரமாஸ்த்தி வழிபாடு பற்றி உடன் கட்டை ஏறுதலே என்று எழுதியுள்ளார். வீரமஸ்தி வழிபாடு கொங்கு நாட்டில் உள்ள அனைத்துக் குடிகளிடையேயும் உண்டு என்ற அவரது கருத்து சரியே. ஆனால் எல்லா வீரமாஸ்திகளும் உடன் கட்டையேறியவர்கள் அன்று என்பதே உண்மை.
வீரமாஸ்தி வழிபாடு பண்டைத் தமிழர்தம் நடுகல் வழிபாடின் தொடர்ச்சி என்றாலும் உயிர் தியாகம் செய்தப் பெண்களுக்கு இது நிகழ்த்தப் படுகிறது. இஸ்லாமிய படையெடுப்பின் போது கற்பை காக்க தீக்குளித்த பெண்களும் வீரமாஸ்திகளே. இளம் வயதில் நீர்னிலையில் உயிர் துறந்தவர்களும் வீரமாஸ்திகளே. நீலகிரிப் பழங்குடிகளான படுகர் வழிபடும் ஹெத்தையம்மன் வீரமாஸ்திதான். பூவாடைக்காரி தீய்பாய்ந்தாள் என்பதெல்லாம் வீரமாசித்திகள்தாம்.
இந்த வீரமாஸ்தி வழிபாடு எனும் தியாகியர் வழிபாடும் கொங்கு நாட்டில் சக்தி வழிபாட்டோடு இணைந்து விட்டது. ஸ்ரீ வீரமாஸ்திக்கும் நான்கு கரங்கள் சிம்மவாகனம் அமைத்து ஆலயம் கட்டிவிட்டார்கள். ஆனால் பலிகொடுக்கப்படுவதில்லை.
கிராமிய தெய்வங்கள் சிவபெருமான், திருமால், தேவி பராசக்தி ஆகிய பாரததேசம் முழுதும் வழிபடப்படும் தெய்வங்களாகப்பல இடங்களில் உள்ளன. எனினும் பல தெய்வங்கள் மக்களுக்காக தியாகம் செய்த வீரர்கள், வீராங்கனைகள், மக்களுக்காக சேவை செய்த புண்ணியர்கள், துறவியர்கள், சித்தர்கள் போன்றோர். இப்படி மனிதன் தெய்வமாக ஆகலாம் என்பது நமது மதம் மட்டுமே.அவர்களுக்கு தலைவணங்கி வழிபாடு செய்யலாம் என்பது ஹிந்துக்களின் பெரும்பாலான சமயப்பிரிவுகளின் நம்பிக்கை.
விபூதிபூஷண்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஸ்ரீ காட்டேரி மற்றும் ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய சாமிகளுக்கும் ஹிந்து மதத்திற்கும் என்ன சம்மந்தம் என்றுகேட்கிறார்கள். நிச்சய்ம் ஆபிராகாமியர்களோ அவர் தம் அடிவருடிகள் இவர்களை வழிபடமாட்டார்கள் என்பது ஒன்று. அதைவிட காட்டேரி காளி அன்னைதான். அவளுக்கும் முப்பலி உண்டு என்பது இன்றைக்கு நடைமுறை. ஸ்ரீ மதுரை வீரனை ஆலயம் எழுப்பி வழிபட நாயக்க மன்னர்களுக்கு ஆணையிட்டதே அன்னை மீனாட்சி தான் என்பது செவிவழி வரலாறு.
விபூதிபூஷண்

C.N.Muthukumaraswamy on February 21, 2012 at 7:48 am

காட்டேரிதான் பண்டைய இலக்கியங்களில் காடுகிழாள் என்று அழைக்கப்படுகிறாள் போலும். மேலும் ஐயனாருக்குப் பலியிடுதல் இல்லை என்றுதான் அறிகின்றேன். தன்னாசி உறுதியாக மாயவர் அல்லர். இது குறித்து ஸ்ரீ விபூதி பூஷன் அவர்கள் கருத்துதான் என்கருத்தும். வீர மா சதி என்னும்பெயரே வீரமாஸ்தி ஆனது என கருதுகின்றேன். எவ்வாறாயினும் இராஜ சங்கர் அவர்கள் கட்டுரை அரிய செய்திகச்ளைக் கொண்டுள்ளது. மேலும் பல செய்திகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்

சரவணன்.V. on February 21, 2012 at 11:36 am

இது மேலும் மேலும் தர்மம் சார்ந்தவர்கள் சரியான , உண்மையான ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம். நாம் செய்யாவிடில் பொய்களை அரங்கேற்ற பொய் அறிஞர்ககுள் நிறைய பேர் உண்டு.

இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் , பதில்கள் அளிக்கும் பெரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் மிக நன்றி. இது ஒரு தொடர் போல் வந்தால் நன்றாக இருக்கும். ஆர்வமுள்ளவர் எழுதலாமே? எவ்வளவு பேர் தங்கள் வேர்களைத்தேடிகொண்டிருக்கிரார்கள்?

கொற்றவை பற்றி படிக்கும் போது துர்கையின் மற்றொரு வடிவம் என்று தோன்றுகிறது. கலைமான் வாகனம் எம்பது பற்றி விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும். ஏதேனும் தத்வார்த்த அர்த்தங்கள் இருக்கக்கூடும்.

ஆதி துலுக்கானத்தம்மன் கோயில்கள் தமிழ் நாட்டில் எங்கெங்கு உள்ளன ?
அவளுக்கென்று சற்றுப்பெரிய தனி கோயில்கள் எங்கேனும் உள்ளனவா?

தீபாஞ்சாள் அம்மன் கோயில் ஒன்றை வெளியிலிருந்து பார்த்திருக்கிறேன் .வீரமா சதி என்பது அதன் சமஸ்க்ரித்த வடிவம் போலும்.

. இத்தளத்தில் சர்க்கரை அம்மன் கோயில் பற்றி படித்தேன். சென்னையில் உள்ளது. உண்மையில் ஸ்ரீ சக்ரம் வைத்து பூஜை செய்த ஒரு துறவி அம்மையார் சமாதி இடம். பெயர் எப்படி மருவி உள்ளது பாருங்கள். அங்கே பிள்ளை வரம் கேட்டு கண்ணீருடன் வருவோரையும் கண்டேன், ஞானம் தேடுவோருக்கு ஸ்ரீ சக்ரம். பிள்ளை வரம் கிடைத்தால் சக்கரை அம்மன் தான் எளியவர்களுக்கு. இப்படி பல நிலைகளில் வருவோரின் பல தேவைகள் நிறைவேறுகின்றன.

இது மிக விரிவான விஷயம். வீரர்கள், தியாகம் செய்து இறந்தவர்கள், இது தவிர தவ சீலர்கள் மற்றும் கிராம மக்களின் எளிய பார்வையில் முமூர்த்திகளின் வேறு வடிவங்கள் இப்படி நிறைய சொல்லலாம் போலும். காஞ்சி பெரியவர் சொல்வது போல் , நாம் அவரே பரமாத்மா என்ற பாவத்தில் [ bhava] வணங்கினால் அந்த பரமாத்மாவே நம்மை ஆட்கொண்டுவிட்டு போகிறார். கீதையில் இதைத்தானே கிருஷ்ணரும் சொல்கிறார்.
அடி நாதமாக இவ்வடிவங்கள் அல்லவற்றையும் இணைப்பது சனாதனமான இந்த உணர்வே. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இது தான்.
சரவணன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஸ்ரீ சதீஸ்குமார் வீரமாத்தி வழிபாட்டைப்பற்றி விளக்கங்களைக்கேட்டிருக்கிறார். வீரமாஸ்தி வழிபாடு நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சிதான். போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை கல்லில் வழிபடுவது நடுகல் வழிபாடு. அதே போல் போரின் போது மானம் காப்பதற்பாக தமது இன்னுயிரை ஈந்த பெண்களை வீரமாஸ்தி என்று வழிபடுவதே வீரமாத்தி வழிபாடாகும். அன்னியர்களுக்கு அடிபணியாமல் தன்னை அழித்து மானம் காத்த வீரமங்கையரே வீரமாத்தியர் என வணங்கப்படுகின்றனர். வழிபடும் முறைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் தென்னகம் முழுவதும் சாதிபேதமின்றி வீரமாஸ்தியரை வழிபடுகின்றனர்.

செவ்வேள் குமரன் on February 6, 2015 at 8:05 am

நல்ல கட்டுரை. மருமொழியாளர்கள் கவனத்திற்கு, கொங்கதேசத்தில் வீரமாத்தி வழிபாடு பற்றிய விரிவான தகவல் தொகுப்பை இங்கே காணலாம்.

http://www.karikkuruvi.com/2014/12/blog-post.html

rani balakrishnan on February 27, 2016 at 9:54 pm

Thayavu . Seiய்து சமய Karuப்பன் , இருளாய் அம்மன் , thottichchi அம்மன் நாகராஜன் பற்றி ஆராய்ச்சி katturai எழுதுங்கள் . அறிய ஆவலாக இருக்கிறேன் .engal குலதெய்வம் . Thottichchi அம்மன் Thiru போகர் ஸ்வாமிகள் பழனி Avarkalin kuladeivamum. என்று படித்து இருக்கிறேன் .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard