New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைக்கமும் ஜெயமோகன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வைக்கமும் ஜெயமோகன்
Permalink  
 


எழுத்துரு அளவு Larger Font Smaller Font

a3.jpg

ப.  திருமாவேலன்

பெரிய மகாபாரதத்தை அதனினும் பெரிதாக ‘வெண்முரசு’ கொட்டி வருகிறார் ஜெயமோகன். புனைவை புனைவு ஆக்குவதால் அதில் யாரும் மோதப் போவது இல்லை. இருந்தாலும் அது அந்த 127 பேருக்கான விவகாரம். ‘வெண்முரசு’ அடிப்பது போலவே இன்னொன்றையும் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார் ஜெயமோகன். அதுதான் வைக்கம் பற்றிய வன்மமுரசு’. ஏற்கெனவே கிழிந்த தோலை எத்தனை தடவை மொத்தினாலும் சத்தம் வராது. ஆனால் கையில் குழல் இருப்பதால் அதை வைத்து மத்தளத்தை சுரண்டிச் சுரண்டி அவ்வப்போது ஒலி எழுப்பி வருகிறார். இதோ, இப்போது மீண்டும் வன்மமுரசு ஒலிக்கிறது. பழ.அதியமான், ஜெயமோகனைச் சீண்டிவிட்டார்.

பெரியாரிய மதத்துக்குள் (அதைச் சேர்ந்தவன் தான் நான்! அந்த மடாதிபதி, தனது செயலை தானே விமர்சித்துக் கொண்டவர். அடுத்தவர் கேள்விக்கு நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு கூட்டத் திலும் பதில் சொன்னவர். அந்த மதம் கடவுள் இல்லை என்றதே தவிர எந்தக் கோவிலையும் இடிக்கவில்லை. எந்த மதத்த வரையும் கொல்லவில்லை. எந்தச் சாதியினர் மீதும் அவதூறு செய்ய வில்லை. அவர் ஒரு மதத்தைக் கூட ஏற்படுத்தி விட்டுப் போயி ருக்கலாமோ என்ற அளவுக்கு நல்லவராக வாழ்ந்தார்!) மட்டுமே இதுவரை பேசப்பட்டு வந்த ‘வைக்கம் வீரர்’ பெருமையை பழ.அதியமான் ஆதாரப்பூர்வ மாக ஆக்குகிறாரே என்ற ஆற் றாமை ஒரு பக்கம். அதுவும், திராவிடப் பதிப்பகமாக இல் லாமல் ‘காலச்சுவடு’ இதனை வெளியிட்டு விட்டதே என்ற பொறாமை எல்லாம் கலந்து ஜெயமோகனைச் சிந்தை கலங்க வைத்துள்ளது.

அதனால் 646 பக்க புத்தகத்தை இந்த சிட்டி ரோபோ பாணியில் படித்து விட்டு, ‘வைக்கம்,ஈவெரா,புதிய கழைக் கூத்தாடிகள்’ என்று பழைய வாந்தியை திரும்ப எடுத்துள்ளார் ஜெயமோகன். காலச்சுவடு வெளியிட்ட பழ.அதியமானின், ‘வைக்கம் போராட்டம்‘ என்ற நூலை ஆய்வு நூலாக ஒப்புக்கொள்ளமாட்டாராம் ஜெயமோகன். ஆய்வு என்றால் என்ன என்றே தெரியாத ஜெயமோகனுக்கு இது ஆய்வு நூலாகத் தெரிந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும். பின்னி மில் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல், ‘வெள்ளையானை’ எழுதுவது தான் அவரைப் பொறுத்தவரை ‘கள ஆய்வு’. இப்படிப்பட்ட கள்ள ஆய்வுகளில் தேர்ந்தவர் அவர்.

a4.jpg

சுமார் 10 ஆண்டுகளாக ஒரே கருத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார் ஜெயமோகன். அதற்கு எதிராகத் தரப்பட்ட எந்த ஆதாரத்தையும் அவரது மூளை ஏற்கவில்லை . திரும்பத் திரும்பத் தான் சொன்னதையே சொல்கிறார் என்றால் ‘மதம்‘ யாருக்கு பிடித்திருக்கிறது?

ஜெ. வைக்கும் வரலாறு!

‘வைக்கம் போராட்டத்தைப் பெரியார் தொடங்கவுமில்லை, நடத்தவு மில்லை, முடிக்கவுமில்லை ‘ என்பது மட்டும்தான் ஜெயமோகன் நிறுவ நினைக்கும் ஒரு வரி வரலாறு. ‘நான் தான் தொடங்கினேன், நான் நடத்தினேன் , நானே முடித்தேன்’ என்று பெரியாரும் சொல்லவில்லை. வைக்கம் வரலாற்றுக் குறிப்பு நூலை எழுதிய திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணியும் எழுதவில்லை. தான் வைக்கம் செல்வதற்கு முன்னால் அங்கு யாரெல்லாம் போராடி வந்தார்கள் என்பது பெரியாரின் பேச்சுகளில் இருக்கிறது. கி.வீரமணியின் நூல்களிலும் இருக்கிறது. ஆனால் ‘பெரியார் மட்டும்தான்’ என்று சொல்லிக்கொள்வதாக ஜெயமோகனாகக் கற்பனை செய்துகொள்கிறார். கேட்டால், ‘தமிழ்நாட்டுப் பள்ளி பாடப்புத்தகங்களில் இருக்கிறது’ என்கிறார். அவரது வரலாற்று அறிவு, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்களோடு நின்று விட்டதற்கு நாம் பொறுப்பாக முடியாது. பாடப்புத்தகங்கள் எந்தத் தலைவரைப் பற்றிய கட்டுரையோ அந்தத் தலை வரைத் தான் புகழ்ந்து எழுதும். அதன் தன்மை அதுதான்.

‘வைக்கம் வீரர்’ என்கிறார்களே என்று தனது வயிற்றில் தானே அடித்துக் கொள்கிறார் ஜெயமோகன். ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரை முதலில் அழைத்தது திராவிடர் கழகத்தவர் அல்ல. சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்குவ தற்கு முன்பே, பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கும் போதே திரு,வி.க. தான் அவரை வைக்கம் வீரர்’ என்றவர். இவர் பெரியாரின் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல.

‘திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டு கிறது’ என்று எழுதியவர் இராஜாஜி. ( சுதேசமித்திரன் 26.6.1924). இவர் பெரியாரை வீழ்த்தும் மதத்தைச் சேர்ந்தவர் என்ற வரலாறு ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்கும்.

‘தொடங்கவுமில்லை, நடத்தவுமில்லை , முடிக்கவுமில்லை’ என்ற வார்த்தைகளில் வரலாற்று மறுப்பைப் பின்னர் சொல் கிறேன். முதலில் இந்த விமர்சனமே வரலாற்றறிவு அற்றது.

வீரபாண்டிய கட்டபொம்மன், இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கவுமில்லை, தலைமையேற்று நடத்தவுமில்லை, முடிக்கவுமில்லை. அதற்காக அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பாரா?

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், இந்திய சுதந்திரப் போராட்டத்தை தொடங்கவுமில்லை, தலைமை யேற்று நடத்தவுமில்லை, முடிக்கவு மில்லை. அதற்காக அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பாரா?

வ.உ.சிதம்பரனார், இந்திய சுதந் திரப் போராட்டத்தை தொடங்கவு மில்லை, தலைமையேற்று நடத்தவு மில்லை, முடிக்கவுமில்லை, அதற் காக அவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல என்பாரா?

என்ன அபத்தம்? யாரெல்லாம் வரலாறு எழுத வந்துவிடுகிறார்கள்? 1947 ஆகஸ்ட் 15 அன்று இவர்கள் மூவருமே உயிரோடு இல்லை. என்ன செய்யலாம்? வரலாற்றில் அவர்களது பங்களிப்பை எவ்வாறு அளவிடுவது? அவர்கள் வாழ்ந்த காலத்தில் ‘இந்திய சுதந்திரம்‘ என்ற கருத்தாக்கத்துக்காக என்ன செய் தார்கள் என்று அளவிட்டுச் சொல்ல வேண்டும். அதேபோல அளவிட்டால் பெரியார், வைக்கம் வீரர்’ தான். தமிழ்நாட்டின் தீரர் தான்!

தொடங்கினாரா?

வைக்கம் போராட்டத்தை பெரியார் தொடங்கினாரா? இல்லை ! அப்படி அவரே சொல்லவில்லை!

வைக்கம் - என்பது அன்றைய சென்னை மாகாணத்தில் இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அந்தப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் பட்டியல் பெரிது. போராட்டத்தில் கைதானவர்களைப் பாருங்கள். அவர்கள் தான் அதனைத்தொடங்கியவர்கள். முழு முதல் காரணம் டி.கே.மாதவன். இவர் தான் அரீநாராயண தர்ம பரிபாலன இயக்கத் தொண்டர். 1915 முதல் கேரளாவில் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்.

1924 ஜனவரி மாதம் எர்ணாகுளத்தில் கூடிய கேரள மாநில காங்கிரஸ் கூட்டத்தில் ‘கேரள மாநில தீண்டாமை ஒழிப்புக் குழு’ அமைக்கப்பட்டது. பிரச்சாரக் குழுவும் அமைக்கப் பட்டது.  ‘பொது இடங்களைப் பயன்படுத்துவதில் தடை கூடாது’ என்ற தீர்மானத்தை இவர்கள் கொல்லம் சுயராஜ்யா ஆசிரமத்தில் கூடி எடுக்கிறார்கள். வைக்கம் மகாதேவன் கோவில் தெருவில் அனைத்து ஜாதியினரும் மார்ச் 30ஆம் நாள் செல்லலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. 30ஆம் தேதி மூன்று பேர் கைது. 31ஆம் தேதி மூன்று பேர் கைது. ஏப்ரல் 1,2 போராட்டம் இல்லை . அதிலிருந்து வரிசையாக கேசவமேனன், டி.கே.மாதவன்(7ஆம் தேதி), ஏ.கே.பிள்ளை, கேளப்பன் நாயர், வேலாயுதமேனன்(9ஆம் தேதி), சாத்துக் குட்டி நாயர், கிருஷ்ணன் பாச்சன், நாராயணன் ( 10ஆம் தேதி) வி.ஆர்.பிள்ளை, ஜிதான் நாயர், வி.கே. தாஸ், கே.ராகவன், பத்மநாபன், ராமதாஸ், ஜார்ஜ் ஜோசப், கே.ஜி.நாயர், பி.டபிள்யூ.செபஸ்தியான் (11ஆம் தேதி), சாத்துக்குட்டி நாயர், கிருஷ்ணன்பாச்சான், நாராயணன்( 12ஆம் தேதி) ஆகியோர் வரிசையாக கைதாகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் தான் பெரியார் கேரளாவுக்குள் நுழைகிறார்.பெரியாரின் ஒரு பொதுக்கூட்ட பேச்சில்கூட இது விரிவாக உள்ளது. எனவே, பெரியார் தொடங்கியதாக அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லவில்லை. அதுவே ஜெய மோகனின் கற்பனை!

a6.jpg

நன்றி: ‘நிலவெளி,’ மார்ச் 2020



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தொடர்ந்து நடத்தினாரா?

ஆம்! கேசவமேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் பெரியாருக்கு எழுதிய ரகசியக் கடிதம், பெரியாருக்கு கிடைக்கிறது. 13ஆம் தேதி பெரியார் வைக்கம் வந்துவிடுகிறார். அதாவது போராட்டம் தொடங்கிய 15ஆவது நாள் பெரியார் வைக்கம் வந்துவிடுகிறார்.

மிக முக்கியமான கேரளத் தலைவர்கள் அனைவரும் சிறைக்குள் இருந்ததால் முன்னர் அமைக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பெரியார், மன்னத்து பத்மநாப பிள்ளை, சிஷ்ஷேடத்து சங்கு பிள்ளை, கோயமுத்தூர் அப்துல் ரகீம் ஆகியோர் இருந்தனர். இவர்களது முயற்சியால் கே.ஜி.குஞ்சுகிருஷ்ண பிள்ளை தலைமையில் திருவனந்தபுரத்தில் மாநாடு நடந்தது. அதில் பெரியார் மூன்று மணிநேரம் பேசி இருக்கிறார். அவரது பேச்சை 13.4.1924 தேதியிட்ட ‘கேரள கவுமுதி’ வெளியிட்டுள்ளது. அதனை மொழிபெயர்த்துள்ளார் த.அமலா. (வைக்கம் நினைவலைகள் பக்கம் 65- 70) ‘கேரளாவில் வெளியான அக்காலத்திய நாளிதழ் ஆதாரங்களில் அநேகமாக எங்குமே ஈவெராவின் பெயர் காணப்படவில்லை’ என்று இந்த சிட்டி ரோபோ சொல்கிறார்( வைக்கம் குறித்த டிசம்பர் 26, 2013 கட்டுரையில்!) அவர் த.அமலாவின் புத்தகத்தை பார்க்கவேண்டும். ஏனென்றால், இவர், கேரள கவுமுதி, மலையாள மனோரமா, தேசாபிமானி, மாத்ருபூமி ஆகிய கேரள இதழ்களை பார்த்துத்தான் இந்தப் புத்தகத்தையே எழுதி இருக்கிறார். ஒருவேளை ஜெயமோகன் சொல்லும் கேரளம் வேறு எங்காவது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

பெரியாரையும் உள்ளடக்கிய குழு தான் ஏப்ரல் 18 அன்று திருவனந்தபுரத்தில் பந்த் நடத்த முடிவெடுத்தது. சத்தியாகிரகத்தின் தலைமையகத்தை கொச்சிக்கு மாற்றியதும் இக்குழு தான். டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யரிடம் தலைமைப் பொறுப்பை வழங்கியதும் இக்குழுதான். ஏப்ரல் 25ஆம் தேதி அன்று டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் கைது ஆகிறார். . அன்று மாலையில் கொச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு,சி.குட்டன் நாயர், டாக்டர் நாயுடு ஆகியோர் அக்கூட்டத்தில் பேசினார்கள். 'மகாராச திருமனசின் குடிமக்களான பல இனத்தவரிலேயே பகைமையை வளர்க்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு பெரியாருக்கும், கோவை அய்யாமுத்துவுக்கும், மாவட்ட நீதிபதி பேச்சுரிமைத் தடை விதிக்கிறார். இன்னொரு மாவட்ட நீதிபதியும் தடை உத்தரவு விதிக்கிறார். மே 8 அன்று நடந்த நாயர் - ஈழவர் கூட்டத்தில் பெரியார் கலந்து கொள்கிறார். மே 13ஆம் தேதி பெரியாருக்கு மீண்டும் கோட்டயம் நீதிபதி பேச்சுரிமை தடை போடுகிறார்.இரண்டு முறை தடையுத் தரவை மீறவில்லை. மீறவேண்டாம் என்று இராஜாஜி கடிதம் அனுப்புகிறார். ஆனால் மூன்றாவது முறை மீறிப் பேசுகிறார். ‘நான் மீற வேண்டியவனாக இருக்கிறேன்’ என்று கோட்டாறு நீதிபதிக்கு கடிதம் அனுப்புகிறார் பெரியார். மே 21 அன்று வைக்கம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படுகிறது. அருவிக்குத்தி சிறையில் ஒரு மாத காலம் பெரியார் இருந்தார். தண்டனை முடிந்து ஜூன் 21 அன்று விடுதலை யானார். திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டத்தில் பேசக்கூடாது என்று ஜூன் 24 அன்று தடை நீடிக்கப்பட்டது. அவரை வெளி யேற்ற ஜூலை 1ஆம் தேதி உத்தரவு போடப்பட்டது. இதை மீறியதற்காக ஜூலை 5 அவரைக் கைது செய்வ தற்கான உத்தரவு போடப்பட்டது . அதற்கு முந்தைய நாள் ஈரோடு சென்றார் பெரியார். அங்கேயே தங்கி விட வில்லை . ‘ தலைமறைவு’  ஆகி விட வில்லை . ஜூலை 10ஆம் தேதி மீண்டும் கேரளா வருகிறார். 18ஆம் தேதி நடந்த கூட்டத் தில் பேசுகிறார். இவர் மீதான இரண் டாவது வழக்கு ஜூலை 27ஆம் தேதி விசாரிக்கப்பட்டு நான்கு மாத கடுங்காவல் தண்டனை தரப்படுகிறது.  கோட்டயம், திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்ட பெரியார் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். செப்டம்பர் 9ஆம் தேதி ஈரோடு வந்துவிட்டார்.

அதாவது ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வைக்கம் போராட்டம் தொடங்குகிறது. அதற்கு 15 நாள் கழித்து அதாவது 13.4.1924 அன்று கேரளா வருகிறார் பெரியார். சுமார் அய்ந்து மாத காலம் வைக்கம் போராட்டத்தை ‘நடத்துகிறார்’. இதில் 22.5.1924 முதல் 21.6.1924 வரையிலும், 27.7.1924 முதல் 1.9.1924 வரையிலும் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் சிறையிலும் இருக்கிறார்.

சரியாகச் சொன்னால் வைக்கம் போராட்டத்தின் முதல் காலக்கட்ட மான 30.3.1924 முதல் 1.9.1924 வரையிலான காலக்கட்டத்தில் முதல் 13 நாளும், இடையில் 6 நாளும் தான் அவர் கேரளாவில் இல்லை. கேரளாவை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று காந்தி உத்தர விட்டார், இராஜாஜி கடிதம் அனுப்பி வரச்சொல்லிவிட்டார். இந்த இரண்டு காரணங்களால் பெரியார் அங்கிருந்து வெளியே வந்துவிட்டார். அவ்வளவுதான். காந்தி சொல்ல வில்லை என்றால் பெரியார் அங்குதான் இருந்திருப்பார்.

இதன் பிறகும் சொல்வீர்களா? ‘வைக்கம் போராட்டத்தை அவர் நடத்தவில்லை’ என்று?

a5.jpg

முடித்து வைத்தாரா?

ஆம்!

‘வைக்கம் போராட்டத்தை பெரியார் முடிக்கவில்லை’ என்பது ஜெயமோகன் கண்டுபிடிப்பு.

1925ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதிதான் வைக்கம் போராட்டத்துக்கு முழு வெற்றி கிடைத்தது.

பெரியார் வைக்கத்தில் இருந்து புறப்பட்டது 1924 செப்டம்பர். அதே ஆண்டு டிசம்பரில் பெல்காம் காங்கிரஸ் மாநாட்டுக்கு பெரியார், டி,கே.மாதவன், குரூர் நீலகண்டன் நம்பூதிபாடு,சத்ய விரத சுவாமிகள் ஆகியோர் சென்றனர். அதில் டி.கே.மாதவன், குரூப் நீலகண்டன், குஞ்சு கிருஷ்ண பிள்ளை ஆகியோர் மட்டும் தான் காந்தியைச் சந்தித்தார்கள். மற்றவர்கள் முன்கூட்டியே திரும்பி விட்டார்கள். 1925ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் வைக்கம் வந்தார் காந்தி. சவர்ண இந்துக்கள் 17 பேருடன் பேசினார். எத்தகைய ஜாதி வன்மம் தலைதூக்கிய சமூகமாக கேரளா இருந்தது என்பதை த.அமலாவின் மொழிபெயர்ப்பில் படிக்கலாம். (பக்கம் 99- 132) மார்ச் 12 ராணியைச் சந்தித்தார் காந்தி. அன்றைய தினம் நாராயணகுருவைச் சந்தித்தார் காந்தி. அந்த நேரத்தில் பெரியாரும் அங்கு தான் இருந்தார். 13ஆம் தேதி ராணியைச் சந்திக்கச் சென்றார் காந்தி. அவரோடு இராஜாஜியும் இருந்தார். பெரியாரும் சேர்ந்து மூவரும்தான் ராணியின் பங்களாவுக்கு சென்றார்கள். ஆனால் பாதியில் இறங்கிக்கொண்டார் பெரியார்.

‘நாங்கள் சாலையைத் திறந்து கொடுக்கிறோம். ஆனால் அடுத்ததாக கோவிலுக்குள் நுழைவோம்‘  என்கிறார் ராமசாமி நாயக்கர். அவர் அதைச் செய்யக்கூடாது. ‘கோவில் நுழைவுக் கிளர்ச்சியை அவர் செய்யாவிட்டால் இப்போதே தடையை நீக்கிவிடுகிறேன்’ என்றார் ராணி. உடனே காந்தி, பெரியார் தங்கி இருந்த இடத்துக்கு வருகிறார். பெரியாரிடம் கேட்கிறார். ‘நமது லட்சியம் கோவில் வரை தானே? தெருவிலே போவதால் என்ன ஆகும்? இந்தப் பேதம் ஒழிவதற்குத்தானே கிளர்ச்சி செய்கிறோம். ஆனால் நாம் இப்பொழுது இதைப் பற்றி அழுத்தம் கொடுக்கப் போவது இல்லை. மக்களை அதற்கு பக்குவப்படுத்தித்தான் செய்ய வேண்டும்‘ என்கிறார் பெரியார். ‘இதை ராணிக்கு சொல்லி விடலாமா?’ என்று கேட்கிறார் காந்தி. சரி என்கிறார் பெரியார். மீண்டும் ராணியை சந்திக்கிறார் காந்தி. ‘இப்போதைக்கு கோவில் நுழைவு இல்லை’ என்கிறார் காந்தி,

17ஆம் தேதி கவிஞர் வள்ளத்தோள் - காந்தி சந்திப்பு நடக்கிறது. 18ஆம் தேதி காவல்துறை ஆணையருக்கு காந்தி கடிதம் எழுதி, ‘வைக்கம் சாலைக்கான தடையை நீக்குங்கள்’ என்று கோரிக்கை வைக்கிறார். அன்றைய தினம் 18.3.1925 அன்று வைக்கம் சாலையில் அனைவரும் செல்லலாம் என்று அரசு அறிவிக்கிறது. ஆனாலும் தடை நீடிக்கிறது. கிழக்கு பாதை நீங்கலாக மற்ற பாதையில் செல்லலாம் என்கிறார்கள். அதன்பிறகு அந்தத் தடையும் 1925 நவம்பர் 21ஆம் நாள் உடைகிறது.

இதன்படி பார்த்தால் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை காந்திக்கும் ராணிக்கும் நடக்கும் போது பெரியாரும் கேர ளாவில் தான் இருந்து முடித்து வைத் துள்ளார். வைக்கம் சத்தியாகிரகம் முடி வுற்றதாக அதிகாரப்பூர்வமாக 23.11.1925 அன்று அறிவிக்கப்படுகிறது. இந்த சத்தியாகிரகத்தின் வெற்றி விழா 27.11.1925 அன்று வைக்கம் சத்தியாகிரக ஆசிர மத்தில் நடந்தது. அதற்கு பெரியாரும், நாகம்மாளும் வரவழைக்கப் பட்டார்கள். கூட்டத்துக்கு பெரியார் தலைமை வகிக்க வேண்டும் என்று முன்மொழிந்தவர் கேளப்பன் நாயர். ‘நான் தலைமை தாங்க வரவில்லை, உங்கள் அனைவரையும் பார்க்கவே வந்தேன்’ என்றார் பெரியார். அதில் பெரியார் பேசுகிறார். மற்றவர்களும் பேசுகிறார்கள். ‘தமிழகப் பிராமணர்கள் தான் இந்த தடையை நீக்க தடையாக இருந்தார்கள்’ என்று பலரும் பேசி இருக்கிறார்கள்.பெரியார் முன்பு தான் இவை நடந்துள்ளன.

இதற்கு என்ன பெயர்? முடித்து வைப்பதுதானே ஜெயமோகன்?

அதியமான் மீது ஆத்திரம் ஏன்?

பழ.அதியமான் மீது ஆத்திரம் வரக் காரணம்.. இது வரை ஜெயமோகன் சொல்லி வந்த மேம்போக்கான ‘சோஷியல் மீடியா வகைப்பட்ட’ வரலாற்றை இனியும் தொடர விடாமல் செய்துவிட்டாரே என்ற வருத்தம்தான். சோஷியல் மீடியாவில் எதையும் சொல்லலாம். ஆதாரம் தரத் தேவையில்லை. அந்த வழி தான், ஜெயமோகன் வகைப்பட்டவர்களின் வரலாறு எழுதும் முறை.

வைக்கம் போராட்டத்துக்கும், பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று முதலில் முழங்கிய ஜெய மோகனை, ‘பெரியாரும் பங்கெடுத்தார்’ என்று சொல்ல வைத்துவிட்டார் பழ.அதியமான். அதுதான் ஜெயமோகன் கதறக் காரணம்.

2010 ஜனவரி 17ஆம் நாள் ‘வைக்கம்‘ குறித்த  ஜெய மோகனின் பதிவுக்கும் 2020 ஜனவரி 16ஆம் நாள் பதிவுக்கும் நிறைய வேறுபாடுகள்.

2010இல் ஜெயமோகன் ‘வைக்கம்‘ வரலாறு என்ன சொன்னது என்றால்: 'ஈவெரா தனது மனைவி நாகம்மாளுடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை . அவருக்கு தொண்டர் பின்புலமும் அன்று இருக்கவில்லை. ஈவெரா, அன்று கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் முக்கியமானவராக அன்று கருதப்படவில்லை . அப்போது அவருக்கு 45 வயதுதான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை . கேரளாவில் வெளியான அக்காலத்திய நாளிதழ் ஆவணங்களில் அநேகமாக எங்குமே ஈவெராவின் பெயர் காணப்படவில்லை. டி.கே.மாதவன் வாழ்க்கை வரலாற்றில் அவர் பெயர் இல்லை.

யங் இந்தியாவில் அவர் பெயர் இல்லை’ - இது 2010இல் ஜெயமோகன்!

2013 டிசம்பர் 26 அன்று ஜெயமோகனின் ‘வைக்கம்‘ வரலாறு என்ன சொன்னது இதுதான்: ‘வைக்கம் போராட்டத்தை ஈவெரா தொடங்கவில்லை, தலைமை தாங்கி நடத்தவில்லை, முடிக்கவில்லை. அதில் பங்குபெற்றார். அவரது பங்களிப்பு அதில் சிறியதே. அவரே நடத்தினார் என்று சொல்லக்கூடாது’ - இது 2013இல் ஜெயமோகன்.

பழ.அதியமான் புத்தகம் வெளிவந்தபிறகு 2020 ஜனவரி 16 அன்று ஜெயமோகன் ‘வைக்கம்‘ வரலாறு என்ன சொன்னது என்றால் இதுதான்:

‘ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார். போராடினார். மெட்ராஸ் மாகாண காங்கிரசு சார்பில் இங்கிருந்து சென்றவர்களில் ஒருவர் ஈவெரா. அவரே முதல்வர் என்றோ , இவர்களைவிட ஈவெராவின் பங்களிப்பு சற்றே மேல் என்றோ அவருடைய ஆதரவாளர்கள் சொல்வதில்கூட எனக்கு மாற்றுச்சொல் இல்லை. ஈவெரா சிறை சென்றவர் என்பது உண்மை. அவரைவிட சிறை சென்றவர் அதிகம். கேரள முன்னணி போராளிகள் சிறை சென்றமையால் தான் மெட்ராஸ் மாகாணத்தவர் செல்ல நேர்ந்தது. தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஈவெரா. அவருடைய பங்களிப்பு அவ்வகையிலேயே. அது அவருடைய இளமை வீச்சால் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம். வைக்கம் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே ஈவெரா தமிழகம் திரும்பி விட்டார். அவர் அதன் பின் ஆர்வம் காட்டவில்லை.

தமிழகப் பாடநூல்களில் அவர் தான் போராட்டம் நடத்தினார் என்று இருக்கிறது. வைக்கத்தில் பெரியார் பங்கு முக்கியமானது. அதில் சந்தேகம் இல்லை . அன்று தமிழகத்தில் இருந்து சென்ற எம்.பெருமாள் நாயுடு, கோவை அய்யாமுத்து ஆகிய மூன்று தலைவர்களில் முக்கியமானவர் பெரியார்.’

- இது 2020இல் ஜெயமோகன்.

வைக்கம் போராட்டத்தில் கைதானவர்களில் பெரியாரும் ஒருவர் என்கிறார் 2010இல். ‘பெரியாரின் பங்களிப்பு சிறியதே’ என்கிறார் 2013இல். ‘பெரியார் பங்களிப்பு சற்றே மேல், சிறை சென்றார், காங்கிரஸ் கட்சி சார்பில் வந்தார், இளமை வீச்சால் ஆற்றல் பெற்றவராக இருந்தார், பெரியாரின் பங்கு முக்கியமானது, தமிழகத்தில் இருந்து வந்த மூன்று பேரில் முக்கியமானவர்’ என்கிறார் ஜெயமோகன் 2020இல். இது தான் பழ.அதியமான் புத்தகத்தின் வெற்றி. இப்படிச் சொல்லித் தொலைக்க வேண்டியதாக இருக்கிறதே என்ற கோபம்தான் ‘இது ஆய்வு நூல் அல்ல’ என்று அவரைச் சொல்ல வைக்கிறது.

பெரியார் மதம் சாராத ஆதாரங்கள்

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் டாக்டர் டி.கே. இரவீந்திரன்     eight furlongs of freedom
என்ற ஆய்வு நூலை 1980இல் எழுதி வெளியிட்டார். கேரள அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளைக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. 1924ஆம் ஆண்டு காவல்துறை குறிப்புகளை வைத்து இந்நூலை எழுதி இருக்கிறார் டி.கே.இரவீந்திரன். இவர் தமிழருமல்ல, பெரியார் மதம் சார்ந்தவரும் அல்ல. திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின்  ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன், அன்றைய சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். அதனை ரவீந்திரன் தனது நூலில் குறிப்பிடுகிறார். இந்தக் கடிதத்தை இணைப்பாகவும் கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்.

‘தீண்டாமை எதிர்ப்புக் குழுவில் இடம்பெற்ற முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்ட பின்னால் பல்வேறு இடங்களில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் கேரளாவை நோக்கி வரத் தொடங்கினார்கள்’ என்று எழுதிவிட்டு தனது நூலில் ஒரு அடிக்குறிப்பு போடுகிறார் ரவீந்திரன்.

‘ஈவெராமசாமி நாயக்கர், அய்யா முத்து கவுண்டர், மற்றும் எம் பெருமாள் நாயுடு போன்ற தமிழகத் தலைவர்கள் சத்தியாகிரகத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டனர். இதில் ராமசாமி நாயக்கரின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது’ என்று எழுதுகிறார் ரவீந்திரன்.

‘’ஒரு சிக்கலான நேரத்தில்தான் சென்னை ராஜதானியில் இருந்து தலைவர்கள் வந்தார்கள். .... சத்தியாகிரகிகளுக்கு ஆதரவும் பணமும் இயக்கத்தை நடத்தும் தலைமையும் சென்னையிலிருந்து கிடைத்தது. ஈவெராமசாமி நாயக்கர் இந்த இயக்கத்துக்கு புத்துயிர் ஊட்டினார். கேரளாவுக்கு வருவதற்கு முன் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டார். உணர்வுபூர்வமான அறிக்கை இது.....

அவரின் உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் வைக்கத்தின் சுற்று வட்டாரத்திலும், திருவிதாங்கூரின் பகுதிகளிலும் உள்ள மக்கள் மத்தியில் ஒலித்தது. தர்க்கமாகவும் உறுதியாகவும் அவர் வைத்த வாதங்கள் மனத்தடுமாற்றம் உள்ளவர்களைக்கூட போராட்டத்தின் பக்கம் இழுத்தது.... ராமசாமி நாயக்கர் பேச்சு குறிப்பாகச் சொன்னால் மக்கள் மத்தியில் பதியக்கூடியதாக இருந்தது. திருவிதாங்கூர் அரசின் மதிப்பையே குலைக்கக்கூடியதாக இருந்தது. எனவே அவர் பலமுறை கைது செய்யப்பட்டார்” என்று தனது நூலின் பல்வேறு பக்கங்களில் (63,67,87,88,89,90,115,) ரவீந்திரன் எழுதுகிறார்.

வைக்கம் போராட்டம் குறித்து தனது ‘கடந்த காலம்‘ என்ற நூலில் பெரியாரைக் குறிப்பிடுகிறார் கே.பி.கேசவமேனன். அவரே ‘பந்தனத்தில் நின்னு’ என்ற நூலை மலையாளத்தில் எழுதினார். அதாவது ‘தளைகளைவிட்டு’ என்ற நூலில், கேசவமேனன் சொல்லும் சொற்களைக் கவனியுங்கள்:

“.... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் சங்கிலிகளும், கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும் கழுத்தில் மரக்கட்டையும் மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு கேரளாவின் தீண்டாமைச் ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ் நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை, இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்கு புத்துயிர் தராதிருக்கவில்லை ...( மலையாள நூல் பக்கம் 76, தமிழில் எனது நண்பர் சிவன்).

ஜெயமோகன் எதிர்பார்ப்பைக் கேசவமேனன் பூர்த்தி செய்வாரா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம், வைக்கம் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்போதே எழுதப்பட்ட புத்தகம் இது. மாத்ருபூமி பதிப்பகம் 1924இல் முதல் பதிப்பு வெளியிட்டுள்ளது. நூலின் முன்னுரையில் 27.10.1924 என்று தேதி குறிப்பிடுகிறார் மேனன். 1947,1986 ஆண்டுகளில் இது மறுபதிப்பு கண் டுள்ளது.

கும்பா வைக்கம் வரும்போது பெரியார் சாதாரண ஆள் என்று 2000இல் எழுதுகிறார் ஜெயமோகன். ஆனால் கே.பி.கேசவமேனன் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். பெரியார் யார்? தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர், ஈரோடு முனிசிபல் சேர்மன், பெரும் பணக்காரர், உத்தம தேசாபிமானி, தமிழ் நாட்டின் ஒரு மேற்குல இந்து...’ என்கிறார் மேனன். ஆனால் பெரியார் ஜெயமோக னுக்கு சாதாரணமானவராகத் தெரிகிறார். அவரவர் தரம், அவரவர் பயன்படுத்தும் சொல்லில் வெளிப்படுகிறது.

எல்லா பதிலும் இதில் இருக்கிறது!

‘வைக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். அதில் ஒரு தகவல் கூட மறுக்கப்படவில்லை ‘ என்று ஜெயமோகன் இன்னமும் கனவு காண்கிறார். அவர் பழ.அதியமான் புத்தகத்தை உண்மையில் படித்திருந்தால் இப்படிச் சொல்ல மாட்டார். ஏனென்றால் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை நிராகரிக்கும் அத்தனை வாதங்களையும் ஆதாரங்களுடன் மறுக்கிறது. பழ.அதியமான் நூல்.

அதனை, பெரியாரின் மதம் சார்ந்த ஆவணங்களில் இருந்து அல்லாமல் அதற்கு வெளியில் உள்ள ஆதாரங்களை வைத்து உடைக்கிறார் அதியமான். கேரள ஆவணக்காப்பகம், காவல்துறை அறிக்கைகள், கேரள இதழ்கள், இப்போராட்டத்தில் பங்கெடுத்த கேரளியர் பதிவுகள், அந்தக் காலக்கட்டத்து சுதேசமித்திரன், நவசக்தி, நாடார்குலமித்திரன், குமரன் மற்றும் ஆங்கில இந்து நாளிதழ்களை வைத்து எழுதுகிறார் அதியமான். பொத்தாம் பொதுவாக வீண்முரசாக இல்லாமல்!

பெரியார் களத்துக்கு வந்தபிறகு போராட்டத்தை நடத்தினார் என்பதையும், இறுதிப்பேச்சு காலக்கட்டத்தில் வைக்கத்தில் பெரியார் இருந்ததும், வெற்றிவிழாவில் பேசியதும், வெற்றி விழாவுக்குப் பிறகும் அரசு ஆவணங்களில் பெரியார் பெயர் இருப்பதும் அதியமானின் அரிய கண்டுபிடிப்புகள். வர்க்கலையில் காந்தியுடன் பெரியார் இருந்ததை திருவனந்தபுரம் காவல் ஆணையர் அறிக்கையில் இருந்து ஆதாரம் தருகிறார். நாராயணகுருவைக் காந்தி சந்தித்தபோது பெரியார் உடனிருந்ததையும் அதே ஆதாரம் சொல்கிறது. பெரியார் மீதான அனைத்துத் தடையாணை களையும் மன்னர் திரும்பப் பெற்றுள்ளார் 1925 ஆகஸ்ட் 7 இல். அதற்கு காந்தி நன்றி சொல்லி இருக்கிறார். இறுதிக்கட்ட பேச்சுவார்தைக்குப் பிறகு, அனை வருக்கும் பொதுப் பாதையாக திறந்து விட்ட பிறகு தேவஸ்வம் ஆணையர், திருவிதாங்கூர் திவானுக்கு அனுப்பிய கடிதத்தில்

‘இ.ராமஸ்வாமி நாயக்கர்’ என்ற பெயர் இருப்பதை அதியமான் கண்டுபிடித்துக் கொண்டு வந்து போட்டுள்ளார்.

வைக்கம் போராட்ட காலமான 604 நாட்களும் பெரியாரின் தொடர் பங்களிப்பை கொட்டும் போதுதான் அதியமானின் உழைப்பு தெரிகிறது. தன்னை அறிஞராகக் காட்டிக்கொள்ள, ஆய்வாளராகக் காட்டிக்கொள்ள அவர் இந்தப் புத்தகத்தை எழுதவில்லை. பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என்று நிரூபிக்கத் துடித்த துடிப்பைத்தான் ஒவ்வொரு பக்கமும் பார்க்க முடிகிறது.

இவை அனைத்துக்கும் மேலாகடி.கே.மாதவனின் பதிவுகளில் பெரியார் பெயர் இல்லை என்பாரே ஜெயமோகன்? என்ன பதில் சொல்லலாம். பாவம் டி.கே.மாதவன். அவருக்கு, ஒரு எழுத்தாளன் செத்த ஒரே நாளில் அவருக்கான இரங்கல் நூலை 100 பக்கத்துக்கு எழுதும் வித்தையோ வேகமோ இல்லை. பாவம் டி.கே.மாதவன், வைக்கம் போராட்டம் நடந்த அய்ந்து ஆண்டுகளில் காசநோய் காரணமாக 44 வயதில் இறந்து போனார். அவர் எழுதவில்லை என்றால், பெரியார் பங்கெடுக்கவில்லை என்று பொருளா? இது என்ன வகை வரலாற்று அறம்?

a11.jpg

போகிற போக்கில் பொய்கள்!

வைக்கம் பற்றி எழுதும் போது போகிற போக்கில் பல பொய்களையும் அவதூறுகளையும் தூக்கி வீசுகிறார் ஜெயமோகன். அதில் ஒன்று,

‘ஈவெரா வேறு எப்போதும் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவரல்ல என்பதால் அவருடைய தியாக வாழ்க்கையை இவ்வண்ணம் புனைய வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது’ என்கிறார் ஜெயமோகன். பெரியார் ஏதோ வைக்கம் போராட்டத்தில் மட்டும் தான் சிறை இருந்தது போல எழுதுகிறார். வைக்கத்துக்கு முன்னதாக கள்ளுக்கடை மறியலில் ஒரு மாதம் சிறை ( 1921 நவம்பர்) இருந்தார். வைக்கம் சிறைவாசம் முடிந்த அதே ஆண்டு கதர் பிரச்சாரத்தில் கைதாகி மூன்று மாதம் சென்னை சிறையில் (1924 டிசம்பர்) இருந்தார்.  1927 - 28 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ரயில்வே ஊழியர் போராட்டத்தின் பொருட்டு கைதானார். ‘குடிஅரசு’ வில் எழுதிய ‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழியவேண்டும்‘ என்ற தலையங்கத்துக்காக 1933ஆம் ஆண்டு கைதாகி கோவை, ராஜபுரம் சிறைகளில் இருந்தார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி ஆறு மாத காலம் சிறையில் இருந்தார். 1948 இந்திப்போராட்டத்தில் இரண்டு முறை கைதானார். 1950 பொன்மொழி நூலுக்காக கைதாகி ஒரு வார காலம் சிறையில் இருந்தார். 1956இல் ராமர் படம் எரிப்பு, 1957 சட்ட எரிப்புப் போராட்டங்களில் கைதானார். 1958இல் குத்துவெட்டு பேச்சு வழக்கில் கைதாகி ஆறு மாத காலம் சிறையில் இருந்தார். யூனியன் படம் எரிப்புப் போரில் முன்னதாக கைது செய்யப்பட்டார் 1960இல்

இது எதையும் தெரிந்து கொள்ள முயற்சிக்காத சுயமோகம், ‘வேறு எப்போதும் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவரல்ல’ என்று மறைக்கிறார்.

அந்த வகைப்பட்ட அடுத்த அவதூறுதான், ‘வைக்கம் போராட்டம் முடிந்ததுமே இந்திய நிலம் எங்கும் காந்திய இயக்கம் ஆலய நுழைவை ஆரம்பித்தது. எதிலுமே ஈவெரா கலந்து கொள்ளவில்லை என்பது வரலாற்று உண்மை’ என்பதும். காந்திய இயக்கத்தின் ஆலய நுழைவு அரசியலை இங்கு ஆராயப்போவதில்லை. ஆனால் பெரியார் ஆலய நுழைவே செய்யவில்லையா?

1926இல் சுசீந்திரம் ஆலயப் போராட்டத்தில் பெரியார் பங்கெடுத்தார். அந்தக் காலக்கட்டத்து ‘குடிஅரசு’ இதழ்கள் சுசீந்திரம் போர்வாளாகத் திகழ்ந்தன.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஜே.என்.ராமநாதனும், திருவண்ணாமலை கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி மலைக்கோட்டை, மாயவரம், திருவானைக்காவல் ஆகிய கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதனும், சென்னை திருவல்லிக்கேணி கோவிலில் எஸ்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்த வரலாறுகளை ஜெயமோகன் அறிய மாட்டார்.

ஏனென்றால் அவரது வரலாற்றறிவு பள்ளிக்கூடத்தோடு நின்றுவிட்டது. நாம் என்ன செய்ய முடியும்?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்


 
Save
Share24
 

வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

அன்புள்ள ஜெ,

உங்களின் வைக்கமும் காந்தியும் 1/2 வாசித்திருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு சிலரிடம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் “தமிழ் இந்து” வில் இந்த கட்டுரை வந்து சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பழ அதியமான்

இனிமேல் எதையும் சொல்ல முடியாது, சொல்லி வைத்ததுபோல் மூர்க்கமாக இந்த சுட்டியைக் காட்டுவார்கள்.

நாராயண குருவின் பெயர் எப்படி இந்த கட்டுரையில் மறைக்கப்பட்டுள்ளது என்று கவனித்தீர்களா. அதேபோல் காந்தியும் இறுதியில் தான் வருகிறார்!!,.

“போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். “

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா

***

அன்புள்ள பழனிவேல்,

நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம். எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்கு வசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி கும்பிடுகிறார்கள். அதில் பகுத்தறிவுக்கோ தர்க்கத்துக்கோ இடமில்லை. விமர்சனநோக்கு என்பதே இல்லை. போற்றிப் பாடடி ஒருபக்கம், கூடவே மொட்டை வசையும் திரிபுகளும் மறுபக்கம்.

திரு.பழ அதியமானின் நூலை, அதைப்பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். மதநூல்கள் முழுக்க முழுக்க அந்த மத நம்பிக்கையாளர்களை நோக்கி திரும்பி நின்று பேசுபவை. அவர்களுக்கு ‘சமாதானம்’ சொல்லும் நோக்கம் கொண்டவை. இதுவும் அப்படியே. இதை ஓர் ஆய்வுநூல் என்று ஆய்வு என்றால் என்ன என்று அறிந்த, ஆய்வில் நேர்மை என ஒன்று உண்டு என்று உணர்ந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவரிடமிருந்து என்றும் அப்படி ஒரு நூல் வரக்கூடும் என நான் எண்ணவுமில்லை.

இத்தகைய நூல்களின் அடிப்படை விதி ஒன்றே. முதலில் எதிர்த்தரப்பை குறுக்குவது, அதை முத்திரையிட்டு தங்கள் வழக்கமான எதிரிகளின் பட்டியலில் சேர்ப்பது. அதன்பின் கைவசமுள்ள எல்லா எதிர்வசனங்களையும் அதன்மேல் பொழிவது. அந்தக் குறுக்கலைத்தான் தப்பாமல் செய்திருக்கிறார் பழ.அதியமான்.“பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?” என எவரோ கேட்பதாக திரித்து அதற்கு மாய்ந்து மாய்ந்து பதில் எழுதியிருக்கிறார். இதற்கு முன்னர் எழுதியவர்களும் இதையே எழுதியிருக்கிறார்கள்.

நான் நூறுமுறை சொன்னதையே திரும்பச் சொல்கிறேன்.

அ. ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தை ‘தொடங்கியதாக’ தமிழ்நாட்டு பாடநூல்கள் உட்பட பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது [ Periyar launched Vaikkom struggle ] .

ஆ. வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈவேரா உரிமைகளை ‘வாங்கிக் கொடுத்ததாக’ பலமுறை எழுதப்பட்டுள்ளது. அத்தகைய சுவரொட்டிகளைக் காணாதவர்களே அரிது.

இ. வைக்கத்தில் போராட்டத்தை தலைமை தாங்க தலைவர்கள் இல்லை என்பதனால் ஈவேரா அழைக்கப்பட்டதாக அவரே சொன்னார் என மேற்கோள்காட்டி பலமுறை சொல்லப்பட்டுள்ளது

இவை ஈவேரா அவர்களின் பங்களிப்பை மிகையாக்கிப் பரப்பப்படும் பொய்கள். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக ஈ.வே.ரா எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை, கீழ்வெண்மணி போன்று தலித் மக்களை ஒருங்கிணைத்து இடதுசாரிகள் போராடியபோது எதிராகவே செயல்பட்டார் என்னும் வரலாற்று உண்மையை மழுப்பும்பொருட்டு சொல்லப்பட்ட வெற்றுப்பிரச்சாரம்.

ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார், போராடினார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை – நடத்தவில்லை – முடிக்கவில்லை. இதையே நான் சொன்னேன். இப்போதும் இதுவே உண்மை. இது இன்றுவரை எந்த பெரியாரியராலும் மறுக்கப்படவில்லை. மறுக்கவும் முடியாது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின், நான் இப்படி ஒரு விவாதத்தை கிளப்பிய பின், பழ.அதியமான் போன்ற ஒருவர் வைக்கம் போராட்டம் முன்னரே தொடங்கப்பட்டு விட்டிருந்தது என்று ஒத்துக்கொண்டு டி.கே.மாதவன் பெயரைச் சொல்ல நேர்ந்ததை ஒரு வெற்றியாக கொள்கிறேன். அதை முடித்து வைத்தவர் காந்தி என்றும் அதில் கேரளத் தலைவர்கள் பலர் பங்குகொண்டனர் என்றும் தமிழகத்தில் இருந்தேகூட ஈ.வே.ராவுக்கு நிகராக , கோவை அய்யாமுத்து போன்றவர்கள் கலந்துகொண்டார்கள் என்றும் இன்று இவர்கள் சொல்ல வருவதும் வெற்றிதான். கோவை அய்யாமுத்து அன்று ஈவேராவை விட முக்கியமான காந்தியத்தலைவர் – சர்வோதயப் பணியாளர். அவருடைய தன்வரலாற்றை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். விடுபட்டுப்போன இன்னொரு பெயர் எம்.வி.நாயுடு.

இவ்வாறு மெட்ராஸ் மாகாண காங்கிரச் சார்பில் இங்கிருந்து சென்றவர்களில் ஒருவர் ஈவேரா. அவரே முதல்வர் என்றோ, இவர்களைவிட ஈவேராவின் பங்களிப்பு சற்றே மேல் என்றோ அவருடைய ஆதரவாளர்கள் சொல்வதில்கூட எனக்கு மாற்றுச்சொல் இல்லை. ஒருவரின் ஆதரவாளர்கள் அவருடைய பங்களிப்பைச் சற்று மிகைப்படுத்துவார்கள். ஈவேரா சிறைசென்றார் என்பது உண்மை, ஆனால் அவரை விட நெடுங்காலம் சிறையிலிருந்தவர்கல் பலர் உண்டு. சொல்லப்போனால் முன்னணிப்போராளிகள் சிறைசென்றமையால்தான் மெட்ராஸ் மாகாணத்தவர் செல்ல நேர்ந்தது.

ஈவேரா வேறு எப்போதும் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவரல்ல என்பதனால் அவருடைய ‘தியாகவாழ்க்கையை’ இவ்வண்ணம் புனையவேண்டிய தேவைப்  அவர்களுக்கு உள்ளது.ஆனால் மீண்டும் சொல்கிறேன், அவர் அப்போராட்டத்தை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அவர் அதில் பங்கெடுத்தார். அதுவும் அதன் நடுப்பகுதியில் மட்டும்

வைக்கம் போராட்டம் அது பல படிகள் கொண்ட ஒரு பெரிய அறிவியக்கம் – சமூக இயக்கம். கேரளவரலாற்றின் ஒரு திருப்புமுனை பகுதி அது. பல தலைவர்கள் பங்கெடுத்தது, பலதலைவர்களை உருவாக்கியது. கேரள கம்யூனிஸ்டு இயக்கத்தின் தொடக்கமே கூட அதிலிருந்துதான். அதில் பங்கெடுக்கையில் ஈவேரா ஒன்றும் பெருந்தலைவரும் அல்ல. ஆனால் அதை தங்கள் தலைவருக்கு போற்றிப் பாடுவதற்காக பெரியாரியர்கள் கொச்சைப்படுத்தினர். இனிமேல் குறைந்தபட்சம் மேலே சொன்ன மூன்று பொய்களைச் சொல்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வார்கள் என எண்ணுகிறேன்

வைக்கம் போராட்டத்தைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதில் ஒரு தகவல்கூட இன்னமும் மறுக்கப்படவில்லை. நான் பழைய கட்டுரைகளில் ஆதார பூர்வமாக விளக்கமாகச் சொன்னவற்றையே மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்.

* வைக்கம் போராட்டம் ஒரு குறியீட்டுத்தன்மை கொண்டது. ஒரு தலைமுறைக்கு முன்பு, திவான் வேலுப்பிள்ளை காலகட்டத்தில் வைக்கம் ஆலயத்திற்குள் நுழைவதற்கான ஒரு போராட்டம் நடந்து படுகொலையில் முடிந்தது. ஆகவேதான் அதை டி.கே.மாதவன் முன்னெடுத்தார்.

* அவர் நாராயணகுருவின் மாணவர், ஆனால் காங்கிரஸ்காரர். நாராயணகுரு எதிர்ப்பியக்கங்கள் மேல் நம்பிக்கை அற்றவர். ஆகவே டி.கே.மாதவனின் வைக்கம் நுழைவுப்போராட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

* டி.கே.மாதவன் முதலில் அன்னிபெசண்டின் உதவியை நாடினார். ஆனால் அன்னிபெசண்டால் ஒரு பெரிய இயக்கத்தை வழிநடத்த முடியாது என உணர்ந்தார்.

* அதன் பின்னரே டி.கே.மாதவன் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டார். ஆனால் காந்தி அந்தப் போராட்டத்தால் இந்துக்களிடையே பிளவு உருவாகக்கூடும், அது சுதந்திரப்போருக்கு எதிரானதாக முடியலாம் என அஞ்சினார். ஆகவே ஆதரவு அளிக்கவில்லை.

* டி.கே.மாதவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவே காந்தி அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். ஆனால் அது உள்ளூர் மக்களால் மட்டும் நடத்தப்படவேண்டும் என்றும், போராட்டத்தின் எல்லா நிலைகளிலும் அதில் உயர்சாதியினரும் கலந்துகொண்டு சிறை செல்லவேண்டும் என்றும் அது வன்முறையற்ற அகிம்சைப் போராட்டமாக நீடிக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அதை ஏற்று டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார்.

* காந்தியின் நெறிப்படியே போராட்டம் நடைபெற்றது. அப்போராட்ட வடிவை வகுத்தவர் காந்திதான். ஒவ்வொருநாளும் ஒரு சிறுகுழு தடைமீறி சிறைசெல்வதே அந்த வழிமுறை. அதில் ஈழவர், தலித், உயர்சாதினர் அடங்கியிருப்பார்கள்

* காந்தியின் போராட்ட வழிமுறை என்பது மெல்ல மெல்ல மக்களின் சாதி சார்ந்த கருத்துநிலையை மாற்றுவதும் அனைவரையும் ஆதரவாளர்களாக ஆக்குவதும்தான். வைக்கம் போராட்டம் அதன் மாபெரும் பிரச்சார வல்லமையால் தான் உண்மையான வெற்றியை அடைந்தது. சாதி, மதம் பற்றிய கேரளத்தின் எண்ணங்களை அது மாற்றியது

* வைக்கம் போராட்டத்தை ஒட்டித்தான் கேரளத்தின் இரு நாளிதழ்கள் தொடங்கப்பட்டன. பின்னாளில் தலைவர்களாக எழுந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன் போன்ற பலர் மைய அரசியலுக்கு வந்தனர். அது கேரளம்தழுவி நடந்த ஒரு மிகப்பெரிய அறிவியக்கம். அதை நடத்தியது காங்கிரஸ். அதன் பெருந்தலைவர்களான கே.பி.கேசவமேனன், கேளப்பன் போன்றவர்கள். அது ஒரு ஊரில் நடந்த கிளர்ச்சி அல்ல.

* வைக்கம் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. பஞ்சாபிலிருந்தும் வங்கத்திலிருந்தும் எல்லாம் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர். பிரம்மசமாஜம் ஆரியசமாஜம் போன்ற அமைப்புகள் கலந்து கொண்டன.

* தமிழகத்திலிருந்து, காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஈவேரா. அவருடைய பங்களிப்பு அவ்வகையிலேயே. அது அவருடைய அன்றைய இளமைவீச்சால் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம். ஆனால் அத்தகைய பல பங்களிப்புகள் அதில் உள்ளன. அப்படி பங்களிப்பாற்றிய பலர் ஈவேராவை விட முக்கியமானவர்கள்.

* போராட்டத்தின் பொருட்டு காந்தி இரண்டு முறை வைக்கம் வந்திருக்கிறார். ஆலயநுழைவை எதிர்த்த இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாட்டை நேரில் கண்டு பேசமுயன்றிருக்கிறார். நாராயணகுருவை கண்டு ஆதரவு கோரியிருக்கிறார். அய்யன்காளியையும் சந்தித்திருக்கிறார்

.* போராட்டம் இரண்டு புதிய நுழைவுகளால்தான் அறுதிவெற்றியை அடைந்தது. ஒன்று, நாராயணகுரு நேரடியாகவே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களம் வந்தது. இரண்டு உயர்சாதியினரான நாயர்களின் அமைப்பாகிய நாயர் சர்வீஸ் சொசைட்டி நிறுவனரான மன்னத்து பத்மநாபன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கியது. அன்றும் இன்றும் கேரளத்தின் பிரம்மாண்டமான மக்களியக்கங்கள் இவை. பல லட்சம் உறுப்பினர்கள் கொண்டவை, அமைப்பாக திரட்டப்பட்டவை. இவையிரண்டும் ஆதரவளித்ததுமே கிட்டத்தட்ட போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களை போராட அழைத்து வந்ததே காந்திய அமைப்புக்களின் வெற்றி

* எந்தப் போராட்டத்தையும் போல வைக்கமும் ஒரு சமரசத்துடன்தான் முடிவுக்கு வந்தது. அது காந்திய வழி. வைக்கம் ஆலயத்தின் மையக் கோபுர வாசல் வழியாக பிறசாதியினர் நுழையமாட்டார்கள் என ஒப்புக்கொண்டார்கள் போராட்டக்காரர்கள். ஆனால் ஓராண்டுக்குள் அந்த உரிமையும் போராடிப் பெறப்பட்டது

* வைக்கம் போராட்டம் தொடர்ந்து காந்தியால் வழிநடத்தப்பட்டது. அத்தனை போராளிகளுடனும் காந்தி தொடர்டபில் இருந்தார். திருவிதாங்கூர் அரசரைச் சந்தித்தார். திருவிதாங்கூர் போலீஸ் தலைவர் காப்டன் டபிள்யூ. எச். பிட் அவர்களுடன் காந்தி நேரடியாக நடத்திய உரையாடல் போராட்டத்தின் வெற்றிக்கு ஒருகாரணம். பிட்-டின் மனமாற்றம் திருவிதாங்கூர் அரசவர்க்கத்தை பணிய வைத்தது

*. பேச்சுவார்த்தை காந்திய வழிகாட்டு நெறிப்படி நடந்தது. காந்தியின் ஏற்பின்படி தேவதாஸ் காந்தி கையெழுத்திட மகாராஜாவின் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது.

* வைக்கம் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். இங்கே காங்கிரஸ் கட்சியில் அவருக்கிருந்த பூசல்கள் அவரை இங்கே கொண்டுவந்தன. தன் குருநாதராகிய வரதராஜுலு நாயுடுவுடன் அவர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். வைக்கம் போராட்டத்தில் அவர் அதன்பின் ஆர்வம் காட்டவில்லை.

* .வைக்கம் போராட்டம் ஒரு மாதிரி முயற்சி. .அது முடிந்த சில மாதங்களிலேயே கேரளம் முழுக்க ஆலய நுழைவுப் போராட்டங்கள் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டன. திருவார்ப்பு, குருவாயூர் போராட்டங்கள் தொடங்கி வெற்றிபெற்றன. தமிழ்நாட்டிலும் இந்தியா முழுக்கவும் ஆலயநுழைவு போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்தது.

ஈவேரா ஒரு தனிமனிதர், அவ்வாறே அவர் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய பங்களிப்பு முக்கியமானதே. ஆனால் அது ஒரு தனிநபர் செயல்பாட்டால் நிகழ்ந்த போராட்டம் அல்ல. அது பல ஆண்டுகள் நீடித்த ஒரு இயக்கம். அதை அமைப்புகளே நடத்தமுடியும். காங்கிரஸும் பின்னர் நாராயணகுருவின் அமைப்பும் கடைசியாக என்.எஸ்.எஸுமே அதை நடத்தின. அவர்களே வெற்றியை ஈட்டினர்.

இந்த தெள்ளத்தெளிவான வரலாற்றை இவர்கள் நமக்கு எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். ஈவேரா வைக்கத்தில் போராடினாரா, அனல்பறக்க பேசினாரா, சிறை சென்றாரா, அவருடைய தியாகம் போற்றப்படுகிறதா என்றல்ல கேள்வி. அது அவர் பங்குகொண்ட போராட்டம், ஆனால் அவர் தொடங்கிய, நடத்திய, வென்ற போராட்டம் அல்ல. அதன் நாயகர்கள் பிறர். அதில் பங்குகொண்டமையால் இன்றும் ஈவேரா மதிக்கப்படுகிறார். ஆனால் அதை அவருடைய போராட்டம் என திரிப்பது அநீதி. அற்பப் பிரச்சாரம். அதையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.மீண்டும் மீண்டும்.

இன்று வேறுவழியில்லாமல் வைக்கம் போராட்டம் முன்னரே தொடங்கப்பட்டு நடந்தது, அதில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் ஈவேரா, அதை வெற்றிபெறச் செய்தவர்கள் வேறுதலைவர்கள் என்பதை பெரியாரியர்கள் மழுப்பி மழுப்பி ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அடுத்த திரிபுகளை சந்தடி சாக்கில் செய்கிறார்கள். பழ.அதியமானே அதை செய்து வழிகாட்டுகிறார்.

போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஈழவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சிகள் தொடங்கின. டி.கே.குஞ்ஞுராமன் என்னும் ஈழவர் தலைவர் ஒட்டுமொத்த மதமாற்றம் என்னும் எண்ணத்தை முன்வைத்ததை ஒட்டி அந்த முயற்சிகள் தொடங்கின. சிலர் சீக்கியர்களாகக்கூட மதம் மாறினர். இந்த மதமாற்றம் வைக்கம் போராட்டத்தை திசை திருப்பியது. அது இந்துமதத்திற்கு எதிராக பிற மதத்தவர் செய்யும் தாக்குதல் என போராட்ட எதிர்ப்பாளர்களால் விளக்கப்பட்டது. வைக்கம் ஆலயத்தில் நுழைய கிறித்தவர்கள் முயல்கிறார்கள் என்று கடுமையான எதிர்ப்பிரச்சாரம் நிகழ்ந்தது.

அதை முறியடிக்க காந்தி ஓர் ஆணையை இட்டார். வைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க இந்துக்களால் நடத்தப்படவேண்டும் என்றார். ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் களத்திலிருந்து விலகவேண்டும் என்றார். ஆனால் ஜார்ஜ் ஜோசப்பும் அவருடைய ஆதரவாளராக திகழ்ந்த ஈவேராவும் அதை எதிர்த்தனர். ஆனால் காங்கிரஸ் காந்தியை ஏற்றுக்கொண்டது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டமையால்தான் இந்துக்கள் பெருவாரியாக வைக்கம் போராட்டத்தை ஆதரித்தனர். என்.எஸ்.எஸ் களத்திற்கு வந்தது.

வைக்கம்போராட்டம் முதன்மையாக வைக்கத்தவரால் நடத்தப்படவேண்டும் என்று காந்தி ஆரம்பம் முதலே சொல்லிவந்தார். அதன் வெற்றி தோல்விகளை வைத்தே பிற ஊர்களில் ஆலயப்பிரவேசம் பற்றி அவர் முடிவெடுக்க எண்ணினார். ஆகவே கூடுமானவரை அயலவர் கலந்துகொள்ளக்கூடாது என்பது அவர் எண்ணம். தான் ஆலயவழிபாட்டாளர் அல்ல என்பதனால் வைக்கம் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்று அவர் சொன்னார். வைக்கம் போராட்டம் வென்றபின் திருவார்ப்பிலும் குருவாயூரிலும் தொடங்கிய அகிம்சைப் போரிலும் முதன்மையாக அந்த ஊர் மக்களே கலந்துகொள்ளவேண்டும் என அவர் ஆணையிட்டார். வெளியே இருந்து செல்பவர்கள் ஒருங்கிணைப்பு, பிரச்சாரம் ஆகியவற்றை மட்டுமே செய்யவேண்டும் என்றார். அது வைக்கத்தில் முழுமையாக நிறைவேறவில்லை.

இவ்விரு செய்திகளையும் மழுப்பி திரித்து காந்தி வைக்கம் போராட்டத்தை ஒடுக்க முனைந்தார், தவிர்க்கப் பார்த்தார், ஈவேரா துணிந்து நின்றார் என்னும் வகையில் பொய்யைக் கக்கும் பெரியாரியப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். வைக்கம் போராட்டம் முடிந்ததுமே இந்தியநிலம் எங்கும் காந்திய இயக்கம் ஆலய நுழைவை ஆரம்பித்தது, எதிலுமே ஈவேரா கலந்து கொள்ளவில்லை என்பது வரலாற்று உண்மை. இவர்களுக்கு உண்மை என்பதன் மேல் ஏதாவது மதிப்பிருக்கிறதா?

ஆர்வமூட்டும் ஒன்றுண்டு. வைக்கம் போராட்டத்திற்காக கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் வந்த காந்தியை காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சென்று பார்த்து ஆலயப் பிரவேசத்தை முன்னெடுத்து இந்து மதத்தை அழித்துவிடவேண்டாம் என்று மன்றாடினார். காந்தி அவரை பொருட்படுத்தவில்லை. அவரிடம் தீண்டாமையை ஆதரிக்கும் சுருதிகள் எவை என்று கேட்டார். அதற்கு சந்திரசேகரரால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி அன்று கோவையில் நிகழ்ந்த கூட்டத்தில் பெயர் சொல்லாமல் போகிற போக்கில் அச்சந்திப்பைப்பற்றிக் குறிப்பிடுகிறார்

ஆனால் ஐம்பதாண்டுகளுக்குப்பின் காந்திக்கு சந்திரசேகரர் ‘ஆசி வழங்கினார்’ என்று ஒரு பொய் கட்டமைக்கப்பட்டது. டி.எம்.பி. மகாதேவன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அந்தப்பொய் பேசிப்பேசி நிலைநிறுத்தப்பட்டது. நான் உண்மையில் என்ன நடந்தது என்று விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது ஈவேரா பற்றிய உண்மைகளை எப்படி பெரியாரியர்கள் எதிர்கொள்கிறார்களோ அதேபோலத்தான் வைதிகப் பிராமணர்களும் எதிர்கொண்டனர். எந்த வேறுபாடும் இல்லை. செய்திகளை திரிப்பது, அரைகுறை தகவல்கள். எதிர்தரப்பை வசைபாடி திரித்து முத்திரை குத்தி தன் தரப்பை நிறுவும் உத்திகள்.எந்த தர்க்கத்துக்கும் உடன்படாத கண்மூடித்தனமான நம்பிக்கை.

மதநம்பிக்கைகளை போலவே ஒரு நம்பிக்கைதான் பெரியாரியர்களுடையது. இன்னும்பெரிய மூடநம்பிக்கை. அதனுடன் விவாதிக்கவே இயலாது. இதையும் கொஞ்சமேனும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காகச் சொல்லி வைக்கிறேன்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வைக்கம் போராட்டம்’ புத்தகம் பற்றி ஜெயமோகன் விமர்சனம்... எழுத்தாளர்கள் ராஜன் குறை, பெருமாள் முருகன் கருத்து...!

 
’வைக்கம் போராட்டம்’ புத்தகம் பற்றி ஜெயமோகன் விமர்சனம்... எழுத்தாளர்கள் ராஜன் குறை, பெருமாள் முருகன் கருத்து...!
ராஜன் குறை | பெருமாள் முருகன் | ஜெயமோகன்
 
  • NEWS18
  • LAST UPDATED: JANUARY 17, 2020, 3:33 PM IST
  • SHARE THIS:
பழ. அதியமான் எழுதிய காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட வைக்கம் போராட்டம் புத்தகத்தை நேர்மை இல்லாமல் எழுதப்பட்ட நூல் என்று எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயமோகன் கருத்துக்கு எழுத்தாளர் ராஜன் குறை பதிலளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவரை "லைசென்ஸ்டு டு கில்" என்று குறிப்பிடுவார்கள். கொல்வதற்கான லைசன்ஸ் உள்ளவர்.

தமிழ் சிறுபத்திரிகைகள் என்ற இலக்கிய, அறிவுப் புலத்தில் இலக்கியவாதிகளுக்கு ஒரு லைசன்ஸ் உண்டு. அவர்கள் எதைப்பற்றி வேண்டுமானால் எழுதலாம், என்ன வேண்டுமானால் எழுதலாம். யாரை வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் தூற்றலாம். அவர்கள் இலக்கியவாதிகள் என்பதால் அவையெல்லாம் பொருட்படுத்தப்படாது.


பழ. அதியமான் வைக்கம் போராட்டம் குறித்து தரவுகளை திரட்டி விரிவான நூலை எழுதியுள்ளார். அதியமானின் எழுத்தை அறிந்தவர்கள் நூல் நிச்சயம் தரவுகள் அடிப்படையில் அமைந்திருக்கும் என்று நம்பலாம். காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

ஜெயமோகன் அந்த நூலை "கழைக்கூத்து" என்றும், ஆய்வு நேர்மை இல்லாமல் எழுதப்பட்ட நூல் என்றும் கூறியுள்ளார். இது கடுமையான வசை மற்றும் தூற்றுதல்.

இப்போது நானும் ஒரு ஆய்வாளன் என்பதால் உடனே அதியமானின் நூலை வாசித்து, ஜெயமோகனின் முந்தைய கட்டுரைகளை மீண்டும் வாசித்து விரிவாக ஜெயமோகனுக்கு ஒரு கண்டனம் எழுதலாம். ஐந்து அல்லது ஆறு நாட்கள் செலவாகும்.ஆனால் என்னுடைய இலக்கியவாதிகளான நண்பர்கள் சிறிதும் கவலைப் பட மாட்டார்கள். ஜெயமோகனிடம் போற்றிப் பாராட்ட அவர்களுக்கு இலக்கிய சமாசாரங்கள் நிறைய இருப்பதால் அவர் யாரைத் தூற்றினால் இவர்களுக்கு என்ன?

ஏற்கனவே எம்.எஸ்.எஸ்.பாண்டியனையும், எஸ்.வி. ராஜதுரையையும் தூற்றியபோது என்ன செய்து விட்டார்கள்? அவர்கள் அந்நிய நிதி தூண்டுதலால் எழுதுவதாக சொன்னபோது என்ன கேள்வி எழுப்பினார்கள்?

இதைப் படித்த உடனே அதியமான் நூலை படிக்காமல் நீங்கள் எப்படி ஜெயமோகனை கண்டிக்கலாம் என்று பின்னூட்டப் புலவர்கள் கேட்பார்கள்.

சென்ற மாதம்தான் பாபர் மசூதி விஷயத்தில் ஜெயமோகன் கேவலமான ஒரு பொய்யை, அங்கு ராமர் கோயில் இருந்து இடிக்கப்பட்டது "வரலாற்று உண்மை" என்று அபாண்டமாக எழுதியதை கண்டித்து "ஜெயமோகனின் நயவஞ்சகம்" என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதை வெளியிடச் சொல்லி யாரையும் சங்கடப்படுத்தாமல் முகநூலிலே வெளியிட்டேன்.

இவ்வளவு முக்கியமான விஷயத்தில் அபாண்டமாக ஜெயமோகன் எழுதியதை கண்டிக்க இலக்கியவாதிகள் யாரும் முன்வரவில்லை என்பதையும் கவனிக்கிறேன்.

புனைவுகளைத் தவிர ஒரு வரியும் எழுதாத கோணங்கி போன்றவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் நான் இலக்கியவாதி மட்டுமல்ல, சிந்திக்கிறேன், சமூகத்திற்காக பேசுகிறேன் என்பவர்கள் எல்லாம் பொதுக்களத்தில் தனிநபர்களை இலக்கியவாதிகள் அவதூறு செய்யும்போது மெளனமாகி விடுவார்கள். வசதி.

தமிழ் இலக்கியவாதிகள் ஜேம்ஸ்பாண்டு போலத்தான். அவர்கள் யாரை வேண்டுமானால், எப்படி வேண்டுமானால் தூற்றலாம். அவர்கள்தான் படைப்பாளிகள் ஆயிற்றே. இலக்கியத்தை காப்பாற்றுகிறார்களே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜெயமோகன் கருத்துக்கு எழுத்தாளர் பெருமாள் முருகனும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளர். “சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய மிக முக்கியமான நூல் 'வைக்கம் போராட்டம்' (பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம்). பல்லாண்டு தொடர் உழைப்பின் விளைவு இந்நூல். 646 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு, வரலாற்று நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

புத்தகம் வெளியான சில நாட்களுக்குள் முழுமையாக வாசித்து முடித்திருக்கிறார் ஜெயமோகன். எழுதுவதில் மட்டுமல்ல, வாசிப்பிலும் ராட்சஷன்தான். ஆனால் நூலை வாசித்தமைக்கான சிறுஅறிகுறி ஏதுமற்றுக் கட்டுரை எழுதும் திறமை பெற்றிருக்கிறார். வாழ்க.” என்று அவர் கூறியுள்ளார்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard