New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?


Guru

Status: Offline
Posts: 24769
Date:
வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?
Permalink  
 


வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?

periyar-in-vaikkam

பழ.அதியமான்

வைக்கம் என்றதும் தமிழ்நாட்டினருக்கு மனத்தில் முதலில் விரியும் உருவமும் பெயரும் பெரியாருடையதுதான். வைக்கம் என்பது கேரளத்தில் பெரும்பான்மையருக்கு வைக்கத்தப்பன் குடிகொண்டுள்ள ஓர் ஊர். கொஞ்சம் வரலாறு தெரிந்தவர்களிடம் கேட்டால் சத்தியாகிரகம் நடைபெற்ற ஓரிடம். இன்னும் சமூக உணர்வாளர்களிடம் வினவினால் ஈழவர் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லான போராட்டம் நடந்த இடம் என்பர். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் என்றால் சமூக நீதியின் அடையாளம். அதை அடையப் போராடிய வீரர் பெரியார் என்பதாகப் பதில் விரிவடையும். “1924-25-ல் வைக்கம் போராட்டம் நிகழ்ந்த தருணத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர் என்று எழுதினேன். அவருக்கு அது ஒரு பட்டப்பெயராகவே பிற்காலத்தில் ஆகிவிட்டது’ என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.

 

எப்படித் தொடங்கியது போராட்டம்?

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் பல்லாண்டு முன்முயற்சியில் கிளர்ந்த இந்த வைக்கம் போராட்டத்தை உற்சவ மூர்த்தியாகவும் மூளையாகவும் முறையே கேரள காங்கிரஸ் தலைவர்கள் கே.பி.கேசவ மேனனும் ஜார்ஜ் ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுப் பெரியார், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி போன்றோர் நடத்துநராகப் போராட்டத்தைச் செயல்படுத்த, ஆலோசகரான காந்தி நிறைவில் வந்து முடித்து வைத்தார் எனச் சுருக்கமாக வைக்கம் போராட்டச் சித்திரத்தை வரையலாம். இடையில் மன்னத்து பத்மநாபன் போன்றோர் பெரும் துணைவலியாக அமைந்தனர்.

1924 மார்ச் 30 அன்று கேரள காங்கிரஸ் ஆதரவில் தொடங்கிய போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டுத் தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தும் தலைவர்களைக் கேட்டு காந்தி, ராஜாஜிக்கும், அவரையே வரும்படி வேண்டி பெரியாருக்கும் ஜார்ஜ் ஜோசப் எழுதினார். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெரியாரோ கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார். தான் கட்டாயம் வந்தே தீர வேண்டுமா என்று இரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே பெரியார் கிளம்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அந்தஸ்திலேயே சென்றமையால், தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ராஜாஜியைப் பார்க்கச் சொல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். வைக்கம் சென்ற 13 ஏப்ரல் 1924 முதல் அவர் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ந்த 29 நவம்பர் 1925 வரையான காலத்தில் பெரியார் போராட்டத்துக்குப் பங்களித்தார்.

எப்படி நடந்தது போராட்டம்?

தடைசெய்யப்பட்ட சாலைகளின் தடுக்கப்பட்ட இடங்களில் தினமும் குறைந்தது மூன்று பேர் சத்தியாகிரகம் செய்வர். 604 நாள் போராட்டம் நிகழ்ந்தது. பல நாள் பெரியார் தலைமை தாங்கினார். போலீஸாரின் தடியடியும் வாயடியும் குறைவின்றி நிகழ்ந்தன. வைதிகர் ஏற்பாடு செய்த அடியாட்களின் அக்கிரமங்களுக்கும் குறைவில்லை. சத்தியாகிரகிகளின் கண்ணில் சுண்ணாம்பைப் பூசிய சம்பவங்களும் நிகழ்ந்தன. மக்கள் ஆதரவைத் திரட்ட வைக்கத்தைச் சுற்றிலும் கிராமங்களிலும் சேர்த்தலை, வர்க்கலை, கோட்டயம் போன்ற நகரங்களிலெல்லாம் ஓயாமல் பிரச்சாரம் செய்தார் பெரியார். தெற்கே திருவனந்தபுரம், நாகர்கோவில் வரை அவரது பிரச்சாரப் பயணம் நீண்டது. மக்களிடமும் வியாபாரிகளிடமும் நிதி வசூலித்தார்.

வைக்கம் சத்தியாகிரகத்தை அகில இந்திய இயக்கமாக்கக் கேரளத் தலைவர்கள் கோரியபோது காந்தி இணங்கவில்லை. இயக்கம் பலவீனமாகிறதே என்று அவர்கள் வற்புறுத்தியபோது அதைச் சாகவிடாமல் சென்னை மாகாணத்தவர் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார். எனவே, பெரியார் உட்பட தமிழ்நாட்டுத் தலைவர், தொண்டர்களின் பங்களிப்புக்கு காந்தியின் பொது அனுமதி இருந்தது எனக் கருதலாம். இத்தகைய வெளியார் உதவியின் இன்றியமையாமையை காந்தியை விடவும் சமஸ்தான ரெசிடெண்ட் சி.டபிள்யூ.இ. காட்டன் சரியாக உணர்ந்திருந்தார்: “சாலையை அனைவருக்குமாகத் திறப்பது என்ற பிரச்சினை உள்ளுர் சம்பந்தப்பட்டதாகவே இருப்பினும், வெளியிலிருந்து மட்டும் இதற்கு உதவி வராதிருந்தால் உண்மையில் இந்த இயக்கம் எப்போதோ பிசுபிசுத்துப்போயிருக்கும்” என்று 21 ஏப்ரல் 1924 அன்றைய குறிப்பில் அவர் சொல்கிறார்.

பிந்நாளில் 1980-களில் வைக்கம் போராட்டத்தைப் பற்றிய முதல் ஆய்வு நூலை எழுதிய கேரள வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.ரவீந்திரன் “பெரியாரின் வரவினால் இயக்கத்திற்குப் புதிய உயிர் கிடைத்தது” என்று பதிந்துள்ளார். மிகச் சமீபத்தில், காந்தியின் அகிம்சை தொடர்பில் வைக்கம் போராட்டத்தை ஆய்வுசெய்து அமெரிக்க ஆய்வாளர் மேரி எலிசபெத் கிங் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு கேரளப் பேராசிரியர் கே.கே.குசுமான் அளித்த நேர்முகத்தில் “ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக இந்தியா முழுவதும் அறிமுகமாகியிருந்த பெரியார் தன் வெடிப்புறப் பேசும் திறனால் இக்கட்டான நேரத்தில் போராட்டத்தை வளர்த்தெடுத்தார்” என்று விவரித்துள்ளார்.

என்ன செய்தார் பெரியார்?

அரசினரும் கேரளரும் மெச்சும்படியாக வைக்கத்தில் பெரியார் என்னதான் செய்தார்? மக்கள் ஆதரவைத் திரட்டும் பிரச்சாரமே அவரது முதன்மையான பணி. “நாடு என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா? நாட்டை பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்துவிட்ட பிறகு, நாடே கோயில் சொத்துதானே!” என்று மன்னரைப் பார்த்துப் பேசினார் பெரியார். மன்னர் திருமனசைப் பாராட்டலாமே தவிர எதிர்த்து பேசுவது கூடாது என்பது திருவாங்கூர் சமஸ்தான சம்பிரதாயம்.

கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் அந்தத் தெருவில் நடக்கலாம். இந்துவான ஈழவர் நடக்க அனுமதி இல்லை. இந்த முரண் ஏன் என்பது சத்தியாகிரகிகளின் வாதங்களுள் ஒன்று. அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள், அவர்களையும் வேண்டுமானால் தடுத்துவிடுகிறோம் என்று கூறினர். இதைக் கிண்டல் செய்தார் பெரியார். “நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால், மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவைப் பறித்துவிடுகிறோம் என்கிறது” என்றார்.

ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.

தீண்டாமையைக் கண்டித்து இவ்வளவு வேகமாகப் பேசியோர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தலைவர்களான பெரியாரும் கோவை அய்யாமுத்துவும்தான். கிளர்ச்சிக்காரர் அனைவரையும் சிறைப்படுத்த அரசாங்கம் முயன்றது. வைக்கம் வந்த பதினைந்து நாட்களுக்குள் பெரியார் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் தடை போடப்பட்டது. பின்னர், அந்தத் தடை கொல்லம் மாவட்டத்துக்கும் நீண்டது. எந்தத் தடையையும் மதிக்காமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார், சமஸ்தானம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். அரசாங்கம் பொறுக்க முடியாமல் ஒருகட்டத்தில் அவரைக் கைதுசெய்தது. நீதிமன்ற விசாரணையும் வைக்கத்தில் நிகழ்ந்தது. “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை. விசாரணை வெறும் வேஷம். நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது” என்று அறிவித்ததோடு, “சமாதானம் உண்டுபண்ணவே நான் வைக்கத்துக்கு வந்தேன், எவ்விதமான தண்டனை விதித்தாலும் ஏற்கத் தயார்” என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் பெரியார். இதையடுத்து நீதிமன்றம் 22 மே 1924-ல் ஒரு மாத வெறுங்காவல் தண்டனை அளித்தது. ஆறுக்குட்டியில் பெரியார் அத்தண்டனையை அனுபவித்தார்.

அடுத்தடுத்த சிறைத் தண்டனைகள்

சிறையிலிருந்து விடுதலை அடைந்த பெரியார் மீண்டும் நேராக வைக்கம் போனார். ஈரோட்டுக்குச் செல்வார் என்று எதிர்பார்த்த அரசாங்கம், ஏமாற்றமும் கோபமும் அடைந்தது. “கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைவதற்குத் தடை அமலில் இருக்கும்போது அவரை வைக்கத்திற்குள் நுழைய ஏன் அனுமதித்தீர்கள்?” என்று மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரை மாவட்ட மாஜிஸ்டிரேட் கடிந்துகொண்டார். ஆனால், அரசாங்கம் உடனே கைதுசெய்யவில்லை.

அரசாங்கத்தின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ராட்டையைப் போராட்டக் களத்தில் கொண்டுசெல்வதில் காவல் துறைக்கும் சத்தியாகிரகிகளுக்கும் பிரச்சினை எழுந்தபோது பெரியார் அதைத் தீர்த்துவைத்தார். தொடர்ந்து அவரை அரசாங்கம் வெளியில் விட்டுவைக்கவில்லை. முதல் சிறைவாசம் முடிந்து விடுதலையான 27-வது நாள் (18 ஜுலை 1924) மீண்டும் கைதுசெய்தது. இந்த முறையும் பெரியார் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுத்தார். முதல் முறை உபாயமான தண்டனை விதித்தும் ‘எதிரி’ திருந்தவில்லை என்பதாலும், இரண்டாம் தடவையாக அரசு உத்தரவை மீறி நடந்திருப்பதாலும் நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

இம்முறை ஆறுக்குட்டி சிறையில் பெரியாரை அடைக்கவில்லை. மற்ற சத்தியாகிரகிகள் இருந்த திருவனந்தபுரத்துக்கும் அனுப்ப அரசாங்கம் விரும்பவில்லை. கோட்டயம் மாவட்டச் சிறையில் அடைக்க விரும்பியது. அதற்காக வைக்கத்திலிருந்து புறப்பட்ட படகு, 20 மைல் தூரத்துக்குப் பிறகு பெருமழை, புயல் காரணமாக மேலும் போக முடியாமல் திரும்பிவிட்டது. வைக்கம் காவல் நிலையச் சிறையில் சில நாள் வைத்திருந்து பின் திருவனந்தபுரம் மத்தியச் சிறைக்கே அனுப்பி வைத்தது அரசாங்கம்.

திருவனந்தபுரம் மத்தியச் சிறையிலிருந்த கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் அனைவரும் அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால், பெரியார் அவ்வாறு நடத்தப்படவில்லை. ‘கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகிற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட மரப்பட்டை. இவற்றுடன் ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்துகொண்டிருந்தார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்வானோ அதைவிட இருமடங்கு வேலை செய்கிறார்.” இது பெரியாருடன் சிறையிருந்த கே.பி.கேசவ மேனனின் நேரடி சாட்சியம்.

பெரியாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள இயலாத கேசவ மேனன், பெரியாருக்கு அரசியல் கைதி அந்தஸ்து அளிக்குமாறு சிறையிலிருந்தே அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார். எனினும், விடுதலை அடையும் வரை அதற்குப் பதில் வரவில்லை என்று தன் வாழ்க்கை வரலாறான ‘கடந்த கால’த்தில் குறித்துள்ளார்.

பெரியாருக்கு ஆதரவாக ராஜாஜி

பெரியாரின் நிலை ராஜாஜியையும் வருத்திற்று. பெரியாருக்கு ஆதரவாக அரசாங்கத்தைக் கண்டித்துப் பத்திரிகையில் எழுதினார் அவர். ஈ.வெ.ராமசாமி நாயக்கரைக் கடுங்காவல் தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட்டிருப்பதும், அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரகிகள் சரியாகப் பெற்றுள்ளவற்றை அவருக்கு மறுப்பதும் நியாயப்படுத்தவே முடியாதவை என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியிருந்தார் ராஜாஜி (27 ஆகஸ்ட் 1924). இந்தச் சமயத்தில் பெரியாருக்கு ராஜாஜி சூட்டிய புகழாரம் முக்கியமானது. “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல; உண்மையிலேயே!”

திரு.வி.க.வும் இக்கொடுமையைச் சாடினார். “திருவாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தருமமோ என்று கேட்கிறோம்” என்று மனம் நொந்தார் திரு.வி.க.

சிறை தளர்த்த முடியாத வீரர்

இரண்டாம் முறையாகச் சட்டத்தை மீறியிருப்பதால் தனிச்சலுகை எதுவும் அவருக்கு வழங்க வேண்டாம் என்ற மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் கருத்துக்குள் அரசாங்கம் ஒளிந்துகொண்டு விடுதலை வரை துன்புறுத்தியது. புதிய மன்னர் பொறுப்பேற்றதையடுத்து 30 ஆகஸ்ட் 1924 அன்று பெரியார் உட்பட 19 சத்தியாகிரகிகள் விடுவிக்கப்பட்டனர். விதிக்கப்பட்டிருந்த கடுந்தண்டனைக்காக கேரளமும் தமிழகமும் வருந்த, விடுதலையான பெரியாரோ, நாகர்கோவிலில் பேசும்போது, “நான் சிறையில் பட்ட கஷ்டத்திற்காக யாரும் வருந்த வேண்டாம். விடுதலைதான் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது” என்று வேதனையையும் வேடிக்கையாக எதிர்கொண்டார்.

அடுத்து பெரியார், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்டோர் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். “பொதுச்சாலைகளில் எல்லோரும் நடமாடலாம் என்பதை அனுமதிப்பதற்குரிய அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்கிறோம். அப்படி நடக்காவிடில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்” என்று அவ்வறிக்கையில் தெரிவித்தனர். இவ்வறிக்கை மூலம் அரசின் விடுதலையைச் சலுகையாக ஏற்காமல் அதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினர் சத்தியாகிரகிகள். கேட்டிலும் துணிந்து நின்றார் பெரியார்.

ஒன்றரை மாதங்களுக்கு மேல் சிறையிருந்த பெரியார், இந்த விடுதலைக்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்பவில்லை. வைக்கத்துக்கே சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். நெடுங்கணா, நாகர்கோவில் போன்ற ஊர்களில் பத்து நாள் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, ஈரோட்டுக்கு செப்டம்பர் 10-ம் தேதி திரும்பினார். காத்திருந்ததுபோல் சென்னை மாகாணக் காவல் துறை 11-ம் தேதி பெரியாரைக் கைதுசெய்தது. இந்தக் கைது ஆறு மாதம் முன்பு மயிலாப்பூரில் பேசிய அரசு விரோத பேச்சு ஒன்றுக்கானது. வேறு அரசாங்கத்தால், வேறு காரணத்துக்காக, வேறிடத்தில் கைது நிகழ்ந்திருப்பினும் அவரை மீண்டும் வைக்கத்துக்குச் செல்ல ஒட்டாமல் தடுப்பதே நோக்கம் என்று ஊகிக்கலாம். எது எப்படியோ வைக்கத்துக்கு உடனடியாகச் செல்லவிடாமல் இந்தக் கைதும் வழக்கும் அவரைத் தடுத்துவிட்டன.

பெரியார் வைக்கத்தில் இருந்த காலத்திலும் சரி பிறகும் சரி, போராட்டம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. பண நெருக்கடி அதில் முதலாவது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பெரியார் வழியாக ரூ.1000 கொடுத்தது. மற்ற பிரச்சினைகளை ஆலோசித்து முடிவெடுக்க பல ஆலோசனைக் கூட்டங்கள், சமாதானத் தூதுகள், பிரச்சாரக் குழுக்கள், மகளிர் அணிகள் அவ்வப்போது உருவாயின. அவை பலவற்றில் பெரியாரும் நாகம்மையாரும் இடம்பெற்றிருந்தனர். இவ்வகையில் திவானைச் சந்தித்து சமாதானம் பேச ஏற்பட்ட எட்டுப் பேர் கொண்ட குழுவில் பெரியாரும் ஒருவர்.

பெரியார் வைக்கத்தில் போராடிக்கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்த தலைவர்கள் அனைவரும் அவரைக் கலந்தாலோசித்தனர். ஆரிய சமாஜத் தலைவர் சிரத்தானந்தர் போராட்டம் நலிவுற்றிருந்த ஒரு கட்டத்தில் அதை எடுத்து நடத்தவும் ஒப்புக்கொண்டார். ராஜாஜி வைக்கம் வந்தபோது காவல் நிலைய சிறையில் இருந்த பெரியாரைச் சந்தித்த பிறகே ஆசிரமம் சென்றார். வரதராஜுலு நாயுடு, எஸ்.சீனிவாச ஐயங்கார், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் சத்தியாகிரக ஆசிரமத்தில் அவரைச் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சி.வி.வேங்கட ரமண ஐயங்கார் பெரியாருடன் பிரச்சினைக்குரிய சாலைகளைப் பார்வையிட்டார். ஆக இந்திய, தமிழகத் தலைவர்கள் பலரும் பெரியாருடன் போராட்டம் குறித்து விவாதித்தனர்.

காந்தி – பெரியார் சந்திப்பு

போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். டெல்லியிலிருந்து சென்னை வழியாக வந்த காந்தியை ஈரோட்டில் (8 மார்ச் 1925) வரவேற்றுவிட்டு, வர்க்கலையில் (12 மார்ச் 1925) அவரோடு இணைந்துகொண்டார். அதேபோல், நாராயண குருவைச் சந்தித்த காந்தியுடனான சிறு குழுவில் அவர் இருந்ததையும் காவல் ஆணையர் பதிவுசெய்துள்ளார். பெரியாரைக் கலந்தாலோசித்த பிறகே ராணியாரை காந்தி சந்தித்துப் பேசியதாகப் பலவிடங்களில் பிற்காலத்தில் தெரிவித்துள்ளார் பெரியார்.

வைக்கம் வருகையின்போது காவல் துறை ஆணையருடன் காந்தி மேற்கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் விளைபயனாய், ஓராண்டுக்கு முன்னால் பெரியாருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவைத் திருவாங்கூர் கவர்ன்மென்டார் வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதைக் கேட்க வாசகர்கள் சந்தோஷமடைவார்கள்” என்று காந்தி ‘யங் இந்தியா’வில் (23 ஏப்ரல் 1925) தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

மனைவியுடன் களம் சென்றார்

காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தலைவராகவே பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டார். தனிப்பட்ட முறையில் அல்ல; அவர் வழியாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆயிரம் ரூபாயைப் போராட்டத்துக்கு அனுப்பியது. கிடைக்கும் பெயர் விவரப்படி, 50 பேர் அளவிலான தொண்டர்களுடன் சென்று அவர் அங்கு போராடினார். தன் குடும்பத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். 15 மே 1924-ல் வைக்கம் வந்த நாகம்மையார், தொடர்ந்து நான்கு மாதம் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. நாகர்கோவில் தலைவர்கள் சிலரும் குடும்பத்துடன் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மிக முக்கியமான செய்தி, பெரியார் தன் வாழ்வின் நடுப்பகுதியில் வைக்கத்தில் 74 நாட்கள் சிறையிலும், 67 நாட்கள் வெளியிலுமாக 141 நாட்களைப் போராட்டத்துக்காகச் செலவிட்டார் என்பதாகும்.

ஆலோசகர் காந்தி கொள்கை அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட அயல் மதத்தவரை வெளியேற்றினார், சத்தியாகிரகிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை நிறுத்தினார், அகாலியர் நிறுவியிருந்த தரும உணவுச்சாலையை மறுத்தார், அயலிலிருந்து தொண்டர்களோ நிதியோ வருவதைத் தடைசெய்தார். இப்படியான காந்தியின் அறிவுறுத்தல்களால் போராட்டம் பல இன்னல்களைச் சந்தித்தது, இரு முறை சத்தியாகிரகிகள் நேரடியாகச் சென்று அவரிடம் முறையிட்டனர். இயக்கமும் பலவீனப்பட்டுவந்தது. எனினும், ஜார்ஜ் ஜோசப் தவிர, பொதுவெளியில் காங்கிரஸ்காரர் எவரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை, பெரியாரும் பேசவில்லை. ஒரு உண்மை சத்தியாகிரகியாகவே களத்தில் அவர் விளங்கினார். பின்னாளில் கருத்து வளர்ச்சியும், அதனால் பார்வை மாற்றமும் நேர்ந்த நிலையில் பெரியார் காந்தியின் அறிவுறுத்தல்களை விமர்சித்தார். சத்தியாகிரகத்தை நிறுத்திவிடவே காந்தியும் இராஜாஜியும் விரும்பினர் என்று இதே அறிவுறுத்தல்களையே காட்டி விமர்சித்தார்.

தீர்வு தந்த போராட்டம்

எப்படியோ நவம்பர் 1925-ல் போராட்டம் - பெரியாருக்கு ஏன் காந்திக்கும்தான் - முழு மகிழ்ச்சியைத் தராத, நான்கில் மூன்று தெருக்களில் மட்டும் அனுமதி என்ற ஒருவகை சமாதானத்துடன் முடிவுக்குவந்தது. சத்தியாகிரகத்தின் வெற்றி விழாவுக்குத் தலைமை தாங்க பெரியாரைக் கேரளர் அழைத்தனர். அயலிலிருந்து கலந்துகொண்ட ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சத்தியாகிரகத்தின் வெற்றியைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்துவிடவில்லை. தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முன்வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்துக்கும் மகாத்மாவுக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்குகிறது என்று பெரியார் வியந்தார் (குடிஅரசு, 6 டிசம்பர் 1925). போராட்டத்தின் வெற்றிவிழாவை பெரியாரின் தலைமையில் கொண்டாடியது மிக முக்கியத்துவமுடைய செய்தியாகும். கேரளர்கள் நன்றி மறக்காதவர்கள். இன்றும் வைக்கத்தில் கேரளர்கள் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது பெரியார் சிலை. தமிழ்நாட்டில்தான் சிலர் கேட்கிறார்கள், பேசுகிறார்கள், “பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?” என!

- பழ.அதியமான், வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

டிசம்பர் 24: பெரியார் நினைவு நாள்

*****************************************************************************************

வைக்கம் போராட்டம்
பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
விலை: ரூ.325
9677778863

பழ.அதியமான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் ‘வைக்கம் போராட்டம்’ நூலிலிருந்து...

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard