New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாளும் தலையும்


Guru

Status: Offline
Posts: 23904
Date:
தாளும் தலையும்
Permalink  
 


 

தாளும் தலையும்
இவ்விரு உறுப்புக்களும் சிவவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றன.
தெய்வப் புலவர் திருவள்ளுவதேவ நாயனார் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலே ‘வாலறிவன் நற்றாள்’, ‘மலர்மிசை யேகினான் மாணடி’, ‘வேண்டுதல் வேண்டாமை யிலானடி’ தனக்குவமையில்லாதான் தாள்’, ‘அறவாழி அந்தணன் தாள்’, ‘எண்குணத்தான் தாள்’,.’இறைவன் அடி என்று பத்துக் குறள்வெண்பாக்களுள் ஏழு திருக்குறள்களில் இறைவனின் திருவடிகளைக் கூறுகின்றார்
மக்களின் உடலுறுப்புக்களில் உத்தமாங்கம் எனப் பெருமையுடையது ‘தலை’. அவ்வாறே இறைவனின் அங்கங்கங்களில் உத்தமாங்கம் எனப்படுவது, தாள் எனப்படும் திருவடிகளே. திருவடியே வீடுபேறாகும் என்பது சைவச் சான்றோர் கருத்து.
திருவள்ளுவப் பெருமான் கடவுளின் ஏனைய உறுப்புக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.குணங்குறி அடையாளங்களில்லாச் சர்வ வியாபியாகிய பரம்பொருளை அறிவதற்கு அவனுடைய திருவடிகளைக் காட்டி அதனைப் பற்றிக் கொள்ளும்படிக் கூறுகின்றார்.
கடவுளுடைய உத்தமாங்கமாகிய திருவடிகளுக்கும் மக்களுடைய உத்தமாங்கமாகிய தலைக்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும் இவ்விரு உறுப்புக்களையும் பயன்கொள்ளும் முறையையும் சிவநெறி பேசும் அளவுக்குப் பிறநெறிகள் கூறுகின்றனவா என்பது ஐயம்.
“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்றார். உத்தமாங்கமாகிய தலை இறைவனின் திருவடிகளை வணங்காவிடில் கோளில்லாத (தத்தம் புலன்களைக் கொண்டிராத) பொறி போலாகும் என்ற திருவள்ளுவரது கருத்தைக் காழிப் பிள்ளையார்,
மெய்யறிவுடையானின் நல்ல தாள்களைத் தொழாராகில் நூல்களைப் பயின்று பகுத்தறிவு பெற்றதன் பயன் இன்ல்லையாகும்; இறைவந்து திருவடிகளைச் சேர்ந்தார் எல்லா உலகிற்கும் மேம்பட்டதான மீதானம் எனப்படும் வீட்டுலகில் நிரந்தரமாக வாழ்வர்; இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள் உளவாகா; பிறவிக்குக் காரணமாகிய நல்வினை தீவினை இரண்டும் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களைச் சேரா.; பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார் ; இவர்களுக்கு மனத்தின்கண் நிகழும் துன்பங்களே இல்லை; இதெல்லாம் இறைவனுடைய திருவடிகளை வணங்குதலால் பெறும் பயன்கள் என்பது திருவள்ளுவ தேவர் கருத்து.
சைவம் என்ன கூருகிறது?
“வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோலினான் நெடுமுடி தொலையவே யூன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே””
என்றும், “சிற்றம் பலந்தன்னைத்,தலையால் வணங்குவார் தலையா னார்களே” என்றும் திருஞானசம்பந்த சுவாமிகள் போற்றினார்.
உடலைக் கொண்டிராத திருவடி எதனைக் குறிக்கின்றது?

“திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே” திருமந்திரம் 138)
இத் திருவடியைத் திருவள்ளுவதேவர் அறிவுறுத்தியபடிக் கைப்பற்றிக் கொண்டால் என்ன பயன்? திருமந்திரதேவர் கூறுகின்றார்:
“திருவடி ஞானம் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்கும்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே” (1598)
திருமந்திரம் ஆறாந் திருமுறை சித்தாந்த முடிபுகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற்குரிய பொருள்களாகிய ஞானம் பெறும் சாதனங்களாக உணர்த்துவதாகும். இது, சிவகுரு தரிசனம், முதல் பக்குவன் ஈறாகப் பதினான்கு திருவடிப் பேறு

உயிர்களை மும்மலக் கட்டிலிருந்து விடுவிக்க இறைவன் தன்னுடைய திருவருளாகிய திருவடிகளைத் தருகின்ற அப்பொழுதே, அதனை முறையாக வணங்கிப் பெறுதற்குக் தலையையும் கொடுத்துள்ளான். “ தாடந்த போதே தலைதந்த எம்மிறை” என்பது திருமூலர் வாக்கு (1591)

பகவானைக் காட்டிலும் அவனது திருவடிகளே உயர்வுடையன; வேண்டியவற்றை ஈயும் கருணையும் ஆற்றலும் உடையன என்பது ஸ்ரீவைணவர் கொள்கைஇறந்துபோன பெரியோர்களின் ஆன்மா குருநாதனின் திருவடி சேர்ந்ததெனச் சைவர்களும் ஆச்சாரியன் திருவடியை அடைந்ததென ஸ்ரீவைஷ்ணவர்களும் கூறுவர். ஏனெனில் எழுந்தருளியது; திருவடியே முத்தி ஆதலின்.
சிவபரம்பொருளின் திருவடி மலர்களிலே அழுந்திய அடியவனின் தலை முத்திப் பேற்றைக் குறிக்கும் அடையாளமாகச் சைவம் கொள்கிறது.
தாள்+தலை. நிலைமொழி ஈற்றில் உள்ள ளகரமும் வருமொழி முதலில் உள்ள தகரமும் கூடும்போது ‘ட’ எனுமொலி பிறக்கும். இந்த டகரத்தில் ளகரமும் உண்டு; தகரமும் உண்டு. ‘தாள்’ என்பது சிவத்தையும் ‘தலை’ என்பது ஆன்மாவையும் குறிக்கும்.
‘தாடலை’ என்ற எடுத்துக் காட்டில் ‘ட’ என்பதே இங்குக் கருதத் தக்கது. இந்தத் ‘ட’வில் ளகரமும் இருக்கிறது; தகரமும் இருக்கிறது. இவ்விரண்டும் கெடுதலும் இன்றித் திரிதலும் இன்றி ஒன்றாய் இருக்கின்றன.
சைவசித்தாந்தம் கூறும் சாயுச்சிய முத்தியில் ஆன்மா கெட்டுச் சிவம் ஒன்றே இருக்கும் நிலையல்ல. ஆன்மாவும் சிவமும் பேதமாகப் பிரிந்து நிற்றலும் இல்லை. இரண்டும் கெடுதலுமின்றித் திரிதலுமின்றி உடனாய் ( அத்துவிதமாய்) உள்ளன. இந்த நிலையில் இன்பகனமாக உள்ள இறைவன் ஆன்மாவுக்கு இன்பளிப்பன்; ஆன்மா அவ்வின்பத்தில் தன்னை இழந்து நிற்கும். இவ்வின்ப நிலையை, அருணகிரிப் பெருமான்,

“இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நனுமாய்
இறுகும்வை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே”
எனக் காட்சிப்படுத்தி யருளினார்.
சிவசித்தாந்திகள் திருவள்ளுவ நாயனார் அளிக்கும் தேவாமிர்தத்தை நேரில் சுவைப்பவர்கள். திருக்குறளுக்குப் புத்துரை என இக் காலத்தவர் நஞ்சாக்கிக் கொடுக்கும் விஷமான நைந்த சோற்றை விரும்புவரோ/__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard