New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 31-40 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
புறநானூறு 31-40 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


31. வடநாட்டார் தூங்கார்!

 
பாடியவர்: கோவூர் கிழார் (31-33, 41, 44 - 47, 68, 70, 308, 373, 382, 386, 400)
இவர் கோவூரைச் சார்ந்தவர். வேளாண் மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை இயற்றியவர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறம்- 45). பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவ்வமயம், “அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே “ என்று அறிவுரை கூறினார். மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான். அப்போது, புலவர் கோவூர் கிழார், “இளந்தத்தன் ஒற்றன் அல்ல; அவர் ஒரு புலவர்” என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறம் - 47). சோழன் கிள்ளிவளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறம் - 46). புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், நலங்கிள்ளியின் வெற்றிகளைச் சிறப்பித்து, “அரசே! நீ போரை விரும்பிப் பாசறையில் இருக்கிறாய். உன் யானைகள், பகைவர்களின் மதிற் சுவர்களைக் குத்தித் தாக்கியதால், அவற்றின் கொம்புகள் மழுங்கி உள்ளன. அவ்வாறு இருந்தாலும், உன் யானைகள் இன்னும் அடங்கவில்லை. உன் படைவீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புபவர்களாக உள்ளனர். ஆகவே, வட நாட்டில் உள்ள மன்னர்கள் நீ எப்பொழுது அங்கே உன் படையுடன் வருவாயோ என்று நினைத்து நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.” என்று கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
மழபுல வஞ்சி: பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.


சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
15 வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து
நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே.

அருஞ்சொற்பொருள்:
4. உரு = வடிவழகு, நிறம்; கெழு = பொருந்திய; நிவத்தல் = உயர்தல்; நிவந்து = ஓங்கி; சேண் = சேய்மை. 5.வேட்டம் = விருப்பம், விரும்பிய பொருள். 6.ஒல்லுதல் = உடன்படுதல், இணங்குதல். 7. நுதி = நுனி; மண்டுதல் = நெருங்குதல் (குத்துதல்). 8. பாய்தல் = குத்துதல். 9. புகலுதல் = விரும்புதல்; புனைதல் = அணிதல். 10. நனி = மிகவும்; சேய = தொலைவாக. 11. கல் - ஒலிக்குறிப்பு. 12. விழவு = விழா. 13. குண = கிழக்கு; குட = மேற்கு. 14. புணரி = அலை; மான் = குதிரை; அலைப்ப = அடித்தல் (அலை அடித்தல்). 15. அலமந்து = சுழன்று. 16. அவலம்= துன்பம், வருத்தம்; பாய்தல் = பரவுதல். 17. துஞ்சுதல் = உறங்குதல்.

உரை: அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும் போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு: பகைவரை வென்று ஆரவாரிப்பதைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் வாகைத் திணையில் அடங்கும். சோழன் நலங்கிள்ளி, போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. மற்றும், பகைவர்களின் மதில்களை நலங்கிள்ளியின் யானைகள் குத்தித் தாக்கியதையும், அவன் படை வீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புவதையும், வட நாட்டு மன்னர்கள் நலங்கிள்ளியின் வருகையை நினைத்து நடுங்கி உறக்கமின்றி இருப்பதையும் கூறியிருப்பது பகைவரின் நாட்டை அழிப்பதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: புறநானூறு 21-30 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


32. பூவிலையும் மாடமதுரையும்!

 
பாடியவர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.
பாடப்பட்டோன்:
 சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியின் வள்ளல் தன்மையை வியந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
5 மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
10 கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கடும்பு = சுற்றம்; அடுகலம் = சமையல் பாத்திரம். 3. வணக்கல் = வளைதல்; இறை = முன்கை; பணை = மூங்கில். 7. சுட்டுதல் = நினைத்தல். 8. வேட்கோ = குயவன்; தேர்க்கால் = தேர்ச்சக்கரம் (இங்கு குயவன் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிக்கிறது). 9. குரு = கனம்; திரள் = உருண்டை. 10. குடுமி = முடிவு; பணைநிலம் = மருதநிலம்.

கொண்டு கூட்டு: தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல அவன் கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடு; ஆதலால், பூவா வஞ்சியும் தருகுவன்; மாட மதுரையும் தருகுவன்; ஆதலால், பரிசில் மாக்கள் நாமெல்லாம் அவனைப் பாடுகம் வம்மினோ எனக் கூட்டுக.

உரை: நம் சுற்றத்தாரின் சமையல் பாத்திரங்கள் நிறையுமாறு, நெடிய கொடியில் பூவாத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரத்தையும் சோழன் நலங்கிள்ளி தருவான். வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான். பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால், நல்ல தொழில் நுட்ப அறிவுள்ள குயக்குலச் சிறுவர் மண்பாண்டங்கள் செய்யும் சக்கரத்தில் வைத்த கனமான பசுமண் உருண்டை, குயவனின் கருத்துக்கேற்ப உருவெடுப்பதுபோல் சோழன் நலங்கிள்ளி எடுத்த முடிவுக்கேற்ப இந்தக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு அமைவது விளங்கும்.

சிறப்புக் குறிப்பு: ”பூவா வஞ்சி” என்றது வஞ்சி நகரத்தைக் குறிக்கிறது. வஞ்சி நகரம் சேர நாட்டிலும், மதுரை நகரம் பாண்டிய நாட்டிலும் இருந்த ஊர்கள். அவ்வூர்களைச் சோழன் நலங்கிள்ளி தருவான் என்று கோவூர் கிழார் கூறியிருப்பதால், இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில், அவ்விரு நகரங்களும் சோழன் நலஙிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன என்று தோன்றுகிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

33. புதுப்பூம் பள்ளி!

 
பாடியவர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்படலில் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியின் நாட்டின் வளத்தையும் பாணர்களுக்கு சோறு அளிக்கப்படும் பாசறைகளின் சிறப்பையும் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
5 குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10 பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்
15 செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20 ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. கான் = காடு; கதம் = சினம். 2. சொரிதல் = பொழிதல் = நிறைதல்; வட்டி = கூடை; ஆய் = இடையர். 3. தசும்பு = குடம். 4. அரிவை = பெண் (மகளிர்). 6. முகத்தல் = அளத்தல், மொள்ளல்; உகத்தல் = மகிழ்தல். 7. பொருப்பு = மலை. 8. எயில் = கோட்டை; எறிதல் = முறித்தல். 9. பேழ் = பெருமை; பேழ்வாய் = பெரியவாய்; உழுவை = புலி. 10. வஞ்சி பாடுதல் = பகைவருடைய நாட்டின் மீது படையெடுப்பதைப் பாடுதல். 11. தாதெரு = தாது+எரு; தாது = பூந்தாது; மறுகு = தெரு. 12. இடையிடுபு = இடையிட்டு. 14. அமலை = திரள்; கடும்பு = சுற்றம்; அருத்தல் = உண்பித்தல். 15. செம் = செம்மை; அற்று = அத்தன்மைத்து; செம்மற்று = செம்மையுடைத்து; இருக்கை = இருப்பிடம். 16. தைஇய = இழைத்த; வரி = எழுத்து; வனப்பு = அழகு. 17. அல்லிப்பாவை = அல்லியக் கூத்தில் ஆடும் (பயன்படுத்தப்படும்) உருவம் (பொம்மை); ஏய்தல் = ஒத்தல். 18. யாமம் = நள்ளிரவு; 19. வழங்குதல் = நடத்தல்; கா = பூந்தோட்டம். 20. ஒதுக்குதல் = இயங்குதல்; திணிதல் = செறிதல்; பள்ளி = இடம் (சாலை). 21. மாடம் = மண்டபம்; மை = செம்மறியாடு.

கொண்டு கூட்டு: உழுவை பொறிக்கும் ஆற்றலை யாகலின், பாடுநர் வஞ்சி பாட, பாண்கடும்பு அருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ கொண்ட விழவினும் பல செம்மற்று எனக் கூட்டுக.

உரை: காட்டில் வாழும் சினக்கொண்ட நாய்களையுடைய வேட்டுவர் மான் தசைகளை விற்பதற்காக கூடைகளில் கொண்டு வருவர்; இடைச்சியர் தயிரை விற்பதற்காகக் குடங்களில் கொண்டு வருவர். ஏரைக்கொண்டு உழவுத்தொழில் செய்யும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர், வேட்டுவர் கொண்டு வந்த தசைகளையும், இடைச்சியர் கொண்டு வந்த தயிரையும் பெற்றுக் கொண்டு, குளக்கரையில் உள்ள நிலத்தில் விளைந்த நெல்லை அள்ளிக் கொடுக்க, வேட்டுவரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய வளமான நல்ல ஊர், தெற்கே பொதிகைமலை உள்ள பாண்டிய நாட்டில் உள்ளது. அங்கே, ஏழு கோட்டைகளின் கதவுகளை உடைத்து அவற்றைக் கைப்பற்றி உன்னுடைய சின்னமாகிய பெரிய புலிவாயைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் நீ. நீ படையெடுத்துச் சென்றதைப் புலவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். உன் படைவீரர்கள் பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருக்களில் உள்ள பாசறைகளில் உலராத பச்சிலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட அரும்புகள் அடங்கிய பூப்பந்தைப் போன்ற, தசைகளோடு கூடிய சோற்றுருண்டைகளைப் பாணர்களின் சுற்றத்தார்களுக்கு அளித்து அவர்களை உண்பிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உன் போர்முனைகளின் இருப்பிடம்.

அன்புடைய துணைவனும் துணைவியும், கலை வல்லுநர்களால் செய்யப்பட்ட அழகிய பாவைகள் அல்லியம் என்னும் கூத்தில் ஆடுவதைப்போல், சேர்ந்து செல்லும் குளிர்ந்த மலர்களையுடைய சோலையில், நள்ளிரவில் தனியே சென்றால் காம உணர்வு மிகும் என்ற காரணத்தால் எவரும் தனியே செல்வதில்லை. அந்தச் சோலைகளில், நடத்தற்கு இனிய, மணல் மிகுந்த, புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் உள்ள மாடந்தோறும் செம்மறிக் கிடாவை வெட்டி நீ நடத்தும் விழாக்களைவிட உன் போர்முனைகளில் நீ அளிக்கும் விருந்துகள் பலவாகும்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

 
பாடியவர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார்.

பாடப்பட்டோன்: கிள்ளிவளவன் (34 - 42, 46, 69, 70, 226 - 228, 373, 386, 393, 397). சங்க கால மன்னர்களில் பலருடைய வரலாறுகள் தெளிவாகத் தெரியவில்லை. கிள்ளிவளவனின் வரலாற்றிலும் விடைகாணமுடியாத வினாக்கள் பல உள்ளன. சிலர் (பேராசிரியர். கோ. தங்கவேலு) கிள்ளிவளவன் என்று அழைக்கப்பட்டவனும், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் என்று கருதுகின்றனர். இருப்பினும், பல வரலாற்று ஆசிரியர்கள் (N. சுப்பிரமணியன், K. A. நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் பொன். தங்கமணி) கிள்ளிவளவனும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் ஒருவனே என்று ஆதாரங்களுடன் கூறுகின்றனர். மற்றும் அவன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கரிகாலனுக்குப் பிறகு பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன் கரிகாலனின் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று வரலாற்று ஆசிரியர் N. சுப்பிரமணியன் தம் நூலில் கூறுகின்றார். மற்றும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்குக் கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இவர்களில், நலங்கிள்ளியும் கிள்ளிவளவனும் பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. நலங்கிள்ளிக்குப் பிறகு கிள்ளிவளவன் ஆட்சி புரிந்தான் என்றும் கருதப்படுகிறது. மற்றும், கிள்ளிவளவன் காலத்தில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதி கடலால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிள்ளிவளவன், சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின்னர் அதைக் கைப்பற்றியது அவனுடைய மிகச் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. சேரனை வென்ற பிறகு, மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டு அவனைக் கிள்ளிவளவன் வென்றான். பின்னர், பாண்டிய நாட்டின் மீது கிள்ளிவளவன் படையெடுத்தபோது, பாண்டியரின் படைத்தலைவன் பழையன்மாறன் என்பவனிடம் தோல்வியுற்று கிள்ளிவளவன் இறந்ததாகக் கருதப்படுகிறது.

புறநானூற்றில், கோவூர் கிழார். ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் ஆகியோர் கிள்ளிவளவனைப் புகழ்ந்து 19 பாடல்கள் இயற்றியுள்ளனர்.

கிள்ளிவளவன் வீரத்திலும் வெற்றியிலும் கொடையிலும் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமையுடையனாகவும் இருந்தான் என்பது இவன் இயற்றியதாகப் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலிலிருந்து (பாடல் 173) தெரிகிறது.

இவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகவும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: கிள்ளிவளவன் ஆலத்தூர் கிழாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்தான். அவற்றைப் பெற்றுக்கொண்டு ஆலத்தூர் கிழார் அவனிடமிருந்து விடைபெறும் தருணத்தில், கிள்ளிவளவன், “நீங்கள் என்னை நினைத்து மீண்டும் வருவீர்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான். “செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை; உன்னை நான் எந்நாளும் மறவேன்; உன்னை நான் புகழ்ந்து பாடாவிட்டால், கதிரவன் தோன்றமாட்டான்; நீ நீண்ட நாட்கள் வாழ்க” என்று ஆலத்தூர் கிழார் கிள்ளிவளவனை வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
5 நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ;
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
10 பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
15 அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபுஅறி யலனே பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ்வுலகத்துச்
20 சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!

அருஞ்சொற்பொருள்:
2. மாண் = மாட்சிமை. 3. குரவர் = மூத்தோர் (பெற்றோர்); தப்பல் = தவறு புரிதல். 4. வழுவாய் = தவறுதல்; மருங்கு = இடம், பக்கம்; கழுவாய் = பரிகாரம். 5.புடை = இடம். 6.செய்தி = செய்கை (செய்த நன்றி); உய்தி = தப்பிப் பிழைத்தல். 7. ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள். 8. அந்தி = மாலைக்காலம், அதிகாலை. 9. புறவு = புறா; புன்புலம் = புல்லிய இடம், தரிசு நிலம். 10. புன்கம் = உணவு, சோறு. 11. சூடு = சுடப்பட்டது; ஒக்கல் = சுற்றம். 12. இரத்தி = இலந்தை மன்றம் = பலர் கூடும் வெளி ( பொதுவிடம்). 13. கரப்பு = வஞ்சகம் (மறைத்தல்). 14. அமலை = திரளை, கட்டி; ஆர்ந்த = அருந்திய. 17. பீடு = பெருமை; நோன்றாள் = நோன்+தாள் = வலிய தாள். 18. படுதல் = தோன்றுதல். 19. தஞ்சம் = எளிமை. 21. ஈண்டுதல் = திரளுதல். 22. கொண்டல் = கீழ்க்காற்று. நுண்பஃறுளி = நுண்+பல்+துளி.

கொண்டு கூட்டு: ஆயிழை கணவ, செய்தி கொறோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வம் முழுதும் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலை அந்தியும் மாலை அந்தியும் நின் தாள் பாடேனாயின், பல்கதிர்ச் செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்று உண்டாயின், நுண் பல்துளியினும் பல காலம் வாழ்வாயாக எனக் கூட்டுக.

உரை: பசுவின் முலையை அறுத்த தீவினையாளர்களுக்கும், (சிறந்த அணிகலன்களை அணிந்த) மகளிரின் கருவை அழித்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும் அவர் செய்த கொடிய செயல்களை ஆராயுமிடத்து, அவர் செய்த பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்குவதற்குப் பரிகாரம் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நற்செயல்களை அழித்தவர்களுக்கு அவற்றின் விளைவுகளிலிருந்து விடுதலை இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

நன்கு ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவ! காலை வேளையிலும் மாலை வேளையிலும், புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் முட்டை போன்ற வரகினது அரிசியைப் பாலிலிட்டு ஆக்கிய சோற்றில் தேனும், கொழுத்த முயலின் இறைச்சியும் கலந்த உணவை, இலந்தை மரத்தடியில் உள்ள பொதுவிடத்தில், வஞ்சமில்லாத உள்ளத்தோடு, வேண்டுவனெல்லாம் பேசி, பாணர்கள் உண்டு மகிழ்வார்கள். அப்பாணர்களுக்குத் தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் அளித்த என் தலைவன் கிள்ளி வளவன் வாழ்க என்று பெருமை பொருந்திய உன்னை நான் பாடேனாயின், பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றமாட்டான். நான் எளியவன்; தலைவ! இவ்வுலகில் சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின், இமயமலையில் திரண்ட மேகங்கள் இனிய ஓசையுடன் பெய்த பெருமழையின் நுண்ணிய பல துளிகளைவிட அதிக நாட்கள் நீ வாழ்க.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

35. உழுபடையும் பொருபடையும்!

 
பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார் (35). இப்புலவர், புறநானூற்றில் இச்செய்யுளையும் நற்றிணையில் இரண்டு (158, 196) செய்யுட்களையும் இயற்றியவர். இவரால் பாடப்பட்டவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆவான்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 34இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவனின் நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் குடிக்மக்கள் வரி செலுத்தவில்லை. அவர்களுடைய வரிக்கடன்களை விலக்கி அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு இப்பாடலில் வெள்ளைக்குடி நாகனார் சோழன் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவர் உள்ளும்
5 அரசுஎனப் படுவது நினதே பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
10 ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க,
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல் எனவ கேண்மதி:
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
15 முறைவேண்டு பொழுதின் பதன்எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
20 வெயில்மறைக் கொண்டன்றோஅன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
25 பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்;
30 அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிந்த; இரு = பெரிய; முந்நீர் = கடல்; ஏணி = எல்லை. 2. வளி = காற்று. 3. திணிதல் = செறிதல்; கிடக்கை = பூமி. 6. அலங்கு = விளங்கு; கனலி = ஞாயிறு; வயின் = இடம். 7. இலங்குதல் = ஒளிசெய்தல்; வெள்ளி = சுக்கிரன்; படர்தல் = செல்லுதல். 8. கவர்பு = வேறுபடல், பிரிதல். 9. தோடு = இலை. 10. நுடங்குதல் = ஆடல். 11. அத்தை – அசைச் சொல். 12. கெழு = பொருந்திய. பீடு = பெருமை. 13. நினவ = உன்னிடம்; எனவ = என்னுடைய. 14. புரிதல் = செய்தல்; நாட்டம் = ஆராய்ச்சி. 15. முறை = அரச நீதி (முறையீடு). பதன் = பக்குவம்; தக்க சமயம். 16. உறை= துளி; பெயல் = மழை. 17. கோடு = பக்கம்; கொண்மூ = மேகம். 18. மாகம் = மேலிடம்; விசும்பு = ஆகாயம். 19. பொரு = முட்டிய. 22. வெளிறு = இல்லாமை; துணி = துண்டு; வீற்று = வேறுபாடு. 23. கணம் = திரட்சி (கூட்டம்); கண்ணகன் = அகன்ற இடம்; பறந்தலை = போர்க்களம். 24. ஆர்த்தல் = பொருதல். 25. தரூஉம் = தரும்.; கொற்றம் = வெற்றி. 26. சால் = உழவு சால்; மருங்கு = பக்கம். 27. வாரி = விளைவு. 29. ஞாலம் = உலகம். 31. நொதுமல் = அயல், விருப்பு வெறுப்பு இன்மை. 32.பகடு = எருது; பாரம் =பெருங்குடும்பம்; ஓம்புதல் = பாதுகாத்தல். 33. புறந்தருதல் = ஓம்பல், தோற்றல், புகழ்தல்.

உரை: நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக, காற்றால் ஊடுருவிச் செல்ல முடியாத, வானத்தால் சூழப்பட்ட, மண் செறிந்த இவ்வுலகில், குளிர்ந்த தமிழ் நாட்டிற்கு உரியவராகிய, முரசு முழங்கும் படையுடன் கூடிய சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுக்குள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான். ஒளியுடன் கூடிய கதிரவன் நான்கு திசைகளில் தோன்றினும், ஒளிறும் வெள்ளி தெற்கே சென்றாலும், அழகிய குளிர்ந்த நீரையுடைய காவிரி பல கிளைகளாகப் பிரிந்து நீர்வளம் அளிக்கிறது. அதனால், வேல்களின் தொகுப்பைப்போல் காட்சி அளிக்கும், அசையும் கணுக்களையுடைய கரும்பின் வெண்ணிறப் பூக்கள் காற்றில் ஆடுகின்றன. உன்னுடைய நாடு அத்தகைய வளமுடையது. நாடு என்று சொல்லப்படுவது உன்னுடைய நாடுதான். அத்தகைய நாட்டையும் அதில் பொருந்திய செல்வத்தையுமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக.

அறமே (உருவெடுத்து) ஆட்சி செய்வதைப்போல் ஆட்சி புரிந்து, ஆராய்ச்சியுடன் செங்கோல் செலுத்தும் உன் ஆட்சியில் எளியோர் உன்னிடம் நீதி கேட்டால், மழைத்துளியை விரும்பியவர்களுக்குப் பெருமழை பெய்ததைப்போல் வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். கதிரவனைச் சுமந்து செல்லும் திரண்ட மேகங்கள் உயர்ந்த ஆகாயத்தின் நடுவே நின்று அதன் வெயிலை மறைப்பதுபோல் கணுக்கள் திரண்டு விளங்கி வானத்தை முட்டிப் பரந்து உயர்ந்து நிற்கும் உன் வெண்கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்காகப் பிடிக்கப்பட்டது அன்று. கூரிய வேல்களை உடைய சோழனே! உன்குடை குடிமக்களின் வருத்தத்தைப் போக்குவதற்காகப் பிடிக்கப்பட்டது ஆகும்.

யானைகளின் தும்பிக்கைகள், துளையுள்ள பனைமரங்களின் துண்டுகள்போல் வேறுவேறு இடங்களில் வீழ்ந்து கிடக்கும் அகன்ற இடமுள்ள போர்க்களத்தில், உன் படைய எதிர்த்த உன் பகைவர்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள். உன் வீரர்கள் அதைக்கண்டு ஆரவாரித்தனர். பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு நீ பெறும் வெற்றி, உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மழை பெய்யத் தவறினாலும், விளைவு குறைந்தாலும், இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் மக்களின் செயல்களால் தோன்றினாலும் இந்தப் பரந்த உலகம் அரசர்களைத்தான் பழிக்கும். அதை நீ நன்கு அறிந்தனையாயின், அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, காளைகளை ஏர்ககளில் பூட்டி உழவுத் தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பவர்களை நீ பாதுகாப்பாயானால், உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்.

சிறப்புக் குறிப்பு: ”செல்வமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக. நீ செங்கோல் செலுத்துகிறாய்; உன் ஆட்சி முறையாக நடைபெறுகிறது. அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக; நீ அவ்வாறு செய்தால் உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்” என்று அரசன் கேட்குமாறு அறிவுறுத்தியதால், இப்பாடல் செவியறிவுறூஉத் துறையை சார்ந்தது என்று கருதப்படுகிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

36. நீயே அறிந்து செய்க!

 
பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டான். அங்கே, தன் அரண்மனையில் இருந்த சேர மன்னன், சோழன் முற்றுகையிட்டதையும், சோழனின் வீரர்கள் தன்நாட்டில் உள்ள காவல் மரங்களை வெட்டுவதையும் பொருட்படுத்தாமல் தன் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அதைக் கண்ட புலவர் ஆலத்தூர் கிழார், “போருக்கு வராமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கும் சேரனோடு போர் புரிவது உன்னைப் போன்ற வீரனுக்கு நாணத்தக்க செயலாகும்” என்று கிள்ளிவளவனிடம் கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதை இப்பாடலில் காணலாம்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீஅளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
5 தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
10 நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. அடுநை = அழிப்பாய்; விடுநை = அழிக்காமல் விடுவாய். 2. புரைமை = உயர்ச்சி (பெருமை); வார் = நுண்மை. 3. செறி = செறிந்த; அரி = சிலம்புப் பரல். 4. கழங்கு = கழற்சிக்காய். தெற்றி = மேட்டிடம். 6. கருமை = வலிமை. 7. நவியம் = கோடரி. 8. வீ = பூ; சினை = மரக்கொம்பு; புலம்பு = தனிமை; காவு = காடு. 9. கடி = காவல்; தடிதல் = வெட்டல். 10. வரை = எல்லை; இயம்பல் = ஒலித்தல். 12. சிலை = வில்; தார் = மாலை; கறங்கல் = ஒலித்தல். 13. மலைத்தல் = பொருதல்; தகவு = தகுதி.

கொண்டு கூட்டு: கடிமரம் தடியும் ஓசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு மலைத்தனை எண்பது நாணுத்தகவுடைத்து; அதனால், அடுநையாயினும் விடுநையாயினும், நின் புரைமை நீ அளந்து அறிதி எனக் கூட்டுக.

உரை: பரல்கள் செறிந்த சிலம்பையும், சித்திரவேலைப்பாடுகள் அமைந்த சிறிய வளையல்கலையும் அணிந்த மகளிர், பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து ஆன் பொருநை ஆற்றங்கரையில், திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடி வெண்ணிறமான ஆற்று மணலைச் சிதைக்கிறார்கள். வலிய கைகளையுடைய கொல்லன், அரத்தால் கூர்மையாகச் செய்த, நெடிய காம்புடன் கூடிய கோடரியால் காவல் மரங்களை வெட்டுவதால், நின்ற நிலையிலிருந்து கலங்கிய பூமணம் கமழும் அந்த மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகுகின்றன. காடுகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரில் உள்ள நெடிய மதில்களை அரணாகக்கொண்ட அரண்மனையில் ஒலிக்க, அங்கே, அதைப்பற்றிக் கவலையின்றி சேரன் இனிதே இருக்கிறான். வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, அவனுடன் இங்கே போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல். ஆகவே, உன் பகைவனாகிய சேரனை, நீ கொன்றாலும், கொல்லாவிட்டாலும் உன் செயலால் உனக்கு வரும் பெருமையை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்.

சிறப்புக் குறிப்பு: பிறரை வெற்றி கொள்ள நிற்பவனை சமாதானப்படுத்தும் பாடல்கள் துணைவஞ்சி என்ற துறையில் அடங்கும். சேரனை வெல்ல நினைத்து அவனுடன் போர் புரியவிருக்கும் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறிப் போரை நிறுத்துமாறு ஆலத்தூர் கிழார் இப்பாடலில் கூறுவதால், இப்பாடல் துணை வஞ்சி என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், அரண்மனைக்கு அருகில் உள்ள காவல் மரங்களை வெட்டும் இடத்தில், சிறுமிகள் அச்சமின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேரன் அரண்மனையை விட்டு வெளிய வந்து போர் புரியவில்லை என்பது, அவன் வீரமற்றவன் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டிருக்கிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

37. புறவும் போரும்!

 
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 126, 174, 226, 280, 383). இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த கொற்கையின் அருகாமையில் உள்ள மாறோக்கம் என்ற ஊரைச் சார்ந்தவர். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என்று அழைக்கப்பட்டார் என்று கருதப்படுகிறது. நப்பசலையார் என்பது இவர் இயற்பெயர் என்றும் சிலர் கூறுவர்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், நல்ல அரண்களுள்ள ஊரில் பகைமன்னன் இருப்பதை அறிந்தும் அந்நகரை அஞ்சாது அழிக்கும் ஆற்றல் உடையவன் என்று அவனுடைய வலிமையையும், வீரத்தையும் மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும்.
அரச வாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
முதல் வஞ்சி: பழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல்.

நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
5 புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
10 கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

அருஞ்சொற்பொருள்:
1. வால் = வெண்மை; எயிறு = பல்; ஐ = அழகு. 2. வெம்பல் = சினத்தல்; திறல் = வெற்றி, வலி; புக்கல் = புகுதல்; என = என்று. 3. விசும்பு = ஆகாயம்; திருகி = முறுகி; முறுகல் = வேகங் கொள்ளுதல். 4. விடர் = மலைப்பிளப்பு, குகை; உரும் = இடி. 5.புள் = பறவை; புன்கண் = துன்பம். 6. செம்பியன் = சோழன்; மருகன் = வழித்தோன்றல். 7. கராம் = ஆண் முதலை, முதலையுள் ஒரு வகை; கலித்த = தழைத்த (நிறைந்த); குண்டு = ஆழம். 8. குட்டம் = ஆழம், மடு. 9. யாமம் = நள்ளிரவு; கதூஉம் = கவ்வும், பற்றும். 10. கடு = விரைவு; முரண் = வலிமை; நெடு = மிகுதி; இலஞ்சி = நீர்நிலை, மடு. 11. உறழ்வு = செறிவு; புரிசை = மதில்; செம்மல் = தலைமை; மூதூர் = பழைமையான ஊர். 12. வம்பு = கச்சு (முகபடாம்). 13. சிதைத்தல் = அழித்தல். 14. நெடுந்தகை = பெரியோன்; செரு = போர்.

கொண்டு கூட்டு: செம்பியன் மருக! நெடுந்தகை! விடரகத்து நாகம் புக்கென உரும்எறிந் தாங்கு, மூதூரகத்து வேந்துண்மையின் செருவத்துச் சிதைத்தல் வல்லை எனக் கூட்டுக.

உரை: புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த, ஓளி பொருந்திய வேலையுடைய, சினங்கொண்ட படையையுடைய செம்பியன் வழித்தோன்றலே! நஞ்சுடைய வெண்ணிறமான பற்களும், அழகிய தலையும், வலிமையும், சினமுமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், வானமே தீப்பிடித்ததுபோல், வேகத்துடன், பசுமையான கொடிகள் நிறைந்த அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், முதலைகள் நிரம்பிய ஆழமான அகழியின் இருண்ட இடங்களில், அங்கிருந்த முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும் அந்த அகழிக்கு அருகே உள்ள செம்பால் புனையப்பட்ட மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் கச்சு அணிந்த யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன்.

சிறப்புக் குறிப்பு: அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. மற்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல் ”முதல் வஞ்சி” என்ற துறையையும் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றுப் பாடல் 39-இல், “ புறவின் அல்லல் சொல்லிய” என்று மீண்டும் இந்தக் கதையை நினைவு கூர்கிறார். புலவர் தாமப்பல் கண்ணனார், பாடல் 43-இல், “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக” என்று சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுக்கு அவனுடைய முன்னோர்களின் ஒருவனான சிபி, புறாவைக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். புறநானூற்றுப் பாடல் 46 –இல் கோவூர் கிழார் “புறாவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!” என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கூறுவதையும் காண்க. மற்றும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சென்று வழக்குரைத்த போது, இப்பாடலில் உள்ள “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” என்ற சொற்றடரை இளங்கோவடிகள் பயன்படுத்தியிருப்பதையும் காண்க.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

39. புகழினும் சிறந்த சிறப்பு!

 
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவனின் முன்னோர்கள் ஈகையையும் பகைவர்களை வெற்றிகொள்வதையும் தங்கள் மரபாகக் கொண்டவர்கள். ஆகையால், கிள்ளிவளவனின் ஈகைச் சிறப்பும் வெற்றிகளும் அவனுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு அல்ல. அவன் தலைநகராகிய உறையூரில் எப்பொழுதும் முறையாக ஆட்சி நடைபெறுவதால் அதுவும் புகழ்தற்குரிய புதிய செயல் அல்ல. ஆனால், அண்மையில் அவன் சேரனின் வஞ்சி நகரத்தை வென்றான். அது மிகப் பெரிய வெற்றி. அதை எப்படிப் புகழ்ந்து பாடுவது என்று தெரியாமால் மாறோக்கத்து நப்பசலையார் திகைப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
5 ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
10 முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ!
யாங்கனம் மொழிகோ யானே? ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
15 இமையம் சூட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே.

அருஞ்சொற்பொருள்:
1. சொல்லிய = “களைய”; கறை = உரல், கருங்காலி. 2. வால் = வெண்மை; மருப்பு = கொம்பு; எறித்தல் = இட்டமைத்தல். 3. கோல் = துலாக்கோல்; நிறை = நிறுத்தல் அளவு; மருகன் = வழித்தோன்றல். 4. சார்தல் = சென்றடைதல் (நெருங்குதல்). 5. ஒன்னார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல்; துன்னுதல் = அணுகுதல். 6. தூங்கெயில் = ஆகாயக்கோட்டை; எறிந்த = அழித்த; ஊங்கணோர் = முன்னுள்ளோர். 7. அடுதல் = வெல்லுதல். 8. உறந்தை = உறையூர். 11. எழு = எழுந்த; சமம் = போர்; எழு = கணைய மரம்; திணி = செறிந்த. 12. கலிமான் = குதிரை. 14. பொன் = ஒளி; கோடு = சிகரம். 15. ஏமம் = காவல். 16. மாண் = சிறந்த; வினை = செயல் (வேலைப்பாடு); வானவன் = சேரன்; தொலைய = அழிய. 17. வாட்டுதல் = வருத்துதல், கெடுத்தல், அழித்தல். 18. பீடு = பெருமை; தாள் = முயற்சி, கால்.

கொண்டு கூட்டு: நிறை துலாஅம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழும் அன்று; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழும் அன்று; உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற்றாதலின்,முறைமை நின் புகழும் அன்று; கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கனம் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி, உரல் போன்ற பாதங்களையுடைய யானையின் வெண்ணிறமான தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட துலாக்கோலில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! அத்தகைய மரபில் வந்தவனாதலால், ஈதல் உனக்குப் புகழ் தருவது அன்று. பகைவர்கள் நெருங்குவதற்கு அஞ்சும், வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைத்துப் பார்த்தால், பகைவர்களை அழித்தல் உன் மரபினோருக்கு இயல்பான செயல். ஆதலால், அதுவும் உனக்கும் புகழ் தருவது அன்று. கேடின்றி, வீரம் பொருந்திய சோழனது உறையூரில் உள்ள அரசவையில் அறம் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது. ஆகவே, முறைசெய்து நல்லாட்சி புரிவதும் உனக்குப் புகழ் தருவது அன்று. வீரம் மிகுந்து, எழுந்த போரை வென்ற, கணையமரம் போன்ற வலிய தோள்களையும், கண்ணைக் கவரும் மாலைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழ மன்னனே! உயரத்தை அளந்து அறிய முடியாத, பொன்போன்ற ஓளியுடன் மிளிறும் நெடிய சிகரங்களையுடைய இமயத்தில் தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்தவனும், சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களையுடயவனுமாகிய சேரன் அழியுமாறு அவனுடைய வஞ்சி நகரத்தை அழித்த உன் பெருமைக்குரிய முயற்சியை நான் எப்படிப் பாடுவேன்?
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

40. ஒரு பிடியும் எழு களிரும்!

 
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருமுறை, ஆவூர் மூலங்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் காணச் சென்றார். அவனைக் காண்பது அரிதாய் இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அவனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இப்பாடலில், “இன்று உன்னைக் காண்பது எளிதாய் இருந்தது. அதுபோல், நீ என்றும் காட்சிக்கு எளியவனாகவும், இன்சொல் கூறுபவனாகவும் இருப்பாயாக.” என்று அறிவுரை கூறுகிறார். மற்றும், அவன் வெற்றிகளையும், அவன் நாட்டின் வளத்தையும் இப்பாடலில் நயம்படப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.


நீயே, பிறர்ஓம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டுஅவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழல்தைஇய
5 வல்லாளனை வயவேந்தே!
யாமேநின், இகழ்பாடுவோர் எருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல்எண் பதத்தை ஆகுமதி; பெரும!
10 ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1. ஓம்பல் = பாதுகாத்தல்; எயில் = அரண். 2. கடந்து = எதிர் நின்று; அட்டு = அழித்து. 4. தைஇய = இழைத்த. 5. வயம் = வெற்றி. 6. எருத்து = கழுத்து. 7. பொலித்தல் = சிறத்தல். 10. பிடி = பெண் யானை.

கொண்டு கூட்டு: நாடுகிழ வோயே! இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; அதனால், நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற, யாம் இன்று கண்டாங்கு என்றும் காண்குவம் எனக் கூட்டுக.


உரை: பகைவர்கள் பாதுகாத்த அரண்களை ஒருபொருட்டாக மதியாது, அவற்றை அழித்து, பகைவர்களின் முடியில் சூடிய பொன்னாலாகிய மகுடங்களை உருக்கி உன் கால்களில் வீரக் கழலாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவா! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்கவும், இன்று கண்டதுபோல் என்றும் காண்போமாக.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard