New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 21-30 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
புறநானூறு 21-30 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


 21. புகழ்சால் தோன்றல்

http://puram1to69.blogspot.com/

 
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார் (21). இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஐயூர் மூலம் என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பாடலில், இவர் வேங்கை மார்பனை வென்ற கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேர் என்னும் ஊர் தற்காலத்தில் காளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது. கானப்பேர் என்ற ஊர் வேங்கை மார்பன் என்ற மன்னனால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. அது பல அரிய அரண்களை யுடைய ஊராகச் சிறந்து விளங்கியது. அந்த அரண்களை எல்லாம் கடந்து, வேங்கை மார்பனை வெற்றிகொண்டதால் இப்பாண்டிய மன்னன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டான்.

இவன் ஒருபுகழ்பெற்ற அரசன் மட்டுமல்லாமல், தமிழில் மிகுந்த ஆர்வமும் புலமையும் உடையவனாக இருத்ததாக வரலாறு கூறுகிறது. இவன் அகநானூற்றைத் தொகுப்பித்ததாகவும், இவன் காலத்தில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் அதற்குத் தகுந்த சான்றுகள் இல்லை என்று கருதுகிறார்கள். இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒற்றுமை காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாககவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
5 கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க, வைகலும்
10 ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே.

அருஞ்சொற்பொருள்:
1. இறந்த = கடந்த; சால் = மிகுதி; தோன்றல் = அரசன், தலைவன். 2.வரை = எல்லை, நிறைவு; குண்டு = ஆழம்; கண் = இடம். 3. தோய்தல் = புணரல், உறைதல்; புரிசை = மதில்; விசும்பு = ஆகாயம். 4. ஞாயில் = மதிலில் அம்பெய்தற்குரிய துளை. 5. கல்லுதல் = துருவுதல்; பயில்தல் = செறிதல்; கடிமிளை = காவற்காடு. 6. குறும்பு = அரண்; உடுத்தல் = சூழ்தல்; எயில் = அரண். 9. இரங்க = வருந்த; வைகல் = நாள். 10. ஆடு = வெற்றி; குழைந்த = குழைத்த = தழைத்த; தழைத்தல் = மிகுதல், செழிதல். 11. முற்றுதல் = கொள்ளுதல்;கொற்றம் = வெற்றி. 13. பூத்தல் = பொலிதல்.

கொண்டு கூட்டு: கானப்பேர் எயில் மீட்டற்கு அரிது என வேங்கை மார்பன் இரங்கப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! பூக்க நின் வேலே எனக் கூட்டுக.

உரை: உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை யுடைய கானப்பேரை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக.

சிறப்புக் குறிப்பு: புறத்திணையில் அடங்கிய துறைகள் எல்லாம் போரின் வேறுவேறு நிலைகளைப் பற்றிக் கூறுபவை. அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தையும் செயல்முறையில் செய்து முடித்தவன் உக்கிரப் பெருவழுதி என்பதைப் ”புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே” என்று இலக்கிய நயத்துடன் ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார். உக்கிரப் பெருவழுதி வெற்றிக்கும் வீரத்திற்கும் ஒருசிறந்த எடுத்துகாட்டாக இருந்தான் என்று ஐயூர் மூலங்கிழார் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


-- Edited by Admin on Sunday 3rd of November 2019 09:43:42 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

22. ஈகையும் நாவும்!

 
பாடியவர்: குறுங்கோழியூர் கிழார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 17 - இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை சோம்பல் இல்லாதவன்; அவன் நாடு தேவருலகத்தைப் போன்றது; அவன் படை வலிமை மிகுந்தவன்; பிற வேந்தர்கள் அளிக்கும் திறையைக்கொண்டு தன்னிடம் பரிசு பெற வந்தவர்களை ஆதரிப்பவன்; அவனைப் பாடியவர்கள் மற்றவர்களைப் பாட வேண்டிய தேவையில்லாத அளவிற்குப் பரிசு அளிப்பவன்” என்று பலவாறாகக் குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

தூங்குகையான் ஓங்குநடைய
உறழ்மணியான் உயர்மருப்பின
பிறைநுதலான் செறல்நோக்கின
பாவடியால் பணைஎருத்தின
5 தேன்சிதைந்த வரைபோல
மிஞிறுஆர்க்கும் கமழ்கடாஅத்து
அயறுசோரும் இருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
10 பாஅல்நின்று கதிர்சோரும்
வானஉறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாள்மருங்கிலோர் காப்புஉறங்க,
அலங்குசெந்நெல் கதிர்வேய்ந்த
15 ஆய்கரும்பின் கொடிக்கூரை
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா உலக்கையால்
கலிச்சும்மை வியல்ஆங்கண்
20 பொலம்தோட்டுப் பைந்தும்பை
மிசைஅலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரில் பெயர்புபொங்க;
வாய்காவாது பரந்துபட்ட
25 வியன்பாசறைக் காப்பாள!
வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்புஆர்த்தும்
ஓங்குகொல்லியோர் அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
30 வாழிய பெரும! நின் வரம்பில் படைப்பே
நிற்பாடிய அலங்குசெந்நாப்
பிறர்இசை நுவலாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35 புத்தேள் உலகத்து அற்றுஎனக் கேட்டுவந்து
இனிது கண்டிசின்; பெரும! முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.


அருஞ்சொற்பொருள்:
1. தூங்குதல் = அசைந்தாடுதல்; ஓங்கல் = உயர்ச்சி. 2.உறழ்தல் = மாறுபடுதல்; மருப்பு = கொம்பு. 3. செறல் = கோபித்தல். 4.பா = பரந்த; பணைத்தல் = பருத்தல்; எருத்து = கழுத்து. 5. சிதைதல் = சிதறுதல்; வரை = மலை. 6. மிஞிறு = தேனீ; ஆர்த்தல் = ஒலித்தல்; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம். 7. அயறு = புண்ணிலிருந்து வடியும் நீர்; சோர்தல் = விழுதல். 8.மைந்து = வலிமை; மலி = மிகுதி; மழ = இளமை. 9.கந்து = தூண், யானை கட்டும் தறி; சேர்பு = பொருந்தி. 10. சோர்தல் = விழுதல். 13. மருங்கு = பக்கம்; காப்பு = பாதுகாவல். 14. அலங்குதல் = அசைதல், ஒளி செய்தல். 15. ஆய் = மென்மை; கொடி = ஒழுங்கு. 16. சாறு = திருவிழா. 18. ஆனா = நீங்காத (அமையாத). 19. கலி = ஒலி, முழக்கம்; சும்மை = ஆரவாரம். 20. பொலம் = பொன், அழகு; தோடு = பூவிதழ்; மிசை = மேற்பக்கம். 21. அலங்குதல் = அசைதல்; உளை = தலை; பனைப்போழ் = பனந்தோடு. 23. ஓதம் = கடல்; பெயர்பு = கிளர்ந்து. 26. அயன் = அகன்ற. 27. கடும்பு = சுற்றம்; ஆர்த்துதல் = கொடுத்தல், நிறைவித்தல். 29. விறல் = வெற்றி; வெம்மை = விருப்பம். 30. படைப்பு = செல்வம். 32. நுவலுதல் = சொல்லுதல். 34. ஓம்புதல் = பாதுகாத்தல். 35. அற்று = அத்தன்மையது. 36. முனிவு = வெறுப்பு, கோபம். 38. படுத்தல் = செய்தல்; துஞ்சுதல் = சோம்புதல்

கொண்டு கூட்டு: காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பிய நாடு புத்தேள் உலகத்து அற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய எனக் கூட்டுக.

உரை: அசையும் தும்பிக்கை, தலை நிமிர்ந்த நடை, மாறி மாறி ஒலிக்கும் மணிகள், உயர்ந்த கொம்புகள் (தந்தங்கள்), பிறை நிலா போன்ற நெற்றி, கோபம் மிகுந்த பார்வை, அகன்ற காலடிகள், பருத்த கழுத்து ஆகியவற்றுடன் வலிமை மிகுந்த இளம் யானை ஒன்று தான் கட்டப்பட்டிருக்கும் கம்பத்திலே நின்று அசைந்து கொண்டிருக்கிறது. அந்த யானையின் பெரிய தலையில் உள்ள புண்களிலிருந்து மணமுள்ள மதநீர் வடிகிறது. அந்த மதநீரை நுகர்வதற்கு, தேனீக்கள் யானையின் தலையில் ஒலியுடன் மொய்க்கின்றன, அந்த யானையின் தலை தேன்கூடு சிதைந்த மலைபோல் காட்சியளிக்கிறது. அந்த யானையின் பக்கத்தில், முத்து மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, வானத்திலிருந்து ஒளிவிடும் திங்கள்போல் விளங்கும், வெண்கொற்றக் குடையின் பாதுகாவலில் வீரர்கள் வாள் அணியாமல் உறங்குகிறார்கள்.

அசையும் செந்நெல் கதிர்களால் வேயப்பட்டு, கரும்பால் ஒழுங்காகக் கட்டப்பட்ட கூரைவீடுகள் வேறுவேறு அழகுடன் விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சி அளிக்கின்றன. அங்கே, பெண்கள் உலக்கையால் குத்தும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. மிகுந்த ஆரவாரமுடைய அகன்ற இடத்தில், பொன்னாலான இதழ்களையுடைய, பசுமையான தும்பை மலர்களுடன், அசையும் பனையோலைகளைச் செருகிக்கொண்டு சினத்தோடு வீரர்கள் குரவை ஆடுகிறார்கள். அவர்களின் குரவைக் கூத்தின் ஒலி கடல் ஒலிபோல் ஆரவாரமாக உள்ளது. உன்னுடைய பெரிய படையைக்கண்டு பகைவர்கள் அஞ்சுகிறார்கள். அகன்ற பாசறையையுடையவனே!

பகைமன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைப்பொருளால் உன்னை அடைந்தவர்களின் சுற்றத்தாரை நீ வாழச் செய்கிறாய். உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! யானையின் பார்வை போன்ற கூர்மையான பார்வையை உடையவனே! வெற்றியை விரும்பும் சேஎய் என்று அழைக்கப் படுவோனே! தலைவ, நீ வாழ்க.

உன் செல்வம் எல்லை இல்லாதது. உன்னப் பாடிய செவ்விய நாவால் பிறர் புகழைப் பாடவேண்டிய தேவை இல்லாதவாறு, குறையாது கொடுக்கும் ஆற்றல் மிகுந்த எம் அரசே!

மாந்தரஞ் சேரல் இரும்பொறையால் பாதுகாக்கப்படும் நாடு தேவருலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்தேன். என் கண்ணுக்கு இனிமையாக உன்னைக் கண்டேன். தலைவ! நீ சோம்பல் இல்லாதவன்; முயற்சியில் வெறுப்பில்லாமல், வேற்று நாட்டில் சென்று தங்கும் படையுடன், உன் நாட்டில் வளம் பெருகுமாறு ஆட்சி செய்வாயாக.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

23. நண்ணார் நாணுவர்!

 
பாடியவர்: கல்லாடனார் (23, 25, 371, 385, 391). இவர் கல்லாடம் என்ற ஊரினராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ”கல்லாடத்துக் கலந்து இனிது அருள்” என்ற மாணிக்கவாசகர் வாக்கால், கல்லாடம் என்பது ஒருசிவத்தலம் என்று அறியப்படுகிறது. ஆனால், ”கல்லாடம் இப்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது? அது எங்கே உள்ளது?” போன்ற வினாக்களுக்கு விடை தெரியவில்லை. இவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அம்பர் கிழான் அருவந்தை, பொறையாற்று கிழான் ஆகியோரைப் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுட்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் (9, 83, 113, 171, 198, 209, 333) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களையும் (260, 269) இயற்றியுள்ளார். இவர் பாடல்களில் பல வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.

பாடலின் பின்னணி: ”பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் யானைகள் பகைவர்களின் நீர்த்துறைகளைக் கலக்கின. அவன் படைவீரர்கள் பகைவர்களின் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிஞ்சியிருப்பவற்றை நிலத்தில் வீசி எறிந்தனர்; பகைவர்களின் ஊர்களின் பல பக்கங்களிலும் தீ மூட்டினர். நெடுஞ்செழியனும் அவன் படைவீரர்களும் இத்தகைய கொடிய செயல்களைத் தொடர்ந்து செய்வார்களோ” என்று பகைவர்கள் அஞ்சுவதாகவும், தான் கடத்தற்கரிய காட்டு வழியாக அவனைப் பார்க்க வந்ததாகவும் இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
நல்லிசை வஞ்சி: பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைப் பற்றிக் கூறுதல்.

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்னநின்
5 கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
10 வினைபுனை நல்லில் வெவ்வெரி இனைப்பக்
கனைஎரி உரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோன்என
15 ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்பநின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
20 பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.

அருஞ்சொற்பொருள்:
1.வெளிறு = வெண்ணிறம்; நோன்மை = வலிமை; காழ் = வயிரம் (உறுதி); காழ்த்தல் = முற்றுதல்; பணை = விலங்கின் படுக்கை, கூடம்; நிலை = நிற்றல்; முனை = வெறுப்பு. 3. கார் = கார்காலம்; நறுமை = நன்மை. 4. நவைதல் = கொல்லுதல். 5. கொடு = வளைந்த; கூளியர் = படைவீரர்; கூளி = உறவு, வலிமை. 6. மிச்சில் = எஞ்சியது. 7. பதம் = உணவு. 8. வடித்தல் = கூராக்குதல்; நவிலுதல் = பழகுதல், கற்றல்; நவியம் = கோடரி. 9. துளங்கல் = கலங்கல் (நிலை கலங்கல்); கா = சோலை (காடு). 10. இனைப்ப = கெடுப்ப. 11. கனை = மிகுதி; உரறுதல் = முழங்குதல்; மருங்கு = பக்கம். 12. நண்ணார் = பகைவர், தலை = இடம். 14. துன்னுதல் = நெருங்குதல்; நெளிதல் = சுருளுதல்; வியன் = மிகுதி (பெரிய). 16. அட்ட = அழித்த (கொன்ற). 17. காலன் = இயமன்; முன்பு = வலிமை. 18. அறுதல் = இல்லாமற் போதல்; மருப்பு = கொம்பு. எழில் = உயர்ச்சி (பெரிய); கலை = ஆண்மான், பால் = இடம். 19. மறி = மான் குட்டி; தெறித்தல் = பாய்தல் (துள்ளல்); மடம் = மென்மை; பிணை = பெண்மான். 20. பூளை = ஒரு செடி; பறந்தலை = பாழிடம். 21. வேளை = ஒரு பூண்டு; கறித்தல் = கடித்துத் தின்னுதல். 22. அத்தம் = பாலை நிலம், வழி.

கொண்டு கூட்டு: கால முன்ப, துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோன் என உட்கொண்டு, கண்டனன் வருவல் அத்தம் ஆகிய காடே எனக் கூட்டுக.

உரை: வலிய, முற்றிய மரத்தூண்களால் கட்டப்பட்ட கூடத்தில் இருப்பதை வெறுத்து, வெளியேறிய யானைகள் நீரை உண்டதால் நீர்த்துறைகள் கலங்கி உள்ளன. கார்காலத்தில், மணமுள்ள கடம்பமரத்தின் பசுமையான இலைகளுடன் கூடிய மாலைகளை அணிந்து, சூரபன்மனைக் கொன்ற முருகனின் படைவீரர்களைப் போன்ற உன் வீரர்கள் கூரிய நல்ல அம்புகளையும், வளைந்த வில்லையும் உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிச்சமிருப்பதைப் பகைவர்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்த முடியாதவாறு நிலத்தில் சிதறினார்கள். உன் வீரர்கள் கூர்மையான கோடரியைக்கொண்டு காவல் மரங்களை வெட்டியதால் காவற் காடுகள் நிலைகுலைந்தன. பெரிய நகரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் செய்யப்பட்ட நல்ல வீடுகளில் சமைப்பதற்காக மூட்டிய தீயை அவிக்கும் வகையில் பெரிய தீயைப் பல பக்கங்களிலும் உன் வீரர்கள் மூட்டியதைப் பார்த்த உன் பகைவர்கள் நாணுகிறார்கள். நீ, நாள்தோறும் தம்மிடம் வந்து இன்னும் இது போன்ற செயல்களைச் செய்வாயோ என்று எண்ணுகிறார்கள்; யாவரும் அணுகமுடியாத துணிவுடையவன் என்றும் எண்ணுகிறார்கள். நீ, பூமியால் சுமக்க முடியாத அளவுக்குப் பெரிய படையை உடையவன்; தலையாலங்கானத்தில் பகைவரை இயமன்போல் எதிர்நின்று அழித்தவன். நீ மிகுந்த வலிமையுடையவன். தன் கொம்புகளை இழந்த பெரிய ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதால், அதன் துணையாகிய மெல்லிய பெண்மான் தன் சிறிய குட்டியை அணைத்துக்கொண்டு துள்ளிய நடையுடன், பூளைச்செடி வளர்ந்த அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையின் வெண்ணிறப் பூக்களைத் தின்னும் ஆள் நடமாட்டம் இல்லாத, கடத்தற்கரிய காட்டு வழியாக உன்னைக் காணவந்தேன்.

சிறப்புக் குறிப்பு: கல்லாடனார் தான் காட்டு வழியாக வந்த பொழுது ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதையும் அம்மானின் துணையாகிய பெண்மான் தன் குட்டியுடன் அச்சத்தோடும் உண்ணுவதற்கு நல்ல உணவில்லாமல் வருந்ததத் தக்க நிலையில் இருப்பதைக் கண்டதாகவும் இப்பாடலில் கூறுகிறார். அவர் கூறுவது, படைவீரர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவியரும் குழந்தைகளும் படும் துன்பத்தை மறைமுகமாகப் பாண்டியனுக்குச் சுட்டிக்காட்டுவதாகத் தோன்றுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

24. வல்லுநர் வாழ்ந்தோர்!

 
பாடியவர்: மாங்குடி கிழார் (24, 26, 313, 335, 372, 396). இவர் மாங்குடி மருதனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் ஆறு பாடல்கள் இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டில், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்ட மதுரைக் காஞ்சியையும், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (164, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (120, 123) இயற்றியுள்ளார். “நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக” என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து, அவன் இவரால் பாடப்படுவதை மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது தெரியவருகிறது.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.

பாடலின் பின்னணி: எவ்வி என்பவனுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான். அவ்வெற்றிக்குப் பிறகு, அவன் மேலும் போரில் ஈடுபடாமல், மகளிரோடு மகிச்சியோடு வாழுமாறு இப்பாடலில் மாங்குடி மருதனார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நெல்அரியும் இருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
தெண்கடல்திரை மிசைப்பாயுந்து,
திண்திமில் வன்பரதவர்
5 வெப்புடைய மட்டுண்டு,
தண்குரவைச் சீர்தூங்குந்து,
தூவற்கலித்த தேம்பாய்புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,
10 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஓங்குமணற் குவவுத்தாழைத்
15 தீநீரோடு உடன்விராஅய்
முந்நீர்உண்டு முந்நீர்ப்பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
20 கயலார் நாரை போர்வில் சேக்கும்,
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது
25 படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே;
நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
30 இரவன் மாக்கள் ஈகை நுவல,
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
35 மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1.அரித்தல் = அறுத்தல் (அறுவடை செய்தல்); இரு = பெரிய; தொழுவர் = மருதநில மக்கள் (உழவர்). 4. திண் = வலி; திமில் = மரக்கலம், தோணி; பரதவர் = நெய்தல் நில மக்கள் (மீனவர்). 5. மட்டு = கள்; தண்மை = மென்மை; குரவை = கூத்து. 6. சீர் = தாளவொத்து; தூங்கல் = ஆடல்; உந்துதல் = பொருந்துதல். 7. தூவல் = நீர்த்துளி; கலித்தல் = தழைத்தல்; பாய = பரப்பிய. 8. இணர் = கொத்து; மிலைதல் = சூடுதல்; மைந்தர் = ஆடவர். 9. எல் = ஒளி; தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல். 10. கானல் = கடற்கரைச் சோலை. 11. முண்டகம் = நீர் முள்ளி; கோதை = பூமாலை. 12. குரும்பை = நுங்கு (தென்னை, பனை முதலியவற்றின் இளங்காய்). 13. பூ = பொலிவு, அழகு.
14. குவவுதல் = குவிந்த; தாழை = தென்னை. 15. விரவுதல் = கலத்தல். 17. உறையுள் = தங்குமிடம்; தாங்குதல் = ஆதரித்தல், நிறுத்துதல், தடுத்தல்; கெழீஇய = பொருந்திய. 19. புதவு = நீர் பாயும் மடைவாய், மதகு, கதவு; மிழலை = மிழலைக் கூற்றம்; கழனி = வயல். 20. சேக்கை = விலங்கின் படுக்கை. 22. குப்பை = தானியக் குவியல். முத்தூறு = முத்தூற்றுக் கூற்றம். 23. கொற்றம் = வெற்றி. 24. நாண்மீன் = நட்சத்திரம். 26. மூத்த = முதிர்ந்த. 28. ஆடு = வெற்றி; விழு = சிறந்த; திணை = குடி. 29. வலம் = வலிமை; தாள் = முயற்சி; இரவன் = இரக்கும் பரிசிலர். 32. தேறல் = மது; மடுத்தல் = உண்ணுதல், விழுங்குதல். 34. வல்லுநர் = வல்லவர்.

கொண்டு கூட்டு: செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன் படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார்; ஆதலால், பெரும, வாழ்த்த, நுவல, மடுப்ப, மகிழ்சிறந்து இனிதுஒழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோர் என்ப எனக் கூட்டுக.

உரை: நெல்லை அறுவடை செய்யும் உழவர்கள் கதிரவனின் வெயிலின் வெப்பத்தை வெறுத்து, தெளிந்த கடல் அலைகள் மீது பாய்வர். வலிய மரக்கலங்களை உடைய மீனவர்கள், புளித்த கள்ளை உண்டு மெல்லிய குரவைக் கூத்தைத் தாளத்திற்கேற்ப ஆடுவர். கடல் நீர்த்துளிகளால் தழைத்து வளர்ந்த புன்னை மரங்களின் தேன்நிறைந்த மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்த ஆடவர்கள், ஒளிவீசும் வளை அணிந்த கைகளையுடைய மகளிரைக் அன்புடன் கையால் தழுவி ஆடுவர். வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த, குளிர்ந்த, நறுமணம் பொருந்திய கடற்கரைச் சோலையில் நீர்முள்ளிப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மகளிர், பெரிய பனை நுங்கின் நீர், அழகிய கரும்பின் இனிய சாறு, உயர்ந்த மணற் குவியலில் தழைத்த தென்னையின் இளநீர் ஆகிய மூன்றையும் கலந்து குடித்துக் கடலில் பாய்ந்து விளையாடுவர். இவ்வாறு பல்வேறு மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய நாடு மிழலைக் கூற்றம். அந்நாட்டின் தலைவன், குறையாது கொடுக்கும் கொடைத்தன்மையையுடைய வேளிர் குலத்தைச் சார்ந்த எவ்வி என்பவன்.

மிழலைக் கூற்றத்தைப் போலவே, முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாடும் ஒருவளமான நாடு. அந்நாட்டில், நீர் பாயும் மதகுகள் உள்ளன. அங்கே, வயல்களில் உள்ல கயல் மீன்களை மேய்ந்த நாரை வைக்கோற்போரில் உறங்குகின்றன. பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகள் உள்ளன; வயல்களில் விளைந்த நெல் குவியல் குவில்களாகக் கிடக்கின்றன. அந்த நாட்டை ஆள்பவனும் வேளிரின் குலத்தைச் சார்ந்தவன்தான்.

அத்தகைய மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்ற செழியனே! ஒளி பொருந்திய நீண்ட குடையையும், கொடிபறக்கும் தேரையையும் உடைய செழியனே! நீ நீண்ட நாட்கள் வாழ்க! உன் பகைவர்கள் நீண்ட நாட்கள் வாழாது ஒழிக! உயிருடன் கூடிய உடல் போன்று உன்னுடன் தொடர்புடைய உன் வெற்றி மிகுந்த வாட்படை வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மகளிர், பொன்னானாலான பாத்திரங்களில் கொண்டுவந்து தரும் குளிர்ந்த, மணமுள்ள மதுவைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறந்து வாழ்வாயாக! தலைவ! இந்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிஞர்கள் கூறுவர். அவ்வாறு இல்லாமல், இந்தப் பரந்த உலகத்தில் தோன்றிப் புகழ் பெருக வாழாமல் வாழ்ந்து முடித்தோர் பலர். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்ததாகவே கருதப்படுவர்


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 25. கூந்தலும் வேலும்!

 
பாடியவர்: கல்லாடனார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோல்வியுற்ற சேரனும் சோழனும் இறந்தனர்; அவர்களின் படைவீரர்கள் பலரும் இறந்தனர். இறந்தவர்களின் மனைவியர் தம் கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பை மேற்கொள்ளும் அவலக் காட்சியைக் கண்டதும் நெடுஞ்செழியன் போரை நிறுத்தியதாக இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
5 உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
10 முலைபொலி அகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே.

அருஞ்சொற்பொருள்:
1.விசும்பு = ஆகாயம்; பாய்தல் = பரவுதல். 2. ஈண்டு = விரைவு. 3. உரவு = வலி; திருகிய = வளைந்த, முறுகிய; உரு = அச்சம். 5. உடலுதல் = பொருதல்; துப்பு = வலி; ஒன்றுமொழிதல் = வஞ்சினம் கூறுதல். 6. அணங்கு = வருத்தம்; பறந்தலை = போர்க்களம்; உணங்கல் = துன்பப்படல். 8. திரிபு = வேறுபாடு; எறிதல் = நீக்கல், வெல்லுதல்; திண் = வலி; மடை = ஆயுத மூட்டு. 9. சிதைதல் = கெடுதல், அழிதல். 10. ஆகம் = மார்பு, நெஞ்சு; உருத்தல் = வெப்புமுறச் செய்தல்; நூறுதல் = அழித்தல், நசுக்குதல், இடித்தல். 11. படுத்தல் = செய்தல்; பூசல் = பெரிதொலித்தல். 12. கூர்த்தல் = மிகுத்தல்; கூர் = மிகுதி. 13. அவிர்தல் = விளங்கல்; அறல் = கருமணல்; கடுக்கும் = ஒக்கும். 14. குவை = திரட்சி; இரு = கரிய; கொய்தல் = அறுத்தல்.

கொண்டு கூட்டு: செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதல் உய்ந்தது எனக் கூட்டுக.

உரை: விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, விரைந்து செல்லும் தன்மையிலிருந்து தவறாது, வலிய, வெப்பம் மிகுந்த, அச்சம் பொருந்திய கதிரவனும், நிலாவொளியைத் தரும் திங்களும் வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல விளங்கி, வஞ்சினம் கூறிய, வலிமையுடைய இரு வேந்தர்களும் (சேரனும் சோழனும்) அழியுமாறு நீ போர் செய்தாய்; அவ்விருவரையும் கொடிய போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்தாய்; அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகைவர்களின் வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய். செழியனே! போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டு, துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களை வெப்பம் உண்டாகுமாறு அடித்துக்கொண்டார்கள். அதைக் கண்டதும் நீ போரை நிறுத்தியதால், உன் வேல்கள் தொடர்ந்து பகைவர்ளைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, அவைகள் சேதமில்லாமல் தப்பின.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 26. நோற்றார் நின் பகைவர்!

 
பாடியவர்: மாங்குடி மருதனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 24-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்களில் வெற்றி பெற்றுச் சிறந்து விளங்கியதைக் கண்ட மாங்குடி மருதனார், “வேந்தே! நீ நான்மறை கற்ற அந்தணர்கள் சூழ வேள்விகள் செய்தாய். உன் பகைவர்கள் உன்னிடம் தோற்று வீர மரணம் அடைந்ததால் அவர்கள் தேவருலகம் சென்றார்கள்.” என்று அவனைப் இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளிகடல் இரும்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன்அகற்றவும்,
களன்அகற்றிய வியல்ஆங்கண்
5 ஒளிறுஇலைய எஃகுஏந்தி
அரைசுபட அமர்உழக்கி,
உரைசெல முரசுவெளவி,
முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீஇத்
10 தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
15 வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = பெருமை; இரு = பெரிய; குட்டம் = ஆழம். 2. வளி = காற்று; புடைத்தல் = குத்துதல், தட்டுதல்; கலம் = மரக்கலம். 4. வியல் = அகலம். 5. எஃகு = வேல், ஆயுதம். 6. அரைசு = அரசன்; அமர் = போர்; உழக்குதல் = கலக்குதல், வெல்லல். 7. உரை = புகழ். 9. புனல் = நீர். 10. துழத்தல் = கலத்தல்; வல்சி = உணவு. 11. அடு களம் = போர்க்களம்; அடுதல் = கொல்லல். 12. ஆன்ற = மாட்சிமைப்பட்ட, நிறைந்த; கொள்கை = அறிவு, கோட்பாடு, நோன்பு. 13. முதல்வர் = தலைவர்; மன்னுதல் = நிலைபெறுதல். 15. வாய் = சிறப்பு; முற்றிய = முடித்த. 16. நோற்றல் = தவஞ் செய்தல், பொறுத்தல்; மன்ற – அசைச் சொல், மிக. 17. மாற்றார் = பகைவர். 18. ஆண்டு = அவ்வுலகம்.

கொண்டு கூட்டு: செழிய, வேந்தே, ஆற்றாராயினும் ஆண்டு வாழ்வோராகிய நின் பகைவர் மாற்றெரென்னும் பெயர்பெற்று நோற்றார் எனக் கூட்டுக.

உரை: ஆழம் மிகுந்த பெரிய கடலில் காற்றால் தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல, உன் யானை போர்க்களத்தில் பகைவர்களின் படையை ஊடுருவிச் சென்றது. அந்த யானை சென்ற அகன்ற பாதையில் ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்து நின்ற வேந்தர்களை அழித்து அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடியணிந்த தலைகளை அடுப்பாகவும், அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலைபெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ்வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு ஆகியவற்றையுடைய அந்தணர்களை உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள்.

உன்னோடு மாறுபட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள்தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 27. புலவர் பாடும் புகழ்!

 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ( 27 – 30, 325). இவர் உறையூரைச் சார்ந்தவர். இவர் தந்தையாரின் பெயர் முதுகண்ணன். இவர் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடியவர். இவர் இயற்றிய பாடல் குறுந்தொகையிலும் ஒன்று உண்டு (133). புறநானூற்றுப் பாடல் 29 -இல் “நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்பார்க்கு இனன் ஆகிலியர்” என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறிகிறார். மற்றும், அதே பாடலில், உலகம் தோன்றி நின்று மறைவதைக் கூத்தர்களின் கோலத்திற்கு உவமையாகக் கூறுகிறார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி (27 - 33, 45, 68, 225, 382, 400). சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். மணக்கிள்ளியின் மகள் நற்சோனை, சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள். சேரன் செங்குட்டுவன் மற்றும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆகிய இருவரும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த பிள்ளைகள்.

ஒரு சமயம், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பனுக்கும் இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு, தன் தந்தையைப்போல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான். நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டாலும், நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார் என்னும் புலவர், நெடுங்கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று அறிவுரை கூறினார் (புறநானூறு – 44). நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது.

நலங்கிள்ளி ஒரு சிறந்த வீரனாகவும் அரசனாகவும் இருந்தது மட்டுமல்லாமல் மிகுந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் இருந்ததாகத் தெரிரிகிறது. இவன் இயற்றியதாகப் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் (73, 75) உள்ளன. இவன் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் தேர் வண்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “சிறந்த குடியில் பிறந்து அரசர்களாக இருக்கும் பலருள்ளும் புலவரால் பாடப்படும் புகழுக்கு உரியவர்கள் சிலரே. அவ்வாறு புகழ் பெற்றவர்கள் ஓட்டுநர் இன்றித் தானே இயங்கும் வானவூர்தியில் ஏறி விண்ணுலகம் செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வளர்தலும், தேய்தலும், இறத்தலும், பிறத்தலும் இவ்வுலகின் இயற்கை; ஆகவே, வருந்தி வருவோர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அருள் செய்க.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
5 உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்
10 கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
15 வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. பயத்தல் = கொடுத்தல், பிறப்பித்தல் (பூத்த); கேழ் = நிறம். 2. அலரி = மலர் (பூவிற்குப் பொதுப் பெயர்); நிரை = ஒழுங்கு, படைவகுப்பு (வரிசை). 3. விழு = சிறந்த; திணை = குடி. 5. உரை = புகழ். 6. மரை = தாமரை. 8. வலவன் = ஓட்டுபவன்; ஊர்தி = வாகனம். 9. எய்துதல் = அடைதல். 11. தேய்தல் = குறைதல்; பெருகல் = வளர்தல். 14. புத்தேள் = தெய்வம். 15, வல்லுநர் = அறிஞர். 16. மருங்கு = விலாப்பக்கம், இடை, வடிவு. 19. துப்பு = வலிமை.

உரை: சேற்றிலே வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளிபொருந்திய தாமரை மலரில் உள்ள பல இதழ்களின் வரிசைபோல், உயர்வு தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்த அரசர்களை எண்ணிப்பார்க்கும்பொழுது, புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல்களுக்கும் உரியவர்கள் சிலரே. தாமரையின் இலைபோலப் பயனின்றி மறைந்தவர் பலர். தாம் செய்ய வேண்டிய நல்வினைகளைச் செய்து முடித்தவர்கள் புலவர்களால் பாடப்படும் புகழுடையவர்களாவார்கள். மற்றும், அவர்கள் ஆகாயத்தில் ஒட்டுநர் தேவையில்லாமல் தானாகவே செல்லும் விமானங்களைப் பெறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி! தேய்தல், வளர்தல், மறைதல், இறந்தவர்கள் மீண்டும் பிறத்தல் போன்ற உண்மைகளை அறியாதவர்களுக்கு அறிவுறுத்தும் திங்கள் தெய்வம் உலாவும் இவ்வுலகத்தில், ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும், உன்னிடம் வருந்தி வந்தவர்களின் நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருள் செய்வாயாக! குறைவற்ற வலிமையையுடைய உன் பகையை எதிர்கொண்டவர்கள் அருளில்லாதவர்களாகவும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆவார்களாக.

சிறப்புக் குறிப்பு: நூறு என்ற சொல் ஒரு எண்ணைக் குறிக்காமல் பல என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ”நூற்றிதழ் தாமரைப்பூ” என்று (ஐங்குறுநூறு – 20) பிறரும் பாடியுள்ளனர்.

”உரை” என்ற சொல் எல்லோராலும் புகழப்படும் புகழையும், ”பாட்டு” என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 28. போற்றாமையும் ஆற்றாமையும்!

 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”குருடு, கூன், செவிடு, ஊமை போன்ற குறைகளுடன் பிறப்பவர்களின் வாழ்க்கை பயனற்றது. நீ அத்தகைய குறைகளுடன் கூடிய பிறவி உடையன் அல்லன். உன் பகைவர்கள் உனக்குப் பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள். உன் நாடு வளமானதாக உள்ளது. உன் செல்வத்தை அறம், பொருள் இன்பம் ஆகிய உறுதிப் பொருட்களைப் அடைவதற்குப் பயன்படுத்துவதுதான் நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற வழியாகும்.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
5 பேதைமை அல்லது ஊதியம் இல்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10 கானத் தோர்நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
15 அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே.

அருஞ்சொற்பொருள்:
1. சிதடு = குருடு; பிண்டம் = தசை. 2. குறள் = குறுமை (ஈரடி உள்ள மனிதன்); ஊம் = ஊமை. 3. மா = விலங்கு; மருள் = மயக்கம் (அறிவு மயக்கம்); உளப்பாடு = உள்ள தன்மை. 4. எச்சம் = குறைபாடு. 5. பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு; ஊதியம் = பயன். 7. திறம் = கூறுபாடு, தத்துவம். 8. வரி = கோடு; பொறி = புள்ளி. 9. ஏனல் = தினைப்புனம். 12. புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்; கழை = கட்டை, கழி. 13. போது = மலரும் பருவத்திலுள்ள அரும்பு. 14. கடுக்கும் = ஒக்கும். 17. போற்றுதல் = பாதுகாத்தல்.

உரை: சிறப்பில்லாத குருடு, உருவமில்லாத தசைப் பிண்டம், கூன், குட்டை, ஊமை, செவிடு, விலங்கின் வடிவம், அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறையுள்ள பிறவிகள் எல்லாம் பயனற்றவை என்று அறிஞர்கள் முன்னரே கூறினர். நான் சொல்ல வந்தது, ”எது பயனுள்ள பிறவி” என்பது.

வட்ட வடிவமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவல் கோழிகள் கூவித் தினைப்புனம் காப்பவர்களை எழுப்பும் காட்டில் உன் பகைவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ வளமான நாட்டில் உள்ளாய். உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்களின் வேலிக்கு வெளியே இருப்பவர்கள் கரும்பு வேண்டும் என்று கேட்பதால், வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி வேலிக்கு வெளியே எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் தண்டுகள், அருகில் உள்ள குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுவதால் அவ்வரும்புகள் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய மருத நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வம் நீ அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்குப் பயன்படட்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்கு உன் செல்வத்தை நீ பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறியவனாவாய்.

சிறப்புக் குறிப்பு: இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்தி, அறவழியில் நின்று, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்தால், மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 29. நண்பின் பண்பினன் ஆகுக!

 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், ”வேந்தே, உன் அரசவையில், நாட்பொழுதில் பாணர்கள் சூழ்ந்து உன் புகழ் பாடட்டும்; அதன் பின்னர், மகளிர் உன் தோள்களைத் தழுவி உனக்கு இன்பம் அளிக்கட்டும்; கொடியவர்களைத் தண்டித்து நல்லோருக்கு நீ அருள் செய்வாயாக; மற்றும், நீ சிற்றினம் சேராது வாழ்வாயாக; உன் படைவீரர்கள் உன்னிடம் வருபவர்களுக்கு உதவும் பண்புடையவர்களாக இருப்பார்களாக; இவ்வுலகம் கூத்தாடுபவர்களின் களம் போன்றது. கூத்தர்கள் மாறிமாறி வேடம் அணிந்து வருவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறையே தோன்றி மறையக் கூடியவை. உன் சுற்றத்தார் உனக்கு மகிழ்ச்சி அளிப்பவர்களாக இருப்பார்களாக; உன் செல்வம் உனக்குப் புகழ் தருவதாக.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

அழல்புரிந்த அடர்தாமரை
ஐதுஅடர்ந்த நூல்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலம்நறுந் தெரியல்
பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப்
5 பாண்முற் றுகநின் நாள்மகிழ் இருக்கை;
பாண்முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள்முற் றுகநின் சாந்துபுலர் அகலம்; ஆங்க,
முனிவில் முற்றத்து இனிதுமுரசு இயம்பக்
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
10 ஒடியா முறையின் மடிவிலை யாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்;
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழிமடல் விறகின் கழுமீன் சுட்டு
15 வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும்நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
20 சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆகநின் செய்கை; விழவின்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
25 நகைப்புறன் ஆகநின் சுற்றம்;
இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே.

அருஞ்சொற்பொருள்:
1. அழல் = நெருப்பு; அடர் = தகடு. 2. ஐது = நுண்ணியது, நெருக்கம். 3. பொலன் = பொன்; தெரியல் = பூமாலை; நறுமை = நன்மை. 4. பாறுதல் = பரந்து கிடத்தல்; இரு = கரிய. 5. பாண் = பாணர்; முற்றுதல் = சூழ்தல்; இருக்கை = இருப்பிடம். 7. புலர்தல் = உலர்தல்; அகலம் = மார்பு. 8. முனிவு = வெறுப்பு, கோபம். 9. தெறுதல் = அழித்தல். 10. ஒடியா = வளையாத, முறியாத; மடிவு = சோம்பல். 13. ஓப்புதல் = ஓட்டுதல். 14. ஒழிதல் = அழிதல்; மடல் = பனைமட்டை; விறகு = எரிகட்டை; கழி = கடலையடுத்த உப்பங்கழி (உப்பாறு). 15. வெங்கள் = விருப்பமான கள்; தொலைச்சிய = அழித்த. 18. பற்றலர் = பகைவர். 19. கூவை = ஒருவகைச் செடி; துற்றல் = குவிதல், நெருங்கல்(வேய்தல்). 21. நண்பு = நட்பு. 22. ஊழ் = முறை; விழவு = விழா. 23. கோடியர் = கூத்தர்; நீர்மை = குணம், தன்மை. 25. புறன் = இடம்.

கொண்டு கூட்டு: நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின், அகலம் மகளிர் தோள் முற்றுக; நீ மடிவிலையாய் இனனாகாது ஒழிவாயாக; வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்; நின் பற்றா மாக்களைப்போல சிறுமனை வாழும் வாழ்க்கையின் நீங்கி வருநர்க்கு உதவியாற்றும் நண்பொடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையை உடைத்தாக நின் செய்கை; நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருள் எனக் கூட்டுக.

உரை: பொன்னைத் தீயிலிட்டுத் தகடாக்கிச் செய்த தாமரை மலர்களை நெருக்கமாக நூலால் கோத்து அலங்கரித்துச் செய்யப்பட்ட நல்ல மாலையைக் கரிய முடியுள்ள தலையில் சூடிய பாணர்கள் பகல் நேரத்தில் உன் அரசவையில் உன்னைச் சூழ்ந்திருப்பார்களாக. பாணர்களோடு கூடியிருந்த பிறகு, மகளிர் உன்னுடைய சந்தனம் பூசிய மார்பைத் தழுவுவார்களாக.

விரும்பத்தக்க உன் அரண்மனையின் முற்றத்தில் முரசு இனிதாய் முழங்குவதாக. தீயோரைத் தண்டித்தலும், நடுவுநிலைமை உடையவர்களுக்கு அருள் செய்வதும் சோம்பலின்றி இடையறாத முறையில் நடைபெறுவதாக. நல்வினைகளால் நன்மையும் தீவினைகளால் தீமையும் விளையும் என்பதை மறுப்பவர்களோடு நீ சேராதிருப்பாயாக.

நெல் விளையும் வயல்களுக்கு வரும் பறவைகளை ஓட்டுபவர்கள், பனைமரங்களிலிருந்து கீழே விழுந்த பனைமட்டைகளை விறகாகக்கொண்டு உப்பங்கழியிலுள்ள மீன்களைச் சுட்டுத் தின்று, விருப்பமான கள்ளைக் குடித்து, நிறைவு பெறாதவர்களாகி, தென்னைமரங்களிலிருந்து இளந்தேங்காய்களை உதிர்த்து அவற்றிலிருந்து இளநீரையும் குடித்து மகிழும் வளமான நாட்டை உன்னுடைய படைவீரர்கள் பெற்றிருக்கிறார்கள். உன்னுடைய பகைவர்கள் உன்னிடம் இரக்கத்தை எதிர்பார்த்து வருவதுபோல், கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களாலாகிய பந்தர் போன்ற வீடுகளில் வாவழ்பவர்கள் அங்கிருந்து விலகி உன் இரக்கத்தைப் எதிர்பார்த்து வரும்பொழுது, உன் செயல்கள் அவர்களிடம் நட்புடனும் பண்புடனும் உதவி செய்யும் வகையில் அமைவதாக.

திருவிழாவில் கூத்தாடுபவர்கள் மாறி மாறி வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறை முறையே தோன்றி மறைவது இயற்கை. அத்தகைய இவ்வுலகில் உன் சுற்றம் மகிழ்வுடன் இருப்பதாக; நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிப்பதாக.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 30. எங்ஙனம் பாடுவர்?

 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”இவ்வுலகில், ஞாயிறு செல்லும் பாதை, அதன் வேகம், காற்றின் இயக்கம், அது செல்லும் திசை, ஆகாயத்தின் தன்மை ஆகியவற்றை நேரில் கண்டு அளந்ததைப்போல் தம் அறிவால் அறிந்தவர்கள் உள்ளனர். அவர்களாலும் அறிய முடியாத அடக்கமும் வலிமையும் உடயவன் நீ. அவர்களால் உன்னை அறிந்துகொள்ள முடியாததால் அவர்கள் எப்படி உன்னைப் புகழ்ந்து பாட முடியும்?” என்று சோழன் நலங்கிள்ளியின் அடக்கத்தையும் ஆற்றலையும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
5 சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
10 யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1. செலவு = வழி. 2. பரிப்பு = இயக்கம்; மண்டிலம் = வட்டம். 3. வளி = காற்று. 4. காயம் = ஆகாயம். 6. இனைத்து = இத்துணை அளவு. 7. செறிவு = அடக்கம். 8. கவுள் = கன்னம்; அடுத்தல் = சேர்த்தல். 9. துப்பு = வலிமை. 10. கூம்பு = பாய்மர . 11. மீப்பாய் = மேற்பாய்; பரம் = பாரம்; தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்). 13. புகார் = ஆற்றுமுகம்; தகார் = தகுதி இல்லாதவர். 14. தாரம் = அரும்பண்டம்.

கொண்டு கூட்டு: நாடு கிழவோயே, ஒளித்த துப்பினை ஆதலிற் புலவர் யாங்ஙனம் பாடுவர் எனக் கூட்டுக.

உரை: சிவந்த ஞாயிறு செல்லும் வழியும், அதன் இயக்கமும், அந்த இயக்கத்தைச் சூழ்ந்த வட்டமும், காற்று இயங்கும் திசையும், ஒரு ஆதாரமும் இல்லாமல் வெற்றிடமாகிய ஆகாயத்தின் இயங்கும் தன்மையையும் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்ததுபோல் சொல்லக்கூடிய அறிவும் கல்வியும் உடையவர்கள் உள்ளனர். அத்தகைய அறிஞர்களின் அறிவாலும் அறிய முடியாத அடக்கம் உடையவனாகி, யானை தன் கன்னத்தில் எறிவதற்காக மறைத்துவைத்திருக்கும் கல்லைப்போல் உன் வலிமை மறைவாக உள்ளது. ஆகவே, உன் வலிமையைப் புலவர்களால் எப்படிப் புகழ்ந்து பாட முடியும்?

ஆறு கடலில் கலக்கும் இடத்தில், கூம்புகளையும் பாய்களையும் அகற்றாது, பாரத்தைக் குறைக்காமல், புகுந்த பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களை, அம்மரக்கலங்களைச்
செலுத்தும் தகுதி இல்லாத மீனவர்களும் நெய்தல் நில மக்களும் கொண்டு போகும்பொழுது அப்பொருட்கள் இடைவழியெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. உன் நாடு அத்தகைய வளமுடையது.

சிறப்புக் குறிப்பு: பெரிய மரக்கலங்கள் துறைமுகத்திற்குள் நுழையும் முன், கூம்பையும் பாய்மரங்களையும் களைவதும், பாரத்தைக் குறைப்பதும் முறையாகச் செய்ய வேண்டிய செயல்கள். காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் துறைமுகத்தில், ஆற்றின் ஆழம் அதிகமாக இருப்பதால் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டிய தேவையில்லை என்று தெரிகிறது. மற்றும், பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களின் மிகுதியால், அம்மரக்கலங்களைச் செலுத்துவோர் மட்டுமல்லாமல், அங்குள்ள மற்ற மக்களும் அம்மரக்கலங்களிலுள்ள பொருட்களை நாட்டுக்குள் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் பொழுது, பொருட்கள் வழியிலே சிதறிக் கிடக்கின்றன. பொருட்கள் கீழே சிதறிக் கிடப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் காட்சி, சோழன் நலன்கிள்ளியின் நாட்டின், நீர்வளத்தையும், பொருளாதார வளத்தையும் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard