New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 1-10 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
புறநானூறு 1-10 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


1. கடவுள் வாழ்த்து

http://puram1to69.blogspot.com/2010/12/1.html

 
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார். இவர் பாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்றிய பாரதம் இப்பொழுது கிடைக்கவில்லை. இவர் இயற்பெயர் பெருந்தேவனார். இவர் எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்தவர்.

பாடப்பட்டோன்: சிவபெருமான். ”முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே இறைஞ்சுக” என்று 6-ஆம் பாடலிலும், “மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறை மிடற்று அண்ணல்” என்று 55-ஆம் பாடலிலும், ”நீலமணி மிடற்று ஒருவன்” என்று 91 -ஆம் பாடலிலும், சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

பாடலின் பின்னணி: எட்டுத்தொகை நூல்கள் பலரால் பல காலங்களில் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகையால் அந்நூல்களில் கடவுள் வாழ்த்து என்று ஒருபாடல் இருக்க வாய்ப்பில்லை. அந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில், நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து முதற் பாடலாக அமைய வேண்டும் என்ற கருத்து பின்னர் நிலவியதால் பாரதம் பாடிய பெருந்தேவனார் இப்பாடலை எழுதிச் சேர்த்ததாகக் கருதப்படுகிறது.

கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
5 கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
10 பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

அருஞ்சொற்பொருள்:
1. கண்ணி = தலையில் சூடப்படும் மாலை; கார் = கார் காலம்; நறுமை = மணம்; கொன்றை = கொன்றை மலர்; காமர் = அழகு. 2. தார் = மாலை. 3. ஊர்தி = வாகனம்; வால் = தூய; ஏறு = எருது. 4. சீர் = அழகு; கெழு = பொருந்து. 5. மிடறு = கழுத்து. 6. நவிலுதல் = கற்றல்; நுவலுதல் = போற்றுதல். 7. திறன் = கூறுபாடு. 8. கரக்கல் = மறைத்தல். 9. வண்ணம் = அழகு. 10. ஏத்துதல் = புகழ்தல். 11. ஏமம் = காவல். 12. அறவு = அழிதல், குறைதல்; கரகம் = கமண்டலம். 13. பொலிந்த = சிறந்த; அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

கொண்டு கூட்டு: அருந்தவத்தோற்கு, கண்ணி கொன்றை, தாரும் கொன்றை; ஊர்தி ஏறு, கொடியும் ஏறு; மிடறு கறை அணிந்தன்று, அக்கறை நுவலவும் படும்; ஒருதிறன் பெண்ணுரு ஆகின்று, அவ்வுரு தண்ணுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; நுதல் பிறை வண்ணம் ஆகின்று; அப்பிறை ஏத்தவும் படும்.

உரை: எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது. அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான். நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது. அந்தக் கறை, வேதம் ஓதும் அந்தணர்களால் போற்றப் படுகிறது. சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது. அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும்.

சிறப்புக் குறிப்பு: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரகணம், ஆகாசவாசி, போகபூமியர் எனப் பதினெண் திறத்தாரும் பதினெண்கணங்கள் என்று புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: புறநானூறு 1-50
Permalink  
 


2. போரும் சோறும்!

http://puram1to69.blogspot.com/2010/12/2.html

 
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகனார். இப்பாடலை இயற்றியவரின் பெயர் முரஞ்சியூர் முடிநாகனார் என்றும் அப்பெயரை ஓலைச் சுவடியிலிருந்து எழுதும்பொழுது முரஞ்சியூர் முடிநாகராயர் என்று பிற்காலத்தில் யாரோ தவறாக எழுதியதாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயர் அவருடைய உரையில் இப்பாடலை இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று குறிப்பிடுகிறார். மற்றும், தலைச்சங்க காலத்தில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்ததாக இறையனார் களவியலுரை கூறுகிறது. அவர் வேறு இப்பாடலை இயற்றியவர் வேறு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆகவே, இப்பாடலை இயற்றியவர் முடிநாகனார் என்ற பெயருடையவரா அல்லது முடிநாகராயர் என்னும் பெயருடையவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். இச்சேர மன்னன் உதியன் என்றும், உதியஞ்சேரல் என்றும், உதியஞ்சேரலன் என்றும் அழைக்கப்பட்டான். அவன் வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 27 என்று வரலாற்று ஆசிரியர் N. சுப்பிரமனியன் அவர்களும் சுமார் கி.பி. 131 என்று வரலாற்று ஆசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரி அவர்களும் கூறுகிறார்கள். இவன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை என்பதும் வரலாற்றில் காணப்படுகிறது.

இச்சேரமன்னன் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்தார்க்கும் உணவு அளித்தாதாக இப்பாடல் கூறுகிறது. இவன் பாரதப் போரில் ஈடுபட்டவர்களுக்கு பெருமளவில் உணவளித்ததால் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டான் என்றும் கருதப்படுகிறது. பாரதப்போர் உண்மையிலே நடைபெற்றதா என்பதை உறுதியாகக் கூறுவதற்கான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்போர் நடைபெற்றதாகக் கருதுபவர்கள் அது நடைபெற்ற காலம் கி.மு. 1000 த்துக்கு முந்தியது என்று வானவியல் மற்றும் இலக்கியங்களிலிருந்து முடிவு செய்கின்றனர். இம்மன்னன் வாழ்ந்த காலத்துக்கு ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்குமுன் சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் நடைபெற்ற போரில் இவன் உணவு அளித்திருப்பானா என்பது ஆய்வுக்குரியது.

எது எவ்வாறாயினும், உதியஞ்சேரலாதன் நாம் வரலாற்றில் காணும் சேர மன்னர்கள் அனைவரிலும் காலத்தால் முந்தியவன் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

பாடலின் பின்னணி: இப்பாடலில், இச்சேரன் நிலம், வானம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும் பூதங்களைப் போல் பொறுமை, ஆராய்ச்சி, வலிமை, அழிக்கும் ஆற்றல், அருள் ஆகியவை உடையவன் என்றும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கும் கௌவரவர்களுக்கும் பெருமளவில் உணவளித்தான் என்றும், கிழக்குக் கடலுக்கும் மேற்குக் கடலுக்கும் இடையே உள்ள தமிழகம் இவனுக்கு உரியது என்றும், இமயமும் பொதியமும் போல் இவன் சோர்வின்றி நிலைபெற்று வாழவேண்டும் என்றும் முடிநாகனார் வாழ்த்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
5 தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
10 வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
15 ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
20 நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.

அருஞ்சொற்பொருள்:
1. திணிந்த = செறிந்த. 2. விசும்பு = வானம். 3. தைவரல் = தடவுதல்; வளி = காற்று. 4. தலைஇய = தலைப்பட்ட, வளர்ந்த. 5. முரணிய = மாறுபட்ட . 7. போற்றார் = பகைவர்; சூழ்ச்சி = ஆராய்ச்சி; நுண்ணறிவு; அகலம் = விரிவு. 8. வலி = வலிமை; தெறல் = அழித்தல்; அளி = அருள். 10. புணரி = பொருந்தி; குட = மேற்கிலுள்ள. 11. யாணர் = புது வருவாய்; வைப்பு = ஊர் நிலப் பகுதி. 11பொருநன் = அரசன். 12. பெருமன் = தலைவன்
13. அலங்கல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; சினைஇ = சினந்து. 14. தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்; பொலம் = பொன். 15. பொருதல் = போர் செய்தல். 16. பதம் = உணவு; வரையாது = குறையாது. 19. சேண் = நெடுங்காலம். 20. நடுக்கு = சோர்வு; நிலியர் = நிற்பாயாக; அடுக்கம் = மலைச்சரிவு. 21. நவ்வி = மான் கன்று; மா = மான்; பிணை = பெண்மான். 22. இறுத்தல் = செலுத்தல். 23. துஞ்சுதல் = தூங்குதல். 24. கோடு = மலை, மலைச்சிகரம்.

கொண்டு கூட்டு: போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களை உடையோய், பொருந, வரையாது கொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ பால் புளிப்பினும், பகல் இருளினும், நால் வேத நெறி திரியினும் இமயமும் பொதியமும் போல் நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி நிற்பாயாக எனக் கூட்டுக.

உரை: மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே! உன்னுடைய கிழக்குக் கடலில் எழுந்த கதிரவன் வெண்ணிற நுரையையுடைய உன்னுடைய மேற்குக் கடலில் மூழ்கும் புதுவருவாயோடு கூடிய நிலப்பகுதிகளுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! அரசே! நீ வானத்தை எல்லையாகக் கொண்டவன். அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய்.

மலைச்சரிவில் சிறிய தலையையுடைய மான் குட்டிகளோடு கூடிய பெரிய கண்களையுடைய பெண்மான்கள் மாலைநேரத்தில் அந்தணர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செய்யும் அரிய வேள்விக்காக மூட்டிய முத்தீயில் உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் , பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும் மாறாத சுற்றத்தாரோடு நீண்ட நாள் புகழோடு விளங்கிச் சோர்வின்றி நிலைத்து வாழ்வாயாக!


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: புறநானூறு 1-10
Permalink  
 


3. வன்மையும் வண்மையும்!

http://puram1to69.blogspot.com/2010/12/3.html

 
பாடியவர்: இரும்பிடர்த் தலையார். இப்பாடலில், யானையின் பெரிய கழுத்தை “இரும்பிடர்த்தலை” என்று புலவர் கூறுவது குறித்து இப்பாடலை இயற்றிய புலவர் இரும்பிடர்த்தலையார் என்று அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் கரிகாலனின் மாமன் என்றும் கருதப்படுகிறார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. கருங்கை என்பதற்கு வலிய கை என்று பொருள். இப்பாடலில், இப்பாண்டிய மன்னனை இரும்பிடர்த்தலையார் “கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” என்று குறிப்பிடுகிறார். இவன் இயற்பெயர் எது என்பது ஆய்வுக்குரியது. இப்பாடலிலிருந்து இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன் என்று தெரிய வருகிறது. இவனைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் வரலாற்றில் காணப்படவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடலில், இரும்பிடர்த்தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியின் முன்னோர்களின் பெருமையையும் அவன் வலிமையையும் வண்மயையும் சிறப்பித்துக் கூறி, அவன் சொன்ன சொல் தவறாது இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
5 தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
10 கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
15 பொலங் கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
20 செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
25 முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

அருஞ்சொற்பொருள்:
1. உவவு = முழு நிலா; ஓங்கல் = உயர்ந்த. 2. நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை; நிழற்றுதல் = கருணை காட்டுதல். 3. ஏமம் = காவல்; இழும் = ஓசை. 4. நேமி = ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = கருணையுள்ள மனம். 5. கவுரியர் = பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல். 6. செயிர் = குற்றம்; சேயிழை = சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண். 7. ஓடை = நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; நுதல் = நெற்றி. 8. துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; கடாஅத்த = மதத்தையுடைய. 9. எயிறு = தந்தம்; எயில் = மதில்; இடுதல் = குத்துதல். 10. மருங்கு = பக்கம். 11. இரு = பெரிய; பிடர் = கழுத்தின் பின்புறம். 12. மருந்து இல் = பரிகாரமில்லாத; சாயா = சளைக்காத. 13. கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன். 15. பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல். 16. விலங்குதல் = விலகல்; வியல் = பரந்த. 17. உயவு = வருத்தம். 18. இடை = வழி. 19. பார்வல் = பகைவர் வரவைப் பார்த்திருக்கும் அரணுச்சி; கவிதல் = வளைதல். 20. செம்மை = நன்மை, பெருமை, வளைவின்மை; தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை. 21. வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல். 22. திருந்துதல் = அழகு படுதல் (அழகிய); சிறை = சிறகு; உயவும் = வருத்தும். 23. உன்ன மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை. 24. நசை = ஆசை; வேட்கை = விருப்பம், அன்பு. 26. வன்மை = வல்ல தன்மை

கொண்டு கூட்டு: மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர், அஃது அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்; நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் எனக் கூட்டுக.

உரை: நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்திற்கு நிழல் தரும் முழு மதி வடிவில் உள்ள உயர்ந்த வெண்கொற்றக் குடையோடும், பாதுகாப்பான முரசின் முழக்கத்தோடும் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திய, கருணையுள்ள மனமும் நீங்காத கொடையும் கொண்ட பாண்டியரின் வழித்தோன்றலே! குற்றமற்ற கற்பும் சிறந்த அணிகலன்களும் உடையவளின் கணவனே! பொன்னாலாகிய பட்டத்தை அணிந்த புள்ளிகளுடைய நெற்றியும் எவரும் அணுகுதற்கரிய வலிமையும் மணம் கமழும் மதநீரும் கொண்டது உன் யானை. அந்த யானை தன் கொம்புகளைப் படைகருவிகளாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தி வீழ்த்தும். கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகள் உள்ள பக்கங்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின் பெரிய கழுத்தின் மேலிருந்து, தனக்கு மாற்றில்லாத கூற்றுவனைப் போல் பொறுத்தற்கரிய கொலைத் தொழிலில் சளைக்காத, உன் வலிய கையில் ஒளி பொருந்திய வாளையுடைய பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே! கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!

உன்னைக் காண்பதற்கு வரும் வழியில் ஊர்கள் இல்லை; அது பொறுத்தற்கரிய வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி; அவ்வழியே வருவோரை அரண்களின் உச்சியிலிருந்து கையை நெற்றியில் வளைத்து வைத்துக் கண்களால் பார்த்துக் குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின் அம்புகளால் அடிபட்டு இறந்தோரின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள் உள்ளன. அழகிய சிறகுகளும் வளைந்த வாயும் உடைய பருந்துகள் இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் இலவ மரத்தில் இருந்து வருந்துகின்றன. இலவ மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல பிரிவுகளுடைய பாதைகள் வழியாக உன்னைக் காண்பதற்கு இரவலர் வருகின்றனர். இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு இருப்பதால்தான் அவர்கள் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண வருகிறார்கள். ஆகவே, நிலம் பெயர்ந்தாலும், நீ உன் சொல்லிலிருந்து மாறாமல் இருப்பாயாக.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

4. தாயற்ற குழந்தை!

http://puram1to69.blogspot.com/2010/12/4.html 

பாடியவர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369). சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினனோ” என்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்.

இவர் பதிற்றுப் பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (4, 266). சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி வரலாற்றில் இடம் பெற்ற முதல் சோழ மன்னன் என்று கருதப்படுகிறது. இவனுக்கு முந்தியதாக இருந்த மன்னர்களைப்பற்றிய செய்திகளை வரலாற்று ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளாகவே கருதுகின்றனர். உதாரணமாக, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காகண்டன், காவேரன், மனு நீதி கண்ட சோழன், கற்றை ஆடல் கொண்டவன், சமுத்ரஜித் போன்றவர்களைப் பற்றிக் கூறப்படும் செய்திகளுக்குத் தக்க ஆதாரமில்லை என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

இளஞ்சேட்சென்னியின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கருதப்படுகிறது. பொருநராற்றுப்படையில், கரிகாலனை “உருவப் ப்ஃறேர் இளையோன் சிறுவன்” என்று அதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவதிலிருந்து இவன் கரிகாலனின் தந்தை என்பது தெரிய வருகிறது (பொருநராற்றுப்படை, 130). இவன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான்.
பாடலின் பின்னணி: இப்பாடலில் புலவர் பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கும் போரில் சிறந்து விளங்குவதைப் பாராட்டுகிறார். சோழன் தேரில் வருவது கடலினின்று கதிரவன் எழுவது போல் உள்ளது என்று அவனைப் புகழ்கிறார். அவனோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாயில்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்றும் கூறுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5 தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
10 களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
15 மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. வலம் = வெற்றி; மறு = கரை. 2. வனப்பு = நிறம் அழகு. 3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன. 4. மருப்பு = கொம்பு. 5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல். 6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி. 7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது. 9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல். 10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல். 11. நுதி = நுனி; கோடு = கொம்பு. 13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை. 14. பொலம் = பொன்; பொலிவு = அழகு. 15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல். 16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல். 17. ஆகன் மாறு = ஆகையால். 18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை. 19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

உரை: போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன. கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன.

குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன.

நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது, பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.


-- Edited by Admin on Sunday 3rd of November 2019 09:19:37 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 5. அருளும் அருமையும்!

http://puram1to69.blogspot.com/2010/12/5.html

 
பாடியவர்: நரிவெரூஉத் தலையார் (5, 195). இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும், இவர் நரிவெரூஉத்தலை என்னும் ஊரினர் என்ற காரணத்தால் இவருக்கு இப்பெயர் வந்ததென்றும், இவர் இயற்றிய பாடல் ஒன்றில் “நரிவெரூஉத்தலை” என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும் இவர் பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இவர் இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு (5, 195). இவர் பாடல்கள் கருத்துச் செறிவு உடையவை.

பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் (5). இச்சேர மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். இவன் இயற் பெயர் ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் நாட்டு எல்லை கொங்கு நாட்டில் இருந்த கருவூர் வரை இருந்தது. இவன் கருவூரில் முடிசூட்டிக் கொண்டு அங்கிருந்து ஆட்சி புரிந்தான். இவன் அழகிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைக் கண்டவர் உடல் நலம் பெறுவர் என்ற கருந்து அவன் காலத்து நிலவியது.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, தன் நாட்டு மக்களைக் குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும் என்று நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
5 அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. இடை = இடம். 2. பரத்தல் = பரவுதல். 4. ஓர் = ஒப்பற்ற. 6. நிரயம் = நரகம். 7. ஓம்பு = காப்பாற்றுவாயாக; மதி - அசைச் சொல். 8. அளிது = செய்யத் தக்கது.

உரை: எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன். அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

6. நிலவும் கதிரும் போல் வாழ்க!

http://puram1to69.blogspot.com/2010/12/6.html

 
பாடியவர்: காரிகிழார் (6): இப்புலவர் காரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி(6, 9, 12, 15, 64). சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களில் வெற்றி, வீரம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்த மன்னர்களில் இவனும் ஒருவன். வரலாற்றில் முதலாக இடம் பெறும் பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன். அவனுக்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் முடத்திருமாறன். முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும் ஒருவன். இவன் குமரி மலையும் ப்ஃறுளி ஆறும் கடலால் கொள்ளப் படுவதற்கு முன்னாதாகப் பாண்டிய நாட்டை ஆண்டவன். இவனுடைய ஆட்சிக் காலத்தை சரியாக வரையறுப்பதற்கு ஏற்ற சான்றுகள் இல்லை. இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான் என்று வரலாற்றில் காண்கிறோம்.

பாடலின் பிண்ணணி: இப்பாடலில், காரிகிழார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் வெற்றியையும் புகழையும் சிறப்பித்துக் கூறுவது மட்டுமல்லாமல் சிறந்த உறுதிப் பொருள்களை அவனுக்கு அறிவுரையாகக் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
5 கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
10 பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
15 அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
20 நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;
வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;
25 ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீநிலமிசை யானே!


அருஞ்சொற்பொருள்:
1. வடாஅது = வடக்கின் கண்ணது; படுத்தல் = நிலைபெறச் செய்தல்; படு = நிலைபெற்ற (தங்கிய); நெடு = நீண்ட; வரை = எல்லை. 2. தெனாஅது = தெற்கின் கண்ணது; உரு = அச்சம்; கெழு = பொருந்திய. 3. குணாஅது = கிழக்கின் கண்ணது; பொருதல் = முட்டுதல்; தொடல் = தோண்டல்; குணக்கு = கிழக்கு. 4. குடாஅது = மேற்கின் கண்ணது; தொன்று = பழமை; முதிர் = முதிர்ச்சி; பெளவம் = கடல்; குடக்கு = மேற்கு. 5. புணர் = சேர்க்கை; முறை = ஒழுங்கு; கட்டு = வகுப்பு. 6. நிவத்தல் = உயர்தல். 7. ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சுவர்க்கலோகம்); ஆனாது = அமையாது. 8. உரு = அச்சம்; சீர் = அளவு. 9. தெரிதல் = ஆராய்தல்; கோல் = துலாக்கோல்; ஞமன் = துலாக்கோலின் முள்முனை; திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம். 10. பற்றல் = பிடித்தல்; திறம் = குலம். 11. வினை = போர்; எதிர்ந்த = மாறுபட்ட; தெவ்வர் = பகைவர்; தேஎம் =தேயம், நாடு. 12. குளித்தல் = மூழ்குதல்; மண்டல் = நெருங்கல்; அடர் = அடர்ந்த; புகர் = புள்ளி. 13. செவ்விதின் = செம்மையாக (நேரே); ஏவி = செலுத்தி. 14. பாசவல் = பசுமையான விளை நிலம்; படப்பை = ஊர்ப்புறம்; ஆர் = அரிய; எயில் = மதில்; தந்து = அழித்து. 15. உறுதல் = நன்மையாதல், பயன்படல்; உறு = மிக்க. 16. மாக்கள் = மக்கள்; வரிசையின் = தரமறிந்து; நல்கி = அளித்து. 17. பணியியர் = தாழ்க. 18. செல்வம் = செல்வர்; நகர் = கோயில். 19. இறைஞ்சுதல் = வணங்குதல்; பெருமன் = அரசன்; சென்னி = தலை. 20. ஏந்துதல் = கை நீட்டுதல். 21. கண்ணி = தலையில் அணியும் மாலை; ஒன்னார் = பகைவர். 22. கமழ் = மணக்கும். 23. செலீஇயர் = செல்வதாக (தணிவதாக);அத்தை - அசைச் சொல்; வால் = தூய, வெண்மையான; இழை = அணிகலன். 24. துனித்த = ஊடிய; வாள் = ஒளி. 25. வென்றி = வெற்றி. 26. தண்டா = தணியாத (நீங்காத); தகை = தகுதி; மாண் = மாட்சிமை பெற்ற. 27. தண் = குளிர்ந்த; தெறு = சுடுகை. 29. மன்னுதல் = நிலைபெறுதல்; மிசை = மேல்பக்கம்.

கொண்டு கூட்டு: குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒரு திறம் பற்றாது ஒழிக; நின் திறம் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசில் மாக்கட்கு நல்கி மதியம் போலவும் ஞாயிறு போலவும், பெரும நீ நிலத்தின் மிசை மன்னுக எனக் கூட்டுக.

உரை: வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

அடையவேண்டிய வெற்றிகளை எல்லம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!

தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக!
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

7. வளநாடும் வற்றிவிடும்!

http://puram1to69.blogspot.com/2010/12/7.html

 
பாடியவர்: கருங்குழல் ஆதனார் (7, 224). ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் முதியவராக இருப்பினும், இவர் தலைமுடி கருமை நிறத்தோடு இருந்ததால் இவர் கருங்குழல் ஆதனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடப்பட்டோன்: கரிகால் வளவன் (7, 65, 66, 224). தமிழ் நாட்டை ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படுபவன் கரிகாலன். இவன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகிறார். இவன் திருமாவளவன் என்றும் கரிகால் பெருவளத்தான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் சோழன் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னனின் மகன்.

கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது இவன் தந்தையின் பகைவர்கள் இவன் வசித்த அரண்மனைக்குத் தீ வைத்தனர். அத்தீயிலிருந்து இவனை இவன் மாமன் இரும்பிடர்த்தலையார் காப்பாற்றியதாகவும், அரண்மனையிலிருந்து தப்பிய பொழுது இவன் கால் தீயில் கருகிக் கருமை நிறமானதால் இவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகிறது.

இவன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு சோழ நாட்டில் மன்னர் இல்லாத நிலை எழுந்தது. நாட்டை ஆட்சி செய்வதற்கு மனனன் இல்லையென்றால் அரண்மனை யானை யாருக்கு மாலையச் சூட்டுகிறதோ அவரை மன்னராக ஏற்றுக் கொள்வது சோழ நாட்டில் நிலவிய வழக்கம். அவ்வழக்குக்கேற்ப, அரண்மனை யானை கரிகாலனுக்கு மாலையை அணிவித்ததால் இவன் சோழ நாட்டிற்கு மன்னனானான் என்று ஒரு கதை உள்ளது.

கரிகாலன் ஒரு சிறந்த மன்னன் மட்டுமல்லாமல் ஒரு சிரந்த வீரனாகவும் விளங்கினான். வெண்ணி ( தஞ்சாவூருக்கு 15 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊர்) என்ற ஊரில் இரண்டு போர்களில் வெற்றி கண்டான். முதற்போரில் சேர மன்னன் பெருஞ்சேரலாதனை வென்றான். பாண்டியனும் வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு குறுநிலமன்னர்களும் சேரனுக்கு உதவியாகப் போர் புரிந்தார்கள். அவர்கள் அனைவரையும் கரிகாலன் வென்றான். போரில் தோல்வியுற்ற பெருஞ் சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான். வெண்ணியில் நடைபெற்ற மற்றொரு போரில் கரிகாலன் வெற்றி அடைந்த பிறகு தமிழகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் ஒன்பது அரசர்களை வென்றான்.

கரிகாலனிடம் ஒப்புயர்வற்ற கப்பற்படை இருந்தது. அவன் தன் கப்பற்படையின் உதவியோடு இலங்கை மன்னனை வென்று அங்கிருந்து பலரைக் கைது செய்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து காவிரிக்கரையைச் செப்பனிடுவதற்குப் பயன்படுத்தினான். காவிரியில் கல்லணையைக் கட்டி உழவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்க்கு வழி வகுத்தான்.

கரிகாலன் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி புரிந்தான். இவன் இமயம் வரை சென்று இடையிலுள்ள மன்னர்களை வென்றான் என்றும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுராணம் ஆகிய நூல்களில் இவனைப் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன. மற்றும், முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படைக்கும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவன் கரிகால் வளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கரிகாலனுடைய குடும்பத்தைப் பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகாலனுக்கு ஆண் வாரிசு இல்லை என்றும், ஆதிமந்தி என்று ஒரு மகள் மட்டும் இருந்ததாகவும், அவள் ஆட்டனத்தி என்னும் சேர இளவரசனை மணந்ததாகவும் கருதுகின்றனர். குறுந்தொகையின் 31-ஆம் பாடல் இயற்றிய ஆட்டனத்திதான் கரிகாலனின் மகள் என்றும் கூறுகின்றனர். வேறுசிலர், கரிகாலனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாகவும், மணக்கிள்ளிக்கு நற்சோனை என்று ஒரு மகள் இருந்ததாகவும், அவள் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணந்ததாகவும், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும், அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவனும், இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பாடலின் பின்னணி: சோழன் கரிகாலனின் பகைவர்களின் நாடுகள் புதிய வருவாய் நிரம்பி மக்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால், கரிகாலன் இரவும் பகலும் தன் பகைவர்களை அழிக்கக் கருதி, அவர்களின் நாடுகளைச் சுட்டெரித்தான். ஆகவே, அந்நாடுகள் நலமிழந்து கெட்டன. இப்பாடலில், பகைவர்களின் நாடுகள் கரிகாலனால் அழிக்கப்படுவதைப் புலவர் கருங்குழல் ஆதனார் சுட்டிக் காட்டுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்றவள்ளை: மழபுல வஞ்சியும் ஆகும்.
கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.
மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

களிறு கடைஇயதாள்
கழல்உரீஇய திருந்துஅடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ஒளிர்வரூஉம் கவின்சாபத்து
5 மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய எறுழ்முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை ஆகலின், நல்ல
10 இல்ல ஆகுபவால், இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கடைஇ = செலுத்தி; கடைஇய = செலுத்திய; தாள் = கால். 2. உரீஇ = உருவி; திருந்துதல் = ஒழுங்குபடுதல், அழகுபடுதல். 3. பொருதல் = பொருந்தல்; பொருது = போர்செய்து; கவிதல் = வளைதல்; வண்மை = வள்ளல் தன்மை. 4. கவின் = அழகிய; சாபம் = வில். 5. மா = திருமகள், பெரிய, பரந்த; மறுத்த = நீக்கிய. 6. தோல் = யானை; பெயர்த்தல் = நிலை மாறச் செய்தல்; எறுழ் = வலிமை; முன்பு = வலிமை. 7. எல்லை = பகற்பொழுது. 8. விளக்கம் = ஒளி; விளி = கூப்பிடு; கம்பலை = ஒலி. 9. மேவல் = ஆசை. 10. இயல் = இலக்கணம். 11. பூசல் = பெரிதொலித்தல், பலரறிய வெளிப்படுதல் (உடைப்பு); மறுத்தல் = நீக்கல், தடுத்தல். 12. செறுத்தல் = அடக்குதல்; யாணர் = புது வருவாய். 13. வைப்பு = ஊர்; அகலல் = விரிதல்; தலை = இடம்.

கொண்டு கூட்டு: தாளையும் அடியையும் கையையும் சாபத்தையும் மார்பையும் முன்பையும் உடைய வளவ, நீ கொள்ளை மேவலை. ஆகலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர் நாடு நல்ல இல்ல ஆகுப எனக் கூட்டுக.

உரை: யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும், திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

http://puram1to69.blogspot.com/2010/12/8.html

 
பாடியவர்: கபிலர் (8, 14, 105 - 111, 113 - 124, 143, 200, 201, 202, 236, 337, 347)
இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். ”புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126). கபிலர் பாடியதாக 278 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, இவர் புறநானூற்றில் 28 பாடல்களையும் கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது. இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப் பத்தில் ஏழாம் பதிகமாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதிகத்தால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான். ஆனால், கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.

இவர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர். வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம் செய்யும் பொறுப்பினை ஏற்றுப் பல முயற்சிகள் செய்தார். முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாடப்பட்டோன்: சேரமான் கடுங்கோ வாழியாதன்( 8, 14, 387). இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் அழைக்கப்பட்டான். பதிற்றுப்பத்தில், “ பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்” என்று கூறப்படுவதிலிருந்து இவன் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் என்பது தெரிய வருகிறது. இவன் 25 ஆண்டு காலம் சேர நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பிறகு சேர நாட்டை ஆண்டதாகக் கருதப் படுகிறது. இவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

இவன் திருமாலிடத்துப் பெரும் ஈடுபாடு உடையவன். பதிற்றுப்பத்தின் ஏழாம் பதிகம் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனனை கபிலர் பாடியது. கபிலர் பாட்டால் பெரு மகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்கு நூறாயிரம் பொற்காசுகளையும் நன்றா என்ற மலையில் இருந்து கண்ணுக்கெட்டியவரை உள்ள நிலப்பகுதியையும் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆகும்.
இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
பூவை நிலை. மனிதரைத் தெவரோடு உவமித்துக் கூறுதல்.


வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

அருஞ்சொற்பொருள்:
1. காவலர் = அரசர்; வழிமொழிதல் = வழிபாடு கூறுதல். 2. போகம் = இன்பம். 3. துரப்புதல் = துரத்துதல், முடுக்குதல். 4. ஒடுங்கா = சுருங்காத; ஓம்புதல் = பாதுகாத்தல். 5. கடத்தல் = போர் செய்தல்; அடுதல் = கொல்லுதல். 6. வீங்கு = மிக்க; செலவு = பயணம் ; மண்டிலம் = வட்டம். 7. வரைதல் = நிர்ணயித்தல்; இறத்தல் = நீங்குதல், கடத்தல். 9. அகல் = அகன்ற.

கொண்டு கூட்டு: வீங்கு செலல் மண்டிலமே, வரைதி, இறத்தி, வருதி, ஒளித்தி, நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடுகளை உடைய நீ சேரலாதனை எங்ஙனம் ஒத்தியோ?

உரை: பெரிய வட்டவடிவமான பாதையில் செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் துரத்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ, எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய்?
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

http://puram1to69.blogspot.com/2010/12/9.html

 
பாடியவர்: நெட்டிமையார். நெட்டிமையார் (9, 12, 15). இவர் நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி அறியும் திறமை வாய்ந்தவர் என்ற காரணத்தினால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் உரை நூலில் கூறுகிறார். இவர் கண்ணிமை நீண்டு இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவாரும் உளர். இப்பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, பஃறுளி ஆற்று மணலினும் பலநாள் வாழ்க என்று நெட்டிமையார் வாழ்த்துவதிலிருந்து இவர் பஃறுளி ஆறு கடலால் கொள்ளப் படுவதற்கு முந்திய காலத்தவர் என்பது தெரிய வருகிறது.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போருக்குப் போகுமுன் பசு, பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையோர், ஆண் பிள்ளை இல்லாதோர் ஆகியோரைப் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு அறை கூவிப் பின்னர்ப் போர் செய்தான் என்று நெட்டிமையார் கூறுகிறார். பாண்டிய மன்னர்களில் முன்னோனாகக் கருதப்படும் நெடியோனைப் பற்றிய செய்திகளும் இப்பாடலில் உள்ளன.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
10 முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.


அருஞ்சொற்பொருள்:
1. ஆன் = பசு; இயல் = தன்மை; ஆனியல் = ஆன்+இயல் = பசு போன்ற தன்மை. 2. பேணுதல் = பாதுகாத்தல். 3. இறுத்தல் = செலுத்தல். 5. கடி = விரைவு; அரண் = காவல். 6. நுவல் = சொல்; பூட்கை = கொள்கை, மேற்கோள். 7. மீ = மேலிடம், உயர்ச்சி, மீமிசை = மேலே. 9. செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த); பசும்பொன் = உயர்ந்த பொன். வயிரியர் = கூத்தர். 10. முந்நீர் = கடல்; விழவு = விழா; நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)

கொண்டு கூட்டு: அறத்தாறு நுவலும் பூட்கை, எங்கோ, குடுமி வாழிய, பஃறுளி மணலினும் பலவே எனக் கூட்டுக.

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 10. குற்றமும் தண்டனையும்!

http://puram1to69.blogspot.com/2010/12/10.html

 
பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார் (10, 203, 370, 378). இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பனையோலையால் குடை போல் செய்து அதை உணவு உண்பதற்கும், பூப்பறிப்பதற்கும் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர். பனையோலையில் ஊன் கொண்டு செல்வதை இவர் “ ஊன்பொதி பசுங்குடை” என்று பாடியதால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடப்பட்டோன்: சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி(10, 203, 370, 378). நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த ஊராகும். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான். நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி ஆகியோர் ஒருவர் அல்ல; அவர் வேறு வேறு மன்னர்கள் என்று கூறுவாரும் உளர்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் ஊன்பொதி பசுங்குடையார் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் குணநலன்களைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
5 வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. வல் = விரைவு. 2. தேறல் = தெளிதல். 4. ஒறுத்தல் = தண்டித்தல். 7. அடுதல் = சமைத்தல்; ஆனாமை = தணியாமை; கமழ்தல் = மணத்தல்; குய் = தாளிதம்; அடிசில் = சோறு, உணவு. 8. வரை = அளவு, வரையா = குறையாத, அளவில்லாத; வசை = பழி. 9. மலைத்தல் = போர்செய்தல், விரோதித்தல்; மள்ளர் = வலிமையுடையவர். 10. சிலை = வானவில்; தார் = மாலை. 11. இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்); சேண் = தூரம். 12. நெடியோன் = பெரியோன். 13. எய்துதல் = அணுகுதல், அடைதல்; ஏத்துதல் = புகழ்தல்.

கொண்டு கூட்டு: விளங்கும்புகழ் நெய்தலங்கானல் நெடியோய், மார்ப, நீ வல்லறிதி, மொழிதேறலை, தகவொறுத்தி, தண்டமும் தணிதி, ஏத்துவோமாக, எய்த வந்தனம் எனக் கூட்டுக.

உரை: உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard