New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.


Guru

Status: Offline
Posts: 24791
Date:
தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.
Permalink  
 


தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.

E-mailPrintPDF

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.தொல்காப்பிய மரபியல், பெயர் மரபுகளையும், உயிர்ப் பாகுபாடுகளையும், நால்வகை வருண மரபுகளையும். இலக்கியப் படைப்பாக்க மரபுகளையும் எடுத்துரைக்கின்றது.

 மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
 மரபுவழிப் பட்ட சொல்லினான” (தொல்காப்பியம், மரபியல் 92)

என்பது மரபு பற்றிய வரையறையாகும். மரபு நிலை திரிதல் செய்யுள்களுக்கு அழகில்லை, மரபு வழிப்பட்ட சொற்களை மாறாமல் பின்பற்றுவது செவ்விலக்கியப்போக்கு என்று தொல்காப்பியர் மரபினை விளக்குகின்றார். மரபுகள் திரிந்தால் ஏற்படும் இழப்பினையும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” ( தொல்காப்பியம், மரபியல். 93) என்ற இந்த நூற்பா மரபுநிலை திரிந்தால் ஏற்படும் பாதிப்பினை எடுத்துரைக்கின்றது. சொல்மரபுகள் மாறினாலும், பொருள் மரபுகள் மாறினாலும் அதனால் வேறுவேறான புலப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிடும் என்பதைத் தொல்காப்பியர் இந்நூற்பா வழி எடுத்துரைத்துள்ளார். எனவே மண் சார்ந்த மரபுகள் அம்மண் சார்ந்த இலக்கியங்களில் மாறாமல் பின்பற்றப்படவேண்டும் எனத் தொல்காப்பியர் விரும்புவதாகக் கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம் சுட்டும் பிள்ளைப்பெயர்கள், ஆண்பாற் விலங்குப் பறவைப் பெயர்கள், பெண்பாற் விலங்குப் பறவைப் பெயர்கள் பெரிதும் எடுத்தாளப் பெற்றும் உள்ளன. பின்பற்றப்பெற்றும் உள்ளன. தொல்காப்பியர் காட்டும் நூல் இலக்கண மரபுகளும் பின்னால் வந்த இலக்கண ஆசிரியர்களால், இலக்கியப் படைப்பாளர்களால் பெரிதும் பின்பற்றப்பெற்றுள்ளன.

அவர் காட்டிய நால்வகை வருண மரபுகள், இலக்கிய அளவில் திறனாய்வு நிலையில் ஏற்பதும் மறுப்பதுமாக விளங்குகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியர் காட்டிய நால்வகை வருணங்களும் அவற்றிற்குரிய அடையாளங்களுடன் இடம்பெற்றுள்ளன என்பது  வருணத்தை ஏற்பார் கருத்தாகும். சங்க இலக்கியங்களில் வருணப் பாகுபாடு அறவே இல்லை என்று மொழிவாரும் உண்டு, சங்க இலக்கியத்தில் பரிபாடல், புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களில் இந்நால்வகை வருணமரபுகளைக் காணமுடிகின்றது. பத்துப்பாட்டு இலக்கியங்களிலும்  நால்வகை வருண மரபுகளைக் காணமுடிகின்றது. ஆனால் குநற்தொகை, நற்றிணை போன்ற இலக்கியங்களில் நால்வகை வருணப் பாகுபாட்டு முறை இல்லை என்றே முடியலாம். இதற்கான காரணம் ஆராயத்தக்கதாகும். நற்றிணையும் குறுந்ததொகையும் முற்கால இலக்கியங்களாக அமைந்திருக்கலாம். ஆரியர் கலப்பிற்கு முன்னதான இலக்கியங்கள் என்பதாக அவற்றைக் கொள்ளலாம். அல்லது அவை ஐந்திணை சார்ந்த இலக்கியங்கள் என்றும் கொள்ளலாம். அவை பெரிதும் இலக்கிய வழக்கு சார்ந்தவை என்றும் கொள்ளலாம். இவ்வகையில் இதற்கான காரணங்கள் ஆராயத்தக்கனவாகும்.

சங்க இலக்கியத்தின் பிற்பகுதி இலக்கியங்கள், பத்துப்பாட்டு இலக்கியங்கள் ஆகியன தோன்றிய காலங்களில் நால்வகை வருண முறை பின்பற்றப்பெற்றுள்ளது அவற்றைக் கற்கையில் தெளிவாகத் தெரிகின்றது. இக்கட்டுரை தொல்காப்பிய மரபியலின் ஒரு பகுதியாக விளங்கும் நால்வகை வருண மரபுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவை சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பெற்றுள்ள முறைமையை எடுத்துரைப்பதாக உள்ளது.
நால்வகை வருணம்

 தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் நால்வகை வருணமுறை எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. கற்புக் காலத்தில் ஓதல், தூது, பகை ஆகிய பிரிவுகளின் போது எத்தனை காலம் பிரியவேண்டும், யார் பிரியவேண்டும் என்ற வரையறை அங்கு வகுக்கப்பெற்றுள்ளது. இவ்வருணமுறைக் கற்பியலில் சற்றுத் தொட்டுக்காட்டப் பெற்று மரபியலில் தொல்காப்பியரால் முழுவதுமாக வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. மரபியலில் அந்தணர்,அரசர், வணிகர், வேளாளர் ஆகியோரின் இயல்புகள் வளர்ந்த நிலையில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு சங்க இலக்கியங்களுடன் பொருத்திக் காட்டப்பெறுகின்றன.

அந்தணர்க்குரிய இயல்புகள்
 அந்தணர், ஐயர், பார்ப்பார் ஆகிய சொற்கள் குறிப்பிட்ட ஒரு குழுவினுக்;குள் அடங்கும் பகுப்புகள் ஆகும். இக்குழுவினர் வேதத்துடன் தொடர்புடைய குழுவினராகக்  கருதத்தக்கவர்கள் ஆவர். கரணம் யாத்தவர்கள் ஐயர் ஆகின்றனர். செந்தன்மை பூண்டொழுகுபவர்கள் அந்தணர்கள் ஆகின்றனர். பார்ப்பார் என்பவர் மறைநூல்களைப் பார்ப்பவர் அல்லது பார்த்து ஓதுபவர் ஆகின்றனர். இவர்களில் அந்தணர் என்போருக்கான இலக்கணம் பின்வருமாறு.

  " நூலே கரகம் முக்கோல் மணையே
    ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய”
 (தொல்காப்பியம், மரபியல், 71)

நூல், தண்ணீர் இருக்கும் கெண்டி என்ற செம்பு, முக்கோல், அமரும் மணை  ஆகியனவற்றைக் கொண்டிருப்பவர்கள் அந்தணர்கள் என்று உரைக்கின்றது தொல்காப்பியம். அனைத்து அந்தணர்களுக்கும் முப்புரி நூல் என்ப:து அடையாளமாகும். கரகமும், முக்கோலும் தவம் செய்யும் அந்தணர்க்கு உரிய பொருள்கள் ஆகும்.

 இவ்வடையாளங்களுடன் சங்க இலக்கியத்தில் அந்தணர்கள் சித்திரிக்கப்பெற்றுள்ளனர். கலித்தொகையில் அந்தணர் ஒருவரை விளித்து தன் மகள் உடன்போக்குப் போனதைப் பற்றி அறியவிரும்புகிறாள் செவிலித்தாய்.

  “எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
    உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்
   நெறிபடச் சுவல்அசைஇ வேறுஒரா நெஞ்சத்துக்
    குறிப்புஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்”(
கலித்தொகை.9)

என்ற பாடலில் இடம்பெறும் அந்தணர் அப்படியே தொல்காப்பியர் காட்டிய காட்சிப்படி வருணனை செய்யப்பெற்றுள்ளார். தொல்காப்பியர் காட்டிய கரகம், முக்கோல் அவரிடத்தில் காணப்படுகின்றன. கூடுதலாக ஒரு குடையை அவர் வைத்திருந்துள்ளார். இவ்வாறு கலித்தொகை காலத்தில் அந்தணர்கள் விளங்கிய தோற்றம் தெரியவருகின்றது.

 கபிலர் பாரிமகளிரை திருமணம் செய்து கொள்ள விச்சிக்கோன் என்ற அரசனிடம் வேண்டியபோது தான் அந்தணன் என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

  "யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
   வரிசையி;ல் வணக்கும் வாள் மேம்படுநன்
   நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி”
 (புறநானூறு,200)

 என்றும்

  “யானே
   தந்தை தோழன் இவர் என் மகளிர்
   அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே”
 (புறநானூறு 201)

என்றும் பாடுகின்றார். இவ்வகையில் அந்தண மரபினர் புலவோராகவும் சங்ககாலத்தில் இருந்துள்ளனர் என்பது குறிக்கத்தக்கது.

 “அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கின்| (புறநானூறு, 2) என்று அந்தணர்கள் அந்தி நேரத்தில் அருங்கடன் செய்யும் நடைமுறை புறநானூற்றில் காட்டப்பெறுகின்றது. “நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு அருங்கலம் நீரோடு சிதறி| (புறநானூறு 361) என்று மற்றொரு குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகின்றது. கேள்வியறிவு மிக்க அந்தண்கள் வேள்வி செய்வதில் வல்லவர்கள், அவர்களுக்கு அணிகலன்கள் பலவற்றை அளித்தல் கொடை  என்பது இப்பாடலடி தரும் விளக்கமாகும். வேள்வி செய்தலை மற்றொரு புறநானூற்றுப் பாடலும் குறிக்கின்றது. "அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்” (புறநானூறு, 397) என்ற பாடலடியின் வழியாக அறம்புரிந்து தீ வளர்ப்பவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகின்றது.

 பரிபாடலில் பல இடங்களில் அந்தணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. “நாவல் அந்தணர் அருமறைப்பொருள்” என திருமால் குறிக்கப்படுகிறார்(பரிபாடல்.1). அந்தணர் பயிற்றும் அருமறையின் ஒரு வரியை அப்படியே எடுத்தாளுகிறது பரிபாடல். ~வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும்  தாதையும் நீ என மொழியுமால்; அந்தணர் அருமறை” (பரிபாடல் 3) என்ற பாடலடியின் வழியாகத்  தாமரைப்ப+வில் பிறந்த பிரம்மனும் அவனின் தந்தையும் ஆகிய திருமால் நீயே என்று வேதநெறி சொல்வதாக பரிபாடல் குறிப்பிடுகின்றது. இவ்வகையில் மறைகள் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.

 “விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப”- தை நீராடல் நடைபெற்றது என்று குறிக்கின்றது பரிபாடல். (பரிபாடல்.11) விழாக்கள் சங்க காலத்தில் அந்தணர் கொண்டு தொடங்கப்பெற்றுள்ளது என்பது இதன்வழி தெரிகின்றது.

 “ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன்” சிவபெருமான் (கலித்தொகை.1)என்ற குறிப்பு கலித்தொகையின் வழி கிடைக்கின்றது. இத்தொடரின் வழியாக வேதங்களின் ஆறு அங்கங்களை ஓதி உணர்ந்தவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகிறது. அந்தணர் தீ வளர்த்தலை கலித்தொகையும் குறிப்பிடுகின்றது. “கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும்” என்ற (கலித்தொகை.36) அடியின் வழியாக அந்தணர் வேள்வித்தீ வளர்ப்பர் என்தும், வேள்வித்தீ வளரக்கும் போது எழும் புகைபோல என் உயிர் அலைவுறும் என்று தலைவி பேசுவதும் இவ்வடிகளின் பொருளாகும். அந்திக் காலத்தில் அந்தணர் வேள்வி செய்வர் என்ற குறிப்பும் “அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச் செவ்வழல் தொடங்க” (கலித்தொகை 119) என்ற பாடலடியின் வழி தெரியவருகின்றது.

 சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் அரண்மனை பொருநர், புலவர், அந்தணர் ஆகியோருக்கு அடையா வாயிலாக விளங்கும் என்ற குறிப்பு கிடைக்கின்றது. (சிறுபாணாற்றுப்படை, 204) இதன் வழி அந்தணர்க்கு ஈவது அரசர் கடனாக இருந்துள்ளது என்பது வெளிப்படை. “கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வி” என்ற பெரும்;பாணாற்றுப்படை (பெரும்பாணாற்றுப்படை 315) அடிகள் அந்தணர் வேள்வி செய்தமையைக் குறிக்கின்றது. மதுரைக்காஞ்சியில் “ஓதல் அந்தணர் வேதம் பாட” என்ற (மதுரைக்காஞ்சி 656) குறிப்பு இடம்பெறுகின்றது. “அந்தி அந்தணர் அயர” என்று குறிஞ்சிப்பாட்டிலும் (225) ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. “ஓதல், வேட்டல், அவை பிறர் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”  என்று அந்தணர்க்குரிய அறுதொழில்களைக் குறிக்கிறது பதிற்றுப்பத்து. (பதிற்றுப்பத்து, 24) “உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப” (64) என்று மற்ற இலக்கியங்கள் காட்டிய அந்தண நெறியையே பதிற்றுப்பத்தும் காட்டுகின்றது.

 அந்தணர்ப் பள்ளியின் சிறப்பை மதுரைக்காஞ்சி பின்வருமாறு பாடுகின்றது.

  “சிறந்த வேதம் விளங்கப்பாடி
   விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
   நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
   உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
   அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
   பெரியோ மேஎய் இனிதின்  உறையும்
   குன்றுகுளின்றன்ன அந்தணர் பள்ளியும்”(
மதுரைக்கா ஞ்சி. 468-474)

என்ற பகுதியில் அந்தணர் பள்ளியின் சிறப்பு காட்டப்படுகின்றது சிறந்த வேதங்கள் விளங்கப் பாடும் அந்தணர்கள் இருக்குமிடம் அந்தணப்பள்ளி ஆகும். இங்குள்ள அந்தணர்கள் வேள்விகள் செய்து, பிர்மம் என்ற பொருளாகத் தாமே ஆகி உயர்ந்த தேவர் உலகத்தை அடையும் சிறப்பினை உடையவர்கள், அறநெறி தவறாதவர்கள், பல பெரியோர்கள் உடன் தங்கியிருக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் அந்தணர்கள் என்று அக்காலத்தில் அந்தணப் பள்ளி இருந்து நிலையை இவ்விலக்கியம் காட்டுகின்றது.

 இவ்வாறு அந்தணர் மரபுகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பார்ப்பார், ஐயர் என்ற பிரிவினரும் அந்தணர் என்ற மரபினரோடு இணைத்து எண்ணத்தக்கவர்கள் ஆவர். பார்ப்பார் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறன. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்  என்றுத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் போர்க்காலத்தில் பேணப்படுதலைப் புறநானூறு காட்டுகின்றது. புறநானூற்றில் பார்ப்பன வாகை என்ற துறையில் இருபாடல்கள் அமைகின்றன. அதில் 166 ஆம் எண்ணுடைய பாடல் ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல் ஆகும். இப்பாடல் சோழநாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் பாடியதாகும்.

   “வினைக்கு வேண்டி நீப+ண்ட
    புலப்புல்வாய்க் கலைப்பச்சை
     கவல்ப+ண் ஞாண்மிசைப் பொலிய
    மறம் கடிந்த அருங்கற்பின்
    அறம் புகழ்ந்த வலைசூடி
    சிறுநுதல் பேர் அகல் அல்குல் 
    சில சொல்லின் ;;;;;;;;;;;;;;பல கூந்தல்
    நிலைக்கு ஒத்தநின் துணைத்துணைவியர்
    தமக்கு அமைந்த தொழில்கேட்பக்
    காடு என்றா நாடு என்று ஆங்கு
    ஈர்ஏழின் இடம் முட்டாது
   நீர் நாண நெய்வழங்கியும்
   எண்நர்ணப் பல வேட்டும்
   கண் நாணப் புகழ்பரப்பியும்
   அருங்கடி பெருங்காலை
   விருந்துற்ற நின் திருந்து ஏந்துநிலை
   என்றும் காண்கதில் அம்ம”
 (புறநானூறு, 166)

என்ற இப்பாடலில் பார்ப்பன வெற்றி பாடப்பெற்றுள்ளது. இப்பாடலுக்குரிய பாட்டுடைத்தலைவனான அந்தணன் தோளில் நூலணிந்து அதன்மேல் கலைமானின் தோலை அணிந்தவன். இவனின் சில சொற்களையும் மாறாமல் அவனின் துணைவியர் கேட்கின்றனர். நீரைவிட நெய்யை அதிகமாக வழங்கி எண்ணில் அறிய இயலாத பல வேள்விகளைச் செய்து, வேள்விகளின் நிறைவில் நல்ல விருந்தினை அனைவருக்கும் அளித்துப் புகழ் கொண்ட இன்றைய நிலையை நாங்கள் என்றைக்கும் காணவேண்டும் என்று இப்பாடல் பார்ப்பன வாகை பாடுகின்றது. 305 ஆம் பாடலும் பார்ப்பான் :தூது சென்றதால் நாடுகளுக்குள் அமைதி நிலவியது என்ற குறிப்பினைத்தருகின்றது.

   பார்ப்பன குறுமகன் குடுமி வைத்திருந்ததை ஐங்குநுறூற்றின் இருநூற்றியிரண்டாம் பாடல் எடுத்துக்காட்டுகின்றது. கலித்தொகையில் பார்ப்பானை முன்வைத்து ஒரு அழகான அகக்காட்சி புனையப்பெற்றுள்ளது.

  “அம்துகிற் போர்வை அணிபெறத் தைஇ நம்
  இன்சாயல் மார்பன் குறிநின்றேன் யானாகத்
  தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும்
  காரக்குறைந்து கறைப்பட்டு வந்து நம்
  சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத்
  தோழிநீ போற்றுநி என்றிஅ வன் ஆங்கே
  பாராக் குறழாப் பணியாப் “பொழுதன்றி
  யார் இவன் நின்றீர் எனக் கூறிப் பையென
  வைகாண் முதுபகட்டின் பக்கத்திற் போகாது
  தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
  பக்கு அழித்துக் கொண்டீ எனத்தரலும் யாதொன்றும்
  வாய்வாளேன் நிற்கக் கடிது அகன்று கைமாறிக் 
  கைப்படுக்கப்பட்டாய்ச்சிறுமிநீ மற்றுயான்
  ஏனைப் பிசாசு அருள் என்னை நலிதரின்
   இவ்வ+ர் பலிநீ பெறாமல் கொள்வேன் எனப்
  பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப
  முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்து யான்
  எஞ்சாது ஒருகை மணற்கொண்டு மேல்தூவக்
  கண்டே கடிது அரற்றிப் பூசல்தொடங்கினன் ஆங்கே”(
கலித்தொகை,65)

என்ற இந்தப் பாடல் தலைவி தலைவனைச் சந்திக்க விடாமல் ஆடிய கூத்தாகச் சுட்டப்பெறுகின்றது.

 மொட்டைத்தலையும் முக்காடும் n;காண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும் கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன்  அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக்காண போர்வை ஒன்றைப் போர்த்தியபடி இரவு நேரத்தில் நின்றிருக்க அவன் என்னைக் குனிந்துப் பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்;. நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு. யான் ஆண் பிசாசு. என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசிவிட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன். அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் n;;சால்லிக்n;காண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும்படியும் ஆயிற்று என்றுப் பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப்பெற்றுள்ளது.

 ஒரு பார்ப்பான் கொலை செய்யப்பட்ட செய்தியை அகநானூறு எடுத்துரைக்கின்றது.

  “தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
   படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
   உண்ணா மருங்குல் இன்னோன் கையது
   பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
   தடிந்துஉடன் வீழ்ந்த கடுங்கண் மழவர்
   திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
   செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
   காடுவிடு குருதி தூங்குகுடர் கறீஇ”(
 அகனாநூறு, 397)

என்ற பாடலில் இக்குறிப்பு இடம்பெறுகின்றது. தூதாக வந்த ஒரு பார்ப்பானை அவன் மடியில் பொன் வைத்திருக்கலாம் என்று எண்ணி எயினர் கொன்றுவிடுகின்றனர் கொன்றபின்பு அப்பார்ப்பான் மடியைப் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதும் இல்லாமை கண்டும் அவனின் வறுமை சார்ந்த ஆடையைக் கண்டும் அவனைக் கொன்றது தேவையற்றது என உணர்ந்து அப்படியே அவனை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர். அவனது உடலில் இருந்து குடல் தொங்கிய வண்ணம் இருக்க அதனை ஒரு  நரி உண்ணக் கொடுமையான வழியில் தலைவன் பயணிக்கவேண்டும் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது, பார்ப்பார் தூது செல்கின்றபோது ஏற்படும் இன்னலை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

 மொத்தத்தில் பார்ப்பார் ;அந்தணர் ஆகிய சொற்கள் குறுந்; தொகை நற்றிணை போன்ற பனுவல்களில் இடம்பெறாமல இருப்பது அவ்விலக்கியங்கள் காலத்தால் முந்தியதாக  அல்லது ஆரியவர் வருகை இடையீடுபடாத காலத்தில் வரையப்பெற்றிருக்க வாய்ப்புண்டு என்னறு கொள்ளச் செய்கின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
RE: தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.
Permalink  
 


அரசர்

 அரசர்க்குரிய மரபுகளாக தொல்காப்பியம்
 “ படையுங் கொடியுங் குடையும் முரசும்
 நடைநவில் புரவியும் களிறும் தேரும்
 தாரும் முடியும் நேர்வன பிறவும்
 தெரிவு கொள் செங்கோல் அ;ரசர்க்கு உரிய”
 ( மரபியல், 72) என்று குறிப்பிடுகின்றது.

இம்மரபுடைய அரசர்களைச் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணமுடிகின்றது. குறிப்பாக பதிற்றுப் பத்தும், புறநானூறும் இம்மரபுடைய அரசர்கள் பலரைப் பற்றிய செய்திகள் தரும் இலக்கியங்கள் ஆ:கும். .இவைதவிர பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களும் தொல்காப்பிய அரச மரபினைப் பின்பற்றுவனவாகும்.

  “கடாஅ யானைக் கழற்கால் பேகன் 
   கொடைமடம் படுதல் அல்லது
   படைமடம் படான் பிறர் படை மயக்குறினே|
 (புறநானூறு, 142)

என்ற இப்பாடல் பேகன் யானைப்படை வைத்திருந்ததைக் குறிப்பிடுகின்றது. இது அரசர்கள் யானை வைத்திருப்பது அவர்களின் அடையாளம் என்ற தொல்காப்பிய மரபினைப் பின்பற்றியதாகும்.

  தண்ணுடை மன்னர் தாருடைப் புரவி
  அணங்குடை முருகன் கோட்டத்துக்
   கலம்தொடா மகளிரின் இகந்து நின்ற
வ்வே (புறநானூறு, 299)

என்ற பொன்முடியார் பாடல் குதிரைகளை அரசர் பெற்றிருந்த நிலையைக் காட்டுகின்றது.

 ஒளவையார் மூன்று வேந்தர்களும் ஒருங்கிருந்த காட்சியை ஒரு புறநானூற்றுப் பாடலில் பாடுகின்றார். அதில் முத்தீ புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்|+ (புறநானூறு, 367) என்று குறிப்பிடுகின்றார். இப்பாடலடியில் கொடி, தேர், குடை ஆகிய அடையாளங்களுடன் வேந்தர்கள் விளங்கினர் என்பது தெரியவருகின்றது.

 பதிற்றுப்பத்திலும் அரசர்க்கான முரசு, கொடி போன்ற மரபுகள் சுட்டப்பெற்றுள்ளன. “வாழ்க அவன் கண்ணி, வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்ந்து இலங்கும் பூணன்பொலங்கொடி உழிஞையன், மடம்பெருமையின் உடன்று மேலவந்த வேந்து மெய்மறந்த வாழ்ச்சி” (பதிற்றுப்பத்து, 56) என்று அரசரக்கான இயல்புகளைப் பாடுகின்றது பதிற்றுப்பத்து.

 மதுரைக்காஞ்சியில் பாண்டியர் மன்னர் பெற்றிருந்த நால்வகைப்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.  அரசனுக்குரிய வாகைகள் ஐந்து என்றுக் குறிக்கிறது வாகைத்திணையில் குறிக்கின்றது தொல்காப்பியம். ஐவகை மரபின் அரசர் பக்கம் என்ற அக்குறிப்பிற்கு ஓதல், வேட்டல், ஈதல். படை வழங்குதல், குடியோம்பல் முதலியன அரசவாகையாகக் கொள்ளப்பெறுகின்றன.
 அரசன் குடியோம்பும் முறை பற்றிய புறநானூற்று இனியபாடல் ஒன்று இதற்குச் சான்றாக அமைகின்றது.

 “அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்
 சோறு படுக்கும் தீயொடு  
 செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
 பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே
 திருவில் அல்லது கொலைவில் அறியார்
 திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்
 பிறர் மண் உண்ணுஞ் செம்மல் நின் நாட்டு
 வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது
 பகைவர் உண்ணா அருமண்ணினையே
 அம்புதுஞ்சும் கடிஅரணால்
 அறந்துஞ்சும் செங்கோலையே
 புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
 விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை
 அனையை ஆகல்மாறே
 மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்மே”
 (புறநானுறு. 20)

என்ற இப்பாடலில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்n;பாறையின் நாட்டில் அடுப்பில் தோன்றும் வெப்பம் மட்டுமே அங்குத் தோன்றும். வேறு வெப்பம் தோன்றாது. சூரியனின் வெம்மை அன்றி வேறு வெம்மை அந்நாட்டில் தோன்றாது. கொலைவில் காணப்படாதாம். எங்கும் வானவில்லே தோன்றும். கருவுற்ற மகளிர் மண் உண்ணுவதைத்தவிர, மாற்று அரசர்கள் இம்மன்னனின் மண்ணை உண்ணமாட்டார்கள். கணைகள் தொங்கும் காவல்மிக்க அரணுடன், அறம் தொங்கும் செங்கோலையும் உடையவன் நீ. புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவை இடம்பெயர்ந்தாலும் நிலை கலங்காமல் மக்களைக் காப்பவன் நீ என்பது இப்பாடலின் பொருளாகும்.  புள் வருகை, செலவு என்பன நிமித்தங்கள். என்றாலும் அவற்றால் எவ்விதச் சலனமும் இந்நாட்டில் ஏற்படா வண்ணம் காப்பவன் இவ்வரசன் என்பது புலனாகின்றது.

 இவ்வகையில் தொல்காப்பிய அரச மரபு சங்க இலக்கியங்களால் பெரிதும் பின்பற்றப்பெற்றுள்ளது.

வணிகர்
 தொல்காப்பியர் உணர்த்திய சமுதாயத்தில் அந்தணர், அரசர் என்ற முறைக்குப் பின்பாக அமைபவர்கள் வணிகர்கள். “வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” (மரபியல்.78)  என்று வணிகருக்கான இலக்கணம் தொல்காப்பிய மரபியலில் காட்டப்பெறுகின்றது.

 மெய்திரி வகையின் எண்வகை உணவின்
 செய்தியும் வரையார் அப்பாலான (மரபியல். 623)

என்ற நூற்பா நெல், காணம், வரகு, இறுங்கு, திணை, சாமை. புல்லு, கோதுமை ஆகியனவற்றை உருவாக்குவதிலும், பேணுவதிலும், விற்பதிலும் வணிகருக்குப் பங்கு உண்டு என்று சுட்டப்பெறுகின்றது.

 வில்லும் வேலும் கழலுங் கண்ணியும்
 தாரும் ஆரமுந் தேரு மாவும்
 மன்பெறு மரபின் ஏனோர்க்குரிய
 (மரபியல். 84)

என்ற நூற்பாவின்படி வில்,வேல், கழல். கண்ணி, தார், ஆரம், தேர், குதிரை ஆகியனவற்றை வைத்துக்n;காள்ளும் மரபுகள் வணிகருக்கும் உண்டு. வேளாளருக்கும் உண்டு என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர்.  மேலும் வணிக வாகையை  ஆறு பகுதியாக உரைக்கின்றது தொல்காப்பியம். ஓதல், வேட்டல், ஈதல், உழல், வணிகம், நிரையோம்பல் ஆகிய ஆறும் வணிகர்க்கு உரியனவாகும். உழுதல், நிரையோம்புதல் ஆகிய முறையே மருதநில, முல்லை நிலச்செயல்பாடுகள் ஆகும். இச்செயல்பாடுகள் வளர்ந்து வணிக மரபாகியுள்ளன. நெய்தலிலும் உப்பு, மீன் விற்றல் ஆகியனவும் வணிகமுறைமையை உடையனவாகும்.

 “நெடுநுகத்துப் பகல்போல்
  நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
 வடு அஞ்சிவ வாய்மொழிந்து
 தமவும் பிறவும் ஒப்பநாடிக்
 கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது
 பல்பண்டம் பகர்ந்து வீசும்
 தொல் கொண்டித் துவன்று இருக்கை”(பட்டினப்பாலை, 206- 2013)

என்று வணிக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றது பட்டினப்பாலை.
 மதுரைக்காஞ்சி வணிகத்தெரு ஒன்றைப் பின்வருமாறு காட்சிப்படுத்துகின்றது.

 “அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகிக்
  குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
  பருந்து இருந்து உகக்கும்பல்மாண் நல்இல்
  பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவினி
  மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவம்
  பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
  சிற்நத தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்”
 (மதுரைக்காஞ்சி, 500-507)

என்ற நிலையில் வணிக வீதி அமைந்திருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. வணிகர்களின் வீடு பருந்து வந்தமர்ந்து செல்லும் அளவிற்கு உயர உயரமானக் கோபுரங்களை உடையதாக இருந்ததாம். அவ்வில்லில் நீரில் கிடைக்கும் பொருள்களையும், நிலத்தில் கிடைக்கும் பொருள்களையும் மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றை அறநெறி பிறழாமல் விற்பவர்கள் என்று காட்டி அத்தகையோர் உறையும் தெரு வணிகத்தெரு என்று குறிக்கின்றது மதுரைக்காஞ்சி. அறவிலை வணிகன் என்று வணிகர் அறவழி நின்றதைப் புறநானூற்றின் 134 ஆம் பாடல் குறிக்கின்றது.

  இவ்வாறு தொல்காப்பியர் சுட்டிய வணிக மரபுகள் சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பெற்றுள்ளன.

வேளாளர்
 அரசர், அந்தணர், வணிகர் என்ற சமுதாய படிநிலைகளுக்குப்பின் அமைபவர் வேளாளர் ஆவர். இவர்களுக்கு உரிய மரபுகள் தொல்காப்பிய மரபியலில் சுட்டப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.

  "வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
      இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”
 (மரபியல். 81)

என்ற நூற்பா வேளாண் தொழிலை நலம்பட செய்வதற்கே நாளும் பொழுதும் வேளார்க்குப் போதுமாய் அமையும் என்ற நிலையைக் காட்டுகின்றது. அத்n;தாழில் அல்லது அவர்கள் பிறவற்றில் நாட்டம் கொள்ளஇயலாது என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.

 வேளாளர்க்கு அறுவகைப் பகுதி கொண்ட வாகை தொல்காப்பியரால் காட்டப்பெற்றுள்ளது.அதற்கு உரை சொன்ன உரையாசிரியர்கள் அவ்வறுவகையை உழவு, உழவொழந்ததொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, கல்வி ஆகியன என்று காட்டுகின்றனர்.

 "எருது தொழில் செய்யாது ஓட விடும் கடன்  வேளாளர்க்கு இன்று” என்று வேளாள மரபைச் சுட்டுகின்றது பரிபாடல்.(பரிபாடல.20) எருதினை உழவுத்தொழிலுக்குப் பயன்படுத்தாமல் ஓடவிடுவது வேளாளர்க்கு அழகில்லை என்பது இப்பாடலடியின் பொருளாகும்.

 மருதநிலத்தில் கேட்கும் வேளாண்மரபு சார்ந்த பேரொலிகளை மதுரைக்காஞ்சி காட்டுகின்றது.

"அள்ளல் தங்கிய பகடுஊறு விழுமம் 
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
ஒலித்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை”
 (மதுரைக்காஞ்சி. 259-263”

என்று எருதுகளின் வருத்தத்தைப் போக்கும் வேளாண்பெருமக்களின் ஓசை, நெல்லை அறுப்பவர்கள் தம் கைகளால் அடிக்கும் பறை ஓசை ஆகியன கேட்கும் இடமாக மருதநிலம் திகழ்ந்தது என்கிறது மதுரைக்காஞ்சி.

 அரிசால் மாறிய அங்கன் அகன்வயல்
 மாறுகால் உழுத ஈரச் செறுவயின்
 வித்n;தாடு சென்ற வட்டி
 (நற்றிணை 210)

என்ற பாடலில் விதைக்கும் உழவு முறைமை காட்டப்பெற்றுள்ளது. இதுபோன்று நாற்றுநடல், களைபறித்தல், அறுவடை போன்ற வேளாண்செயல்பாடுகள் சங்க இலக்கியங்களில் காட்டப்பெற்றுள்ளன.

 இவ்வகையில் தொல்காப்பிய வேளாண்மரபும் சங்கஇலக்கியத்துள் போற்றப்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.

தொகுப்புரை
 தொல்காப்பிய மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற சமுதாய படிநிலை மரபு குறிக்கப்படுகிறது, இம்மரபுகள் ஒருவரை ஒருவர் தாழ்த்துவது உயர்த்துவது போல் அமையாமல் அவரவர்கான செயல்பாடுகள் அவற்றில் வாகை சூடுதல் என்பதாகக் கொள்ளப்பெற்றுள்ளது.

 தொல்காப்பியர் சுட்டும் அந்தணர்க்கான மரபுகள் நூல் பூணுதல், கரகம் கைக்கொள்ளல், முக்கோல் கொண்டிருந்தல் என்ற மரபுகள் சங்க இலக்கியப்பாடல்களிலும் காணத் தகுவனவாக உள்ளன. இவை தவிர குடையும் கைக்கொண்டு வாழ்ந்துள்ளனர் அந்தணர்கள். இவர்களோடு இணைந்த குழுவினராக பார்ப்பார்,ஐயர் ஆகியோர் எண்ணத்தகுகின்றனர். அந்தணர்கள்  வேள்வி வயப்பட்டவர்கள். பார்ப்பார் தூது செல்லுதல், வாயிலாக அமைதல் போன்றவற்றைச் n;சய்துள்ளளனர். ஐயர் என்ற வழக்கு பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. நற்றிணை  குறுந்தொகை ஆகியவற்றில் அந்;தணர், பார்ப்பார், ஐயர் பற்றிய குறிப்புகள் இல்லை. இதற்குப்பின்னான இலக்கியங்களில் இப்பகுப்பு காணப்படுகின்றது. கபிலர் தான் அந்தணன் என்றே பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் அந்தண மரபினர் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ளனர்.

 அரச மரபினர் சங்க காலத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தனர். தொல்காப்பியர் காட்டும், குதிரை, யானை, தேர், கண்ணி போன்ற அடையாளங்களுடன் அவர்கள் விலங்கினர். அவர் ஐவகைப்பட்ட அரசவாகையைப் பெற முயற்சி செய்துள்ளனர். பதிற்றுப்பத்தும், ஆற்றுப்படை நூல்களும், புறநானூறும் வேந்தர் சமுதாயத்தில் பெற்றிருந்த உயர்நிலையைப் பல இடங்களில் அறிவிக்கின்றன.

 வணிகமரபினரும் கண்ணி, குதிரை, யானை போன்ற அடையாளங்களுடன் திகழ்ந்துள்ளனர். இவர்கள் அறநெறி தவறாது வணிகச் செயல்பாடுகளை நிகழ்த்தியுள்ளனர்.

 வேளாண் மரபின் அத்தொழிலின் அருமைப்பாடு அத்தொழில் அன்றி பிறதொழில் புரிய இயலாத நிலையில் இருந்துள்ளனர். இவர்களுக்கும் குதிரை, யானை, கண்ணி, மாலை போன்றவற்றைக் கைக்கொள்ளும் உரிமை இருந்துள்ளது.

muppalam2006@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard