New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காப்பியங்களில் வினைக் கோட்பாடு


Guru

Status: Offline
Posts: 24791
Date:
காப்பியங்களில் வினைக் கோட்பாடு
Permalink  
 


காப்பியங்களில் வினைக் கோட்பாடு

E-mailPrintPDF

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடுசமூக வரலாற்றினைக் காட்டும் பெட்டகமாகவும் மானிடசமூகத்தினை உயிரோட்டமாகக் காட்டும் அரிய சான்றாகவும் காப்பியங்கள் திகழ்கின்றன. எனவே தான், இக்காப்பியங்களை  இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்றைய சமூகத்தில் பல்வகையான நம்பிக்கைகள் நிலவியிருந்தமையை காப்பியங்களின் வழியாக அறியமுடிகிறது. அவற்றில், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. இம்மறுபிறப்பிற்கு அடிநாதமாக விளங்குவது  வினையாகும். எனவே இவ்வினையில் காணப்படும் இன்ப, துன்பங்கள் குறித்து ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.

வினைக்கோட்பாடு - விளக்கம்

வினை என்பது ஒருசெயல், தொழில் என்ற பொருளைக் குறிக்கின்றது. இதனை நல்வினைத் தீவினை என்று இருவகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பதற்குச் செயலின் விளைவு, தொழிலின் பயன் என்று பொருள் கொள்ளலாம். இதனையும் நல்வினைப்பயன், தீவினைப்பயன் அல்லது நற்பயன், தீப்பயன் என்று இருவகைப்படுத்தலாம். ஒருவன் செய்யும் செயல் நல்ல செயலாக இருந்தால் அதன் பயனாய் நன்மையும், தீய செயலாக இருந்தால் அதன் பயனாய் தீமையும் விளையும் இந்த வினை விளையும் காலம் அதாவது, பயனளிக்கும் காலம் மனிதனுடைய நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும். இந்தக் கருத்தை இந்தியச்சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நிகழ்வே கர்மா என்று வடமொழியாளர்களால் வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை என்று குறிப்பிடுகின்றன. சமயங்கள் வினைக்கோட்பாடு என்றும் விதிக்கோட்பாடு என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றினை, இந்து சமயத்தில் விதி, சமண மதத்தில் ஊழ், ஆசிவகத்தில் நியதி எல்லாம் தமிழ் இலக்கிய இலக்கண ஒழுக்க நூல்களில் பிவாகித்திருந்த கர்மம் என்ற அடிப்படைக் கருத்துடன் நெருங்கியத் தொடர்புடையனவாக இருந்தன என்று நா.வானமாமலை கூறுகிறார். எனவே கர்மா என்பது வினையும் அதன் செயல்பாட்டு முறையும் சேர்ந்து நிகழ்வு என்று கூறலாம். இந்த நிகழ்வு மனித நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு கோட்பாடாகவே எண்ணப்படுகிறது.

காப்பியங்கள் காட்டும் வினை

வினையானது இருவகைப்படும். அவை, நல்வினை, தீவினை என்று கூறுவர். ஒரு பிறவியில் செய்த தீவினையானது மறுபிறவியில் தொடர்ந்து வந்து துன்பங்களைத் தரும். அதுபோலவே நல்வினையும் உயிரினைத் தொடர்ந்து சென்று மறுமையில் இன்பங்களை நல்குகின்றது.

இதுவே சமண, பௌத்த சமயக்கோட்பாடாகும். மேலும், இந்தியச் சமயங்கள் யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை, மணிமேகலையில் நல்வினை, தீவினை எவை எவை என்று பின்வரும் பாடல்களின் மூலம் அறியலாம்.

“கொலையே களவே காமத் தீவினை

உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்

பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்

சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்

வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று

உள்ளந் தன்னி னுரப்பன மூன்றுமெனப்

பத்துவகையாற் பயன்றரி புலவர்”   (மணி 125-134)(24).

கொலை, களவு, காமம் ஆகிய தீய விருப்பம் மூன்றும் தளர்ச்சியுற்ற உடலிலே தோன்றுவன. பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன. இந்த வகைகளில் தீயவற்றில் மனதைச் செலுத்த மாட்டார். தீயவற்றில் மனத்தைச் செலுத்துவாராயின் விலங்கு,பேய், நரகர் என்றும் பிறப்புகளை எடுத்துக் துன்பமுற்று பிறவிதோறும் துன்புறுவர் என்று தீவினையைச் சுட்டிக்காட்டுகிறார் சீத்தலைச் சாத்தனர். மேலும்,

“நல்வினை யென்பதியா தென வினவில்

சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச்

சீலந் தாங்கித் தானந் தலை நின்று

மேலென வகுத்த வொரு மூன்று திறத்து

தேவரு மக்களும் பிரம்ரு மாகி

தேவரு மக்கரம் பிரம்ரு மாகி

மேவிய மகிழ்ச்சி வினைப் பயனுண்குவர்”  (மணி.135-140) (24).

நல்வினையென்பது மேற்கூறப்பட்ட பத்துக் குற்றத்தினின்றும் நீங்கி, நல்லொழுக்கத்தினை மேற்கொண்டு தானம் செய்த வாழ்பவர் தேவர், மக்கள், பிரமர் ஆகிய  பிறப்பினை அடுத்து நல்வினைப்பயனை அனுவிப்பதாகும்.

பழவினை

முன்செய்த வினை ஒரு மனிதனைப் பல பிறவியை எடுக்கும் மென்பது மணிமேகலையில்,

“உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும்

மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னுஞ்

சீற்றங்கொண்டு செருநகர் சிதைத்தேன்”  (மணி. 32-34) (26)

பழவினை வந்து பற்றுதல் நீங்கலாக என்கிற உண்மை மொழிகளை உரைத்த பின்னரும் சினங்கொண்டு அவ்வளநகரத்தினை அழித்தேன் என்று கண்ணகி மணிமேகலைக்கு கூறினாள். மேலும், இதனைச் செய்த பின்னர் நான் வருத்தம் கொண்டேன் என்பதை அறிய முடிகிறது.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

ஊழ்வினையானது, அதாவது பழவினை என்றும் கூறுவர். நாம் முன் செய்த வினைகளான முற்பிறவிகளில் பிற்பிறவிகள் அடைந்து அவற்றினை அடுத்த பிறவிகளிலும் தொடரும் என்பதை சமயம் நமக்கு வலியுறுத்துகின்றது. அதாவது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மூன்று கொள்கையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதில் ஒன்று தான் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதாகும். ஆனால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி தேவந்தி தன் கணவன் கிடைப்பான் என்றும் அவளின் ஊழ்வினை அகலுவதற்கு சூரியகுண்டம், சோமகுண்டம் என்றும் காமவேள் கோட்டம் தொழவேண்டும் என்கிறாள்.

1. பழம்பிறப்பின் வினை நீங்கத் துணை மூழ்குவது

2. தெய்வத்தை வணங்குவது (காமவேள் வேதமாக்கப்பட்ட சூழல்)

என்று தேவந்தியால் கூறப்படுகின்ற இந்த இரண்டு விதமான கொள்கைகளும், சமண சமயத்திற்கு எதிரானவை. சமண சமயத்தின் கோட்பாடுகளில் ஊழ்வினை மிகமிக முக்கியமானதாகும் என்று சமணத்தின்குரல் குறிப்பிடுகிறது. மணிமேகலையில் முற்பிறவிகளில் செய்த தீயவினையானது அடுத்து பிறவியில் வந்து ஊட்டும் என்பதைக் கீழ்க்கண்ட பாடல்களின் வாயிலாக,

“தீவினை யுறுதலும் செத்தோர் பிறத்தலும்

வாயயென்று மயக்கொழி மடவாய்” (மணி. 113-114) (21)

“பிணங்கு நூன் மார்பன் பேதுகந்தாக

ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது” (மணி. 150-151) (6)

“வெவ்வினை உருப்ப விளிந்துகே யெய்தி

மாதவி யாகியுஞ் சுதமதி யாகியுஞ்

கோதையஞ் சாயல் நின்னொடுங் கூடினர்”   (மணி. 16-18) (12)

அறியமுடிகிறது. மேலும்,

“தீவினை யுறுப்பச் சென்ற நின்றாதையும்

தேவரிற் தோற்றரமுற் செய்தவப் பயத்தால்

ஆங்கத் தீவினை யின்னுள் துயத்துப்”  (மணி. 138-140) (28)

இவ்வாறு தீவினையானது உருத்தும் என்பதையும், அவற்றினால் என்ன பயன் ஏற்படுவதையும் அறியமுடிகிறது. மேலும், மணிமேகலையில் தாரை, வீரை, மணிமேகலை ஆகியோர் மறுபடியும் பிறந்தது என்பது முற்செய்த வினையின் பயனாம். மணிமேகலை நல்வினை பயனால் பழம் பிறப்பையும், அறநெறிகளையும் முன்னை நல்வினையால் அறிந்தாள் என்பதை,

“பழவினைப் பயன்நீ யரியலென் றெழுந்தேன்” (மணி பா.50) (12)

“பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த” (மணி பா -55) (12)

என்ற காவியப் பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன. மேலும், உதயக்குமாரனின் முற்பிறவில் செய்த தீவினையான் இப்பிறவியில் துன்பம் ஏற்பட்டதைக் கீழ்க்கண்ட பாடல்வரியும், சீவகசிந்தாமணியும், யசோதரகாவியமும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

“ஊழ்வினை வந்திங்கு உதயகுமாரனை

ஆருயிர் உண்டதாயினும்” (மணி 123-124) (20)

“கறங்கென வினையினோடிக குதியொரு நான்கி னுள்ளும்

பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேசலாகா

இறந்தன இறந்து போக எய்துவ தெய்திப் பின்னும்

பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ் வியல்பிற்றேயாம்”(யசோதர-35)

“தேவரே தாமு மாகித் தேவராற் றெழிக்கப் பட்டும்

ஏவல்செய் நிறைஞ்சிக் கேட்டும்அணிகமாய் பணிகள் செய்தும்

றோவது பெரிதுஞ் துன்ப நோயினுட் பிறத்தல் துன்பம்

யாவதும் துன்ப மன்னா யாக்கை கொண்டவர்கொன்றாம்”(சீ. 2811)

ஊழ்வினை,

“இனமாம் என்றுரைப் பினும் ஏதமெணான்

முனமா கியபான் மைமுளைத் தெழலாற்

புனமா மலர்வேய் நறும்பூங் குழலாள்

மனமா நெறியோ டியமன் னவனே”  (சீ. 215)

பெண்களின் மீது ஆசைப்பட்டு மன்னவனுக்கு இருக்கக்கூடிய நெறியை மறந்து. இப்படிப்பட்ட செயலால் பழியேற்ற முன்னே கூறிய தேவர்கிளன் நிலைக்கொப்பானது என்று கூறியும் அந்தவற்றை உணராதவனாகி முற்பிறப்பின் தீவினை முன்வந்த தோன்ற முல்லை நறுமலர் சூடிய மணமிகுந்த அழகிய கூந்தலையுடைய விசையை விரும்பி இரச நெறியை மறந்தவன் ஆனான்.

“குரவரைப் பேன லின்றிக் குறிப்பிகள் தாயபாவம்

துரவந்த பயத்தினாலித் தாமரைப் பாதநீங்கிப்

பருவருந் துன்ப முற்றேன் பாவியே னென்று சென்ன

தருவடி மிசையின் வைத்துச் சிலம்ப னெறத் தடுதிட்டான” (சீ.1728)

நந்தட்டன் முற்பிறப்பில் தாய் தந்தை ஆசிரியர், அரசர் மேலோர் ஆகிய முதுபெருங் குரவர்களைப் பேனாமலும், அவர்சொற்குப் பணியாமலும் இருந்த பாவத்தால் உண்டான பயனால் இப்பிறப்பில் தாமரை மலர்போலும் இத்திருவடிகளைப் பிரிந்து பாவியேன் நான் பெருந்துன்பம் அடைந்தேன் என்று கூறி தன் முடியை சீவகன் திருவடியில் வைத்துநற்தட்டன் அலறினான் என்று சீவகசிந்தாமணி முற்பிறப்பில் செய்த வினையை எடுத்துரைக்கிறது.

வினை

“பிறன் சுமவான் தான்றடவான்

பெருவினையும் உங்கில்லா

அறம் செய்தான் அமருலகில்

செல்லும்வாய் அரிதுஎன்று

புறம்புறம்பே சொல்லாம்

பொருள் நிகழ்ச்சி அறியாயால்

கறவ்குகளும் அல்லனவும்

காற்றெறியத் திரியாவோ”  (நீலகேசி. 307)

உயிரைச் சூழ்ந்த வினைகளுக்கு ஏற்ப நான்கு கதிகளிலும் மாறி மாறிச் சென்று அடைகின்றது என்று சமணம் கூறும் பொருள்நிகழ்வு ஆகும்.

“செய்வினைதன்ன நிற்பவே பயன்எய்தும் என்பதூஉம்

அவ்வினை அறக்கோட்டான் அதுவிளையும் என்பதூஉம்

இவ்விரண்டும் வேடுதல் எமக்கில்லை எடுத்துரைப்பின்

ஐவினையின் நிலைதோற்றமாசம் தான் நாட்டுங்கால்” (நீலகேசி. 311)

வினைகள் உடனே பயன் தருகின்றன எனவும், அவை அழிந்த பின்பு பயன் தருகின்றன எனவும் சமணர் கொள்கை என்று நீலகேசி எடுத்துக்காட்டபடுவதை அறியமுடிகிறது.

முடிவுரை

வினையானது ஒருவன் செய்த செயலினைப் பொருத்து நல்வினை, தீயவினையென அமையும் என்பதையும், மறுபிறவியல் அவற்றின் தன்மையைப் பொறுத்து ஊழ்வினையானது உருத்து வந்து நன்மையோ, தீமையோ ஏற்படுத்தும் என்பதையும் இக்கட்டுரை மூலம் அறியலாம்.

l.padma.ra@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard