New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்
Permalink  
 


சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

அறிமுகம்
சு. குணேஸ்வரன்பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறவும் விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால சமூகநிலையை நோக்கமுடியும்.

பரிபாடல் - சொற்பொருளும் அமைப்பும்
பரிபாடல் என்பது ஒரு யாப்பு வகை என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது ‘பரிந்த பாடல்’ எனப்படுகிறது. அதாவது பாடல் கலவையாக ஏற்று வருதல். “பரிபாடல்  என்பது பரிந்து வருவது. அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் பல வடிவும் வருமாறு நிற்குமென்றுணர்க” (தொல். செய். 118) என்று நச்சினார்க்கினியார் உரைப்பார். இதற்கு தொல்காப்பிய செய்யுளியலில் பின்வருமாறு சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது.

“ பரிபாட் டெல்லை
நாலீ ரைம்ப துயர்படி யாக
வையைந் தாகு மிழிபடிக் கெல்லை”  (தொல்.செய். 474)

சிற்றெல்லையாக 25 அடியும் பேரெல்லையாக 400 அடிவரையும் வரும் என பரிபாட்டில் வரும் வெண்பாவுக்கு தொல்காப்பியம் அளவு கூறுகின்றது. பரிபாடல் இசைப்பாடலாகும். இது இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனலாடல் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளது.

பரிபாடல் கிளப்பும் பிரச்சினை
பரிபாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தனவென்று அறியப்படுகிறது. ஆனால் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் முழுமையாகக் கிடைத்த 22 பாடல்களோடு சிதைவடைந்த வையைக்குரிய ஒரு பாடலும், மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மேற்கோட் செய்யுள்களில் காட்டப்பட்ட 13 பாடல்களின் திரட்டுக்களும் உள்ளடங்கலாக தற்போது 24 பாடல்களே பரிபாடல் நூலில் உள்ளடங்கியுள்ளன.

“திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்”

என்ற பழஞ்செய்யுளால் பரிபாடலில் முழுமையாக இருந்த பாடல்கள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது.

பாடல் பொருள்    முன்னர் இருந்தவை        தற்போது கிடைப்பவை

திருமால்              08 பாடல்கள்                    06 பாடல்கள் + திரட்டு 1
செவ்வேள்            31 பாடல்கள்                    08 பாடல்கள்
வையை               26 பாடல்கள்                    08 பாடல்கள் + திரட்டு 2,3,4
மதுரை                 04 பாடல்கள்                   திரட்டு 7,8,9,10,11.12,13
காடுகிழான்          01 பாடல்            ---

இவற்றில் திரட்டுக்களில் இருந்து பெற்ற 5,6 பாடல்களின் பொருள் எவற்றுக்குரியன என பதிப்பாசிரியர்களால் குறிப்பிடப்படவில்லை.   பரிபாடலுக்கு பரிமேலழகர் உரையொன்று இருந்ததெனவும் அவ்வுரையே பின்னர் புதுக்கியும் விளக்கமும் சேர்த்து நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளனவெனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவ்வுரை பரிமேலழகர் உரைதானா என்பதில் ஐயமிருப்பதாக கா. சிவத்தம்பியவர்கள் (சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்,ப. 122) குறிப்பிடுகிறார். எவ்வாறெனினும் பரிபாடல் ஊடாகச் சொல்லப்படும் செய்தி யாது என்பதை அறிவதே முதன்மையான நோக்கமாகும்.

“பரிபாடல் என்பது மிகவும் முக்கியமான அதேவேளையில் ஓர் அசாதாரணமான தொகுதியாகவும் காணப்படுகிறது. முதலாவது, இது ஒரு இசைப்பாடல்; இலக்கிய வகை அல்ல. இது முற்றிலும் நிகழ்த்துகை, ஆற்றுகை சார்ந்த ஒரு வடிவம். அதிலே யார் பாட்டு இயற்றினார்கள்? யார் இசையமைத்தார்கள்? என்கின்ற தரவுகள் தரப்பட்டுள்ளன. இசைத்தமிழ் நூல் ஒன்று இங்கு இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது.” (1)

முருகன், திருமால் கொற்றவை வழிபடு தெய்வங்களாக மக்களால் போற்றப்பட்டவை. ஆனால் வையை பற்றிய பாடல்களும் வழிபடு தெய்வங்களுடன் இவற்றுள் சேர்க்கப்பட்டவற்றுக்குக் காரணம் யாது என்பதும் ஆராயத்தக்கது. அதேபோல் மதுரை பற்றிய பாடல் ஒன்றும் பரிபாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு பின்வரும் இரண்டு அம்சங்கள் அடிப்படைக் காரணங்களாக இருந்துள்ளன என்பது நாம் அறியக்கூடியதே.

1.    தமிழரின் வழிபாட்டு மரபை எடுத்துக்காட்டுதல்
2.    தமிழின் அடையாளமாக மதுரையை நிறுவுதல்


குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகன் அதுவே பரிபாடலில் திருப்பரங்குன்றப்பாடல்களாக உள்ளன.  முல்லைக்குரிய தெய்வம் திருமால், இதனை திருமாலிஞ்சோலைக்குரிய பாடல்கள் காட்டுகின்றன. பாலைக்குரிய தெய்வம் காடுகிழான் எனப்படும் கொற்றவை. இவ்வகையில் நோக்கினால் நெய்தலுக்கு வையையும், மருதத்திற்கு மதுரையும் வணக்கப்பாடல்களாக அமைந்துள்ளன. இவ்வகையில் பரிபாடல் தமிழரின் வழிபாட்டு மரபை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

மறுபுறம் தமிழின் அடையாளமாக பரிபாடலை நோக்கினால், முருகனின் திருப்பரங்குன்றம், விஷ்ணுவின்  திருமாலிருஞ்சோலை வையை ஆறு யாவற்றினதும் அமைவிடமே மதுரைதான். முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் மதுரைதான். எனவேதான் பாண்டியனின் ஆட்சிச்சிறப்பையும்,  தமிழின் அடையாளத்தையும் பதிவுசெய்யும் நோக்கமாக பரிபாடல் மதுரையை மையமாகக்கொண்டு தமிழின் அடையாளமாகப் பாடப்பட்டுள்ளது. இதற்கு “தமிழ் வையைத் தண்ணம்புனல்” என விளித்துப்பாடப்படும் பரிபாடல் வையைப் பாடலடிகளையும் ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

“பரிபாடல் மதுரை மாநகரையும் மதுரை நகருக்கு வளமும் வனப்பும் காப்பும் தந்த வையை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும்  மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துள்ளது. பிறதொகை நூற்களைப் போலன்றித் தமிழ்நாட்டின் பகுதிகளையெல்லாம் கொண்டு எழுந்த செய்யுளாக இல்லாமல் மதுரை நகரையும் மதுரையையொட்டி ஓடுகின்ற வையை ஆற்றையும், திருப்பரங்குன்றத்தையும், திருமாலிருங்குன்றத்தையும் பாடுபொருளாகக் கொண்டு பரிபாடல் எழுந்துள்ளது என்பதால் இந்நூலினை மதுரையைப் பற்றி எழுந்த நூல் எனக் கூறுவர்.” (2)

 

கா. சிவத்தம்பி அவர்கள் இதற்கு மற்றொரு காரணமும் கூறுவார். தமிழ்நாட்டிலும் தமிழ் இலக்கியத்திலும் சமணர்களின் செல்வாக்கு ஓங்கியபோது வைதீகசமய வழிபாட்டை நிலைநிறுத்தும் பொருட்டு பரிபாடல் ஆக்கப்பட்டது என்பார்.

வையைப்பாடல்களும் அவற்றின் பொதுவான அமைப்பும்
பரிபாடலில் மொத்தமாக ஒன்பது வையைப்பாடல்கள் உள்ளன. அவற்றில் ஏழு பாடல்கள் முழுமையாகவும் ஒருபாடல் சிதைவடைந்த நிலையிலும் மற்றையது திரட்டுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட தனிப்பாடல்களுமாகும். இவற்றில் அகத்திணைச் செய்திகளே பெரிதும் பயின்றுள்ளன. இவை எல்லாவற்றையும் அகப்பாடல்களாகக் கருதியே துறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியனின் ஆட்சிச்சிறப்பு, கொடைச்சிறப்பு, மதுரையின் சிறப்புக்கள் கூறப்படும் பகுதிகளில் புறத்திணைக்குரிய பண்புகள் உள்ளன.

வையையின் வரவும் வளமும், நீராடுவோர் இயல்புகள், நீர்ப்பண்பாடுகள், அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள், வையையை வாழ்த்துதல் ஆகியன வையைப் பாடல்களின் பொதுவான அமைப்பாக  அமைந்துள்ளன. அப்பாடல்களை இயற்றிய புலவர், இசை வகுத்தவர், பண் ஆகிய குறிப்புக்களை நோக்குவோம்.

வையைப் பாடல்கள் : பாடியவர், இசைவகுத்தவர், பண்
பாடல்
எண்
ஆசிரியர்
இசை வகுத்தவர்
பண்
6   
ஆசிரியர் நல்லந்துவனார்
மருத்துவன் நல்லச்சுதனார்
பண்ணுப் பாலையாழ்
7
மையோடக்கோவனார்
பித்தாமத்தார்
பண்ணுப் பாலையாழ்
10
கரும்பிள்ளைப் பூதனார்
மருத்துவன் நல்லச்சுதனார்
பண்ணுப் பாலையாழ்
11
ஆசிரியர் நல்லந்துவனார்
நாகனார்
பண்ணுப் பாலையாழ்
12
நல்வழுதியார்
நந்நாகனார்
பண்ணுப் பாலையாழ்
16
நல்லழுசியார்   
நல்லச்சுதனார்
பண் நோதிறம்
20
ஆசிரியர் நல்லந்துவனார்
நல்லச்சுதனார்
பண் காந்தாரம்
22
--------
-------
--------
திரட்டு
-------
-------
--------
வையை 22 ஆவது பாடலைப் பாடியவர் பெயரும் திரட்டுக்களில் இருந்து பெற்ற 03 பாடல்களைப் பாடியவர் பெயர்களும் அறியப்படவில்லை.

“பரிபாடலில் உள்ள இசைகளின் பெயர்கள் தெரிகின்றனவே ஒழிய தேவாரப்பண்களைப் பாடுவதுபோல் அதனைப்பாட இயலவில்லை. பரிபாடலைப் பாடும் முறை இன்று மறைந்துவிட்டது. இதுவரை அதனை அறிந்து யாரும் பாடவில்லை. அதுபோன்றே பரிபாடல் இலக்கியம் செய்ய யாரும் முயன்றதும் இல்லை. பரிபாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவ்விசை மறைந்து போனது என்பதுமே அதன் காரணமாகும்.” (3)

களப்பிரர் காலத்தில் அரசு நிலை திரிந்தபடியால் இவை பேணப்படாமல் அழிவடைந்து போயிருக்கலாம் எனவும் மு. அருணாசலம் (தமிழ் இசை இலக்கிய வரலாறு) குறிப்பிடுகிறார். இதனூடாக; பரிபாடல் பக்திக்காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முந்தியது என்பது உறுதிப்படுகின்றது. இவற்றிலிருந்து பாடலைப் பாடியவர் ஒருவராகவும் அவற்றுக்கு இசை வகுத்தவர் வேறு ஒருவராகவும் இருந்துள்ளமை அக்காலம் இசையில் உன்னதமான நிலையை அடைந்திருந்ததென்பதையும்  நிரூபிக்கின்றது.

குறித்துரைக்கக்கூடிய சிறப்புக்கள்
வையைப்பாடல்கள் பழந்தமிழரின் நீராடல் பற்றியது. சிலம்பிலும் பிற சங்கப்பாடல்களிலும் இவை பற்றிய குறிப்புக்கள் உள்ளனவெனினும் பரிபாடல் இதனை மிக விரிவாக எடுத்துக் காட்டுகிறது.

1.    வையை வரவும் வளமும்

“வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு வழை, ஞெமை, ஆரம், இனைய,
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு” (பரி. 12: 1-8)

என்று வையையில் கடல்போல் நீர் பெருகி வந்த காட்சி சொல்லப்படுகிறது. மண்ணிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழையாகப் பொழிகிறது. மின்னலும் இருளுமாக மாறிமாறித் தோன்றி சைய மலையில் பெய்த மழை வையை ஆற்றில் காற்றினால் உதிர்ந்த மலர்களைப் பரப்பியும்; நாகம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் ஆகிய மரங்கள் வருந்துமாறும் தகரம், ஞாழல், தேவதாரம் ஆகிய மரங்களைச் சாய்த்து அடித்துக்கொண்டு வந்தது. இவ்வாறு வருகின்ற வையையானது பெரிய கடல் பொங்கி வருவதைப்போல  இருந்தது என புலவர் வையையின் வரவைக் குறிக்கின்றார்.

வையையாறு நறுமணத்தோடு ஓடி வருகின்றது. அந்த நறுமணம் நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ ஆகிய நால்வகைப்பூக்களையும் சுமந்து வருவதால் ஏற்பட்டது. அதுவே வையை ஆற்றின் பொதுநாற்றம் என பரிபாடல் குறிப்பிடுகிறது. இது எப்படியிருக்கிறது என்றால் மணப்பொருள் பலவற்றைக் கலந்து உருவாக்கப்படும் மணக்கலவை நூல்களில் சொல்லப்பட்ட விதிமுறையின்படி கலக்கப்பட்ட மணத்தைப்போல வையை ஓடுகிறது. அதில் நீராடும் ஆடவரும் மகளிரும் மேலும் நறுமணப்பொருட்களை தமது உடலில் பூசிக்கொண்டு  நீராடுவதால், எல்லாம் சோர்ந்து புதிய மணத்தைப் பரப்பியது என்று கூறப்படுகிறது. இவ்வாறு வையை ஆற்றின் வரவு சொல்லப்படுகிறது. இதனை பின்வரும் பாடல் காட்டுகின்றது.

“ஆடல் அறியா அரிவை போலவும்
ஊடல் அறியா உவகையள் போலவும்
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது,
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்கலவை போலப்
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம்பூம் புனல்.” (பரி 7: 17-22)

வானத்தில் இருந்து கங்கை ஆறு ஒழுகுவதுபோல வையை வானக்கங்கையை ஒத்து விளங்கியது எனவும் வள்ளல்தன்மைமிக்க பாண்டியனது ஈகைபோல வையையின் நீர்வரவு இருந்ததெனவும் வையையின் வரவு பாடப்படுகிறது. சையமலையில் உருவான வையையும் அதன் கரைக்கண் இருந்த சிறப்பான நீராடுதுறையான திருமருதமுன்துறையிலே மக்கள் புகுந்து சிறப்பாக நீராடும் காட்சிகளும் மிக விரிவாக விபரிக்கப்படுகின்றன. இவ்வாறு மலையிலே பிறந்த வையை நதி பண்டைக்காலத்தில் “வையை மடுத்தாற் கடலென”(பரி 20: 42) அடிகளின் ஊடாக கடலில் கலந்த காலம் இருந்ததென்பதைப் புலப்படுத்துகிறது.

வையையின் வரவு மதுரையின் வளத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றது. அது பலவாறாக விரிவடையக்கூடியது. மதுரையின் செழிப்பும் மக்களின் மகிழ்ச்சியுமாக அமைகின்றது. அது ஓடும் இடங்கள் எல்லாவற்றையும் வளப்படுத்திக் கொண்டு செல்கின்றது. மற்றும் வழிபாட்டு மரபின் அடியாகவும் வையையின் வரவு குறிப்பிடப்படுகின்றது.

2.    நீராடுவோர் இயல்புகளும் நீர்ப்பண்பாடுகளும்
வையையில் புதுவெள்ளம் வந்ததும் மக்கள் குதிரைகளிலும் யானைகளிலும் கோவேறு கழுதைகளிலும் பல்லக்குகளிலும், மற்றும் நடந்தும் நீராடச் செல்கின்றனர். புதுப்புனலாடச் செல்லும் மகளிர் எடுத்துவரும் பொருட்களும் தங்கள் ஆடவரை அணியச் செய்யும் ஆடை வகைகளும் கூறப்படுகின்றன. நீரில் விளையாடுவோரும், தம் தலைவரோடு ஊடல் கொள்ளும் தலைவியரும், முகைப்பருவத்து மகளிர் தாம் விரும்பும் காதலர் தம்மை வந்து சேருமாறு காத்திருத்தலும், காமவயப்பட்ட ஆடவரும் மகளிரும் ஊரார் பழி தூற்றுவர் என்று எண்ணி மறைந்து நிற்றலும் வாழைத்தண்டின்மேல் படுத்து விளையாடும் ஆடவரும், பந்து கவருவோரும், சிற்றில் விளையாடும் பெண்களிடம் சிறுசோற்றுக்கு கையேந்துதல் முதலானவையும் எடுத்துக்காட்டப்படுகின்றன.

இவ்வாறு நீராடி தம் இல்லம் திரும்பும்போது ஆடியும் பாடியும் செல்கின்றனர். அவர்கள் செல்லும்போது மாடங்களில் இருந்து எழுந்த அகில் புகையும் வண்டுகளின் ரீங்காரமும் ஒன்று சேர்ந்தன. இவ்வாறு வையையில் இடம்பெறும் ஒன்பது பாடற்பகுதிகளும் தனித்தனியே வையையின் வரவையும் புனலாட்டத்தில் ஈடுபடும் மாந்தர்களின் இயல்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

வையை ஆற்றில் இடம்பெற்ற நீராட்டத்தில் நீர்விளையாட்டுக் கருவிகளை அக்கால மக்கள் பயன்படுத்திய செய்திகள் கிடைக்கின்றன. இவர்கள் அன்று போர்க்களத்திற்குக் கருவிகள் கொண்டு சென்றதுபோல பல கருவிகளையும் எடுத்துச் சென்றனர். அவற்றில் நீர் விளையாட்டுக்குரிய நெய் பூசப்பட்ட சிவிறி, வண்ணத்திரவம் நிரப்பி அல்லது குருதியைப்போன்ற அரக்கு நிறமுடைய நீரை அடைத்த நீரெக்கி, வாசனை நீர் அடைக்கப்பட்ட கொம்பு, மூங்கில் குழாய், வண்ணக்கலவைகளை நிரப்பி ஒருவர் மீது மற்றவர் வீசியெறியும் வட்டுக்கள் ஆகியன நீர்விளையாட்டுக்குரிய கருவிகளாகக் குறிக்கப்படுகின்றன.

“நெய்ம்மாண் சிவிறியர் நீர் மணக்கோட்டினர் (பரி. 6:25)
“நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி (பரி. 10:12)
“வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் (பரி. 11)

இதன் இன்றைய நிலைபற்றிய கூற்று ஒன்றையும் இங்கு தொடர்புபடுத்திக் காட்டத்தக்கது.

“துருத்தியில் நீர் பீய்ச்சுதல் எனும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாய் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வோடு தொடர்புடையது. அழகர் மதுரைக்கு வரும் காலம் கோடைக்காலமாக இருப்பதால், கோடையைத் தணிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்தத் தண்ணீர் பீய்ச்சும் சடங்கு. ஆடு அல்லது மாட்டுத் தோலைப் பைபோல எடுத்த நான்கு புறமும் தைத்து ஒரு மூலையில் பீச்சாங்குழலைச் செருகி விடுவர். நீர் நிரம்பிய துருத்தியை அழுத்தும்போது பீய்ச்சாங்குழல் வழியாகத் தண்ணீர் விசையோடு வெளிவந்து நீர்த்தூவல் நிகழ்த்தும்.……. …..மதுரையில் வையையாற்றில் புதுப்புனல் வரும்போது நீராடச் செல்பவர்கள் இவ்வகை நீர்பாய்ச்சும் கருவிகளை வைத்து விளையாடுவதைப் பரிபாடல் இலக்கியம் பலபட எடுத்துரைக்கின்றது. இக்கருவிக்கு நீரெக்கி, சிவிறி, துருத்தி என்று பெயர். நீரை எக்கி வீசுவதாலும், சிவிறப் பரப்புவதாலும், துருத்தி அடிப்பதாலும் இக்கருவிக்கு இப்பெயர்கள் வந்தன.” (4)

இவ்வாறாக வையையில் இடம்பெற்ற புனல்விளையாட்டில் பயன்படுத்த நீர் விளையாட்டுக்கருவிகள் பற்றிய குறிப்பு பரிபாடலிலேயே அதிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சங்ககால மகளிர் தங்கள் கூந்தலை அழகுபடுத்துதலை சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. மகளிர் தங்கள் கூந்தலை ஐந்து வகையாக அழகுபடுத்துவர். அதனை ஐம்பால் என அழைப்பர். முடி (கூந்தலை உச்சியில் கூட்டி முடிதல்), கொண்டை (பக்கவாட்டில் முடிதல்), சுருள் (பின்னிச் செருகுதல்), குழல் (சுருட்டி முடிதல்)  பனிச்சை (சடையாகப் பின்னுதல்) என்று குறிப்பிடுவர். பரிபாடலில் “கார்கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்” (பரி 12-15) என்ற பரிபாடல் அடியினூடாக கூந்தலைக் குழலாக முடிப்பதைக் கதுப்பு என்று குறிக்கின்றனர்.

நீர்ப்பண்பாடுகளில் வையையில் தைநீராடல்  பற்றிக் குறிப்பிடப்படுகிறது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்கள் தாயாருடன் சென்று சடங்குமுறைகளை அறிந்த மூத்த பார்ப்பனியர் கூறியபடி நீராடுதல் தைநீராடல் எனப்படும். இவ்வாறு நீராடினால் அவர்களின் வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவேதான் இப்பிறவியில் நீராடக்கிடைத்தது தாங்கள் முற்பிறவியில் செய்த பலன் என்றும் மறுபிறவியிலும் இப்பேறு நிலைக்கவேண்டும் என்று வேண்டுகின்றனர். இதனையே

“முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம்
மறுமுறை அமையத்தும் இயைக
நறுநீர் வையை நயத்தகு நிறையே” (பரி 11:138-140)

கல்வி கற்கத் தொடங்கும் இளம்புலவர் மை தடவப்பெற்ற சுவடிகளைக் கையிலேந்திப் பயிலும்  மையாடல் பற்றிய செய்தியும் சொல்லப்படுகிறது.

நிழல் காண் மண்டிலம் எனப்படும் முகம் பார்க்கும் கண்ணாடி சங்ககாலத்தில் இருந்தமை பற்றி பரிபாடல் குறிப்பிடுகின்றது. பரிபாடலில் செவ்வேள் பற்றிய 21 வது பாடலில் “நிழல் காண் மண்டிலம் நோக்கி..” என்ற தொடர் வருகிறது. அதேபோல வையைப்பாடலில் ஆடி, கண்ணாடி ஆகிய பதங்கள் வருகின்றன.

“வாச நறு நெய் ஆடி, வான் துகள்
மாசு அறக் கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி” (பரி. 12-19)

நீராடி முடித்த பெண்கள் தங்களை ஒப்பனை செய்வதற்கு முன்னர் கண்ணாடியைத் தூய்மைப்படுத்துவதற்கு நறுமணம் மிக்க நெய்யைப் பூசி வெண்மையான கற்பொடியிட்டுத் துலக்கித் தூய்மையாக்கி அக்கண்ணாடியில் தமது இயற்கையழகையும் செயற்கையழகையும் காதலருடன் புணர்ந்ததால் உண்டான ஒளியையும் கண்டு இன்பமடைகின்றனர்.  இந்த அரிய செய்தியும் பரிபாடல் ஊடாகப் புலப்படுகிறது. அகநானூறு ‘நிழல்காண் மண்டிலம்’ (பாடல்71)  எனவும் குறுந்தொகையில் ‘ஆடிப்பாவை போல’ (பாடல்8) எனவரும் தொடர்களாலும் குறிக்கப்படுகிறது.

நீர் விளையாட்டு முடிந்து அகில் புகையில் ஈரம் உலர்த்தினர். பின்னர் கிண்ணத்தில் மதுவை ஊற்றிப் பருகினர். வெண்மையான துவாயினால் கூந்தலைச் சுற்றினர். சிலர் பொன்னால் செய்த நத்தை, வண்டு முதலியவற்றை ஆற்றில் விட்டு வேண்டுதல் செய்தனர்.

மேலே குறிப்பிட்டவை தவிர வையையில் நீராட மறுக்கும் அந்தணர் செய்கை, ஆடை, அணிகலன், மற்றும் கைத்தொழில் செய்யும் வாணிபர் பற்றிய குறிப்புக்கள், உழவுத் தொழில் செய்யும் வேளாளர், ஆடல் பாடல் நிகழ்த்தும் பாணர் கூத்தர் விறலி பற்றிய பதிவுகள், பல்வேறு இசைக்கருவிகளையும் இசைக்கும் கலைஞர்கள் பற்றிய பதிவுகள், காலத்துக்கேற்ற ஆடைகள், மாலை அணிதல், திலகம் இடுதல், மதுரை நகரின் உள்ளமைப்பு, சுருங்கை எனப்படும் பாதாள வழி, மாட மாளிகைகள், சோதிடம், கொடை, துறவு வாழ்க்கை, மறுபிறப்புக் கருத்துக்கள் ஆகியவையும் வையைப்பாடல்களின் ஊடாக வெளிப்படுகின்றன.




__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்
Permalink  
 


3.    அகப்பொருள் - புறப்பொருள் தழுவிய செய்திகள்
“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து  இன்புறுவதோர் பொருளாகலின் அதனை அகம் என்றார்.” (5) என்பது உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியருடைய அகப்பொருள் பற்றிய வரைவிலக்கணமாகும்.
அகம் என்பது உள்ளத்தில் நிகழும் காதல் ஒழுக்கமாகும்.  சங்க இலக்கியம் இதனையே ஏழு திணைகளாகப் பிரித்துள்ளது. அந்த இன்ப உணர்ச்சி ஒருவனும் ஒருத்தியும் கூடுவதன்றி வேறு வகையாலும் பிறக்கும் என்பதையும் தொல்காப்பியச் சூத்திரம் எடுத்துக்காட்டுகின்றது.

“செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
றல்லல் நீத்த உவகை நான்கே” (தொல். மெய்ப். 11)

அதாவது செல்வம் காரணமாகவும் அறிவு காரணமாகவும் விளையாட்டுக் காரணமாகவும் உள்ளத்தில் உவகையுணர்ச்சி தோன்றும் என்பார். வையைப் பாடல்களில் புனல் விளையாட்டின் ஊடாகவும் இந்த அம்சத்தினை நோக்கலாம்.

வையைப்பாடல்களில் இடம்பெறும் புனல் விளையாட்டில் பல்வேறு அகப்பொருட்செய்திகள் காட்டப்படுகின்றன. வையைத் தலைவியர்கள் கற்புக் காலத்தில் பிறர் காணக்கூடியவாறு தமது தலைவரோடு நீராடுகின்றனர். தலைவனோடு ஊடல் கொள்கின்றனர். தலைவனை ஊடலில் வையை ஆற்றில் தாக்குகின்றனர். இவை தவிர தலைவியின் தோழியர் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தை பழித்துரைக்கின்றனர். தலைவி பரத்தையோடு நேரடியாக வாய்த்தர்க்கம் புரிகின்றனர். எனவே தலைவன், தலைவி, சேரிப்பரத்தை, காமப்பரத்தை, தோழியர். கண்டோர், அறம் உரைக்கும் முதுபெண்டிர் ஆகியோரின் பல்வேறு கூற்றுக்களும் செயற்பாடுகளும் வையைப்பாடல்களில் வருகின்றன.

கூடாஒழுக்கமாகிய பரத்தமை ஒழுக்கம் பழித்துரைக்கப்படும் செய்தியும் பரிபாடலில் இடம்பெறுகின்றது.

“ஆயத்து ஒருத்தி, அவளை அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி”  (பரி 20: 48-51)

என தலைவிக்கும் பரத்தைக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ஆயத்தார் ஒருத்தி பரத்தமை ஒழுக்கத்தை இழித்துரைக்கும் காட்சி எடுத்துக்காட்டப்படுகிறது. காம இன்பத்தை வஞ்சத்தோடு கூடிய பொய்மொழிகளோடும் சேர்த்துத் தன்னை நாடிவரும் காமுகரை மயக்கும் கணிகையை காமுகப் பன்றிகள் காம உணவு உண்ணுவதற்குரிய தொட்டியாக உருவகிக்கிறார் புலவர். இவ்வாறு பரத்தமை ஒழுக்கம் பழிக்கப்பட்டமையும் வையைப்பாடல்களில் எடுத்துக்காட்டப்படுகின்றன.

புறத்திணையென்பது அகத்திணையின் மறுபக்கமாகும். அகவாழ்வைப் போல புறவாழ்வையும் தொல்காப்பியர் ஏழு திணைகளாக வகுத்துள்ளார். அரசர்களின் ஆட்சித்திறன், போர்த்திறன், கொடை, புகழ், வரலாறு, வாணிகம், கைத்தொழில், நீதி முதலான நாட்டுவாழ்வு சார்ந்த செய்திகள் அனைத்தும்  இதனுள் அடங்கும்.

“தலைவன், தலைவி, பரத்தை போன்ற அகப்பொருள் மாந்தர்களின் செயல்களும் இடம்பெறும் பாடலாக வையைப்பரிபாடல்கள் உள்ளனவே அன்றி முழுதும் அகப்பொருள் செய்திகளே பேசப்படவில்லை. சிறுவர், சிறுமியர், இளையர்,முதியோர், கற்றோர்,கல்லாதவர், அரசன், குடிகள் எனப் பலதிறத்து மக்களும் வையைப்பாடலில் இடம்பெறுகின்றனர். அகப்பொருள் மரபுக்கு மாறான நிகழ்வுகள் பலவும் அங்கே நடைபெறுகின்றன. (பரத்தை தோழி நேரடிப்பூசல், பரத்தை தலைவி நேரடிப்பூசல், பரத்தையர் அல்லாத பிற பெண்களும் மதுவுண்டு களிப்பது, தலைவி தலைவனைக் காலால் உதைப்பது, தலைவனின் பெருமைக்கு மாறானவற்றைத் தோழி உரைப்பது போன்ற பல நிகழ்வுகள்) எனவே பரிபாடல்  வையைப்பாடல்கள் அகப்பாடல்கள் என்பது பொருந்துமாறு இல்லை.” (6)

பரிபாடலில் பாண்டியனைத் தவிர வேறு மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் இல்லை. போருக்குரிய ஆயத்தங்களுடன் படைநடத்தும் நிகழ்வுகளையும் போருக்குக் காத்துநிற்கும் பாண்டியனின் படையைப் போலவும் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போருக்குப் பின்னர் அமைதியை விரும்பும் நிலையினையும் வையையில் அகத்திணைச் செய்திகளுக்கு ஊடாக புலவர்கள் ஒப்பிட்டுக்காட்டியுள்ளனர்.

வையையில் நீராடுவதற்குப் பலதரப்பட்ட மக்களும் நீராட்டத்துக்குரிய ஆயத்தப்பொருட்களுடன் சொல்லும் காட்சி, “அன்று போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென…” (பரி 6: 25)எனத் தொடரும் பாடலின் ஊடாகக்  காட்டப்படுகிறது. மேலும் வையையில் தலைவன், தலைவி, பரத்தை, தோழியர், கண்டோர் ஆகியோருக்கிடையில் இடம்பெறும் உரையாடல்கள், பூசல்கள், நிகழ்வுகள் யாவும் பாண்டியனின் ஆட்சிச்சிறப்புடன் ஒப்பிட்டுப்பாடப்பட்டுள்ளமையை கண்டுகொள்ளலாம்.

“அன்று போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென…” (பரி 6: 25)

“பொருகளம்  போலும் தகைத்தே – பரி கவரும்
பாய் தேரான் வையை அகம்” (பரி 11: 60-61)

என்று மைந்தரும் மகளிரும் வையை ஆற்றில் உள்ளே நின்று விளையாடும் காட்சி பகைவரை வென்று அவர்களின் குதிரைகளைக் கவரக்கூடிய விரைந்து செல்லும் தேரை உடைய பாண்டிய மன்னனின் போர்க்களம் போன்றிருந்தது என புலவர் உவமிக்கிறார்.

அதேபோல சிறுவர், முதியோர், பாணன், கூத்தன், மற்றும் இசைக்கலை வல்லுநர்கள், அரசன் ஆகியோர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.பாண்டியனின் ஆட்சிச்சிறப்பும் அவனின் வீரமும் குறிப்பிடப்பட்டுள்ளன. மதுரையின் வளமும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவேதான் வையைப்பாடல்கள் தனியே அகப்பாடல்களாக மாத்திரம் அமையாமல் புறமும் விரவியவையாக அமைந்துள்ளன.

4.    வையையை வாழ்த்துதல்
வையையை  அடைமொழி கொடுத்து விளித்துப்பாடும் பண்பும் நோக்கத்தக்கது. “நறுநீர் வையை” (பரி11:140), “பூமலி வையை” (பரி 20,111), செவ்வேள் பாடலில் “வளம்கெழு வையை” (பரி 17:44), “தமிழ் வையைத் தண்ணம்புனல்”  (பரி 6:90), “தண்வரல் வையை” (திரட்டு 3:5) இங்கு தமிழ் வையை என தமிழ் வளர்த்த மதுரை நகரில் பாயும் வையையைப் புலவர் வருணித்துள்ள பாங்கு அவதானிக்கத்தக்கது.

பழந்தமிழரின் வழிபாட்டில் ஆற்றுவழிபாடு தொன்மையானது. எனவே பரிபாடலில் திருமால், செவ்வேள், கொற்றவை வழிபாடு போல வையையும் வழிபாட்டுக்குரியதாக நோக்கப்பட்டுள்ளது.

“நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே” (பரி 7:85-86)

என்ற அடிகளின் ஊடாக எமக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கப் பெற்று இன்பம் அடையவேண்டும் உயிர்கள் பசியாலும் நோயாலும் வருந்தாமல் நலம் பெற்று வாழ வையை வந்து பாண்டிய நாட்டில் வளம் கொழிக்கவேண்டும் என்று வாழ்த்திப்பாடுகின்றனர்.

“வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்
அருங் கறை அறை இசை வயிரியர் உரிமை
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே” (பரி 10: 129-131)

என்று உலக உயிர்கள் எல்லாம் பசி பிணி ஆகியவற்றால் துன்புறாமல் வளத்துடன் வாழ்வதற்காக வறுமையினால் துன்புற்ற புலவர்கள் ஏந்திய கைகள் நிறையுமாறு கொடை வழங்கும் பாண்டியனைப்போல என்றென்றும் வையை ஓய்வின்றி வரவேண்டும் என வாழ்த்திப்பாடுகின்றனர்.

இதேபோல மதுரை மக்களுக்கு நன்மைசெய்யும் வையையின் புகழைத் தன்னிடம் அடக்கிக்கொள்ளும் வாய்ப்பு மண்ணுலகிற்கு இல்லை என “நின்புகழ் கொள்ளாது இம் மலர் தலை உலகே” (பரி 12:102) என நல்வழுதியார் பாடியுள்ளார்.

இவ்வாறாக வையையைப் பாடும் அதிகமான பாடல்களின் இறுதியில் வையையின் வளமும் அதனூடாக பாண்டிய மன்னனின் புகழும் வியந்து போற்றப்பட்டுள்ளன.

முடிவுரை
எனவே, சங்க இலக்கியங்களில் தனித்துவமாக விளங்கும் பரிபாடலின் வையைப்பாடல்களின் ஊடாக தனியே ‘புனலாடல்’ மட்டுமல்லாமல் அக்கால சமுதாயத்தின் வாழ்க்கைக் கோலங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பிரதான காரணியும் தமிழ்நாட்டின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவுசெய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

அடிக்குறிப்புகள்
1.    சிவத்தம்பி, கா., (2009) “பரிபாடல் கிளப்பும் பிரச்சினை” சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப. 120.
2.    சந்திரசேகரன், இரா., (2009) பரிபாடல் ஆராய்ச்சி, ராமையா பதிப்பகம், சென்னை, ப.8.
3.    கணியன் பாலன், பண்டைய இசைத்தமிழ் - 2, http://keetru.com.
4.    சுந்தர ஆவுடையப்பன், (2010) சங்கச் செவ்வி - செம்மொழிப்பெட்டகம், கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு வெளியீடு, திருப்பூர்,ப 65.
5.    தொல்காப்பியம், (1948) பொருளதிகாரம் முதற்பாகம், நச்சினார்க்கினியர் உரை, திருமகள் பதிப்பகம், சுன்னாகம், ப. 4.
6.    இளங்கோ, நா., “பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர்” பகுதி – 1, http://nailango.blogspot..com

உசாவியவை
01.    சங்க இலக்கியம் வழங்கும் பரிபாடல் - பரிமேலழகர் உரை, (2008)  (விளக்கத்தொகுப்பு : எம். நாராயண வேலுப்பிள்ளை) நற்பவி பிரசுரம், சென்னை.
02.    சங்க இலக்கியமும் சமூகமும், (2007) (பதிப்பாசிரியர்: பேராசிரியர் சி. பத்மநாதன்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
03.    சந்திரசேகரன், இரா., (2009) பரிபாடல் ஆராய்ச்சி, ராமையா பதிப்பகம், சென்னை.
04.    சாமி சிதம்பரனார், (1962) எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், இலக்கிய நிலையம், சென்னை.
05.    சுந்தர ஆவுடையப்பன், (2010) சங்கச் செவ்வி - செம்மொழிப்பெட்டகம், கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு வெளியீடு, திருப்பூர்.
06.    நாகலிங்கம், க., (2005) செந்தமிழ் இலக்கண விளக்கம் - அகத்திணையியலும் புறத்திணையியலும், பாரதி பதிப்பகம், யாழ்ப்பாணம்.
07.    பரிபாடல் (மூலமும் உரையும்), 2007, (உரையாசிரியர்கள் : முனைவர் பெ. சுப்பிரமணியன், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், முனைவர் அ. தட்சிணாமூர்த்தி) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
08.    பரிபாடல், (விளக்க உரை : ஞா. மாணிக்கவாசகர்) உமா பதிப்பகம், சென்னை.

kuneswaran@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard