New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்


Guru

Status: Offline
Posts: 23971
Date:
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்
Permalink  
 


பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்

 


- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -முன்னுரை:

“இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி சங்க இலக்கியத்தைக் காணும்பொழுது “சங்க காலம் பொற்காலம்” எனும் கருத்து ஏற்புடைய கருத்தாகத் தோன்றவில்லை.பண்டையத் தொன்மரபு சித்தாந்த கோட்பாட்டினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிலர் புனைந்துரைத்த விளக்கமாகவே இதனைக் காண முடியும்.ஏனெனில் சங்க இலக்கியங்கள் அக்காலத்தையப் பதிவுகளைச் செறிவாகத் தன்னகத்தே பெற்றுள்ளன.அப்பதிவுகளின் வெளிப்பாட்டினைக் காணும் பொழுது சில உண்மைகள் உரக்கச் சொல்ல முடியும்.அவ்வகையில் புறநானூற்றுப் பாடல்களில் வெளிப்படும் கைம்மைநோன்பு நோற்கும் பழக்கவழக்கங்கள் எத்தன்மையில் வெளிப்படுகிறது என்பதை அறியும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

பழக்கவழக்கம் _ வரையறை:
ஒரு தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பது பழக்கம் ஆகும்.அவ்வாறு வந்தமைந்த நடத்தையானது தலைமுறை தலைமுறையாக மரபு வழி பின்பற்றபட்டு வருமாயின் அப்பழக்கம் வழக்கம் ஆகிறது.இப்படி மரபு என்ற சொல்லோடு தொடர்புடைய தன்மையதாகப் பழக்கவழக்கம் அமைகின்றது.

கற்பு - விளக்கம்:
சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.

1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்
2. இடைக்கற்பு கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்
3. கடைக்கற்பு கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல். இம்மூவகைக் கற்பு நெறிகளில் முதல்நிலைக் கற்பான உடனுயிர் மாய்தல் எனும் தலைக்கற்பு நெறி, கணவன் இறந்தவுடன் ஒரு கணம் கூட உயிர்வாழ்வது மனைவியின் கற்பு வாழ்வுக்கு இழுக்கு எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இக்கற்பு நெறி உயர்குடி மகளிரின் மனதைப் பெரிதும் ஆட்கொண்டிருந்ததை அறியமுடிகிறது.

கைம்மைநோன்பு _ விளக்கம்:
கைம்மைநிலை என்பது தந்தைவழி சமுதாயத்தின் ஒருதார மணமுறை என்ற சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டது ஆகும்.அதாவது ஒரு தார மணமுறையில் கணவன் இறந்ததற்குப் பிறகு, மனைவி அவளது வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களைக் குறிப்பதாக அமைகின்றது.கணவனை இழந்த நிலையில் பெண்களின் வாழ்க்கைமுறை எத்தன்மையில் அமையப் பெற வேண்டும் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் பல பகர்கின்றன.அதாவது அக்காலம் தொட்டே கணவனை இழந்த பெண்களின் பிற்காலத்தைய வாழ்க்கைமுறை நிரம்பக் கொடுமையான சூழலினைப் பெற்றுக் காணப்படுகிறது.இத்தகையக் கட்டுப்பாடு ஆண்களுக்கு இருந்தற்கான சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை. “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்”1 எனச் சிலம்பு காட்டுகின்றது.இப்படிக் கைம்மைநோன்பு இருக்கும் பெண்கள் இரண்டு நிலையில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

அக இலக்கியமான குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலில் தலைவனைப் பிரியும் நிலை நேருமாயின் அடுத்த கணமே தன்னுயிர் தன்னை விட்டுப் பிரிந்துவிட வேண்டும் என்று விரும்பும் ஒரு தலைவியின் உளநிலை சித்திரிக்கப்படுகிறது.

‘உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே’ 2
(சிறைக்குடி ஆந்தையார், குறுந்தொகை-57.)

இப்பாடல் தவிர, தோழி கூற்றாக அமைந்த மற்றொரு குறுந்தொகைப் பாடலில் ஆண் குரங்கு இறந்துபட்டதும் கைம்மைத் துன்பத்துக்கு ஆளாக விரும்பாத பெண் குரங்கு ஒன்று உயர்ந்த மலையில் இருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

‘கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்’ 3
(கடுந்தோட் கரவீரன், குறுந்தொகை-69.)

எனும் அப்பாடலில் விலங்குகளின் செயல்பாடுகள் குறித்த கற்பிதங்களின் வழியாகவும் தலைவியர்க்குத் தன்னுயிர் நீக்கும் அறம் போதிக்கப்பட்டதையே இப்பாடல் உணர்த்துகிறது.

ஒப்பனை நீக்கம்:
புறநானூற்றுப் பாடல்கள் வழி அன்றைய பெண்கள் நிரம்ப அணிகலன்கள் அணிந்து வந்ததும், தம் கணவன் இறந்ததற்குப் பிறகு அவ்வணிகலன்களைக் களைந்த செய்தியும் இடம்பெறுகின்றன. அதாவது கணவனை இழந்த பெண்கள் தங்கள் மேனியைப் பொழிவிழக்கச் செய்யவல்லக் காரியங்களை மேற்கொண்டனர்.புறநானூற்றில் 237ஆம் பாடலில், வெளிமான் இறந்துபட, அவன் தம்பி இளவெளிமான் பெருஞ்சித்தனாருக்குப் பரிசில் குறைத்த வேளை மனம் நொந்து வெளிமானை நினைந்து பாடுகின்ற பாடலில் மகளிர் வளையல்களை நீக்கியக் காட்சி வெளிப்படுகின்றது.

“நீடுவாழ் கென்றியா நெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாட் கண்ணே
கோடைக் காலத்துக் கொழ்நிழ லாகிப்
பொய்த்த லறியா வரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென
நச்சி யிருந்த நசைபழு தாக
அட்ட குழுசி யழற்பயந் தாஅங்கு
அளியர் தாமே யார்க வென்னா
அறனில் கூற்றந் திறனின்று துணிய
ஊழி நுருப்ப வெருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெளிவேல் விடலை சென்றுமாய்ந் தனனே
ஆங்கது நோயின் றாக வோங்குவரைப்
புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின்
எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக்
கடன்மண்டு புனலி நிழுமெனச் சென்று
நனியுடைப் பரிசிற் றருகம்
எழுமதி நெஞ்சே துணிபுழுந் துறுந்தே” (புறம்247)

இப்பாடலில் வெளிமானை இழந்த உரிமை மகளிர் தங்களுடைய வளையல்களை வாழை பூவினைச் சிதைத்துவிட்டாற்போல உடைந்து சிதைத்தனர் என்ற செய்தி இடம்பெறுகின்றது.இதுமட்டுமின்றி தம்முடைய வளையல்களை இழந்து தன் தொல்கவின் அழகு வாடிய காட்சியினைப் பிறிதொரு பாடலிலும் பெருஞ்சித்தனார் காட்டுகிறார்.

“தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடி” (புறம் 238)

“வளை நீக்கல்” (புறம் 237)

வளையல் கழிந்த செய்தியை உவமிக்கும் கருகுளவாதனார் பாடலினைப் பார்ப்போமாயின், பெரும் பஞ்சம் ஏற்பட்ட வேளை மரக்கிளைகளை உடைத்த பின்பு (புறம்224) மொட்டையாக நிற்கும் வேங்கை போல சோழன் கரிகாற் பெருவளத்தான் இறந்த பின் அவன் உரிமை மகளிர் அணிகலன்களை இழந்தது காட்சிப்படுத்தப்படுகின்றது.

உடன்கட்டை ஏறுதலும் கைம்மைநோன்பும்:
இப்புவிதனிலே மிகக் கொடிய நிகழ்வுகளில் உடன்கட்டை ஏறுதலும் ஒன்றாகும்.இந்நிகழ்வு நம் நாட்டினிலே சென்ற நூற்றாண்டு வரை நிகழ்ந்துள்ளது என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் பதைபதைக்கிறது.அத்தகு கொடுமை சங்க இலக்கிய மகளிருக்கும் நிகழ்ந்துள்ள செய்தி பல பாடல்களின் வழி அறிய முடிகின்றது.

“ஆடுநடைப் புரவியும்,களிறும்,தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆயண்டிரன்

கோடுஏந்து அல்குல்,குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்னிலி உய்ப்ப” (புறம்240)

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தம் கணவன் இறந்துபட்ட வழி அவனோடு சிதையேறத் துணிகின்றாள்.அதனைச் சான்றோர் பலர் தடுக்க முற்படுகின்றனர்.அவ்வேளையில் அவள் இவ்வுலக்கில் கைம்மை நோன்பினை மேற்கொள்ளும் மகளிரின் துன்ப வாழ்க்கையினைச் சுட்டி, அப்படி வாழ்வதற்குப் பதில் சிதையில் ஏறுதல் பொழில் ஒத்தது என்று கூறுவதைக் காணலாம்.

“பல்சான்றீரே!பல்சான்றீரே!
செல்கெனச் சொல்லாது,ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர்,நன்றுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்என் சாந்தோடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை,வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்லை;எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வளிதழ் அவிழ்ந்த தாமரை
நளிரும் பொய்கையும்,தீயும் ஓரற்றே” (புறம்246)

இப்பாடலானது கையறுநிலை துறையில் வரவில்லையாயினும் கைம்மை நோன்பின் துயரினை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

கைம்மைநோன்பில் பெண் புலம்பல்:
பாலை நிலத்தில் கணவன் இறந்துபட்ட பொழுது மனைவி அவனை நினைந்து புலம்புகின்ற காட்சி மனதினை உருக்கக் கூடியது ஆகும்.இன்றும் கணவனை இழந்த பெண்களின் ஒப்பாரிப் பாடல்களில் புலம்பல் உணர்ச்சி மேலோங்கி இருப்பதை நன்கு உணர முடியும்.

“ஐயோ!எனின்யான் புலிஅஞ் சுவலே
அணைத்தனன் கொளினே,அகன்மார்பு எடுக்க வல்லேன்;
என்போல் பெருவிதிப்பு உறுக,நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேரிகம் நடத்திசி சிறிதே” (புறம்255)

இதுமட்டுமின்றி அக்காலக்கட்டத்தில்     இறந்தாரைப் புதைக்கும் தாழியை வைத்துப்புலம்பல் செய்தி இருக்கின்றது.

“கலம்செய் கோவே!கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி;
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செ கோவே”(புறம்256)

கையறுநிலையும் தலைமுடி நீக்கலும்:
சங்க இலக்கியம் காட்டும் மகளிர் கைம்மையில் இழை, வளை, கொடி களையப்பட்டது மட்டுமின்றி கூந்தல் களைதலும் மலர் நீக்கலும் தானாகவே நடந்துள்ளது.இவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளனர்.அக்காலக் கட்டத்தில் மகளிருடைய கூந்தலும் கூந்தல் மலரும் சிறப்பித்துக் காட்டிய அகப்பாடல்கள் நிரம்ப உள்ளன.

“கொங்குதேர் வாழ்க்கை-------------“(குறு-2)
ஆனால் அக்கூந்தலைக் கொய்து எறியும் கொடுமையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
“குய்குரல் மலிந்த ........................”(புறம்250)

“எவன்வேல் விடலை ........................”(புறம்261)


“........................யானும்
வழிநினைந்து இருத்தல்,அதனினும் அரிதே”(புறம்280)

மேற்கண்ட பாடல்களில் சங்க மகளிர் தம் கணவனை இழந்த பிறகு கூந்தலை இழக்கின்ற செய்தியினைத் தன்னகத்தே பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

முடிவுரை:
சங்க இலக்கியங்களில் கணவனை இழந்த கைம்மை மகளிர் நிலையை இன்னுயிர் ஈதல்,நளிமூயெரி புகுதல்,நோற்றுடம்படுதல் என மூன்று நிலைகள் வெளிப்படுகின்றன. இன்றும் கைம்மை நோன்பிருக்கும் கைம்பெண்கள் எந்த விழாக்களிலும் தலைக்காட்டுவது இல்லை.அக்காலக் கட்டத்தின் பழக்கவழக்கங்கள் இன்று முழுமையாக இல்லாவிடினும், அதன் மறுவடிவம் புகுந்துள்ளது எனலாம்.

துணைமை நூல்கள்:
1.    புறநானூறு - கழக வெளியீடு,
2.    குறுந்தொகை - வர்த்தமானன் பதிப்பகம்.
3.    சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லார் உரை.

ezhamvirumbinaavalan4@gmail.com

* கட்டுரையாளர் -   - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். -__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard