New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு
Permalink  
 


 பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு

 

 

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு  பொழுதும் ஆராய்ந்து வருகின்றான்.  இன்றைய சூழலில் ஒரு புதிய  உலகையே படைக்கும்  வல்லமையை மனித அறிவு பெற்றிருக்கின்றது. இவற்றிற்கு  அடிப்படைக் காரணம் பண்டைய மக்களின் அறிவும்,  நுட்பமான பார்வையுமே ஆகும்.

உலக நாகரிகங்களெனக் கூறப்படும் கிரேக்கம், எகிப்து, ரோம், சிந்து சமவெளி, மெசபடோமியா போன்ற 24- ற்கும் மேற்பட்ட பகுதிகளில்  வாழ்ந்த மக்கள்  சிறந்த, நாகரிக வாழ்வை  வாழ்ந்தனர் என வரலாறு மெய்ப்பிக்கின்றது.  கி.பி.க்கு முற்பட்ட காலத்தில் உய்த்துணர்வு முறையில்  தொடங்கிய ஆய்வு பின்னர் சோதனை மூலம் கண்டறிதல் (Practical Method)  முயன்றனர். அதற்கு ஆர்க்கிமிடிஸ் தத்துவமே முதன்மைச் சான்றாகும். எனினும், உய்த்துணர் முறையில் பல ஆயிரக்கணக்கான விடையை பழங்கால மக்கள்  பெற்றிருந்தனர் என்பதற்கு  தொல்பொருள், இலக்கிய இலக்கணச் சான்றுகளும்,  இன்ன பிற சான்றுகளும்  முதன்மை ஆதாரமாகின்றன.

சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய புலவர்கள் சிலர், சீனாவில் கன்பூசியஸ்  போன்றோர் உலக கருத்துக்களை புதிய நோக்கில் ஆராய்ந்து இயற்கையின்  புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த உலகம் எப்படிப்பட்டது? அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கைப் புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் (Universe)   இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும், இரவிலும் பருப்பொருள்கள் தோன்றுவதும், மறைவதுமாய் இருப்பதற்குரிய காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்.

குறிப்பாக, மேற்கூறிய நிகழ்வுகள் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவின. ஒருபுறம் இவை யாவற்றிற்கும் கடவுள்களின், தேவதைகளின் செயல்களே என்றும்,  அதனாலேயே எல்லா மாற்றமும் நிகழ்கிறதென்றும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மற்றொரு புறம், பொருள்  முதல்வாத சிந்தனையோடு பருப்பொருள்களின்  இயக்கப் போக்கிற்கு பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

குறிப்பாக, இயற்கையை பல ஆண்டுகள் உற்றுநோக்கி, பருப்பொருட்களின் மாற்றத்திற்குரிய காரணங்கள், இவ்வியற்கைகேற்ப தம்மை தகவமைத்து கொண்டு வாழும் முறைகளை வகுத்துக் கொண்டு, அதற்கேற்ப  வாழ்ந்ததையும் அறிய முடிகிறது.

உலகம் எப்படி தோன்றியது என்ற வினாவிற்கு பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றுள் தாலஸ் (Tholes); என்பவர் உலகம் நீரினால் ஆக்கப்பட்டது. ஆக நீரே முதன்மைப் பொருள்  என்றார். அனாக்ஸிமினிஸ் (Anaximinies) என்ற அறிஞர் காற்றினாலேயே உலகம் ஆனது என்றார். அனாக்ஸிமேண்டர்  (Anaximander - சுமார் கி.மு.6) என்பவர் ஏபைரான் (apeiron) என்ற உருவமற்ற, யாரும் பார்க்க முடியாத  பொருளால்  உலகம் ஆக்கப்பட்டது என்றார். டாலமி (Ptolemy) என்பவர் பிரபஞ்சத்தை  பற்றிய கருத்தினை முன் வைத்தார்.  இப்படி பல்வேறு கருத்துக்கள் தோன்றிய காலக் கட்டத்தில் தமிழர்கள் அறிவு உச்சத்தை எட்டியிருந்தனர் என்பதற்கு தொல்காப்பியரே சான்றாவார்.

உலகம் எப்பொருளால் ஆக்கப்பட்டது என்பதற்கு, தொல்காப்பிய பொருளதிகாரம் நூ.635,

“நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (தொல். நூ. 635) என்று குறிப்பிடுகின்றது.  அதன்  விளக்கமாவன,

நிலம், நீர், தீ, காற்று, வானம் இவை அனைத்தும் கலந்து மயங்கி நிற்றலே உலகம் ஆகும் என்று தொல்காப்பியர் சுட்டுகின்றார்.  மேற்கூரிய  பாடலில் ‘ஐந்தும் கலந்த மயக்கம்  உலகம்’ என்ற சொல்லாட்சியில் ‘கலந்த’ என்ற சொல் ஒன்று மற்றொன்றொடு கலந்து நிற்றலைக் குறிக்கும். ‘கலந்த மயக்கம்’ என்ற சொல் ஒன்று  மற்றொன்றொடு கலந்து மயங்கி நிற்பதாகக் கூறுகின்றார். அதாவது வேதிவினை புரிவது ஆகும்.  இவற்றுள் நேர்வினை, எதிர் வினை ஆகிய இருபாற்பட்ட பொருண்மையும் அடங்கியிருப்பது நோக்கத்தக்கது.

இன்றைய ஆய்வின்படி ஆக்ஸிஜன் 1- மடங்கும், ஹைட்ரஜன் இரண்டு மடங்கும் (ர்2ழு 1:8) இரண்டற கலந்து வாயு பொருட்கள் இரண்டும் திரவப் பொருளாகின்றது என்பது விதி. அதை போலவே ஐம்பூதமும் கலந்து மயங்கி நிற்கிறது என்று ஆராய்ந்து வியப்பிற்குரியது. ஏதோ  ஒன்று மற்றொன்றோடு, மற்றொன்று வேறென்றொடு கலந்து மயங்கியே  இவ்வுலகமெனும் இப்பிரபஞ்சம் நிற்கிறது என்பதை சரியாகக் கூற்றாக அமையும் எனலாம். ஒவ்வொரு பூதங்களையும் தனித்தனியே பார்த்து விளக்கிய காலத்தில் பொதுத் தன்மையாய் இயற்கை பருப் பொருட்களை விளக்கிய தமிழர்களின் அறிவு வியப்பிற்குரியதாகும்.  இச்சிந்தனை அறிவின் உச்ச நிலையே எனலாம்.

கீழ்காணும் சங்க இலக்கிய பாடலொன்று பஞ்ச பூதங்களின் தன்மையை எடுத்துரைக்கின்றது.

“மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்
ஐம்பூதத்து இயற்கைப்  போல”

என்று சங்க இலக்கிய புறப் பாடல் (புறநானூறு பா. 2) குறிப்பிடுகின்றது. இப்பாடலுள் பஞ்ச பூதங்களின் தன்மையையும், ஒன்றொரு மற்றொன்றை இணைத்துக் கூறும் நிலையும் வியப்பிற்குரியதாகிறது.

மேற்கூறிய பாடலுள், கூறப்பட்ட சொற்களுள்  திணிந்த (வலிமைமிகுந்த திணிக்கப்பட்ட), ஏந்திய (ஏந்தி நிற்கிற) தைவரு (தடவல், தைவருதல்) தலைஇய (சொரிந்த) முரணிய (முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்ட) என்ற சொற்கள் யாவுமே மாறுபட்ட சொல்லாட்சிகளாகும்.

மண் என்கின்ற அடர்வுமிகுந்த உட்பொருளால் திணிக்கப்பட்ட நிலம் ‘திணிந்த’ என்ற அடர்வின் முழுமையை குறிக்கின்றது.  இது அடிப்படையில் அடர்த்தி மிகுந்தது என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. ‘நிலன் ஏந்திய விசும்பு’ என்பது பொது அடிப்படையில் நிலமானது வானை ஏந்தி நிற்கின்றது என்று பொருள் உரைப்பதாக  கொள்ளலாம். இவை  அடிப்படையில் ஏந்துதல், இரங்குதல் எனும் சொற்களாம். மழையால் மண் வளம் பெருகுதலை இச்சொல் குறிக்கலாம்.  ஆகாயத்தினை தடவி வரும் (வளிமண்டலம்) காற்றும், அக்காற்றின்  தலைப்பட்ட தீயும் என்பது  ஆகாயத்தினை தடவி வருகின்ற காற்றும், காற்றினால் உருவாகிய தீயும் என்று பொருள் கொள்ள  தோன்றுகின்றது. அதாவது, பண்டைய தமிழ்மக்கள் ஆக்ஸிஜன் என்ற வாயுவால் ‘தீ’ உண்டாகி எரிகிறது.  நைட்ரஜன் என்ற வாயுவே அணைப்பானாக செயல்படுகிறது என்பது அறியாததுதான். ஆனால் எரியூட்டலின்  விதியை புரிந்து தான் இருக்க வேண்டும். நீரினை முரண்பட்டது போல நிற்கும் தீ என்பது நீர் தீ எதிர்பட்ட விளைவுகளை உடையது.  ஆக முரண்பட்ட எதிர்நிலை தன்மையையும் கூறுவதாகக் கருதலாம்.

ஆக, ஐம்பூதத்து இயற்கை போல என இயற்கையின் இயல்பு நிலையை  ஒரு மன்னனை புகழ்தல் பொருட்டு ஓர்  புலவன் கூறும்  தன்மையின் அடிப்படையில் எத்தகைய  கருத்து அடங்கிருக்கிறது.  ஆக ஒரு புலவனே இக்கருத்தினை பெற்றிருக்க, வானவியல் அறிஞர்களும், கணிதவியல் அறிஞர்களும், பண்டைய பருப்பொருள் பற்றிய சிந்தனைவாதிகளும் எத்தகைய அறிவைப் பெற்றிருக்க முடியும் என்பதும் இதன்வழி இயற்கைக்கு அப்பாற்பட்ட செயற்கைச் சூழலில் வாழும் மானுடர்களின் சிந்தைக்கும் அசைபோடுவதற்கு இக்கருத்து பயன் பெறலாம்.

துணை நூல்கள் :   
1.    தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவ10ர். மு.ப. 2008.
2.    புறநானூறு, உ.வே. சாமிநாதர் உரை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை. ஏ.ப: 1971.
3.    பிற சமூகவியல், அறிவியல் நூல்கள்.

baluprabhu777@gmail.com

 

* கட்டுரையாளர் - பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard