New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் சார்பெழுத்துகள் குறித்த உரைமறுப்புகள்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் சார்பெழுத்துகள் குறித்த உரைமறுப்புகள்
Permalink  
 


தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் சார்பெழுத்துகள் குறித்த உரைமறுப்புகள்

E-mailPrintPDF

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் தொடங்கி பல்வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன. தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பொருள் விளக்கம் தரும் அவ்வுரைகளுக்கு இடையே வேறுபாடுகளும் மறுப்புகளும் விவாதங்களும் ஏராளமாக உள்ளன. உரையாசிரியர் ஒருவரின் உரையில் குறிப்பிட்ட உரைப்பகுதிகள் பிழை என்று இனங்காணப்படுகின்றன. இப்பிழையுரைப் பகுதிகள் பொருந்தா உரைகள் எனப்படுகின்றன. இப்பொருந்தா உரைகளை மறுத்தும், மறுப்பிற்கான காரணங்கள் சுட்டியும் விளக்கும் உரைகள் மறுப்புரைகள் எனப்படுகின்றன. பொருந்தா உரையை மறுப்பதோடு அவ்வுரைக்கு மாறான வேறொரு பொருந்தும் உரை தருதல் மாற்றுரை எனப்படும். இவ்வாறான பொருந்தா உரைகளையும், மறுப்புரைகளையும், மாற்றுரைகளையும் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், வேங்கடராசலு ரெட்டியார், சிவஞான முனிவர், பாலசுந்தரம் ஆகியோர் உரைவிளக்கத்திலும் ஆய்வுரைகளிலும் காணமுடிகின்றன. இக்கட்டுரை தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் காணலாகும் மொழிமரபில் சார்பெழுத்துகள் குறித்த மறுப்புகளை மட்டும் ஆய்ந்து விளக்குவதாக அமைகிறது.

தனிச்சொல் குற்றியலிகரம்
ஒரு சொல்லில் ஒலிச்சூழல் காரணமாக இகரம் குறுகி தன் ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். அப்படிக் குன்றி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். இது தனிச்சொல்லில் ‘மியா’ என்ற அசையில் தோன்றும். கூட்டுச் சொல்லில் குற்றியலுகரச் சொல் யகர முதற்சொல்லோடு புணரும்பொழுது அக்குற்றியலுகரம் இகரமாக மாறும். அந்த இகரம் அரைமாத்திரை குறைந்து ஒலிக்கும்.

தனிச்சொல் குற்றியலிகரத்தை,

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகர மூர்ந்தே.”(சூத் - 34)என்ற சூத்திரம் குறிப்பிடும்.

‘கேள்’ என்பது உரையசைச் சொல் அல்ல.
ஒருவரிடம் தான் கூறும் பொருளை, அவர் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சொல் உரையசைச் சொல் எனப்படும். மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கு உரைகண்ட இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கேண்மியா, சென்மியா என்பனவற்றை உதாரணங்களாகத் தந்துள்ளனர். நச்சினார்க்கினியர் ‘கேண்மியா’ என்ற சொல்லைப் பகுத்து,‘கேள்’ என்பதை உரையசைச் சொல்லாகவும், ‘மியா’ என்பதை இடைச்சொல்லாகவும் குறிப்பிடுகிறார்.1

இக்கூற்றை வேங்கடராசலுவும் சுப்பிரமணியரும் மறுத்துள்ளனர். ‘மியா’ என்பதே முன்னிலை அசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சான்றாக தொல்காப்பிய சொல்லதிகார இடையியலில் உள்ள

“மியாயிக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்.” தொல் - சொல் -சூத் - 269.

என்ற சூத்திரத்தை சுப்பிரமணியர் காட்டுகிறார். இளம்பூரணரும் ‘மியா என்பதையே உரையசைச் சொல்லாகச் சுட்டியுள்ளார். ‘மியா’ என்பதில் யா எனும் எழுத்துக்கு முன்னால் மகர ஒற்றுடன் இணைந்துள்ள இகரம் குறுகி ஒலிக்கும்.

‘வரூஉம்’ என்ற பெயரெச்சம் தழுவும் பெயர்
மேற்குறிப்பிட்ட தனிச்சொல் குற்றியலிகரம் குறித்த சூத்திரத்தில் ‘வரூஉம்’ என்ற பெயரெச்சம், அந்தச் சூத்திரத்தில் எந்தத் தொடரை அல்லது எந்தச் சொல்லைத் தழுவுகிறது என்பது குறித்தான விவாதம் உரையாசிரியர்கள் இடையே காணப்படுகிறது. இளம்பூரணர் ‘வரூஉம்’ என்பது ‘யாவென் சினைமிசை’ என்பதைத் தழுவுவதாகக் குறிப்பிடுகிறார். இக்கூற்றை நச்சினார்க்கினியர் மறுத்து, அச்சொல் ‘ஆவயின்’ என்பதைத் தழுவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவர் கூற்றுகளையும் பொருந்தா உரைக்கூறுகள் என சுப்பிரமணிய சாஸ்திரியார் மறுக்கிறார். அச்சொல் ‘மகரம்’ என்பதைத் தழுவுவதாகச் சுட்டுகிறார்.2

கூட்டுச்சொல் குற்றியலிகரம்
தனிச்சொல்லில் மட்டுமன்றி கூட்டுச்சொல்லிலும் குற்றியலிகரம் வரும் என்ற கருத்தை,

“புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.”(சூத் -35)

என்ற சூத்திரத்தின் மூலம் அறியலாம்.

இச்சூத்திரத்திற்கான உரைகளில் காணலாகும் பொருந்தா உரைக்கூறுகளையும், மறுப்புரைக் கூறுகளையும் காணலாம்.

‘குறுகல்’ என்பதற்கான எழுவாய்
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இச்சூத்திரத்தில் குறுகலும் என்ற சொல்லில் உள்ள உம்மையை நிலையிடை என்ற சொல்லோடு இணைத்துப் பொருள்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது தனிச்சொல்லில் மட்டுமன்றி கூட்டுச்சொல்லிலும் குற்றியலிகரம் வரும் என்ற பொருளை இச் சூத்திரத்திற்கு கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

‘குறுகல்’ என்ற சொல்லிற்கு ‘அவ்விகரம்’ என்பது எழுவாயாக அமையும் என்று இளம்பூரணர் சுட்டுகிறார். ஆனால், நச்சினார்க்கினியர் ‘அக்குற்றியலிகரம்’ என்பதே எழுவாயாக வரும் என்று கூறுகிறார். இவற்றுள் இளம்பூரணர் உரையை சுப்பிரமணியர் மறுக்கிறார். இதற்கும் முந்தைய சூத்திரம் குற்றியலிகரத்தையே விளக்குகிறது. அதனைத் தொடர்ந்து இச்சூத்திரம் வருவதால் நச்சினார்க்கினியர் உரையே பொருத்தமானது என்று சுப்பிரமணியர் குறிப்பிடுகிறார்.3

தனிச்சொல் குற்றியலுகரம்
ஒரு தனிச்சொல்லில் நெடில் எழுத்தை அடுத்தும், தொடரெழுத்துச் சொல்லில் இறுதியிலும் குற்றியலுகரம் வல்லெழுத்துடன் இணைந்து வரும் என்ற பொருண்மையில்,

“நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும்
குற்றிய லுகரம் வல்லா ரூர்ந்தே.”(சூத் - 36)

என்ற சூத்திரம் அமைந்துள்ளது.

முற்றுகர ஈறாகிய வடமொழிச் சிதைவு
நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கான தம் உரையில், பரசு, இங்கு, ஏது என்பன முற்றுகர ஈறாகிய வடமொழிச் சிதைவு என்று குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றை சுப்பிரமணியர் மறுக்கிறார். தொல்காப்பியர் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப் பகுத்துள்ளார். மேலும் அவர் வடமொழியில் இருந்து தமிழ் மொழிக்குப் பெறப்படும் சொற்களை தமிழ்மொழிக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் முறைகளை,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.” தொல் - சொல் - சூத் - 401.

“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.”தொல் - சொல் - சூத் - 402.

ஆகிய சூத்திரங்களால் குறிப்பிட்டுள்ளார். எனவே, தொல்காப்பியர் கொள்கைப்படி ‘பரசு’ முதலான சொற்கள் செய்யுளீட்டச் சொற்களுள் ஒன்றாகிய வடமொழிச் சொல். அவையும் தமிழ் இலக்கணத்துள் அடக்கிக் கூறப்பட்டுள்ளதால், அவற்றின் ஈற்றில் உள்ள உகரமானது முற்றுகரம் ஆகும் என்று நச்சினார்க்கினியர் கூற்றை மறுத்துரைக்கிறார்.4

புணர்சொல் குற்றியலுகரம்
குற்றியலுகரம் புணர்சொல்லிலும் வரும் என்ற பொருண்மையில்,

“இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான.”(சூத் - 37)

என்ற சூத்திரத்தை தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

புணர்சொல்லில் குற்றியலுகரத்திற்கான மாத்திரை
நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கான தம் உரையில், புணர்சொல்லில் குற்றியலுகரம் தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி கால் மாத்திரையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொல்காப்பியர்,

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே.” (தொல்-சொல்-409)

என்னும் சூத்திரத்தின் மூலம் புணர்சொல்லில் குற்றியலுகரம் அரை மாத்திரையிலிருந்து குறுகுவதைச் சுட்டுகிறார் என்றும் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். நச்சினார்க்கினியரின் இக்கூற்றுகளை வேங்கடராசலு மறுக்கிறார். குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவற்றிற்கான இலக்கண விதிகளை தனிச்சொல், புணர்சொல் என்ற வரிசை முறைகளிலே உணர்த்திய தொல்காப்பியர், குற்றியலுகரத்தையும் அவ்வாறே உணர்த்துகிறார். எனவே, நச்சினார்க்கினியரின் இவ்வுரைக் கூற்றுகள் பொருந்தாதன, இளம்பூரணர் உரையே பொருந்தும் என்று வேங்கடராசலு குறிப்பிடுகிறார்.5

தா. ஏ. ஞானமூர்த்தி, தனிச்சொற்களின் இறுதியில் குற்றியலுகரம் வரும் என்பது தொல்காப்பியர் கருத்து. குற்றியலுகர ஈற்றுச் சொல்லைத் தொடர்ந்து வேறொரு சொல் வந்தால் குற்றியலுகரம் சொற்களிடை வந்தாகி விடுகிறது. குற்றியலிகரம் சொல் இறுதியிலேதான் வரும். சொற்களிடையே வராது. எனவே புணர்சொல்லிடையே வரும் குற்றியலுகரம் முற்றுகரமாகிவிடுகிறது. புணர்சொற்களில் குற்றியலுகரம் வரும் என்று நச்சினார்க்கினியர் கூறும் உரை பொருந்தாது என்று மறுக்கிறார்.

மேலும் அவர், தொல்காப்பியர் சார்பெழுத்துகளின் இலக்கணம் கூறும்பொழுது அவை ஒவ்வொன்றும் தனிச்சொல்லில் வருவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மற்ற சார்பெழுத்துகளாகிய குற்றியலிகரமும் ஆய்தமும் புணர்சொற்களில் தமக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து வரும் என்று அவர் கூறவில்லை. குற்றியலுகரம் மட்டும் புணர்சொல்லில் தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்துவரும் என்று நச்சினார்க்கினியர் எப்படிக் கொள்ள முடியும்? என்று வினவுகிறார். மற்ற இரண்டு சார்பெழுத்துகளுக்கும் கூறிய இலக்கணம் குற்றியலுகரத்திற்கும் பொருந்தும். எனவே இளம்பூரணர் உரையே பொருந்தும், நச்சினார்க்கினியர் உரை பொருந்தாது என்று தா. ஏ. ஞானமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.6

வெள்ளைவாரணனார், மேற்குறிப்பிட்ட நச்சினார்க்கினியர் உரையே பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்;. மேலும், தொல்காப்பியர்

“அவ்வியல் நிலையும் ஏனைய மூன்றே” சூத் - 12.

என்ற சூத்திரத்தின் மூலம் குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை என்று உணர்த்துகிறார். தொல்காப்பியர் கருத்துப்படி 1. ஈரெழுத்து ஒரு சொல் குற்றியலுகரம், 2. உயிர்த்தொடர் குற்றியலுகரம், 3. இடைத்தொடர் குற்றியலுகரம், 4. ஆய்தத்தொடர் குற்றியலுகரம், 5. வன்தொடர் குற்றியலுகரம், மற்றும் 6. மென்தொடர் குற்றியலுகரம் ஆகிய ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையைவிட அதிகரிக்காமல் ஒலிக்கும்.

மேலும், இச்சூத்திரத்தில் இடைப்பட்டால் குறுகும் இடமும் சிறுபான்மை உண்டு என்று சுட்டியதாலும், தனிச்சொல்லில் அரைமாத்திரை பெற்று நிற்கும் குற்றியலுகரம், வல்லெழுத்து முதற்சொல்லோடு புணரும்போது குறுகும் என குற்றியலுகரப் புணரியலில் கூறியுள்ளதாலும், அந்த அரை மாத்திரையிலிருந்து குறுகும் என்று கொள்வதே பொருந்தும். எனவே, நச்சினார்க்கினியர் கூற்றே பொருந்தும், இளம்பூரணர் உரை பொருந்தாது என வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார்.7

சிவலிங்கனார், முற்றுகரத்தையும் குற்றுகரமாகவே ஒலிக்கும் இக்காலத்தில் உரையாசிரியர் இருவருள் யார் உரை சிறந்தது எனக் கூற இயலாது எனக் குறிப்பிடுகிறார்.

புணர்சொல் ஆய்தம்
ஆய்தம் புணர்சொல்லிலும் வரும் என்பதை உணர்த்துகின்ற வகையில்,

“ஈறியல்மருங்கினும் இசைமை தோன்றும்.” சூத் - 39.

என்ற சூத்திரம் அமைந்துள்ளது.

இச்சூத்திரத்தில் ‘இசைமை’ என்ற சொல்லுக்குப் பதவுரை தந்த நச்சினாhர்க்கினியர், அரை மாத்திரை இசைக்கும் தன்மை என்று பொருள் தருகிறார். ஆனால் இளம்பூரணர்,‘இசைமை’ என்பதற்கு ‘ஒலி’ எனப் பொருள் கொண்டார். இதற்கு சுப்பிரமணிய சாஸ்திரியார், பரிபாடலில் ‘இசைமை’ என்ற சொல் ஒலிப்பொருளில் வழங்கப்பட்டமையால் இளம்பூரணர் உரையே பொருந்தும். நச்சினார்க்கினியர் உரை பொருந்தாது என்று மறுக்கிறார்.8

ஆய்தத்தின் இயல்பு
ஆய்தத்தின் இயல்பு குறித்து

“உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான.”(சூத்-40)

என்ற சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

‘மொழிக்குறிப்பெல்லாம்’ - பொருள் விளக்கம்
மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் தம் உரையில் மொழிக்குறிப்பெல்லாம் என்னும் தொடரை, குறிப்பு மொழியும் எல்லா மொழியும் எனப் பிரித்துப் பொருள் கூறியுள்ளார். இந்த உரைக்கூற்றை வேங்கடராசலு மறுக்கிறார். மொழிக்குறிப்பு என்பது வினைக்குறிப்பு எனும் சொல்லைப் போன்றது. வினைக்குறிப்பு எல்லாம் என்றால் வினையும் குறிப்பும் என்று பொருள் கூறுதல் எவ்வாறு பொருந்தாதோ அது போல்தான் இது. குறிப்பு மொழியும் எல்லா மொழியும் என்பதே தொல்காப்பியர் கருத்தாக இருந்திருந்தால் ‘குறிப்பு மொழியும் பிறமொழியும்’ என்றே சூத்திரம் வகுத்திருப்பார்என்று தன் மறுப்புரையை வேங்கடராசலு வழங்கியுள்ளார்.9 இது போன்றே தேவநேயப் பாவாணரும் தன் மறுப்புரையை வழங்கியிருக்கிறார்.10

‘அஃகாக்காலையான’–சொற்பொருள்
மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் தம் உரையில்‘அஃகாக்காலையான’ என்ற சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரும்பொழுது சுருங்காத இடத்து ஆன சொற்களாம் என்று உரை கூறியுள்ளார். இக்கூற்றை வேங்கடராசலு மறுக்கிறார். ‘அஃகாக்காலையான’ எனும் சொல் சுருங்காத இடத்தில், சுருங்காத காலத்தில் என்றுதான் பொருள் தருகின்றது. சுருங்காத இடத்து ஆன சொற்கள் எனப் பொருள் தரவில்லை என்று மாற்றுரை தருகிறார் வேங்கடராசலு. தனது இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,‘காலையான’(குற்றி25.27),‘மொழிவயினான’(58),‘இவணையான’ (80) முதலான பல சூத்திரங்களை சான்றாகக் காட்டுகிறார்.11

தொல்காப்பியத்தில் உள்ள சூத்திரங்களுக்குத் துல்லியமான தெளிவான உறுதியான முடிந்தமுடிபான முழுமையான உரைகள் இல்லை. எனவே, தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கையை அறிய உரைமறுப்புகள் குறித்த ஆய்வுகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

அடிக்குறிப்புகள்.
1. சுப்பிரமணிய சாஸ்திரியார் பி.சா. - தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ப – 44
2. மேலது – ப – 44.
3. மேலது – ப – 45.
4. மேலது – ப – 46.
5. சிவலிங்கனார்.ஆ (பதிப்பாசிரியர்) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மொழிமரபு (உரைவளம்). ப – 18.
6. மேலது, பக் – 21,22.
7. மேலது, s பக் – 18,19.
8. சுப்பிரமணிய சாஸ்திரியார் பி.சா. - தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ப – 48.
9. சிவலிங்கனார்.ஆ (பதிப்பாசிரியர்) தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் மொழிமரபு (உரைவளம்). ப-32.
10. மேலது – ப – 36.
11. மேலது – பக் – 32,33.

துணைநூற் பட்டியல்
1 .சிவலிங்கனார். ஆ    தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (உரைவளம்), (பதிப்பாசிரியர்) மொழிமரபு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை – 600 020. முதற்பதிப்பு – 1981.
2.சுப்பிரமணிய சாஸ்திரியார் பி.சா. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், பதிப்பு – 1937.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard