New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திணைச்சமூகத்தில் குலக்குறி மரபுகளும் நம்பிக்கைகளும்!


Guru

Status: Offline
Posts: 24769
Date:
திணைச்சமூகத்தில் குலக்குறி மரபுகளும் நம்பிக்கைகளும்!
Permalink  
 


திணைச்சமூகத்தில் குலக்குறி மரபுகளும் நம்பிக்கைகளும்

 

 

 

முன்னுரை
ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்மனிதன் தொடக்க காலத்தில் இயற்கையைக்கண்டு அச்சம் கொள்ள நேரிட்டான். அதனால் இயற்கையைக் கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினான். இனக்குழு வாழ்க்கையிலிருந்தக் கூட்டத்தினர் தெய்வங்களைக் கண்டும், பார்த்தும், உருவகித்துக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டும் அதனை வணங்கி வாழ்ந்து வந்தனர். இத்தெய்வங்கள் மலை, காடு,  மரங்களான ஆலமரம், வாகைமரம், கடம்பமரம், வேப்பமரம், மரம், மராமரம், பனைமரம், வேங்கைமரம், முரசில்மரம், இல்லில், கந்தில், பொற்றாமரைக்குளம், கினை (பறை), குவளைப்பூ, தாமரைப்பூ, நடுகல், மரத்தின்பொந்து, பாறை, அருவிநீர் எனப் பல்வேறு இடங்களில் குடிகொண்டிருந்தன. இதனை நற்றிணை “அணங்கொடு நின்றது மலை” (நற்.குறி.165:3). என்கிறது. மக்கள் மத்தியலும் பல்வேறு விதமான தெய்வம் தொடர்பான நம்பிக்கைகளும், பறவைகள், விலங்குகள் வாயிலாக வெளிப்படும் நம்பிக்கையும், தொழில் தொடர்பான நம்பிக்கையும் வழக்கத்தில் நிலவி வந்தன. இக்குறிகளை எல்லாம் சமுக மரபு, பண்பாட்டு மரபு, குலக்குறி மரபு என்றழைத்தனா்.  அஃது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குலக்குறியியல்  பொது விளக்கம்
குலக்குறி மனித வாழ்வோடு காலங்காலமாகப் பரிணமதித்து வரக்கூடிய ஒரு அடையாளம் சார்ந்த படிமாகும். இதில் விலங்கையோ பறவையோ ஒரு பொருளையோ தங்களது குலக்குழு முழுமைக்கும் வழிகாட்டியாக வணக்கத்திற்குரியதாக மூதாதையர்களாகக் காண்பதே ஆகும். இதில் ஓா் இனக்குழு மனிதன் தனக்கு இணையாக தன் கூட்டத்து மக்களுள் ஒருவராகக் கருதி ஒரு விலங்கையோ பறவையையோ தாவர வகையையோ அணுகி நடந்து கொள்வானேயானால் அது நிச்சயம் குலக்குறிப் பண்பாட்டிற்கே உரிய இயல்புகளில் ஒன்றாகும்.

தோழமை உணா்வுடன் உறவு பாராட்டப்படுகிற ஓா் இனக்குழுவினைச் சுட்டும் உயிருள்ள அல்லது உயிரற்றப் பொருளே அவ்வினக்குழுவின் குலக்குறி அடையாளம் ஆகும் என்று ஆ.தனஞ்செயன் முன்வைக்கிறார். எமிலி தா்கைம் அவா்கள் குலக்குறி வழிபாட்டினை பற்றிக் தொடக்கில் பயன்படுத்தினார். பின்னா் ஜான் பொ்கூசன் மெக்லெனன் கூறும்போது, இன்றுள்ள சமயமுறைகளில் இன்றியமையாதெனக் கருதப்படும் பண்பாட்டு மரபுகளான வழிபாட்டுப்பொருள்கள், அதன்மீதான நம்பிக்கை, நம்பிக்கையில் உறுதிகொண்டோர், சடங்கு, சடங்கு செய்தல் போன்றவற்றைக் கொண்ட ஆரம்பகாலச் சமயமாகக் குலக்குறியியம் தோன்றியது என்கிறார். இத்தன்மை கொண்டு பார்க்கும்போது குலக்குறி, வழிபாடு, நம்பிக்கை என்ற இரண்டின் அடிப்படையில் எழுந்ததே ஆகும்.

குலக்குறி மரபில் - தெய்வமும் நம்பிக்கையும்

முல்லை    நிலத்தின் தெய்வமாக திருமால் கருதப்படுகிறது. தொல்காப்பியம் இதனை, “மாயோன் மேய காடுறை உலகம்”(தொல்.பொரு.அகத்.5நூற்) என்று திருமாலை நிலத்தோடு தொடர்பு படுத்தி வெளிக்காட்டுகிறது. அகநானூற்றில்  “மரஞ்செல மதித்த மால் போல”  (அகம்.59-4)என்று கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் ‘மாயோன்’ தென்னாட்டில் முல்லைநிலத் தெய்வமாகவும், கண்ணனாகவும் காட்சிபடுத்தப்படுகின்றான்.  ஆனால் சங்க இலக்கியத்தில் மால், மாயோன் என்ற பெயர்களே வழக்கிலிருந்தன. மால் என்பதற்குப் பெரியோன் என்றும், மாயோன் என்பதற்குக் கரியவன் என்றும் கருத்து உள்ளன.

திருமால் அரவணைப்பில் துயிலும் நிலைப்பற்றி முதன் முதலில் பெரும்பாணாற்றுப்படை பாடுகிறது. நீண்ட பூங்கொத்துக்கள் செறிந்த காந்தளையுடைய அழகிய பக்கமலையிலே யானை படுத்திருந்தாற் போலப் பாம்பணையாகிய படுக்கையில் துயில் கொள்ளக்கூடியவன்  என்று பெரும்பாணாற்றுப்படை 371 முதல் 373 உள்ள  பாடலடிகள் கூறுகின்றன. சில இடங்களில் ஒரு பயங்கரமான தெய்வமாகவும், இன்னும் சில இடங்களில் நன்மை பயக்கும் கடவுளாகவும் காட்சியளிக்கின்றான். மதுரைக்காஞ்சியில் மாநிலத்தின் காவலனாக விளங்குகின்றான். ஆண்கள் தம் மனைவி மக்களுடன் இன்று, மலரும் தூபமும் கொண்டு வணங்குகின்றனர். ஒளி பொருந்திய பேரணி கலங்களையுடைய அழகிய இளம்பெண்கள் தம் கணவரோடும் தாது மிகுந்த தாமரையொத்த முகங்களையுடைய குழந்தைகளோடும் சென்று காக்கும் கடவுளாகிய திருமாலைப் பூவும் புகையும் கொண்டு வணங்கினார்கள் என்று மதுரைக்காஞ்சி 461 முதல் 466 பாடல் வரிகள் கூறுகின்றன. இத்தோற்றங்கள் எல்லாம் குலக்குறி மரபில்  வழிபடும் தெய்வங்களின் தோற்ற அமைப்பாகும். அத்தகைய சாயலைப் பெற்றிருக்கின்றன திருமாலின் தோற்ற வெளிப்பாடு.

ஆயர்களின் குலமரபு
ஆயர்கள் முல்லை நிலத்தை பூர்வீகமாகக்கொண்டு வாழ்ந்தவர்கள். ஏறுதழுவதற்கு முன்பாகத் தெய்வங்களை வணங்கும் மரபு இம்மக்களிடத்தில் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. பொதுவர்கள் காயா, செங்காந்தாள், முல்லை போன்ற மலர்களை மாலையாகத் தொடுத்து நீர்த்துறையின் ஆலமரத்தின் கீழ் குடிகொண்டிருக்கும் மிகவும் பழைமையான ஊர்த்தெய்வத்தை, தொடக்க காலத்தில் காவல் தெய்வமாக வணங்கியுள்ளனா். இதனை,

“கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்
நெருநல் உண்டனம்”  (புறம்.197:1-2)
“துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
முறையுளி பரர்அய் பாய்ந்தனர் தொழூஉ”  (கலி.முல்.101:13-14)

என்ற பாடல் வரிகள் வெளிக்காட்டுகிறது. குடும்பப் பெண்களும் முதுபெண்டிர் வாயிலாகச் சகுணம் சார்ந்த நம்பிக்கைகளைக் கேட்டறிந்தனர்.

குலக்குறி - நம்பிக்கைகள்
ஆயப்பெண்கள் தனது மகளின் மன வருத்தம், உடல் மெலிவு, வருத்தம் கண்டு முதுபெண்டிரிடம் விரிச்சி கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அச்சூழலில் இல்லுறை தெய்வத்திற்கு நெல்லும் மலரும் தூவி முதுபெண்டிரிடம் விரிச்சி கேட்டு பின்பு வழிபட்டு வந்தனர். இவ்வழிபாடு மக்கள் மத்தியல் தொடா் வழிபாடாக நிலவின. விரிச்சி கேட்கும் முதுபெண்டிரும் மாலைநேரம் பார்த்தே விரிச்சி கேட்டு கூறினா். விரிச்சி கேட்கும் பெண்கள் தாம் விரும்பி மேற்கொள்ளும் செயல் நன்கு முடிவதற்காக நன்னிமித்தம் பார்த்து ஊரின் புறத்தே, படியில் நெல்லும் மலரும் படைத்து வழிபட்டு வந்தனர். அச்சூழலில் அப்பக்கமாகச் செல்வோர் கூறும் நல்வார்த்தையே கொண்டு இனிது நிறைவேறுமென நம்பிக்கை கொண்டனர். முல்லை மக்களிடத்தில்  காக்கைக்குப் பலிச்சோறிடும் வளக்கமும் இருந்துள்ளன.

காக்கைக்குப் பலிச் சோறிடல்
காக்கை கரைந்தால் விருந்தினர் உறவினர் இல்லம் வரப்புகுவர் என்பது பண்டைய மரபு. இந்நம்பிக்கை பண்பாட்டில் இன்றும் தொடர் மரபாக இருந்து வருகிறது. காக்கை கரைதலைத் தலைவன் வரவு குறித்த நன்னிமித்தமாகக் கொண்ட தலைவி, தெய்வத்தை வழிபட்டு காக்கைக்குப் பலிச்சோற்றினை உணவாகப் படைத்துள்ளனள். இது பிரிவுத்துயரில் வருந்திய தலைவிக்கு ஆறுதலாக இருந்துள்ளதுடன், கரைந்து தலைவனின் வரவை வெளிப்படுத்தியது. இதனை,

“முழுதுடன் விளைந்த வெண்னெல் வெஞ்சோறு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (குறுந்.முல்.210:3-6)

என்று குறுந்தொகை கூறுகிறது.

பல்லி சகுனம் எழுப்புதல்
கடற்கரையை ஒட்டி வளமனையில் வாழ்ந்த ஆயர்கள் வினைமேற் பிரியும் காலத்தில் தலைவி, உடன்படுகையில் வினைமுடிந்து குறித்த காலத்தில் மீண்டும் வருவேன் என்கிறான் அச்சூழலில் சுவற்றின் மேலிருந்து பல்லி சத்தமிட்டு வரவை எதிர்கொண்டு எழுப்பியது. இதனை, “படும் கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி” (நற்.முல்.169:3-4) என்ற வரிகள் சுட்டுகிறது. இதன் மூலம் முல்லைநில பெண்கள் பல்லி மீதும் நம்பிக்கை கெண்டனா்.

எருமைக் கொம்பை நட்டு வணங்குதல்
கோவலர்களின் சொத்தாக எருது, எறுமை, பசு ஆகியவைக் கருதப்பட்டன. அவை இறக்கும் தருணத்தில் அதன் கொம்பினை இல்லில் வைத்து வழிபட்டனர். இதில் பெண் எருமைக்கொம்பினைப் பெரும்பாலும் திருமணக் காலத்திலே திருமணம் நிகழும் வீட்டின் முன்பாக புதுமணல் பரப்பி, செம்மண் பூசி அழகுபடுத்தி பின்பு அதன் கொம்பினை வழிபடு பொருளாக வைத்து வழிபட்டு வந்தனர். இதனை,

“தருமணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய”  (கலி.முல்.114:12-14)

என்ற பாடல் மூலம் ஆயர்களின் திருமண இல்லில் குலக்குழு மரபாகத் தொடர்ச்சியாக எருமையின் கொம்பு இருந்து வந்துள்ளன. முல்லை நில மக்களின் வழிபாடு நம்பிக்கையில் தொடக்கத்தில் நிலம் சார்ந்த தெய்வமே முன்னின்று பேசப்பட்டுள்ளது. விரிச்சி இல்லுரைத் தெய்வத்திற்கே நெல்லும் மலரும் தூவி வழிபட்டு வந்துள்ளனர்.

அதேபோன்று பொதுவர் ஏறுதழுவுதலின்போது காளையால் குற்றப்பட்டு குடல் தெறித்து ஊா் முற்றத்தில் ஆலமரத்தின் அடியிலுள்ள தெய்வத்திற்கு அவை மாலையாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முல்லை மக்கள் தெய்வத்திற்கு பலிகொடுத்து வழிபடும் குலக்குறி மரபைக் கொண்டிருந்தனர். குலமரபாகத் தொடங்கப்பட்ட வழிபாடுகளைப் போன்று பொது நிலையில் குரவைக்கூத்து சமூக மரபாக முல்லைப் பண்பாட்டைப் பிரதிபலித்தன.

தொழில்சார்ந்த நம்பிக்கைகள்
குறவர்கள் தெய்வத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டதுபோல் இயற்கையின்மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதை தெய்வமாக எண்ணியும் வழிபட்டு வந்தனர். குறவர்கள் குன்றத்தின்கண் தினையை விதைத்து அவை வளர்ந்த நிலையில் மழையின்மையால், ஒருங்குகூடி மழைவேண்டி பறைமுழங்கி ஆரவாரம் எழுப்பி வணங்கினர். அவ்வாறு செய்வதன் மூலம் மழைபெய்யும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்துவந்தன.

நெல் அறுவடைக்காலத்தில் அறுவடை முடிந்து நெல்மணிகளைத் தூற்றும்போது, காற்று வீசவில்லை என்றால் கிழக்குநோக்கி கைகூப்பியும், சீழ்கை ஒலி எழுப்பியும் வழிபட்டனர். அவ்வாறு செய்வதன் மூலம் மழைபெய்யும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருந்தனர். ‘புலிபுலி’ என்று ஆரவாரித்தால் கூட வேங்கை மரம் தன் கிளைகளைத் தனித்துக்கொடுக்கும் என்ற நம்பிக்கையும் இம்மக்களிடத்தல் இருந்து வந்தன. இதனை,

“குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண் பல் அழி துளி பொழியும்”  (ஐங்.குறி.26:1-2)

என்கிறது. இன்றும் கோத்தர்கள் வேட்டைத் தொழிலின்போது வில் அம்பு கொண்டு வேட்டைச் செல்வதுண்டு. வேட்டையின்போது விலங்குளின்மீது எறிந்த அம்பு அது கொள்ளப்பட்டு மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும் என்றும், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ‘பூமராஸ்’ என்ற வளைக்கத்தியும் இதைப்போலவே எய்தியவர்களிடமே திரும்பிவரும் என்று நம்புகின்ற நம்பிக்கையாக இருந்து வருகிறது.

முடிவுகள்
சங்க காலத்தில் திணைச்சமூகத்தில் தொடங்கிய தெய்வ மரபு தொடா்ந்து பண்பாட்டில் வேரூன்றியது. அவை மக்கள் வழக்கத்தில் பின்னர் குலக்குறி மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டன. தெய்வங்களை  வணங்கும் போதும் இல்லில் நிறைமதி நாளில் விலங்குகளின் கொம்பிம்பிணை நட்டு வைத்து வழிபட்டனா். தொழில் தொடங்கும் போதும் சகுணங்களை அறிந்து கொண்டு செயல்பட்டனா். விவசாயம் சார்ந்த செயல்களில் இயற்கையைத் தெய்வமாக வணங்கி பின்னா் தொழில் புரிந்தனா். பெண்களும் இளமகளிரின் உடல்மெலிவு, உடல்தோற்றம் இவைகளைக்கண்டு இல்லுறைத் தெய்வத்திற்கு நெல்லும் மலரும் இட்டு வழிபட்டுள்ளனா். அத்தோடு இல்லுறைத் தெய்வங்களை குலக்குறி மரபு வாயிலாகவே வழிபட்டதும் இக்கட்டுரையின் வாயிலாக விளங்க முடிகிறது. தொடா்ந்து குலக்குறி மரபு தொடா்பான எச்சங்கள் இன்றைய மக்களிடத்தில் எத்தகைய தன்மையில் நிலவி வருகின்றன என்பதை ஆராய்ந்தால் தமிழா்களின் தொன்ம வழிபாடு வெளிப்படும்.
துணை நின்ற நூல்கள்
கு.வெ.பாலசுப்பிரமணியன்,(த.ப)– நற்றிணை மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (நற்.குறி.165:3)
தமிழண்ணல் – தொல்காப்பியம் பொருளதிகாரம் (தொகுதி-1), மணிவாசகா் பதிப்பகம், சென்னை-08 முதற்பதிப்பு-2003 தொல்.பொரு. (அகத்.5 நூ)
கு.வெ.பாலசுப்பிரமணியன்,(த.ப)– புறநானூறு மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (புறம்.15)
கு.வெ.பாலசுப்பிரமணியன், (த.ப) – அகநானூறு மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (அகம்.59)
ஆலிஸ், (த.ப) – பெரும்பாணாற்றுப்படை மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (பெரும்.371-373)
கு.வெ.பாலசுப்பிரமணியன், (த.ப) – கலித்தொகை மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (கலி.முல்.101:13-14)
கு.வெ.பாலசுப்பிரமணியன், (த.ப) – முல்லைப்பாட்டு மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (முல்.8-11)
கு.வெ.பாலசுப்பிரமணியன், (த.ப) – குறுந்தொகை மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (குறுந்.முல்.210:3-6)
கு.வெ.பாலசுப்பிரமணியன், (த.ப) – ஐங்குறுநூறு மூலமும் உரையும், நியு செஞ்சுரி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு -2004, (ஐங்.குறி.26:1-2

ramvini2009@gmail.com

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard