New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)


Guru

Status: Offline
Posts: 24625
Date:
புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)
Permalink  
 


புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)

 

 


உலகில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தாங்கள் வாழ்கின்ற புவியியற் சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சுற்றிலு காணப்படுகின்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றுள் மனிதனின் அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் உணவே முதன்மையாக இருக்கிறது. இக்கட்டுரையானது உணவுகளை உண்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்த கலன்களைக் குறித்ததாக அமைகிறது.

பண்பாடு
பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை ஆகும் என்கிறார் சீ. பக்தவத்சல பாரதி (1980: 160). மனிதன் சமூக உறுப்பினன் என்ற நிலையில் அவன் பயன்படுத்தும் பொருட்கள் அவை பற்றிய கருத்தாக்கங்கள் இவைகளின் கூட்டுச் சேர்க்கைப் பண்பாடாகும். இது புவியியல் பரப்பு, நாடு, மொழி, இனம் போன்றவற்றிற்கேற்றபடி வழங்கும் இயல்புடையது.பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்ற சொல்லிலிருந்து உருவானது எனலாம். ஏனெனில் பண்பாடு என்ற சொல் மனிதனோடு மட்டுமே தொடர்புடையது. இது பிற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை என்று பக்தவத்சலபாரதி (1980:160) குறிப்பிடுகிறார்.

பண்பாட்டினை மானிடவியலார் இரண்டாக வகைப்படுத்துகின்றனர். அவை, 1. பொருள்சார் பண்பாடு , 2. பொருள்சாராப் பண்பாடு என்பனவாகும். மக்கள் தங்களின் தேவைகளுக்காகச் செய்து கொள்ளும் அனைத்து வகையானப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள்சாராப் பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக்கூறுகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் புழங்குபொருட்கள் அனைத்தும் பொருள்சார் பண்பாட்டினை அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன.

புழங்கு பொருள்
புழங்கு என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழியகராதி (1990:1047) வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் (1982:2793) கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகின்றன. எனவே புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்தி வந்த,வருகின்ற பொருட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தொன்று தொட்டே செய்துவருகின்ற கைவினைப் பொருட்கள் யாவும் புழங்குபொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன. லூர்து(1997:297), இயற்கை வளங்களைப்பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும்  மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள்சார் பண்பாடு என்றும்; மானுடக்குழு ஒன்றின் தொழில் நுட்பத்திறனும் புழங்குபொருள் சார்ந்தகலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்களும் புழங்குபொருள்பண்பாட்டில் அடங்குகின்றன என்றும் குறிப்பிடுகின்றார்.

புழங்கு பொருட்கள் குறித்து ஆய்வுச் செய்த ரெஜித்குமார் (2009: 2)  மூன்றாக வகைப்படுத்தி கூறியுள்ளார். அவை, 1. உணவு சார்ந்த புழங்குபொருட்கள், 2. வீட்டுஉபயோகப் புழங்குபொருட்கள், 3. தொழிற்கள புழங்குபொருட்கள்என்பனவாகும்.

 

கலன்கள்
உணவுகளைச் சமைப்பதற்கும், அவைகளைப் பாதுகாப்பாகப் பக்குவப்படுத்தி வைப்பதற்கும், உணவுகளை உண்பதற்கும், கால்நடை, பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்கும் பல்வேறு விதமான கலன்களை எல்லா மக்களும் பயன்படுத்துகின்றனர். இதற்கு சங்க கால மக்கள் விதிவிலக்கன்று அவர்களும் இயற்கையாகக் கிடைத்த இலைகளையும் மரம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கலன்களையும் பயன்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றிப் பல்வேறு வகையான உலோகங்களினால் செய்யப்பட்ட கலன்களையும் பயன்படுத்தி உள்ளனர். இஃது அவர்களின் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன. அதிகளவில் மண் கலன்களின் பயன்பாடு இருந்துள்ளன. சங்க கால மக்கள் மரம், மண், இரும்பு, பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் செய்த கலன்களைப் பயன்படுத்தி உள்ளனர். தற்போது வெண்கலம், தங்கம், வெள்ளி, மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட கலன்கள் வழக்கிழந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கலம் என்பது உள்ளீடற்ற, குப்பி போன்ற அமைப்பினைக் கொண்டது ஆகும். இஃது பயன்பாட்டு வடிவம் இவற்றிற்கேற்ப பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொற்கலம் (பரி. 11: 79-80), கறவைக்கலம் (கலி. 108: 30-32) போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமையல் அறையினை மக்கள் ‘அடுக்களை’ என்று கூறும் மரபு உள்ளது. அதாவது, அடுத்தல் என்றால் சமைத்தல் என்று பொருள். எனவேதான், சமையல் செய்யும் இடத்தை அடுக்களை என்றழைக்கிறோம். அதைபோன்று சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் கலன்களை ‘அடுகலம்’ என்பர். இதனை,

“கடும்பினடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவ னென்றோ”        (புறம். 32: 1-2)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம். சமைத்த உணவுகளை மூடியுள்ள கலன்களில் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தும் வழக்கத்தையும் நம் முன்னோர் கடைபிடித்து வந்துள்ளனர். இதனை,

“அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடையடிசில்
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி”      (பெரும். 475-477)

என்றப் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. சங்ககால மக்கள் பயன்படுத்திய கலன்களை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை, 1. இயற்கை கலன்கள், 2. செயற்கை கலன்கள் என்பனவாகும்.

1. இயற்கை கலன்கள்
சங்ககால மக்கள் இயற்கையினைத் தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி உள்ளனர். இயற்கையாகக் கிடைக்கும் தாமரையிலை, தேக்கிலை, ஆம்பலிலை, வாழையிலை, பனையோலை, மூங்கில் ஆகியவற்றைக் கலன்களாக உணவு உண்பதற்கு ஏற்புடையதாக வடிவமைத்து பயன்படுத்தி உள்ளனர்.

தேக்கிலை
தேக்கு மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி உணவு உண்ணும் வழக்கம் தற்போது கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களிடம் காணப்படுகின்றது. சங்ககால மக்களும் தேக்கிலையினை உண்கலமாகப் பயன்படுத்தி உள்ளனர். இதனை,

“சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவிந்த புதல்போல் குரம்பை
ஊன் புமுக் கயரு முன்றில்”     (அகம். 315: 15-17)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம். மேலும், பயணம் மேற்கொள்ளும்போது வழியில் உணவு உண்ணும் போதும் தேக்கிலை மிகவும் உதவியாக இருந்துள்ளது. இதனை,

“தேய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇக் . . . . . “  (பெரும்: 105)

என்றப்பாடலடி சான்று பகர்கின்றது. தற்போது, நீண்ட நாள் கெடாமலிருக்க வேண்டி, தேக்கிலையில் ஊறுகாய் வகைகளை வைத்து விற்பனைச் செய்கின்றனர். தேக்கிலையில் உள்ள ஊறுகாய் அதிக சுவையுடையதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி உண்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாழையிலை
எக்காலத்திலும் எல்லா மக்களாலும் சிறப்பு உண்கலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவது வாழையிலையாகும். திருமணம், மற்றும் சிறப்பு விருந்தின் போது வாழையிலையில் உணவு வழங்கும் மரபு காணப்படுகின்றது. பழந்தமிழர்கள் வாழையிலையின் பயனை அறிந்து அதனை உண்கலமாகப் பயன்படுத்தி உள்ளனர். இதனை,

“வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்த்த கண்கள்”     (நள். 120: 5-6)
“செமுங்கோள் வாழையகலிலைப் பகுக்கும்”(புறம். 168, 13)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

ஆம்பலிலை
ஆம்பலிலையினையும் உணவு உண்ணுவதற்கு பயன்படுத்தி உள்ளனர். தலைவி தனது கணவனுக்கு ஆம்பலின் அகன்ற இலையில் சோற்றுடன் பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பான பழத்தினைப் பெய்து இடுகின்ற அழகினை,

“ஆம்பல் இலைய வமலை வெஞ்சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை யிடு உமுர”        (அகம். 196: 5-7)

என்றப் பாடல் நயம்படச் சுட்டுகிறது. இதனை திடப் பொருட்களை மட்டுமின்றித் திரவப் பொருட்களை உண்ணவும் பயன்படுத்தி உள்ளனர். உழவர்கள் அகன்ற ஆம்பலிலையில் கள்ளினை ஊற்றி உண்டனர். இதனை,

“கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியன் மாந்தி”      (புறம். 209: 3-9)

என்றப் பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

மூங்கில்
இயற்கையில் கிடைக்கும் மற்றொரு பொருள் மூங்கில். இதனையும் கலன் போன்று பயன்படுத்தி உள்ளனர். இன்னும் கிராம புறத்தில் மூங்கிலின் பயன்பாட்டைக் காணமுடிகின்றது. மாடுகளுக்கு மருந்து கொடுப்பதற்கு மூங்கிலைக் கணுவின் மேற்பகுதியில் வெட்டி பயன்படுத்துகின்றனர். ஏணியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பழந்தமிழர்கள் மூங்கில் குப்பிகளிலே மதுவினை நிரப்பி முற்ற வைத்து பின் எடுத்து உண்டு விட்டு குரவைக் கூத்தினைக் கண்டு களித்துள்ளனர். இதனை,

“வாங்கமை பழனிய நறவுண்டு
வேங்கை மூன்றிற் குரவையும் கண்டே”   (நற். 276: 9-10)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

இதிலிருந்து கள் போன்ற மதுப்பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மூங்கில்களைப் பயன்படுத்தி உள்ளமைப் புலனாகிறது. இன்றும் மூங்கிலைப் பயன்படுத்திப் பல்வேறுவிதமானப் பொருட்களைச் செய்கின்ற தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளமையைக் காணமுடிகிறது. மூங்கில் கலனாக மட்டுமின்றி அளவையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2. செயற்கை கலன்கள்
பொன், இரும்பு, செம்பு, வெள்ளி, மரம், மண் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட கலன்கள் செயற்கை கலன்கள் எனலாம். பழந்தமிழர்கள் உலோகங்களின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தமையினால் பல்வேறு விதமானக் கலன்களையும் பயன்படுத்தியுள்ளனர். பொன், வெள்ளியினால் செய்யப்பட்ட கலன்கள் பொற்கொல்லர் கைவண்ணத்தால் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்ததை,

“ஆசில் கம்மியன் மாசறப்புனைந்த
பொலஞ் செய் பல்காசு அணிந்த அல்குல்”(புறம். 353: 1-2)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

சாடி
திரவப்பொருட்களை வைப்பதற்குச் சாடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இஃது கீழ்ப்பாகம் தரையில் நன்கு அழுத்தும்படி தட்டையாகவும், கழுத்துப்பகுதி நீண்டும், நடுப்பகுதி நன்கு பருத்த அமைப்பினதாகவும், மேற்புறம் மூடியினால் மூடப்படும் வகையிலும் இருந்துள்ளது. கள்ளினைக் காய்ச்சுவதற்கும், அதனைப் பதப்படுத்தி எடுத்து வைப்பதற்கும் இச்சாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

“வல்வாய்ச் சாடியின் வழைச்சுறவிளைந்த”      (பெரும். 280)
“நன்மரம் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னாள் அரிந்த கோஓயுடைப்பின்”(அகம். 166: 1-2)

என்ற பாடலடிகள் மூலம் அறியலாம். மேலும், இச்சாடி அழகிய கலை நயத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்கு,

“கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்”(நற். 295:7)

என்ற பாடலடி சான்று பகர்கின்றது.

தாலம்
உணவுப் பொருட்களை உண்பதற்குத் தட்டு போன்று பயன்படுத்திய கலன் தாலம் ஆகும். தால் என்பது நாக்கினைக் குறிக்கும். நாக்கு போன்று தட்டையான விரிந்த பரப்பினைக் கொண்டதாக இருப்பதினால் தாலம் என்று வழங்கப்பட்டுள்ளது இருக்கலாம். தாலம் என்பதற்குப் பனை என்றும் பொருள் உண்டு. எனவே, இது பனையோலை போன்று விரிந்த வடிவில் இருந்துள்ளமையால். பழந்தமிழர்கள் தாலத்தில் உணவு உண்ணப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

“நறு நெய்க்கடலை விசைப்பச் சோறட்டுப்
பெருந்தோ டாலம் பூசன் மேவர”     (புறம். 120: 14-15)

என்றப் பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

பிழா
இதுவும் உணவு உண்ண பயன்படுத்தும் தட்டினைக் குறிப்பதாகும். கொழியலரிசிக் கஞ்சியினை உண்பதற்கு அகன்ற வாயினை உடைய பிழாவினைப் பயன்படுத்தி உள்ளனர். இதனை,

“அவையாவரிசி யங்களித்துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி”    (பெரும். 275-276)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

வள்ளம்
இஃது தற்காலத்தில் பயன்படுத்துகின்ற கிண்ணம் போன்று உட்பகுதி குழிந்து வட்டவடிவில் உள்ள கலன் ஆகும். இதனை ‘வட்டில்’ என்று கூறுவதுண்டு. இது பால், மோர், கள் போன்ற நீர்மப் பொருட்களை உண்ணுவதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதனை,

“பால்பெய் வள்ளஞ்சால்கை பற்றி
எம்பாடுண்டனை யாயின்”      (அகம். 219: 5-6)

“கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண்கமழ் நறுந்தேறல் உண்பான் முகம் போல” (கலி. 73: 3-4)

என்ற பாலடிகள் சான்று அளிக்கின்றன. இவ்வாறு, தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட கலன்களையும் பழந்தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.. இதனை,

“பொன்செய் வள்ளத்துப் பால்கிழக்கிருப்ப” (நற்: 297:1)

என்றப் பாடலடி தெளிவுறுத்துகிறது.

செம்புப்பானை
பழந்தமிழர்கள் செம்பின் பயனை நன்கு அறிந்திருந்தனர் எனவேதான் கம்மியர்கள் செம்பினை வார்த்து பானையினைச் செய்துள்ளனர். இத்தகைய பானையினைச் செம்பு பானை என்பர். இதனை,

“. . . . . . . . . . . கம்மியர்
செம்புசொரி பானை”       (நற். 153: 2-3)

என்றப் பாடடிகள் மூலம் அறியமுடிகிறது.

தூதை
மரத்தினால் செய்யப்பட்ட சிறிய பானை தூதை எனப்பட்டது. சிறு பெண்கள் மரத்தினால் செய்த தூதைகளை வைத்து விளையாடியுள்ளனர். இதனை,

“சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிப்பெய்த அழகமை”(கலி. 59: 5-6)

என்றப் பாடலடிகள் மூலம் அறியவருகிறது.

மண் கலன்கள்
பழந்தமிழர்கள் தங்களின் தேவைக்காக பல்வேறுவிதமான தொழில்களைக் கற்றுக் கொண்டனர். அதே போன்று மண்ணின் பயன்பாட்டை அறிந்து அதனைப் பயன்படுத்தி தேவையான மண்பாண்டங்களையும் செய்துள்ளனர். முற்காலத்தில் நீரினைக் கையினால் பருகினர். பின்னர் விலங்குகளின் தோல், தாவரங்களின் இலைகளையும் பயன்படுத்தினர். அதன் பின்னர் மண்பாண்டங்களை செய்த அதன்மூலம் தன்னுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்துக் கொண்டனர்.

தாழி
பண்டையத் தமிழர்கள் இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாகப் புதைப்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட பெரிய தாழிகள் வனையப்பட்டுள்ளது. இதனை ‘முதுமக்கள்தாழி’ என்று அழைக்கப்பட்டது. இதனை,

“கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வியன் மலர் அகன் பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ . . . . . . . . . . . .” (புறம், 256: 1-6)

என்றப்பாடடிகள் மூலம் இருவருடைய உடலை வைக்கும் அளவிற்கு பெரிய முது மக்கள்தாழி இருந்துள்ளமையை அறிய முடிகின்றது. தற்போது மக்களிடையே தானியங்களைப் பாதுகாத்து வைக்கும் கூனிப்பானைகள் புழக்கத்தில் காணப்படுகின்றன. இதனை, “அகழாய்வில் எடுக்கப்பட்ட தாழிக்கும் தற்போது உள்ள கூனிப்பானைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஏறத்தாழ இரண்டும் ஒன்று போல இருப்பதால் முன்னோர்கள் இறந்தவர்களை பூமிக்குள் பாதுகாக்கப் பயன்படுத்திய அதே மண்பாண்டத்தை அதன் பின்னர் தானியங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படுத்தியிருக்கலாம். இது கால மாற்றத்தாலும், நாகரீக முன்னேற்றத்தாலும் ஏற்பட்டிருக்கலாம்” (2009: 76, 77) என்று ரெஜித்குமார் குறிப்பிடுகிறார். மேலும் இத்தாழி மண்ணால் செய்துக் சுடப்பட்டதை,

“கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த”    (புறம், 238: 1)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

பானைகள்
பழந்தமிழ் மக்கள் அளவு, பயன்பாடு, அடிப்படையில் பலவகையான பானைகளைப் பயன்படுத்தி உள்ளனர். அவற்றுள், குழிசி, சாடி, கலன், கன்னல், தசும்பு, குப்பி, தடவு போன்றவற்றை குறிப்பிடலாம்.

தசும்பு
இப்பானையானது பால், தயிர், கள் போன்றவற்றை நிறைத்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இதனை,

“இஞ்சிவி விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத் தெறிந்த தசும்பு துளங் கிருக்கை
தீஞ்சேறு விளைந்த மணி நிற மட்டம்”      (பதிற்று, 42: 10-12)

என்ற பாடலடிகள் மூலம் ‘கள்’ நிறைத்து வைக்கும் தசும்புகளை மலர் மாலையாலும், இஞ்சி மாலையாலும் அலங்கரித்து மண்மீது வைத்து அதன் மேற்புறத்தை சந்தனத்தால் பூசி வைக்கப்பட்டமைக் கூறப்பட்டுள்ளது.

குழிசி
மக்கள் வீட்டில் உணவு சமைக்கப் பயன்படுத்தும் மண்ணால் செய்யப்பட்ட பானையினை ‘குழிசி’ என்கின்றனர். இதனை,

“மான்றடி பழுக்கிய புலவுநாறு குழிசி”      (புறம், 165:6)

“கயறு பிணிக் குழிசி”              (அகம், 77:7)

“முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி”     (பெரும், 99)

என்றப் பாடலடிகள் மூலம் உணரலாம்.

காடி
நெல்லிக்காய், எலுமிச்சை, புளியங்காய், மாங்காய் முதலியவற்றைப் பக்குவப்படுத்தி செய்யப்பட்ட ஊறுகாய்களை மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டத்தைக் காடிகளில் அடைத்து வைக்கின்றனர். இஃது அவை கெடாமல் இருப்பதற்கு பயன்படுகின்றது. இதனை,

“காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறந் துரப்பக்” (பெரும், 57-58)

என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.

கன்னல்
நீர் எடுத்து வைக்கும் மண் பானையினைக் ‘கன்னல்’ என்று அழைக்கின்றனர். இஃது இரண்டு விதமான கன்னல் பானைகள் உள்ளன. அவை ‘தொகுவாய்க் கன்னல்’, ‘குறுநீர்க்கன்னல்’ என்பனவாகும். குவிந்த வாயையுடைய நீர் வைக்கும் மண் பாத்திரம் தொடுவாய்க் கன்னல் ஆகும். இதனை,

“தொடுவாய்க் கன்னற் றண்ணி ருண்ணார்
பகுவாய்த் தடவிற் செந் நெருப்பார”       (நெடுநெல், 65-66)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

குறுநீர்க் கன்னல் என்பது மண்பானையில் நீர் விட்டு அதன் அடியில் சிறுதுளை வழியாக அந்நீரை சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரினை அளந்து காணும் கருவியாகலின் குறுநீர்க் கன்னல் ஆகும். இதனை,

“ஏறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்ன லினைத்தென் றிசைப்ப” (முல்லை, 57-58)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம்.

தடவு
பழந்தமிழர்கள் குளிர் காலத்தில் நீரை சூடாக்கி குளித்துள்ளனர். எனவே அதற்கென்று பெரிய மண்தாழிகளைப் பயன்படுத்தினர். இத்தகைய பெரிய மண்பானையினை தடவு எனப்பட்டது. இதனை,

“பகுவாய்த் தடவிற் செந் றெருப்பயர”    (நெடுநெல், 66)

என்றப் பாடலடிகள் மூலம் அறியலாம். மக்களின் தேவைக்கு ஏற்ப மண்பாண்டங்கள் செந்நிறத்திலும், கருப்பு நிறத்திலும் செய்து கொடுத்துள்ளனர். இதனை,

“செந்தாழிக் குவிபுறந் திருந்த”        (புறம், 238:1)

“பெருங்கட் குறுமுயல் கருங்கலன்”    (புறம், 322:5)

என்றப் பாடலடிகள் மூலம் தெரியலாம்.

இவைகளிலிருந்து பழந்தமிழரிடம் பல்வேறு வடிவங்களில் தேவைக்கு ஏற்ப மண் பாத்திரங்கள் புழக்கத்திலிருந்துள்ளமை புலனாகிறது.

உடைந்த கலம்
மண்ணால் செய்யப்பட்ட கலன்கள் உடைந்த பின்பும் பயன்பாட்டைப் பெற்று திகழ்கின்றன. இவ்வாறு உடைந்தக் கலத்தினை ‘ஓட்டைப்பானை’ என்பர் இப்பானையின் உடைந்தக் கழுத்துப் பகுதியைச் செடிகளைப் பாதுகாப்பாக நட்டு வைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். பெரியபானைகள் உடைந்தால் அதன் ஓட்டினைப் பயன்படுத்தி புளியங்கொட்டை, கொல்லாங்கொட்டை, வேர்கடலை, சோளப்பொரி, அரிசிப்பொரி போன்றவற்றை வறுத்து சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர். மேலும், புகையிலை தயார் செய்யவும் இவ் ஓட்டினைப் பயன்படுத்துகின்றனர். உடைந்த ஓடுகளின் சிறிய துண்டுகளைப் பயன்படுத்தி வட்டுக்கழித்தல், மாசம் வைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர் (2009 : 102) என்று ரெஜித்குமார் குறிப்பிடுகிறார். வட்டுக்கழித்தலைக் குறித்து,

“வட்டு உருட்டு வல்லாய்”        (பரி. 18:42)

“கல்லாச் சிறா அர்நெல்லி வட்டாடும்”    (நற். 3:4)

என்ற பாடலடிகள் மூலம் பண்டையத் தமிழர்கள் உடைந்தப்பானை ஓட்டினையிம் பயன்படுத்தியுள்ளமை அறியமுடிகின்றது.

முடிவுரை
சங்க காலமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப கிடைக்கின்ற இயற்கை பொருட்களையும், அனுபவ அறிவு நுட்பத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்களையும் பயன்படுத்தி கலன்களை வடிவமைத்து பயன்படுத்தியுள்ளமை கண்ணுனர முடிகிறது. இக்கலன்கள் அனைத்து சங்ககால மக்களின் பண்பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளன. இன்று சில கலன்கள் மக்களின் வாழ்வில் இருந்து வழக்கிழந்து காட்சி பொருளாக விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கதாகும். 

பயன்பட்ட நூற்கள்
பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல்,மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1980.
ரெஜித்குமார், த., புழங்குபொருள் பண்பாடு, காவ்யா பதிப்பகம், சென்னை, 2009.
லூர்து, தே., நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1997.

rejithd79@gmail.com

* கட்டுரையாளர்: முனைவர் த. ரெஜித்குமார், உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, வேதாரண்யம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard