New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குறுந்தொகையில் பண்பாடும் உவமையும்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
குறுந்தொகையில் பண்பாடும் உவமையும்
Permalink  
 


குறுந்தொகையில் பண்பாடும் உவமையும்! (4)

E-mailPrintPDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:-
உலகில் வாழும் அனைவருக்கும் பண்பாடு என்பது உயர்ந்த ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர். அவ்வகையில் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் பண்பாடு என்பது தனித்தன்மை வாய்ந்தது ஆகும். பண்பாடு என்பது சமுதாயத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், கலை, நீதி, நம்பிக்கை, அறிவு, சட்டம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியம் என்பது பண்பாட்டு கருவூலமாகத் திகழ்கிறது. மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கலாச்சாரத்தை தமிழ் பண்பாடு எடுத்துரைத்துள்ளது. உவமை என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த இலக்கண உத்திமுறையாகும். உவமை குறித்து முதன்முதலில் விளக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் ஒரு பொருளை விளக்குவதற்கு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைச் சுட்டிக்காட்டுதல் உவமை என்கிறார் தொல்காப்பியர். சங்க அக இலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பண்பாடு சார்ந்த உவமைகளைக் குறித்து ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

உவமை - விளக்கம்
உவமை எனப்படுவது மனிதன் அறிந்தப் பொருளைக் கொண்டு அறியாதப் பொருளை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டும், ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமைக்கூறி விளக்குவதாகவும், கவிஞன் தான் பாடிய பாடல்களில் அமைந்த பொருட்களைக் கூறுவதற்கும் தன்னுடைய புலமையை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சிறந்த உத்திமுறையாகவும் அமைக்கப்படுகின்றன. உவமையின் மூலம் ஒரு பாடலைக் கற்கும் பொழுது அப்பாடல் ஆழமான புரிதல்களையும், மேலும் இலக்கியத்தைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், இலக்கியத் தேடலையும் உண்டுபண்ணும் வகையில் அமைகின்றது.

'வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகைப்பெற வந்த உவமத் தோற்றம்'1

என்ற தொல்காப்பிய நூற்பாவில் வினை, பயன், மெய், உரு என்ற நான்கின்
அடிப்படையில் உவமை அமையும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

பண்பாடு – விளக்கம்
பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன்முதலாகப் பயன்படுத்தியப் பெருமை தி.கே.சிதம்பரநாத முதலியாரைச் சாரும் என்று அறிஞர் வையாபுரிப்பிள்ளை கூறியுள்ளார். ஆங்கிலத்தில் ஊரடவரசந என்னும் சொல்லுக்கு நிகரான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன்  தொடர்பு கொண்டுள்ள பொருட்கள் போன்றவற்றின் ஒட்டுமொத்த அடையாளம் பண்பாடு ஆகும். திருவள்ளுவர் பண்பாடு குறித்து பண்புடைமை என்ற ஒரு அதிகாரத்தை படைத்து விளக்கியுள்ளார்.

'பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்'2

இக்குறட்பாவில் நாம் வாழும் உலகமானது நல்ல பண்புடையவர்களால் தான் இயங்குகிறது. இல்லையெனில் உலகம் அழிந்துவிடும் என்று வள்ளுவர் கூறுவதன் மூலம் பண்புடையவரின் சிறப்பினை அறிந்துகொள்ள முடிகிறது.

தொல்காப்பியரும் தமிழ் பண்பாடும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை அறிய உதவும் மாபெரும் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் திகழ்கிறது.

'இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றி'3

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -இந்நூற்பாவில் தொல்காப்பியர் பண்பு என்ற சொல்லுக்கு பொறியால் உணரப்படும் குணம் எனப் பொருள் கூறியுள்ளார். தொல்காப்பியர் இல்லற வாழ்க்கையை களவு, கற்பு என  இரண்டாகப் பகுத்துள்ளார். களவு என்பது திருமணவாழ்க்கைக்கு முன்னும் கற்பு என்பது திருமணவாழ்க்கைக்குப் பின்னும் மக்கள் எவ்வாறு வாழ  வேண்டும் என வரையறை செய்துள்ளார். விருந்தோம்பல் என்பது தமிழரின் மாபெரும் சிறப்பு தம்மை நாடிவரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களுக்கு உணவு அளித்து அவர்களை மகிழ்விப்பது விருந்தோம்பலாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இல்லறவாழ்வில் மகளிர் விருந்தோம்பி வாழ்வதையே தம் கடமையாகக் கொண்டனர். மனிதன் சமுதாயத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறும் தொல்காப்பியரின் கொள்கையானது எல்லாக்காலங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது.

பழக்கவழக்கங்கள் சுட்டும் உவமைகள்

ஒரு சமுதாயத்தில் உள்ள மக்கள் தொன்றுதொட்டு செய்யும் செயல்களை பழக்கவழக்கம் எனலாம்.
' நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிஅயர் களத்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்ஊர் வியன்துறை'4

வேலனுக்கு வெறியாடல் செய்த செயலைக் கூறுவதாக இக்குறுந்தொகைப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் வரிகளில் மருத நிலத்தில் வாழும் மக்கள் வேலனுக்கு வெறியாடல் நிகழும் களத்தினைக் கூறும்பொழுது, செந்நெல்லின் வெள்ளிய பொரிகள் சிதறிக் கிடப்பது போல தோற்றம் பெற்று வெறியாடல்களம் இருக்கிறது. செந்நெல்லுக்கு வெள்ளிய பொரி உரு உவமமாக வந்துள்ளது.

'அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே'5

இப்பாடலின் மூலம் குறிஞ்சி நிலத்தில் உள்ள மக்கள் கட்டுவிச்சியிடம் குறிகேட்கும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. கட்டுவிச்சியின் கூந்தலானது சங்குமணிகள் போல நீண்டு வெண்மைநிறம் உடையதாக இருக்கிறது. இங்கு கட்டுவிச்சியின் கூந்தலுக்கு சங்குமணிகள் உரு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

அறம் சுட்டும் உவமைகள்
அறம் என்ற சொல்லுக்கு நற்பண்பு(அ)நல்லொழுக்கம், தருமம், கற்பு, இல்லறம், ஏழைகட்கு இலவசமாகக் கொடுத்தல், சமயம், அறநூல் போன்ற பொருட்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதனை அறம், நீதி  போன்றவற்றை வைத்து அறியலாம்.

'நில்லா மையே நிலையிற்று ஆகலின்
நல்இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று நின்
அங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே'6

நல்ல புகழினை விரும்பும் ஒருவன் நற்பண்புடைய குணத்தைப் பெற்று தம் பொருளினை வரியவர்க்கு வழங்குவதன் மூலம் அவர் மகிழ்வதைப் போல தலைவியின் உடலில் உள்ள பசலையும் தலைவன் வருகையால் உடனே நீங்கி மகிழ்வதாக உள்ளவற்றில், தலைவியின் பசலைக்கு  பொருள் உரு உவமையாக இடம்பெற்றுள்ளது.

அரசியலில் அறம் என்பது மன்னன் முறையாக நாட்டைக் காத்து நீதி வழங்கும் செயல் எனலாம். சங்க காலத்தில் மன்னர்கள் அறத்தின் வழியிலே நின்று நீதி வழங்கினர்.

'பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை'7

நன்னன் என்னும் மன்னன் நீண்டநாள் உயிர் வாழக்கூடிய மாங்கனியை காத்து வந்த நிலையில், அக்கனியை பெண் ஒருவள் உண்ட காரணத்தினால் அவளைக் கொன்றான். தலைவனைக் கண்டு களவில் இன்புறும் தலைவியை அவளின் தாய் கண்டித்தாள். இங்கு பெண்கொலை புரிந்த நன்னின் செயலுக்கு தலைவியை கண்டித்த தாயின் செயலானது வினை உவமமாக வந்துள்ளது.

இல்லறம் குறித்த உவமைகள்

தலைமக்கள் இருவரும் மனம் ஒன்றுபட்டு அன்புடன் வாழும் வாழ்க்கையினை இல்லறம் எனலாம்.

'இம்மை மாறி மறுமை ஆயினும்
நீஆ கியர்எம் கணவனை
யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே'8

கணவன் மனைவி உறவு என்பது உடனடியாக வருவதில்லை, பலபிறவிகளிலும் தொடர்ந்து வரும் என்பது பண்டைய தமிழ் மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்துள்ளது. முற்பிறவியில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களே ஊழ்வினைக் காரணமாக மீண்டும் இப்பிறவியில் இனைவர் என்று கருதுகிறார்கள். தலைவி தலைவனிடம் கூறுகிறாள் இப்பிறப்பு நீங்கி மறுபிறப்பு வந்தாலும் நீயே என் கணவன் ஆகவேண்டும,; நான் உன் மனதிற்கு பிடித்தவளாக இருக்க வேண்டும். இங்கு தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நட்பானது பயன் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

'பிரிவுஇன்று ஆயின் நன்றுமன்று தில்ல
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை  புலம்பத் தாக்கிக்
கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே'9

தலைவனுடைய மலை நாட்டில் வேங்கைப் பூக்கள் நிறைந்தும், அருவிகளானது ஆரவாரித்துக் கொண்டிருக்கும.; அத்தகைய மலைநாடனுடைய நட்பானது பிரிவு இல்லாமல் தொடர்ந்து வருவதாக தலைவி தன் தோழியிடம் கூறியவற்றில், தலைமக்கள் இருவருக்கும் உள்ள நட்பு பயன் உவமையாக வந்துள்ளது.

இறை வழிபாடு குறித்த உவமைகள்
பண்டையத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வினை மேற்கொண்டு இயற்கையினை முதலில் வழிபட்டு வந்தனர்

'வளைஉடைத் தனையது ஆகி பலர்தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ'10

இப்பாடலில் தமிழர்கள் பிறையை வழிபடும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளமையை அறியமுடிகிறது. சங்குவளையல் உடைந்த தோற்றத்தைப் போல வானில் மூன்றாம் பிறை உள்ளது. இங்கு பிறையானது உடைந்த வளையலுக்கு மெய்  உவமமாக இடம்பெற்றுள்ளது.

'புனவன் துடவைப் பொன்போல் சிறுதினைக்
கடிஉண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்சை ஆடுமகள்
வெறிஉறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்'11

குறவர்கள் விளைந்த முதற் தினைக்கதிரை காணிக்கையாக கடவுளுக்கு செலுத்தி வழிபட்டதை அறியமுடிகிறது. குறவனது தினைபப்புனத்திலே பொன்னைப் போன்று தினைக்கதிர்கள் இருந்ததாக உள்ளவற்றில், தினைக்கதிர்களுக்கு பொன்னின்நிறம் உரு உவமையாக வந்துள்ளது.

முடிவுரை:-
பண்பாடு என்பது மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மொழி, கலைகள், வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ள பொருட்கள் போன்றவற்றின் ஒட்டு மொத்த அடையாளம் ஆகும். தமிழர் பண்பாட்டில் பெண்களை முதன்மைப்படுத்தி இல்லற வாழ்வியல், விருந்தோம்பல் குறித்த உவமைகள் இடம்பெற்றுள்ளன. வரியவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்ததையும், நீதி தவறாமல் அரசாட்சி செய்ததையும் அறம் சுட்டும் உவமைகள் மூலம் அறியமுடிகிறது. இயற்கையினை தெய்வமாக வழிபட்டும், நிலத்தில் விளைந்த முதற் பயிர்களை காணிக்கையாக தெய்வத்திற்கு செலுத்தி இறைவழிபாட்டினை மேற்கொண்டுள்ளனர் என்பதனையும்  உவமையின்  வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. இவை போன்ற பல பண்பாடு குறித்த உவமைகள் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.                                                              

அடிக்குறிப்புகள்
1.ராசா.கி., தொல்காப்பியம் பொருளதிகாரம்,பகுதி2, நூ.1221.பக்.24.
2.கோதண்டம்.கொ.மா., திருக்குறள், குறள்.996, பக்.202.
3.சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியம், நூ.782, பக்.221.
4.சுப்பிரமணியன்.ச.வே (உ.ஆ)., சங்கஇலக்கியம், குறுந்தொகை, பா.53:2-5, பக்.405.
5.மேலது, பா.23:1-5, பக்.369.
6.மேலது, பா.143:3-7, பக்.454.
7.மேலது, பா.292:4-6, பக்.540.
8.மேலது, பா.49:3-5, பக்.403.
9.மேலது, பா.134:2-7, பக்.449.
10.மேலது, பா.307:1-3, பக்.550.
11.மேலது, பா.105:1-4, பக்.434.

கட்டுரையாளர்: - இரா.கோமதி எம்.ஏ.,எம்ஃபில்.,பி.எட்.,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழாய்வுத்துறை,  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),  விழுப்புரம். -

அனுப்பியவர்: முனைவர் வே.மணிகண்டன் - thenukamani@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard