New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு
Permalink  
 


தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு

 

 

இந்திய அளவில் சில மாநிலங்களில் திரெளபதியம்மன் வழிபாடு காணப்படுகிறது. அதனுடைய தொடர்ச்சி தமிழ் நாட்டின் தொண்டைமண்டலப் பகுதியிலும் காணப்படுகிறது. தொண்டைமண்டலப் பகுதியில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன் சமணசமயமும் பெளத்தசமயமும் வேராகவும் தலைமையிடமாகவும் கொண்டு பக்திநிலையை உருவாக்கி மக்களிடத்தில் பெரும்பான்மை பெற்றுத் திகழ்ந்து விளங்கியது. அப்போது அப்பகுதி மக்கள் பெரும்பான்மையோர் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களில் இருக்கின்ற கடவுள்களை இறைவனாக வழிபட்டுவந்தனர். இப்பகுதியில் முதலில் சமணம் ஆதிக்கம்பெற்றும் இரண்டாவதாகப் பெளத்தம் ஆதிக்கம் பெற்றும் சிறந்து விளங்கியது. தமிழ் இலக்கியங்களைக் கூர்ந்துநோக்கிப்பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் சில பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. சங்கம்மருவிய இலக்கியத்தில் பெருபான்மையான நூல்களின் பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. காப்பிய இலக்கி யத்தில் பெரும்பான்மையாகச் சமணப்புலவர்கள் இயற்றிய நூல்களாகும்; சில பெளத்தப்புலவர்கள் இயற்றிய நூல்களும் அறியப்படுகின்றன. மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றிய பாடல்களும் இலக்கியங்களும் ஆகும். ஆனால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின் பக்தி இலக்கிய நிலை உருவாகி சைவம், வைணவம் என்ற இருபெரும்பக்தி நிலைகள் தோன்றியதன்மூலம் சமணமும் பெளத்தமும் அழிந்து, சைவமும் வைணமும் இங்கு வேர் ஊன்றத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையில் சைவமும் வைணமும் மக்கள் இடத்தில் சிறப்புற்று விளங்குகின்றன. இம் மதங்களுக்குத் தலைமையிடமாக விளங்கியது தொண்டை மண்டப்பகுதியே ஆகும். கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சித் தொண்டைமண்டலத்தில் நிலவியிருந்தது. அப்போது, பல்லவமன்னர்கள்மீது வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்துள்ளனர். அதில் குறிப்பாகச் சாளுக்கிய மன்னர்களான முதலாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் ஆகியோர் படையெடுத்து வந்துள்ளனர். அக்காலங்களில் போர்கள் மிகுதியாக இருந்த காரணங்களால், பாரதக்கதைகள் கோவில்களில் படிக்கப்பட்டுள்ளன. பாரதக்கதைகளில் குறிப்பாகப் பாண்டவர்கள் போர்த்திறத்தைப் பற்றியும் திரெளபதியின் ஆற்றலைப்பற்றியும் மிகுதியாகப் படிக்கப்பட்டன.

தொண்டைமண்டலத்திலுள்ள கூரம் சிவன் கோவில் முதல் கற்கோவிலாகும். பரமேசுவரவர்மன் சிறந்த ஒரு சிவபக்தன் ஆவான். இவர் தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்; பலவற்றைப் புதுப்பித்தார். இவர் கூரம் என்ற சிற்றூரில் சிவன் கோவில் ஒன்றைக் கல்லாற் கட்டினார்; அதற்கு இவ்வரசன் பரமேசுவர மங்கலாம் எனத் தன் பெயர்பெற்ற சிற்றூரை மானியமாக விட்டார். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம் எனப் பெயர் பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதல் கற்கோவிலாகும். இப்போது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவர் காலத்தில் நடந்துவந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். இவர் கோவிலில் பாரதம் படிக்கச் செய்த அரசனாவார். கூரம் பட்டயம் முதல் இரண்டு சுலோகங்கள் பரமேசுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன என்பதை சி. சீனிவாச சாஸ்திரி எழுதிய பல்லவ வரலாறு எனும் நூலில் குறிப்பிட்ட செய்தியை மா.இராசமாணிக்கனார் (2008:153) தான் எழுதிய பல்லவ வரலாற்றில் கூறியுள்ளார். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் தான் பல்லவர் – சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது. அப்போராட்டம் இவருக்குப்பின் 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்தது (இராசமாணிக்கனார்,2008:98). பரமேசுவரவர்மன் கி.பி.670-685 வரையில் அவருடைய காலக்கட்டமாகும். இவருடைய வரலாற்றைப் படித்தால் சாளுக்கிய மன்னர்களுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் அவர்கள் பாரதக்கதைகள் படிப்பதற்கு நிலங்கள் மானியமாகக் கொடுக் கப்பட்டதைக் காணலாம் (இராசமாணிக்கனார்,2008:142-156). பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலம் தொடங்கி பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் காலம் வரையில் நீண்ட போர்கள் நடைபெற்றன. அதில் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மனுக்கும் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் நீண்ட காலங்கலாகப் (நாட்களாகப்) போர்கள் நடைபெற்றன. பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்ற போர்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்றும் போரில் நிரந்தரமாக வெற்றி பெறவேண்டும் என்றும் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் தன் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாரதக்கதைகளை நாள்தோறும் படிக்கும்படியும் நாள்தோறும் கூறும்படியும் செய்தான். இதனால் அவர் காலத்தில் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் பாரதக்கதைகளைக் கூறுவோருக்கும் பரமேசுவரவர்மன் நிலங்களை வழங்கினார் என்று கூரம் செப்பேட்டிலும் தண்டன் செப்பேட்டிலும் காணக்கிடக்கின்றன (முத்தையா,1988:29). பாரதவிருத்தி எனும் நூலில் சோழமன்னர்கள் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் கூறுவோருக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துள்ளனர் என்பதைக் காணமுடியும். இன்றும் தமிழகத்தில் உள்ள கோவில் களுக்கு நிலங்கள் மானியங்களாக இருப்பதைப் பல கோவில்களின் வாயிலாக அறியலாம் (சதாசிவப் பண்டாரத்தார்,2008:90). தமிழ் நாட்டில் பல ஊர்களில் பாரதக்கதைகள் கூறப்பட்டதையும் பாடப்பட்டதையும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் காணக்கிடக்கின்றன (நாகசாமி,1990:3). செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள கருங்குழி என்ற ஊரில் அவ்வூர் மக்கள் எட்டு ஏக்கர் நிலத்து வருவாயைப் பாரதக்கூத்து நடத்துவதற்கு மானியமாக வழங்கி வருகிறார்கள். இது கூத்திரு மானியம் என்றும் கூத்தியர் மானியம் என்றும் வழங்கப்படுகிறது (துளசி இராமசாமி,2000:69). பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் மக்களிடம் போர்வேட்கையைத் தூண்டுவதற்காகப் பாரதக்கதையினைக் கூத்தின் மூலம் பரப்ப நினைத்துக் கூத்து நடத்துவதற்கு என்று கோவில் ஒன்றைக் கட்ட எண்ணினான். அது திரெளபதி கோவிலாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதினான். அதன் காரண மாகத் தோன்றியதுதான் திரெளபதியம்மன் கோவில் என்று துளசி. இராமசாமி கருதுகிறார் (2000:70).

பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் அன்று தொடங்கி வைத்த திரெளபதியம்மன் வழிபாட்டுமுறை இன்று வரையிலும் தொண்டைமண்டலப் பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அவர் பாரதக்கதைகளின் சிறப்புக்கூறுகளையும் அதில் வரும் திரெளபதியம்மனின் ஆற்றல் கூறுகளையும் கூறவைத்து, அப்பகுதி மக்களுக்குப் போர் உணர்வையும் வெற்றியின் உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடத்தில் இயற்கையாகவே வெற்றியின் குணம் கொண்ட வெற்றியின் தெய்வமாகத் திரெளபதியம்மன் காணப்படுகிறாள். இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றி மக்கள் திரெளபதியம்மனை அனைத்துச் சிற்றூர்களிலும் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தொல்தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாரி என்று சொல்லப்படுகின்ற மழையைப் பெண் தெய்வக்கடவுளாகக் கொண்டு வழிபட்டு வந்துள்ளனர் என்பது பண்டைய இலக்கியங்களின் வழியாக அறியலாம். மாரியம்மன் வழிபாடு தமிழகத்தில் நெடுங்காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அவ்வழிபாட்டோடுகூடி கி.பி.7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் கோவில்களில் பாரதக்கதைகள் படிக்க ஏற்பாடு செய்ததன் விளைவாக மாரியம்மன் வழிபாட்டுடன் திரெளபதியம்மன் வழிபாடும் கலந்து ஒன்றாகிவிட்ட நிலையில், இது மாரியம்மன் வழிபாடா? அல்லது திரெளபதியம்மன் வழிபாடா? என்று தெரியாத வகையில் மக்களின் மனதிலும் வழிபாட்டுமுறையிலும் ஏறக்குறைய 1400 ஆண்டு காலங்கள் ஒன்றுகலந்துவிட்டதின் விளைவே இவ்வழிபாட்டு முறையாகும். காலம் செல்லச் செல்ல பண்டைத்தமிழகத்தின் தொல்மரபுகளும் வழிபாட்டுமுறைகளும் பழக்கவழக்கங்களும் பண்பாட்டுமுறைகளும் நடை உடை பாவனைகளும் கல்விமுறைகளும் மாற்றமடைந்து மக்களின் மனதில் பதியப்பட்டுள்ளன. இத்தகு காரணங்களுக்கு முக்கியக் கூறுகள் காலமாற்றமும் சமயமாற்றமும் மக்களின் மனமாற்றமுமேயாகும். அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே நடப்பது அக்கால மக்களின் மரபாகும். பல்லவமன்னன் மகேந்திரவர்மன் சமணசமயத்தைச் சார்ந்தவனாக இருந்தபோது, அவர் நாட்டுக்குட்பட்ட மக்களும் சமணசமயத்தவராக இருந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். இவர் சமணசமயத்திலிருந்து சைவசமயத்திற்கு மாறியபோது மக்களும் சைவசமயத்திற்கு மாறினார்கள் என்பதும் வரலாற்று உண்மை ஆகும். தமிழகத்தின் வடமாவட்டங்களாக விளங்கிக்கொண்டிருக்கிற திருவள்ளூர் (அதில் குறிப்பாகத் திருவாலங்காடு, தொழுதாவூர்), காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் திரெளபதியம்மன் வழிபாடுகள் காணப்படுகின்றன. அம்மாவட்ட மக்கள் தங்கள் ஊர்களில் திரெளபதியம்மன் கோவில்களைக் கட்டி, திரெளபதியம்மனை வழிபடு கடவுளாகவும் காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர். அக்கோவில்களில் பாரதக்கதைகள் சொற்பொழிவாகவும் கூத்தாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் மாலை நேரங்களில் மழை வருவது வழக்கமான நிகழ்வாகும். தமிழக மக்கள் மாரியம்மனை வேண்டினால் எப்படி மழைவரும் என்று நம்பினார்களோ, அதேபோல் பாரதக்கதையின் விராடபருவத்தைப் படித்தாலும் மழைவரும் என்று மக்களால் பன்னெடும் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இங்கு நம்பிக்கையின் அடிப்படையில் வளர்த் தெடுக்கப்பட்டதே திரெளபதியம்மன் வழிபாட்டுமுறையாகும் என்பது காணப்படுகிறது. வடநாட்டில் பெண்ணாகத் தோன்றிய பாஞ்சாலி எனப்படும் திரெளபதி தமிழ்நாட்டில் குறிப்பாக வடமாவட்டங்களில் தெய்வமாகவும் மழைக்கடவுளாகவும் காவல் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள். காலமாற்றத்தின் ஓட்டமாக மாரியம்மன் வழிபாடு திரெளபதியம்மன் வழிபாடாக இங்கு மாற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இப்பகுதிகளில் பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் பாரதக்கதை நிகழ்வுகளைத் தெருக்கூத்துக்களாகவும் நாடகங்களாகவும் நிகழ்த்தப்படுவது வழக்கமாகப் பின்பற்றப்படுகின்றன. இப்பகுதிகளில் பாரதக்கதையில் உள்ள பல கிளைக்கதைகளைக் கொண்டு, பலவகையான கூத்துக்கள் நடைபெறுகின்றன. அதில் சிறப்பானதாகக் கருதப்பெறுவது பாண்டவர் வனவாசம், திரெளபதை துகிலுரிதல், அர்ச்சுனன் தவசு, பாஞ்சாலி சபதம், கிருட்டிணன் தூது, கர்ணமோட்சம், பதினெட்டாம் நாள் போர் போன்ற கூத்துக்களாகும்.

மகாபாரதக் கூத்துக்கள் 56 பெயர்களில் நடை பெறுகின்றன. அவற்றில் திரெளபதி தொடர்பான கூத்துக்கள் கீழ்க்கண்ட ஐந்தாகும்: 1.துரோபதை மாலையீடு, 2.திரெளபதி புலம்பல் என்ற துகில் உரிதல் கூத்து, 3.துரோபதை குறவஞ்சி, 4.கெம்பிர்ணா சூரன்வதை: துரோபதை கல்லாய்ச் சமைந்த நாடகம், 5.துரோபதை கோயிலுண்டான சரித்திரமாகிய அசிலோமாசூரன் சண்டை போன்ற கூத்துக்களாகும். பாஞ்சாலியம்மன் கோவில்களில் விழா நாட்களில் நண்பகல் இரண்டு மணியிலிருந்து பாரதக்கதை படிக்கப்படுகிறது; படித்த அப்பகுதி அன்று இரவே கூத்தாக நடிக்கப்படுகிறது; பாரதக்கதை 18 பருவங்களாக உள்ள நிலையில் 18 நாள் விழாவில் பகலில் விரிவுரையும் இரவில் கூத்தும் நடத்தப்படுகிறது; சில இடங்களில் முதல் 10 நாட்கள் பாரதம் படித்தல் மட்டுமே அமையும்; அதன்பின் உள்ள 8 நாட்கள் பகலில் பாரதம் படித்தலும் இரவில் அதே பகுதியைக் கூத்தாகவும் நடத்துகின்றனர். பாரதக்கூத்தின் இறுதி நாளில் மண்ணாலான துரியோதனன், பீமன், திரெளபதி இவர்களின் சிலைகளைச் செய்து வைத்து 18-ஆம் நாள் போரில் பீமன் துரியோதனனுடைய மண் சிலையை உடைப்பதன் மூலம் அவனை அழிப்பதாக மக்கள் நம்புகின்றனர். அவர்கள் திரெளபதி துரியோதனன் உடம்பிலிருந்து வரும் இரத்தத்தைத் தன் கூந்தலில் பூசி முடிப்பதாக நடத்திக் காட்டுகின்றனர். இக்காட்சியில் திரெளபதி தெய்வமாகப் பார்வையாளர்கள் மனதில் ஒரு தோற்றத்தை அல்லது நம்பிக்கையை ஏற்படுத்துகிறாள் என்று துளசி.இராமசாமி கூறியுள்ளதை பி. மஞ்சுளா தன்னுடைய நூலில் குறித்துள்ளார் (மஞ்சுளா,2011:44). மகாபாரதக்கதையில் இடம்பெற்றுள்ள பல கிளைக்கதைகளும் சில கதைப்பாத்திரங்களும் சிறப்பாக இடம்பெற்றிருக்கின்ற காரணத்தினால் தமிழகத்தில் பாரதக்கதை சிறப்புற்று விளங்கிற்று எனக்கருதலாம். இக்கதைகள் தெருக்கூத்துக்கள், நாடகங்கள், இலக்கியங்கள், நாட்டுப்புறப்பாடல்கள், திரைப்படங்கள், திரைப்படப்பாடல்கள் போன்றவற்றின் மூலமாக மக்களின் மனதில் நிலைநிறுத்தி, நல்ல அறிவளர்ச்சி பெறவும் அறிவுமுதிர்ச்சி பெறவும் வீரத்தின் மூலம் வெற்றிப்பெறவும் களங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இக்கதைகள் மூலம் மக்களுக்கு உணர்ச்சியினையும் எழுச்சியினையும் ஊட்டி, போர் ஆற்றலையும் போர் வெற்றியினையும் பெற வழிவகுக்கப்பட்டுள்ளன என்பதைப் பல்லவ மன்னர்கள் வரலாற்றினை நன்கு ஊன்றிப்படிக்கும்போது அறிந்துகொள்ளமுடியும்.

வழிபாட்டு மரபுகள்
மக்களால் பலகாலங்களாக வழிவழியாகப் பின் பற்றப்படும் மரபுமுறைகளைப் பின்பற்றி ஒழுகுவது ஒருசமூகத்தின் கடமையாகவும் முறையாகவும் மரபைப்போற்றும் நிலையாகவும் இருக்கிறது. அவை வழிபாட்டுமுறைகளிலும் பண்பாட்டுமுறைகளிலும் அடங்கிக்கிடக்கின்றன. அவைகள் ஊர்கள்தோறும் மாற்றம் அடைந்த நிலையிலும் காணப்படும். அத்தகையநிலையில் திரெளபதியம்மன் வழிபாடும் சில இடங்களில் மாற்றமடைந்தும் பல இடங்களில் ஒன்றுபட்டும் காணப்படுகிறது. சில பகுதிகளில் மாரியம்மன் வழிபாடு மாரியம்மன் வழிபாடாகவும் திரெளபதியம்மன் வழிபாடு திரெளபதியம்மன் வழிபாடாகவும் சில இடங்களில் மாரியம்மன் வழிபாட்டோடு திரெளபதியம்மன் வழிபாடும் ஒன்று கலந்தநிலையிலும் வேறுபட்ட நிலையிலும் நடைபெறுவதைக் காணமுடிகின்றன. தொல்தமிழகத்தின் தொல்வழிபாடாக விளங்கிகொண்டிருக்கின்ற கொற்றவை, மாரி என்று சொல்லப்படுகின்ற மாரியம்மன் வழிபாடும் திரெளபதியம்மன் வழிபாடும் காலமாற்றத்தாலும் ஆட்சிமாற்றத்தாலும் சமய மாற்றத்தாலும் ஒன்றுகலந்த நிலையில் வேறுபாடு தெரியாத நிலையில் வழிபடப்பட்டுவருவதை வடதமிழகத்தில் காணமுடிகின்றது. பல ஊர்களில் மாரியம்மனுக்காகத் தனியாகத் திருவிழா எடுத்தாலும் அதிலும் வடநாட்டுப் புராதன சமயக்கலப்பு ஏற்பட்டு மாற்றமடைந்த நிலையில் திருவிழா நடை பெற்றுவருகின்றது. திரெளபதியம்மன் கோவில்கள் இல்லாத ஊர்களில் இவ்வாறன நிலைகள் காணப்படுகின்றன. திரெளபதியம்மன் கோவில்கள் இருக்கின்ற ஊர்களில் திரெளபதியம்மனையே வழிபாட்டுக்கடவுளாக வணங்கினாலும் அவ்வூர்மக்கள் திரெளபதியம்மனை மாரியம்மனின் வடிவமாக மனதில் ஏற்றுக்கொண்டு காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர். அவர்கள் திரெளபதியம்மனை வழிபட்டாலே மாரியம்மனை வழிபட்டதாகவே கொள்கின்றனர். அவர்களுக்கு மாரியம்மனுக்கும் திரெளபதியம்மனுக்கும் வேறுபாடு தெரியாத அளவிற்குப் புராதன சமயக்கலப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆட்சிமாற்றம், சமயமாற்றம், போர்நிலைகள் போன்றவற்றின் காரணங்களால் இந்நிலைமைகள் 1400 ஆண்டுகளாக மக்கள் மனதில் பதியப்பட்டு பிரிக்கமுடியாத ஒன்றுகலந்த இறையியல் நிலையில் ஏற்பட்டுள்ளது. தற்போழுது சென்னைக்கு அருகே உள்ள திருவாலங்காடு இரயில்நிலையத்தின் அருகில் உள்ள தொழுதாவூர் எனும் ஊர் மிகவும் பழமையும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஊராகும். இவ்வூரில் உலகத்தோற்றத்திற்கு முக்கியக்காரணமாக விளங்கும் (இறைவன் ஆதி ஈசன் ஆவார்) இறைவன் ஆதிகும்பேஷ்வரர் ஆவார். கி.பி.6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த காரைக்கால் அம்மமையார் என்று அழைக்கப்படுகிற புனிதவதியார் திருவாலங்காட்டில் வீற்றிருக்கின்ற இறைவன் சிவபெருமானை (இறைவன் ஈசனை) வழிபட வந்தபொழுது, தொழுதாவூரில் வீற்றிருக்கிற இறைவன் ஆதிகும்பேஷ்வரரை ( இறைவன் ஆதி ஈசனை) முதலில் தொழுது, பின்னர் பழையனூருக்குச் சென்று அங்குள்ள இறைவன் சிவபெருமானை வணங்கி, திருவாலங்காட்டில் ஆடிக்கொண்டிருக்கின்ற ஆடல் அரசன் (இறைவன் நடராசர்) இறைவன் சிவபெருமானை (இறைவன் ஈசனை) வணங்கி மோட்சம் அடைந்தார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராவார். காரைக்கால் அம்மமையார் இறைவன் ஆதிகும்பேஷ்வரரை (இறைவன் ஆதி ஈசனை) தொழுத காரணத்தினால் அவ்வூருக்குத் தொழுதவூர் என்றாகி, தற்பொழுது இது தொழுதாவூர் என்று நிலைபெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வூரில் உள்ள இறைவன் ஆதி ஈசனைத் தொண்டைநாட்டுத் தொழுதாவூர் உடைய ஆதி ஈசனே போற்றி என்று தமிழ்நாட்டு மக்கள் (தொண்டைநாட்டு மக்கள்) போற்றியும் வழிபட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்வூரில் திரெளபதியம்மன் கோவில் இல்லை. திருவாலங்காட்டில் திரெளபதியம்மன் கோவில் உள்ளது. தொழுதாவூரில் ஆண்டுதோறும் மாரியம்மனுக்கு ஜாத்திரை அம்மன் என்ற பெயரில் மக்கள் திருவிழா எடுக்கின்றனர். தொல்தமிழகத்தின் மரபுகளைக் கட்டிக்காக்கும் வகையில் மிகவும் தொன்மையான மாரியம்மன் கோவில்கள் இவ்வூரின் பல இடங்களில் உள்ளன. இக்கோவில்களில் கல்லைமட்டுமே மாரியம்மனாகக் கொண்டு வணங்கியும் பின்னாளில் சிலைகளைக் கொண்டும் ஊர்மக்கள் வழிபட்டு வருகின்றனர். பண்டைத்தமிழர்களின் வழிபாட்டுமுறைகள் இக்கோவில்கள் மூலமாகக் காணமுடிகின்றன. இவ்வூர் மக்கள் மாரியம்மனுக்கு விழா எடுக்கும்போது, பழந்தமிழகத்து மக்கள் கடவுளாக வணங்கிய கொற்றவை, மாரி என்று சொல்லப்படுகின்ற பெண் தெய்வக்கடவுளையே கடவுளாகக்கொண்டு வழிபட்டு விழா எடுக்கின்றனர். அந்த விழாவே தமிழ்மரபின் அடிப்படையில் எடுக்கின்ற விழாவாகும். ஆனால், அந்த திருவிழாவில் வடநாட்டுப் புராதனக் கலப்பு ஏற்பட்டு மாற்றமடைந்தநிலையில் ஜாத்திரை எனும் திருவிழா நடைபெறுகிறது. வடநாட்டுப் புராதனக் கலப்பு ஏற்பட்டுத் திருவிழா நடைபெற்றாலும் அவ்வூர் மக்கள் தொல்தமிழகத்தின் பழமையான கடவுளாக விளங்கிக்கொண்டிருக்கிற கொற்றவை, மாரி என்று சொல்லப்படுகின்ற பெண் தெய்வக்கடவுளுக்கே விழா எடுத்துள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். திருவாலங்காட்டில் திரெளபதியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவில்கூட, திரெளபதியம்மனுக்கு திருவிழா எடுத்தாலும் அதுவும் மாரியம்மனுக்கு விழா எடுத்ததாகவே கொள்ளப்படும். மாரியம்மனுடன் திரெளபதியம்மனை இணைத்துப் புராதனக் கலப்பின்அடிப்படையில் திருவிழா நடைபெறுகிறது. இவை அனைத்திற்கும் முக்கியக் காரணமாகத் திகழ்வது கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயக்கலப்பும் மொழிக்கலப்புமே ஆகும்.




__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு
Permalink  
 


திருவிழா நடத்தும் முறை
ஊர்ப்பொதுமக்கள் மற்றும் ஊரில் உள்ள பெரியவர்கள் ஒன்றுகூடி வளர்பிறை நாளில் திருவிழா தொடங்கலாம் என முடிவு செய்கின்றனர். பொதுவாகத் திருவிழா கோடைக்காலத்தில் நடத்தப்படுகிறது. திருவிழா நடத்த மக்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது. அவர்கள் வசூலித்த பணத்தில் திரெளபதியம்மன் கோவில் பூசாரிகளுக்கு ஊதியமாக ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கொடுக்கின்றனர்; திருவிழாவைச் சிறப்பாக நடத்த வசூலித்த பணத்தினைச் செலவு செய்கின்றனர்; விழாவினைச் சிறப்பாக நடத்துகின்றனர்.

காப்புக்கட்டுதல்
விரலி மஞ்சள் என்கிற கொம்பு மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டித் தட்டில் வைத்துப் பூசை செய்து அம்மன் மற்றும் ஒவ்வொரு பரிவார மூர்த்தங்களுக்கு வலக்கையில் கட்டுவது வழக்கம். பின் திரெளபதியைக் குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள் அனைவரும் கையில் அக்காப்பினைக் கட்டிக்கொள்கின்றனர். அவர்கள் இதனைக் கங்கணம் கட்டுதல் அல்லது காப்புக்கட்டுதல் என்று கூறுவர்.

கொடியேற்றம்
அவர்கள் கொடிக்கம்பத்தில் தர்ப்பையைச் சுற்றி வளைத்துத் தர்ப்பைக் கயிற்றினாலேயே கட்டுவர்; ஆஞ்சநேயர் படம் வரைந்த 3 அல்லது 5 மீட்டரில் அமைந்த நீண்ட மஞ்சள் துணியைக் கொடிக்கம்பத்தில் ஏற்றி வழிபாட்டினை நடத்துவார்கள். ஊரிலுள்ள மக்கள் யாவரும் வெளியூருக்குச் சென்றாலும் அன்றிரவே வந்துவிடுவர். உள்ளூரில் வாழுகின்ற மக்களும் விழா முடியும்வரை ஊரை விட்டு செல்லக்கூடாது என்பது மரபாகும்.

பூச்சாட்டுதல்
ஆண், பெண் இருபாலரும் மேளதாளங்களுடன் அவரவர் வீட்டிலிருந்து பல வர்ண மலர்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்குப் பூக்குவியலை மழையெனச் சொரிவார்கள். அம்மன்சிலை இப்பூமழையால் நனைவது மக்களுக்குப் பெருமகிழ்ச்சியை நல்குகிறது. இந்நிகழ்ச்சியின்போது மக்கள் அம்மனின் அழகினைக் கண்டு மயங்குவர். இறுதியில் தீபாராதனை நடைபெறும். பூச்சொரிவதால், எரியும் அம்மன் உடல் குளிர்ச்சி பெற்று மக்களுக்கு வெப்புநோய் ஏற்படாது தடுத்துவிடுவாள் என்று மக்கள் நம்புகின்றனர்.

கதை படித்தலும் கூத்து நிகழ்வுகளும்
விழா தொடங்கிய நாள்முதல் இரவுநேரங்களில் மகாபாரதக்கதைச் சொற்பொழிவு நடைபெறும். அதில் பீஷ்மர் பிறப்பு முதல் தருமர் பட்டாபிசேகம் வரை ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் கதையையும் சொல்லி முடிக்கப்படும். இப்பாரதம் படிக்கும் நிகழ்ச்சி குறைந்தது 3 நாள் முதல் 18 நாட்கள் வரையில் நடைபெறுகிறது. அவர்கள் பாரதக்கதையினைக் கூத்தாகவும் நாடகமாகவும் நடத்துவர். மேலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலமாகவும் மகாபாரதக்கதை சொல்லப்படும். 1.அரக்குமாளிகை விழா, 2.பகாசுரன் வதை விழா,3.வில் வளைப்பு, 4.மாலையீடு (திருமணம்), 5.துகிலுரிதல், 6.அருச்சுனன் தபசு, 7.அரவான் களப்பலி, 8.படுகளம், 9.தீமிதித் திருவிழா, 10.முடிசூட்டு விழா (தருமர் பட்டாபிசேகம்) போன்ற கூத்துக்களில் திரெளபதி இடம்பெறும் நிகழ்வுகளைக் காணமுடியும்.

வில் வளைப்பு
பாஞ்சால நாட்டின் அரசனாகிய துருபதன் தன்னிடம் உள்ள வலிமை பொருந்திய வில்லை வளைப்பவருக்குத் தன் மகளைத் (பாஞ்சாலியை) திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தான். அதன்படி அருச்சுனன் வில்லை அனைத்து அரசர்களின் முன்னால் வளைத்துப் பாஞ்சாலியைத் திருமணம் செய்துகொள்கிறான். இந்நிகழ்ச்சி மக்களுக்காகக் கூத்து வடிவில் நடத்திக்காட்டப்படுகிறது. அவர்கள் வில் வளைப்பதற்கென்றே பெரிய பச்சை மூங்கில் மரத்தை வெட்டிவந்து மந்தைவெளியில் அருச்சுனன் தபசு மரத்தின் அருகில் நடுகின்றனர்; திருக்கோவிலிலிருந்து ஐவருடைய சிலையும் (மரச்சிலை) கொண்டுவந்து நிறுத்துகின்றனர்; அருச்சுனன் சிலையை மட்டும் அம்மரத்தின் அருகில் நிறுத்தி மஞ்சள் நிறத்துணியை அம்மூங்கில் மரத்தின் முனையில் கட்டி இழுத்து வில் போன்று வளைத்துக் கட்டுகின்றனர்; வில்லை வளைத்துக் கட்டியவுடன் ஐவர் சிலைகளையும் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றனர். இத்துடன் வில் வளைப்பு நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.

மாலையீடு (திருக்கல்யாணம்)
வில் வளைப்பு நிகழ்ச்சிக்கு மறுநாள் மாலையீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை முகூர்த்த நேரத்தில் பாஞ்சாலி என்ற கன்னிகைக்கும் அருச்சுனனுக்கும் திருமணம் நடைபெறும் என்று அழைப்பிதழ் மூலம் ஊரில் உள்ள அனைத்துப் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அவர்கள் திரெளபதியம்மன் கோவிலின் வெளிமண்டபத்தில் திருமண மேடை அமைக்கின்றனர்; அம்மேடையில் அருச்சுனன் சிலையையும் திரெளபதி சிலையையும் (மரச்சிலைகள்) தனித்தனியே கிழக்குத்திசை நோக்கி வைக்கின்றனர். திருமணத்திற்கு வேண்டிய தட்டு வரிசைகள் உட்பட அனைத்தும் சபை எதிரே வைக்கப்படுகின்றன. பின்னர் அவர்கள் பெண் வீட்டார் என்றும் மாப்பிள்ளை வீட்டார் என்றும் சம்பந்தம் செய்து கொண்டு மாலை மாற்றிக் கொள்கின்றனர்; இந்நிகழ்ச்சியின்போது மணமாகாத கன்னிப்பெண்கள் விரதமிருந்து திரெளபதியம்மன் கழுத்தில் தாலி அணிவித்தால் அப்பெண்ணுக்குத் தாலி பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். சில திரெளபதியம்மன் கோவிலில் சுமங்கலிப் பெண்கள் தங்களது தாலியை அம்மனுக்கு அணிவிக்கின்றனர். இதன்மூலம் அவர்கள் நீண்டநாள் சுமங்கலியாக வாழலாம் என்று கருதுகின்றனர்.

துகிலுரித்தல்
பாஞ்சாலியைத் துச்சாதனன் அரச சபையில் வைத்து மானபங்கம் செய்த நிகழ்ச்சியான துகிலுரிதல் திரெளபதி வஸ்திராபரணம் என்னும் பெயரில் நடித்துக் காட்டப்படுகிறது.

துச்சாதனன்    : தொட்டு இழுக்காமல் போவேனோ நான்

துரியோதனன்:  தம்பி ஆவேனோ.

வசனம்    :அடியே பாஞ்சாலி உன்னை நான் தொட்டு இழுத்துப் போகப் 
போகிறேன். நான் யார் துரியோதனன் தம்பி என உனக்குக் காட்டப்போகிறேன். வாடி.

பாஞ்சாலி    : (வசனம்) அய்யோ… கண்ணா… அய்யய்யோ!
இப்படியும் செய்வாரோ துரோகம். அரிகரி இதை நினைத்தால் ஆகுமே சோகம்… அடேய் போடா…

துச்சாதனன்    : போடா வாடா என்று புகழுகிறாய் துரெளபதா.

ஏடா கூடாமா 
உன்னை இழுக்கிறேன் பாராய் அடியே பாஞ்சாலி. என்னவாடா போடா
(பல்லைக் கையாலும் நாக்காலும் கடித்து) அடியே பாஞ்சாலி வாடி இங்கே…

இவ்வாறு இக்காட்சியில் பங்குகொள்வோர் பேச்சு வழக்கு மொழியில் சுதந்திரமாகப் பேசி நடிக்கின்றனர். அவர்கள் தெருக்கூத்தில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியும்போது சேலைகளை இணைத்துக்கட்டித் திரும்பத் திரும்பத் தொடர்ச்சியாக இழுப்பதற்கு வழிசெய்து சேலை அதிகமான நீளத்துக்கு உதவுவதாகப் பார்வையாளர்களை நம்பச்செய்கின்றனர். அங்கு துச்சாதனன் வியர்வையை நெற்றியில் வழித்தெடுப்பது, அயர்ந்துபோவது போன்றவைகள் நடிப்பினால் விளக்கப்படுகிறது. கண்ணன் சேலையை வானிலிருந்து கொடையளிக்கிறான் என்று அங்கு காட்சி மூலமாக விளக்கப்படுகிறது.

படுகளம்
இக்கூத்து நிகழ்ச்சியானது ஏழாம்நாள், எட்டாம் நாட்களில் நடத்தப்படுகிறது. பாரதப்போரில் இறுதி நிகழ்ச்சியாகப் பதினெட்டாம் நாள் போர் நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில் வீமனும் துரியோதனனும் போரிடுகின்றனர். வீமன் துரியோதனனைத் தனது கதாயுதத்தால் தொடையைப் பிளந்து கொல்கின்றான். திரெளபதி தன் சபதத்தை முடிக்கிறாள். துரியோதனன் வதை என்ற இச்சடங்கு சார்ந்த நிகழ்ச்சி கோவிலின் முன்புள்ள வளாகத்தில் நடத்தப்படுகிறது. துரியோதனன், வீமன் வேடமிட்ட கூத்துக் கலைஞர்கள் சண்டை செய்கிற பாவனையில் ஊர்த்தெருக்களில் கூத்தினைத் தொடங்குகின்றனர். அனைத்துத் தெருக்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீமன் துரியோதனனைத் துரத்துவது போலவும் இருவரும் மோதிச்சண்டை செய்வது போலவும் அவர்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டே அம்மன் கோவில் முன்பு துரியோதனன் பொம்மை உள்ள இடத்திற்கு வருகின்றனர்; இவ்விடத்தை வெங்கள பூமி என்று கூறுவர். இவ்விடத்தை அடைந்தவுடன் வீமன், துரியோதனன் ஆகியோர் சண்டை வலுப்பெறுகிறது. இவர்களின் வேடத்திற்கு ஏற்றாற்போல் மேளதாளங்களின் ஒலியும் கூடுகிறது. இறுதியில் வீமன், துரியோதனன் தொடையை அடித்துப் பிளக்கும் நிகழ்ச்சியின் பொழுது மண்பொம்மை உருவத்தின் தொடையில் சிவப்பு நிறக்குங்குமம் தூவப்படுகிறது. இது இரத்தத்தைக் குறிக்கும். இக்குங்குமத்தைப் பாஞ்சாலி வேடமிட்ட பெண் தன்னுடைய நெற்றியில் பொட்டாக எடுத்து வைத்துக்கொள்வாள். கூத்து நிகழ்ச்சி முடிகிறது. சடங்கின் முடிவில் இரத்தத்தினை உருவகப்படுத்தும் குங்குமத்தை ஊர்மக்களும் எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்கின்றனர்.

தீமிதித் திருவிழா
பாஞ்சாலியைத் துச்சாதனன் தீண்டிய கறையினை நீக்கும் பொருட்டுத் தீமிதித் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும், மக்கள் தங்களது மனத்தில் உள்ள கோரிக்கைகள் நிறைவேறவும் பாஞ்சாலியின் அருளினைப் பெறவும் தீமிதிக்கின்றனர். தீயினை மிதிக்க விரும்பும் பக்தர்கள் அன்று முழுவதும் நோன்பிருந்து குளித்து ஈரத்துணியுடன் மாவிலைக் காப்புக்கட்டிக் கொண்டு பூமாலையைக் கையிலும் கழுத்திலும் அணிந்து கொண்டு பக்தியுடன் தீக்குழி முன் காத்திருப்பர். கோவில் அறங்காவலர் தீக்குழியில் உள்ள நெருப்புக் கங்குகளை இருகைகளிலும் வாரி எடுத்து ஈரமான மஞ்சள் துணியில் வைத்து அவற்றை எடுத்துச் சென்று கருவறையில் உள்ள திரெளபதியம்மன் சிலையின் மடியில் கட்டுவார்; அந்நெருப்புத்துணி எரியாமல் இருந்தால் அம்மன் நெருப்பில் இறங்கச் சம்மதம் அளிப்பதாகக் கருதி நேரே தீக்குழி இருக்கும் இடத்திற்கு வருவார். முதலில் பூசாரி பூங்கரகத்துடன் நெருப்புக்குழியில் இறங்குவார். அதன்பிறகு பக்தர்கள் அனைவரும் தீமிதிப்பர். தீமிதித்தபின் அருகிலுள்ள நீர்த்தொட்டி வழியே வெளியே வர வீரச்சாட்டையடியைப் பெற்றுக் கொண்டு நேரே கோவிலுக்குச் சென்று கோவிலை ஒரு முறை சுற்றிப் பூங்கரகத்துடன் அம்மன் முன் வழிபடுவர். பின் மக்கள் வீரகந்தத்தைப் (மங்சள் தூள், அரிசிமாவு கலந்த பொருள்) பிரசாதமாகப் பெற்றுச் செல்வர். இவ்வாறு அங்கு தீமிதித்தல் நிகழ்ச்சி முடிவடைகிறது. இச்சடங்கில் தீயானது தூய்மை மற்றும் சக்தியின் குறியீடாக விளங்குகிறது. இச்சடங்கில் கலந்து கொண்டால் பேய், பிணி நீங்கும் என்று மக்கள் நம்புகின்றனர் (மஞ்சுளா,2011: 26 -133).

பண்டையத்தமிழகத்தில் கொற்றவை, மாரி என்று சொல்லப்படுகின்ற வழிபாடுகள் நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. இது தமிழர்களின் மாண்புகளை உலகிற்குப் பறைசாற்றி நிற்கிறது. தமிழ் இலக்கியத்தில் குறிஞ்சி நிலத்திற்குக் கடவுள் முருகன் என்றும் முல்லைநிலத்திற்குக் கடவுள் திருமால் என்றும் மருதநிலத்திற்குக் கடவுள் வேந்தன் என்று சொல்லப்படுகின்ற இந்திரன் என்றும் நெய்தல்நிலத்திற்குக் கடவுள் வருணன் என்றும் பாலைநிலத்திற்குக் கடவுள் கொற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கடவுள்கள் பண்டைக்காலத்து மக்களால் வழிபடப்பட்டுவந்த தொல்தமிழ்க்கடவுள்களாவர். இவ் வழிபாடுகள் தொடர்ந்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், முதலில் சமணசமயக் கலப்பும் இரண்டாவது பெளத்த சமயக் கலப்பும் மூன்றாவது வைதீகச் சமயம் கலப்பும் ஏற்பட்டநிலையில், கடவுள்கள் நிலையிலும் சமயநிலையிலும் கலப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது வரலாற்று உண்மையாகும். கொற்றவை வழிபாடு தொல்தமிழகத் தமிழருக் குரிய வழிபாடாகும். தமிழகமக்கள் மகாபாரதத்தில் வருகின்ற திரெளபதியைத் பெண்தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபட்டு வந்தாலும் அவர்கள் தங்கள் மனதில் திரெளபதியம்மனை மாரியம்மனாக நினைத்து வழிபட்டுக் கொண்டு வருகின்றனர். சில பகுதிகளில் நடைபெறுகின்ற மாரியம்மன் வழிபாடு என்பது திரெளபதியம்மன் வழிபாட்டிலிருந்து மாறுபடுவதாகவும் உள்ளது. தற்பொழுது தொண்டைமண்டலப் பகுதியில் மாரியம்மன் வழிபாட்டில் வடநாட்டு வைதீக சமயக்கலப்பு ஏற்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; திரெளபதியம்மன் வழிபாட்டில் மாரியம்மன் கலப்பு ஏற்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது இவ்வாய்வில் தெரியவரும் உண்மையாகும்.

திரெளபதியம்மன் வழிபாட்டுப்பாடல்கள் திரெளபதியம்மன் விருத்தம்
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளை முதன்மையாகக் கொண்டு, தமிழ்மரபிற்கு ஏற்றவாறு பாடல் வடிவில் திரெளபதியம்மனின் சிறப்புகளைக்கூறும் பொருட்டுத் திரெளபதியம்மன் விருத்தம் எனும் தலைப்பில் விருத்தப்பாவில் எழுதப்பட்டுள்ளது. அத்தினாபுரத்தின் புராதனவரலாறு, துரியோதனனாதியர், பாண்டவர்கள், திரெளபதியம்மனின் சிறப்புகள் முதலான செய்திகள் அதில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் விருத்தப்பாக்காளால் அறியலாம்.

சீர்பெற்ற உலகினில் துவாபர யுகத்தினில் 
ஜென்மித்து ஐவராக
செங்கோலுக்கு அதிபதி தர்மபுத்திரபீமர் 
தனஞ்செயன் நகுலசகாதேவர்
பேர்பெற்ற திருதராட்டிரன் மைந்தன் துரியனுடன்
சூதாடி புவி தோற்றுதான்
தேவிபாஞ்சாலியும் ஐவரும் வனவாசம் 
சென்று தான் பன்னிரண்டு
நேர்பெற்ற அக்யாதம் ஓராண்டு செல்லவே
நின்று தான் விராடபுரத்தில்

நெடியமால் தயவினால் பாரத முடிக்கவே 
நிகரில்லாப் போர் பொருந்தி
மார்ந்த துரியன் மேல் நின்றுதான் விரிகூந்தல்
வாரியே முடித்த உமையே
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி 
மதிரூப பாஞ்சாலியே    (1)

நீடாலும் பாஞ்சாலன் எக்கியந் தன்னிலே
நீயொரு பெண் பிறந்தாய்
நெடியதொரு வில்தனை வளைத்தவர் தமக்குநீ 
நிச்சயம் தருவன் என்னாய்
கோடாகச் சுயம்வரம் சாட்டிய துருபதன்
திரெளபதி தனக்கு மணமே

சொல்லரிய துரியோதர ராசனும் தம்பிமார் 
தொல்புவி மன்னவர்களும்
ஆடாத வில்தனை நாண்ஏற்றி விடாமலே
அவமதிப் பட்டு நிற்க
அப்போது வனவாசம் காட்டினில் திரிந்தவர்கள்
அனைவரும் தாம் இருக்க
வாடாத வில்தனை வளைத்துதான் அருச்சுனன் 
மாலை தானிட்டுக் கொண்டார்
வனக்கிளை கதம்பமணி குங்கும வசந்தநெறி 
மதி ரூப பாஞ்சாலியே    (2)

தர்மமோ நித்தியம் தர்மமோ முக்தியும்
தர்மரும் கொலு விருக்க
தாஷ்டீக பீமனும் அருச்சுனனும் நகுல
சகாதேவன் அருகி ருக்க
வரமுள்ள தேவியுனை ஐவர்க்கும் பாரியாய்
மாதுநீ அருகிருக்க
மாதுநீ ஒருவருக்கும் பாரியும் அல்லகாண்   
மற்பொருது பார்க்க வந்தாய்
சரருத்த போரினில் ஐவரையும் கொண்டுவந்து 
சபதமே முடித்த உமையே
சங்கரி சார்வல உன்தனிட மகிமையான்
சாற்றவே முடியுமோ தான்
வர்மகுண வஞ்சியே மாயோன் சகோதரி
வந்தென்னை ரட்சித் திடும்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே    (3)

பஞ்சவரைத் துரியனும் விருந்துக்கு வாவென்று 
பரி வாகவே அழைத்து
பாதகன் சகுனியும் வசனாபியைக் கலந்து
பரிந்துடன் அமுது அளித்தான்
வஞ்சனை அறிந்துதான் மாயவர் கிருஷ்ணரும்
வண்டாய்ப் பறந்து வந்து
மணிரத்ன தீபத்தை அணைக்கவே பஞ்சவர்கள்
மனம் வாடி திகைத்து நின்றார்
நெஞ்சினில் கபடமது இல்லாத பீமனும்
நிறைந்த அமுதை யுருட்டி
நெடியமால் தயவினால் பசியாறி பீமனும்
படுகறையாய் மூர்ச்சை யானார்
வஞ்சியே துளபமணி மாலையர் வயித்தியராய்
வந்து பீமருக்கு உயிர் அளித்தார்
வனக்கினி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே (4)

ஐவரையும் கொண்டுபோய் அரக்கு மாளிகையினில் 
அடைத் தான் துரியோதரன்
அகண்ட விலங்கிட்டு அக்கினியை மூட்டினாள்
அப்போது தர்மர் தானும்
செய்யும்வகை ஏதுஎன்று தேவரீர் மாயவரைச்
சிந்தையில் நினைத்த போது
செந்துளப மாலையர் வந்தான் ஐவரையும்
தற்காத்து ரட்சித் தார்
தையலாள் திரெளபதை சபையிலே கொண்டுவரத்
தம்பிதுச் சாதனன் தான்
சற்றும் தயவில்லாமல் பத்தினி துகில்தனைக்
கத்தரித்தே உரித் தான்
வையம் அளந்தவரை மனதில் நினைத்திட
மாளாது துகில் அளித்தார்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே    (5)

பனிரண்டு ஆண்டுதான் சென்றுமே வனவாசம்
பருகியே அக்யாதந் தான்
பாராளும் விராடனார் பக்கலில் ஐவரும்
பத்தினி மாறுவேட மாய்த்
தனியாக மயல்கொளக் கீசன் தனைக்கொல்ல
தாஷ்டீக பீமன் தானும்
தாக்கிய அருச்சுனன் சண்டைக்கு மாடுபிடி
சாரதி மாயன் தானும்
பனிசூழும் பாராளும் துரியனார் பக்கலில்
பாலகனைத் தூது அனுப்ப
பாதிநா டளவே ஐந்துஊர் கேளும் எனப்
பகரவே மாயனார்க்கு
வாணிசூழ் அத்தினா புரந்தனிலே ஏகியே
மாயவர் தூது சென்றார்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்திநெறி
மதி ரூப பாஞ்சாலியே (6)

பாரதம் பதினெட்டு நாளுமே சென்றபின்
பரி வான தருமருக்குப்
பட்டாபி ஷேகமே கட்டியே மகுடமுடி
பண் பாகவே சூட்டியே
சாரதியான தொரு மாயவர் வந்துதான்
சதுர்மறைகள் தான் ஓதியே
சாத்தியே அரசாளும் செங்கோல் செலுத்தியே
தர்மராசன் என்று போற்ற
வீரவாள் உருவியே தம்பிமார் நால்வரும்
வீரிய மாக நிற்க
வீரதம் பட்டமும் முரசு வல்லாரையும்
விருதுடன் ஆர்ப் பரிக்க
வன்னியே திரெளபதா தாள்பூட்டிப் பூதேவியும்
வந்துதான் அருகு இருக்க
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே    (7)

உலகமது ஆண்டபின் கலிபிறந்தது என்று
ஒன்றாகத் தம்பி மாரும்
உமையவள் திரெளபதை மகாதேவரும் சொல்லவே
உடல்விட்டு வைகுந்தம் போய்
நிலைமையுடன் தருமரும் ஒண்டியாய் வைகுந்தம் 
நெடியமால் பாதம் பெற
நிகரில்லா மாயவன் கருடனை அழைத்துமே
நீ எதிராகும் என்றார்
கலசமதில் குலந்தனை விமானத்தில் வைத்துடன்
காட்டினார் வை குந்தமே
கலியுகம் தனிலே அறியவே அனைவர்க்கும்
கண்கண்ட தெய்வ மானீர்
வரம்பெறும் அடியார்கள் பங்கில்உறை வஞ்சியே
மாது நீ திரெளபதியம்மாள்
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே    (8)

கொந்தளமும் கொடிகளும் குமர வர்க்கங்களும்
கொக்கரித்து அண்டம் அதிரக்
கூட்டமிட்டே ஒரு பேய்களும் பூதமும் 
குறுமுனிவன் பிசாசு பில்லி
விந்தையஞ் சாகினி டாகினி மோகினி
திரிசூலி காட்டே ரியும்
வீர வீரர்களுக்கும் ராட்சத கணங்களும்
விடுபட்டர் ஆவி ரிஷியும்
உந்தன்வீர பண்டாரமும் சாட்டியும் மணிகளும்
காணவே திடுக்கிட்டு தான்
ஓயம்மேஓயம்மே நோய் போயினேன் என்று 
ஓடுமே கொக் கரித்து
முந்துநீ அடியேனைக் காத்து ரட்சித்திடும்
மகா வீர பாஞ்சாலியே
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே    (9)

பத்துமே பக்தியுடன் பாடினேன் உன்மீதில்
பராசக்தி திரெளபதை யம்மா
பாஞ்சாலன் கண்ணியே வீர மல்லாரியே
பத்தினி பரமே ஸ்வரி
நித்தமும்உன் பாதமலர் நினைவிலே நினைந்திடத்
நீர்க்குமே பாவங்கள் அம்மா
நீலி பாஞ்சாலி நீகால கபாலியே
நெடியமால் தங்கை யம்மா
உத்தமி திரெளபதா நித்திய கல்யாணியே
ஓங்கார வீர சக்தி
உல்லாச காமிநீ சல்லாபவாணி நீ
உமையே பாஞ்சாலி கன்னி
வைத்திடும் சித்தம்என் வல்வினையை நீக்கிடும்
மகா வீர பாஞ்சாலியே
வனக்கிளி கதம்பமணி குங்கும வசந்தநெறி
மதி ரூப பாஞ்சாலியே (10)

(பி.மஞ்சுளா, 2011: 236 – 240).

தொண்டைமண்டலப் பண்பாட்டுக் கூறுகளில் திரெளபதி யம்மன் வழிபாடு எனும் தலைப்பில் திரெளபதியம்மன் வழிபாடு என்பது வேறு, மாரியம்மன் வழிபாடு என்பது வேறு என்று கூறப்பட்டுள்ளது. மாரியம்மன் வழிபாடு என்பது தமிழ் நாட்டுக்குரிய மிகவும் தொன்மையான பழங்கால வழிபாட்டு முறையாகும். அது தொடக்கக்காலம் முதல் (கி.மு.5000 – கி.மு.6000) தற்காலம் வரையில் உள்ள வழிபாட்டு முறையாகும். தொண்டைமண்டலப் பகுதிகளில் மாரியம்மன் வழிபாடு தமிழ்மரபிற்கு உட்பட்டுச் சில பகுதிகளில் மாற்றமடைந்தும் பல பகுதிகளில் மாற்றமடையாமலும் காணப்படுகின்றன. இது தமிழ்மரபிற்கு உட்பட்டதாகவே இன்றளவும் காணப்படுகின்றது. அடுத்ததாகத் தமிழ்மரபிற்கு உட்பட்ட மாரியம்மன் வழிபாடு ஆரிய மரபுடன் கலப்பு ஏற்பட்டுக் காணப்படுகிறது. தமிழ்மரபு வழிபாட்டில் வடநாட்டு வழிபாட்டுமரபு கலப்புச் செயற்கையாகவே தோற்றுவிக்கப்பட்டு உள்புகுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு அறியப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் தோன்றியவையாகும். இதற்குப் பக்தி இலக்கியம் சான்றாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மாரியம்மன் வழிபாட்டோடு வடநாட்டு திரெளபதியம்மன் வழிபாட்டை உள்புகுத்தி வழிபாட்டில் கலப்பு ஏற்பட்டு உள்ளது என்பது இங்குக் காணப்பட்டுள்ளது. மாரியம்மன் வழிபாட்டிற்கும் திரெளபதியம்மன் வழிபாட்டிற்கும் முறையான தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் தமிழ்மரபோடு ஆரியமரபு கலக்கப்பட்டுள்ளது என்றும் இங்குக் காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள மகாபாரதமும் திரெளபதியும், சங்க இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை, தமிழ் இலக்கியங்களில் பாரதக்கதைகள், உரைநடையில் பாரதக் கதைகள், தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு, வழிபாட்டு மரபுகள், திருவிழா நடத்தும் முறை, காப்புக்கட்டுதல், கொடியேற்றம், பூச்சாட்டுதல், கதை படித்தலும் கூத்து நிகழ்வுகளும், வில் வளைப்பு, மாலையீடு (திருக்கல்யாணம்), துகிலுரித்தல், படுகளம், தீமிதித் திருவிழா, திரெளபதியம்மன் வழிபாட்டுப்பாடல்கள் திரெளபதியம்மன் விருத்தம் போன்ற கூறுகள் இவ்வியலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

துணைநூல் பட்டியல்
1. இராசமாணிக்கனார், மா., 2008, தமிழக வரலாற்று வரிசை – 5 பல்லவ வரலாறு, சென்னை: அமிழ்தம் பதிப்பகம்.
2. இராமசாமி, துளசி., 2000, தமிழ்ச்சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும், சென்னை: விழிகள் பதிப்பகம்.
3. சதாசிவப்பண்டாரத்தார், தி.வை., 2008, தமிழக வரலாற்று வரிசை – 3 பல்லவ வரலாறு, சென்னை: அமிழ்தம் பதிப்பகம்.
4. சதாசிவப்பண்டாரத்தார், தி.வை., 2008, தமிழக வரலாற்று வரிசை - 3 பிற்காலச் சோழர் வரலாறு, சென்னை: அமிழ்தம் பதிப்பகம்.
5. நாகசாமி, இரா., 1990, தவம்செய்த தவம், சென்னை: காஞ்சிப்பெரியவர் 97-ஆம் ஜயந்தி மலர் தினமணி இணைப்பு.
6.மஞ்சுளா, பி., 2011, திரெளபதி பெண்ணிய நோக்கில்,சென்னை: காவ்யா.
7. முத்தையா, இ., 1988, அல்லியரசாணி மாலை - சமூகவியல் நோக்கு, தூத்துக்குடி: நாவாவின் ஆராய்ச்சி.

annaiyappan.s.a@gmail.com

* கட்டுரையாளர் - - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard