# 1 திருமால் - பாடியவர், பண் அமைத்தவர் பெயர் தெரியவில்லை.
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை 5
எரி மலர் சினைஇய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனி
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை 10
சேவல் அம் கொடியோய் நின் வல_வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே
இணை பிரி அணி துணி பணி எரி புரைய
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் 15
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி
நெறி செறி வெறி_உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் 20
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை
பொருவேம் என்றவர் மதம் தப கடந்து
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் 30
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல்
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே
அன்ன மரபின் அனையோய் நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது 35
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்_வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம்
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும்
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் 40
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும்
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ 45
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல்
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி
புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் 50
நிலனும் நீடிய இமயமும் நீ
அதனால்
இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின்
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே
நின் ஒக்கும் புகழ் நிழலவை
பொன் ஒக்கும் உடையவை
புள்ளின் கொடியவை புரி வளையினவை 60
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை
மண்_உறு மணி பாய் உருவினவை
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை
ஆங்கு
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை 65
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே
1 திருமால்
ஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் அரிய தலைகளும்
சினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் மேல் கவித்துநிற்க,
திருமகள் வீற்றிருக்கும் அகன்ற மார்பினைக்கொண்டும், குற்றமில்லாத வெண்மையான சங்கினைப் போன்ற மேனியுடனும்,
மிக உயர்ந்த மூங்கில் கோலின் உச்சியில் அழகிய யானைக்கொடியை உயர்த்தியபடியும்,
கூர்மை செய்யப்பட்ட வளைந்த கலப்பைப் படையினைக் கொண்டும், ஒற்றைக் குழையை உடைய பலதேவனாகவும் விளங்குகிறாய்!
எரிகின்ற நெருப்பைப்போன்ற தாமரை மலரை வென்ற கண்களையுடையவன்! காயாம்பூவின்
மலர்ந்த மலரைப் போன்ற மேனியினன்! அந்த மேனியில்
திருமகள் நிறைந்து உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில்
தெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்! நீல மலையைச் சூழ்ந்து
தீப்பிழம்பு சுற்றினாற் போன்ர பொன்னாற் செய்த ஆடையை அணிந்திருப்பவன்!
கருடச்சேவல் வரையப்பட்ட அழகிய கொடியினையுடையவனே! உன் வலப்பக்கத்தில் இருப்போர்கள்
ஓதுகின்ற உன் பெருமைகளைக் கூறுகின்றன,
நாவன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்!
(மூலம் சிதைந்துள்ளது - பொருள் தெளிவாக இல்லை)இணை பிரி அணி துணி பணி எரி புரைய
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர்
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி
நெறி செறி வெறி_உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில்
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை
உன்னோடு போரிடுவோம் என்று வந்த அவுணரின் வலிமை கெடும்படி அவரை வென்று,
போரில் மேன்மையடைந்த குற்றமற்ற அண்ணலே!
காமன், சாமன் ஆகிய இருவருக்குத் தந்தையே! ஒளிவிடும் பூண்களை அணிந்த திருமாலே!
விளக்கமாக உன் பிறப்பினை அறிதல்
மயக்கம் தீர்ந்த தெளிவினையுடைய முனிவர்க்கும் அரிதேயாகும்!
அப்படிப்பட்ட மரபினைச் சேர்ந்த அத்தகையவனாகிய உன்னை
இன்ன தன்மையுடையவன் என்று சொல்வது எமக்கு எப்படி எளிதாகும்?
உன் தகுதிகளின் அருமையை நன்றாக அறிந்திருப்பினும், உன் மேலிட்ட ஆர்வம்
மிக அதிகமாக இருப்பதால் வலிமையில்லாதனவாக நாம் இங்கே கூறுபவை
சிறுமையுடையன் என்று வெறுக்காமல், அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய
திருமகளாகிய மறுவினை மார்பில் கொண்டவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும்.
ஆற்றல் மிகுந்த மேன்மையான சிறப்பினைக் கொண்ட அந்தணர்கள் காக்கும்
அறமும், உன் அன்பர்களுக்கு அருள்கின்ற திருவருளும் நீ!
திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!
அழகிய இடமான வானத்தில் அழகான நிலவொளியாய்த் திகழும்
திங்களும், சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய சூரியனும் நீ!
ஐந்து தலைகளை உருவாக்கிக்கொண்டு, அச்சத்தைத்தரும் வெல்லமுடியாத திறமையும்
வலிமையும் உடைய ஒருவனாகிய ஈசனும், ஊழிக்காலத்தீயும் நீ!
நலம் என்று கூறப்படுவன அனைத்தும் பொருந்திய குற்றமற்ற அறிவைத் தரும்
வேதமும், பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின் படைப்புத்தொழிலும் நீ!
வலமாக உயர்ந்தெழும் மேகமும், மேலிடமாகிய விசும்பும்,
இந்த நிலவுலகும், அதில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமும் நீ!
அதனால்
இப்படிப்பட்டவரைப் போன்றவன், இன்ன தன்மையினன் என்று கூறும்படியாக
அப்படிப்பட்டவரை நாம் இங்கு காணாததால்,
பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்,
உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
உனக்கு நீயே ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று -
உன்னைப் போன்றே ஒளிவீசும் புகழினைக் கொண்டுள்ளாய்!
பொன்னைப் போன்ற ஒளியுள்ள ஆடையினைக் கொண்டுள்ளாய்!
கருடக்கொடியைக் கொண்டுள்ளாய்! வலப்பக்கம் முறுக்குண்ட சங்கினைக் கொண்டுள்ளாய்!
இகழும் பகைவரைச் சென்று அழித்த வலிமை மிக்க சக்கரத்தைக் கொண்டுள்ளாய்!
தூய்மை செய்யப்பட்ட நீலமணியின் ஒளி பாயும் உருவத்தைக் கொண்டுள்ளாய்!
எண்ணிலடங்காப் புகழினைக் கொண்டுள்ளாய்! எழிலான மார்பினைக் கொண்டுள்ளாய்!
அவ்விடத்தில்
உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து உன் அடியவராம்
யாமும் பொருந்தி ஒன்றுபட்டு 'நாளும் சிறப்புற்றிருக்க' என்று
இன்பம் நிறைந்த உள்ளத்தினராய்த் தொழுது போற்றுவோம்,
வேதங்களை உரைத்தருளிய புலவனே! உன் காலடி நிழலைத் தொழுது -
2 திருமால் - பாடியவர்: கீரந்தையார்
பண் அமைத்தவர் : நன்னாகனார் பண் : பண்ணுப்பாலையாழ்
தொன் முறை இயற்கையின் மதியொ ------------
-------------------- -------------------- ----- மரபிற்று ஆக
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல
கரு வளர் வானத்து இசையின் தோன்றி 5
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும்
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு 10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை 15
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது
நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும்
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் 25
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை
நின் நிலை தோன்றும் நின் தொல் நிலை சிறப்பே
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அ தகு மதி மறு 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று 35
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு
முடிகள் அதிர படிநிலை தளர
நனி முரல் வளை முடி அழிபு இழிபு 40
தலை இறுபு தாரொடு புரள
நிலை தொலைபு வேர் தூர் மடல்
குருகு பறியா நீள் இரும் பனை மிசை
பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல்
நில்லாது ஒரு முறை கொய்பு கூடி 45
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு
அளறு சொரிபு நிலம் சோர
சேரார் இன் உயிர் செகுக்கும்
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல்
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் 55
சாயல் நினது வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்
எ வயினோயும் நீயே
செ வாய் உவணத்து உயர் கொடியோயே 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி 65
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின்
--------------- மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் 75
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே
2 திருமால்
தொன்றுதொட்டு வரும் இயற்கையின்படி -------
-------------------- -------------------- ----- மரபாகக் கொண்டு
பசிய பொன்மயமான தேவருலகமும், இந்த மண்ணுலகமும் பாழாய்ப்போக,
வானமும் இல்லாதுபோய், ஊழிக்காலம் இவ்வாறு தோன்றியும் ஒடுங்கியும் செல்ல,
அதன்பின், கரு வளர்வதற்காக, வானத்தின் ஒலியிலிருந்து தோன்றி
எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும்,
பொருள்களை இயக்கும் காற்று தோன்றி மேலெழுந்த முறை முறையான இரண்டாம் ஊழியும்,
சிவந்த தீ தோன்றி ஒளிவிட்ட மூன்றாம் ஊழியும், குளிர்ச்சி உண்டாகி
குளிர்ந்த மழை பெய்யத்தொடங்கிய நான்காம் ஊழியும், அவைகளுக்குள்
பின்பு தொன்மையில் வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து கிடந்து
மீண்டும் தம் சிறப்பாற்றலால் செறிந்து திரண்டு, இந்த நான்கிற்கும்
உள்ளீடாகிய பெரிய நிலம் தோன்றிய ஐந்தாம் ஊழியும்,
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்
பன்றியின் சிறப்பான கோலத்தின் பெயரைக் கொண்ட
வராக கற்பம் என்னும் இந்த ஊழிக்காலம் உனது ஒரு திருவிளையாடலை உணர்த்துவதால், உனது பழைமைக்குள்ளான
ஊழிகள் யாராலும் அறியப்படாதன;
சக்கரப்படையை உடைய முதல்வனே! உன்னைப் போற்றி வணங்குகிறோம்.
நீதான், சங்கின் நிறத்தைப் போன்ற வெண்மையான நிறமுடைய பலதேவனுக்கு, அவனுடைய
இளையவன் என்று சொல்வோர்க்கு இளையவன் ஆகி இருப்பதுவும்,
எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்,
குற்றமற்ற கொள்கையினையுடைய ஞானிகள் ஆராய்ந்த
தீமை இல்லாத கேள்வியாகிய வேதத்தினுள் அவற்றின் நடுவான
இந்த நிலையிலான தெரிந்துள்ள உண்மைகளை ஆராய்ந்துபார்த்தால், இந்த நிலையெல்லாம்
உன்னிடத்துத் தோன்றும் உன் தொன்மையான நிலையின் சிறப்பேயாகும்;
ஓங்கி உயர்ந்த வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற
பலநிறப் பூணாகிய அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன
நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;
எழுகின்ற அலைகளால் கழுவித் தூய்மையாக்கப்பட்ட, ஒளிவிடும் புள்ளிகளை நடுவிலே கொண்ட,
கூரிய வெண்மையான கொம்புகளால் பன்றிவடிவ வராகத்தில் நிலவுலகை எடுத்து அவளை மணம் செய்து
ஒரு புள்ளி அளவு நிலம்கூட வருந்துவதில்லை என்று
எண்ணிப்பார்த்து உரைப்போரின் புகழுரைகளோடு உன் செயலும் சிறந்து விளங்கும்.
வலிமைகெடாத உள்ளத்தோடு, சினங்கொண்டு, ஒருங்கே ஒன்று சேர்ந்து,
இடிக்கு எதிராய் முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின்
கொடிகள் அற்று விழவும், செவிகள் செவிடாகிப் போகவும்,
மணிமுடிகள் அதிரவும், அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு
மிகுந்து ஒலிக்கின்ற சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து,
தலை அற்றனவாய் மாலையோடு புரளும்வகையில்,
தமது நிலை கெட்டு, வேரும் தூரும் மடலும்
குருத்தும் பறிக்கப்படாத உயர்ந்த கரிய பனைகளின் உச்சியிலிருக்கும்
பல பதினாயிரம் குலைகள் நிலத்தில் உதிர்வது போல்
ஏதும் தத்தம் உடலின் மேல் நில்லாவண்ணம் ஒருமுறையிலேயே கொய்யப்பெற்று,
ஒருசேர, உருண்டு, பிளந்து, நொறுங்குண்டு, உருண்டோடிச் சிதறிக்
குருதிச் சேற்றைச் சொரிந்து நிலத்தில் சோர்ந்து கிடக்க,
உன்னைச் சேராதவராகிய அவுணரின் இனிய உயிரை அழிக்கும் வல்லமை படைத்தது,
போரில் பகைவரைக் கொல்லும் குரிசிலே! நீ ஏந்திய சக்கராயுதப்படை;
பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது அந்த சக்கரப்படை;
பொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் கொழுந்துதான் அதன் நிறம்;
உன்னுடைய பிரகாசிக்கும் ஒளி, சிறப்புடைய நீலத் திருமணியினுடையது;
கண்களோ, புகழ் பெற்ற தாமரை மலர்கள் இரண்டினைப் பிணைத்ததாகும்;
வாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த
பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம்; எல்லாருக்கும்
அருளும் உனது அருளோ நிறைந்த மேகம்; என்று கூறுகின்றது
நாவன்மை கொண்ட அந்தணர்களின் வேதத்தின் பொருள்;
இங்குக் கூறிய அந்தப் பொருள்களையும், வேறு பிற பொருள்களையும் போன்றிருக்கின்றாய்; இவைகளுக்கிடையிலும்
வேறு எந்த இடத்திலும் இருக்கிறாய் நீயே!
சிவந்த வாயையுடைய கருடனை உயர்த்திய கொடியில் வைத்திருப்பவனே!
வேதங்களில் தேர்ந்த ஆசானின் மந்திரமொழிகளும்,
படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும்,
புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும்
முறையே, உன் உருவமும், உன் உணவும்,
பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியான
உனது பெருமைக்குப் பொருந்தும்படி
அந்தணர்கள் போற்றிக் காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும்.
தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;
--------------- மரபினை உடையவனே! உனது திருவடியினை,
தலை நிலத்தில் பட வணங்கினோம், பலமுறை யாமும்;
மனக்கலக்கம் இல்லாத நெஞ்சினேமாய், போற்றினோம், வாழ்த்தினோம்,
சுற்றத்தார் பலரோடும் புகழ்ந்து வேண்டுகிறோம் -
பொய்யை மெய்யெனக்கொள்ளும் மயக்கத்தை அறியாமல் போவதாக எம் அறிவு என்று-