சங்க காலப் பானை ஒட்டு (தமிழி) எழுத்துப் பொறிப்புகள்
மா. பவானி் உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
நமக்கு கிடைத்துள்ள எழுத்துபூர்வமான சான்றுகளின் அடிப்படையில் நமது வரலாற்றுக்காலம் என்பது சங்க காலத்திலிருந்தே தொடங்குவதாக வரையறுக்கப்படுகிறது (பொ.ஆ.மு.300). ஆதாரப்பூர்வமான சான்றுகள் இன்மையால் இதன் காலத்தை நிர்ணயிப்பதிலும் அறிஞர்களுக்கிடையே கருத்து மாறுபாடுகளும் கால மாறுபாடுகளும் உள்ளன.
பொ.ஆ.மு.2500 ஆண்டுகளில் திராவிட நாகரிகம் என்று கருதத்தக்க அளவில் கிடைத்த சிந்துவெளி நாகரிக எழுத்துக்கள் இதுவரை படித்தறியப்படாததால் இந்தியாவின் துவக்கக்கால, நன்கு படித்தறிந்த எழுத்துக்களின் காலமும் பொ.ஆ.மு.3ஆம் நூற்றாண்டென்றே கணிக்கப்படுகிறது. இக்கால கட்டத்தில் வட இந்தியாவில் 'பிராமி' என்ற எழுத்து வழக்கத்திலிருந்துள்ளது. இந்தியாவின் துவக்க கால எழுத்திற்கு பொ.ஆ.மு1 மற்றும் பொ.ஆ.4காம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண மற்றும் புத்த நூல்¢களில் எழுத்துக்கள் பற்றிய கருத்துக்களின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டெர்டைன் டி லாக்கோபெர்ரி என்ற ஆங்கிலேயரால் பிராமி என்று பெயரிடப்பெற்றுள்ளது.. இவ்வெழுத்துக்கள் அனைத்தும் அசோகர் முதற் கொண்டு பின்னர் வந்த மன்னர்களால் வெளியிடப்பட்டது.
அசோகர் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவிய காரணத்தினால் அசோகர் கல்வெட்டுக்கள் அனைத்தும் புத்தமத தர்மத்தைப் போதிப்பதாகவே உள்ளன. முதலில் இவை பிராகிருத மொழிக்கும் பின்னர் சமஸ்கிருத மொழிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கிடைத்த பழந்தமிழ் எழுத்துக்களோ பானை செய்யும் பாமரன் முதல் பல நாடு சுற்றித்திரியும் வணிகன் வரை அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அவர்கள் பெற்றிருந்த எழுத்தறிவுத் திறத்தினை வெளிப்படுத்துகிறது. இவற்றைப் பானை ஓடுகள், மோதிரங்கள், முத்திரைகள் எனப் பலவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது உணர்த்தும். தமிழர்கள் அக்காலத்திலேயே திரைக்கடல் சென்று திரவியம் தேடியதால் அவர்களின் வணிகம் மூலமாகச் செங்கடல் நாடுகளிலும் சங்க காலத்தமிழ் எழுத்துப் பொறிக்கப்பெற்ற பானை ஒடுகள் கிடைத்துள்ளன. மேற்கூறிய பல பொருட்களிலும் எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தாலும் அவற்றைக் கொண்டு அறிவியல் அடிப்படையில் நம்மால் தமிழகத்தின் சங்க காலத்தை துல்லியமாக்க் கணிக்க இயலாது. ஏனெனில், கல்வெட்டுக்களுக்கு அதன் எழுத்தமைதி கொண்டே காலத்தைக் கணிக்க இயலுகிறது. இதனால் ஒரு கல்வெட்டின் முதல் வரி எழுத்தமைதியின் அடிப்படையில் காலத்தால் முற்பட்டும், இரண்டாம் வரி காலத்தால் பிற்பட்டும் இருப்பதாக ஊகிக்க வாய்ப்புண்டு. அதுபோல் சங்கத் தமிழ் எழுத்துப் பொறிப்புக் காசுகளும் மோதிரங்களும் இதுநாள் வரையில் அகழாய்வில் கிடைக்கப்பெறவில்லை. அதிக எண்ணிக்கையிலான எழுத்துப்பொறிப்பு பானை ஓடுகள் பல அகழாய்வுகளில் கிடைத்திருப்பதால் அவற்றினைக் கொண்டு சங்க காலத்தை அறிவியல் பூர்வமாகத் துல்லியமாகக் கணிக்க இயலும். சங்க காலத்தைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்பு பானை ஒடுகளைப் பற்றி அறிவது மிக அவசியமாகும்.
தமிழகத்தில் சங்க காலப் பானை ஓடுகள்
தமிழகத்தில் இது வரை ஏறக்குறைய 100 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன. அவற்றுள் 20 இடங்களில் எழுத்துப்பொறிப்புப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மட்டுமின்றி அதற்கப்பால் முசிறி என்று கருதத்தக்க பட்டணத்திலும் ஆந்திரப் பகுதியில் சாலிஹுண்டம், இலங்கையில் பூநகரி மற்றும் எகிப்தில் குஸேர் அல் கொதிம், தாய்லாந்தில் களாங்தோம் போன்ற பகுதிகளிலும் இப்பானை ஓடுகள் கிடைத்துள்ளனன. இவைதவிர ஆத்தூர் (கரூர்), ஜம்பை (விழுப்புரம்), டி.கல்லுப்பட்டி, எஸ். பாப்பிநாயக்கன் பட்டி(மதுரை), ஓடைக்கல் பாளையம் (கோயம்பத்தூர்) சிவகாசி போன்ற இடங்களில் மேற்பரப்பாய்வில் இவை கிடைக்கப் பெற்றுள்ளன.
அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள பானை ஓடுகள் அவை கிடைத்த இடத்துடன் முதலில் வெளியிட்ட ஆசிரியர் அவற்றிற்குக் குறித்த காலம், அவற்றின் எண்ணிக்கை போன்ற விளக்கங்களுடன் கீழே அட்டவணையிடப்பெறுகிறது
பானை ஓடுகளில் எழுத்துப் பொறிப்புகள் பெரும்பாலும் உண்ணப் பயன்படும் கல வகைகளில் அதுவும் மண்டை அல்லது கிண்ணம், தட்டு ஆகியவைகளிலேயே உள்ளன. அரிக்கமேடு, அழகன் குளம் தவிர்ந்த பிற இடங்களில் கறுப்பு-சிவப்புப் பானை வகைகளில் இவை வாணலி, குடம் போன்ற பெரும்பானைகளில் காணப்பெறுகின்றன. அரிக்கமேடு மற்றும் அழகன்குளத்தில் இவ்வகைகளோடு ரூலட் மண்கல வகை அதிகமாக பயன்படுத்தப்பெற்றுள்ளன. பொறிப்புகள் கலங்களின் வெளிப்புறம் கழுத்துப் பகுதியில் அல்லது நடுப்பகுதியில் இடப்பெற்றன. மூடிகள் போன்ற சிலவற்றில் மட்டும் உள் பகுதியில் காணப்பெறுகின்றன. ஈமக் கல்லறைகளில் உள்ள தாழிகள் மற்றும் படையல்களாக இடப்பெற்ற மண்கலங்களில் எழுத்துப் பொறிப்புகள் அறவே இல்லை. வேறு குறியீடுகள் அவற்றில் கீறப்பெற்றுள்ளன. கொடுமணலில் ''விஸாகி'' என்ற பெண் பெயர் பொறித்த ஓடு ஒன்று மட்டும் கல்லறையிலிருந்து கிடைத்துள்ளது. இது பல நாட்கள் வீட்டில் பயன்பாட்டிலிருந்த பானை ஓடு என்பது அது தேய்ந்து உடைந்திருப்பதுகொண்டு அறியலாம். பெரும்பாலும் ஈமக்குழியில் வைக்கப்பெறும் கலங்கள் அனைத்தும் புதிதாக ஈமச்சடங்கிற்காகவே செய்து இடப்பெற்றவையாகவே உள்ளன.
ஒரு சில சங்கத் தமிழ் பானைஓட்டு எழுத்துப் பொறிப்புகள்
இந்த அட்டவணையில் உள்ள கருத்துக்கள் பத்மஸ்ரீ திரு ஐராவதம் மஹாதேவன் அவர்களுடையதாகும்.
வ.எண்.
அமைவிடம்
எழுத்துப்பொறிப்பு
பொருள்
1
அரிக்கமேடு
...ன் தெவ்வை - தத்தை கோத்திரா அல் தெவ்வைதத்தை = தேவதத்தா
சமஸ்கிருத தேவதத்தா என்ற சொல்லைக்குறிக்கலாம் கோத்திரத்தை சேர்ந்த தேவதத்தன் (எந்த கோத்திரம் என்பது குறிப்பிடப்பெறவில்லை)
வெளிப்பரப்பு ஆய்வில் கிடைக்கும் பிற பொருட்களைக் காட்டிலும் அகழாய்வுகளின் மண்ணடுக்களில் கிடைக்கப்பெறும் பொருட்கள் கொண்டு காலத்தை ஓரளவு துல்லியமாகவும் அறிவியல் அணுகுமுறையுடன் கணிக்க இயலும். அவற்றிலும் ஒரு நாட்டின் வரலாற்றுக் காலத்தைக் கணிப்பதில் அகழாய்வில் கிடைக்கும் எழுத்துப் பொறிப்புப் பானை ஓடுகள் முக்கியப் பங்கு வகிப்பன. இவ்விதம் தமிழக அகழாய்வுளில் கிடைத்த பானை ஓடுகள் கொண்டு தமிழகச் சங்க காலத்தின் முன்னெல்லை பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டுகள் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புகள் உண்டு (பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டிற்கு) இதன் பின் எல்லை பெரும்பாலும் பொ.ஆ.3ஆம் நூற்றாண்டு என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பானை ஓடுகளும் அக்கருத்துக்களையே நிரூபிக்கின்றன. போலுவாம்பட்டி என்ற இடத்தில் மேற்தளத்தில் கிடைத்த ஒரு பானை ஓட்டில் பொ.ஆ 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துப் பொறிப்பு இடம்பெற்றுள்ளது. இதைத் தவிர பெரும்பாலான தமிழி பானை ஓடுகளும் பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டேயே பின்னெல்லையாகக் கொண்டுள்ளது. எனவே, பானை ஓட்டு எழுத்துப்பொறிப்புகள் கொண்டு சங்க காலத்தின் முன் எல்லைக்காலத்தை பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டிற்கு கொண்டுச் செல்ல இயலும்.
அயல் நாட்டில் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு