திருவல்லா, திருவாங்கூர் மாநிலத்தில் திருவல்லா வட்டத்தில் அமைந்த ஓர் ஊராகும். இங்குள்ள விண்ணகரம் (விஷ்ணு கோயில்), கேரளத்து மலைநாட்டுத் திவ்வியதேசங்கள் பதின்மூன்றனுள் ஒன்று என்னும் சிறப்புடையது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இதன் சிறப்பைப் பாடியுள்ளார்கள். இதன் பழம்பெயர் திருவல்லவாழ் என்பதாகும். கோயிலில் எழுந்தருளிய இறைவன் திருவல்லவாழப்பன் என்றும், திருவல்லவாயப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் கிடைக்கப்பெற்ற செப்பேடு “ஹுஜூர் கருவூலச் செப்பேடுகள்” (HUZUR TREASURY PLATES) என்னும் பெயரால் அழைக்கப்படும் செப்பெடுகளில் ஒன்று. நாற்பத்து நான்கு ஏடுகளும், அறுநூற்று முப்பது வரிகளும் கொண்டது. சில ஏடுகள் இல்லை. தற்போது இது திருவனந்தபுரம் ’நேப்பியர் அருங்காட்சியக’த்தில் (NAPIER MUSEUM) வைக்கப்பட்டுள்ளது.
திருவல்லா செப்பேடு
திருவல்லா செப்பேடு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நிலக்கொடைகளைப் பற்றியும், அவற்றைக்கொண்டு கோயிலின் வழிபாடு மற்றும் பிற நிவந்தங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றது. அழகான வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
திருவல்லா கோயிலும் ஓணம் பண்டிகையும்
திருவல்லா செப்பேடு, ஓணம் பண்டிகையின்போது கோயிலில் என்னென்ன வழிபாடுகள் நடந்தன, அவற்றுக்கான நிவந்தங்கள், நிவந்தப்பொருள்கள் என்னென்ன என்பதைப்பற்றிப் பல செய்திகளைக் கூறுகிறது. அச்செய்திகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
ஓணம் திருவிழா, ஆவணி மாதத்தில் ஏழு நாள்கள் கொண்டாடப்பெற்றது. ஓணத்திருவிழாச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்ட நிவந்த நிலங்கள் இரண்டு. ஒன்று, இடைச்சேரி என்னும் ஊரில் இருக்கும் சேந்தன் கேசவன் என்பானின் வெளியனார்க்காடு என்னும் பெயரமைந்த நிலம். இந்நிலத்திலிருந்து எண்பது பறை நெல் பெறப்பட்டது. மற்றொரு நிலம் முஞ்ஞி நாட்டில் இருந்த திருவோணக்கரி என்னும் நிலம். இந்நிலத்திலிருந்து நூற்றிருபத்தைந்து பறை நெல் பெறப்பட்டது. பறை என்பது மலபார்ப் பகுதியில் வழங்கிய முகத்தல் அளவை.
நெல்லின் பயன்பாட்டு அளவும், பயன்பாட்டு இலக்கும் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன.
நெல் அளவு இலக்கு
40 நாழி ஐந்து காணம் அளவுள்ள கற்பூரம்
5 நாழி பத்து காணம் அளவுள்ள சந்தனக் குழைவு
10 நாழி பத்து காணம் அளவுள்ள அகில் (அகிற் புகைக்காக)
700 நாழி (அரிசி) கோயிலின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில்
இருக்கும் சன்னதிகளின் இறைவர்க்கு அமுதுபடிக்காக.
கோயிலின் மடைப்பள்ளியில் பயன்பாட்டில் இருக்கும்
கோயில் நாழி அளவைக் கருவியால் அளந்தவாறு.
இந்த அமுதில் அரைப்பகுதி கோயிலில் கல்வி பயிலும்
மாணாக்கர்க்காக.
4 நாழி அரிசியால்
சமைத்த அமுது கோயிலில் எழுந்தருளியிருக்கும் வராகப்பன்
இறைவர்க்கு அமுதுபடியாக.
4 நாழி அரிசியால்
சமைத்த அமுது திருவாயம்பாடியில் உள்ள கிருஷ்ணன்
இறைத்திருமேனி அமுதுபடிக்காக.
4 நாழி ஆதிரசாலை என்னும் மருத்துவ மனைக்காக.
(ஆதுல சாலை, ஆதுரசாலை எனவும் வழங்கும்).
4 நாழி கோயிலில் எழுந்தருளியிருக்கும் அய்யப்பன்
இறைவர் அமுதுபடிக்காக. (இவர் ஆரியா, சாஸ்தா
எனவும் அறியப்படுகிறார்.)
12 நாழி பூத பலிக்காக.
16 நாழி மஹாயக்ஷி (மாயியக்கி)க்காக.
20 நாழி கோயில் தானத்தாருள் மேல் எம்பெருமக்கள்
இருவர்க்காக. இவர்கள் மேல்சாந்தி என்னும்
பெயர் கொண்ட பூசையாளர் ஆவர். (இன்றும்,
சபரி மலைக்கோயில் பூசகர், மேல் சாந்தி
என்றழைக்கப்படுவதைக் காண்க.)
50 நாழி கீழ் சாந்திக்கார் என்றழைக்கப்பெறும் மேல்
சாந்தியாரின் உதவியாளர் ஐவர்க்காக.
4 நாழி கோயிலின் பட்டர்களுக்காக.
4 நாழி கோயிலின் கீழ் சமஞ்சிதனுக்காக. சமஞ்சிதன்
என்பான் ஊர்க்கணக்கன் அல்லது (சதுர்வேதி
மங்கலத்துச்) சபைக்கணக்கன் ஆவான்.
20 நாழி கோயிலின் ஐந்து பண்டாரிகளுக்காக.
கோயில் கருவூலம் பண்டாரம் என்றும், கருவூலப்
பனியாளர் பண்டாரகர் என்றும் பெயர் கொள்வர்.
4 நாழி கோயிலுக்கு வெற்றிலை வழங்குகின்றவனுக்கு.
கல்வெட்டில் “இலையிடுபவன்” என்று குறிக்கப்
படுகிறது.
4 நாழி கோயிலின் வாயிற்காவலர்க்கு.
3 நாழி கோயிலில் ஸ்ரீபலியின்போது பறை அல்லது முரசு
கொட்டும் ஆளுக்கு.
99 நாழி கோயிலில் பணிபுரியும் ஏவல் பணியாளர் முப்பத்து
மூவருக்கு.
8 நாழி (அரிசி) கோயிலின் உள்புறத்தைப் பெருக்கும் (தூய்மைப்
பசறு - பயறு (பச்சைப்பயறு). இரண்டரைப் பறை நெல் இதற்குத் தேவைப்பட்டது.
வாகைப்பொடி - இரண்டு நாழி.
ஓணத்தன்று, சிறுகாலைப் பூசையின்போது திருவமுது இருநூற்று நாழி சமைக்க விதை நெல் இருபத்தைந்து பறை பயன்பட்டது.
அறியப்பெறும் கோயில் நடைமுறைகள்
இடைக்காலத்தில், தமிழகத்தில் சேர நாடு தனித்தன்மையை நோக்கி (கேரளம்) மாற்றம் உற்றது எனலாம். 10-11 நூற்றாண்டுகள் அளவில் கேரளத்தின் அடையாளம் முழு அளவில் வெளிப்படுவதைக் காணலாம். மலை மண்டிலம் என்னும் சொல்லாட்சியும், மலையாண் என்னும் முன்னொட்டுச் சொல்லும் கல்வெட்டுகளில் மிகுதியும் பயில்கின்றன. மலையாண் சியல் விளக்கு என்றொரு கேரள நாட்டு விளக்கு குறிப்பிடப்படுகிறது. அதுபோலவே, மலையாண் பரிவாரம், மலையாண் ஒற்றைச் சேவகர் ஆகிய பெயர்களில் மலையாளத்தாரைக் கொண்ட சோழர் படைப்பிரிவுகள் இருந்துள்ளன. இவ்வகை வெளிப்பாட்டை எடுத்துக்காட்டும் பல கூறுகளைத் திருவல்லா செப்பேட்டிலும் நாம் காண முடிகின்றது. தமிழகக் கல்வெட்டுகளில் கோயில் பூசையாளர்கள் உண்ணாழிகையுடையார், உண்ணாழிகைப் பெருமக்கள் என்னும் பெயரில் வழங்கும்போது, திருவல்லா செப்பேட்டில் பூசை என்பதற்குச் “சாந்தி” என்னும் சொல்லும், பூசையாளரைக்குறிக்க “மேல் சாந்தி”, “கீழ்சாந்தி” ஆகிய சொற்களும் வழங்குகின்றன. மேல் சாந்தி என்பவர் முதன்மை அருச்சகர் ஆவர். கீழ் சாந்தி எப்ன்பவர் மேல் சாந்திகளின் உதவியாளர் ஆவர். சாந்திகள் இருவரும் சாந்தியடிகள், சாந்திக்கார் என்னும் பொதுப்பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
அய்யப்பன் வழிபாடு கேரளத்தில் நிலைகொள்வதைக் காண்கிறோம். கோயிலின் பரிவாரக் கடவுளாக அய்யப்பனுக்குத் தனிச் சன்னிதி திருவல்லா திருவல்லவாழப்பன் பெருமாள் கோயிலில் அமைந்திருந்தது. அது போலவே, மாயியக்கி என்னும் பெண் தெய்வத்துக்கும் பரிவாரச் சன்னதி அமைந்திருந்தது. (கட்டுரை ஆசிரியர் கருத்து : செப்பேட்டில் “அய்யப்பன்”, “மாயியக்கி” எனக் குறிப்பிடப்பெறும் சொற்களை விளக்கும்போது நூல் பதிப்பாளர், முறையே “ஆர்யா” அல்லது ”சாஸ்தா” என்றும், “மஹாயக்ஷி” என்றும் சுட்டுகின்றமையை நோக்கும்போது, சமணம் சார்ந்த சாத்த வழிபாடும், யக்ஷி வழிபாடும் வைணவ வழிபாட்டுக்குள் இயைந்து போகும் வகையில் பெருஞ்சமயம் அவற்றை அணைத்துச் செல்லும் பாங்கு புலப்படுகிறது.)
அரசுக்கும் கோயிலுக்கும் தனித்தனியே கருவூலங்கள் இருந்தன. கோயில் கருவூலங்களைக் குறிக்க “ஸ்ரீபண்டாரம்” என்னும் சொல் வழங்குவதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். திருவல்லா செப்பேட்டில் கோயில் கருவூலத்தின் பெயர் குறீப்டப்படவில்லை; கோயில் கருவூலங்களைக் காப்பவரும் கருவூலக் கணக்குகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பேற்ற கணக்கரும் பண்டாரிகள் என்று சுட்டப்பெறுவர். பண்டாரகள் ஐந்து பேர் இக்கோயிலில் பணியாற்றினர் என்று செப்பேடு குறிப்பிடுகிறது. கோயிலின் நிவந்தங்கள் பற்றிய கணக்குகளைப் பார்த்துக்கொள்ளத் தனியே கணக்கன் உண்டு. கோயிலின் பல்வேறு நிவந்தங்கள் பற்றிய ஆவணங்களை எழுதும் பொறுப்பும் இவனுடையதே. தமிழகக் கல்வெட்டுகளில் “கணக்கன்” என்று குறிக்கப்பெறும் ஆள் திருவல்லா செப்பேட்டில் “சமஞ்சிதன்” என்று குறிக்கப்ப்டுகிறான். இது மலையாள வழக்காகலாம்.
கோயில்களில், இசைக்கருவிகளை (வாத்தியங்கள்) இசைப்போர் இருந்தனர். இவர்கள், “உவச்சர்” எனப்பட்டனர். வேணாட்டுச் செப்பேடுகளில் ”உவச்சகள்” எனக் குறிப்பிடப்படுகிறார்கள். திருவல்லா செப்பேடு, ”கொட்டுமவாள்” எனக்குறிக்கிறது. ”உவச்சகள்”, ”கொட்டுமவாள்” ஆகிய சொற்களில் மலையாளச் சாயல் படர்ந்துள்ளதைக் காணலாம். உவச்சர்கள் கொட்டுகின்ற (இசைக்கின்ற) இசைக்கருவிகளாக மத்தளம், பறை, முரசு, பஞ்சமகாசப்தம் ஆகியவை சுட்டப்பெறுகின்றன. செண்டை, திமிலை, சேகண்டி, கைத்தாளம் காகளம் (காளம்?) ஆகியன பஞ்சமகாசப்தத்தில் அடங்கும். வழிபாடு (பூசை), ஸ்ரீபலி என்னும் நிகழ்வு ஆகியவற்றின்போது உவச்சர்கள் கொட்டுவார்கள்.
கோயில்கள் கல்விச்சாலையாகப் பயன்பட்டுள்ளமை அறிகிறோம். கல்வி பயிலும் மாணாக்கர்க்கு ஓண விழாவின்போது சமைக்கபடும் அமுதில் அரைப்பகுதி மாணாக்கர்க்கு என்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலைச் சார்ந்து அதன் நிருவாகத்தில் ஆதுல சாலை என்னும் மருத்துவ மனை இருந்துள்ளது எனத்தெரியவருகிறது. இந்த ஆதுல சாலைக்கும், ஓணத்திருவிழாவின்போது நான்கு நாழி அமுது அளிக்கப்பட்டது.
கோயில்களில் சமயம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றன என அறிகிறோம். பாரதம் (மகாபரதம்) படிக்கப்பட்டது. மெய்யியல் (PHILOSOPHY) சார்ந்த சமற்கிருத நூல்களான ”பிரபாகரம்” (PRABHAKARAM), “வைசேஷிகம்” (VAISHESHIKAM) ஆகியவையும், சில சாத்திரங்களும் கோயில்களில் விரிவான உரையுடன் விளக்கப்பட்டன என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவ்வகையாக விரித்துரைக்கும் அறிஞர்களைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் “வக்காணிப்பார்” என்று குறிக்கின்றன. திருவல்லா செப்பேடும், ஓணத்திருவிழா நடைபெறும் ஏழு நாள்களில் “மதிலகத்தன்று வக்காணிச்சிருக்கும் பட்டகள்” ஒவ்வொருவர்க்கும் ஐந்து நாழி அரிசி வழங்கப்பட்டதாகக் கூறுகிறது. (கட்டுரை ஆசிரியர் கருத்து : “வக்காணித்தல்” என்பதற்குக் கல்வெட்டு அகராதி, விரித்துரைத்தல், விளக்கஞ் செய்தல் எனப்பொருள் தருகின்றது. இச்சொல், நல்ல தமிழ்ச் சொல்லா அல்லது தமிழ்ச் சொல்லிலிருந்து திரிபுற்ற சொல்லா என்பது ஆய்வுக்குரியது. ஆனால், மக்களிடையே இன்றும் புழங்குகின்ற ஒரு எளிமையான சொல்லுக்கும் வக்காணித்தலுக்கும் தொடர்புள்ளதாகத் தெரிகிறது. மக்கள் வழக்கில் இன்றுள்ள ஒரு சொல் “வக்கணை” என்பது. வக்கணையாகப் பேசுதல் என்னும் மக்கள் வழக்கு, ஒருவகையில் விளக்கமாகவும், விரித்தும் பேசுகின்ற ஒரு செயலைச் [வக்காணித்தலை] சுட்டுகிறது என்பதில் ஐயமில்லை.) மேற்படி செப்பேடு குறிக்கின்ற ”வக்காணிச்சிருக்கும் பட்டகள்” பிராமணர் என்றறிகிறோம். மதிலகத்தன்று என்பதை மதிலகத்து+அன்று எனப்பிரித்து, ஓணத்து விழா நாளில் கோயிலின் (கோயில் சுவரின்) உள்புறத்தில் என்று பொருள் கொள்ளலாம்.
அடுத்து, தேவரடியார்கள். கோயில்களில் தேவரடியார் பணி செய்துள்ளமை நன்கு அறியப்பட்ட செய்தி. திருவோணப் பண்டிகை நாள்களில் மேற்படி கோயிலில் அவர்களும் பங்கேற்றுப் பணியாற்றியுள்ளனர் என்றும் அவர்கள் நால்வருக்குப் பன்னிரண்டு நாழி அரிசி வழங்கப்பட்டது என்று செப்பேடு கூறுகிறது.
கோயில் பணியாளர் பலர் இருந்துள்ளனர். இலை இடுபவன் (வெற்றிலை வழங்குபவன்), வாயிற்காவலன், மடைப்பள்ளிக்கு வேண்டிய மண் கலன்கள் செய்து தருகின்ற கலவாணிகன், மடைப்பள்ளிக்கு விறகிடுவான், திருப்பள்ளித்தாமம் கட்டுபவன், கோயிலைப் பெருக்கித் தூய்மைப்படுத்துபவன் (அடிக்குமவன்), ஏவல் பணியாளர் (விளிக்குமவாள்) எனப் பலரும் கோயிற்பணி செய்துள்ளனர். ஆனால், மடப்பள்ளியில் அமுது (உணவு) சமைப்பவனைப் பற்றிய குறிப்பு செப்பேட்டில் இல்லாதது வியப்பாயுள்ளது.