வரலாற்றுப் பக்கங்களில் மிகவும் பிரபலமான ஓர் கல்வெட்டு.
சாளுக்கியத்தலைநர் வாதாபி ( பதாமி)யிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஐகோள் என்னும் நகரத்தில் அமைந்த மேகுட்டி மலையில் உள்ள கோவிலின் கிழக்குச் சுவற்றில் இக்கல்வெட்டு உள்ளது. நேமிநாதருக்கு எழுப்பப்பட்ட ஒரு ஜைனக்கோவிலாகும்
பல வரலாற்றுத்தரவுகளை ஒரு சரித்திரநூல் போல் இக்கல்வெட்டுத் தருகிறது.
சாளுக்கிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் அரசவைக் கவிஞரான இரவிகீர்த்தி என்பவர் இக்கோவிலை எழுப்புகிறார்.
19 வரிகொண்ட கல்வெட்டு. பழைய தெலுங்கு - கன்னட எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
பவ வரலாற்று முக்கியத்தரவுகளை இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.
சாளுக்கிய அரசர்களின் வம்சம். இரண்டாம் புலிகேசியின் கீர்த்தி மற்றும் பெருமை. தனக்கு எதிராக சதி செய்த தன் சிற்றப்பன் மங்களேசனை கொன்று புலிகேசி ஆட்சிக்கு வந்தது. ஹர்சவர்த்தணரை வென்றது. பல்லவர்களை வென்றது. சேர சோழ பாண்டியர்களை காத்தது. போன்ற தரவுகள் சரியாக உள்ளன.
மேலும் சில சிறப்பான தரவுகளும் இக்கல்வெட்டில் உள்ளன.
கல்வெட்டுகளில் காணப்படும் வருடத்தை கணிக்கும் ஒரு மிக முக்கிய வருடக்கணிப்பு சகம் என்பதாகும். கல்வெட்டில் வரும் சகவருடத்துடன் 78 ஐ கூட்டினால் கிடைப்பது பொதுயுகம்.
ஐகோள் கல்வெட்டில் சகவருடம் 556 ல் இக்கோவில் கட்டப்பட்டதாக குறிப்பு உள்ளது.
ஆகையால்.. 556 + 78 = கி.பி.634.
கி.பி. 634 ம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
சகவருடம் குறிப்பிடப்படும் முதல் கல்வெட்டு ஐகோள் கல்வெட்டு ஆகும்.
மேலும் ஒரு அவசியத்தகவலாக மகாபாரதப் போர் நடைபெற்ற காலமும், அதன் மூலம் கலிவருடம் என்னும் ஒரு ஆண்டு வரையறை செய்யவும் இக்கல்வெட்டுத் தரவுகள் உதவி புரிகின்றன.
கலிகாலம் தோன்றி மகாபாரதப்போர் நடந்து 3735 ஆண்டுகள் கடந்து, சகவருடம் 556 ஆண்டுகள் கடந்து இக்கோவில் எழுப்பப்படுகிறது.
சகவருடம் 556 என்றால் ( 556 + 78) கி.பி. 634.
கி.பி.634 என்பது பாரதப்போர் நடந்த கலியாண்டு 3735 ஆண்டுகள் கடந்து.
ஆகையால் கலி = 3735 - 634 = 3101.
ஆக.. கல்வெட்டுகளில் காணப்படும் கலி வருடத்திலிருந்து 3101 ஐ கழித்தால் கிடைப்பது பொதுயுகம்.
மேலும் ஒரு முடிவுக்கு வரலாம் இன்றிலிருந்து சரியாக 5120 ( 3101 + 2019) ஆண்டுகளுக்கு முன் பாரதப்போர் நடைபெற்றுள்ளது.
அதாவது.. கலியாண்டு 5120 க்கு சமமான ஆண்டு கி.பி.2019.
இக்கல்வெட்டு விபரங்கள் எபிகிராபி இண்டிகா 6 ம் தொகுதி எண் 1 ல் காணலாம்.
முனைவர் க.சங்கரநாரயணன் அவர்களின் Sarasvatam இணையப்பக்கத்தில் தெளிவான தமிழ் மொழிப்பெயர்ப்புடன் காணலாம்..
கல்வெட்டுதரும் செய்திகளின் சுருக்கத் தொகுப்பு... -------------------------------------- ஜினேந்திரர் வெல்கிறார். அவருடைய ஞானமாகிய கடலில் எல்லா உலகமும் தீவுகளைப்போல் இருக்கின்றன.
சாளுக்கியர்களின் குலமாகிய பெருங்கடல் வெல்கிறது. ஸத்யாச்ரயன் வெகுகாலம் வெல்கிறான்.
பூமிக்குத் தலைவன் என்னும் பொருளில் ப்ரூத்வி வல்லபன் என்னும் பெயருள்ள அரசபரம்பரையில் பல அரசர்கள் கடந்தப் பிறகு ஜயஸிம்ஹ வல்லபன் சாளுக்ய அரசன் ஆனான். அவனுடைய மகன் ரணராகன். அவனுடைய மன் பொலகேசி ( முதலாம் புலிகேசி)
சந்திரனையொத்த தனது ஒளியினால் வாதாபி என்னும் மணமகளுக்கு கணவனாக திகழ்ந்தான்.
அவனுக்குப்பிறகு கீர்த்திவர்மன். பிறகு அவனது தம்பி மங்களேசன்.
அவனது தமையனின் மகனும் சீர்மை கொண்டவனுமான பொலகேசியை ( இரண்டாம் புலிகேசி) வீட்டுச்சிறையில் சிற்றப்பனான அவனே இருத்தி வைக்க முற்பட்டான்.
புலிகேசி எழுச்சிபெற்றப்போது மங்களேசன் தனது மகனுக்காக அரசை பெற முயற்சி செய்யும்போது தன்னுடைய உயிரை இழக்க நேர்ந்தது.
சோழர்களின் காவிரி நீர், புலிகேசியின் யானைகளால் ஒரு அணைபோல் தடுக்கப்பட்டதால், காவிரி கடலோடு கலக்கமுடியாமல் போயிற்று.
சோழ சேர பாண்டியர்களின் செழுமைக்கும், பல்லவர்களின் படையாகிய பனிக்கும் கதிரவன் ஆனான்.
மகாபாரதபோர் நிகழ்ந்து 3735 ஆண்டுகளுக்குப்பிறகு கலி காலம் தோன்றி சகவருடம் 556 ஆண்டுகள் கடந்தப்பிறகு ஸத்யாச்ரயன் அருளைப்பெற்ற இரவிகீர்த்தி என்பவரால் ஜினேந்ரருக்கு மலையை ஒத்தத் தளி எடுக்கப்பட்டது. ------------------------------------ அன்புடன். மா.மாரிராஜன்.
Reference .. முனைவர் க.சங்கரநாரயணன் அவர்களின் Sarasvatam. ( முதல் Comment.)