"திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை தலைமையில் பிரிந்து வந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். ‘கண்ணீர் துளிகள்’ என்று பெயர் வாங்கிய போதெல்லாம் அந்த கூட்டத்தில் நானும் இருந்திருக்கிறேன். 1949இலிருந்து அண்ணாதுரை நியமிக்கிறவர்தான் கட்சி நிர்வாகியாக இருந்தார். முதன்முதலாக 1954-ல் தான் தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் நடந்தது. அப்போது ‘செட்யூல்டு கேஸ்ட் பெடரேசன்’தொடர்பு இருந்ததினால், சென்னை மாவட்டச் செயலாளராக ஏன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வரக்கூடாது என்ற கருத்து எனக்கும் எனது நண்பர்களுக்கும் உருவானது. காரணம்,அப்போது சென்னை மாநகராட்சி அறுபது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறுபது பகுதிகளில், 40 பகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் தி.மு.க. உறுப்பினர்களாக இருந்தார்கள். அப்போது இளம்பரிதிதான் எங்களுக்குத் தலைவர்.இப்போது(2008) அமைச்சராக இருக்கிறாரே பரிதி இளம்வழுதி அவருடைய அப்பா அவர்.
அப்போது, கட்சியில் பெரிய தலைவராக இருந்தார் சத்யவாணிமுத்து. எங்கள் கருத்தை அவரிடம் கூறினோம். அதற்கு சத்யவாணிமுத்து, மறுப்புத் தெரிவித்தார். இது சாதி மத பேதம் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கப் பாடுபடுகின்ற இயக்கம். இதில் சாதி அடிப்படையில் பேசக்கூடாது என்றார். இன்று அந்த கட்சியைப் பற்றி யாராவது இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வார்கள? ஆனால் சத்யவாணிமுத்து அன்று அப்படிப் பேசினார். நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் சாதி பாரட்டவில்லை. சென்னையிலிருக்கும் நாற்பது பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். நிர்வாகிகளின் வாக்கு எங்களுக்கு கிடைக்கும் என்கிற சூழ்நிலையில், நாங்கள் ஏன் போட்டி போடக்கூடாது என்று பேசினோம். இது ஜனநாயக முறைதானே! ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நீங்கள் இளம்பரிதிக்கு வாக்களிக்க வேண்டுமென்று சத்தியவாணிமுத்து அக்காவிடம் கூறிவிட்டு வந்து விட்டோம். மாவட்டச் செயலாளர் தேர்தலில், பரிதியை நிறுத்தினோம். அப்போது சென்னையில் 75 ஓட்டு இருந்தது. மாநில நிர்வாகிகள் எல்லோரும் சென்னையில் இருந்ததால், அவர்களின் ஓட்டுக்களும் எங்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், தலைவர்களிடமும் ஓட்டுக்கேட்டுப் போனோம். கலைஞர் - அப்போது அவருக்கு மு.க.என்று பெயர்-மட்டும்தான், நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. எனது ஓட்டு உங்களுக்குத்தான், ஆனால் வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று கூறினார். அப்போது அவர் சிறிய தலைவர்தான். வெளிப்படையாக பேச முடியாது. இன்னும் இரண்டு மூன்று ஓட்டு வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டோம். அவர் மறுத்து விட்டார். எப்படியோ கடினப்பட்டு இளம் பரிதியை வெற்றியடையச் செய்து விட்டோம். இளம்பரிதியின் மீது அண்ணாதுரைக்குக் கோபம் இருந்தது.ஏனெனில், மாவட்டசெயலாளர் தேர்தலில், அவர் நிறுத்திய கண்ணபிரானை எதிர்த்துதான் இளம்பரிதியை நாங்கள் நிறுத்தினோம்.அவர் ஏற்க்கனவே சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். முதிலியார் சாதியைச் சேர்ந்தவர். தனது சாதிக்காரரைத் தோற்கடித்தவன் என்ற கோபம் அண்ணாதுரைக்கு இருந்தது. எனவே,அவர் எங்களைப் புறக்கணித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று மாவட்டசெயலாளரானாலும் கூட, அலுவலகச் சாவியை அண்ணாதுரையின் ஆள் இளம்பரிதியிடம் கொடுக்கவில்லை. பொதுக்கூட்டம், பிரச்சாரம் நடத்துவதற்குத் தேவையான ஸ்பீக்கர் குழாயைக் கூட கொடுக்கவில்லை. அண்ணாதுரையிடம் புகார் செய்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. அவர் கடும் கோபமாக இருப்பது எங்களுக்குப் புரிந்தது.
1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தார்கள். அந்த பொதுக்குழுவில் ஆர்.டி.அரசு என்பவர் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அண்ணாவும் கருணாநிதியும் மார்டன் தியேட்டர்ஸ் சினிமா கம்பெனி கதைக்குழுவில் சேர்ந்திருந்தனர். புராணப்படங்ளுக்கும் கதைவசனம் எழுத ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்துத்தான் ஆர்.டி.அரசு தீர்மானம் கொண்டு வந்தார். “கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கட்சியைச் சேர்ந்தவர் எவரும் திரைப்படங்களிலோ, நாடகங்களிலோ கதை வசனம் எழுதக்கூடது” என்பதுதான் அந்த தீர்மானம். அப்போது அண்ணா அவரைப்பார்த்து “டே...உட்காருடா...இதெல்லாம் ஒரு தீர்மானமாடா... உட்காருடா அரசு” என்றார். ஆனாலும் அரசு விடாமல் “இல்லை அண்ணா..நாங்க கிராமத்திற்கு பிரச்சாரத்திற்குப் போகும்போது ஜனங்கள் அசிங்கமா பேசுறாங்க. உங்க கட்சி கொள்கை ஒன்னு, நீங்க செய்யறது ஒன்னான்னு கேள்வி கேட்குறாங்க. நாங்கதான் மழுப்பி பதில் சொல்ல வேண்டியிருக்கு. அதனால இந்த தீர்மானத்தை அண்ணா பரிசீலிக்கனும்னு கேட்டுக்கிறேன்”என்றார் அரசு. மீண்டும் அண்ணாதுரை “அதெல்லாம் சரிடா... இதையெல்லாம் தீர்மானமா போட முடியாதுடா..உட்காருடா...” என்று சொன்னார். அப்போது இளம்பரிதி, சென்னை மாவட்டச் செயலாளர் என்ற முறையில், “நான் கேட்டுக்கிறேன், அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம், தலை நகரத்தினுடைய தீர்மானம். அதற்கு மதிப்புக்கொடுத்து, அந்த தீர்மானத்தை ஏத்துக்கங்க” என்றார். உடனே அண்ணாதுரை “சென்னை உன் மிராசாடா” என்று இளம்பரிதியைப் பார்த்து கேட்டார். “இல்ல அண்ணா.. இது தலைநகரத்திலிருந்து வந்திருக்கும் தீர்மானம். கொஞ்சம் யோசித்துப்பாருங்க”என்றார் பரிதி. அதற்கு அண்ணாதுரை “சரிடா உட்காருடா... நீ வேற...சும்மா பேசிகிட்டிருக்கிற”என்றார் எரிச்சலாக. உடனே இளம்பரிதிக்கு கோபம் வந்துவிட்டது. “நான் தோழர் அண்ணாதுரையைக் கேட்கவில்லை. பொதுச்செயலாளர் பதில் சொல்லட்டும் என்றார். இதைச் சொன்னவுடனேயே உட்கட்சி தேர்தலில் அண்ணாதுரையால் நிறுத்தப்பட்டு, இளம்பரிதியால் தோற்க்கடிக்கப்பட்ட கண்ணபிரான் எழுந்து, “நாங்கள் இதயத்தில் தெய்வமாக வணங்குகின்ற அறிஞர் அண்ணாவை தோழர் என்று சொல்வதைக் கேட்க இந்த காதுகள் என்ன பாவம் செய்தனவோ” என்றார். அதோடு நிறுத்தவில்லை. எதை எங்கே வைக்கனுமோ அங்கேதான் வைக்கனும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால், அது வாலை ஆட்டிக்கொண்டு மலம் தின்னதான் போகும்”என்றார் கண்ணபிரான்.
இளம்பரிதிக்கு கோபம் அதிகரித்துவிட்டது. “என்னையாடா நாய் என்று சொல்கிறாய் நாயே? என் சாதிக்கு வரலாறு உண்டு; நாயே உன் சாதிக்கு வரலாறு உண்டா?” என்றார். கண்ணபிரான் முதலியார், அண்ணாதுரை முதலியார், நெடுஞ்செழியன் முதலியார், என்.வி.நடராசன் முதலியார், எல்லாம் முதலியார் சாதியைச் சார்ந்தவர்களின் மேலாதிக்கம் அப்போது இருந்தது. நான்கைந்து முறை நாயே நாயே என்று இளம்பரிதி பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மதுரை முத்துதான் சண்டியர். கட்சிக்கு அடியாளாக இருந்தவர். அவர் கையாள்களெல்லாம் திரண்டு, எங்களை தாக்க திட்டமிட்டார்கள். ஆனாலும் கலவரம் நடந்து விடக்கூடாது என்று எண்ணி நாங்கள் ஒவ்வொருவராக பொதுக்குழுவிலிருந்து வெளியேறினோம். அத்தோடு பொதுக்குழுவை முடித்து விட்டார்கள். பி..டி.அரசு முன்மொழிந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாளே, இளம்பரிதிக்கு ஒரு ‘ஷோ காஸ் நோட்டீஸ்’வந்தது. அதில் கட்சிக்கு விரோதமாக நீங்கள் நடந்து கொண்டதால், ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று நோட்டீஸ் வந்தது. நாங்களும் ஒரு வழக்கறிஞரைப் பார்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு ஒன்றரை வருடம் நடந்தது. இறுதியில் நீதிமன்றம் வழவழா தீர்ப்பை அளித்தது. இருவர் பேசியதும் தவறென்றது. எனவே, நாங்கள் இனிமேல் கட்சிக்குள் போகக்கூடாது என்று தனியாக ஒரு கட்சி தொடங்கினோம். அதற்கு ‘ஆதி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயர். அண்ணாதுரையை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். அண்ணாதுரை வீட்டின் முன்பே மாநாடு போட்டோம்.