New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சைவ சமயத்தில் தமிழ்மொழியும் வடமொழியும்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சைவ சமயத்தில் தமிழ்மொழியும் வடமொழியும்
Permalink  
 


சைவ சமயத்தில் தமிழ்மொழியும் வடமொழியும்

 
திருச்சிற்றம்பலம்


                            ஆரி யந்தமி ழோடிசை யானவன்
                            கூரி யகுணத் தார்குறி நின்றவன்
                            காரி கையுடை யான்கடம் பந்துறைச்
                            சீரியல் பத்தர் சென்றடை மின்களே
                                                                                                                                                         -                 -ஐந்தாம் திருமுறை - திருக்கடம்பந்துறை

சைவ சமயத்தில் தமிழ்மொழியும்  வடமொழியும் - கேள்வியும் பதிலும்

1)  
தமிழ்மொழி வடமொழி என்ற இருமொழிகளில்  எது  உயர்ந்தது?

இரண்டு கண்களில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது. இரண்டுமே உயர்ந்தது தானே.அது போலவே இவ்விரு மொழிகளும்  சைவர்களின் இரு கண்கள் போன்றன.இறைவன் அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள் வட மொழியில் உள்ளன. அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகள் மற்றும் பதினான்கு சாத்திரங்கள்  தென்தமிழில் உள்ளன.

        ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
        சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
        வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
        ஓதுகுறட் பாஉடைத் து - திருவள்ளுவமாலை

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால் இவ்
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ!
                    -காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலம்

மேற்கண்ட திருவள்ளுவமாலை மற்றும் காஞ்சி புராண பாடல்களின் படி இவ்விரு மொழிகளுமே சீரிய மொழிகள் என்றும் , இவ்விரு மொழிகளுக்கும் தலைவர் கண்ணுதல் கடவுளாகிய சிவபெருமான் என்பதும் தெளிவாகிறது.இவ்விரண்டில் எது தாழ்ந்தது எது உயர்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

2) 
வடமொழியை திருமுறைகள் போற்றுகிறதா? அதற்க்கு திருமுறையில் ஏதேனும் குறிப்பு உள்ளதா?
  
ஆம், வடமொழியை திருமுறைகள் போற்றுகின்றன.ஒன்றல்ல, இரண்டல்ல, நிறையவே குறிப்புகள்  இருக்கின்றன.பன்னிரு  திருமுறையில்  எண்ணிலடங்கா  வடமொழிச் சொற்கள் உள்ளன.மேலும் வடமொழி என்ற மொழியின் பெயராலேயே போற்றப்பட்டுள்ளது.

முதல் திருமுறை -  திருஅச்சிறுபாக்கம்
தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே

இரண்டாம் திருமுறை -  திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்

தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத்

மூன்றாம் திருமுறை  - திருஆலவாய்

மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா

ஐந்தாம் திருமுறை - திருக்கடம்பந்துறை

ஆரி யந்தமி ழோடிசை யானவன்

ஆறாம் திருமுறை - திருச்சிவபுரம்

வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்

ஆறாம் திருமுறை - திருமறைக்காடு

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

ஆறாம் திருமுறை- திருஆவடுதுறை

செந்தமிழோடு ஆரியனை சீரியானை

திருமந்திரம் - முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு  -


ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே

பதினொன்றாம் திருமுறை - திருத்தொண்டர் திருவந்தாதி

தொகுத்த வடமொழி தென்மொழி  யாதொன்று தோன்றியதே

பன்னிரண்டாம் திருமுறை - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப் பார்அளிப்பார் அரசாட்சி

பன்னிரண்டாம் திருமுறை - பரமனையே பாடுவார் புராணம்

தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன

மேற்கூறிய திருமுறைத் தொடர்களே வடமொழிக்கும் சைவ சமயத்திற்கும்  உள்ள தொடர்பினை விளக்கும்.

3) வடமொழி தமிழ்மொழி இவ்விரு மொழிகளையும் அருளியவர் யார்?
 

காலகாலனாகிய கண்ணுதல் கடவுள் சிவபெருமானே இருமொழிகளையும் அருளியவர்
 
திருமந்திரம் - முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு  -

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமி ழும் உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப  

-காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலம்


மேற்கூறிய பாடல்களின்படி , சர்வவியாபகராகிய சிவபெருமானே இவ்விருமொழிகளையும் அருளினார் என்பது தெளிவாகிறது.ஏனைய மொழிகள் மனிதனால் உருவாகப்பட்டவை.சிவபெருமானே இவ்விரு மொழிகளையும் அருளியுள்ளதால், சைவப்பெருமக்கள் இவ்விரு மொழிகளையும் தம் இரு கண்களாகப்  போற்றக் கடமைப் பட்டுள்ளனர்.

4) வடமொழி தமிழ்மொழி தவிர வேறு ஏதேனும் மொழிகள் திருமுறையில் போற்றபட்டுள்ளதா?

 வடமொழி தமிழ்மொழி தவிர வேறு எந்த  மொழியும் திருமுறையில் குறிப்பிடப்படவில்லை.
திருநெறிய தமிழ் திருமுறைகளால் போற்றப்பட்ட உயர்தனிச்  செம்மொழிகள் இவ்விரு மொழிகளுமாகும்.


5) தென்தமிழில் தமிழர்களுக்காக அருளப்பட்ட திருமுறைகளில் ஏன் வடமொழி போற்றப்படுகிறது?

திருநெறிய தமிழாகிய திருமுறைகள்  சிவபெருமான் அருளிய  வேத ஆகமங்களை போற்றுகிறது.வேத வேள்வியை போற்றுகிறது.வேதஆகமங்கள் மற்றும்  பல்வேறு புராணங்கள்  வடமொழியிலேயே  உள்ளன.
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் " என்று  சுந்தரர் பெருமான் அருளுவார்,நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தப் பெருமானே தமிழ் வடமொழி என்ற இரண்டையும் ஒருங்கே போற்றியிருத்தலே  சைவம், தமிழ், வடமொழி இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு  நன்கு விளங்கும்.இந்த தொடர்பினை யாராலும் பிரிக்க முடியாது.


6)
இன்று சிலர் வடமொழியை இறந்த மொழி, பயனற்ற மொழி என்று பழிக்கிறார்களே? இது சரியா?


சைவசமயத்தில் நம்பிக்கையற்ற  மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள்  தான் அவ்வாறு பழிப்பார்கள்.அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

7) 
சைவவேடம் பூண்டு திருநெறிய தமிழாகிய திருமுறையை போற்றுபவர்களே, வடமொழியை இறந்த மொழி, பயனற்ற மொழி என்று கூறுகிறார்களே?
  
சிவ! சிவ! இது கலியின் கொடுமை என்று தான் கூற வேண்டும்.வேலியே  பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது.

"வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்" என்பது அப்பர் தேவாரம். தமிழ்மொழி வடமொழி என்ற  இரண்டில் எதை நிந்தித்தாலும் அது நம் ஈசனையே நிந்தித்ததற்கு   சமமாகும்.சமய குரவர்களை தம் தலைவர்களாக கொண்டு,  அவர்கள் தம் வாக்கினுக்கு கட்டுப்பட்டு சைவப்பணியாற்றும்  உண்மைச் சைவர்கள் இதுபோல் நிந்திக்க மாட்டார்கள்.

8)
சிலர் "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்று கூறி, எங்களுக்கு தமிழ் மொழியே போதும் வடமொழி தேவையற்றது  என்கிறார்களே? 
  
கனியிருப்ப காய்கவர்ந்தற்று என்று ஸ்ரீமத் சிவஞானவாமிகள் வடமொழியை ஒதுக்கவில்லையே.
வடமொழியை முழுமையாகக் கற்று வேதஆகமங்களின் பெருமையை தன் சிவஞானமாபாடியத்தில் மிகச் சிறப்பாக அருளியிருக்கிறார்.சித்தாந்தசைவத்தின்  பொக்கிஷமாக  சிவஞானமாபாடியம் திகழ்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கனியிருப்ப காய்கவர்ந்தற்று என்று ஸ்ரீபரஞ்சோதியார் வடமொழியை ஒதுக்கியிருந்தால் நமக்கு திருவிளையாடற்புராணம் என்ற நூல் கிடைத்திருக்குமா?

கனியிருப்ப காய்கவர்ந்தற்று என்று ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார்  வடமொழியை ஒதுக்கியிருந்தால் நமக்கு கந்தபுராணம் என்ற நூல் கிடைத்திருக்குமா? 


சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் உடைய நம் திருமுறை ஆசிரியர்கள் கூட  "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்று கூறி வடமொழியை ஒதுக்கவில்லையே.திருநெறிய தமிழில் திருமுறையை அருளிய நம் பெருமக்கள், எங்கும் வடமொழியை நிந்திக்க வில்லையே, போற்றித் தானே புகழ்ந்துள்ளனர்.

கனியிருப்ப காய்கவர்ந்தற்று என்று இக்காலத்தில் உள்ள சில நவீன ஞானிகளுக்குத் தான் தோன்றியுள்ளது போலும்.நம் திருமுறை ஆசிரியர்கள்   கருத்து அதுவன்று என சைவர்கள் உணர வேண்டும்.

9)இன்று சிலர் "அர்ச்சனை" என்ற சொல் வடமொழி என்றும் அதனை "அருட்சுனை" எனக்  கூறலாம் என்று புதிய சொற்களை படைக்கிறார்களே. அர்ச்சனை என்ற சொல் திருமுறையில் வருகிறதா?

அர்ச்சனை என்ற சொல் திருமுறை ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்ட சொல். திருமுறைகளில்  பல இடங்களில் அர்ச்சனை என்ற சொல் வருகிறது. திருமுறையில் பயன்படுத்தப்பட்ட சொற்களை மாற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறு செய்ய முற்படுதல், திருமுறை ஆசிரியர்க்கும், திருநெறிய தமிழிற்கும் , சைவ சமயத்திற்கும் செய்யும் துரோகம் என உணர  வேண்டும்.

இதோ அர்ச்சனை என்ற சொல் வரும் பெரியபுராண குறிப்புகள்.


பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம் அருமுனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது ,  இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின்  இயல்பினால்உனை அர்ச்சனை புரிய , அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்  

அர்ச்சனை" என்ற சொல்லைப் போல்,  பன்னிரு திருமுறையில் பல   வடமொழிச் சொற்கள்  எண்ணிலடங்கா  இடங்களில் கையாளப்பட்டுள்ளது. திருமுறை ஆசிரியர்களை விட இந்த நவீன அருட்சுனைஞர்களுக்கு  உவமையிலா கலைஞானமும், உணர்வரிய மெய்ஞானமும்  கிடைத்துவிட்டதோ என்னவோ! 

தமிழ்ப் பற்று என்ற பெயரில் திருநெறிய தமிழுக்கும் சைவத்திற்கும் இவர்கள் போன்றோர் செய்யும் துரோகத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.



10)
தமிழ்நாட்டில் ஏன் வடமொழி? அனைத்தும் தமிழில் தான் செய்ய வேண்டும்  என்று சிலர் கூறுகின்றார்களே?  தகுந்த ஆதரங்களுடன் அதனை மறுக்கும் உண்மைச் சைவர்களை  தமிழ்த்  துரோகிகள் என்கிறார்களே?

வடநாட்டில் அருந்தமிழின் வழக்கு நிகழாததால் வடநாட்டுத் தலங்களை தமிழ்நாட்டு எல்லையிலே இருந்தே பதிகம் பாடி வணங்கிய, நம் முத்தமிழ் விரகர், அருந்தமிழாகரர் திருஞானசம்பந்தப்  பெருமான், தன்னுடைய அருந்தமிழ் மாலைகளில் ஏன்  வடமொழியை பற்றி குறிப்பிடவேண்டும்?அருள்ஞானப் பாலுண்ட நம் தோணிபுரத்தோன்றலாரை  விடவா நாம் தமிழ் பற்றில் உயர்ந்துவிடப்போகிறோம்
 
 தமிழ்நாட்டில் ஏன் வடமொழி?  திருநெறிய தமிழில் ஏன் வடமொழி பெயரும்? வடமொழிச்  சொற்களும்? என்று நம் தவமுதல்வர் சம்பந்தர் நினைக்கவில்லையே! ஏனைய திருமுறை ஆசிரியர்களும் நினைக்கவில்லையே?

தமிழ் மொழியும் வடமொழியும் இரு கண்கள் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக பின்பற்றி வரும் மரபினை கூறுபவர்கள்   தமிழ் துரோகிகளா?  யார் துரோகிகள் என்பதை ஈசனார் அறிவார்.

மனிதர்களை ஏமாற்றலாம்.ஆனால் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதியை ஏமாற்ற முடியாது.

இத்துணை உணர்ச்சிவசப்படும் இவர்கள் , தமிழ்நாட்டில் ஏன் ஆங்கிலம்? என்று கேட்பதில்லை.
அவர்கள் குழந்தைகள் பள்ளிகல்வியை ஏன்  தமிழ் வழியில் பயிலுவதில்லை? 
வருடத்திர்க்கு   ஆயிரக்கணக்கில் செலவழித்து ஏன் ஆங்கில வழிகல்வியை பயில வேண்டும்?
இவ்வாறெல்லாம் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்துவது  மட்டும் தமிழுக்கு செய்யும் திருப்பணியோ?
தமிழ் தமிழ் என்று அரசியல் செய்த காலம் போய்,  தமிழ் தமிழ் என்று சைவத்திலும் குழப்பத்தை உருவாக்கி ஆதாயம் தேடுபவர்கள்   பெருகி வருகின்றனர்.இக்குழப்பம் வைணவத்தில் கிடையாது.சைவசித்தாந்தம் கூறும் அகச்சமயங்களுள்  எந்த சமயத்திலும்  இக்குழப்பம்  கிடையாது என்பதை சைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமுறைகளுக்கு முரண்பட்டு வேறு உள்நோக்கத்தோடு புரட்சிகர சைவவிரோத கருத்துக்களை தெரிவிக்கும் நவீன குருமார்களிடம் மயங்கி விடாது, நம் சமயக் குரவர், சந்தான குரவர் மற்றும் திருமுறை ஆசிரியர்கள் வாக்கின் வழியில் நிற்றலே பரசிவத்தின் ஆணை என்று உணர்ந்து சைவப்பெருமக்கள் பணியாற்றவேண்டும்



     தொகுத்த வடமொழி தென்மொழி  யாதொன்று தோன்றியதே
     மிகுத்த யலிசை வல்ல வகையில் விண் தோயுநெற்றி
     வகுத்த மதில்தில்லை ம்பலத்தான்மலர்ப் பாதங்கள்மேல்
     உகுத்த மனத்தொடும் பாடவல்லோரென்பர் த்தமரே
                                                                                                                   
       - பதினொன்றாம் திருமுறை - திருத்தொண்டர் திருவந்தாதி

                                                      திருச்சிற்றம்பலம்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard