New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு குமரகுருபரர் இதழ் - தலையங்கம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு குமரகுருபரர் இதழ் - தலையங்கம்
Permalink  
 


தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு

 

 

குமரகுருபரர் இதழ் - தலையங்கம்



சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன.இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.“வேதத்தில் உள்ளது நீறு”,  “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர். 

“அனுச யப்பட் டதுஇது வென்னாதே 
  கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
  புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார் 
  மனித ரில்தலை யான மனிதரே.”
     - திருநாவுக்கரசர். 
கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூல்”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை.நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா?எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை.வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது.சிந்தித்து தெளிந்தார்க்கு பாராயணம் செய்யவேண்டிய திருமுறைகளைத் தொடர்ந்து தந்துள்ளோம். நாள்தோறும் அதனைப் பாராயாணம் செய்யுங்கள். ஒல்லும் வகையில் பிறரையும் அந்நெறியில் ஆற்றுப்படுத்துங்கள். வேண்டுவோர்க்கு இம்மையே நன்மைதரும் திருமுறைத் திருப்பதிகங்கள் அனுப்பப்பெறும்.
பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

1156வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.1
1157.வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வமுடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.2
1158.மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.3
1159.அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.4
1160.அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.5
1161.வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.6
1162.அழல தோம்பும் அருமறை யோர்திறம்
விழல தென்னும் அருகர் திறத்திறங்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.7
1163.நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.8
1164.நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.9
1165.அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
3.108.10
1166.கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
3.108.11


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard