WRITTEN by London Swaminathan Date: 11 November 2016 Time uploaded in London: 20-18 Post No.3344
Pictures are taken from various sources; they are representational only; thanks. contact; swami_48@yahoo.com
வரி விதிப்பது எப்படி? மனு, காளிதாசன், வள்ளுவன் அணுகுமுறை
வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர். இவர்களில் மனு சொல்லும் விஷயஙகள் வியப்பைத் தரும் முதலில் அதைக் காண்போம்:-
மனுதர்ம சாத்திரத்தில் ஏழாவது அத்தியாயத்தில் சொல்கிறார்:-
ஒரு அரசன் பசியினால் இறந்து போக நேரிட்டாலும், வேதத்தை மனப்பாடமாக வைத்திருக்கும் பிராமணனிடத்தில் வரி வாங்கக்கூடாது. அவர்களைப் பசியினால் வாடவிடக்கூடாது (7-133)
வேதம் அறிந்த பார்ப்பான் பசியினால் மயக்கமடைந்து விழுந்தால் அந்த அரசாட்சியும் வீழும் (7-134)
இதைப் பார்த்தவுடன் பலரும் இது நியாயமில்லாத ஒரு விதி என்று எண்ணலாம். ஆனால் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை), தேவதானம் (கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை) ஆகிய அனைத்தையும் இறையிலி (வரியற்ற) நிலங்களாகவே அறிவிக்கின்றன. ஆக, தமிழ் மன்னர்கள் மனு நீதியைப் பின்பற்றியது தெளிவு.
இப்போது இந்த இடத்தில் பிராமணர்கள் என்பதற்குப் பதிலாக அறிஞர்கள் என்று போட்டுவிட்டால் பொருள் நன்கு விளங்கும். அதாவது புத்தியுடையோர், அறிவாளிகள் வறுமையில் வாடக்கூடாது என்பதே பொருள். நிறைய சம்பாதிக்கும் அறிஞர்கள் இதில் வாரார். பிராமணர்கள் மூன்று நாட்களுக்கு மேலான செல்வம் வைத்திருக்கக்கூடாது என்பது விதி. எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுதானம் செய்து பொருள் பெற வேண்டும் என்பதற்கே இந்த விதி!
அட்டை போல உறிஞ்சு!
மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.
ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)
அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.
அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப்பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.
பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.
வள்ளுவன் சொல்லுவான்:
அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு (குறள் 552)
பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.
காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-
ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்
சதாப்யோ பலிமக்ரஹீத்
சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்
ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)
சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும் உதவுவது போல அரசனும் உதவுவான்.