New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொன்மையான குடிமல்லம் லிங்கம்-2400 ஆண்டுகள் பழமையானது


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தொன்மையான குடிமல்லம் லிங்கம்-2400 ஆண்டுகள் பழமையானது
Permalink  
 


தொன்மையான குடிமல்லம் லிங்கம்-2400 ஆண்டுகள் பழமையானது

 
2400  ஆண்டுகள் பழமையான  குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கம்
குடிமல்லம் லிங்கம்.- ஆங்கரை கிருஷ்ணன்.   avgkrishnan@gmail.com
Click the image to open in full size.
    உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்                                                     2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.
நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.
 
Click the image to open in full size. Click the image to open in full size. 
Click the image to open in full size.
Click the image to open in full size.GUDIMALLAM-VIGRAHAM.jpgSREE+PARUSURAMESWARA+SWAMY+TEMPLE-HISTOR  
குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.
தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!
DSC05296.JPG DSC05298.JPG
கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.
   இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார். முதலாம் ராஜராஜசோழனால் இக்கோவிலில், விளக்கு எரிக்கவும், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கிணறு அமைக்கவும் தானம் அளிக்கப்பட்டது. விக்கிரம சோழன் காலத்தில் இக்கோவில் திருப்பணி செய்யப் பெற்று மீண்டும் கட்டப்பட்டன என்பதை அறிய முடிகிறது. கருவறையில் மிகவும் அற்புதமான சிவலிங்க வடிவம் வழிபடப் பெறுவதைக் காணலாம்.
அருகிலுள்ள திருப்பதி மலைத்தொடரில் காணப்படும் மிக மென்மையான சிவப்பு நிற எரிமலைக் கல்லால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லினைப் பளபளப்பாக மெருகேற்றி, மூலஸ்தானத்தில் தரையில் எழுச்சியுற்றுக் காணப்படும் பாறையைக் செவ்வக வடிவில் செதுக்கி, நடுவில் குழிவாகக் குடைந்து பிண்டிகையை (பீடத்தை) உருவாக்கியுள்ளது. லிங்கம் இப்பிண்டிகையில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த லிங்கம் 5 அடி உயரமுள்ளது.
லிங்கம் மேலே சற்று விட்டு 7கோணமாக செதுக்கப்பட்டு, முன்புறப் ப்குதியில் சிவபெருமானின் அழகிய உருவம் செதுக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் மனித உருவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள்.  வலது கரத்தில் உயிரற்ற ஆட்டினை தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது கரத்தில் வாய் குறுகிய குடுவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது தோளின் மீது `பரசு’ எனும் கோடரியை சாய்த்து வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் காணலாம். சிவனது தலை முடியமைப்பு சடையாக இன்றி நீண்ட புரி குழல்களாலான கற்றைகளாக உள்ளது. இக்குழற்  கற்றைகளையே, தலையைச் சுற்றிலும் தலைப்பாகை அணிவது போல் அலங்கதித்துக் கொண்டுள்ளார்.
கன்னக் கதுப்பெலும்புகள் உயர்ந்தும், மூக்கு சற்றே சப்பையாகவும், நெற்றி குறுகலாகவும், கண்கள் சற்றே பிதுங்கியும் அமைந்துள்ளது. கண்கள் சற்றே சரிந்து பார்க்கிறது. இது வேத றியில் “விருபாக்ஷன்” எனும் சிவநாமத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சிவனின் காதுகள் துளையிடப்பட்டுள்ள வடிகாதுகளாக, தோள்களைத் தொடும் வகையில் தொங்குகின்றன.
அத்துளைகளில் குண்டலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும், முழங்கைக்கு மேலே அங்கதா எனப்படும் அழகிய தோள்வளைகளும் மணிகட்டுக்கு மெலே பல வடிவங்களில் செய்யப் பட்ட ஐந்து ஐந்து வளையலகளும் அணிந்துள்ளார். சிற்பத்தை நுணுக்கமாக நோக்கினால், சிவன்  மிக மெல்லியதான நெய்யப்பட்ட இடையாடைஉடுத்தியுள்ளது தெரியும். ஆயினும் உள்ளுருப்புகள் தெரிவதாக உள்ளது, ஆனால் தினசரி பூஜையில் மேலாடை சார்த்தியே தரிசனம் தரப்படும்.
தலையில் ஜடாபாரமாக முடி அலங்காரம். காதுகளில் பத்ர குண்டலங்கள். மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். சிவன் அபஸ்மார புருஷனின் அல்லது அரக்கனின் தோள்கள் மீது தன் கால்களை விரித்து ஊன்றி நிற்கிறார். கூன் விழுந்து குறுகிக் காட்சியளிக்கும்  அபஸ்மார புருஷனோ, தன்னுடைய கால்களுக்கருகில் கைகளை ஊன்றி அமர்ந்துள்ளான். அவருடைய காலின் கீழே யக்ஷன் காலை மடக்கி அமர்ந்து, குனிந்த நிலையில் இறைவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தலைமுடி ஜடாமகுடம் போலவும், கழுத்தில் மணிமாலையும் காட்சியளிக்கின்றன. குள்ளமான தடித்த உடலுடன் காணப்படும் இவனுடைய காதுகள் படர்ந்து கூர்மையாகவும் உள்ளது. இருப்பினும் இவனது முகத்தில் ஒருவித இளிப்பு காணப்படுவதால் இவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான் எனத் தெரிகிறது.
நின்ற உருவத்திற்கு மேல் சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம். பின்புறம் பட்டையான வடிவமைப்பு காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கு பொதுவாக அடிப்பகுதியில் ஆவுடையார் காண்பிக்கப் பெறும். இக்கோவிலில், சிவலிங்க வடிவத்தின் சதுரவடிவமான கீழ்பகுதி (பிரம்மபாகம்) வட்டக்கற்களால் ஆன பீடத்தில் சொருகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு `அர்க்கபீடம்’ என்பது பெயர். கருவறையின் மேல் உள்ள விமானத்தின் பின்பகுதி அரைவட்டமாக உள்ளது. இதுவும் லிங்க வடிவமாக காட்சி அளிப்பதால், `லிங்க கீர்த்தி விமானம்’ என அழைக்கின்றனர்.
கருவறையில் வழிபடப்பெறும் சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையான வடிவமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலைச் சீரமைக்கும்போது கோவிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவில் பிற்கால பல்லவர் காலம் முதல் கி.பி., 14ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அடைந்து வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆய்வின்போது சிவப்பு வண்ண பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், கறுப்பு – சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் லிங்கத்தைச் சுற்றி வேலைப்பாடு மிக்க கருங்கற்களால்ஆன வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை `சிலா வேதிகலிங்கம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இங்கு நடைபெற்ற ஆய்வின் போது கிடைத்த தொல் பொருட்கள், மண் அடுக்குகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது குடிமல்லம் கோவிலில் காணப்படும் சிவனது வடிவம் கி.மு., 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், மிகவும் தொன்மையான வடிவம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சைவ சமயத்தில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம் என்ற பிரிவுகள் உண்டு.`பாசுபதம்’ தொன்மையான வழிபாடாகும். குடிமல்லம் கோவிலில் காணப்படும் வடிவத்தின் வழிபாடு பாசுபத சித்தாந்த வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.

குடிமல்லம் லிங்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள சிவன் உருவத்திற்கும் – சாஞ்சி ஸ்தூபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள யஷன் உருவத்திற்கும் மிக நெருக்கமான உருவ ஒற்றுமை உள்ளதை அறிஞர் பெருமக்களும் ஏற்கின்றனர். முகம், காதுகள், தோள்கள் ஆகியனவற்றில் மட்டுமின்றி – காதணிகள், கையணிகள், கழுத்து மாலை ஆகிய அணிகலன்களின் வேலைப்பாடு, உடை உடித்தியிருக்கும் பாங்கு குறிப்பாகக் குஞ்சம் போன்ற மடிப்புகள் கால்களுக்கு இடையில் கட்டப்பட்டுருக்கும் விதம் ஆகிய இத்தனை அம்சங்களிலும் இவ்விரு உருவங்களும் ஒரே மாதிரியில் அமைந்துள்ளன. கி.மு., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜெயினியில் கிடைத்த தாமிர காசுகளில் குடிமல்ல லிங்க உருவம் உள்ளது.

இக்கோயில் பற்றிய ஒரு அதிசய நிகழ்வு உள்ளூர் மக்கள் கூறுவது: 60 ண்டுகட்கு ஒருமுறை பரசுராமேஷ்வரர் உள்ள கருவறையுள் வெள்ள நீர் நிறைந்து அடுத்த நாள் வடிவது. டிசம்பர்-4, 2005 அன்று நீர் வந்து சில நிமிடங்களில் வடிந்ததாம். 1995ல் இது போல் நிகழ்வு இருந்ததாக உள்ளூரின் பெரியவர்கள் மூலம் அறியலாம். நிலத்தடி நீர் 300அடிக்கு கீழ் இருக்க இது அதிசயம் என் அகழ்வுத்துறையும் ஏற்கிறது.

லிங்கத்தில் உள்ள சிவன் வடிவில் கோடரி எனும் பரசு உள்ளமையால் இவர் பரசுராமேஷ்வரர் எனப்படுகிறார். வேதங்களின் உருத்திரன் எனும்படி வேடனுருவில் சிவனுள்ளதால் வைதிகலிஙம் என்கின்றனர். இன்னுமொரு சாரார் கூறும் கதை- தன் தந்தை ஜமதக்னி முனிவர் ஆணைப்படி தன் தாயைக் கொன்ற பரசுராமர், அப்பாவம் நீங்க இங்கே வந்து தவம் செய்திட, அருகிலுள்ள சுனையில் தினம் ஒரு பூ மட்டும் மலரும், அதற்கு காவலாக சித்திரசேனன் எனும் யக்ஷ்னை நியமித்தார். பிரம்மாவின் பக்தானான சித்திரசேனன் ஒரு நாள் வலில் தானே வேட்டைக்கு பரசுராமர் சென்று இருந்தபோது தானெ மலரைக் கொய்து பூஜை செய்திட, விபரமறிந்த பரசுராமர் போர் தொடுக்க, 14 ஆண்டுகள் போர் நட்ந்தும் யாருக்கும் வெற்றி இல்லை, சிவபெருமான் இருவரையும் தன்னும் ஏற்றுக் கொண்டார். மூல லிங்கம் -சிவன்; பரசுராமர்- விஷ்ணு அவதாரம், யஷன் பிரம்மாவினம்சம்- எனவே மும்மூர்த்திகளும் உள்ள லிங்கமும் கும்.

லிங்கம் தரையை விட பள்ளத்தில் உள்ளது. தெலுங்கு மொழியில் குடி எனில் கோவில்; பள்ளத்தில் குடி கொண்டுள்ளதால் குடிபள்ளம். கல்வெட்டுகளில் இக்கோவில் விப்பிரமேடு என அழைக்கப்பட்டுள்ளது. சாதவாகனர்களின் காலத்தின் பல பொருட்கள் (வ.கா.1-2 நூற்றாண்டு) புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. மதுரா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பத்தில் முதல் நுற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் போல் செதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தென் நாட்டின் உருவம் வடநாடு செல்ல ஓரிரு நூற்றாண்டுகள் நிச்சயம் ஆகும் என்கையில் குடிமல்லம் சிவலிங்கம் வ.கா.மு.500 வாக்கிலானது என பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.

பழமையான சிவ லிங்க வடிவங்கள் - குடிமல்லம்

http://poetryinstone.in/lang/ta/2013/03/06/iconography-of-an-early-siva-lingam-gudimallam.html
 
டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு நானும் அரவிந்தும் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டோம். கார் போன போக்கில் சென்ற எங்களுக்கு பல சிதிலமடைந்த கோயில்கள் சோர்வூட்டின. அப்படி பல பக்தி ஷேத்ராடனங்களின் வரைபடத்தில் கூட இல்லாத கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மூவர் கோயில் அருகில் இருக்கும் முசுகுந்தன் கோயில். செழுமையான பச்சை வயல்களுக்கு நடுவில் அமைந்த ஒரு அமைதியான கிராம சூழலில், அரை அடி ஆழ சேற்றில் முட்டி வரை இறங்கி கடினப்பட்டு சிற்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு தூண் மண்டபத்தை அடைந்தோம். இதற்கா இவ்வளவு சிரமப்பட்டோம் என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றோம். அந்த தூண்களின் வகைபடுத்தல், யாரோ சிக்கலான ஒரு புதிரை சேர்க்க முயற்சி செய்தது போல வெவ்வேறு கால, இடம் , பாணி என்று பல வித்தியாசமான தூண்களை ஒன்று சேர்த்து அமைத்திருப்பது புரிந்தது.
உள்ளே கருவறையானது இருட்டாகவும் ஈரமாகவும், எலிகள் நிறைந்தும் இருந்தது. அத்துடன் புகைப்பட கருவியின் ப்ளாஷ் தேவையான ஒளியை தர இயலவில்லை. இது போன்ற வசதியற்ற சூழலிலும், வெற்று வயிறிலும் என்னடா இப்படி புகைப்படம் எடுக்க கூட முடியவில்லையே என்று இப்படி அப்படி காமெராவை காட்டி கிளிக் செய்தபோது - அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியை ஒளியேற்றியது. பார்ப்பதற்கு கனமான தூண் போன்ற ஒன்று ஒரு மணல் மூட்டையின் மீது இருப்பதாக புகைப்பட கருவியில் தெரிந்தது. மீண்டும் அருகில் சென்று இருட்டில் காமெராவை காட்டி படம் எடுத்தால் அங்கே..
muchukunda_linga
அங்கு வீற்றிருப்பது. பிரம்மாண்டமான ஒரு சிவலிங்கம்.
linga_muchukunda
size
மேன்மை ஸ்தபதி ஸ்ரீ உமாபதி ஆச்சார்யாவை அப்போது தான் சந்தித்து எனது அறியாமையால் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் “அவரை பொறுத்த வரை சிற்ப வேலையில் எந்த உருவம் மிகவும் கடினமானது என்று”. உடனடியாக சற்றும் எதிர்பாராத பதில் வந்தது = “சிவலிங்கம்”. அவர் அப்போது தான் சிவலிங்க படிமவியலில் (Iconography) இரண்டு நாட்கள் அமர்வு நடத்தியதாக தெரிவித்தார். அவர் எங்களை கிண்டல் செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. சாதாரணமான ஒரு சிவலிங்கம் செய்வதில் என்ன சிரமம் இருக்க போகிறது! இந்த “சாதரணமான” உருவத்தின் மீது ஒரு பதிவை எழுதுவதற்கான துணிவை திரட்டி முடிவெடுக்க எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது.
முதலில் ஹிந்து படிமவியலில் சர்ச்சைக்குரிய பாடம் இது என்பதால் நான் சிறிது துணிந்தும் கவனமாகவும் எழுத வேண்டியதாக இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது தென்மேற்கு ஆசிய நாடுகளில் - அதாவது மத்திய வியெட்னாம், கம்போடியா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த உருவத்தில் அப்படி என்ன சிறப்பு? அதுவும் 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே இவை அங்கு பரவ காரணம் என்ன ! என்ன நம்ப முடியவில்லையா?
நான்கு அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் அந்த கற்தூண்? அருகில் சென்று நோக்கினால் தெரிகிறது - இது தூண் இல்லை சிவலிங்கம் என்றும், இந்த இடம் இந்திய அருங்காட்சியகம் இல்லை - ஹோ சீ மின்ஹ் , வியெட்னாம் அருங்காட்சியகத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டு “பு நான்” காலத்தியது.
linga_vietnam
இது சிவலிங்கம் போன்று வியெட்னாமில் இருக்கும் ஒரு உருவம் அல்ல. ஆகம சாஸ்திரத்தின்படியும் படிமவியல் சட்டப்படியும், துல்லியமாக செதுக்கப்பட்ட சிவலிங்கமே. இங்கு நாம் பார்க்கும் லிங்கம் நம் ஊரில் கோவில்களில் உள்ள லிங்கம் போலவே ஆவுடை எனும் பீடத்துடன் தான் இருக்கிறது. மேலும், லிங்கத்தில் மூன்று பாகங்கள் இருக்கிறது. சதுரமாக இருக்கும் அடிப்பாகம் ப்ரஹ்ம பாகதயும், நடுவில் இருக்கும் எண்கோணமான பகுதி விஷ்ணு பாகத்தையும், உருளையாக இருக்கும் மேல் பகுதி ருத்ர பாகத்தையும் குறிக்கிறது. கீழே வட்டமாகவும் மேலே முட்டை வடிவத்திலும், நடுவில் துளையுடனும் இருக்கும் ஆவுடையுடன் சேர்க்கும் பொது ப்ரஹ்ம பாகம் ஆவுடையின் கீழேயும், விஷ்ணு பாகம் ஆவுடையின் உள்ளேயும், ருத்ர பாகம் ஆவுடையின் மேலே பார்க்க கூடிய வகையிலும் இருக்கும். இதன் அளவு, விகிதம் மற்றும் ப்ரஹ்ம சூத்திரத்தின் வரிகள் எழுதபட்டிருக்கும் நுணுக்கங்களைஆய்வு செய்ய சுவாரசியமாக இருக்கும் போதிலும், இந்த லிங்கத்தின் ப்ரஹ்ம பாகத்தின் மேலே ஒரு முகம் செதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற லிங்கங்கள் முகலிங்கம் என்பார்கள். பொதுவாக வட இந்தியாவில் இதை போல வடிவங்களை நாம் பார்க்க இயலும் ( ஆனால் அங்கே முகம் இன்னும் பெரிதாக இருக்கும் ), வட ஆந்திராவில் பஞ்ச ஆராம லிங்கங்கள் இப்படிப்பட்டவைதான் (சாமல்கோட், திராட்சாராமம், பீமாவரம், அமராவதி போன்ற தலங்கள்)
இந்து படிமவியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முதன்மை நூலாய் இருக்கும் திரு கோபிநாத் ராவ் அவர்களின் Elements of Hindu Iconography நூலிலிருந்து இந்த அறிய உருவத்தையும், அணிகலன்களை பற்றியும் வடிவமைப்பை பற்றியும் ஆராய சில படங்களை உபயோக படுத்துகிறேன்.
ornamentation_gopinath_rao
.
 
guimallam_linga
reverse
அந்த தண்டு ஏன் ஏழு பட்டைகளை கொண்டுள்ளது என்பதும் நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய ஒன்றே.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தொன்மையான குடிமல்லம் லிங்கம்-2400 ஆண்டுகள் பழமையானது
Permalink  
 


குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

மூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.
2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.

இந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது. 

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், எர்பேடு மண்டல் பின் கோட் 517526 இல் அமைந்துள்ள குடிமல்லம் (గుడిమల్లం) ஓர் அசாதாரணக் கிராமமாகும். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பித்தாபுரம் மண்டலில் அமைந்துள்ள மல்லம் கிராமத்தையோ அல்லது எஸ்.பி.எஸ்.ஆர். நெல்லூர் மாவட்டம், சித்தாமூர் மண்டலில் அமைந்துள்ள மல்லம் (நெல்லூர்) கிராமத்தையோ குடிமல்லம் கிராமத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். இவ்வூர் இராயலசீமா பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13.5736°N அட்சரேகை 79.5403°E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 80 மீ. ஆகும். பாப்பாநாயுடுபேட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ஏர்பேடு கிராமத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், ரேணிகுண்டாவிலிருந்து 8.3 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 17.8 கி.மீ. தொலைவிலும், திருச்சானூர் 18.9 கி.மீ. தொலைவிலும், நாரயணவனத்திலிருந்து 20.1 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 20.8 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 54.4 கி.மீ. தொலைவிலும், சித்தூரிலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 137 கி.மீ. தொலைவிலும், பாண்டிசேரியிலிருந்து 186.7 கி.மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 228.3 கி.மீ. தொலைவிலும், ஹைதராபாத்திலிருந்து 438.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2071 (ஆண்கள்  1025, பெண்கள் 1046, மொத்த வீடுகள் 552) ஆகும்.

திருப்பதியிலிருந்து எப்போதாவது இவ்வூருக்குப் பஸ்கள் சென்று வருவதுண்டு. ரேணிகுண்டா இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ ரிக்ஷா அமர்த்திக் கொள்ளலாம். சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலை வழியே பயணம் செய்தால் வரண்ட சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. கோவில் நுழைவாயில் மொட்டைக் கோபுரமாகக் காணப்படுகிறது. எப்போதாவது வரும் பக்தர்களைத் தவிர கோவில் ஆளரவமற்றுக் காணப்படுகிறது.

கட்டிடக்கலை 

பழங்காலத்துக் கோவிலான பரமேஸ்வரர் (சிவன்) கோவில் குடிமல்லத்தில் அமைந்துள்ளதால், இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.  இக்கோவிலின் மூலவரான பரசுராமேஸ்வரர் உலகிலேயே தொடர்ந்து வழிபடப்பட்டுவரும்  சிவலிங்கம் என்றும் பரசுரமேஸ்வரர் கோவில் 2200 ஆண்டுகள் பழையானது என்றும் கற்றறிந்த வரலாற்று அறிஞர்கள், சில சான்றுகளின் அடிப்படையில், கருதுகிறார்கள்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூலவர் விமானம் தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட / ஹஸ்திபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது. கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம் ஆகிய இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பினைக் குறிக்கின்றன. அதாவது விமானத்தின் பின்புறம் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது. இந்த விமானச் சுவற்றின் நடுவில் வெற்றிடம் உள்ளது.

பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த விமானத்தின் பிரஸ்தாரம், சிகரம், கிரீவம் (கண்டம்) மற்றும் ஸ்தூபி ஆகிய மேல்கட்டுமான (organs of super-structure) உறுப்புகள் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுச் சுதை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் அதிஷ்டானத்திலிருந்து பிரஸ்தாரம் வரை கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது .  பிரதிவரிபந்த வகையைச் சார்ந்த இந்த விமானத்தின் தளத்தை உபானம், ஜகதி, உருள் குமுதம் ஆகிய உறுப்புகள் அலங்கரிக்கின்றன. விமானத்தின் வெளிப்புறச் சுவர்களை அரைத் தூண்களின் உதவி கொண்டு பத்திகளாகப் பிரித்து அமைத்துள்ளனர். சுவரின் பத்திகளின் தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் அமைக்கப்பட்ட தேவகோஷ்டங்களில் விநாயகர், விஷ்ணு, பிரம்மா ஆகிய கோஷ்ட தெய்வ சன்னதிகளைக் காணலாம். செங்கல் மற்றும் சுதையால் கட்டப்பட்ட ஏகதள விமானத்தின் மேல்கட்டுமானத்தில் ஆரச்சுவர்களுடன் கஜபிருஷ்ட சால சிகரம் இடம் பெற்றுள்ளது.  சிகரத்திற்கு மேலே மூன்று வெண்கல ஸ்தூபிகள் அழகு செய்கின்றன.

இந்த வகை விமான வடிவமைப்பு பெளத்த சைத்திய வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகச் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வடிவமைப்பு பான் இந்தியப் பாரம்பரியத்திலிருந்து (Pan- Indian Tradition) உருவெடுத்ததாகவும் ஒரு சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். கஜபிருஷ்ட  வடிவில் அமைந்துள்ள சாஞ்சியில் அமைந்துள்ள 18 ஆம் பெளத்த விகாரை கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தற்போது இவ்வடிவில் அமைந்த தூண்கள் மட்டுமே நமக்குக் காணக் கிடைக்கின்றன. நாகார்ஜுனகொண்டா பெளத்த (விகாரை) சைத்யாவும் இவ்வடிவில் அமைந்துள்ளது. துர்கா கோவில், ஐஹோளே, நகுல-சகாதேவ இரதம், மாமல்லபுரம், கபோதேஸ்வரர் கோவில், சேஜர்லா, வித்யா வீனீத பல்லவேஸ்வர கிருகம், கூரம், வீராட்டனேஸ்வரர் கோவில், திருத்தணி, வாடாமல்லீஸ்வரர் கோவில், ஓரகடம் ஆகிய பழம்பெரும் கோவில்களில் இத்தகைய விமான அமைப்பைக் காணலாம். தொண்டை நாட்டில் கஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்ட சோழர் கால விமானங்களைப் பல கோவில்களில் காணலாம். குடிமல்லம் பரமேஸ்வரர் கோவில் விமானமும் கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. எனினும்  இந்த விமானம் ஒரு சிவலிங்க வடிவில் காணப்படுவதால் இவ்வகைக்கு லிங்கக்ருதி (Lingakriti) விமானம் என்று பெயர்.

விமானத்தைச் சுற்றித் திருச்சுற்று மண்டபம் (peristylar cloister mandapa) அமைந்துள்ளது. கருவறைக்குச் செல்ல மகாமண்டபத்தின் தெற்குப்பக்கதில் ஒரு வாயில் உள்ளது. கிழக்குப்புறம் மகாமண்டப சுவரில் மூலவர் சன்னதிக்கு நேரே ஒரு சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பக்கத்தில் உள்ள வெளிப்பிரகாரத்தில்  கொடிமரமும் பலிபீடமும். சன்னதியை நோக்கி நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலின் மூலவர், பானப் பீடத்துடன் சிவலிங்க வடிவில்,  ஒரு மரத்திற்குக் கீழே இருந்ததாக நம்பப்படுகிறது. பல்லவர்கள், சோழர்கள், பாணர்கள், மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோவிலின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கஜபிருஷ்ட விமானம் பல்லவர்களின் கட்டுமானமாக நம்பப்படுகிறது. அந்தராளா மற்றும் முகமண்டபம் ஆகிய தரைத்தளங்களை விட கருவறைத் தளம் மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. அந்தராளத்திலிருந்து கருவறைத் தளத்திற்கு இறங்கிச் செல்ல படிக்கட்டுகள் உதவுகின்றன.

குடிமல்லம் சிவலிங்கத்தின் படிமவியல் 

சவேதிக இலிங்கம் ((Savedika Linga) என்ற வகையைச் சேர்ந்த எழு பட்டைகளுடன் கூடிய சிவலிங்க வடிவில் பரசுராமேஸ்வரர் கருவறையில் காட்சி தருகிறார். இது லிங்கோத்பவ வடிவம் ஆகும். மூலவர் கருவறையில் பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ள இந்த இலிங்கத்தின் உயரம் 5 அடி (1.35 மீ) மற்றும் விட்டம் 1 அடி ஆகும். சிவலிங்கம் என்பது இந்துக் கடவுளர்களான மும்மூர்த்திகளின் வடிவாகக் கருதப்படுகிறது. இலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மனுக்குரியது; நடுப்பகுதி விஷ்ணுவிற்குரியது; பானம் என்னும் மேற்பகுதி சிவனுக்குரியது. குடிமல்லம் சிவலிங்கத்தின் பானம் உயரமாகவும் அகன்றும் காணப்படுவது சிறப்பு.

இந்த இலிங்கம் சதுரமான அடித்தளத்தின் மீது திறந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சதுர அடிதளத்தைச் சுற்றி பலகைக் கற்களை மூன்று வரிசைகளாக அமைத்துக் கட்டிய ஒரு கட்டமைப்பு உள்ளது. இந்தக் கட்டமைப்பின் மேல் வரிசை பலகைக் கற்கள் சேதமுற்றதால் புதிய பலகைக் கற்களைப் பயன்படுத்திப் புதுப்பித்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த இலிங்கத்தின் பீடம் மற்றும் பானம் மட்டும் மிகப்பழமையானவை ஆகும். இதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மற்றும் இணைப்புகள் எல்லாம் பின்னல் வந்த அரச வம்சத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

this_lingam

ஏழு பட்டைகள் கொண்ட பரசுராமேஸ்வரரின் இலிங்க பானத்தின் முன்புறம் சாய்வாக ஓர் ஆழ்ந்த காடி  (deep slanted groove) வெட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் சிற்பிகள் மிகவும் கவனம் செலுத்தி ஒரு வேடனின் உருவத்தைப் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கி உள்ளார்கள். இந்தச் சிற்பத்தில் நாம் காணும் வேடனின் உருவம் சரியான உடற்கூறியல் விகிதங்களின்படியான அங்க அளவுகளைத் துல்லியமாகக் காட்டுகிறது. இவ்வேடனின் வயிறும் மார்பும், காளைமாட்டின் தலையைப் போல,  அடிப்பகுதி குறுகியும் மேற்பகுதி விரிந்தும் -பரந்த தோள்பட்டை, குறுகிய இடுப்பு, ஒட்டியமைந்த வலுவான வயிற்றுத் தசைகள், இறுக்கமான பிருஷ்டம் ஆகியவற்றுடன் – காணப்படுகிறது.

இரு கால்களையும் பரப்பிக் கால்களைப் பலமாக ஊன்றியவாறு நின்ற நிலையில் (sthanaka posture) காணப்படும் வேடனின் உருவம் அளப்பிடற்கரிய தேஜசையையும் சக்தியையும் பரப்புகிறது. வேடனின் பாதங்கள் அமரபுருஷனின் (வளைந்து கொடுத்த நிலையில் காணப்படும் குள்ள யட்சன்) (crouching dwarf yaksha) தோள்களில் ஊன்றியுள்ளன. முகம் அமைதியாகவும் சலனமற்றும் காணப்படுகிறது. வேடனின் இரு கைகள் தளர்வாகத் தொங்குகின்றன. இவர் ஓர் இறந்த வெள்ளாட்டின் பின்னங் கால்களை வலது கையால் பற்றித் தூக்கியவாறும், இடது கையால் கமண்டலத்தைப் பற்றியவாறும், நீளமான போர்க் கோடரி (பரசு) ஒன்றை இடது தோளில் சாய்த்து ஏந்தியவாறும் காணப்படுகிறார். பரசு என்னும் கோடரியே பரசுராமரின் ஆயுதமாகும். வேதகாலம் (Vedic period) மற்றும் புராண காலத்திற்கு  (proto puranic) முந்தைய உருத்திரனை இந்த வேடனின் உருவம் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

வேடனின் தலைமுடி, அதிக எண்ணிக்கையிலான அடர்ந்த தலைமுடிக் கற்றைகள் நெருக்கமாகப் பின்னிக்கொண்ட சடைகளின் சுமையுடன், ஜடபரமாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்டு வளர்ந்த காது மடல்களை வளைந்த குண்டலங்கள் (ring shaped kundalas) அலங்கரிக்கின்றன. வளர்ந்த காது மடல்கள் அதிகார வலிமை மற்றும் செல்வாக்கின் அடையாளங்கள் ஆகும். கழுத்தில் சரபளி (sarapali),  விலாவில் உதரபந்தம் (udarabandha), தோள்களில் தோள்வளை (tholvalai), மேற்கைகளில் கேயூரம் (keyura), முழங்கையில் கங்கணம் (kangana), மணிக்கட்டில் கடக வளை (kataka valai), வளையல்கள்,   இடுப்பைச் சுற்றி மடிப்புகளுடன் (fleets) கூடிய மெல்லிய இடுப்பு ஆடை, இடுப்பில் ஆடையை இறுக்கிக் கட்டும் கடிபந்தம் (katibandha) ஆகிய அணிகலன்களுடன் காட்சி தருகிறார். வேடர்கள் பூணூல் (யக்ஞோபவிதம்) அணிவதில்லை.

அமரபுருஷன் முழங்காலில் முட்டிபோட்டவாறு அமர்ந்துள்ளான். இவனுடைய உடல் குறுகிச் சுருங்கியபடி காணப்படுகிறது.  வலியால் பற்களை இறுகக் கடித்த நிலையில் முகம் காணப்படுகிறது. வேடனை தோள்களில் சுமந்தவாறு முட்டியிட்டு அமர்ந்திருப்பதனால் உண்டான வலியால் பற்களை இறுகக் கடித்திருக்கலாம். காது மடல்கள் இலையைப் போல வளர்ந்துள்ளன. மூலவர் பரசுரமேஸ்வரரின் இந்த வடிவம் கி.மு. மூன்றாம் நூற்றண்டிலேயே ஆந்திரப் பிரதேசத்தில் சிவ வழிபாடு  நடந்ததற்கான வலுவான சான்றாகும்.

இங்கு 1973 ஆம் ஆண்டில் டாக்டர் ஐ.கே.சர்மா, இயக்குனர், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை, தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வில் 2 – 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள்  கிடைத்துள்ளன. பானை ஓடுகள் மற்றும் பெரிய அளவுகளில் செங்கற்கள் (42 x 21 x 6 cm) ஆகிய சான்றுகளின் அடிப்படையில் இக்கோவில் சாதவாகனர்களின் (Satavahana) (கி.மு. முதல் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்தாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை இந்தச் சிவலிங்கத்தை இந்தியாவின் மிகப் பழமையான சிவலிங்கம் என்று கணித்துள்ளது.

பரந்து விரிந்த கோவில் வளாகத்தைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் அமைந்துள்ளன. கோவிலின் நுழைவாயிலில் இராஜகோபுரம் காணப்படவில்லை. ஆனந்தவல்லித் தாயாருக்கான (அம்மாவரு) தனிச் சன்னதி கோவில் வளாகத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. வள்ளி-தேவசேன சமேதராகக் காட்சிதரும் சண்முகன், சூர்யநாராயணன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் இவ்வளாகத்தில் தனிச் சன்னதிகள் உள்ளன.

புராணக்கதை

குடிமல்லம் கோவில் புராணம், பரசுராம முனிவரின் புராணத்தைப் பற்றிப் பேசுகிறது. பரசுராமர் தன் தந்தையின் கட்டளையை ஏற்றுத் தன் தாயின் தலையை வெட்டியவர் ஆவார். தனது சொந்தத் தாயைக் கொன்ற பாவத்தைக் கழுவ  வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பரசுராமர் தனது குருவிடம் அறிவுரை கேட்டார். குருவோ ஒரு சிவலிங்கத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தவமியற்றுவதுதான் இதற்குப் பரிகாரமாகும் என்று உரைத்தார்.

பரசுராம முனிவர், மிகுந்த முயற்சிக்குப் பிறகு, குடிமல்லத்தில் சிவலிங்கத்தைக் கண்டறிந்தார். அருகே ஒரு குளத்தை வெட்டினார் . தவமியற்றத் திட்டமிட்டார். இக்குளத்தில் தினமும் புனிதமான ஒற்றை மலர்  மலர்வதை முனிவர் கண்டார். இந்த மலரைப் பறித்துக் குடிமல்லம் சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துப் பணிந்தார். சிவலிங்கத்தை அசுரர்களிடமிருந்து காப்பதற்காக மலருடன் சித்திரசேனை என்ற யட்சியை அமர்த்தினார். இவள் காவல் புரிவதற்கான வெகுமதியாகக் கள்ளையும், வேட்டையாடிய விலங்கின் இறைச்சியையும் பெற்றாள். ஒரு நாள்  சித்திரசேனை மலர் ஒன்றை சிவனின் பாதத்தில் வைப்பதற்குப் பதிலாகத் தானே சூடிக்கொண்டாள். பரசுராம முனிவர் சினம் கொண்டு கோடரியால் யட்சியைத் தாக்கினார். யாட்சியும் திரும்பத் தாக்கினாள். இந்தச் சண்டை 14 நாட்கள் நீடித்ததாம். இதனால் இங்கு பெரிய பள்ளம் உருவாயிற்று. அப்போதிலிருந்து இக்கோவில் குடிபள்ளம் (குடி=கோவில்; பள்ளம் = குழி) என்று வழங்கலாயிற்று. நாளடைவில் இக்கோவில் குடிமல்லம் என்று மருவி வழங்கப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 புதிர்

குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில் கருவறை,  ஒவ்வொரு 60 வருட இடைவெளியிலும், வெள்ள நீரால் பதிக்கப்படுவதுண்டு.  ஒரு சிறிய நிலத்தடி தொட்டி, இந்தத் தொட்டியை சிவலிங்கத்துடன் இணைக்கும் கால்வாய் (duct) ஆகியவற்றை இன்றும் இக்கருவறையில் காணலாம். வழக்கமாக மிகவும் உலர்ந்து காணப்படும் கருவறையில் 60 வருடம் நிறைவுறும் சமயம் குறிப்பிட்ட சமயத்தில் வெள்ளம் பீரிட்டு வருவதுண்டு. நீர்மட்டம் உயர்ந்து இலிங்கத்தின் பானம் வரை எட்டுவதுண்டு. உடனடியாக வெள்ளம் வடிந்து விடுவது வியப்பான நிகழ்வு. சென்ற முறை 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  4 ஆம் தேதியன்று கருவறையில் வெள்ளம் உயர்ந்து வடிந்தது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த நிகழ்வை கோவில் உதவியாளர் ஒருவர் கோவில் பதிவேட்டில் ஒரு குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.  நீர் மட்டம் உடனடியாக வடிந்து, 6  அங்குல உயரத்தில் 4 மணி நேரம் நீடித்தது. பின் நீர் சூழ்ந்த சுவடே தெரியாமல் வடிந்து உலர்ந்து போனது. இவ்வ்வூரில் வசிக்கும் வயதில் மூத்தோர் 1945 ஆம் ஆண்டு இது போல கருவறையில் நீர்மட்டம் உயர்ந்ததை நினைவுகூர்கின்றனர்.

இப்பகுதியில் கருவறையில் வெள்ளம் உயரும் தருணங்களில் நிலத்தடி நீர்மட்டம் (water table) 300 – 320 அடி இருந்ததாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் கண்டறிந்துள்ளனர். எனவே இந்த நிகழ்வு பற்றித் தெளிவான விளக்கம் இல்லை. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக காசியிலிருந்து நீர் பொங்கி வருகிறது என்று பக்தர்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான மற்றொரு நிகழ்வு உள்ளது. சோல்ஸ்டைஸ் (Solstice) என்பது சூரியன் கடக ரேகை அல்லது மகர ரேகைக் கோட்டுக்கு நேர் மேலே வந்துவிட்டுத் திசைமாறிச் செல்லும் நாள். இந்த நிகழ்வு ஜூன் 20 அல்லது 21 (உத்தராயணம்); டிசம்பர் 21 அல்லது 22 (தட்சிணாயணம்) ஆகிய தேதிகளில் மட்டும் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டிருக்கிறது. இவ்விரு நாட்களிலும் சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள சாளரம் வழியாகப் புகுந்து சிவலிங்கத்தின் நெற்றியின் மீது விழுவது வியப்பு.

கல்வெட்டு 

இக்கோவிலில் 25 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படியெடுக்கப்பட்டுத் தென்னிந்திய கல்வெட்டுகள் South Indian inscriptions (S.I.I) தொகுதி VIII எண் 503 முதல் 528 வரை (பக்கம்: 251 முதல் 266 வரை) பதிவாகியுள்ளது. கோவிலின் உள்ளேயும் மற்றும் கோவில் வளாகத்திலேயும் இந்தக் கல்வெட்டுகளைக் காணலாம். இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல்லவர்கள், கங்கப் பல்லவர்கள், பாணர்கள், மற்றும் சோழ மன்னர்கள் அளித்த நிலையான கொடைகளைப் (perpetual gifts) பதிவு செய்துள்ளன. இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே பழமையானது மூன்றாம் நந்திவர்மனின் 23 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 802)  ஆகும். நிருபதுங்கவர்மனின் 24 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வானவித்யாதர மகாபலி வானவராயனின் கொடையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. தந்திவர்மனின் 49 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 778 – 829) ,பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண மன்னன் ஜெயனந்திவர்மனின் மகன் முதலாம் விரமாதித்தியன் (கி.பி. 796 – 835) இக்கோவிலுக்கு அளித்த கொடையினைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. பெரும்பாணப்பாடி பாண மன்னர்களின் கால்வழி மரபு (Geneology) குடிமல்லம் (பாணர்) மற்றும் உதயேந்திரம் (பல்லவர்) செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளிலேயே மிகவும் அண்மையானது யாதவ தேவராயனின் (கி.பி. 1346) கல்வெட்டாகும். குடிமல்லம் மற்றும் கோலார் ஆகிய நகரங்கள் பாணர் வம்சத்தவர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டு, கி.பி. 1126 ஆம் ஆண்டில்  இக்கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ள செய்தியினைப் பதிவு செய்துள்ளது.

கல்வெட்டுகள் கோவில் மூலவரை பரசிராமேசுரமுடைய நாயனார் என்றும் திருவேங்கடக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவிற்பெரும்பெட்டு ஆளுடையார் ஸ்ரீ பரமேசுரமுடையர்    என்றும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பெரும்பாணப்பாடி திருவேங்கடக் கோட்டத்து திருவிற்பெரும்பெட்டு மகாதேவர் பரசுராமேசுரமுடையர் என்றும் இக்கோவில் மூலவரைக் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒரு கல்வெட்டு கூட இக்கோவிலின் பெயரை குடிமல்லம் என்று குறிப்பிடவில்லை. ,மாறாக இவ்வூர் விப்ரபீடம் (பிராமண அக்ராகரம்) என்ற பெயரிலேயே பதிவு  செய்யப்பட்டுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றண்டில் உஜ்ஜைனியில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களில் குடிமல்லம் இலங்கத்தை ஒத்த உருவம் காணப்படுகிறது. மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள முதலாம் நூற்றண்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று குடிமல்லம் சிவலிங்க வடிவினைக் கொண்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் சந்திரகிரி அருங்காட்சியகத்தில் கிரானைட்டினாலான குடிமல்லம் சிவலிங்கத்தின் மாதிரி வடிவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 06.00 முதல் மாலை 08.00 வரை.

தொலைபேசி: 08578288280

குறிப்புநூற்பட்டி

    1. Gudimallam http://travel.egway.co.in/south-india/tirupati/gudimallam
    2. Gudimallam (Wikipedia)
    3. Gudimallam. Papanaidupeta, Kalahasti, Tirupathi .(http://www.krishnababug.com/2009/03/gudimallam-papanaidupeta-kaala-hasti.html)
    4. Gudimallam Linga – Satavahana Style. (http://indiatemple.blogspot.in/2004/12/gudimallam-linga-satavahana-style.html)
    5. Mysterious saga of a 2,200 year old lingam. (http://www.megalithic.co.uk/article.php?sid=2146413274)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard