New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்


Guru

Status: Offline
Posts: 24709
Date:
தலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்
Permalink  
 


தலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்

 

வைகாசி மூலம் (17-5-2014) திருஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜை நாள்.

பக்தி இலக்கிய காலத்துக்கு முந்திய நிலை

சங்க காலத்துக்குப் பின் பக்தி இலக்கியகாலமான ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையுமான காலத்தை வரலாற்றாசிரியர்கள் இருண்ட காலம் என்பர். அதனை இருண்ட காலம் என்பதை ஏற்றுக் கொள்ளதவரும் கூட அக்காலத்தைக் களப்பிரர் காலம் என்பர். களப்பிரரும் ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தை ஆண்ட பல்லவர்களும் தமிழரல்லர்  என்பதை உடன்படுவர். களப்பிரர் தமிழரே என்பது மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் ஆராய்ச்சி. களப்பிரர் காலத்தில் சிறு சிறு அறநூல்கள் தோன்றினவே யன்றித் தமிழ் இலக்கியம் வளம் பெறுவதற்கான பெருமுயற்சி ஒன்றும் நிகழவில்லை. பல்லவராட்சியிலும் வடமொழியே பேணப்பட்டது. பாரவி, தண்டி போன்ற வடமொழிக் கவிவாணர்கள் பல்லவரின் அரசவைக் கவிஞர்களாகப் போற்றப்பட்டனர். பிராமணர் வேதமும் வடமொழியும் பயிலும் கடிகைகள் பல்லவர்களால் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ் பயிற்றுவிக்கும் நிலையங்கள் இருந்ததாகத் தெரியவில்லை பல்லவராட்சியில் கோயில்கள் பெருஞ்செல்வ நிலையங்களாய்ச் சிறந்து விளங்கின. ஆனால், அங்கும் தமிழ் பயிலுதற்கு இடம் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த காலகட்டத்தில் தமிழ்மொழி இருந்த நிலைமையைப் பேராசிரியர் ஔவை.சு. துரைசாமி பிள்ளையவர்கள் கூறுவதை அவதானிக்க வேண்டும். “பல்லவர்களின் கல்வெட்டுக்களோ பாண்டியர்களின் செப்பேடுகளோ எவையும் தமிழ் இலக்கியத்துறையையோ தமிழ்க் கல்வியின் வளர்சியினையோ சிறிதும் கூறுகின்றில. கோயில் சுவர்களிலும் ஒருசில செப்பேடுகளிலும் தொடர்புடைய ஊர்களையும் அவற்றின் எல்லைகளையும் விலையாவணங்கள், உடன்படிக்கை முதலிய செயல்வகைக்குரிய வக்கணைகளையும் தமிழில் பொறித்ததொன்று தவிர வேறு தமிழிலக்கியத் துறையில் ஒரு நிகழ்ச்சியும் காணப்படவில்லை. செந்தமிழ் நாட்டுக் கூடல் நகர்க்கண் இருந்ததாகக் கூறப்படும் சங்கத்தையாதல், சங்கத்தின்வளர்ந்த தமிழ் இலக்கியங்களையாதல், தமிழ் பயிலும் கல்லூரிகளையாதல் இக்கால நிலையறிதற்குப் பயன்படும் சான்றுகளில் காண இயலவில்லை. கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் சிறந்து விளங்கிய பல்லவ பாண்டியர்களின் காலம், தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளித்த காலமெனக் கூறுதற்கு இயைபொன்றும் இல்லையென்பேமாயின், அது மிகையாகாது”.

sambandhar1பக்தி இயக்கம்– அதன் தலைவர்

இந்த காலகட்டத்தில் மக்கள் இயக்கமாக உருவானதுதான் பக்தி இயக்கம். அந்தச் சமுதாய இயக்கத்தின் ஊடகமாக வெளிப்பட்டதுதான் பத்தி இலக்கியம். மக்கள் இயக்கத்தின் தலைவராக, பக்தி இலக்கியத்தின் கருத்தாவாகக் காணப்படுபவர் , ‘தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர்’.

பக்தி இலக்கியம் – ஒரு இலக்கிய வகை

பக்தி பாடுபொருள்களில் ஒன்றாக இருந்த நிலையிலிருந்து பக்தி இலக்கியம் என்ற ஒரு இலக்கிய வகையாக வளர்ச்சியடைந்ததை கி.பி 7ஆம் நூற்றாண்டில் காண்கிறோம். இந்த வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ‘முத்தமிழ் விரகன்’ எனப் போற்றப்படும் திருஞானசம்பந்தர். இவருக்கு முன்னமேயே பத்தி இலக்கியத்திற்கு வித்திட்டவர் காரைக்காலம்மையார். ஆயினும் திருஞானசம்பந்தரே பக்தி இலக்கியவகைக்கும் பக்தி இயக்கத்திற்கும் முன்னோடி எனக் காணப்படுகின்றார். பக்தி இயக்கத்தை இவர் தலைமையில் இயங்கிய உண்மையைத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் திருப்பதிகத்தின் திருக்கடைக் காப்பில், “ தலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன் என்று பதிவு செய்துள்ளார். இவர் தோற்றுவித்தனவே பக்தி இலக்கியமும் பக்தி இயக்கமும்   பக்தி இயக்கம், சனரஞ்சகமான ஓர் இலக்கிய இயக்கம் என்ற அளவில் மாத்திரம் நின்று விடவில்லை; மொழிக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் ஆக்கமான பல கொடைகளை  அளித்தது.

தமிழ் பெற்ற பயன்

திருஞானசம்பந்த மூர்த்திகளின்  பிறப்பினால் வேதநெறி தழைத் தோங்கியது; மிகு சைவத் துறை விளங்கியது’. இது வைதிகசைவத்துக்கு வந்த ஏற்றம்.

இவருடைய பிறப்பால் தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் வந்த ஏற்றத்தினைச் சேக்கிழார்,

‘திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல
அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறை வெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும் இடம்கொள்ளும் நிலைபெருக”

சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார் எனப் பாடினார்.

இந்தச் செய்யுளில் தெரியவரும் செய்திகள்.

1. மங்கி இருந்த செந்தமிழ் வழக்கு இவரால் ஒளி பெற்றது.

2. ஓங்கி இருந்த அயல்மொழி வழக்குகள்  ஒழிந்தன.

3. தமிழிசை புத்துயிர் பெற்றது.

4. இசை, புலன் இன்பத்திற்காக அன்றி தெய்வானுபவத்திற்குக் (மெய்யுணர்விற்குக்) கருவியாக மாற்றம் எய்தியது.

திருஞானசம்பந்தர் தமிழகத்தில்  பாலி, பிராகிருதம் முதலிய அயல்மொழிவழக்குகள் பெற்றிருந்த செல்வாக்கை ஒழித்து செந்தமிழ் வழக்கினை நிலைபெறச் செய்தார். சங்க காலத்தில் மேம்பட்டிருந்த இசையை மக்களிசையாக வளம் பெறச் செய்தார். சங்கால இசை புலனுகர்ச்சிக்காகவும் தனிமனிதப் புகழ்ச்சிக்காகவும் பாணர் என்னும் ஒரு கூட்டத்தாரிடை மட்டுமே வழக்கில் இருந்த தமிழிசையை முழுவதுமாக இறை அனுபவத்துக்கும், மெய்ஞ்ஞான உணர்வுக்கும் உரியதாக ஆக்கினார்; அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் இசையை உரியதாக மாற்றத்தினை விளைவித்தார்.

புதிய சமூக உருவாக்கம்

“சமூக உருவாக்கத்துக்கு இலக்கிய உருவாக்கம் ஓர் அங்கமாகும். இலக்கிய உருவாக்கம் இல்லாது எந்த ஒரு சமூகமும் உருவாக்கம் பெற்று விட்டதாகக் கொள்ள முடியாது . அந்த இலக்கிய உருவாக்கமும் இலக்கிய உருவாக்கைத்தின் கருத்தாவையும் சமூதாயம் தான் உருவாக்குகின்றது. ‘இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மாத்திரமன்று. அது சமூக விளைவுகளுக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றது ” (கா. சிவத்தம்பி)

செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கினை வென்றேறத் திருஞானசம்பந்தர் மேற்கொண்ட ஊடகம் பக்தி இலக்கியம். பண்டைத் தமிழிசையோடு கூடிய அந்த ஊடகம் மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சங்க இலக்கியங்களை ஒட்டி வளர்ந்த இலக்கிய வகை.

sambandarபதிகச் செழுந்தமிழ்

திருஞானசம்பந்தர் மக்களுடன் உறவாடுவதற்கு மேற்கொண்ட ஊடகம் இசை. நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தர் என்று நம்பியாரூரரால் போற்றப்பட்டார். திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களில் திருக்கோவிலில் இறைவனின் முன்னிலையில் பாடப்பட்ட பதிகங்களோடு,மக்கள் முன்னிலையில், ஒருதலத்திலிருந்து மற்றொரு திருத்தலத்திற்குச் செல்லும் வழியில், திருத்தலத்தின் எல்லையில், திருக்கோவிலை அல்லது தலத்தை வலம் வருமுன் அருளிய பதிகங்கள் மிகுதியும் காணப்படுகின்றன. தமிழகத்தில் இசையும் இறையுணர்வும் தமிழ்மொழியும் இணைந்து நின்று வளர்ச்சியுற்றன. இசைப்பாவுக்குப் புதிய யாப்பு வடிவங்கள்தோன்றின.

திருவெழுகூற்றிருக்கை, ஏகபாதம், திருவியமகம், கோமூத்திரிகை, மடக்கு,மொழிமாற்று, வழிமொழி,மாலை மாற்று, திருவிராகம், ஈரடி முக்கால், ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு எனும் இலக்கியவகைகளைத் திருஞானசம்பந்தர் முதன்முதலில் படைத்து அளித்தார். இவை அனைத்தும் சித்திரகவி அல்லது மிறைக்கவி என வழங்கப்படும்.

திருஞானசம்பந்தர் இந்த இசைப்பாடல்களின் இலக்கண அடிப்படையை ஏற்றுக் கொண்டு இசை உருவுக்குப் புதிய வடிவத்தைப் படைத்தார். புதிய வடிவத்தை உருவாக்க வேண்டிய சூழ்நிலை யாது?

பதிக அமைப்பின் தேவை

திருஞானசம்பந்தர் தெய்வத்தைப் பாடினாலும் அப்பாடல்கள் சமுதாயத்தை நோக்கியே பாடப்பட்டன.

நிலையாமை என்னும் உலக மறுப்புக் கொள்கையாலும் கடவுள் மறுப்புக் கொள்கையாலும்   இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் இழந்து,சமுதாயப் பிடிப்பின்றிச் சலிப்பாய வாழ்க்கை வாழும் மக்களை நோக்கி, ‘நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ’,’தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்’ ‘இன்னநீர் இடும்பையில் மூழ்கிறீர் எழும்மினோ’ என்று ‘உத்திஷ்ட’, ‘ஜாக்ரத’ என்று வேதம் உரைப்பதைப்போலத் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்த நீண்ட தொடர்களை உடைய நெடிய உரு பயனளிக்காதெனக் கண்டார்.  விரைவூக்கம் தரும் சிறிய பாடல்களே பயன் தரும் எனக் கண்டார். நிலையாமையே நிலையானது என்று மருள் கொண்ட மனத்தினரை, அவர்கள் வாழும் தலத்தின் அழகினையும் இயற்கையில் இறைவன் உறையும் பாங்கினையும் சுட்டிக் காட்டி நீவிர் இன்ன பெருமையுடைய இன்ன இடத்தை அடைவீர் இன்ன தலைவர் அடைவீர் இன்ன நன்மையினைப் பெறுவீர் எனத் தெருட்டி, மண்ணில் நல்லவண்ணம் வாழப் பாடினார். இதனை மையக் கருத்தாக (Burden of the poetry) கொண்ட பதிக அமைப்பினை சம்பந்தர் மேற்கொண்டார்.

 

பல மடிப்புக்களை உடையதாக அடுக்கி உடுக்கும் உடையமைப்பினைக் கொசுவம், கொய்சகம், கொச்சகம் என அழைப்பர். கொசுவி உடுக்கும் உடைபோன்று  சிறியனவும் பெரியனவுமாக விரவி அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வரும் செய்யுள் வகையினைத் தொல்காப்பியனார் கொச்சகம் என்ற பெயரால் குறித்தார் என்பது உரையாசிரியர்கள் கருத்து.

sambandhar_palani

ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும் தாழிசைபோல இத் திருப்பதிகங்கள் ஒருபொருள்மேல் பத்தும் பதினொன்றும் சிலவிடங்களில் பன்னிரண்டும் வந்தன. பத்துப் பாடல்கள் கொண்டு அமைந்த நூல் பதிகம் எனப்படும்

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களின்  இறுதிப் பாடல் திருக்கடைக் காப்பு எனப்படும். சங்கப் பாடல்களில் பரிபாடலிலும் ஒத்தாழிசைக் கலிப்பாவிலும் சுரிதகம் என்றொரு உறுப்பு உண்டு. சுரிதகம் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது என்பர். அவ்வாறே, திருக்கடைக்காப்பும்  அப்பதிகத்தை ஓதுவதன் பயனைக் கூறி அப்பதிகத்தை நிறைவுசெய்யும்.

ஒரே யாப்பில் பத்துப் பாடல்களால் அமைந்த நூல் பதிகம்.இத்தகைய பதிக அமைப்புக்கு முன்னோடியாக அமைந்தது, காரைக்காலம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம். எனவே, தேவாரத் திருப்பதிகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நூல் எனலாம். திருஞானசம்பந்தரும் தம் திருப்பதிகங்களைத் ‘தமிழ் மாலை’ என்று கூறுகின்றார். அதாவது, நான்கு யாப்புக்களால் ஆன செய்யுள்களைக் கொண்டநூல் நான்மணிமாலை, மூன்று யாப்புக்களால் ஆன செய்யுள்களால் அமைந்த நூல் மும்மணி மாலை, இரு வகையாப்புக்களால் ஆன செய்யுள்களால் ஆன நூல் இரட்டைமணி மாலை என்பதைப்போல் திருப்பதிகங்கள் ஒரேவகையான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைபோல ஒரே யாப்பில் அமைந்த சொன்மாலையாகும்

யாப்பமைதியும் இசை நீர்மையும்

தேவாரத் திருமுறைகள் இயற்றமிழும் இசைத்தமிழும் ஒருங்கிணைந்தவை. இயலிசை இலக்கணங்களுக்கு இலக்கியமாக அமைந்தவை. தற்கால செவ்வியல் இசையுலகில் வழங்கிவரும் கீர்த்தனை அல்லது கிருதிகளுக்கு தேவாரப் திருப்பதிகங்கள் முன்னோடியாக அமைந்தன. இன்றைய வழக்கில் செவ்வியல் இசை உருக்கள் பல்லவி, அநுபல்லவி சரணம் என மூன்று உறுப்புக்களைக் கொண்டிருத்தலை அறிவோம். பலகாலும் மொழியப்படும் அடியைப் பல்லவி என்றும் அதன் பொருளொடு ஒட்டி விளக்கவருவது அநுபல்லவி என்றும் பல்லவியின் கருத்தை விளக்கி முடித்து வைப்பது சரணம் என்றும் கூறுவர்.

பலரும் அறிந்த பின்வரும் திருவலஞ்சுழித் திருப்பாடலில் இவ்வமைப்பைக் காணலாம்.

‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே’

இத்திருப்பாடலின் முதலடியைப் பல்லவியாகவும், ,முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை, என்னும் இரண்டாம் அடியினை அநுபல்லவி யாகவும், முதலடியின் பொருளை விளக்கும் ஏனைய பகுதிகளைச் சரணமாகவும் கொண்டு , இத்திருப்பாடலைக் கீர்த்தனை வடிவமாக்கிப் பாடுதலும் உண்டு. நோக்குவாருக்குப் பிள்ளையாரின் திருப்பதிகங்கள் இவ்வமைப்பில் இருத்தல் புலனாம்.

மயிலை  சற்குருநாத ஓதுவார் தேவார இன்னிசைக் கச்சேரி

மயிலை சற்குருநாத ஓதுவார் தேவார இன்னிசைக் கச்சேரி

கீர்த்தனைகளுக்கு இராகமும் தாளமும் போலத் தேவாரப் பாடல்கள் பண்ணமைதியும் தாள அமைதியும் கொண்டவை. பாடலின் தாள அமைப்பினை யாப்பமைதி வரையறைப்படுத்துகின்றது.

சந்தக் கவி

தமிழ்மொழிக்கு இனிமைதருவது இம்மொழி எழுத்துக்களின் குறில், நெடில், வன்மை, மென்மை, இடைமை ஆகிய ஒலிநீர்மைகளாகும். இவை செய்யுளுக்கு அழகினை ஊட்டுவதால் தொல்காப்பியர் வண்ணம் என்றார். தொல்காப்பியர் காலத்தில் வண்ணம் செய்யுளின் ஓரடியில் தான் அறியப்பட்டது.

முதன் முதலில் வண்ணத்தை முழுமையாகக் கையாண்டவர் திருஞானசம்பந்தரே. தமிழ் எழுத்துக்களின் குறில் நெடில், வல்லோசை, மெல்லோசை, இடையோசை நீர்மைகளை அறிந்து ஒலியினை பயன்கொண்டு முழுமையாக வண்ணம் அமைந்த பாடல்களை முதலில் பாடியவர் திருஞானசம்பந்தரே.

இயற்பாவாகிய கலிவிருத்தம் கூடத் திருஞானசம்பந்தர் வாக்கில் சந்த விருத்தமாகின்றது. பின்வரும் பாடலில் ஒவ்வொரு சீரிலும் இரண்டாம் எழுத்தாகிய ‘ங’கர ஒற்றை அழுத்தி உச்சரித்து, அது செய்யும் ஒலி ஜாலத்தை அனுபவித்துப் பாருங்கள்.

அங்கண்மதி கங்கைநதி வெங்கண்ணர
வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர்
எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர்
பொங்கெரிபு லன்கள் களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர
ணங்கள்பணி வெங்குருவதே.

வெங்குரு’ என்பது சீகாழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. அப்பெயரில் இரண்டாம்  எழுத்து ‘ங’ கரவொற்று. அது இந்தப்பாடலுக்கு நிறமூட்டும் வண்ணமாயிற்று.

வஞ்சமகள் வருகையைக் கம்பர் சந்தவிருத்தத்தில் பாடினார். அந்தச் சந்த யாப்பின் மூலத்தை, யாப்பறிந்தவர் இந்த திருப்பாடலில் கண்டு மகிழ்வர்.

சந்தக் கவிச்சக்ரவர்த்தியாகிய அருணகிரிநாதர், திருஞானசம்பந்தரைப் போலக் கவிபாட முருகனின் அருளை வேண்டுகின்றார்.

“புவியதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட அடிமையெனக் கருள்வாயே’

விராலிமலைத் திருப்புகழில் பாடும்போது புகலிவேந்தர் திருப்பூந் தராயைப் பாடின வழியெதுகை (துவிதாக்ஷரப் பிராசம்) அழகுடைய பாடல் அவருக்கு நினைவுக்கு வருகின்றது.

நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர
பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராயபதியே

இதிலுள்ள சொற்களை எடுத்துக்கொண்டு,

“நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் றடைவேனோ”

என விரித்துப் பாடிய அழகைக் காண்க.

தமிழ் மந்திரம் 

தொல்காப்பியர்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” (செய்யுள் 178)

என்றார்.

இக்கருத்தினையே தெய்வப்புலவர்,

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்” (திருக்குறள் 28)

என்று வலியுறுத்தினார்.

gnanasambandarநிறைமொழி  மாந்தரென்பவர், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையராவர். அச்சொல் ஆணையாற்  கிளக்கப்படும்.

“… உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாதவண்ணம் உரைசெய்,
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”

என்றும்

”… வேதிகுடி யாதி கழலே,
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தி யிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணை நமதே”

எனத் திருஞானசம்பந்தர் இறைவன்மேல் ஆணையிட்டு மொழிந்தார். அவர் ஆணை இட்டு மொழிந்தன, அவற்றின் பொருண்மையை ஆற்றலுடன் பயந்தன, அதனை, நம்பியாண்டார் நம்பிகள், ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலையில் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

திருஞானசம்பந்தர் பாடியவை, ‘எனதுரை தனதுரை’ என அவர் கூறியபடி சிவபரம்பொருள் உணர்த்தியபடிப் பாடியதாம். எனவே, சிவனது மொழி வேதாகமங்கள் என்பது போல் காழிப்பிள்ளையார் மொழிந்தனவும் மறைமொழிகளாகும். அவை மறையோர் செய் தொழிலுக்கும் உரியன. இவ்வாறு கூறியவர், திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் திருவருளை முழுமையாகப் பெற்றவரும், முதலாம் இராஜராஜ சோழனுக்குத் தில்லையிலிருந்து திருமுறை ஏடுகள் கிடைக்க உதவியவரும் திருமுறைகளித் தொகுத்தவரும் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பத்து நூல்களின் ஆசிரியருமாகிய நம்பியாண்டார் நம்பி என்னும் சிவாச்சாரியார்.

“கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவனடிமேற்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே
பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.”

(ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்)

எனப் போற்றினார்.

செந்தமிழினம் கவுணிய குல திலகருக்குப் பெரிதும் கடமைப்பட்டுளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard