சிவபெருமான் படிகம்போல் பரிசுத்தர். நித்திய நிர்மலர்: அதனால் அவர் பேரறிவினர்; பேரறிவே அவரது பேராற்றலுக்குக் காரணம். பேரறிவும் பேராற்றலும் இல்லாதவருடைய கருணை பயனளிக்காது. இதனால் சிவபெருமான் பேரறிவும் பேராற்றலும் பெருங் கருணையுமுள்ளவரென்று வேதாகமங்களும் திருமுறைகளும் முழங்கும்.
உயிர்கள் அறிவுள்ளவை. ஆனால் அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தோடு கூடியவை, களிம்போடு விரவிய செம்புபோல: செம்பு உள்ள நாள் தொடக்கம் களிம்போடு கலந்தது. உயிரும் உள்ளவன்றே மலத்தோடு விரவியது. செம்புறு களிம்பு ரசவேதையால் நீங்கும்; உயிரைப் பற்றிய மலம் சிவஞானத்தால் நீங்கும். அப்போது அவ்வுயிர் தனக்குரிய அறிவு விளங்கப்பெறும். அந்த அறிவும் சிற்றறிவே ஆகும். அந்த அறிவு அதற்குரிய கவபாவ தர்மம். அது ஒரு பேரறிவின் வழித்தாக அன்றி எந்த இன்பத்தினையும் அறிந்து நிலையாக அனுபவித்தற்கு உரியதன்று. ஆனால் அந்தச் சிற்றறிவும் அப்போது முற்றும் மலத்தால் மறைக்கப்பட்டுக் கிடக்கும். அதனால் அறிவிலன், அமூர்த்தன், நித்தன் என்னும் பட்டங்களைப் பெற்று. ஆணவ மலமேதானாய்க் கிடக்கும். இங்ஙனம் ஆணவத்தோடு அத்துவிதமானபடி என்றும் மலத்தோடு விரவாத விஞ்ஞானப் பிழம்பாகிய தாணுவினோடு அத்துவிதமாய்க் கிடக்கும் பேறு வாய்க்குந்தனையும் அவ்வுயிர் ஒன்றினையும் அறிந்து இயற்றி இன்பத்தின் லேசந்தானும் எய்தியிடாது. உயிர் அறிவுடைப் பொருளாகவும் இன்பப்பேற்றைப் பெறுதற்கு உரியதாகவும் இருந்தும் தனது மலினம் காரணமாக மலத்தோடு விரவி, அறிவற்று இன்பப் பேற்றிற்குப் பரம சாதனமாகிய அறிவு இழந்து, அறியாமையில் தலைப்பட்டு நிற்கிறது. அவ்வுயிர்களின் மாட்டுக் கருணையுள்ள சிவபெருமான் அவ்வுயிர்களுக்கு இன்ப வாழ்வு அளிக்கக் கருதிப் படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்ற அருஞ் செயல்களின் வழியாக அருள் புரியாநிற்பர். திருமாலாதி பெத்தாந்தகணத்த வரும் பசுக்களே. அவர்களும் இம்முறையில் அருள் பெற்றவரேராவர். அவ்வருஞ் செயல்களால் அவ்வுயிர்களைப்பற்றிய மலமாசு நீங்குதல் முன்னைய பேறு ஆகும். பின்னைய பேறு மீண்டும் அத்துணை மலத்திற் சாராதும் தமக்கே உரிய இன்பப் பேற்றினைப் பொருந்துதலும் அதனின்றும் மீளாது திளைத்தலும். இந்நறியானே இத்தனையும் செய்த சிவ பரம் பொருளில் தமது விளங்கிய இச்சா ஞானக் கிரியாசக்திகளைப் பிரிவறப் பதித்தலுமே அவ்வுயிர்களின் நன்றிக் கடப்பாடான செயலாகும். 'அயரா அன்பின் அரன்கழல் செலும்' என்பதும் இப்பொருட்டு. அங்ஙனம் உயிர்களைப் பற்றிய பந்தம் பக்குவத்தில் நீங்குவது, பக்குவத்தை வருவித்தற்குச் செய்யப்படும் செயல்கள் உயிர்களை மாயாகருவிகளில் கூட்டுவித்துப் போகத்தில் நிறுத்தி அனுபவிக்குமாறு செய்தல் அதனால் (மூர்த்தி, தலம், தீர்த்தம், குரு பாரம்பரியம், வேதாகமாதிசாத்திரக் கேள்வி, நற்சார்பு, பிராயச்சித்தம், தவம் முதலியவைகளால்) பொதுவுஞ் சிறப்புமாகிய புண்ணியங்கள் வளர அவ்வுயிர்களைப்பற்றிய மலம் நீக்க, நீங்குந் தன்மைத்தாகும். அதுவே உயிர்க்குப் பக்குவமாம்; கொளுத்தக் கொள்ளுந் தன்மை மாணாக்கனுக்குப் பக்குவமாதல் போலவாம் உடம்பில் நோயுற்றோன் வைத்தியன் வழி நிற்றல். கொள்வோன் ஆசான் வழி நிற்றல் கடன். அங்ஙனமே சிவன் ஆணைவழி நிற்றல் உயிர்க்குக் கடன் ஆறறிவுடைய மக்கட்கு, சித்தாந்த சைவருக்கு அது பெருங் கடனாதல் கூறவேண்டுமோ? நம்மவர்க்கு நன்னெறியறிதல் எளிதன்று. சில்வாழ் நாள் பல்பிணிச் சிற்ரறிவினேம் ஆதலால் என்க வேதரஞ்சகன் மால்புரந்தரன் முதலியோரும் இத்தகையினரே எத்திறத்தோரும் ஒப்ப வீடு பேறடைதற் பொருட்டு எழுந்த நூல்களே அநாதி அமலனாற் செய்யப்பட்ட ஆதி நூல்களாம் அவ்விரு நூல்களன்றி வேறு எந்த நூல்களும் பிரமாணமாகமாட்டா எந்தப் பெரிய சிவஞானிகளும் அவ்விரு நூல்களின் வரம்பை மனத்தினாலும் கடத்தல் செய்யார். அவற்றாலுணர்த்தப்படு வடித்த பொருள் எம்மால் தெள்ளத் தெளிய உணர்ந்துகொள்ள படுவதன்று. சற்சம்பிரதாயத்தின் வழி அவற்றின் உண்மை புலனாம். தம்மறிவு கொண்டியலும் துப்புரவில்லாரறிவு அத்துணை சம்பிரதாயத்தின் முன்பு துகளாக்கப்படும். நமது சிவானுபவ செல்வர்கள் நம்மாட்டுவைத்த பெருவரம்பு ஆகும் அச் சம்பிரதாய ஒரு நன் மாணாக்கனது கல்வி நலங்களெல்லாம் கற்பவை கற்றிலிலும் கற்றபின் நிற்றலிலுமே அமைவன. ஒரு பொருளீன் இயல்பு பிற பொருளோடு கலவாமையில் வைத்தே உணரப்படும். அங்ஙனமே நூல் நெறி அதற்குரிய வரம்பிலிருந்தும் கடவாமை பற்றியே உணர்ந்துகொள்ளப்படும். அவ் வரம்பில் நின்று கற்கும் கல்வியே கல்வியாகும். இவ்வியல்பு சைவ நெறிக்கும் இன்றியமையாது வேண்டப்படும். அது ஆன்றோர் வழித்தாக உணரப்படும். அதுவே தொல்லாசிரியர் வகுத்த மரபெனவும் சற்சம்பிரதாயமெனவும் தொன்றுதொட்டு அனுபவமுடைய தேசிகன் திருவருளெனவும், அதனைப் பெறுமாறு முயல்வது நம்மவர்க்கெல்லாம் கடன் எனவும் நமது சிவஞானச் செல்வர்கள் விதந்து கூறி, அந்நெறிபேணுமாறு நமக்கு அருள்புரியாநிற்பர். இந் நெறியின் நிற்ப மென்பார் ஒரோவிடத்து மயங்குதல் இயல்பேயாகும். என்னை? தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் ஆதல் எவர்க்கும் எளிதன்று ஆகலான் என்க. அங்ஙனம் பிறழ உணர்வார் புண்ணியமும் உடையராயின் தமது போக்கின் பொருந்தாமை கண்டு திருந்துதலுஞ் செய்வர். தமது புறநெறிக்கு வருந்துதலுஞ் செய்வர். வேதாகம விதியைத் தெற்றென உணராதும் அவற்றை உணரும் நியாய தருக்க வரம்பில் தலைப்படாதும் நம்மறிவு கொண்டு இயலுதல் சிற்றுயிர்க்கு இயல்பேயாகும். அன்னரெல்லாம் தவ முடையராயின் நூல்வரம்பினை உணர்த்த உணர்ந்து, திருந்திப் பயன் பெறற்பாலராவர். அங்ஙனம் தவமிலராயின் தமது புன்னெறிய தனிற் செல்லும் போக்கினையே நன்னெறியாக்கொண்டு அந்நெறியை நிறுத்திப் பரப்பவும் முயல்வர். அங்ஙனம் செல்லுதல் அவரது போகூழின் வலியாயின் மற்றதை யார் தடுத்து நிறுத்தற்பாலர்? ஒன்றனைப் பிறழ உணர்தல் உயிர்களுக்கு இயல்பு. அது பொருந்தாமையை நியாய தருக்க வரம்பு கொண்டுணரும் வேதாகம நெறியை அறிந்து உணர்த்தவல்ல சான்றோர் நல்லுரை கேட்டு மாற்றிக்கொண்டு நன்னெறி கடைப்பிடித்தல் சன்மார்க்கர்கள் உயிர்தற்பொருட்டு மேற்கொள்ளுங் கடனாம். அங்ஙனம் அவர் திருந்தாது வேறு சூழ்நிலைகளால் பேதுற்று மயங்கியழிமிடத்து அவர் தம்மாற்றங்கேட்டுப் பிறர் மயங்காதவாறு அவரைக் காத்தல் கற்றறிந்த மாந்தர் கடனாம். நன்னெறியாளர் அயல் நெறி கண்டு மயங்கி அங்குமிங்குமாக அலமருங்கால் அதனை விலக்கி அவரைச் செந்நெறியில் நிறுத்தாதுபோயின் சன்மார்க்கர்களுக்கு அது பெரும் பழியாகும் என்க. இதனை
அவன் சிவாபராதியாவன் எனச் சிவாகமும் செப்புமென்க. இதுவே புறச்சமய நிராகரணமும் சுவமத ஸ்தாபனமுமாகிய உத்தமோத்தம சிவ புண்ணியமென்பது சைவ நூற்றுணிபுமென்க. இந்த நெறியிலே நின்று பணிபுரிந்தவர்களே எமது சமயாசாரியர்களும் சந்தானாசாரியர்களும் அவர்களின் வழிவந்த சிவானுபூதிச் செல்வர்களுமாவர். இந்த நெறி பேணிக் காத்தல் எம்மவர்க்கு உற்ற கடனாம். இந்த நெறியிலே நின்று என்றும் சிறந்த நூலுரைகளானும் பல கண்டன நூல்களானும் சைவத்துக்குத் தொண்டாற்றுபவர் நமது சித்தாந்த சைவ சீலர். சித்தாந்த பண்டித பூஷணம், சிவத்திரு ஆ.ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை அவர்கள் ஆவார்கள். இப்போது இவர்கள் செய்த ஒரு பெரு நூல் "நாடும் நவீனரும்" என்பது. இது சித்தாந்த சைவ வரம்பிகந்து கருதியும், பேசியும் எழுதியும் வந்து பல்லோரது கொள்கைகள் பொருந்தாவென்பதை நியாய தருக்க வரம்பில் நின்று பிரமாணங்கள் கொண்டும் தெளிவு செய்து காட்டித் தொன்மை சற்சம்பிரதாயங்கள் கொண்டும் சைவ சமய வரம்பை நன்கு நிரூபித்து நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இந்நூலின் வாயிலாக சைவ நூற்பொருள்கள் எண்ணற்றவை தெளிவு செய்யப்பெற்றுள்ளன. பல்லோரது மயக்க உரைகளை மறுத்துத் தெளிவு செய்யப்பட்டுள்ளன. இங்ஙனம் செயற்கருஞ் செயல் புரிவோரை ஆதரிப்போர் பெரிதும் அரியராகிய இந்த நாளிலே இங்ஙனம் பணிபுரியும் ஒப்பற்ற ஒரு சைவ சீலரைக் கொண்டு சைவ சாத்திர போதனை செய்வித்தலும் சிறந்த நூலுரைகள். கண்டனக் கிரந்தங்களை அச்சிட்டுப் பரப்பி நன்னெறி நிறுத்துதலும் சித்தாந்த சைவத்திற்கு ஆற்றும் ஒப்புயர்வற்ற உத்தமோத்தம சிவ புண்ணியமாம். அவ்வரிய நல்லறங்களை ஆற்றி வருவோர் தவஞானச் செல்வர்களாய் சிவஞானப் பேற்றிற்கு உரியர்களாய்த் திகழ்வார்களென்பது சிவ சாத்திரத்துணிபு ஆகும். இந்த நூலை அச்சிடுவித்து உபகரிப்போராகிய எமது அன்புமிக்க மகா புருஷ செல்வச் சிரஞ்சீவி (சிவ புண்ணிய சீலர்) சி.ச. ஆழ்வாரப்ப பிள்ளை அவர்களும் இந்த நூலாசிரியராகிய புலவர் பெருமானும் நோயின்றி யியன்ற யாக்கையும் நீண்ட வாணாளும் மனோதிடமும், நிகரறு நற் சிவதரும சிவஞான தான புண்ணியமும் வளரப்பெற்று, எங்கள் குலதெய்வமாகிய ஸ்ரீ ஞான சம்பந்தப் பெருமானது திருவருட்பேற்றிற்கு உரியராகி நீடு வாழ்க வென, அவரது பொன்னடிப் போதுகளைச் சிந்தையினும் சென்னியினும் வைத்து வந்தித்து வாழ்த்துகின்றேன். சாதுக்கள் §க்ஷமார்த்தம், இந்த சத்கிரந்தம் இவ்வுலகில் நின்று நிலவுக. ஆழ்க தீயது; சத் சம்பிரதாயம் ஓங்குக. சன்மார்க்க நெறி பற்றி திருநெறித்தொண்டர் குழாம் உய்தி பெற்று வாழ்க.
இங்ஙனம்
ஈசான சிவாசாரியர்
பதிப்புரை
இப்பொழுது நம் நாடு, அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாடு இருக்கும் நிலைமை உலகம் அறிந்ததே. தனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்றால் தானும் தன் மனைவியும் கூட்டுறவால் பிறந்திருக்கிறான் என்பது அவன் தெரியாமலில்லை. ஆனால்
'நான் பிறந்த காரணத்தை நானே தெரியுமுன்னே ஏன் பிறந்தாய் மகனே!'
என்று சினிமாவில் பாடவே, அப்பாடலைத் தெருத்தெருவாய் வீடுவீடாய் ரேடியோ மூலமாகவும் ஒலிபரப்பி மூலமாகவும் கேட்டுக் குழந்தைகள் முதல் யாவரும் பாடி மகிழ்கின்றார்கள்.
இதுபோல நாட்டில் அநேக விஷயங்கள் பேசப்படுகின்றன. பத்திரிகைகளிலும் வெளியிடப்படுகின்றன. 'பொருளாதாரம் என்றால் என்ன?' என்று தெரியாதவர் பொருளாதாரத்தைப்பற்றிப் பேசுகிறார். அவரும் தம்மை ஓர் அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார். அப்படியே ஆலய வழிபாடு, சமயம், மொழி முதலிய விஷயங்கள் என்ன என்று தெரியாதவரும் அரசியலில் ஈடுபட்டுத் தமக்குச் செல்வாக்கு இருக்கிறது என்ற எண்ணத்தால் அவற்றைப்பற்றி மனம் போனபடி பேசுகிறார், எழுதுகிறார். அதனைப் பாமர மக்களும் நம்புகிறார்கள்.
ஒரு வியாதிக்கு மருந்து கொடுக்கவேண்டுமென்றால் வைத்திய சாஸ்திரம் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர் தவிர மற்றவர்கள் துணிந்து மருந்து கொடுத்து அந்த நோயாளியும் அந்த மருந்தைச் சாப்பிடுவாரானால் அவர் கதி என்னவாகும் என்று வாசகர்களே சிந்தித்து முடிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்மொழி என்ன என்று தெரியாதவர்களும் அம்மொழியைப் பற்றிச் சண்டப்பிரசண்டம் செய்கிறார்கள். உதாரணமாக 'நிலையம்', 'நிலயம்' என்ற இந்த இரண்டு சொற்களில் எது சரி என்று தெரியாமல் இன்று 'நிலையம்' என்றே தமிழ்ப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் எழுதி வருகிறார்கள். அதை மற்றவர்களும் 'காப்பி'யடிக்கிறார்கள். தம்முடைய பெயரில்கூட சம்ஸ்கிருதம் கலக்கக்கூடாதென்று நினைத்த தீவிரத் தமிழன்பர் மறைமலையடிகள் கூட 'நிலயம்' என்றுதான் எழுதியிருக்கிறார்கள். அதுதான் சரியான முறையும் கூட.
'ஹிந்து' என்ற பதத்திற்கு பாரசீக பாஷையில் கரியன், பொய்யன், அடிமை என்று பொருளாம். இன்னும் சிலர் அதற்கு ஒதுக்கப்பட்டவர்கள், பிரஷ்டர் என்றும் பொருள் சொல்கிறார்கள். முழு விபரம் இப்புத்தகம் 115ஆம் பக்கம் பார்க்க. ஆனால், நம் தமிழ் நாட்டில் சைவ வைணவ ஆலயங்களை மட்டும் நிர்வகிக்க ஏற்பட்ட இலாக்காவுக்கு 'ஹிந்து அறநிலையப் பாதுகாப்பு இலாகா' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில்வரும் 'ஹிந்து' என்ற பதம் என்ன பொருளில் வந்திருக்கிறது என்று அவர்களையே தான் கேட்கவேண்டும்.
இப்படியே இன்னும் அநேக விஷயங்கள் இருக்கின்றன. சுயநலப்பிரியர்கள் மக்களிடம் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு நயம்படப் பேசி, அவர்கள் மனத்தில் விஷவித்துக்களை விதைத்துவிடுகிறார்கள். அதில் ஆலய வழிபாட்டு விஷயமும் ஒன்று.
வானம் வறக்குமேல் சிறப்பொடு பூசனை செல்லாது என்பது வள்ளுவர் வாக்கு. இதிலிலிருந்து மக்கள் நலனுக்காகக் கோவில்களில் பூசனை முறையாக நடக்கவேண்டுமென்பது திருவள்ளுவர் திருவுள்ளம் என்று தெரியக் கிடக்கிறது.
ஆகவே தொன்றுதொட்டு ஆன்றோர் ஆலய வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அம் முறைப்படி நடந்து வந்த காலங்களில் மழையும் ஒழுங்காகப் பெய்தது. நாடும் செழித்திருந்தது. இப்பொழுது சில காலமாகக் கோவில் வேண்டாம், வழிபாடு வேண்டாம், ஏதோ வழிபாடு இருந்தாலும் பழைய முறைப்படி வேண்டாம் என்ற பலவற்றைக் கொள்கையாக வுடைய நாத்திகர்கள் ஆஸ்திகர்போல் ஆஷாடபூதி வேஷம் போட்டுக் கொண்டு ஆலய வழிபாட்டு முறையை நிந்திக்கவும், சில ஊர்களில் மாற்றியமைக்கவும், வேறு சில இடங்களில் வழிபாட்டு முறைகளைக் குறைத்து, அதற்குரிய பணத்தைப் பள்ளிக்கூடம் முதலானவகளுக்குச் செலவிடவும் முறைதவறி நடந்த காலத்திலிருந்து மழையும் பெய்கிறது, ஆனால் முறை தவறிப்பெய்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதாவது அது வேண்டிய காலத்தில் பெய்யாமல் கெடுக்கிறது, வேண்டாத காலத்தில் பெய்தும் கெடுக்கிறது.
எனவே, மக்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பேசும் பேச்சும், எழுதும் எழுத்தும் அனுசரிக்கவேண்டியவைதானா என்று சிந்தித்துக் கையாளவேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம் இன்று. அச் சிந்தனைக்கு உதவி செய்வது இப்புத்தகம்.
ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாசாரிய சுவாமிகள் பேசும்பொழுது அடிக்கடி சொல்வார்கள்! 'பயிர் தழைக்கவேண்டுமானால் தோன்றிய களைகளைப் பிடுங்கி எறியவேண்டும். எறிந்தாலல்லது பயிர் செழிக்காது. மேனி காணாது. அதுபோல ஆன்மலாபம் பெற விரும்புகிறவர்கள் தங்கள் மனமாகிய வயலில் நவீன கொள்கைகளாகியகளைகள் தோன்ற இடங் கொடுக்கக்கூடாது. எப்படியே தோன்றிவிட்டால் அந்த நிமிடமே அதைப் பிடுங்கி எறிய வேண்டும். இல்லையேல் ஆன்ம லாபமாகிய பயிர்களைத் தழைக்க விடாதபடி நவீன கொள்கைகளாகிய களைகள் கெடுத்துக் கொண்டே இருக்கும்.' இக்காலத்தில் பத்திரிகைகளில் காணப்படும் சமயம் மொழி சம்பந்தமான செய்திகள் மக்கள் மனத்தில் களைகளை உண்டுபண்ணுவனவாகவே இருக்கின்றன; நன்மை செய்வன அல்ல. அச்செய்திகள் எப்படி என்னவிதமான தீமைகளைச் செய்கின்றன என்று சிந்தித்து அத்தீமைகள் நம் மனத்தில் இடம் கொள்ளாமல் காப்பதற்கும் இடங்கொண்ட தீமைகளைக் களைந்து நன்மை அடைவதற்கும் உறுதுணையாக இருப்பது இப்புத்தகம்.
சைவ சமய அனுஷ்டானத்திற்கு இடையூறாகச் சமண மதமோ பெளத்த மதமோ மாயாவாத மதமோ தலையெடுத்து வந்த காலத்தில் அம்மதங்களைச் சைவ சமயாசாரியர்கள் நால்வர் தோன்றி, வாதில் வென்று, சிவபரத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். சந்தானாசாரியர்களும் மற்றைச் சமயங்களின் குற்றங்குறைகள் என்ன; சைவத்தின் மேன்மை என்ன என்று எடுத்துக்காட்டிச் சிவஞானபோதம் முதலிய ஞானநூல்களை அருளிச் செய்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி ஸ்ரீமத் சிவஞானசுவாமிகள் அந்நூல்களில் உள்ள விஷயங்களையும் தர்க்கங்களையும் இலக்கணம் இலக்கியம் முதலியவைகளையும் விளக்கி, திராவிடமாபாடியம் முதலிய பல நூல்கள் இயற்றி, சைவ சமயிகளுக்குத் தம் சமயத்தைப் பற்றியும் அச்சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய பரத்துவத்தைப் பற்றியும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டித் திருக்கைலாய பரம்பரை துறைசையாதீனத்திற்கு ஞானபானுவாய் விளங்கினார்கள். அப்பெருமானாருடைய குருபூஜைதினம் சித்திரை ஆயில்யம் (4-5-1960).
இக்காலத்தில் மக்களால் மேற்கூறிய சமணம், பெளத்தம், மாயாவாதம், உலோகாயதம் முதலிய மதங்களில் எந்த மதத்தை இவர் சார்ந்தவர் என்று பலரைத் தெளிவாய்த் தெரிய முடியவில்லை. ஆயினும் அவர் ஒரு வரம்புமின்றி ஒவ்வொரு மதத்தின் சிலசில கொள்கைகளை 'அவையே நல்ல கொள்கைகள்' என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொள்வர். அவர் சைவ சமய வேஷத்தில் நின்று சைவ சமயக் கோயில்களிலேயே, சைவர்களுடைய செலவிலேயே பிரசாரம் செய்து பிழைத்து வருகிறார்கள். ஆகவே முற்காலத்தில் சமயாசாரியர்களும் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளும் பரமத நிராகரணம் செய்து சுவமத ஸ்தாபனம் செய்ததுபோல அதே தொண்டை இக்காலத்திற்கேற்ற விதத்தில் இக்கால மக்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்தபடி தர்க்கரீதியாகப் பதிலெழுதி சைவஸ்தாபனம் செய்வதற்கு இந் நூலாசிரியர் சித்தாந்த பண்டித பூஷணம் பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை அவர்கள் ஒருவரே வல்லார் என்பது இப்புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். நாட்டில் எங்காவது வேறு யாரும் இருக்கலாம். ஆனால் பத்திரிகைகளின் மூலமாகவோ, புத்தக ரூபமாகவோ பிரசங்கத்தின் மூலமாகவோ சைவத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்பவர்களுக்குப் பத்திரிகை வாயிலாக சுடச்சுடப் பதில் கொடுத்து சிவபரத்துவ நிச்சயம் செய்தவர் பிறரை நமக்குத் தெரியவில்லை. வேலையிலிருந்து ஓய்வெடுத்துகொண்ட பிறகும் வரம்பு கடவாமல் சைவசமய போதனை செய்துவரும் ஆசிரியர் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் சலியாத மன வலிமையையும் கொடுத்தருளும்படி எல்லாம் வல்ல சிவபெருமானைப் பிரார்த்திப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன கைம்மாறும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறோம்.
1947வது வருஷ முதல் 1958 வது வருஷம்வரை பத்திரிகைகளில் வந்த அபத்தப் பிரசங்கங்களைக் கண்டித்து எழுதியவைகளின் தொகுப்பே 'நாடும் நவீனரும்' என்ற இப்புத்தகமாகும். சைவ சமயிகளில் பெரும்பாலார் தம் சமய உண்மைகளைத் தெரியாது விபூதி ருத்திராட்சம் அணிந்திருந்தாலும்கூடப் பிற சமயக் கொள்கைகளை அறியாமலே அனுஷ்டித்து வருபவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு இப் புத்தகம் தக்க உதவியாயிருக்குமாதலால் இப்புத்தகத்தை அச்சிட்டு இலவசமாகத் தகுதியுடைவர்களுக்கு வழங்கிச் சைவ சமயப் பிணக்கறுத்து, அவர்களைச் சிவபெருமானுடைய அடியவர்களாக்கித் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற முதுமொழிக்கு இலக்காகத் திகழ்பவர்கள் நெல்லை நூல் வியாபாரம் சிவஸ்ரீ சி.ச. ஆழ்வாரப்ப பிள்ளை அவர்கள். தம்மைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதையோ எழுதுவதையோ விரும்பாதவர்கள். ஆனால், அவர்கள் செய்த நன்றியை நாங்கள் எடுத்துச் சொல்லாமல் இருந்தால் நன்றி மறந்த செயலுக்கு உட்படுவேமோ என்ற பயத்தில் இந்த இரண்டொரு சொற்கள் எழுதினோம். அவர்கள் வாழ்க பல்லாண்டு. வளர்க அவர்களது சிவத்தொண்டு.
இப்புத்தகத்தைப் பெறும் அன்பர்கள் தங்கள் அபிப்பிராயத்தை, சாதகமாயிருந்தாலும் சரி, பாதகமாயிருந்தாலும் சரி எங்களுக்கு எழுதியனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
4-5-1960 சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தார், 78, கீழ்ப்புதுத் தெரு, திருநெல்வேலி டவுண்.
'மல்லை ஞாலத்து வாழுமுயிர்க்கெலாம் எல்லையான பிரானாரும்,' 'எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம்பெருமானாரும்' சிவபிரான் ஒருவரே. 'ப்ரணவோ தநுச் சரோஹ் யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே' - என்ற முண்டகோபநிஷத்தும், 'தநுஸ்தாரம் சரோஹ்யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே' 'சிவ லக்ஷ்யம் நஸம்சய:' - என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும் அதனை மெய்ப்பிக்கும். எல்லா உயிர்களுக்கும் லக்ஷ்யம் சிவபிரானே என்பதை உள்ளவாறு உணர்ந்து அப்பிராற்கு அடிமை பூண்டொழுகும் சால்புடையாரே சைவர். வினையின் நீங்கி விளங்கிய அவ்வறிவன் விதித்தனவே விதிகள்; விலக்கியனவே விலக்குகள். அவ்விதி விலக்குகளை அறிந்து அநுட்டிக்க வேண்டுவதே சைவர் கடன். அவ்விதி விலக்குகளை உடையனவே அப்பெருமான் திருவாய் மொழியாகிய வடமொழியிலுள்ள இருக்காதி நான்கு வேதங்களும் காமிகாதி இருபத்தெட்டுச் சிவாகமங்களுமாம். அப்பொய்நீர் ஒழுக்க நெறி நின்றாரே லக்ஷ்யத்தை எய்திச் சிவானந்தப் பெருவெள்ளத்தில் அமிழ்ந்து அந்தமில் இன்பத்து அழிவில் வீடுபேறடையலாம். அன்றி விதியை விலக்காக்கியும் விலக்கை விதியாக்கியும் கொள்ளும் வைதிகரையும் சைவரையும் என் என்பது? அவருக்கு ஐயோ!
கடந்த 19 ஆண்டுகளாகச் சங்கரன்கோவில் சைவசித்தாந்த சபை தன்னாலான சிவபணியைச் செய்து வருகிறது. இச்சபையை அந்நெறியில் நிறுத்தியவர்கள் எங்கள் சபையின் நிரந்தரத் தலைவரும், ஆசிரியருமாகிய திருவாவடுதுறை யாதீன வித்துவான், சித்தாந்த பண்டித பூஷணம் சிவஸ்ரீ ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள். தமிழர்ச்சனைக் கொள்கை துவங்கிய காலத்திலேயே அது சமய விரோதமானது என அதனைச் சொல்லாலும் எழுத்தாலும் எதிர்த்த முதல் தீர புருஷர் எங்கள் தலைவர் அவர்களே. 'சைவாலயங்களில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும்' என்ற நூலை எங்கள் ஆசிரியரைக் கொண்டு எழுதுவித்து எங்கள் சபை 1954-இல் வெளியிட்டது. தமிழ் நாட்டில் தமிழர்ச்சனை சம்பந்தமாக அபிப்பிராயம் கூறாது யாவரும் ஒதுங்கியிருந்த காலத்தில் அஞ்சாமல் அதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இன்றளவும் அதனைப் பேணி நிற்பதில் பிறழாது நிற்பது எங்கள் சபையே. அந்நூலின் அநுபந்தமே இப்பொழுது உங்கள் கையிலிருக்கும் 'நாடும் நவீனரும்' என்ற அரிய இந்நன்னூல். இதன் முதற்பதிப்பு நெல்லைச் சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தாரால் 4-5-60 இல் சித்திரை ஆயில்யத்தில் வெளிவந்தது இப்பொழுது மீண்டும் தமிழர்ச்சனைப் பூதம் அரசாங்க ஆதரவுடன் சைவாலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் அதிகாரச் செருக்கோடு நுழைகிறது. ஆகலான் இந்நூலின் இரண்டாம் பதிப்பு இப்பொழுது வெளிவருகிறது.
மதச் சார்பற்ற - மதத்தில் அக்கறையில்லாத - அரசு ஒரு குறிப்பிட்ட மத நிலயங்களில் மட்டும் தன் அதிகாரத்தைக் காட்டுவது வரம்பு மீறிய செயலாகும். கிறிஸ்தவ, இஸ்லாமிய மத விஷயங்களில் இவ்வரசு நடந்து கொள்ளும் விதம் வேறு மாதிரியாயுள்ளது. அம் மதத்தினர் விஷயத்தில் இவ்வரசு படும் அச்சம் கண்கூடு. 'ஊருக் கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்றாற் போலச் சைவாலயங்களிலும் சைவ நிலயங்களிலும் மட்டும் அரசு தன் இஷ்டம் போல் விளையாடுகிறது. குட்டக் குட்டக் குனிவது தான் சைவ சமூகம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். 'ஈனர்கட் கெளியேன் அலேன்' என்று முழங்கும் சிங்கவேறு விரைவிலேயே அவதாரம் செய்யப் போகிறது. இது சத்தியம். அப்பொழுது தெரியும் இவர்கள் கதை.
சைவாசிரியர்கள் ஆணையானும், ஆன்றோர் ஆசாரம் பற்றி அநுமித்தறியும் சுருதியானும் சைவாலயங்களில் சம்ஸ்கிருத அர்ச்சனைதான் செய்யவேண்டும்; இதனைச் சாங்கோபாங்கமாக எடுத்து விளக்குகிறது இந்நூல். அறிவாராய்ச்சியுடைய பெரியார் எவரும் இதனை எதிர்த்திலர்; மறுத்திலர்; ஆனால் பேணுகின்றனர். போகூழ் வயத்தால் சிவநிந்தனைக்களாகும் சில சீலங்கெட்டார் மட்டுமே இதனை எதிர்த்துத் தமிழர்ச்சனையைத் திணிக்கின்றனர். தென்றமிழ்ப் பயனாயுள்ளனவே திருமுறைகள்தாம். அத்திருமுறைகளின் ஆணையை மீறுபவர் சைவராகார். திருமுறைகள் சம்ஸ்கிருத அர்ச்சனையை வலியுறுத்துமிடங்கள் கோடானு கோடி. அவற்றை இந்நூலுள் பரக்கக் காணலாம்.
சம்ஸ்கிருதம் தமிழருள்ளிட்ட சர்வலோக மக்களுக்கும் பொது மொழி. அதனால் தான் சிவபெருமான் திருவாக்காகிய வேதாகமங்கள் அம்மொழியில் உளவாயின. அவற்றை மதிப்பது சைவர் கடன்; மீறுவது சிவத்துரோகம்; மீறிச் சொல்வதும் அன்னதே. எந்நிந்தைக்கும்பிராயசித்தம் உண்டு. சிவநிந்தைக்கு அ·தில்லை. ஆகலான் நன்மை கடைப்பிடிப்பார் அனைவரும் சொல்வாரைக் கவனியாது சொல்லப்படும் செய்தியைக் கவனிப்பாராக. அரச ஆக்ஞை புலையன் வாயிலிருந்து வெளிப்பட்டாலும் அரச ஆக்ஞையே.
தமிழ்ச் சைவர் அனைவரையும் பிறவைதிகர் அனைவரையும் சித்த சமாதானத்துடனும் நடுநிலைபிறழா உள்ளத்துடனும் இந்நூலைப் பயிலுமாறு எங்கள் சபை வேண்டிக் கொள்கிறது. பின்னர் ஒருமித்துச் செயல்படுக. சிவபிரான் ஆணையாக வெற்றி நிச்சயம்.
இந்நூலை ஆக்கித் தமிழ்ச் சைவர்க்கு நல்வழி காட்டி உபகரித்தும், சபையின் வெளியீடாக வெளியிட ஆணைதந்தும் எங்களை வாழ்வித்த ஆசிரியர் சிவ ஸ்ரீ ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்களுக்கு அரோக திடகாத்திரமும் பூரண ஆயுளும் நல்க ஸ்ரீ கோமதியம்பா சமேத ஸ்ரீசங்கரலிங்கப் பெருமான் திருவடி மலர்களைப் பரவுகின்றோம்.
9-8-1971 சைவ சித்தாந்த சபையார்,
சங்கரநயினார் கோவில்.
நன்றியுரை
'சைவாலயங்களில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும்' என்றொரு புத்தகத்தை நான் எழுதி, 1954-இல் வெளியிட்டேன். அதற்கொரு அனுபந்தமும் அவசியமாயிற்று; அதனையும் எழுதியுள்ளேன். 'சைவாலயங்களில் சம்ஸ்கிருத அர்ச்சனையே வேண்டும்' என்னுங் கட்டுரையே அது. 'செட்டிநாடு' என்ற வாரப் பத்திரிகையில் அது சிறிது சிறிதாக வந்துகொண்டிருந்தது. தமிழர்ச்சனைப் பிரியருள் முன்னோடிகள் பலர் தடுத்தும் அப்பத்திரிகாசிரியர் திரு. பாலகவி இராமநாதன் செட்டியாரவர்கள் அக்கட்டுரையைத் துணிந்து வெளியிட்டது அவர்களது ஆண்மைக் கோரடையாளமாகும். அவர்களை என்னால் மறக்கமுடியாது. பின்னர் அப்பத்திரிகை நின்றது. அதனால் அக்கட்டுரையின் பிற்பகுதி வெளிவரவில்லை. இப்போது அக்கட்டுரை முழுவதும் மிகச் சில மாறுதலுடன் 'நாடும் நவீனரும்' என்ற பெயர் தாங்கி இப் புத்தக வடிவில் வெளிந்துள்ளது.
சைவாலயங்களில் தமிழர்ச்சனை வேண்டு மென்றொரு புதுக்கொள்கை சில வருடங்களாகத் தோன்றி வருகிறது: அதை ஆதரிப்பார் சிலர். 'தமிழ்நாடு' முதலிய பத்திரிகைகளில் அவர் எழுதி வந்த வாசகங்கள் பல. அவற்றை வாசகர் படித்திருப்பர். பல முக்கியமானவர் எழுதியவற்றிலிருந்து அநேக பகுதிகளை அவை பிரசுரமான பத்திரிகைகளின் பெயர் தேதிகளோடு எடுத்துக் காட்டி அப்பகுதிகளின் பொருந்தாமையை விசாரணை முகத்தால் விளக்கி, நடைமுறையிலுள்ளபடி சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களோடுதான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை இப்புத்தகம் நிரூபித்திருக்கிறது.
இப்புத்தகத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகள் வந்த பத்திரிகைகள் என்னிடமிருக்கின்றன. அப்பகுதிகளையும் அவற்றை எழுதியவரின் பெயர்களையும் தெரிய விரும்புகிறவர் என்னிடம் வந்தால் அவற்றைக்காட்ட நான் சித்தமாயிருக்கிறேன். மூன்றாண்டுக் காலம் அப் பத்திரிகைகள் என்னிடமிருக்கும் அதற்குமேல் அவற்றை வைத்துக் காப்பாற்ற என்னால் முடியாது. அவை கெட்டுவிடக்கூடும்.
என் புத்தகத்தில் அத்தியாயங்களுக்கு எண்களையே நான் தலைப்பாகக் கொடுத்தேன். ஆனால் பக்கங்களில் வலத்திலும் இடத்திலும் சிறிது தடித்த எழுத்தில் விஷயச் சுருக்கங்களும் பல அடிக்குறிப்புக்களும் கொடுத்துப் புத்தகத்தை மேலுந் தெளிவுபடுத்தி உபகரித்தவர் உயர்திரு K. பாலன் அவர்கள். அவையெல்லாம் இந் நூலுக்குக் கண்ணாடி போல்வன. அவ்வுபகாரத்தைச் செய்த அவர்களுக்கு என் நன்றி உரியதாகும்.
இந்நூலைத் தம் பொருட்செலவில் அச்சிட்டு உபகரித்தவர்கள் உயர்திரு சி.ச.ஆழ்வாரப்ப பிள்ளை யவர்கள். நெல்லைப் பிரமுகரான அவர்கள்பாற் பல சிறப்புக்களுள. அவற்றைச் சிறிதாவது விரித்துச் சொல்லலாம். ஆனால் அடக்கமே அணியாகக் கொண்ட அவர்கள் என்னைத் தடுத்துவிட்டார்கள். அதனால் அவற்றை நான் விடுகிறேன். இந்நூலின் தரத்தையும் இன்றியமையாமையையும் தெளியக்கண்டு இதனை அச்சிட்டுதவிய அச் சிவபுண்ணியப் பெருந்தகையாருக்கு என் நன்றி உரியதாகுக.
நெல்லைச் சித்தாந்த சைவச் செந்நெறிக்கழகத்தார் இந்நூலைத்தம் கழகத்தின் வெளியீடாக ஏற்றுக்கொண்டார்கள். அச் சமய வரம்பைப் போற்றிவரும் அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக.
அடியேனையும் பொருளாகக்கொண்டு அடியேனுக்கு ஆசியும், இப் புத்தகத்துக்கு அணியுஞ் செய்தருளிய பழனி, சைவ சித்தாந்த சரபம், மகாமகோபாத்யாய சிவாகம ஞானபானு காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாசாரிய சுவாமிகளின் திருவடிகளை நான் வணங்குகிறேன்.
நெல்லை, இம்பீரியல் அச்சக உரிமையாளர் தவிர்க்கமுடியாத பல வேலைகளுக்கிடையே இந்நூலை அச்சிட்டுப் புத்தகமாக்கிப் பூர்த்திசெய்தார்கள். அச்சுப் பிழை சரிபார்க்கும் பொறுப்பும் பல தடவைகள் அவர்களுக்கிருந்தது. இடத்துக்கேற்ப எழுத்துக்களைப் பொருந்த அமைத்துப் புத்தகத்தை அழகுற அச்சிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக.