எத்தனை நாடுகளுக்கு போனாலும் கிடைக்காத பெருமை , பாரம்பரியம் வரலாற்று புதையல்கள் உள் அடக்கிய தமிழனின் நதிக்கரை துறைமுக நகரம் அரிக்கமேடு.
புதுச்சேரிக்குத் (பாண்டிச்சேரி) தெற்கே 6 கி.மீ. தொலைவில், காக்கையன்தோப்பு என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே ஒரு மண்மேடும், அதனை ஒட்டியவாறு ஒரு சிற்றாறு (அரியாங்குப்பத்தாறு) ஓடுகிறது.அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கின்றது..
புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.( கிரேக்க நூலான “பெரிப்ளஸ் ஆப் எரித்திரியன் ஸீ” என்ற நூலில், “பொதுகே” என்ற கடற்கரை நகரம் குறிக்கப்பட்டுள்ளது.)
இதே போல் ,காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஒரு மிகப் பெரிய வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன..
தாலமியும், கபேரிஸுக்கு வடக்கே பொதுகே அமைந்துள்ளது என்பார். சங்க இலக்கியப் பாடல்களும், யவனர்கள் (உரோமானியர்) இங்கு தங்கி வணிகம் புரிந்துள்ளதைக் குறிக்கின்றன. பொதுகே என்பது அரிக்கமேட்டைக் குறிப்பதாகும். அரிக்கமேடு என்ற பெயர்ச்சொல்லை, அருகுமேடு என்பதன் சிதைவு எனவும் கருதலாம் எனச் சொல்லப் படுகின்றது.
அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.
கிபி. 1734-ல், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீ ஜென்டில் (Le Gentil) என்பவர், அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் எனக் கண்டறிந்து தெரிவித்தார்.
1937-ல், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜோவியூ துப்ராயில் (Joveau Dubreuil), அரிக்கமேட்டில் உள்ளவர்களிடம் இருந்து பல அரிய கல்மணிகளையும், தொல் பொருட்களையும் சேகரித்துள்ளார். பின்னர், இப்பகுதி உரோமானியரும் வன்து சென்ற மிகப் பெரிய தமிழர் கடற்கரைத் துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்துள்ளது என்ற கருத்தையும் அரசுக்குத் தெளிவுபடுத்தினார்.
1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளை நட குழி தோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இவரது ஆய்வால் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.
மார்ட்டின் வீலர் எதிர்பார்த்தது போல அரிக்கமேடில் பல உரோமானிய மட்கலன்களைச் சேகரித்தார். அவற்றில் குறிப்பிடும்படியான மட்கலன்களாக, அரிஸோ அதாவது இத்தாலி நாட்டில் இருந்து வந்த அரிடைன் மட்கலன்கள் அவரை மிகவும்அனைவரையும் ஈர்த்தன எனக் கூறலாம்.
அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளனபதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூனைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன.
மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமானிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது கிமு ஒன்றாம் நூற்றாண்டு காலத்திலேயே தமிழன் சாயம் ஏற்றும் நுட்பம் அறிந்து இருக்கின்றான்
அரிக்கமேட்டில், செவ்வக வடிவப் பண்டகசாலை ஒன்றும், சாயத்தொட்டிகள் இரண்டும் வெளிக்கொணரப்பட்டன. இதன் நீளம் 45 மீ, அகலம் 11 மீ ஆகும்.
இக்கட்டடத்தின் வடக்கே, 18 மீ நீளமுள்ள தானியக் கிட்டங்கி ஒன்றும் காணப்பட்டது.
உறுதியான சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கட்டடத்தை, களிமண் குழைத்து, செங்கற்களை அடுக்கி, காரைப்பூச்சு கொண்டு பூசி அமைத்துள்ளதையும் கண்டறிப்பட்டது.
அரிக்கமேட்டில் நெசவுத்தொழில் சிறப்புற்று இருந்ததை, இங்கு கிடைத்த சாயத்தொட்டி உறுதிப்படுத்துகிறது. செங்கற்கள் கொண்டு கட்டிய இது, தரைப்பகுதி மற்றும் நீரை வெளியேற்ற கால்வாய்ப் பகுதிகள், கதவு நிலைகள் இருந்தமைக்கான எச்சங்கள் என ஒரு சாயத்தொட்டியின் தெளிவான தடயங்கள் அனைத்தும் இந்த அகழாய்வில் வெளிப்படுத்தப்படடுள்ளன.
இங்கு, கட்டடங்கள் கட்டுவதற்கான இணைப்புச் சாந்து மிகவும் மெல்லியதாகப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
கட்டடப் பகுதியில் செங்கற்களைக் அடுக்கிக் கட்டியுள்ள விதமும், இச்செங்கற்களின் தன்மையையும் காணும்போது, கட்டடத்தின் மேல்தளப் பகுதி மிகவும் சிறப்பானதாகவும் உயரமாகவும் கட்டியிருத்தல் வேண்டும் என யூகித்து உணரமுடிகிறது.
இதற்கு அருகிலேயே உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி குடியிருப்பு அதாவது மக்கள் வசிக்கும் இடம் என்பதும் தெளிவாகிறது. சங்க கால மக்கள், அதிக அளவில் உறை கிணற்றையே பயன்படுத்தியுள்ளனர்
அரிக்கமேட்டில் சாயத்தொட்டிகள் காணப்பட்டதால், பருத்திப் பயிர் அதிகம் விளைவித்திருத்தல் வேண்டும். அத்துடன், இப்பகுதி களிமண் பூமியாகவும் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் கூறப்படுகின்றது.
மணி உருக்குத் தொழிற்சாலைகள் :- ---------------------------------------------- அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.
பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். அரிக்கமேட்டில் நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன.
அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன.
அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.
ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads)
மட்கலன்கள்:-
ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.
பானை ஓடுகளில் “அண்டிய மகர்’, அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
இங்கிருந்து “குளவாய்”, “லாதன”;, ”ஆதன்மகன்”; “கணன”; போன்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன
அகழாய்வில், அயல்நாட்டுப் பானை ஓடுகளான ரௌலட்டட், ஆம்போரா, இத்தாலி நாட்டு அரிட்டைன் என்னும் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதனால், இவற்றின் காலத்தை அறிவது எளிதான செயலானது.
(ரௌலட்டட் மட்கலன் ஓடுகள் – உரோமானியர் தயாரிப்பு)
உள்நாட்டுப் பானை ஓடுகள்:-
இவ்வகழ்வாய்விலிருந்து, உள்நாட்டுப் பானை மட்பாண்டங்களின் கருப்பு – சிவப்பு, சாம்பல் நிறம் மற்றும் கருப்பு ஓடுகள், சிறு குவளைகள், அகன்ற வாய் உடையவை, கூர்முனை ஜாடிகள் போன்றவை சேகரிக்கப்பட்டன.
கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.
எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.
உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.
தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. முக்கியம்மாக ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு மிகச் சிறந்த வாணிகத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. . கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
சோழ நாட்டில் அமைந்த, சிறப்பான நாகரிகம் வளர்ச்சிபெற்ற ஒரு துறைமுகப்பட்டினமும், வணிகநகரமும் அரிக்கமேடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
. மார்டிமர் வீலர், தான் சேகரித்த தொல்லியல் தடயங்களின் அடிப்படையில் குறிப்பிடும்போது, புதிய கற்காலத்தில் இருந்தே மக்கள் இங்கு வாழத் தொடங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைக்கிறார்.
பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் பெண் தொல்லியல் ஆய்வாளர் விமலாபெக்லி என்பவர், சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒரு ஆய்வும் நடத்தினார். (காலம் தெரியவில்லை )
பின் குறிப்பு : கணேசன் தோழர் இங்கு பதிய பட்டு இருக்கும் செய்திகள் பல வேறு வேறு தமிழ் ஆராய்சியாளர்கள் முனைவர்களால் கொடுக்கப் பட்டது என்னால் இயன்றவரை தொகுத்து கொடுத்து இருக்கின்றேன் இதில் எதுவும் என் சொந்த கருத்து இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன் சகோ கால தாமதத்திற்கு மன்னிக்கவும்